பேட்டி, விவசாயம், ஆளுமைகள், சுற்றுச்சூழல் 5 நிமிட வாசிப்பு

உயிர்மை நேயமே நம் சிந்தனை மரபு: பாமயன் பேட்டி

பாலசுப்ரமணியம் முத்துசாமி அபர்ணா கார்த்திகேயன்
14 May 2023, 5:00 am
0

தென்காசிக்கு அருகே, பொதிகை மலை அடிவாரத்தில் புதிதாக அமைந்திருக்கும் ‘பொதிகைச் சோலை’ கூட்டுப்பண்ணையைத் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்திவருகிறார் இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன். இயற்கை வேளாண்மை, காந்தியம், சூழலியல் தளங்களில் தீவிரமாக இயங்கிவருபவர். வேளாண் துறையில் பல ஆண்டு கால களப் பணியுடன் நீண்ட அனுபவத்தைக் கொண்டவர் பாமயன். அந்த அனுபவத்தின் வழி ஒரு புத்தாக்க முயற்சியாக இந்தப் ‘பொதிகைச் சோலை’யை உருவாக்கி இருக்கிறார். இந்தப் புதிய முயற்சி பற்றி அவருடன் நடத்தப்பட்ட உரையாடல். 

உங்களுடைய முந்தைய காணொலிகளில் சில விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கீங்க. “இயற்கை விவசாயம் பண்றவன பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க... குறைவான மகசூல்தான் கிடைக்கும். இயற்கை விவசாயம் செஞ்சு, 130 கோடி மக்களுக்கு எப்படி சாப்பாடு போடறதுன்னு கேப்பாங்க” அப்படின்னு. இந்த மாதிரியான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்றீங்க?

இந்த விமர்சனங்களை நான் செல்லும் எல்லாக் கூட்டங்களிலும் கேட்கிறேன். குறிப்பாக கல்லூரியில் விவசாயம் படிச்சிட்டுவரும் மாணவர்கள்தான் இதைக் கேப்பாங்க. நான் சொல்றது இதுதான். ஒரு நெல்லை விதைச்சா நூறு நெல் கிடைக்கும்போது பஞ்சம் எப்படி வரும்? இந்தியாவில் உணவு கிடைப்பது என்பது உற்பத்தியின் பிரச்சினை அல்ல. பகிர்ந்தளிப்பதன் பிரச்சினை. இதை சாய்நாத்தும் சொல்லியிருக்கார். பல ஆய்வாளர்களும் சொல்லியிருக்காங்க. எப்போதெல்லாம் பஞ்சம் வந்திருக்கோ, அப்போதெல்லாம் உணவு தானியம் ஏற்றுமதி ஆகியிருக்கு. இதற்கு தரவுகள் இருக்கு.  

நீங்க சொல்றது சரிதான். 1950இல், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை இருந்தபோது, இந்தியாவின் தானிய உற்பத்தி 5 கோடி டன். 5,000 கோடி கிலோ. அன்றைய இந்திய மக்கள்தொகை 40 கோடிப் பேர். 5,000 கோடி கிலோவை 40 கோடியால் வகுத்தால் கிடைப்பது 120 கிலோ. ஆண்டுக்கு, ஒருவருக்கு 120 கிலோ உணவு தானியம் கிடைக்கும்போது, அதை உணவுப் பற்றாக்குறை என எப்படிச் சொல்ல முடியும்? சென்ற ஆண்டு, இந்தியாவின் உணவு உற்பத்தி 30 கோடி டன். மக்கள்தொகையால் வகுத்தால் கிடைப்பது தலைக்கு 210 கிலோ வருகிறதே? 

நான் இன்னொரு தியரி சொல்றேன். வெப்ப மண்டலப் பகுதியில், பஞ்சம் எனச் சொல்வது ஒரு ‘மித்’ (myth). சங்க இலக்கியத்தில் ஒரு வரி வருது – ஒரு புலவன் பாடுகின்றான் – “என் மனைவி உப்பில்லாமல் குப்பைக் கீரையைச் சாப்பிடுகிறாள். அவ்வளவு வறுமை” என்று. ஆனால், நாம என்ன சொல்றோம்னா, இங்கே அவ்வளவு உணவு வகைகள் உண்டு. இங்கே வறட்சி காரணமாக உற்பத்தி குறையலாமே தவிர, பெரும் பஞ்சங்கள் வர வாய்ப்புகள் குறைவுல்ல்

பயோ டைவர்சிட்டி இங்கே பெரும் பலம் என எடுத்துக்கொள்ளலாமா?

