பேட்டி, விவசாயம், ஆளுமைகள், சுற்றுச்சூழல் 4 நிமிட வாசிப்பு
நாம் கட்டற்ற நுகர்வு பற்றிப் பேசுவதில்லை: பாமயன் பேட்டி
தென்காசிக்கு அருகே, பொதிகை மலை அடிவாரத்தில் புதிதாக அமைந்திருக்கும் ‘பொதிகைச் சோலை’ கூட்டுப்பண்ணையைத் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்திவருகிறார் இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன். இயற்கை வேளாண்மை, காந்தியம், சூழலியல் தளங்களில் தீவிரமாக இயங்கிவருபவர். வேளாண் துறையில் பல ஆண்டு கால களப் பணியுடன் நீண்ட அனுபவத்தைக் கொண்டவர் பாமயன். அந்த அனுபவத்தின் வழி ஒரு புத்தாக்க முயற்சியாக இந்தப் ‘பொதிகைச் சோலை’யை உருவாக்கி இருக்கிறார். இந்தப் புதிய முயற்சி பற்றி அவருடன் நடத்தப்பட்ட உரையாடல்.
நான் வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். நான் 70களில் சிறுதானியங்களில் ஆராய்ச்சிசெய்யும்போது, சிறுதானியங்கள் பயிர்செய்யப்பட்டுவந்தன. ஆனால், 2007இல் நான் ஓய்வுபெறும்போது சிறுதானியங்கள் பயிர்செய்யப்படுவது கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது. இப்பத்தான் திரும்ப கொஞ்சம் ரிவைவ் (revive) ஆயிட்டிருக்குது. (பாமயனின் நண்பர்)
நீங்க அதுக்கு எனக்குதான் க்ரெடிட் (Credit) கொடுக்கனும். (சிரிக்கிறார்…) எத்தனை கூட்டங்கள், எத்தனை பயிற்சி வகுப்புகள் நடத்திருக்கோம்.
இந்த ஆண்டு உலக சிறுதானியங்கள் ஆண்டு என அறிவிச்சிருக்காங்களே… அதனால் என்ன பலன் இருக்கும் என நினைக்கிறீர்கள்?
இதெல்லாம் அப்பப்போ வரும் புதிய முயற்சிகள். கொஞ்ச நாள் சிறுதானியங்கள் என பேசுவாங்க, பார்த்தால் அது தொடர்பான பெரு வணிக முனைப்புகளைப் பாக்கலாம். நாம் பேசுவது வேறு. உள்ளூரில் இருக்கும் விளைநிலங்களில், சூழலுக்கேற்ற வேளாண்மை. முடிந்தவரை உள்ளூர் நுகர்வு என்பது, மாறாக வணிக நோக்கம் என்பது திரும்பத் திரும்ப அதிக உற்பத்தி, பெரு வணிகம் என்றே பார்க்கும். அந்தப் பாதையில் நீடித்து நிலைக்கும் தன்மை இல்லாமல் போய்விடும்
வேளாண்மையில் இருக்கும் இந்த விழுமியங்களை, பார்வைகளை மாத்தனும். அந்தத் திசையில் நம்மால் இயன்ற சிறு சிறு முன்னெடுப்புக்களை செஞ்சுகிட்டே இருக்கனும்.
சிறுதானிய வேளாண்மையை ஊக்குவிக்க, சிறு சிறு கூட்டங்கள், உணவுத் திருவிழாக்களை நடத்துதல் என செஞ்சோம். இப்போது நாம பண்ணத் தேவையில்லை. அங்கங்கே மக்களே பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இது சமூகத்தினுடான ஓர் உரையாடல்தான். வேறென்ன, திரும்பத் திரும்பப் பேசிகிட்டே இருக்கனும்.
புதுப்பிக்கத்தக்க சக்தியை (Renewable Energy) எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதையும் நாம் ஓர் ஆய்வு நோக்கோடு பார்க்கனும். இப்போ மரம் என்பது புதுப்பிக்கக்கூடிய சக்தி. ப்ளாஸ்டிக் அப்படி அல்ல. ஆனால், மரத்துக்குப் பதிலா ப்ளாஸ்டிக்கைப் பயன்படுத்தறதோட விளைவுகள் என்ன? அதேமாதிரி, இன்னைக்குச் சூரிய ஒளி மின்சாரம் புதுப்பிக்கத்தக்க சக்தி எனச் சொல்றோம். ஆனால், சூரிய ஒளி மின் தகடுகளை உற்பத்தி செய்வதும், அவற்றை மறுசுழற்சி செய்வதும் சூழலியல் பிரச்சினைகளாக உள்ளன. அதைச் சாண எரிவாயுவுடன் ஒப்பிடுகையில், இயற்கை எரிவாயு மேலான தீர்வாக இருக்கும்.
