கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

2024 தேர்தலுக்கு காங்கிரஸ் எப்படித் தயாராகிறது?

டி.கே.சிங்
02 Feb 2024, 5:00 am
0

ந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் 2024 மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான அறிக்கையைத் தயாரிக்க ப.சிதம்பரம் தலைமையில் 16 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்தது. இந்தக் குழுவின் அமைப்பாளராக சத்தீஸ்கர் மாநில முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.சிங் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த சத்தீஸ்கர் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், தான் போட்டியிட்ட சர்குஜாவில் காங்கிரஸ் கட்சிக்குத் தோல்வி ஏற்பட்ட நிலையிலும் சிங்குக்கு இந்தப் பதவி கிடைத்திருக்கிறது.

குழு உறுப்பினர்களில் சரிபாதி அதாவது ஏழு பேர், இதுவரை எந்தத் தேர்தலிலும் நேரடியாகப் போட்டியிட்டதில்லை. தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க மக்களுடைய நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர்களாக இருப்பது அவசியம். ஆனால், இந்தக் குழுவில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அப்படியானவர்களாக இல்லை; விசுவாசிகள் என்பதே அடையாளமாக இருக்கிறது.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள இம்ரான் பிரதாப்கடி, காங்கிரஸ் கட்சியில் 2019இல்தான் சேர்ந்தார். மக்களவைத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு தோற்றார். பிறகு 2022இல் மாநிலங்களவை உறுப்பினரானார். இந்தக் குழுவில் உறுப்பினராக இருக்கும் பிரியங்காவின் பரிந்துரையால் குழு உறுப்பினராகியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் நிர்வாக அமைப்பில் பெரிய மாற்றங்களை சில வாரங்கள் முன் செய்தார். அது புதிய மொந்தையில் பழைய கள்ளாகக்கூட இருக்கவில்லை, மொந்தையுமே பழசு.

முன்பு கட்சியின் பொதுச் செயலாளராகவும் உத்தர பிரதேச மாநிலத்தில் 2019 மக்களவைப் பொதுத் தேர்தல், 2022 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பொறுப்பாளராகவும் இருந்த பிரியங்கா, இப்போது எந்த மாநிலப் பொறுப்பும் இல்லாதவர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவ்விரு தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. பிரியங்கா இனி தேர்தல் பிரச்சாரத்துக்காக எல்லா மாநிலங்களுக்கும் செல்வார், கட்சியின் நிர்வாகத்திலும் மேலதிகமாக ஈடுபடுவார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

உதய்பூர் உறுதிமொழி

காங்கிரஸ் கட்சி 2022 மே மாதம் ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் மாநாடு நடத்தியது. ‘புதிய உறுதிமொழி’ (நவ சங்கல்ப) மாநாடு என்று அது அழைக்கப்பட்டது. ‘ஒரே பதவியில் ஒருவர் அனேக ஆண்டுகளாக நீடிப்பது கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது என்பதால் எவர் ஒருவரும் எந்தப் பதவியிலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கக் கூடாது’ என்பது அந்த உறுதிமொழிகளில் ஒன்று.

புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டவர் அனைத்திந்திய காங்கிரஸ் பேரவையின் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால். 2017 ஏப்ரல் முதல் அவர் இப்பதவியில் நீடிக்கிறார், ஐந்து ஆண்டு வரம்பு என்பது அவருக்கில்லை!

ஏன் வேணுகோபாலைப் பற்றி மட்டும் பேச வேண்டும், புதிய நிர்வாகிகள் பட்டியலைப் பார்த்தால் 12 பொதுச் செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் இப்படி வரம்பில்லாமல் நீடிப்பவர்கள்தான்! முகுல் வாஸ்னிக், ரணதீப் சுர்ஜேவாலா, ஜிதேந்திர சிங், ஜெய்ராம் ரமேஷ், குமாரி செல்ஜா என்று பார்த்துப் பார்த்து அலுத்துப்போன அதே முகங்கள்தான்.

