பேட்டி, விவசாயம், ஆளுமைகள், சுற்றுச்சூழல் 5 நிமிட வாசிப்பு

இயற்கை வேளாண்மையிலும் பிற்போக்குத்தனம் இருக்கிறது: பாமயன் பேட்டி

பாலசுப்ரமணியம் முத்துசாமி அபர்ணா கார்த்திகேயன்
21 May 2023, 5:00 am
0

தென்காசிக்கு அருகே, பொதிகை மலை அடிவாரத்தில் புதிதாக அமைந்திருக்கும் ‘பொதிகைச் சோலை’ கூட்டுப்பண்ணையைத் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்திவருகிறார் இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன். இயற்கை வேளாண்மை, காந்தியம், சூழலியல் தளங்களில் தீவிரமாக இயங்கிவருபவர். வேளாண் துறையில் பல ஆண்டு கால களப் பணியுடன் நீண்ட அனுபவத்தைக் கொண்டவர் பாமயன். அந்த அனுபவத்தின் வழி ஒரு புத்தாக்க முயற்சியாக இந்தப் ‘பொதிகைச் சோலை’யை உருவாக்கி இருக்கிறார். இந்தப் புதிய முயற்சி பற்றி அவருடன் நடத்தப்பட்ட உரையாடல். 

மல்லிகை பற்றிய ஒரு கட்டுரைக்காக நாங்கள் உற்பத்தியாளர்களிடம் பேசியபோது, மல்லிகை போன்ற பயிர்களுக்கும் பூச்சி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுவதைக் கண்டோம். இது எதனால்? 

இந்தப் பிரச்சினை மல்லிகையில் மட்டுமல்ல, துளசி போன்ற பூஜைக்குப் பயன்படும் பொருட்களிலும் இது உள்ளது. வேடசந்தூர் பகுதிகளில் இருந்து, பூஜைக்காக துளசி இலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிகமாக இலை உற்பத்தியாக வேண்டும் என்பதற்காக, அதிகத் தழைச் சத்தைத் தரும் யூரியா இடப்படுகிறது. அதனால், செடி செழித்து வளர்கிறது. செழிப்பான இலைகளைத் தேடி அதிக அளவில் பூச்சிகள் வருகின்றன. பூச்சிகளை ஒழிக்க அதிக அளவில் பூச்சி மருந்து அடிக்கப்படுகிறது. பூச்சி மருந்து மண்ணில் விழுந்து, மண்ணின் பயோஸ்பியர் (biosphere) பாதிக்கப்படுகிறது. இதனால், மண்ணின் நுண்ணுயிர்கள் அழிந்து மண் வளம் பாதிக்கிறது. எனவே, வேறு வழியின்றி உற்பத்தியாளர்கள் மீண்டும் அதிக யூரியாவைப் பயன்படுத்த நேர்கிறது. இதைக் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜென்னிஃபர் என்னும் ஆராய்ச்சியாளர் ‘டவுன் டூ எர்த்’ (Down to Earth) பத்திரிக்கையில் எழுதியுள்ளார்.

இது இன்றைக்கு எல்லா பயிர் உற்பத்தியிலும் இருக்கிறதல்லவா?

ஆமாம்! இதைப் பிரிக்கவே முடியாது. 

உழவர்கள் இயற்கை வேளாண்மை என்பது மிகவும் சிக்கலான, அதிக கவனம் தேவைப்படும் ஒரு உற்பத்தி முறையாகப் பார்க்கிறார்களே?

இதில் அடிப்படைப் பிரச்சினை என்னன்னா, இயற்கை வேளாண்மைக்குப் பின்னாடி இருக்கிற அறிவியல் அடிப்படைகள் விவசாயிகளுக்குத் தெரியல. அதைப் புரிஞ்சிகிட்டாங்கன்னா, எளிதாகச் செய்துவிட முடியும். மண்ணில் கரிமம் (Soil Carbon Content) என்றால் என்ன, என்னென்ன ஊட்டச்சத்துகள் தேவை என்பதையெல்லாம் புரிஞ்சிகிட்டா, இது பெரிய சவாலா இருக்காது.

