பேட்டி, விவசாயம், ஆளுமைகள், சுற்றுச்சூழல் 5 நிமிட வாசிப்பு

ஆமிஷ், ஆரோவில் மாதிரியையே விரும்புகிறோம்: பாமயன் பேட்டி

பாலசுப்ரமணியம் முத்துசாமி அபர்ணா கார்த்திகேயன்
30 Apr 2023, 5:00 am
0

படம்: பழனிக்குமார்

தென்காசிக்கு அருகே, பொதிகை மலை அடிவாரத்தில் புதிதாக அமைந்திருக்கும் ‘பொதிகைச் சோலை’ கூட்டுப்பண்ணையைத் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்திவருகிறார் இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன். இயற்கை வேளாண்மை, காந்தியம், சூழலியல் தளங்களில் தீவிரமாக இயங்கிவருபவர். வேளாண் துறையில் பல ஆண்டு கால களப் பணியுடன் நீண்ட அனுபவத்தைக் கொண்டவர் பாமயன். அந்த அனுபவத்தின் வழி ஒரு புத்தாக்க முயற்சியாக இந்தப் ‘பொதிகைச் சோலை’யை உருவாக்கி இருக்கிறார். இந்தப் புதிய முயற்சி பற்றி அவருடன் நடத்தப்பட்ட உரையாடல். 

பொதிகைச் சோலை என்பது என்ன மாதிரியான திட்டம்?

ஏற்கெனவே எங்களிடம் இருந்த அனுபவத்தோடு, இந்தத் திட்டத்தில் புதிதாக இணைய வருபவர்களையும் சேர்த்து, ஒரு கூட்டுப் பண்ணையாக உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இங்கே சேர வருபவர்களின் பேரில் நிலம் இருக்கும். இங்கே வீடு கட்டிக்கொள்ளவும் இடம் கொடுக்கப்படும். அவர்கள் இங்கே வந்து விவசாயம் செய்ய வேண்டிய அவசியமில்லை. வர விரும்பினால் வரலாம். இங்கே வேலைகளைப் பார்த்துக்கொள்ள ஒரு குழு உள்ளது. அவர்கள் மொத்த பண்ணையையும் பார்த்துக்கொள்வார்கள் என்பதுதான் திட்டம். 

இந்த அடிப்படையில் நிலத்தை வாங்கிப் பதிவுசெய்தோம். அப்போதுதான் கரோனா தொடங்கியது. கிட்டத்தட்ட 1.5 வருடம் எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இப்போ வேலை தொடங்கிட்டோம். இதில் மொத்தம் 103 உறுப்பினர்கள் இருக்கிறோம். கிட்டத்தட்ட 110 ஏக்கர் நிலம் இருக்கு. இந்த 103 பேரும் பொதுக்குழு உறுப்பினர்கள். இதிலிருந்து 10 பேர் கொண்ட செயற்குழு எல்லா வேலைகளையும் முன்னெடுத்துச் செய்பவர்கள். அதுபோக முழு நேர ஊழியர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்த பண்ணைப் பணியாளர்கள். இதுதான் பொதிகைச் சோலையின் நிர்வாக அமைப்பு.

ஒவ்வொரு மாதமும் செலவுகள் கணக்கிடப்படும். இங்கு பணி செய்யும் ஊழியர்கள், மொத்தச் செலவுகளுக்கான விவரங்களை செயற்குழுவின் தலைமையகமான ஓசூருக்கு அனுப்பிவிடுவார்கள். பொருளாளர் அவற்றை சரிபார்த்து அனுமதி அளிப்பார். இதற்காகவே ஒரு வாட்ஸப் குழுவை உருவாக்கியுள்ளோம். இங்கே நடக்கும் நிகழ்வுகள் இந்தக் குழுவுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும்.

உங்களிடம் இப்படி நான் எளிமையாகச் சொல்லிவிட்டாலும் தினசரிச் செயல்பாடுகளில்  நிறைய சவால்கள் உள்ளன என்பதுதான் உண்மை. குழுவாகச் செயல்படுவதில் உள்ள புரிதல் பிரச்சினைகள் என எந்த ஒரு புதிய முயற்சியிலும் உருவாகும் விஷயங்கள் உள்ளன. 

இதுல முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த முயற்சியில் ஒருவர் உள்ளே வருதலும், வெளியேறுதலும் எளிதாக இருக்கும். இதை முதலிலேயே தீர்மானித்துவிட்டோம். முந்தைய முயற்சிகளின் அனுபவத்தில் இதைத் தீர்மானித்தோம்.