தீபா தாஸ்முன்ஷி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியின் மனைவி - பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது பலருக்கும் வியப்பாக இருந்தது. அவருக்குக் கேரளம், தெலங்கானா மாநில கட்சிப் பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் கடுமையாக விமர்சித்தவர் தீபா. மம்தாவுக்கு எதிராக 2016இல் பவானிபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்றவரும்கூட. மம்தா கடுப்பாக இதுவெல்லாமும் ஒரு காரணம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?

சமஸ் | Samas 19 Dec 2023

இணைப்புச் சங்கிலி எது?

பாஜகவைக் கடுமையாக எதிர்க்கும் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் டிசம்பர் 19இல் புது டெல்லியில் கூடின. காங்கிரஸ் செயற்குழு (சிடபிள்யுசி) கூட்டம் டிசம்பர் 21இல் நடந்தது. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்புச் சங்கிலி முக்கியம். கூட்டணி சார்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவைப் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் (ஆஆக) யோசனை தெரிவித்தனர்.

பிரதமராகிவிட வேண்டும் என்ற ஆசையுள்ள மம்தாவும் கேஜ்ரிவாலும் பிரதமர் பதவி வேட்பாளர் வாய்ப்பைக் காங்கிரஸ் கட்சிக்கு தட்டில் வைத்துத் தர முன்வந்ததும் ஓர் அரசியல் உத்தியே. இந்த யோசனையைக் காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பம் விரும்பாது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், வெளிப்பார்வைக்கு அது நல்ல யோசனையாகவும் இருக்கும். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது கடுமையான போட்டியை உருவாக்கும். நாட்டு மக்களில் 17% பட்டியல் இனத்தவர் என்பதால் காங்கிரஸ் கட்சி மீண்டும் வலிமை பெறவும்கூட அது உதவும். அப்படிப்பட்ட யோசனை காங்கிரஸ் தலைமைக்கு இரண்டாவது விருப்பமாகத்தான் இருக்கும், முதல் விருப்பம் எதுவென்று ஊகிப்பது கடினமில்லை.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய எந்தத் தலைவரும் அவ்விரு கட்சிகளின் யோசனை குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இது ஏன் என்று பழுத்த அரசியலரான கார்கேவுக்கும் தெரியும். அவர் இதைப் பற்றி பேசுவதற்குக்கூட வாய்ப்பு தராமல், பாரத் ஜோடோ யாத்திரையின் அடுத்த கட்டத்தை நாட்டின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ராகுல் காந்தி மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்தார்.

தேர்தல் நெருங்கிவிட்டதால் அதை முழுக்க முழுக்க நடைப்பயணமாக அல்லாமல், நகரங்களுக்குள் நடப்பது - அடுத்த நகரத்துக்கு வாகனத்தில் செல்வது என்று வைத்துக்கொள்ளலாம் என்ற யோசனையும் தெரிவிக்கப்பட்டது. மம்தா – அர்விந்த் கெஜ்ரிவாலின் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும் இனி கார்கேவின் ஒவ்வொரு அசைவையும் கட்சித் தலைமை வெகு கவனமாக கண்காணிக்கும் என்பது நிச்சயம்.

கூட்டணியில் மீண்டும் சேர்ந்துவிட்டாலும் மம்தாவின் காங்கிரஸ் எதிர்ப்புணர்வு மங்கவில்லை. நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 146 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்றம் எதிரில் திரிணமூல் காங்கிரஸின் கல்யாண் பேனர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கரைப் போல நடித்துக் காட்டியது குறித்து கேட்டதற்கு, “அவர் அப்படிச் செய்ததில் தவறில்லை, அதைக் காங்கிரஸின் ராகுல் காந்தி செல்போனில் படம் பிடித்ததால்தான் வெளியில் பரவியது” என்று பழியை ராகுல் மீது போட்டுவிட்டார்.

ராகுலே முதன்மை…

இந்தியா கூட்டணிக் கூட்டம், காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக் குழு சந்திப்பு, காங்கிரஸில் நடந்திருக்கும் நிர்வாகிகள் மாற்றம் – நியமனம் ஆகியவற்றுக்குத் தொடர்பு இருக்கிறதா? இருக்கிறது, எப்படி என்று கேட்கிறீர்களா? எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் காங்கிரஸின் முக்கியத்துவத்தைக் குறைக்க, மல்லிகார்ஜுன் கார்கேவைப் பிரதமர் வேட்பாளராக இரு தோழமைக் கட்சித் தலைவர்கள் முன்மொழிந்தனர்.

