பேட்டி, விவசாயம், ஆளுமைகள், சுற்றுச்சூழல் 7 நிமிட வாசிப்பு

புதியவர்களை டிஸ்கரேஜ் செய்வேன்: பாமயன் பேட்டி

பாலசுப்ரமணியம் முத்துசாமி அபர்ணா கார்த்திகேயன்
23 Apr 2023, 5:00 am
0

படம்: பழனிக்குமார்

தென்காசிக்கு அருகில் வாசுதேவ நல்லூரை அடுத்திருக்கும் பொதிகை மலை அடிவாரத்தில், ஒரு புத்தாக்க முயற்சியாக ‘பொதிகைச் சோலை’ என்னும் கூட்டுப்பண்ணை உருவாகிக்கொண்டிருக்கிறது. ஒத்த சிந்தனையைக் கொண்ட நண்பர்களுடன் இதை முன்னெடுப்பவர் இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன்.

இயற்கை விவசாயம், காந்தியம், சூழலியல் ஆகிய தளங்களில் மிகவும் பரிச்சயமானது பாமயன் எனும் பெயர். கடந்த 35 ஆண்டுகளாக இந்தத் தளத்தில் இயங்கிவரும் இவரும், நண்பர்களும் பல்லாண்டுகளாகப் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் இந்தக் கூட்டுப்பண்ணையத்தை உருவாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். 

இந்தப் புத்தாக்க முயற்சியைப் பற்றி அறிந்துகொள்வதற்காக ‘பொதிகைச் சோலை’க்குச் சென்றோம். அங்கு நம்மை வரவேற்றவர், பொதிகைச் சோலையில் பணிபுரியும் ஓர் இளைஞர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை படித்தவர். வேளாண்மை படித்துவிட்டு, வேளாண்மை செய்ய வருபவர்கள் அதிசயப் பிறவிகள். அவர் பெயர் கக்கன் சேகுவேரா. என்ன வித்தியாசமான பெயர். பெயர்க்காரணம் கேட்டோம். தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவராம். சரிதான்!

தோட்டத்தின் முன்புறத்தில், ஓடு வேய்ந்த ஓர் அரங்கம் இருந்தது. அரங்கத்துக்கு அடுத்த பகுதியில், திருவள்ளுவர் சிலையாக அமர்ந்திருந்தார். நாங்கள் சென்றிருந்த தினத்துக்கு அடுத்த நாள் ‘பொதிகைச் சோலை’யின் பங்குதாரர்கள் பலரும் இணைந்து, பொங்கல் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அந்த அரங்கின் தரை ரெட் ஆக்ஸைட் நீரால் கழுவப்பட்டு, குளிர்ச்சியாக இருந்தது. இளங்காற்று காதுமடல்களை நலம் விசாரித்தது. பாமயன் தன் சொந்த ஊரிலிருந்து அன்று காலைதான் வருவதாக இருந்தது. அந்தக் குளிர்ச்சியான திண்ணையில் அமர்ந்து, அவர் வருவதற்காகக் காத்திருந்தோம். 

கொஞ்ச நேரத்தில், தன் நண்பருடன் வந்து இறங்கினார் பாமயன். பிரியம் பொங்கும் சிரிப்புடன் நம்மை நோக்கி வந்தார். ‘பொதிகைச் சோலை’ அரங்கின் திண்ணையில் அமர்ந்து உரையாடலைத் தொடங்கினோம். 

வணக்கம் சார்! இங்கே வருவதற்கு முன்பு, உங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க சில விடியோக்களைப் பாத்தேன்… ‘பொதிகைச் சோலை’ என்னும் இந்த முயற்சியைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், பொதுவாக இயற்கை வேளாண்மையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை அறிந்துகொள்ளவும் வந்திருக்கோம். இதில் பாலாவுக்கும் சில கேள்விகள் உள்ளன.  

இந்தப் ‘பொதிகைச் சோலை’யைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு, நீங்க என்னோட பின்னணியைப் பற்றித் தெரிஞ்சுக்கனும்.  