ஆனால், இந்தத் திட்டத்தில் சேர்பவர், அவர் நினைத்த மாதிரி விற்றுவிட்டுச் செல்ல முடியாது. இங்கே அனைவரின் நிலங்களும் கூட்டுப்பட்டாவாகப் பதியப்படுகிறது. நூறு ஏக்கரும் நூறு பேருக்கும் சொந்தம். எனவே, எவருக்கும் அவரவருக்கான நிலம் என்பது கிடையாது.

மொத்த நிலமும், குறிஞ்சி, முல்லை, மருதம் எனப் பிரித்திருக்கிறோம்.  இந்த அணுகுமுறையைத் தனியொருவர் மாற்ற முடியாது. 

முதல் ஐந்தாண்டுகளுக்குள் ஒருவர் வெளியேற முடிவுசெய்தால், அவர் என்ன பணம் அளித்திருக்கிறாரோ அது திருப்பிக் கொடுக்கப்பட்டுவிடும்.  ஐந்தாண்டுகளுக்குப் பின் போக முடிவுசெய்தார் எனில், அன்று நிலத்தின் மதிப்பு என்னவோ அது கணக்கிடப்பட்டுக் கொடுக்கப்படும். அது ‘பொதிகைச் சோலை’யில் புதிதாக சேர விரும்பும் உறுப்பினரிடம் இருந்து வாங்கிக் கொடுக்கப்பட்டுவிடும்.  

இந்தக் கூட்டுப் பட்டா என்கிற அணுகுமுறை ரொம்ப புதிதாக இருக்கிறதே! 

ஆமாம்… இதற்காக, நான் நிலச் சட்டம், கூட்டுறவுச் சட்டங்கள் எனப் பலதையும் ஆழ்ந்து படித்தேன். இதையெல்லாம் போய் எங்கள் வக்கீலிடம் டிஸ்கஸ் செய்யும்போது “யோவ் என்னையவிடக் கூடுதலாத் தகவல் வச்சிருக்கே” என்று  சொன்னார் (சிரிப்பு). அதன் பின்னர் ஆடிட்டர்களிடமும் ஆலோசித்து ஒரு சொசைட்டியாக இதைப் பதிவுசெய்திருக்கிறோம்.  

உறுப்பினர்கள் உள்ளே வருவதும் வெளியேறுவதும் எளிதாக இருக்க வேண்டும். அதேசமயத்தில், ஒரு தனிநபர் தன் நிலத்தை மட்டும் வெளியில் விற்க முடியாதபடி இருக்க வேண்டும் என யோசித்து இந்தக் கூட்டுப் பட்டா முறையைக் கொண்டுவந்தோம்.

இதில் உங்களுடைய நீண்ட காலத் திட்டம் என்ன? இன்று மதிப்புக் கூட்டுதல் என்பது எல்லோரும் பேசும் விஷயம். நான் ஒரு மிளகாய் உற்பத்தியாளரிடம் பேசினேன்… அவர் சொகில்றார், “நான் தனியொரு ஆளாக என் மிளகாயை அரைத்துப் பொடியாக்கி, நுகர்வோருக்குக் கொண்டுசெல்ல முடியாது. எனக்கு எதிரே 'சக்தி', 'ஆச்சி' எனப் பெரும் நிறுவனங்கள் இருக்காங்க, அவங்களோட விளம்பர பட்ஜெட்டே பல கோடி ரூபாய் இருக்கும். என்னோட மொத்த உற்பத்தியுமே சில லட்சங்கள்தான் இருக்கும். அவங்களோட நாங்க எப்படிப் போட்டி போட முடியும்” என்று கேட்கிறார்கள்?

உண்மைதான். அது போன்ற பெரும் நிறுவனங்களின் விலையோடு சிறிய உற்பத்தியாளர்கள் போட்டி போடவே முடியாது. எங்களுக்குமே அந்தப் பிரச்சினை இருக்கிறது. நாங்கள் நெல் உற்பத்தி செய்கிறோம். எங்களுடைய மகசூல் ஏக்கருக்கு 23 மூட்டை (60 கிலோ) வந்தது. பக்கத்துத் தோட்டத்துக்கார், மரபான உரங்களைப் போட்டு, அதிக உற்பத்தித் திறன் கொண்ட ரகத்தைப் போட்டு, அதிக விளைச்சல் எடுக்கிறார். 30-36 மூட்டை வரை. அவர் அப்படியே நெல்லாக விற்றுவிடுவார்.