ஆமாம், சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் இதுபோன்ற சூழல், பயோ டைவர்சிட்டி தொடர்பான குறிப்புகள் உண்டு. அதை நாம் டீகோட் செஞ்சுக்கனும். எடுத்துக்காட்டாக, பெரும்பாணாற்றுப்படையில் புலவர் ஓர் இடத்தில் “பறவைப் பெயர் கொண்ட ஒரு அரிசியைச் சாப்பிட்டேன்” என்று எழுதியிருக்கார். அதைக் கேட்ட வெங்கடாச்சலையா அண்ணன் என்ன சொன்னாருன்னா, “அது ‘கருடன் சம்பா’ என்னும் நெல் வகையாக இருக்கலாம். அது மிகவும் சுவையான அரிசி” எனச் சொன்னார்.

அதேமாதிரி, மேகங்களைக் குறிக்க 31 சொற்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. இப்போது ஆங்கிலத்தில் சிர்ரஸ், குமிலஸ், குமிலோ நிம்பஸ்னு சொல்றாங்க இல்லையா அதுபோல. மழை தரக்கூடிய மேகங்களைப் பொதுவாக யானையோடும், பாறையோடும் ஒப்பிடுவார்கள். அதைத் தற்கால அறிவியல் ‘குமிலஸ்’ என அழைக்கிறது. மேகங்கள் அவற்றின் வகைப்பாடுகள் பற்றிய ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறேன்.

மொழியைப் பற்றிச் சொல்லும்போது, எஸ்கிமோக்கள் மொழியில் பனியைக் குறிக்க 33 வார்த்தைகள் உள்ளன என்பார்கள். ஆனால், நம் மொழியில் ஒரு வார்த்தைக்கூட இருக்காது. நவீன வேளாண்மையில் ஒரே பயிர் (monocropping) என்னும் முன்னெடுப்புகள் வருகையில், மொழியின் வார்த்தைகளும் குறைந்துவிடுகின்றனவே! 

உண்மைதான். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பதால், புலவர்கள் தாங்கள் கண்டதைக் கவிதையாக, உவமையாக பயன்படுத்தி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, எள்ளுப் பூ என்பது காதலியின் மூக்குக்கு உவமையாகச் சொல்லப்பட்டிருக்கு. இதுல நாம கவனிக்க வேண்டியது என்னன்னா, இப்படி மிக நுட்பமான மொழியில் எழுதும் அளவுக்கு அந்தக் காலகட்டத்தில் இங்கே ஸ்காலர்ஷிப் இருந்திருக்கு. எத்தனையோ பழங்குடிகள் இருந்தாலும், அவற்றில் இப்படி நுட்பமும், அறிவும் கொண்ட மொழியில் இயற்கை பதியப்படவில்லை. 

உங்களை மார்க்ஸியச் சிந்தனைகளும், காந்தியச் சிந்தனைகளும் பாதித்தன எனச் சொல்கிறீர்கள். இந்தப் பொதிகைச் சோலைப் பண்ணயத் திட்டத்தில் இந்தச் சிந்தனையின் கூறுகள் உள்ளனவா?

மார்க்ஸ் ஐரோப்பியச் சிந்தனை மரபில் வந்தவர். என்னுடைய பார்வையில், அது முக்கியமான ஒன்றாக இருந்தாலும் முழுமையான ஒன்றல்ல. அது அவருடைய குற்றமில்லை. அந்தச் சிந்தனை மரபுகளின் பார்வையின் எல்லைகள் சற்றுக் குறுகியவை. மார்க்ஸியம்கூட மனிதனை மையமாக வைத்து யோசிக்கும் ஒரு மரபுதான். ஆனால், நமது வழி என்பது முழுமையானது. இயற்கையோடு இணைந்திருப்பது. மார்க்ஸியம் பேசும் மனிதநேயம் என்பதைத் தாண்டி, உயிர்மை நேயம் கொண்டது நம் சிந்தனை மரபு.