நான் சூழலிய இயக்கப் பின்னணியில் இருந்தது வந்தவன். ‘பூவுலகின் நண்பர்கள்’னு ஓர் அமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்க. இப்ப அந்த அமைப்பை நடத்திவருபவர்கள் பின்னாடி வந்த டீம். முன்னாடி நெடுஞ்செழியன் என்பவர், வங்கி மேலாளராக இருந்தவர். அவர், நான், மது, புருஷோத்தமன் உள்ளிட்ட 7-8 பேர் இணைந்து, சூழலியல் தொடர்பான புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிட ஆரம்பித்தோம். செழியன்தான் எங்களுக்கெல்லாம் சீனியர். நான் வயதில் இளையவன். 120க்கும் அதிகமான புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிட்டோம். ஃபுகுவோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தை நாங்கள்தான் முதலில் மொழிபெயர்த்து வெளியிட்டோம்.

அந்தக் காலகட்டத்தில் பல இடங்களுக்குப் பயணம் செய்வதும், சூழலியல் பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதும், எழுதுவதுமாக என் பயணம் இருந்தது. நான் ஊடகவியல் படித்தவன் என்பதால், எழுதுதல் எனக்கு இயல்பாக வந்தது.

ஒரு கட்டத்தில் வெறுமே எழுதுவதும், விமரிசனங்களை வைப்பது மட்டும் போதாது எனத் தோன்றியது. நாங்கள் 11 நண்பர்கள் இணைந்து, ‘தமிழக உழவுத் தொழில்நுட்பக் கழகம்’ என ஓர் அமைப்பை உருவாக்கினோம். அதில் ஈடுபட்ட பலரும் பரந்துபட்ட பின்னணியில் இருந்தது வந்தவர்கள். ஒரு பொறியியல் பட்டதாரி, சில விவசாயிகள், ஊடகவியல் பின்னணியில் இருந்துவந்த நான். அந்தக் காலகட்டத்தில் விவசாயம் ஒரு பெரும் நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கி இருந்தது.

இது பசுமைப் புரட்சிக்குப் பின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் உருவான காலம் என்று சொல்லலாமா?

ஆமாம். மரபணு மாற்றப் பயிர்கள், உயிர்த் தொழில்நுட்பங்கள் உள்ளே வரத் தொடங்கிய 95-96 காலகட்டம். அதன் பின்னர்தான் உழவர்கள் தற்கொலைகள் நடந்து, அது பேசுபொருளானது. ராஃபின்னு ஒரு பன்னாட்டு அமைப்பு. அவர்கள் பெரிய பெரிய புத்தகங்களை வெளியிடுவார்கள். அவற்றை நாங்கள் சுருக்கி தமிழில் வெளியிடுவோம். ரேச்சல் கார்ஸன் (Rachel Carson) எழுதிய ‘சைலன்ட் ஸ்பிரிங்’ (Silent Spring) என்னும் புத்தகத்தை ‘மௌன வசந்தம்’ என்னும் பெயரில், தமிழில் கொண்டுவந்தோம். அதேபோல, ‘வயலன்ஸ் ஆஃப் க்ரீன் ரெவல்யூஸன்’ (violence of Green Revolution), ‘லாஸ்ட் ஒயாசிஸ்’ (Last Oasis) (தமிழில்: மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக). அப்புறம் கவல்ஜித் சிங் என்ற ஒரு பொருளாதார அறிஞர் எழுதிய ‘குளோபலைசேஸன் ஆஃப் ஃபினான்ஸ்’னு (Globalisation of Finance) ஒரு புத்தகம். இதுபோன்ற புத்தகங்கள் சொல்ல வருவதைச் சுருக்கி, சிறிய அறிமுக நூல்களாக வெளியிட்டோம்.