நாங்கள் விளைவிக்கிறது தூயமல்லி என்கிற ரகம். நாங்க நெல்லை அரிசியாக்கித் தருவதால், பக்கத்துத் தோட்டத்து விவசாயியைவிடக் கூடுதலாக வருமானம் கிடைக்கிறது. மேலும் எங்கள் உறுப்பினர்களே 100 பேர் இருப்பதால், எங்கள் உற்பத்திக்கு ஏற்கெனவே சந்தை இருக்கிறது. இதுபோக கூடுதல் உற்பத்தியைத்தான் வெளியே விற்கிறோம்.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் நீண்ட கால நோக்கில், இந்தத் திட்டத்தை ‘ஈக்கோ வில்லேஜ்’னு (Eco Village) சொல்றோம். 'வாழ்வூர்' என்றும் சொல்கிறோம். இதில் இருக்கும் 100 பேரும் இங்கே வந்து வீடு கட்டி வாழ்வதே இலக்கு. ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் இத்திட்டத்தில் நிலம் வாங்க அனுமதியில்லை.  எனவே, மொத்தம் 50 வீடுகள் கட்டத் திட்டமிட்டிருக்கிறோம். அப்புறம் இங்கே வாழ 12 விதிகள் உண்டு. இப்படித்தான் வீடு கட்ட வேண்டும். ஏசி கூடாது என்பது மாதிரி கொள்கைகளை வகுத்திருக்கிறோம், சில கோட்பாடுகள் – திருக்குறள் நெறிகளை ஒட்டி. அவற்றை 12 மகா விரதங்கள்னு சொல்றோம்.

தனிப்பட்ட முறையில் அசைவம் சமைக்கலாம். ஆனால், பொதுச் சமையலறையில் இறைச்சி கிடையாது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று குறள் நெறி. இன்னொன்று இது வனத் துறையை ஒட்டிய பகுதி. எனவே, மிக எளிதில் மானை அடித்து சாப்பிட்டார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் வந்துவிடக்கூடும். அவற்றைத் தவிர்க்க நினைக்கிறோம். 

இங்கே வசிப்பவர்கள், தங்களுக்கு விருப்பமான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். ஒருவர் நெல் சாகுபடியில் ஈடுபட விரும்பினால், அதில் சேர்ந்துகொள்ளலாம். இன்னொருவர் தோட்டப்பயிர் சாகுபடியில் ஈடுபட விரும்பினால், அதில் சேர்ந்துகொள்ளலாம். அதேபோல சந்தைப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் போன்ற வேலைகளிலும் ஈடுபடலாம். அவரவர் ஆர்வத்தையும் திறனையும் பொருத்து அவர்கள் முடிவெடுக்கலாம். இதற்கெல்லாம் இன்னும் காலம் பிடிக்கும். இப்போதைக்கு ஒரு குடும்பம்தான் இங்கே வந்திருக்கிறது. இன்னும் சிலர் ஓய்வுபெற்று வர இருக்கிறார்கள். அதன் பின்னர் இந்த வேலைகள் வேகமாக நிகழும். 

நீண்ட கால நோக்கில் அமெரிக்காவில் உள்ள ஆமிஷ், பாண்டிச்சேரி ஆரோவில் போன்ற ஒரு கூட்டுச் சமூக வாழ்க்கை – அந்த மாதிரி கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறோம்.

இந்தப் பண்ணையப் பரிசோதனைகள் மூலமாக, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நீங்கள் உருவாக்கும் தீர்வுகளை, ஒரு சராசரி விவசாயிக்குக் கொண்டுசெல்லும் எண்ணம் இருக்கிறதா?

எங்கள் பண்ணையத்தில் வேலை செய்பவர்கள், ஊருக்குள் சென்று மற்ற விவசாயிகளிடம் நாங்கள் செய்யும் முறைகளைச் சொல்கிறார்கள்… அதை அவர்கள் நம்பாமல் நேரில் வந்து பார்த்துச் செல்கிறார்கள். பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள் போடாமல், நம் பண்ணையில் காய்கறி விளைச்சல் நன்றாகவே இருப்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஆனால், இன்னும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் நிலை வரவில்லை. இந்த முறையிலான சாகுபடி நல்லதுதான். ஆனால், எங்களால் முடியாது எனும் ஒரு மனநிலையை இன்று அவர்களிடம் பார்க்கிறேன். எதிர்காலத்தில் மாற்றம் வரும் என நினைக்கிறேன்.