இதில் இருக்கும் பெரும் சிக்கல் என்னன்னா, கட்டற்ற நுகர்வு (Excessive consumerism) என்பதை நாம் பேசாமல் இருக்கிறோம். பிரச்சினைகளின் தொடக்கமே அங்கிருந்துதான். கட்டற்ற நுகர்வின் எல்லா இன்பங்களும் வேண்டும். ஆனால், அதை அடையும் வழிகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காத ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இயலாத ஒன்று.
இங்கேதான் காந்தி வருகிறார். இப்போ நாம் நம் தேவைக்கு மிக அதிகமான உணவைச் சாப்பிடுகிறோம். காந்தி என்ன சொல்லுவார் – உனது உடலுக்கும், தொழிலுக்கும் எவ்வளவு தேவையோ, அதை மட்டும் சாப்பிடு என்பார்.
ஆனால், இதுபோன்ற ஓர் உணவுப் பழக்கத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் மக்கள் பழகிவிட்டார்களே. மாற்று எனச் சொன்னால் அது எளிதாக இருக்குமா? எடுத்துக்காட்டாக, என் பாட்டியோட புடவைகள் இன்னைக்கும் இருக்கிறது. அவர்கள் தேவைகள் குறைவு. ஆனால், என் தலைமுறையில் அது பல மடங்கு அதிகமாயிருச்சு!
எளிமைக்கும், ஏழ்மைக்கும் பெரும் வித்தியாசம் இருக்கு. எளிமையாக இருப்பது ஏழ்மை என ஒரு மனச்சாய்வு இருக்குது. ஏழ்மையை நாம் ஒழிக்கனும். ஆனால், எளிமையை மிக முக்கியமான விழுமியமாக முன்னெடுக்கனும். இந்த மதிப்பீடுகளை வலுவாக உருவாக்கி நிறுத்தாவிடில், நாம் முன்னெடுக்கும் முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடும்.
‘உண்பது நாழி, உடுப்பது இரண்டே’ என்றுதானே சங்கப் பாடல் சொல்கிறது. சங்கப் பாடல்களில், அரசனுக்கான நீதிகள், நெறிமுறைகள் தொடர்ந்து சொல்லப்பட்டுக்கொண்டே வருகிறது. நீர்நிலைகளை உருவாக்குதல் எதிரிகளைப் போரில் வெல்வதைவிட மேலானது என்பது போன்ற விழுமியங்களை, புலவர்கள் தொடர்ந்து பாடுகையில், ஆள்பவர்களின் மனநிலையில் மாற்றங்கள் உருவாகின்றன. அதுமாதிரி, நாம் உருவாக்க விரும்பும் உலகத்துக்கான புதிய விழுமியங்களை நாம்தான் உருவாக்கி தொடர்ந்து சமூகத்தின் முன்னாடி வச்சிகிட்டே இருக்கனும்.
சங்க காலத்தின் தொடர்ச்சியாக, நீங்கள் திணைக் கோட்பாடுகளை முன்வைத்து ஒரு சமூக வாழ்க்கை முறையை முன்வைக்கிறீர்கள். அந்தக் காலத்து வணிகம் சமூகத்தில் என்ன பங்கை வகித்தது? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?
வணிகம் பழங்காலம் தொட்டே இருந்ததற்குப் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க் காவியமே வணிகர்கள் கதைதான். கண்ணகியின் தந்தை மாசாத்துவான், தரை வழி வணிகம் செய்துவந்த ஒரு பெரு வணிகர். கோவலனின் தந்தை மாநாய்கன், கடல் வழி வணிகர்.
அந்தக் காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து மிளகு, தேன், முத்து, பவளம், நகைகள் எனப் பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கான பல தரவுகள் மேற்கத்திய வரலாற்றிலிருந்தும் கிடைக்கின்றன. ஆனால், இன்று முத்துக்கள் இல்லை. அளவற்ற வணிகம் காரணமாக அவை முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன. இதுதான் நாம் கண்டுணர வேண்டிய படிப்பினை என நெனைக்கிறேன்.