சிறு சிறு ஊர்களுக்குச் சென்று ஆர்வமுள்ள இளைஞர்களை இணைத்து உள்ளூர் அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். திருச்சிக்கு அருகில், கொல்லிமலை பக்கத்தில் ஒரு கிராமம் என்று எங்கெல்லாம் சூழலியல் பிரச்சினைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று, இளைஞர்களை இணைத்து, வழக்கு தொடுப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது எனப் பல முனைப்புகளில் மக்கள் மத்தியில் சூழலியல் அறிதலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம்.

அந்தக் காலத்தில்தான் நெடுஞ்செழியன் மறைந்தார். அது எங்களுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது. அவர்தான் எங்கள் அனைவரையும் இணைத்து ஒரு வலைப்பின்னலை உருவாக்கி இருந்தார். அவர் மறைவுக்குப் பின்னர் தொடர்புகள் அறுந்துபோயின. பலரும் தங்களுக்கான பாதையில் சென்றுவிட்டார்கள். நானும் நண்பர்களும், விவசாயிகள் மத்தியில் பணி செய்யலாம் என தொடங்கினோம்.

‘பொதிகைச் சோலை’ பண்ணை அரங்கம். இடதுபுறம் திருவள்ளுவர்.

முதலில், விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்தோம். அந்த ஆய்வில், நான்கு பிரதானமான பிரச்சினைகளை நாங்கள் கண்டறிந்தோம். 

  1. பசுமைப் புரட்சிக்கு முன்பு விவசாயிகளிடம் தற்சார்பு இருந்தது. விதை, உரம், தொழில்நுட்பம் போன்றவை உழவர்களின் கைகளில் இருந்தது. அந்தத் தன்னிறைவினால், அவர்களால் யாரையும் சார்ந்திராமல் சுதந்திரமாக இயங்க முடிந்தது. அந்த முறையினால் உற்பத்தி குறைவா, அதிகமா என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். பசுமைப் புரட்சிக்குப் பின்னர் விதை, உரம் போன்றவை நிறுவனங்களின் கைகளுக்குப் போய்விட்டது. இது முதல் பிரச்சினை.
  2. இரண்டாவது இந்த ஜனநாயகக் கட்டமைப்பில் உள்ள பிரச்சினை. ஜனநாயகத்தில் மிக அதிகமான மக்களின் குரல்தான் ஒலிக்க வேண்டும். இந்தியாவின் பெரும்பான்மை விவசாயிகள்தான். அப்படியானால், விவசாயிகளின் குரல்தான் ஓங்கி ஒலிக்கணும். ஆனால், நகர்ப்புர மத்திய தர மக்களின் குரல்தான் ஓங்கி ஒலிக்கிறது. சட்ட திட்டங்கள் அனைத்தும் அவர்களின் நலனை முன்வைத்து மட்டுமே தீட்டப்படுகின்றன. 
  3. தங்கள் பிரச்சினைக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதற்கு விவசாயிகளின் வாழ்க்கை முறையே தடையாக இருக்கிறது. எப்படீன்னா, இப்ப ஆசிரியர்கள் எல்லாம் இணைந்து போராடிச் சிறைக்குச் சென்றால், பாதிக்கப்படுவது மாணவர்களாக இருப்பார்கள்.  ஏனெனில், அவங்க ஆர்கனைஸ்ட் செக்டார். அதேபோல மருத்துவர்களோ, அரசு ஊழியர்களோ போராடினால், அவர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், விவசாயி போராடிச் சிறைக்குச் சென்றால், பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். தோட்டத்தில் நீர் பாய்ச்ச ஆள் இருக்காது. மாட்டுக்குத் தண்ணீர் வைக்கக்கூட ஆள் இருக்காது. அதனால், அவர் நேரடியாகப் பாதிக்கப்படுகிறார். எனவே, தன் தினசரி வேலையை விட்டுவிட்டு நீண்ட போராட்டம் நடத்த முடியாது. எனவே, இவர்கள் பெரிதாக ஒன்று சேராத நிலையில் இருக்கிறார்கள். மார்க்ஸ் சொல்வதுபோல, அவர்கள் எதுவுமே செய்ய முடியாத கடைசி நிலையில் இருக்கிறார்கள். 
  4. அப்புறம் சந்தை. சந்தையின் குணம் எப்படீன்னா, உற்பத்தி அதிகமான விலை குறைந்துவிடும். உற்பத்தி குறைவாக இருக்கும் காலத்தில், விலை அதிகமாக இருக்கும். இரண்டுமே விவசாயிக்குச் சாதகமாக இருக்காது. 

