கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 5 நிமிட வாசிப்பு

தேசிய ஊழலை மறைக்கவே சிசோடியா கைது

யோகேந்திர யாதவ்
03 Mar 2023, 5:00 am
1

ன்றிய அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி (ஆஆக) ‘புலி வருகிறது’ – ‘புலி வருகிறது’ என்று கத்துவதையே வழக்கமாகக் கொண்டது; ஆனால். உண்மையிலேயே புலி வரும்போது நாம் விழிப்போடு இருந்தாக வேண்டும்.

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதான நிமிஷத்திலிருந்தே என்னுடைய தொலைபேசிக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன; என்னுடைய கருத்தைக் கேட்பதில் செய்தித் தொலைக்காட்சிகள் தீவிரம் காட்டின. ஆஆக நிறுவனர்களில் ஒருவராக இருந்து, பிறகு கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்ட நான் இந்தக் கைதை வரவேற்பேன், சிசோடியா விலக வேண்டும் என்று கோரும் கூட்டத்தாருடன் சேர்ந்துவிடுவேன் என்ற எதிர்பார்ப்பில்தான் இந்த அழைப்புகள்.

 ஆஆக கட்சி தார்மிகமாகவும் அரசியல்ரீதியாகவும் வீழ்ந்துவிட்டது என்ற கோஷ்டியில் நானும் சேர்ந்துவிடுவேன் என்றே அவர்கள் எதிர்பார்த்தனர். ‘தார்மிகரீதியில் வீழ்ந்துவிட்ட ஆஆக கட்சியை அதன் நிறுவனர்களில் ஒருவரான (யோகேந்திர யாதவ்) கடுமையாக சாடுகிறார்’ என்று தலைப்பிட்டு அதை முக்கியச் செய்தியாக்கவே முயன்றனர்.

ஆஆகவுக்கோ மணீஷ் சிசோடியாவுக்கோ நான் ஆதரவாளன் இல்லை என்றாலும், ஆனால் அவருடைய கைதைக் கைதட்டி வரவேற்கவோ, பாராட்டவோ நான் தயாரில்லை. அதற்கும் மாறாக இந்தக் கைதையும் இதைச் சுற்றிய நாடகக் காட்சிகளையும் கண்டித்தாக வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

ஏன் இது கடமை?

ஆஆகவிலிருந்து விலகிய பிறகு என்னுடைய முந்தைய சகாக்களைத் தேவையில்லாமல் விமர்சித்து என்னுடைய ஆற்றலையும் நேரத்தையும் வீணாக்க வேண்டாம் என்றே கடந்த எட்டு ஆண்டுகளாக முயற்சித்துவருகிறேன். ஆனால், அடிக்கடி இப்படி கருத்துச் சொல்லியாக வேண்டிய நேரமும் வந்துவிடுகிறது; நானும் என் கருத்தைச் சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க நகர்ந்துவிடுகிறேன். அது மட்டுமல்லாமல் ஒரு காலத்தில் உடன் இருந்தவர்களுடைய செயலும் எண்ணமும் உங்களுடைய வாழ்க்கையைத் தொடர்ந்து ஆக்கிரமிக்க அனுமதிப்பது நல்லதும் இல்லை.

இந்தச் சம்பவத்தில் நான் வரவேற்காமல் இருப்பதற்கு வேறு, ஆழமான காரணமும் இருக்கிறது.

இது என்னுடைய அரசியல் விருப்பு – வெறுப்பை மட்டும் சார்ந்ததும் அல்ல. இந்த நேரத்தில் ஆஆகவின் கலால் கொள்கை ஊழல் மீது அதிகம் கவனம் செலுத்துவது மிகவும் தவறான அரசியல் முடிவாகிவிடும். அது மிக நன்றாக திட்டமிட்டு விரிக்கப்பட்ட திசைதிருப்பும் கண்ணி வலையில் போய் சிக்குவதற்கு சமம்.

நம்முடைய காலத்தில் நடந்திருக்கும் மிகப் பெரிய ஊழல் மீது கவனம் செலுத்தாமல், வழக்கமான ஒரு ஊழலைப் பெரிதாகப் பேசி, எல்லா ஊழம் சமம்தான் என்று தார்மிக சமத்துவம் பேசுவதில்தான் போய் முடியும். அரசியல் கபட நாடகத்துக்கும் பழிவாங்கும் படலத்துக்கும் நம்மையறியாமல் உடந்தையாவதிலும் கொண்டுபோய் விட்டுவிடும்.

