கட்டுரை, விவசாயம், ஆளுமைகள், சுற்றுச்சூழல், தொழில் 4 நிமிட வாசிப்பு

சத்தியமங்கலம் திருமூர்த்தி: முன்னோடி இயற்கை உழவர்

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
26 Feb 2024, 5:00 am
0

புகைப்படங்கள் உதவி: பழனிக்குமார்

வ்வொரு சமூகத்திலும் முன்னோடிகள் என்பவர்கள் ஒரு சிறு சதவீதம்தான். எல்லோரும் பயணிக்கும் பாதுகாப்பான பழைய பாதையில் பெரும்பான்மைச் சமூகம் செல்லும்போது, எதிர்காலம் என்னும் அடர் வனத்தில் தமக்கென ஓர் இலக்கை நிச்சயித்துக்கொண்டு, அதை அடைவதற்கான ஒரு புத்தாக்கப் பாதையை நம்பிக்கையுடனும் தீரத்துடனும் உருவாக்கிக்கொள்பவர்கள் அவர்கள்.

தோல்வி அவர்களை ஒருபோதும் பின்வாங்கச் செய்வதில்லை. தாக்கப்பட்ட வனவிலங்கைப் போல் பலமடங்கு விசையுடன் வீறுகொண்டு மீண்டெழுந்து தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்தவற்காக முன்செல்வார்கள். இயற்கை விவசாயி திருமூர்த்தி அப்படிப்பட்ட ஒருவர்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

யார் இந்தத் திருமூர்த்தி?

சத்தியமங்கலம் அருகில் உள்ள உப்புப்பள்ளம் என்னும் கிராமம் அவரது ஊர். அவரது தந்தை, அவருக்கும் அவர் தமையனுக்கும் விட்டுச் சென்ற 12 ஏக்கர் நிலத்தில் இயற்கை வழியில் வேளாண்மை செய்துவருபவர்.

பள்ளிப்படிப்பு சரியாக வராமல் 10ஆம் வகுப்பில் பள்ளியில் இருந்து வெளியேறினார். மளிகைக் கடை வைத்தார். எலந்தவடை, தின்பண்டங்கள், பீடி, சிகரெட் விற்றார். தீபாவளி சமயத்தில் பட்டாசுகளை வாங்கி விற்றார். கேபிள் டீவி ஆபரேட்டராக இருந்தார். பால் வணிகம் செய்தார். இவற்றிலெல்லாம் நிலைகொள்ளாமல், தன் அக்கா வாழ்ந்துவந்த பெங்களூர் நகரம் சென்று, அங்கே இரு சக்கர வாகன சர்வீஸ் செண்டர் நடத்திப் பார்த்தார். அதுவும் சரிவராமல் நிதி நிறுவனத்தில் வேலை செய்தார். கார்களை வாங்கி விற்கும் தொழிலைச் செய்தார்.

“14 வருஷத்தில் 6 விதமான தொழில்களைச் செய்துபார்த்தேன். 2,500 ரூபாய் வாடகையில் 10x6 அறையில் வசிக்க வேண்டியிருந்தது. நாய்படாத பாடுபட்டேன்” என்று தன் வாழ்க்கையைப் பற்றி ‘பரி’ இதழில் (People’s Archive of Rural India – PARI) பணியாற்றும் பத்திரிகையாளர் அபர்ணா கார்த்திகேயனுடான உரையாடலில் சொல்கிறார்.

ஓட்டம் நின்றபாடில்லை

அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெறாமல், 2009ஆம் ஆண்டு வீடு திரும்புகிறார். தன் தந்தை பயிரிட்ட கரும்புப் பயிரையே அவர் பயிரிடத் தொடங்குகிறார். 2014ஆம் ஆண்டு, அவர் தந்தை இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், மஞ்சள் பயிரிடத் தொடங்குகிறார். உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சி மருந்துகள் என எவற்றையும் பயன்படுத்தாமல்.

தான் உற்பத்திசெய்த 1 டன் மஞ்சளை விரைவாக மொத்தவிலை வணிகர்களுக்கு விற்றுவிட்டு, 300 கிலோ மஞ்சளை மட்டும் பொடியாக அரைத்து நுகர்வோருக்கு நேரடியாக விற்றுப் பார்க்கும் புதிய முயற்சியைத் தொடங்குகிறார். 

சமூக ஊடகமான முகநூலில் தன் எண்ணத்தை வெளியிடுகிறார். முகநூல் நண்பர்கள், அவரிடம் இருந்து மஞ்சள் பொடியை வாங்கி ஆதரிக்கிறார்கள். 300 கிலோ மஞ்சள் பொடி பத்து நாட்களில் விற்றுத்தீர்கிறது. தன் முயற்சிக்கு ‘ஏர்முனை’ எனப் பெயரிடுகிறார். ‘ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை’ என்பதே அவர் சொல்லும் காரணம்.