இந்த நான்கு காரணிகளை ஆய்வுசெய்து பாக்கும்போது, நாம எதுல கவனம் செலுத்தனும்னு யோசிச்சேன். அப்புறம் நமது பலம் என ஒன்று இருக்கிறது. அதில்தான் கவனம் செலுத்த முடியும். இப்ப நாம போயி சந்தையைக் கைப்பற்ற முடியாது. நம்மகிட்ட அவ்வளவு பணம் கிடையாது. இன்னொரு புறம் அரசியல்ரீதியாக போராட்டங்களை முன்னெடுத்து, ஆட்சியைப் பிடித்து மாற்றங்களைக் கொண்டுவருவதும் சாத்தியமில்லை. அதனால், எங்க வேலை செய்ய முடியும்னா தொழில்நுட்பத்துல தொடங்குவோம். மக்களிடம் பேசுவோம். பேசி மெல்ல மெல்ல மாற்றத்தைக் கொண்டுவருவோம்னு தீர்மானித்தோம். அப்பத்தான் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’, ‘ப்லென்ட்டி ஃபார் ஆல்’ (Plenty for All) பில் மாரிஸன் எழுதிய ‘பெர்மா கல்ச்சர்’ (perma culture). இப்படி நிறைய தரவுகளைத் திரட்டினோம். அப்பறம் நம்ம சங்க இலக்கியங்கள்ல இருக்கற குறிப்புகள எடுத்து, அனைத்தையும் சேர்த்து இரண்டு நாட்கள் ‘ட்ரெயினிங் மோட்யூல்’ (training module) ஒன்றைத் தயார்செய்தோம். 

முதன்முதலாக, 2001 - 2002ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில், நண்பர் சுந்தர்ராமனின் பண்ணையில் தொடங்கினோம். அப்போ நம்மாழ்வார் ‘குடும்பம்’ எனும் ஓர் இயக்கத்துல பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரும் இந்தத் திசையில் பிரச்சாரத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்தார். நம்மாழ்வாரின் ஆராய்ச்சி நிலையமே சுந்தர்ராமனின் பண்ணைதான். அங்கேயே தங்கியிருந்து அவரது பணிகளைச் செய்துகொண்டிருந்தார்.

அதுக்கு முன்னாடி நான் ‘ஏஎஸ்எஸ்எஃப்ஏ’ (ASSEFA - Association of Sarva Seva Farms) எனும் நிறுவனத்துல கொஞ்ச நாள் பணியாற்றிட்டு இருந்தேன். அப்போதுதான் ‘சஸ்டைனபிள் டெவெலப்மென்ட்’ (sustainable Development என்றெல்லாம் பேச்சுகள் வரத் தொடங்கிய காலம். நாங்க காரியாப்பட்டி என்னும் ஊர் அருகில் ஒரு கூட்டுப்பண்ணைத் திட்டத்தைத் தொடங்கினோம். ஆனால், அது முற்றுப் பெறாமல் நின்றுபோனது.

அதன் பிறகுதான், நெடுஞ்செழியனுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கினேன். அப்போது நம்மாழ்வார் கொங்குப் பகுதிகளில் பணியாற்றிக்கொண்டிருந்தார். மாதத்தில் 2 நாட்கள் பயிற்சிகளை அளிக்கத் தொடங்கினோம். நிறைய விவசாயிகள் பங்குபெற்றார்கள். பயிற்சிகளில் பங்குபெற்ற விவசாயிகள் “நீங்கள் பேசுகையில் நல்லாப் புரியுது. ஆனால், எங்கள் ஊருக்குப் போனதும் இது தொடர்பான தகவல்களை மறந்துவிடுகிறோம். எனவே, நீங்கள் பேசியவற்றைச் சின்னச் சின்ன தகவல் கையேடுகளாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார்கள். 