பிரச்சின்னை என்னன்னா, வேதிப் பொருட்கள் வழியே வேளாண்மை செய்யத் தொடங்கி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆயிருச்சி. இன்னிக்கு இருக்கும் உழவர்கள் யாருக்குமே இயற்கை வேளாண்மையின் அடிப்படைகள் தெரியாது. முழுக்க முழுக்க ரசாயனங்களுக்குப் பழகிட்டாங்க. இன்னிக்கு இயற்கை வேளாண்மையைப் பற்றிச் சொல்லித்தர ஆட்களும், கல்வி நிறுவனங்களும் இல்லை. 

வேளாண்மைக் கல்லூரிகளில் இது சொல்லித் தரப்படுவதில்லையா?

வேளாண்மைக் கல்லூரிப் பாடத்திட்டங்களில், இயற்கை வழி வேளாண்மை என்பது பாடத்திட்டத்திலேயே இல்லை என்பது ஒரு அவல நகைச்சுவை. வேளாண்மைக் கல்லூரிகளின் பாடத்திட்டம் என்பது இங்கிருக்கும் பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுவதில்லை. ‘கன்சல்டேடிவ் க்ரூப் ஃபார் இண்டர்நேஷனல் அக்ரிகல்சுரல் ரீசர்ச்’ (Consultative Group for International Agricultural Research - CGIAR) என்னும் பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின் பேரில்தான் வேளாண்மைக் கல்லூரிப் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன

வேளாண்மைக் கல்வி என்பது உள்ளூர் உற்பத்தி முறைகளின் நல்ல கூறுகளையும் இணைத்துச் செல்வதாக இல்லை. இதற்குக் காரணம் என்னவெனில், வேளாண் கல்விக்கான நிதி, மானியங்கள் போன்றவை மேலிருந்து கீழாக வருகின்றன. அப்படி வரும் நிதி அமைப்புகள் காட்டும் திசையில்தான் கல்வியும் ஆராய்ச்சியும் சென்றாக வேண்டியிருக்கிறது.

மிக உயர்மட்டத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே இதை அறிவார்கள். மற்றபடி கீழ்மட்டத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது என்னென்னே தெரியாது. மேலிருந்து வரும் ஒரு ஆராய்ச்சி சட்டகங்களுக்குள்தான் உள்ளூர் ஆராய்ச்சிகள் நிகழ வேண்டி இருக்கிறது. அப்படிச் செய்தால்தான் அவர்களுக்கு வெளிநாடுகளில் நடக்கும் ஆராய்ச்சி மாநாடுகளுக்குச் செல்ல வாய்ப்புகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும்.  அந்தச் சட்டகங்களுக்குள் இயற்கை வேளாண்மை வருவதில்லை. எனவே, வேளாண் கல்லூரிகளில் அது கற்பிக்கப்படுவதில்லை.

அதனால்தான் அந்த வழிகளில் இருந்து விலகி வந்துவிட்டீர்களா?

வேறு வழி? நாம் அறிவியலின் அடிப்படையில், இயற்கை வேளாண்மை வழிகளை முன்வைத்தாலும், இயற்கை வேளாண்மை என்பதை ஒரு அறிவியல் வழி என்பதையே ஏற்றுக்கொள்ள மாட்டேங்கறாங்க. என்ன செய்யறது? 

வேதியியல் வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை இரண்டையும் ஒப்பிட்டு, சுற்றுச்சூழல் கெடாத வண்ணம் நீடித்து நிலைக்கும் வகையில், உற்பத்தியாளருக்கு லாபம் தரும் வழி எது என்பதை ஆராய்ந்து சொல்ல எத்தனை ஆராய்ச்சியாளர்கள் இங்கே இருக்கிறார்கள்?