காந்தியின் பார்வைகள் கீழைநாட்டுச் சிந்தனையை ஒட்டி இருப்பவை. அவரிடம் இயற்கை தொடர்பான சிந்தனைகள் மிகவும் வலுவாக இருக்கின்றன. இரண்டையும் இணைச்சுத்தான் நாம முன்னெடுக்கிறோம்.  இதை நான் கோவை ஞானி, மருத்துவர் ஈரோடு ஜீவா போன்றவர்களுடன் விரிவாக விவாதிச்சிருக்கேன்.

நீங்கள் இப்போது தொடங்கியிருக்கும் புதிய முயற்சியும் சரி, காந்திய வழிகளும் சரி, பொருளாதார, அதிகார மையப்படுத்துதலை விட்டு விலகிய ஒரு பாதையில் செல்ல வேண்டியது போல இருக்கிறது. இதைத் தோல்வி எனச் சொல்லலாமா?

பிரச்சினைகளுக்கு தற்காலிகத் தீர்வுகள் இருக்கு. நிரந்தரமாக நீடித்து நிலைக்கும் தீர்வுகளும் இருக்கு. அவற்றை இறுதியான இலக்கு எனச் சொல்லலாம். நான் அதை ‘லிபரேஸன்’ (liberation) என்று சொல்வேன். அது ‘டீசென்ட்ரலைசேஸன்’ (decentralization) மூலமாக மட்டும்தான் கிடைக்கும்.

இப்போ கம்யூனிஸத்திலையும் சோஷலிஸத்திலையும் என்ன பிரச்சினைன்னா, அங்க ‘ஸ்டேட் ஓனர்ஷிப்’பாக (state ownership) இருந்தாலும், அதிகாரமும், பொருளாதாரமும் அங்கே ‘சென்ட்ரலைஸ்’தான் (centralise) செய்யப்படுது. 

எங்கெல்லாம் ‘சென்ட்ரலைசேஸன்’ (centralization) நடக்குதோ, அங்கெல்லாம் சிக்கல் வரும். அதிகாரம் ஒரு மையத்தில் குவியும். அதிகாரம் குவியத் தொடங்கினாலே, ஊழலும் எதேச்சதிகாரமும் வந்துவிடும்.

ஆனால், நடைமுறையில் ‘டீசென்ட்ரலைசேஸன்’ (decentralization) என்பதைச் செயல்படுத்துவது கடினம். இப்போது அதிகார பீடத்தில் இருக்கும் அறிவாளிகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களது ஈகோ இடிக்கும். தவிரவும், மையப்படுத்தப்பட்ட அதிகார நிலைகளை உடைத்து, ‘டீசென்ட்ரலைஸ்டு’ (decentralized) செய்யும்போது தவறுகள் நடக்கும்.  ஏனெனில், மையப்படுத்தப்பட்ட பீடங்களில் இருப்பவர்கள் அளவுக்கு ‘டீசென்ட்ரலைஸ்டு’ (decentralized) சமூக நிர்வாகத் தளங்களில் செயல்திறன் கொண்டவர்கள் இருக்க மாட்டார்கள். அதைப் பொறுமையுடனும் கனிவுடனும், நீண்ட கால நோக்கில் அணுகாமல், மையப்படுத்துதலை நியாயப்படுத்தித் திரும்பிவிடுவார்கள்.

இந்தக் காலத்தில், வேளாண்மையை நோக்கி இளைஞர்கள் வருகிறார்களா?

இயற்கை வேளாண்மை செய்ய நிறைய இளைஞர்கள் ஆர்வமாக வருகிறார்கள்.

இயற்கை வேளாண்மையின் மூலமாக லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனா வருகிறார்கள்?