எனவே, பயிற்சிகள் சொல்லவரும் விஷயங்களைச் சிறு சிறு புத்தகங்களாக வெளியிட்டோம். மொத்தம் 22 புத்தகங்கள். இயற்கை வேளாண்மையைப் பற்றிய பயிற்சிக் கையேடுகளை முதன்முதலில் வெளியிட்டது நாங்கள்தான். இயற்கை விவசாயம்னா என்ன? மண் வளம்னா என்ன? மண்புழு உரம் தயாரிப்பது எப்படி? தொழு உரம் தயாரிப்பது எப்படி? இப்படி ஒவ்வொரு தலைப்பிலும் 30-35 பக்க அளவுக்குக் கையேடுகளைத் தயாரித்து விநியோகித்தோம். 

புத்தகங்களை எல்லோரும் வாங்க வேண்டும் என்பதற்காக புத்தகத்திற்கு 10 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தோம். இது பெரியார் செய்த உத்தி. எங்களது புத்தகங்கள் விவசாயிகளால் விரும்பி வாங்கப்பட்டன. பயிற்சியின் இறுதியில், பங்கு பெற்றவர்களிடம், உங்கள் ஊரில் நீங்கள் இது தொடர்பாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்துவோம். நாங்கள் அங்கு வந்து மற்ற உழவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம் எனச் சொல்லுவோம். ஆனால், அங்கே பெரிதாக வரவேற்பு இருக்காது. பல ஊர்களில் 1-2 பேர்தான் வருவார்கள். அதேபோல, நாம் சொல்லும் கருத்துக்களை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.

ஆனால், மெல்ல மெல்ல அவங்களுக்கிடையில் ஆர்வம் உண்டாச்சு. நாங்கள் எங்களது முறைகளை அறிவியலாச் சொல்லி கொடுத்தோம். வெறுமனே பஞ்சகவ்யா, இதை நீங்க அடிங்கன்னு மூடத்தனமாச் சொல்லாம, இதில் என்ன பாக்டீரியா இருக்கு, அது எப்படி வேலை செய்யுதுன்னு சொல்லிக் கொடுத்தோம். அறிவியல் அடிப்படையைச் சொல்லிக் கொடுத்தவுடன், விவசாயிகளிடம் ஆர்வம் பற்றிக்கொண்டது. எடுத்துக்காட்டாக பஞ்சகவ்யாவில் ஏன் நெய்யைப் போடனும்? அது சாப்பிடற பொருளாச்சே! விளக்கெண்ணையப் போட்டுப் பாக்கலாமான்னு ஒருத்தர் போட்டுப் பாத்தார். அது வெற்றிகரமா வந்துச்சு. அதேபோல, ஏன் சக்கரையப் போடனும்னு வாழைப்பழத்தைப் போட்டுப் பாத்தார் இன்னொருவர்.

இதுபோன்ற உரையாடல்களும் புத்தாக்கங்களும் தந்த எழுச்சியில், இவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ள ‘தாளாண்மை’ என்ற ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சோம். அது ரொம்ப நாள் வந்துச்சி. ‘பசுமை விகடன்’, ‘மண்வாசனை’ன்னு இப்போ வந்துகொண்டிருக்கும் பத்திரிகைகள் வருவதற்கு நீண்ட காலம் முன்பு.