ஊக்கம் பெற்ற திருமூர்த்தி, அடுத்த ஆண்டில் 5 டன் மஞ்சளை உற்பத்தி செய்கிறார். ஆனால், விற்பனை செய்ய முடியவில்லை. தன் உற்பத்திக்கு ‘இயற்கை உற்பத்தி’ (Organic Produce) எனச் சான்றிதழ் வாங்க முயற்சிக்கிறார். அது அதிகச் செலவுபிடிப்பதாக இருக்கிறது. வேறு வழியின்றி, அருகிலுள்ள ஈரோடு நகரில் இயங்கிவரும் பிரபல மசாலாக் கம்பெனிக்குச் சென்று உபரி உற்பத்தியை விற்கிறார். கிலோ 81 என வாங்கிக் கொள்கிறார்கள். அது அவர் நேரடியாக விற்கும் விலையில் மூன்றில் ஒரு பங்கு.

சூடுபட்டுக்கொண்ட அவர், அடுத்த ஆண்டு முதல் எவ்வளவு விற்க முடியுமோ அவ்வளவுக்கு மட்டுமே உற்பத்திசெய்கிறார். ஒரு ஆண்டு விளைச்சல் முடிந்தவுடன், அந்த வயலில் அவர் பயிர் செய்வதில்லை. நிலத்துக்கு ஒய்வுகொடுக்கிறார்.

தொழில்நுட்பத்தின் உதவி

மெல்ல மெல்ல அவரது முயற்சிகளுக்கு ஆதரவு வளரத் தொடங்க, பிரபலமாகிறார். இந்த முயற்சிக்குப் பின்னால், தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மைக்காக தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த நம்மாழ்வாரின் கொள்கைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் சமாதி இருக்கும் ‘வானக’த்துக்குத் தம் குடும்பத்தோடு சென்று மரியாதை செலுத்திவருவார்.

மஞ்சள் பொடியைத் தொடர்ந்து இன்னும் சில பொருட்களை மதிப்புக் கூட்டி (value addition) விற்கலாம் எனத் திட்டமிடுகிறார். அவர் தோட்டத்தில் இருக்கும் தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் தேங்காய்களை, வீட்டிலேயே பிழிந்து எண்ணெய் எடுக்க முடிவுசெய்கிறார். அதற்காக வீட்டிலேயே ஒரு எண்ணெய்ச் செக்கை நிறுவுகிறார்.

இதுபோன்ற முயற்சிகளுக்குத் தேவைப்படும் சக்தியை அவர் சூரிய ஒளியில் இருந்து தயாரித்துக்கொள்ள சூரிய ஒளி மின் கலன்களை நிறுவிக்கொண்டார். தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச சூரிய ஒளியில் இயங்கும் மோட்டாரை வாங்கிப் பொருத்திக்கொண்டார். மிகத் தெளிவாக, தேவைக்கேற்ற தொழில்நுட்பத்தை மட்டுமே அவர் தேர்ந்தெடுக்கிறார். பவானி ஆற்றங்கரையில் இருந்தாலும், தென்னை வாழை போன்ற பயிர்களுக்குச் சொட்டு நீர்ப்பாசனம்தான்.

சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி 

தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் சோப்புகள், மஞ்சள் மால்ட், இயற்கை வழி வாழை எனப் புதிது புதிதாக பொருட்களை உற்பத்திசெய்து நேரடியாக நுகர்வோருக்கே அனுப்பித் தருகிறார். வணிகம் பெருகுகிறது.

அந்த இறுதி உறக்கம்

திருமூர்த்தியின் இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டி, 2019ஆம் ஆண்டு, திரைப்பட நடிகர் கார்த்தி நடத்திவரும் ‘உழவன் ஃபவுண்டேஷன்’ அவருக்கு ‘உழவர் விருது’ வழங்கிச் சிறப்பித்தது.

முகநூல் பக்கத்தில், தன் தோட்டத்தில் செய்யும் புதிய முயற்சிகளை, பரிசோதனைகளைப் பற்றித் தொடர்ந்து எழுதிவந்தார். பரிசோதனையின் வெற்றி தோல்விகளை மிக வெளிப்படையாக எழுதுவார். 2014 முதல் 2024 வரையிலான பத்தாண்டுகளில், தனது முனைப்புகளின் வழியே இயற்கை வழி வேளாண்மையை ஒரு வெற்றிகரமான வணிகமாகச் செய்ய முடியும் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகத்தின் முன்னே நிறுவினார். இதுவே திருமூர்த்தியின் முதன்மைப் பங்களிப்பு. 