லாபம் என்பதை நீங்க எப்படிப் பாக்கறீங்க என்பதைப் பொறுத்தது அது. எடுத்துக்காட்டாக, நம்ம பண்ணையில் நண்பர் ஒருவர் நெசவுத் தொழில் செய்கிறார். அவர் நெய்வதை, மீட்டர் 500 ரூபாய்னு விற்கிறார். நெறயப் பேர்  வாங்குறாங்க. ஆனால், நீங்க மார்க்கெட்டுக்குப் போனீங்கன்னா, அங்கே அரசு மானியம் கொடுக்க, கதர் துணி மீட்டர் 250 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அத்தோட ஒப்பிட்டால் சிக்கல். ஆனால், நண்பர் நெய்யும் துணிகளுக்கு டிமாண்ட் இருக்கிறது.

இப்போது விவசாயம் லாபகரமா இல்லை என விவசாயிகள் வழக்கமாகப் பயிர் செய்வதை விட்டுவிட்டு தோட்டப் பயிர்களை நோக்கிப் போறாங்களே?

விவசாயம் லாபம் இல்லாமல் போறதன் அறிகுறிதான் இது. எனவே, மக்கள் நிலத்தை விட்டு வெளியேறி, தங்களுக்கான வாழ்க்கையை அமைச்சிக்குறாங்க. தோட்டத்தில், தென்னை மாதிரி குறைவாக ஆட்கள் தேவைப்படும் பயிர்களைப் பயிரிடறாங்க. நெலத்த விக்கறதில்ல. ஏன்னென்றால், அது வருடா வருடம் விலையேறுகிறது. நிலம் விலை குறைவாகவும், விவசாயப் பொருள்களுக்கு லாபமான விலையும் இருந்தால்தான் விவசாயம் சரியாக நடக்கும். ஆனால், இன்னிக்கு நிலைமை தலைகீழாக இருக்கு. விவசாயம் ஒரு பெரும் வீழ்ச்சியை நோக்கிப் போயிட்டு இருக்கு.

பசுமைப் புரட்சித் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமே, நாட்டின் உணவுத் தன்னிறைவை நோக்கிப் போகனும் என்பதுதான். ஒரு தனி விவசாயிக்கு அது லாபமாக இருக்கா என்னும் புள்ளியை அந்தத் திட்டம் தொடவே இல்லை. அந்த அணுகுமுறை கடந்த 60 வருஷமா தொடர்ந்ததன் விளைவைத்தான் நாம இன்னிக்குப் பார்க்கிறோம்.

(தொடரும்…) 

 

தொடர்புடைய பேட்டிகள்

புதியவர்களை டிஸ்கரேஜ் செய்வேன்: பாமயன் பேட்டி
ஆமிஷ், ஆரோவில் மாதிரியையே விரும்புகிறோம்: பாமயன் பேட்டி

பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.

அபர்ணா கார்த்திகேயன்

அபர்ணா கார்த்திகேயன், பத்திரிகையாளர். ‘பரி’ நிறுவனத்தின் முதுநிலை ஆய்வாளர். 'நைன் ருபிஸ் அன் ஹவர்' (Nine rupees an hour), 'வோஃப்' (woof) நூல்களின் ஆசிரியர்.


2


அதிகம் வாசிக்கப்பட்டவை

நாடகசாலைத் தெருஅலுவலகம்இளம் பருவம்மாநில மொழிகள்பொய்மயிர் எனும் ரகசியம்ஆம்ஜீவா விருதுஜேன் குடால்மாயாவதி எங்கே?ஆம்ஆத்மி கட்சிமன்னராட்சிவிழித்தெழுதலின் அவசியமா?சமஸ் - கமல் ஹாசன்சிஎஸ்டிஎஸ்அரசமைப்புச்சட்ட அதிகார அமைப்புகள் எதிர் அரசமைப்புசசோழர்கள் இன்றுமற்றமைநோன்பு காலம்வேலைத் திறன் குறைபாடுரத்தவெறிபீட்டர் அல்ஃபோன்ஸ் உள்ளதைப் பேசுவோம் பேட்டிசுகாதாரம்விமர்சனத்தை மதிக்கும் இயக்கம் திமுக: இமையம் பேட்டிஉண்மையில் ஹிஜாப்தான் பிரச்சினையா?இமயமலை யோகிகேசவ விநாயகன்மன்னார்குடிபாரச்சூட் தேங்காய் எண்ணெய்கல்லூரிகள்பண வீக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!