நாற்றமடிக்கும் கலால் கொள்கை

இப்போதுள்ள அரசியல் சூழலைக் கவனத்தில் கொண்டு பேசுவதாக இருந்தாலும், தில்லி ஆஆக அரசின் கலால் கொள்கை மாறுதலின் பின்னணியில் உள்ள ஊழல் நோக்கம் மிகுந்த நடவடிக்கைகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ‘ஆஆக தலைவர்கள் இதில் தவறே செய்யவில்லை’ என்று நற்சான்றுகளை வழங்கிவிடவும் முடியாது.

மணீஷ் சிசோடியாவின் கைதையும், காவல் எடுப்பையும் சரியான நேரத்தில் கண்டித்த எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களுமே,  துரதிருஷ்டவசமாக இந்தக் கொள்கைக்காக நற்சான்றிதழ் தரும் தவறான வேலையையும் சேர்த்தே செய்துவிட்டார்கள். 

கட்சி அரசியல் அடிப்படையிலான கண்ணோட்டம், பொது வாழ்வில் நாம் ஆதரிக்க வேண்டிய தார்மிக நெறிகளைப் புறந்தள்ளக்கூடச் செய்துவிட்டது. நீங்கள் பாஜக ஆதரவாளராக இருந்தால் அல்லது பாஜகவைவிட ஆஆகவை அதிகம் எதிர்ப்பவராக இருந்தால், இந்த வழக்கில் சிபிஐ தரப்பை அதிகம் நம்புகிறீர்கள், சிசோடியாவைத் தூக்கில் போட வேண்டும், ஆஆக இத்துடன் மடிய வேண்டும் என்கிறீர்கள். பாஜகவை எதிர்ப்பதில் முழு மூச்சாக இருப்பவர் என்றால் ஆஆகவுக்கு ஆதரவாகப் பேசுகிறீர்கள், சிசோடியா செய்ததில் தவறே இல்லை என்று சான்று தருகிறீர்கள், அவருடைய கைதைக் கண்டிக்கிறீர்கள், இந்த முழு வழக்குமே ஜோடிக்கப்பட்டது என்கிறீர்கள். அரசியல் அடிப்படையிலான கருத்துகள் இவ்வளவு அப்பட்டமாக சிறுபிள்ளைத்தனமாக இருந்துவிடக் கூடாது!

ஆஆகவின் நோக்கத்தை அறிதல்

முதலாவதாக, மது உற்பத்தி – விற்பனை தொடர்பான கலால் கொள்கை மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய விவகாரம். மதுபான விற்பனைக் கொள்கை என்பது தனிப்பட்ட குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தார்மிகக் காவல் கொள்கை அல்ல என்று கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். குடிமகன்களின் மரணம், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், ஏழைக் குடும்பங்கள் குடிப்பழக்கத்தால் முன்னேற்றம் காண முடியாமல் நாசமாகும் அவலம் என்று பலவற்றுடன் தொடர்புடையது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனையைக் குறைப்போம் என்று தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த ஆஆக, எல்லா மாநில அரசுகளையும்போல மது விற்பனையை அதிகரிக்கவும் மது விற்பனை மூலமான வருவாயைப் பெருக்கவும்தான் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்தது. மதுபான விற்பனைக் கடைகளை அதிகமாக்குவது என்று ஆஆக அரசு எடுத்த முடிவை எதிர்த்து என்னுடைய தலைமையிலான ‘ஸ்வராஜ் அபியான்’ அமைப்புதான் 2016இல் பொதுப் பிரச்சார இயக்கத்தை நடத்தியது. ஆஆகவின் மதுபானக் கொள்கையே மக்கள் நலனுக்கு எதிரான முடைநாற்றம்தான்.

இப்போது பேசப்படும் மதுபானக் கொள்கை ஊழல், எதிர்க்கட்சிகளின் கற்பனைகளில் ஊற்றெடுத்த உண்மையற்ற விவகாரம் அல்ல; இந்தக் கொள்கையைப் பார்க்கும்போது முதல் நோக்கிலேயே, இது பொது நலனில் அக்கறை கொண்ட ஓரம்சமும் இல்லாத - அப்பட்டமான கொள்ளைக் கொள்கை என்பது தெரிந்துவிடுகிறது.