இயற்கை வழி வேளாண்மை என்பது மூடநம்பிக்கை அல்ல, அறிவியலின் அடிப்படையில் செய்யப்படும் ஒன்று என்பதை அவரது முகநூல் பக்கங்களைப் படிப்பவர்கள் அறிந்துகொள்ள முடியும். மெல்ல மெல்ல, தன் தந்தை விவசாயத்தில் விட்டுச் சென்றிருந்த கடனை அடைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். செயற்கை உரம், பூச்சி மருந்து என திருமூர்த்தியின் தந்தை செய்துவிட்டுச் சென்ற வேளாண்மையில் 14 லட்சம் கடன் மிஞ்சியிருந்தது.

தனது தொடக்கக் கால தொழில் முயற்சிகளின் காரணமாக, திருமூர்த்திக்குத் தாமதமாகத்தான் திருமணம் நடந்தது. 45 வயதான திருமூர்த்திக்கு, பள்ளிக்குச் செல்லும் மகனும், பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருக்கும் மகளும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இன்று மதியம் உணவு உண்டு ஓய்வெடுக்கச் சென்றவர் திரும்பவில்லை. உறக்கத்திலேயே இறந்துவிட்டார் எனச் செய்திகள் வந்தன. கையறுநிலையில் தன் இளம் மனைவியையும், குழந்தைகளையும் விட்டுச் சென்றிருக்கிறார்.

தன் மனைவியுடன் திருமூர்த்தி

அசாத்திய வாழ்க்கை

திருமூர்த்தியின் வாழ்க்கை சாதாரணமான ஒன்றல்ல. லாபமே இல்லாத ஒன்று என உலகம் முழுவதும் உழவர்கள் போராடிக்கொண்டிருக்கும்போது, அதிலும் லாபம் அடைய முடியும் எனப் புத்தாக்கத் தொழில் முயற்சி மூலம் நிரூபித்த சாதனை வாழ்க்கை அவருடையது.

தமிழ்நாடு அரசு, இரண்டாண்டுகளுக்கு முன்பு வேளாண்மைத் துறையை, வேளாண்மை மற்றும் உழவர் நலன் எனப் பெயர் மாற்றம் செய்தது.  திருமூர்த்தி போன்ற முன்னோடி உழவர்கள், வேளாண் துறையால் கௌரவிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், திருமூர்த்தியின் பரிசோதனைகளை ஆவணப்படுத்த வேண்டும். அவற்றில் வெற்றி தோல்வி இரண்டுமே உள்ளன. இரண்டுமே, வேளாண்மையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்ல உதவும். வேளாண் பொருளாதாரப் பாடத்தில் அவரது பரிசோதனைகள், வெற்றிகள் பாடமாக வைக்கப்பட வேண்டும்.

அதுவே தமிழ்ச் சமூகம் வேளாண் துறைக்குச் செய்யும் மரியாதையாகவும் இருக்கும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

நாம் கட்டற்ற நுகர்வு பற்றிப் பேசுவதில்லை: பாமயன் பேட்டி
இயற்கை வேளாண்மையிலும் பிற்போக்குத்தனம் இருக்கிறது: பாமயன் பேட்டி
புதியவர்களை டிஸ்கரேஜ் செய்வேன்: பாமயன் பேட்டி
உயிர்மை நேயமே நம் சிந்தனை மரபு: பாமயன் பேட்டி
ஆமிஷ், ஆரோவில் மாதிரியையே விரும்புகிறோம்: பாமயன் பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


1

1





ஹிண்டன்பெர்க்தானியங்கித் துறைகூத்துப்பட்டறைசாதியப் பாகுபாடுஇருபத்தோராம் நூற்றாண்டில் மானுடம்: அருகிவரும் அறம்சென்ட்ரல் விஸ்டாபிரதமர்கள்ஒரே தேர்தல்பாபர் மசூதி இடிப்புஎன்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்மெத்தனால்கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்தாகூர்ஓய்வு வயதுமகாதேவர் கோயில்பாட்ரீஸ் லுமும்பாஜி20 உச்சி மாநாடுஏன் நமக்கு அர்னால்ட் டிக்ஸ் தேவைப்படுகிறார்?மத்திய பிரதேசம்சட்ட மாணவர்கள்கே.சந்திரசேகர ராவ்பெண் அடிமைத்தனம்சமஸ் எனும் புனிதர்ஊறுகாய்தேசிய ஒட்டக ஆய்வு மையம்புவி வெப்பமடைதல்ராணுவத் தலைமைத் தளபதிகை சின்னம்ஜெயமோகன் சமஸ்பொதுத்துறை பங்கு விற்பனை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!