காங்கிரஸ் தலைவர்கள் (சோனியா – ராகுல் - பிரியங்கா) அதற்கு வார்த்தைகளால் பதில் சொல்லாமல், செயலால் பதில் அளித்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகம் மாறிவிடவில்லை. முதல் குடும்பத்தின் முழுக் கட்டுப்பாட்டில்தான் கட்சி இருக்கிறது. பொது வேட்பாளர் யார், பிரதமராக யார் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் மற்றவர்கள் சொல்வதற்குக் காங்கிரஸ் இடம் தராது. 2024 அல்லது 2029 மக்களவைத் தேர்தலையும் தாண்டியது காந்தி குடும்பத்தாரின் அரசியல் இலக்கு.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்

ஆசிரியர் 29 Jan 2024

காங்கிரஸ் தலைவராக கடந்த ஆண்டு கார்கே பதவியேற்ற பிறகும் கட்சியின் முடிவுகளில் ராகுலின் பங்களிப்புதான் முக்கியமானது. நிர்வாகத்தில் சிறிய மாறுதல்களைச் செய்துகொள்ள கார்கேவை அனுமதிக்கிறார் ராகுல் - அவ்வளவே. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்களில் மாநிலத் தலைவர்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்தார் கார்கே. கட்சியின் தேசியத் தலைமை வழிகாட்டியாகவும், ஒருங்கிணைப்பாளராகவும் மட்டும் இருந்தது. அதன் விளைவு மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிட்டது.

எனவே, மீண்டும் விசுவாசிகளைக் கொண்டே நிர்வகிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 3 வரையில் மிகச் சிறந்த அரசியல் நிபுணராக கட்சியால் கருதப்பட்ட பூபேஷ் பகேலுக்குப் பதிலாக, தேர்தல் அறிக்கைக் குழுவில் அவருடைய போட்டியாளரான சிங் தேவுக்கு இடம் தரப்பட்டிருக்கிறது. இந்திரா காந்தியால், ‘என்னுடைய மூன்றாவது மகன்’ என்று அழைக்கப்பட்டவரும் 55 ஆண்டுகளுக்கு முன்னால் இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டவருமான கமல்நாத்தை, ‘தோல்விக்கு அவர்தான் காரணம்’ என்று செயற்குழுவில் சிலர் கடுமையாக தாக்கிப் பேசினர். இப்போது அவர் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.

© த பிரின்ட்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?
காங்கிரஸ் வீழவில்லை; மோடி வென்றிருக்கிறார்: சமஸ் பேட்டி
ராகுலின் பாதை காந்தியின் பாதையா, நேருவின் பாதையா?
எப்படி இருக்க வேண்டும் காங்கிரஸின் சமூக நீதிப் பாதை?
ராகுல்: கண்ணுக்குப் புலப்படாத நான்காவது குதிரை
தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

2






குறை ரத்த அழுத்தம்நினைவேற்றல்தேசியப் பொதுமுடக்கம்அரசு ஊழியர்கள்ஹரியானாசிப்கோ ஆந்தோலன்உமர் அப்துல்லா ஸ்டாலின்மொழிப் பொறுப்புணர்வுஹிஜாப்: ஆதரவு – எதிர்ப்புபேரறிவாளன் ஆளுநர்களின் செயல்களும்அகில இந்திய காங்கிரஸ்மலையாளிகள்சமூகப் பிரக்ஞைஜீன் திரேஸ் கட்டுரைநிச்சயமற்ற அதிகாரம்மிங்இந்துஸ்தானி கச்சேரிமதச்சார்பின்மைக்கான வாக்களிப்பா?தேசிய நுழைவுத் தேர்வுதனியார் முதலீடுநோயாளிசவிதா அம்பேத்கர்சுதீப்த கவிராஜ் உரைநளினி சிதம்பரம்எச்சரிக்கையான பதில்கள்முன்னாள் பிரதமர்பேரரசுகள்வரி நிர்வாக முறைகொள்கைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!