வேளாண் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு கேரியர் வேணும், ப்ரமோஷன் வேணும், நிதி நல்கைகள் வேணும். இவையெல்லாம் வேதியியல் வேளாண் ஆராய்ச்சியில்தான் உண்டு. எனவே, அவர்கள் இயல்பாகவே அதை நோக்கித்தான் செல்வார்கள். இவையெல்லாம் இயற்கை வேளாண் ஆராய்ச்சி செய்பவருக்குக் கிடைக்குமா? இதுதான் வேளாண்மை ஆராய்ச்சியின் மிக முக்கியமான பிரச்சினை.

நவீன வேளாண்மை என்பது உற்பத்திச் செயல்திறனை மட்டுமே முன்வைக்கிறது. ஒரு ஏக்கருக்கு எவ்வளவு மகசூல் என்பது மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்பதுபோல. ஆனால், நிலம் என்பது ஒரு பல்லுயிர்ச்சூழல் என்னும் அணுகுமுறையே இல்லை அல்லவா?

ஆமாம்! அறிவியலில் ரெனே டெக்கார்ட்டே (Rene Descartes) போன்றவர்கள் குறுகல்வாதம் (reductionism) என்னும் ஒரு அணுகுமுறையை முன்வைத்தார்கள். அதன் பாதிப்புகள் நவீன அறிவியலில் பெருமளவில் உண்டு.

எனது அனுபவத்தில் நிகழ்ந்த ஒரு விஷயத்தை முன்வைத்து விளக்குகிறேன். பி.டி பருத்தி வந்த சமயத்தில், நான் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். அதைப் படித்த வங்கியாளர் ஒருவர் மும்பையில் இருந்தது என்னைத் தொடர்புகொண்டார். அவர் ஒரு தமிழர். அவர் கேட்டார், “சார் நீங்க பருத்தி தொடர்பான பேட்டியில தப்பான தகவல்களைக் கொடுத்திருக்கீங்க, நாங்க இங்க ஒரு ஹெக்டர்ல 1,500 கிலோவுக்கும் அதிகமாக மகசூல் எடுப்போம். உங்க மகசூல் எவ்வளவு?” என்று கேட்டார். 

நான் சொன்னேன், “500 கிலோ வரைக்கும் வரும்” என்று. உடனே அவர் சொன்னார், “இது விவசாயிக்கு நஷ்டம்தானே” என்று. நான் “அப்படியில்லை சார்… நீங்க வெறும் பருத்தி உற்பத்தியை மட்டும் பாக்கறீங்க. நாங்க பருத்தி பயிர் பண்ணும்போது, ஊடே 7- 8 பயிர் பண்ணுவோம். ஆனால், நீங்க கணக்கெடுக்கும்போது பருத்தியை மட்டும்தான் ஒப்பிடுவீங்க. ஊடுபயிராக வரும் தட்டப்பயிறு, துவரை, கீரை என அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றேன். அவர் நேரிலேயே வந்துட்டார். நான் அவரைக் கூட்டிக்கொண்டுபோய் ஒரு விவசாயம் செய்யும் பெண்மணியிடம் அறிமுகப்படுத்திவிட்டு, “நீங்களே பேசிக்குங்க” என்று சொன்னேன்.  நாட்டுப் பருத்தி மற்றும் ஊடுபயிர்கள் மகசூல் என எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பார்க்கையில், நாட்டுப் பருத்தியின் லாபம் அதிகமாக இருந்துச்சு.

இதில் இயற்கை விவசாயம் என்றாலே பிற்போக்குத்தனமானது என்று பொதுவெளில ஒரு பேச்சு நிலவுதே, அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?