உபரியாக இருக்கும் உற்பத்தியைச் சந்தைப்படுத்த வணிகம் என்னும் அளவில் இருப்பது மிகச் சரியானது. தேவையானது. ஆனால், வணிகத்துக்கான உற்பத்தி என்னும் முறை, சுரண்டலில்தான், சுற்றுச்சூழல் அழிவில்தான் போய் முடியும்.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
இயற்கை வேளாண்மையிலும் பிற்போக்குத்தனம் இருக்கிறது: பாமயன் பேட்டி
21 May 2023
நம் சமூகம் இப்போது செல்லும் வழிகளில், ஒரு சூழல்ச் சுமை உருவாகிட்டே இருக்கிறது என ஒரு இடத்தில் சொல்கிறீர்கள். இந்தச் சுமை பெண்கள் மேல்தான் மிக அதிகமாக விழுகிறது. இப்போது நீங்கள் முன்னெடுக்கும் வழிகளில், பெண்களுக்கான இடம் என்னவாக இருக்கும்?
இதுபோன்ற முன்னெடுப்புகளில் பாலின நீதியை மிகவும் நுட்பமாக இணைத்து உருவாக்க வேண்டும். என்னைப் பொருத்தவரையில் ‘திணை’ என்பதே பெண்பால்தான். திணை என்பது தாய். தாய்ப் பண்புகளைக் கொண்டது. ஏனென்றால், அதுதான் உற்பத்தி செய்யுது. எனவே, எங்கள் திட்டங்கள் பெண்மைக்கான விழுமியங்களும், முக்கியத்துவமும் கொண்டதாகத்தான் இருக்கும். அதைத் தவிர்க்கவே முடியாது.
ஆனால், நீங்க சொல்ற சுற்றுச்சூழல் சுமை என்பதைத் தவிர்க்க சரியான வடிவமைப்புதான் முக்கியம். ஒட்டுமொத்தச் சூழலுமே மாறனும். நமது உணவுப் பழக்க வழக்கங்களில் தொடங்கி, உற்பத்தி முறைகள், தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு என ஒரு ‘பாரடிம் ஷிஃப்ட்’ (Paradigm shift) வர வேண்டும்.
நீங்கள் இப்போது முன்னெடுக்கும் முயற்சி என்பது, வணிகமயமாகிவிட்ட உலகியல் தேடலில் இருந்து மாறுபட்டிருக்கு. இதை இத்தனை ஆண்டுகாலமாக விடாமல் முன்னெடுப்பதற்கு உங்களை ஊக்குவிப்பது எது?
நமக்கும், நம்மைச் சேர்ந்திருக்கிறவங்களுக்கும் நல்லதுன்னு நெனக்கறத செய்ய வேண்டியது நம்மளோட கடமைன்னு நெனைக்கிறேன். இதுபோன்ற பரிசோதனை முயற்சிகளை யாராவது செஞ்சிதானே ஆகனும். அதனாலதான் செய்யறோம்.
சமீபத்துல நுவரேலியாவுக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு இளைஞர் என்னிடம் அமிர்தக் கரைசலைக் கொண்டுவந்து காண்பித்தார். “உங்கள் வீடியோவைப் பார்த்துச் செய்தேன்” என்று சொன்னார். சந்தோஷமா இருந்துச்சு. அதனால நம்மாள முடியறவரைக்கும் இதைச் செய்வோம் எனச் செய்யறோம். பலன் கிடைக்கும் என நம்பறோம்.
கடந்த சில மணி நேரங்கள் எங்களுடன் செலவிட்டு, நீங்களும் உங்கள் நண்பர்களும் முன்னெடுக்கும் ‘பொதிகைச் சோலை’ கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் பின்புலமாக இருக்கும் மெய்யியல் அடிப்படைகளை எங்களுக்கு விரிவாக, எளிமையாக விளக்கினீர்கள். உங்களது இந்த முயற்சி தமிழ்ச் சமூகத்துக்கும், உலகுக்கும் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என்னும் நம்பிக்கையை உங்களது நேர்காணல் தருகிறது. மிக முக்கியமாக, வள்ளுவர் சிலைக்குக் கீழே எழுதியிருந்த, ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ எனும் குறள் மிகப் பொருத்தமாகவும், படிக்கையில் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. எங்களது வாழ்த்துகள். நன்றி!
நன்றி!
தொடர்புடைய பேட்டிகள்
புதியவர்களை டிஸ்கரேஜ் செய்வேன்: பாமயன் பேட்டி
ஆமிஷ், ஆரோவில் மாதிரியையே விரும்புகிறோம்: பாமயன் பேட்டி
உயிர்மை நேயமே நம் சிந்தனை மரபு: பாமயன் பேட்டி
இயற்கை வேளாண்மையிலும் பிற்போக்குத்தனம் இருக்கிறது: பாமயன் பேட்டி
2
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.