இதை நிரூபிக்க, காகிதத்தில் எழுதப்பட்ட சங்கேத கணக்குக் குறிப்புகள், கசிவுகள், கைப்பேசிகள் மூலம் நடந்த பேரங்கள், இடைத் தரகர்களின் பங்களிப்புகள் என்று - கடவுளுக்கு அஞ்சுவதாகக் கூறிக்கொள்ளும் – மக்களுக்காக இடையறாமல் பாடுபடும் மக்கள் தலைவரின் கொள்கையை விளக்கும் சான்றுகளும் கிடைத்துள்ளன!

ஏதோ ஒரு பயனை எதிர்பார்த்து மாற்றம் செய்யப்பட்டது இந்தக் கொள்கை என்று நிரூபிக்க இந்தச் சான்றுகள் போதுமா என்று பார்க்க வேண்டியது விசாரணை முகமைகள், நீதித் துறையின் கடமை. ஆனால், இது ‘குடிமக்கள் திருத்த மசோதாவுக்கு எதிராகத் திரண்ட மக்கள் செய்த சதி’ என்று ஒன்றிய அரசால் ஜோடிக்கப்பட்ட பயங்கர கற்பனை வளம் மிக்க சதியைப் போன்றதல்ல; இந்த அரசு இப்படித்தான் அரசு எதிர்ப்புப் போராட்டங்களை எல்லாம் சதியாகச் சித்தரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது.

சமீபத்திய தில்லி தேர்தல் பிரச்சாரத்தில் ஆஆக கொட்டிய பணத்தைப் பார்த்தவர்கள், இவ்வளவு பணம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று வியந்தார்கள் – அவர்களால் இந்த வழக்கைச் சாதாரணமானதாகக் கருதிவிட முடியாது. இவ்வளவு இருந்தும், ஒன்றிய அரசின் செயல்களை நியாயப்படுத்திவிட முடியாது.

அடிப்படையை மறக்கக் கூடாது

இந்த விவகாரத்தில் மூன்று கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.

மணீஷ் சிசோடியைக் கைதுசெய்வது அவசியம்தானா? இதேபோன்ற வழக்குகளில், இதே வகையில்தான் - குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரா? கைதுசெய்வதற்குத் தேர்ந்தெடுத்த நேரம் - இதைவிடப் பெரிதான ஒன்றை மறைக்கும் - அரசியல் உள்நோக்கம் கொண்டதில்லையா?

இந்தக் கேள்விகள் சட்டபூர்வமாக ஏற்கத்தக்கதாகக்கூட இல்லாமலிருக்கலாம்.

சிறையில் அடைக்கலாம் என்று நீதிபதி கூறுகிறார், இந்தக் கட்டத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுக்கிறது – இருவரும் சட்டப்படியான புற எல்லையைத்தான் உணர்த்துகின்றனர். மணீஷ் சிசோடியாவைக் கைதுசெய்து விசாரிப்பது சட்டப்படி செல்லத்தக்கது என்று மட்டுமே சொல்கிறார்கள். சிபிஐ இப்படிக் கைதுசெய்வது சரியா என்பதற்கோ, அரசியல் தார்மிகப்படி இது சரியா என்பதற்கோ இது விடையளித்துவிடவில்லை… இது விவாதிக்கப்பட வேண்டும்.

நான் வழக்கறிஞர் அல்ல; ஊழல் குற்றச்சாட்டு எவ்வளவு வலுவானதாக இருந்தாலும் ஒவ்வொரு வழக்கிலும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை விசாரணை முகமை கைதுசெய்ய வேண்டும் என்று இந்நாட்டுச் சட்டம் கூறவில்லை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களை சிபிஐ ஏற்கெனவே சோதனையிட்டு தனக்குத் தேவைப்பட்ட விவரங்களைக் கைப்பற்றியுள்ளது. எனவே, ஆதாரங்களை அழித்துவிடக்கூடும் என்ற ஆபத்து இல்லை, மாநிலத்தின் துணை முதல்ர் என்பதால் திடீரென காணாமல் போய்விடுவார் என்றும் அஞ்சத் தேவை இல்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்கிறார்கள், கைதுசெய்து காவலில் வைத்தால் மட்டும் நிலைமை எப்படி மாறிவிடும் என்று தெரியவில்லை – ஒருவேளை சட்டத்துக்குப் புறம்பான சித்திரவதைகளை மேற்கொள்ள அனுமதி கோரினால், தகவல்களைப் பெற முடியுமாக இருக்கலாம்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

அதானி விவகாரத்தில் என்ன நடக்கிறது?