புத்தகங்கள், பத்திரிகை என்னும் செயல்பாட்டின் அடுத்த கட்டமாக, உற்பத்தியாகும் பொருட்களை சந்தைப்படுத்த உதவும் முயற்சிகளைத் தொடங்கினோம். இயற்கை வழியில் வேளாண்மை செய்பவர்கள், இயற்கை விவசாயப் பொருட்களை வாங்கும் ஆர்வம் கொண்டவர்கள் என ஓர் இணைப்புச் சங்கிலியை உருவாக்கத் தொடங்கினோம். புதிதாக இயற்கை விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுபவர்களை, அவர்கள் பகுதியில் ஏற்கெனவே வெற்றிகரமாகச் செய்துகொண்டிருப்பவர்களுடன் இணைந்து செயல்பட உதவுவோம். இப்படியாகச் சென்றுகொண்டிருந்த காலத்தில், பெரும் ஊடகங்கள் இதில் உள்ளே நுழைந்தன. இதன் மீதான வெளிச்சம் பரவலானது. அவை நம்மாழ்வார் மீது நல்லா ஃபோகஸ் பண்ணாங்க. ‘பசுமை விகடன்’, ‘புதிய தலைமுறை’ போன்ற நவீன ஊடகங்கள் பெருமளவில் செய்தார்கள்.

ஆனால், அவர்கள் காலப்போக்கில் திசை மாறி, வேறு வழியில் செல்லத் தொடங்கிவிட்டார்கள். பத்து ஏக்கரில் பத்து கோடி எடுப்பது எப்படி? என்று ஊடகம், விளம்பரம் என்னும் வணிக வழியில். நாங்கள் காந்திய, இடதுசாரி பின்ணணியில் இருந்து வந்ததால், நாங்கள் இந்த ஊடகங்களுடன் இணையாமல் எங்கள் வழியில் தொடர்ந்தோம். எங்கள் பத்திரிகையில் விளம்பரம்கூட இருக்காது. இதனால், அவர்களுடன் ஈடுகொடுக்க இயலாமல், ‘தாளாண்மை’ பத்திரிகை நின்றுபோனது.

பொதிகை மலைத்தொடரின் பின்னணியில் ‘பொதிகைச் சோலை’.

இப்படியாக இயற்கை விவசாயம் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு, ஓரளவு பொருட்படுத்தத்தக்க இயக்கமாக வளர்ந்தது அது. ஒரு கூட்டம் போட்டால் 2,000 விவசாயிகள் வருவார்கள் என்னும் அளவுக்கு வளர்ந்தது.

எங்களது அடுத்த கட்டமாக ஒரு கூட்டுப்பண்ணை ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தோம். ஆளுக்கு 15,000 ரூபாய் முதலீடுசெய்து ஓர் இடத்தை வாங்கி திட்டத்தைத் தொடங்கினோம். ஆனால், அதில் வெற்றிபெற முடியவில்லை. ஏன்னா, நாங்க போட்ட கணக்கு வேறயாவும் செலவு வேறயாவும் இருந்தது. வேற வழியில்லாம, இறுதியில் நிலத்த வித்து, கணக்கை செட்டில் பண்ணிட்டோம்.

அப்பத்தான், இனிமே கூட்டு முயற்சி வேணாம்னு முடிவுசெஞ்சேன். கூட்டு முயற்சியில் ஈடுபட்டுத் தோத்துப்போயிட்டே இருக்கோம். இனிமே எது செஞ்சாலும், தனியே செய்வோம்னு முடிவெடுத்துப் போய்க்கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில், ஓசூரில் நண்பர் செம்பரிதின்னு ஒருத்தர். அங்க அடிக்கடிக் கூட்டம் போடுவார். அங்க ஒவ்வொருமுறை போகும்போதும், நாம ஒரு கூட்டுப்பண்ணை தொடங்கனும்னு சொல்லிகிட்டே இருப்பார். நான் தள்ளிப்போட்டுகிட்டே வந்தேன். 2019 வாக்குல ரொம்ப அழுத்தம் கொடுத்துட்டாங்க.