உண்மைதான், வெளில இருந்தது பாக்கறப்போ வேதி இடுபொருட்கள் போட்டுச் செய்யும் வேளாண்மை நவீனமானதாகவும், இயற்கை வேளாண்மை என்பது பிற்போக்கானதாகவும்தான் தோணும். ஆனால், அது முழுமையான பார்வையல்ல. எடுத்துக்காட்டாக, மாடு வச்சு நீர் இறைப்பதும், ஏர் ஒட்டுவதும், இன்னிக்கு ட்ராக்டர வச்சி ஓட்டுவதைவிட அதிக செலவு பிடிப்பதாக இருக்கிறது. ஆனால், அது வெறும் பொருளாதார அளவீடு மட்டுமே. மாடு வச்சி பண்ணையம் செய்கையில், அதன் எரு உரமாகி மண்வளத்தைப் பாதுகாக்குது.

அந்த முறையில் செலவிடப்படும் சக்தியின் கரிமத்தாக்கம் குறைவு. ஆனால், செயற்கை உரம், பூச்சி மருந்துகள், டீசல் எஞ்சின் போன்றவற்றின் உதவியால் செய்யப்படும் விவசாயத்தின் கரிமத் தாக்கம் மிக அதிகம். மேலும் மண்வளம் அழிக்கப்படுதல், சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதிப்பின் விளைவுகளைக் கணக்கில் கொண்டால், வேதி இடுபொருள் வேளாண்மையின் மொத்த பாதிப்பு மிகவும் அதிகம்.

ஃபுகுவோக்கா தனது சொல்லாடல்களில், ‘இயற்கைக்குத் திரும்பிச் செல்லுதல்’ எனச் சொல்கிறார். நான் அதை மாற்றி, ‘இயற்கையை நோக்கி முன்னேறிச் செல்லுதல்’ என்று சொல்ல விரும்புறேன்.

‘இயற்கைக்கு திரும்புதல்’ (back to nature) என்பதில் ஒரு ‘வேல்யூ ஜட்ஜ்மெண்ட்’ (value judgement) இருக்கே!

ஆமாம், ஏதோ கற்காலத்துக்குப் போவதுபோல, அது தவறு. இயற்கையை அதிகம் சிதைக்காமல், அதனுடன் இணைந்து மனிதர்களுக்கான தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளத்தான் அறிவுடைமையும், புத்திசாலித்தனமும் தேவைப்படுகிறது. 

இயற்கை விவசாயத்திலேயும் பிற்போக்குச் சிந்தனைகள் இருக்கு, பழங்கால விவசாய முறைகளின் அறிவியல் அடிப்படைகளை அறிந்துகொண்டு, தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப அந்த அறிவியல் அடிப்படைகளை முன்னெடுக்காமல், அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிப்பது. எல்லாவற்றையும் ஒரு மூடப் பழக்க வழக்கமா மாத்திக்கறது – அது பெரும் ஆபத்து.

ஒரு எடுத்துக்காட்டு சொல்லுங்களேன்?

இப்போ பஞ்சகவ்யத்த எடுத்துக்கங்களேன், அதை உற்பத்தி செய்யறத ஒரு சடங்கா மாத்தி, மாலை போட்டு பூஜை பண்றதெல்லாம் முட்டாள்தனம். அது இயற்கையான தொழில்நுட்ப முறையில் உற்பத்திசெய்யக்கூடிய ஒரு இடுபொருள். அந்தத் தொழில்நுட்பத்தையே கடவுளா மாத்தி, அதுக்குள்ளே சடங்கு சம்பிரதாயங்களக் கொண்டுவர்றது தவறு. அப்படி மாத்திட்டீங்கன்னா அதிலிருந்து மேலும் புத்தாக்கங்கள் வராது. அதை மட்டுமே பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருப்பீங்க.

இப்போ நம்ம பண்ணையில திருவள்ளுவர் சிலை இருக்கு, அவரின் அடிச்சுவட்டில் நாம் முன் செல்ல வேண்டுமே ஒழிய, அவரையே கடவுளாக்கிப் பூஜை செய்ய ஆரம்பித்தால், அதிலிருந்து அறிவியல் வராது. அதுல இருந்து புத்தாக்கங்களே வராது. அது மூடநம்பிக்கையாகச் சுருங்கிப்போய்விடும்.