சி.பி.கிருஷ்ணன் 06 Feb 2023

ஊழலைக் கண்டுபிடிப்பதுதான் சிபிஐயின் நோக்கம் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் சிசோடியாவை அழைத்து விசாரிக்கட்டும், ஊழல் நோக்கத்துக்கான ஆதாரங்களை இடையில் திரட்டட்டும், வழக்கை நீதிமன்றத்தில் நடத்தி, அதன் அடிப்படையில் அவருக்குத் தண்டனை பெறட்டும் பிறகு சிறையில் அடைக்கட்டும். இந்தக் கட்டத்தில் கைது என்பது, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள எல்லா தலைவர்களுக்கும் - அரசை எதிர்ப்பதால் விளையக்கூடிய ஆபத்தை – எச்சரிக்கையாக விடுப்பதாகவே கருதப்படும். காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசிய பேச்சுக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ என்று எவர் வேண்டுமானாலும் சந்தேகிக்கவே இது வழிவகுக்கும்.

சமீபத்திய ஆண்டுகளில் சிபிஐயும் வேறு விசாரணை முகமைகளும் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பார்க்கும்போது கைதின் பின்னால் உள்ள நோக்கம் சதிதான் என்பது மேலும் வலுப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஊழல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் அதில் சிக்கும் விகிதம் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. விசாரணை முகமைகளின் பார்வையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளும் பாஜக பக்கம் தாவிவிட்டால் அவர்கள் மீதான விசாரணை நடவடிக்கைகளும் ஓய்ந்துவிடுகின்றன. சிபிஐ தன்னுடைய வேலையைத்தான் செய்கிறது என்று யாரும் இப்போது குற்றஞ்சாட்டிவிட முடியாது!

ஆளும் அரசின் தலைவர்களுடைய கட்டளைகளுக்கு ஏற்பத்தான் ஒன்றிய விசாரணை முகமைகள் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டு நாம் வழக்கமாகக் கேட்டுக்கொண்டிருப்பதுதான், இப்போது நாம் அதை அப்படிக் கூறுவதற்கு மறந்துவிட்டோம். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை இப்படி அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவது சரிதானா என்ற அடிப்படையான கேள்வியை நாம் கேட்பதே இல்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் அரசமைப்புச் சட்டப்படி சுதந்திரமாகச் செயல்படவிடாமல் இப்படியெல்லாம் குறுக்கிடுவது ஏற்கத்தக்கதுதானா? இந்தக் கேள்விகளைக் கேட்டதன் மூலமும் எதிர்ப்புத் தெரிவித்ததன் மூலமும் எல்லா எதிர்க்கட்சிகளும் சரியான செயலைத்தான் செய்திருக்கின்றன.

இது தற்செயலானதா? 

சென்ற வாரம் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் நடந்துள்ள நிலக்கரி ஊழலை நிருபர்களின் கூட்டமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நடந்த ஊழலைவிட எந்த வகையிலும் வித்தியாசமானது அல்ல.

இந்த ஊழல் புகார் தொடர்பாகவும் சிபிஐ விசாரணையை நாம் எதிர்பார்க்கலாமா? கைதுகளும் இருக்குமா? மணீஷ் சிசோடியா வழக்கில் கையாளப்பட்ட வழிமுறையே இதிலும் கையாளப்படும் என்றால் எத்தனை ஒன்றிய அமைச்சர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட வேண்டும்? அதானி நிறுவனத்துக்கு ஆதரவாக சாமானிய மக்களின் பணத்தை முதலீடு செய்ததற்காக எல்ஐசி அல்லது எஸ்பிஐ தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்களா? முந்தைய ஆட்சியின்போது கூறினீர்களே என்று நடந்ததைச் சுட்டிக்காட்டவில்லை, விசாரணை முகமைகள் பின்பற்ற வேண்டிய வழக்கமான நடைமுறைகளையே நினைவுபடுத்துகிறேன்.