காய்கறிச் சாகுபடி

ஆனால், வெளியில் இருந்து வருபவர்களிடம் பெரும் ஆர்வத்தைப் பார்க்கிறோம். நாங்கள் ஒரு 60 நாள் தங்கிப் பயிற்சி பெறும் ஒரு நிகழ்வை நடத்துகிறோம். திணைக் கோட்பாடு எனும்  பெயரில். குறிஞ்சி, முல்லை, மருதம் என்னும் கோட்பாடுகளின் அடிப்படையில் எப்படி ஒரு பண்ணையை வடிவமைப்பது.

சங்க இலக்கியத்தின் அடிப்படையிலா?

ஆமாம், தொல்காப்பியத்தில் இருந்தே தொடங்குகிறோம்.

பொதுவாகத் திணை என்பதை எப்படிப் புரிந்துகொள்கிறோம்? குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஐந்து விதமான நிலப்பரப்புகள் என்றுதானே?

ஆனால், தொல்காப்பியர் அப்படிச் சொல்லவில்லை. அவர் 7+7 என 14 திணைகளைச் சொல்றார். ஆனால், நாம ஒரு வசதிக்காக ஐந்திணைன்னு எடுத்துக்க்கொள்கிறோம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று. இதில் பாலை ஒரு நிலப்பரப்பு அல்ல.  முல்லையும் குறிஞ்சியும் சூழல் கெட்டுத் திரிந்து பாலை ஆகிறது. இதுக்கான விளக்கத்தை சிலப்பதிகாரத்தில் பார்க்கலாம்.

’முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பழிந்து கடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவங்கொள்ளும்’  இளங்கோவடிகள் பாடியிருக்கிறார்.

திணை என்பது ஒரு சூழல் அறிவியல். ஒரு உயிரினத்துக்கும் சுற்றுச்சூழலுக்குமான தொடர்பு. அந்த உறவுதான் திணை என நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கோட்பாடு, உலகுக்குத் தமிழர்கள் கொடுத்தக் கொடை என்று  சொல்லலாம். எப்படி மார்க்ஸியத்தை உலகுக்கான கொடை என்று சொல்கிறோமோ அதேபோல!

தொல்காப்பியருக்கு இந்த எண்ணம் எப்படி வந்திருக்கும்? தொல்காப்பியருக்கு முன்பே  இந்தக் கோட்பாடுகள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், இதை எழுதும் அவர், ‘என்மனார் புலவர்’ எனச் சொல்றார்.  ஐம்பூதங்கள் என்று ஒரு கோட்பாடு. நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம். அங்கிருந்து அவர் திணைக்கு வருகிறார். அவற்றை நிரந்தரமானவை (Eternal), நிரந்தரமில்லாதவை (non-eternal) எனப் பிரிக்கிறார். நிலமும் பொழுதும் நிரந்தரமானவை. அதை மேலும் நுட்பமாக முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்றாகப்  பிரிக்கிறார். இவற்றில் கருப்பொருளும், உரிப்பொருளும் மாறக்கூடியன. அவற்றையும்  தொட்டுணரக்கூடியவை (tangible), தொட்டுணர முடியாதவை (non-tangible) எனப் பிரிக்கிறார். தொட்டுணர முடியாதவை உணர்வுகள். ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு உணர்வுகள் என்று.

நிலம், பொழுது எனப் பிரிக்கிறார். பொழுதையும் இரண்டாகப் பிரிக்கிறார். பெரும் பொழுது, சிறு பொழுது என்று. சிறு பொழுதைச் சின்னஞ்சிறு பொழுது என்று மேலும் நுட்பமாகச் சொல்கிறார். 

பெரும் பொழுது என்பது பருவங்கள் (Seasons). சிறு பொழுது என்பது ஒருநாளில் தென்படும் மாற்றங்கள். அதிகாலை, நண்பகல், மாலை என்று ஆறு பெரும் பொழுதுகள், ஆறு சிறு பொழுதுகள்.  

நாம் வாழும் நிலநடுக்கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் இயற்கை ஓரளவு மனித வாழ்க்கைக்குச் சாதகமாக இருப்பதால், இயல்பாகவே இயற்கையை ஒட்டிய வாழ்வியல் உருவாகிவந்திருக்கிறது (Eco-centric). இதைப் பல்வேறு சமூகங்களிலும், பழங்குடிகளிலும் காணலாம்.