புத்தர் என்ன சொல்றாரோ அதை மாத்த முடியாது. சைவ சித்தாந்தி என்ன சொல்றாரோ அதை மாற்ற முடியாது. நபிகள் என்ன சொல்றாரோ அதை மாற்ற முடியாது. அதுபோல, இயற்கை வேளாண்மையின் கூறுகளை மாற்ற முடியாதுன்னு சொல்வது பிற்போக்குவாதம். அறிவியல் அப்படியெல்லாம் இல்லை, இல்லையா? அது தரவுகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டே முன்செல்லக்கூடியது.

அப்போ உங்க அணுகுமுறைய இப்படி எடுத்துக்கலாமா? நம் மரபில் உள்ள சிறந்த வழிமுறைகளோட, நவீன அறிவியல் அணுகுமுறையைச் சேத்துக்கரதுன்னு சொல்லலாமா?

அத்தோட உலகம் நீடித்து நிலைக்கும் வகையிலான ஒரு முழுமையான பார்வையையும் சேத்துக்க வேண்டும். உலகின் பெரும் அறிஞர்கள் சொன்ன இறுதி இலக்கு இதுவாகத்தான் இருக்கணும். உலகம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதில் மனிதன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்னா, சுற்றுச்சூழலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 

பொதிகைச் சோலையில் வள்ளுவர் சிலை

இப்போ உலகத்துல, வேளாண் சூழலியல் (agro ecology) என்கிற வார்த்தைகள் அதிகம் பேசப்படுது. அதுதான் நம்ம சங்க இலக்கியங்கள் பேசும் திணையா?

ஆமாம்! இப்போ பெர்மா கல்ச்சர் என்று பில் மோரிசன் சொல்கிறார் இல்லையா? ‘பெர்மனெண்ட் அக்ரிகல்ச்சர்’ (Permanent agriculture) என அவர் இதைத்தான் சொல்றாரு. நாம சொல்லும் திணை என்பதும் கிட்டத்தட்ட அதுதான். வேளாண்மையை எப்படி இயற்கையோடு முடிந்தவரை இணைந்து செயல்படும் ஒன்றாக உருவாக்குவது என்பதுதான் இதன் இலக்கு.

இதற்கு நாம் உண்ணும் உணவுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும். உள்ளூரில் கிடைக்கும் உணவுகளுக்கு ஏற்ப நம் உணவுப் பழக்கங்களை உருவாக்கிக்கொள்ள முடியுமா எனப் பார்க்க வேண்டும்.

உள்ளூரில் கிடைப்பவைக்கு ஏற்ற உணவுமுறை என்று நீங்க சொல்றப்ப, எனக்கு, சிறுதானியங்கள் நினைவுக்கு வருகிறது. ஆனால், என்னை மாதிரி நகரில் வாழும் சாதாரண மனிதருக்கு, அரிசியைக் குக்கரில் வைக்க வேண்டும். 1க்கு 3 என்னும் விகிதத்தில், தண்ணீரைச் சேர்க்கனும். அதைக் குக்கரில் வைத்து 3 விசில் வந்தவுடன் அது எனக்கு சாப்பாடாக தயாராக இருக்கணும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

ஆமாம், அதில் ஒரு பிரச்சினை இருக்கு. அதுக்கான மதிப்பீடுகளை நாம இழந்துட்டோம். எடுத்துக்காட்டாக நீங்க ஒரு ஓவியர்னு வச்சிக்கங்க, நீங்க வரைவதை மட்டும் ஏன் எந்த அவசரமும் இல்லாம, மிகவும் நிதானமாக வரையறீங்க? அதை ஏன் வேகமாகச் செய்ய மாட்டீங்கறீங்க? ஏன்னா அதை ஒரு கலையாக பாக்கறீங்க. அதேமாதிரி, சமையல் என்பதும் ஒரு கலைதான். அதைத்தான் குமரப்பா “தொழில விளையாட்டா மாத்திரு… களைப்பே வராது” என்று சொல்லியிருக்கார். விளையாடும்போது உங்களுக்குக் களைப்பு வருமா? எவ்வளவு விளையாடினாலும் வராதில்லையா?  