கடைசி அம்சத்துக்கு வருகிறேன்: மிகப் பெரிய பணக்காரரும் - இந்தியாவின் சக்தி வாய்ந்த உயர் தலைவரும் சேர்ந்து மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டைச் சந்திக்கும் வேளையில், ஆஆகவின் சிறு ஊழல் தேசிய அரங்கைப் பிடித்திருப்பது வெறும் தற்செயலான சம்பவம்தானா? மிகப் பெரிய கொள்ளை நடந்திருக்கும்போது, சாதாரண திருட்டு தொடர்பாக திட்டமிட்டு தேசத்தின் கவனத்தை அதை நோக்கித் திருப்புவதைக் கவனத்தில் கொள்ளாமல் விடுவது அப்பாவித்தனம் மட்டும் அல்ல – படுமுட்டாள்தனமும்கூட.

ஊழல் ஆட்சிக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கம் நடத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளூர குரூர திருப்தியை அளிக்கக்கூடியது என்றாலும், இந்த எண்ணம் மேலிடாமல் நாம் அடக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு எதிராக, புலி வருகிறது என்ற கூக்குரலை ஆஆக எப்போதும் எழுப்பிக்கொண்டே வந்தது. இப்போது புலி உண்மையிலேயே வந்துவிட்டபோது நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெவ்வேறு அளவுகளில் செய்யப்படும் வெவ்வேறு தவறுகளை நாம் எப்படி எதிர்கொள்வது என்பதில்தான் அரசியல் இருக்கிறது. மிகப் பெரிய ஒன்றை அனுமதித்துவிட்டு மிகச் சிறிய ஒன்றின் மீது நாம் கவனம் செலுத்தக் கூடாது என்பதே சரியான அரசியல் முடிவாக இருக்க முடியும். 

 

தொடர்புடைய கட்டுரைகள்

நவதாராளமயத்தால் அதானி குழுமம் அசுர வளர்ச்சி!
அதானி விவகாரத்தில் என்ன நடக்கிறது?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

S.SELVARAJ   1 year ago

நல்ல கட்டுரை.... தேசிய ஊழலை மறைக்க இது பெரிதாக்கப்படுகிறது என்பது சரி. ஆனால் ஊழலுக்கு எதிராகப் பிறந்த ஆஆக ரபேல் விவகாரம் குறித்தும், அதானியின் முறைகேடுகள் குறித்தும் மௌனம் சாதித்த போதும் சரி... CAA தொடர்பான டெல்லி வன்முறையில் அது வெளிப்படுத்திய மென்மையான அணுகுமுறையிலும் சரி.... அதன் சறுக்கல் தொடங்கியது. 2G காற்றலை பிரச்சனையில் எதிர்பார்க்கப்பட்ட இழப்பிற்கு எழுந்த ஆவேசமும்... கோபமும் மேற்கண்ட பிரச்சனைகளில் ஆஆகவிற்கு இல்லை. சமரச அரசியலுக்குள் இறங்கிவிட்டது

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

காங்கிரஸ் வளர்ச்சிபா.வெங்கடேசன்கூட்டுறவுகன்னிமாரா நூலகம்முதன்மைப் பொருளாதார ஆலோசகர்கர்நாடக காங்கிரஸ் கட்சிசித்தராமையாஇந்தியப் பொதுத் தேர்தல்உதயமாகட்டும் கூட்டாட்சி இந்தியாஅமெரிக்க காங்கிரஸ்இந்தி ஊடகங்களின் பிராமண நினைவேக்கம்உட்கார்வதற்கான உரிமைதமிழ்ப் புத்தாண்டு அண்ணாபசவராஜ் பொம்மைநிதிநிலை அறிக்கை 2022பொதுக் கணக்குஅண்ணாமலைஆ.சிவசுப்பிரமணியன் பேட்டிமுழுப் பழம்கலைஞர் கருணாநிதிதென்னகம்: உறுதியான போராட்டம்தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்காஷ்மீர் விவகாரம்அகவிலைப்படிஅறிவியல் மாநாடுதிருத்தம்சௌஹான்யோகி ஆதித்யநாத்ரவி நாயர் கட்டுரைமுளை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!