மாறாகக் குளிர்ப் பிரதேசங்களில் இயற்கை மனித வாழ்க்கைக்குச் சாதகமாக இருப்பதில்லை. அங்கே மனிதர்கள் சௌகர்யமாக வாழ அவர்கள் இயற்கையை வென்றாக வேண்டி இருக்கிறது. எனவே, அந்தச் சமூகங்களில் வாழ்க்கைப் பார்வை என்பது மனிதனை முன்வைப்பதாக இருக்கிறது (Anthropocentric).

ஆக, நம்முடைய மரபில், சங்க இலக்கியத்தில், வாழ்வியலில், இயற்கை மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. இதை எப்படி இன்றைய நவீன அறிவியலுடன் இணைத்து முன்னெடுப்பது என்பதுதான் எனது ஆராய்ச்சியாக இருக்கிறது.

இதைத்தான் நான் திணையியல் அணுகுமுறை என்று சொல்கிறேன். இதை இரு கருவியாகக் கொண்டு, விவசாயம், கல்வி, இலக்கியம், மருத்துவம் எனப் பல துறைகளை ஆராய, அறிந்துகொள்ளப் பயன்படுத்தலாம்.

இந்த அடிப்படையில நிலத்தை நாங்கள்  பிரிக்கறோம். எடுத்துக்காட்டாக குறிஞ்சி நிலத்துக்கு என சில இயல்புகள் இருக்கு. அதேபோல, முல்லை நிலத்துக்கும் சில இயல்புகள் இருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போலத்தான் பண்ணையை வடிவமைக்க முடியும். எடுத்துக்காட்டாக முல்லை நிலம் (pastoral land) என்பது – அங்கே அமைக்கப்படும் பண்ணை கால்நடையை மையமாக வைத்துத்தான் வடிவமைக்கப்பட வேண்டும். அதேபோல மருதம் என்பது நீர் தேங்கக்கூடிய பகுதி (Fresh water Eco system). அங்கே போய் நாம் கால்நடையை மையமாகக் கொண்ட பண்ணைகளை உருவாக்குவது சிரமம்.

தாதெரு மன்றம்

ஆனால், இந்த நிலம் ஒரே சமவெளியாக  இருக்கிறதே, இதை எப்படிக் குறிஞ்சி, முல்லை எனப் பிரிப்பீர்கள்?

இல்லை. இந்த நிலம் சமதளமில்லை. இந்தப் பண்ணையிலேயே தாழ்வான பகுதிக்கும், உயர்வான பகுதிக்கும் இடையே 18 மீட்டர் இடைவெளி இருக்கு.  உயர்வான இடத்தில் இருக்கும் தாவரங்கள், மண் அமைப்பு, அங்கு நிலவும் தட்ப வெப்பம் இவற்றையெல்லாம் அவதானித்துதான், நாம் அமைக்கப்போகும் பண்ணைக்கான வடிவமைப்பை உருவாக்க வேண்டும்.

நான் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன் என்றால், நாம இப்ப ஒரு பொதுநலத் திட்டத்தை உருவாக்குகிறோம் என்றால், அதில் கடைசி அலகாகத்தான் ப்ளாக்தான் (block) இருக்கும். அரசு வறட்சி நிவாரணமோ, வெள்ள நிவாரணமோ கொடுக்க வேண்டும் என்றால், அது அந்த அளவுல மட்டும்தான் நடக்கிறது. ஆனால், நான் என்ன நினைக்கிறேன் என்றால், அரசின் திட்டங்கள் குக்கிராம அளவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று. ஆனால், நீங்க சொல்வது, குக்கிராமத்துக்குள்ளேயும் வேறுபாடுகள் இருக்கிறதே!

ஆமாம், ஒவ்வொரு நிலத்துக்குமே தனித்தன்மையும் வேறுபாடுகளும் இருக்கின்றன. வேளாண்மையின் இயல்பே அதுதான்.

எனில் அரசின் திட்டங்கள் எல்லா மனிதர்களுக்கும் போய்ச் சேர வேண்டும் எனில், இந்த மாதிரியான பார்வை இருந்தால்தான் போய்ச் சேரும் இல்லையா?

இன்னொன்று, எந்தெந்த விஷயங்களுக்காக அரசின் திட்டங்கள் உருவாக்கப்படுகிறது என்ற  ஒரு விஷயமும் இருக்கு. எடுத்துக்காட்டாக, ஒரு பூச்சித் தாக்குதல் என்பது ஒரு நிலத்தில் நிகழக்கூடிய ஒன்று. அதுக்கு ப்ளாக் (block) அல்லது மாவட்ட அளவிலான கொள்கை என்பது தவறு.