15 வருஷத்துக்கு முன்னாடி ‘சுவைத்துப் பார்’ என்று ஒரு புத்தகம் போட்டோம்.  அதில் சிறுதானியங்களைப் பற்றி எழுதியிருந்தோம். அப்போ சிறுதானியங்களைப் பற்றிப் பெரிசா அறிதல் இல்ல. சிறுதானியங்கள் எனச் சொன்னா, கூண்டில் வளக்கப்படும் லவ் பேர்ட்ஸுக்கு தரப்படும் தீனியான்னு கேட்டாங்க. (சிரிக்கிறார்…) 

செல்வமணி அக்கான்னு ஒருத்தங்க இருக்காங்க, அவங்க சத்தியமங்கலம்.  அவங்களோட உதவியால வரகு, சாமை, குதிரைவாலி, திணை – இந்த நான்கு சிறுதானியங்களையும் பயன்படுத்தி எப்படிச் சுவையான உணவு வகைகளைத் தயார்செய்யலாம் என்றும், அது எல்லோருக்கும் பயன்படட்டும் என்றும் இணையத்துல இலவசமாக வெளியிட்டோம்.

இதெல்லாம் நம்மளோட பாரம்பரியத்துல இருந்து வர்றது. ஆனால், பசுமைப் புரட்சி, உணவுத் தன்னிறைவுங்கற பேர்ல, நாம உணவு உற்பத்தியவே நெல், கோதுமைன்னு ரெண்டா சுருக்கிட்டோம். நம் உணவுத் தட்டில் இருந்த பல தானியங்களை, உணவு வகைகளை இழந்துட்டோம். 

இதுல ஒரு மாற்றம், ரிவைவல் (revival) வரும்னு எதிர்பாக்கறீங்களா?

(சிரிக்கிறார்…) வரணும், இல்லாட்டி முட்டுச் சந்துல போய் மாட்டிக்குவோம்!

 

தொடர்புடைய பேட்டிகள்

புதியவர்களை டிஸ்கரேஜ் செய்வேன்: பாமயன் பேட்டி
ஆமிஷ், ஆரோவில் மாதிரியையே விரும்புகிறோம்: பாமயன் பேட்டி
உயிர்மை நேயமே நம் சிந்தனை மரபு: பாமயன் பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.

அபர்ணா கார்த்திகேயன்

அபர்ணா கார்த்திகேயன், பத்திரிகையாளர். ‘பரி’ நிறுவனத்தின் முதுநிலை ஆய்வாளர். 'நைன் ருபிஸ் அன் ஹவர்' (Nine rupees an hour), 'வோஃப்' (woof) நூல்களின் ஆசிரியர்.


4

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மாநிலங்கள்மருத்துவம்சும்மா இருப்பதே பெரிய வேலைசெளந்தரம் ராமசாமிமோடிக்கு சரியான போட்டி கார்கேஏர் இந்தியா கதைபதில் - சமஸ்…பாட்ரீஸ் லுமும்பாபாலு மகேந்திரா ஆனந்த விகடன் பேட்டிமுல்லை பெரியாறு அணைஎடித் கிராஸ்மன்ஞாலப் பெரியார்கல்லணைவிஜயேந்திரர்லால்பகதூர் சாஸ்திரிவருமானம்கடவுள் கிறிஸ்தவர் அல்ல - இந்துவும் அல்ல!இந்து ராஜ்ஜியம்ஒளிவீசும் அறிவுப் பாரம்பரியம்அமரத்துவம்இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமைஅப்பாவுகாலனித்துவத்தை எப்படி எதிர்கொள்வது?ராஷிபீஜனன்மூத்த தலைவர்அயோத்தி ராமர் கோயில்பெண் ஓட்டுநர்தேசியத் தேர்தல்இரண்டு வயதுஒரே சமயத்தில் தேர்தல்: மோசமான முடிவு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!