தொடக்கத்துல 10-15 பேர்தான் சேந்தாங்க. அப்பறம் இந்தத் திட்டத்தப் பற்றி முகநூல்ல போட்டுவிட்டோம். மளமளவென்று நண்பர்கள் சேர்ந்துட்டாங்க. முதல்ல 50 பேராச்சு அப்பறம் 100 பேராயிருச்சு, நாங்க மொதல்ல 50 ஏக்கர்னுதான் திட்டமிட்டோம். இத நாங்க வெறும் வேளாண் திட்டமாத் தொடங்கல, வேளாண்மைல என்ன பிரச்சினைன்னா, அதுல 365 நாளும் வேலை இருக்காது. வருமானம் இருக்காது. அதனாலதான் வேலை செய்யறவங்க வேற வேலைக்கு, மில் வேலைக்குன்னு போயிடறாங்க, அதனால இதைப் பண்ணையமாக மாற்றி, 365 நாளும் வேலை இருக்கும்படி அமைக்கனும்னு திட்டமிட்டோம்.

கடந்த 20-30 ஆண்டுகளில் நெறயப் பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து வேளாண்மைக்கு வந்தார்கள். ஆனால், வேளாண்மை பற்றிய உண்மையான அறிதல் இல்லாமல் அந்த முயற்சிகள் பெரும்பாலும் நஷ்டத்தில் முடிந்தன. தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து வேளாண்மை செய்ய என்னிடம் ஆலோசனை கேட்க வருபவர்களை நான் ‘டிஸ்கரேஜ்’ (discourage) செய்வேன். வலியுறுத்துபவர்களிடம் “முதலில் ஒரு தோட்டத்தில் சென்று சில மாதங்கள் தங்குங்கள்… அங்கே அடிக்கும் வெயிலை எதிர்கொள்ளப் பழகுங்கள். அதன் வரவு செலவுகளை நேரடியாக அறிந்துகொள்ளுங்கள். பின்னர் யோசியுங்கள்” எனச் சொல்வேன். ஏனெனில், இப்படி வருபவர்களில் பெரும்பாலானோர், வேளாண்மை பற்றிய ஒரு அறியாமையுடன் வருகிறார்கள். அதில் உள்ள கஷ்டங்களை எதிர்கொள்ள முடியாமல் சில மாதங்களில் சோர்ந்து வெளியேறுகிறார்கள்.

ஆனால், அதைத் தாண்டியும் இத்துறையில் இருக்கும் பலருக்கு ஏதாவது ஒரு வகையில் வேளாண்மையுடன் இணைந்திருக்க வேண்டும் என்று பெரும் ஆவல் இருப்பதை உணர்ந்தோம். அவர்களையும் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தோம். ‘பொதிகைச் சோலை’ என்னும் இந்த முயற்சி தொடங்கியதன் பின்னணி இதுதான்.

(தொடரும்…)

 

படங்கள்: பழனிக்குமார்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.

அபர்ணா கார்த்திகேயன்

அபர்ணா கார்த்திகேயன், பத்திரிகையாளர். ‘பரி’ நிறுவனத்தின் முதுநிலை ஆய்வாளர். 'நைன் ருபிஸ் அன் ஹவர்' (Nine rupees an hour), 'வோஃப்' (woof) நூல்களின் ஆசிரியர்.


1

2





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பொருளாதார உற்பத்திடெட் நார்தௌஸ்உங்களில் ஒருவன்இந்துத்துவ நாயகர் வருமானச் சரிவு… பாஜகவைப் பின்னுக்கு இழுக்கும் சரிஆண் பெண்ஆன்டான் ஜெய்லிங்கர்மாதவிகலை விமர்சகர்மாயக் குடமுருட்டி: ஒளிதான் முதல் நினைவுஇந்திய வேளாண்மைவிழுப்புரம்விழித்தெழுதலின் அவசியமா?மருத்துவப் படிப்புதகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா? காம்யுஅதிமுகதேர்தல் கணிப்புபுகைப்படங்கள்படிப்புக்குப் பின் அரசியல்விரும்பப்படுகின்றன விலை உயர்வும் வேலையின்மையும்!அரசமைப்புச் சட்டப் பிரிவு 370கிறிஸ்துமஸ்நிலையானவைநீதிபதி குப்தாபெரியாரின் கருத்துரிமை: தான்சம்ஸ்கிருதம்முரண்களின் வழக்குவிலைராஜ்பவன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!