இன்னொரு விஷயமும் இருக்கிறது. அரசின் திட்டங்கள் பொதுவாக விவசாயிகளை, பழங்குடி மக்களை, மீனவர்களைத் தொந்தரவு செய்வதாக இருக்கிறதே ஒழிய, அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இல்லை.

இந்தப் பண்ணையில் பொது இடங்கள் உள்ளனவா?

ஆமாம்! நாம உட்கார்ந்திருக்கற இந்த இடம் பயிற்சி மையம் பொது இடம்தான். இதேபோல பிள்ளைகள் விளையாடுவதற்கான பொது இடமும் உள்ளது. அதேபோல, ‘தாதெரு மன்றம்’ என ஓர் இடம் உருவாக்கி இருக்கோம். இது முல்லை நிலத்தில் எரு தயாரிக்கும் இடம். அதேமாதிரி ‘அணி நிழற்காடு’ என்னும் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கோம். ‘அணி நிழற்காடு’ என்பது பல்வேறு அடுக்குகளில் மரங்கள் வளர்ப்பது. இதைத் திருவள்ளுவர் சொல்றார்,

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்’  

இதுக்கு மேலும் சான்றுகள் கலித்தொகையிலும் சீவக சிந்தாமணியிலும் இருக்கு. ஒரு வேடன் எறிந்த கல், எத்தனை மரங்களைத் தொட்டு, தரைக்கு வருகிறது என்று. இப்படிப் பல்வேறு தளங்களில் கிடைக்கும் தகவல்களைத் திரட்டி, பில் மோரிசனோட ‘பெர்மா கல்ச்சர்’, ஃபுகுவோகாவோட கோட்பாடுகள் இவற்றுடன் நவீன அறிவியல் கூறுகளையும் இணைத்துத்தான் இந்த 60 நாள் பயிற்சிக்கான பாடத் திட்டத்தை உருவாக்கினோம்.

அந்த 60 நாட்கள் பயிற்சி ஒரு நல்ல முன்னெடுப்புன்னு நாங்க நினைக்கிறோம். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதில் பங்கு பெற்றவர்களில் சரிபாதி பெண்கள். இதில் பயிற்சி பெற்ற கார்த்திகா என்னும் பெண், விழுப்புரம் பக்கத்தில், மானாவாரியில் நெல் விதைத்து 7 - 8 மூட்டை மகசூல் பெற்றிருக்கிறார். பலரும், ஊர் திரும்பியவுடன், பல விஷயங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளார்கள் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

(தொடரும்…)

 

படங்கள்: பழனிக்குமார்

 

தொடர்புடைய பேட்டி 

புதியவர்களை டிஸ்கரேஜ் செய்வேன்: பாமயன் பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.

அபர்ணா கார்த்திகேயன்

அபர்ணா கார்த்திகேயன், பத்திரிகையாளர். ‘பரி’ நிறுவனத்தின் முதுநிலை ஆய்வாளர். 'நைன் ருபிஸ் அன் ஹவர்' (Nine rupees an hour), 'வோஃப்' (woof) நூல்களின் ஆசிரியர்.


2


பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

குறட்டைஅறிவியல் எனும் ஜன்னல் திறந்தே இருக்கட்டும்நீதிபதிகரிகாலனோடு பொங்கல் கொண்டாட்டம்தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேஜெயமோகன் ராஜன்குறை கிருஷ்ணன்மனுஷ்யபுத்திரன்அறிவுஜீவிகள்வங்க தேசப் பொன் விழாஆர்வம் இல்லாத வேலைபயங்கரவியம்நீதி போதனைஉதயநிதியிடம் நான் எதிர்பார்க்கிறேன்அகில இந்திய ஒதுக்கீடுசட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுபாசிஸம் - நாசிஸம்வசனம்சட்டத் திருத்தம்ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்குறைந்த வருவாய் மாநிலங்கள்திராவிட இயக்கம்திராவிடம்இந்திய அரசியல் வரலாறுபா.சிதம்பரம் கட்டுரைவேலையின்மைநெஞ்செரிச்சல்அலெசாண்ட்ரா வெஷியோ கட்டுரைவளர்ச்சி பாஜக: 20 ஆண்டுகள் ஜிடிபி வரலாறுபால்யம் முழுவதும் படுகொலைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!