கட்டுரை, தொடர், கல்வி, சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

எப்படிச் செதுக்கப்பட்டது பின்லாந்தின் கல்வித் துறை

விஜய் அசோகன்
30 Oct 2022, 5:00 am
1

பின்லாந்தின் நிகழ்கால வெற்றிக்கு சென்ற ஒரு நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட பல்வேறு கல்வியியல் சீர்திருத்தங்களே முன்னணிக் காரணங்களாக அமைந்தன. 1910இல் விவாதிக்கப்பட்டு, 1920லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட மிக முக்கியமான கல்வித்திட்டம், ‘சமூகப் பொதுமையாக்கம்’ (Socialization) ஆகும். அதாவது, அனைத்துப் பகுதி மாணவ, மாணவிகளுக்கும் கல்வி கற்கும் சூழல் மற்றும் அவரவர் வாழும் நிலப்பரப்பு சார்ந்த கல்விச் சூழல். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு வகுப்பறையும் ‘சிற்றுருச் சமூகம்’ (miniature society). மாணவ, மாணவிகளுக்கான மெய்வலித் தண்டனைகள் (physical punishment) முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டது. 

பின்லாந்தின் தொடக்கக் கல்வியின் தந்தை என்று அழைக்கப்படும், யூனோ சைக்னெயெஸ்  - 1863 முதல் 1869 வரை தலைமை கல்வித் துறை ஆணையராக இருந்தபோது சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் பயணித்து, தொடக்கக் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் குறித்த ஆய்வுகள் செய்துவந்தார். 

பின்லாந்து கல்வியின் தொடக்கநிலை வகுப்புகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கு அன்றைய கால ஜெர்மானியத் திட்டங்கள் சரியாக இருக்கும் என்று அவர் கணக்கிட்டார். ஜெர்மன் அறிஞர்களான ஹெர்பர்ட், சில்லர் மற்றும் சுவிட்சர்லாந்து அறிஞரான பெசுடாலோசியன்  வரையறுத்த கல்வியியல் கோட்பாடுகளின் வெற்றிக் களமாக பின்லாந்தின் 20ஆம் நூற்றாண்டுக் கல்வி இப்படியாக மாறியது. சமூக வளர்ச்சிக்கான தனிமனிதர்களின் மேம்பாட்டினை வடிவமைப்பதே கல்வி என்ற முடிவை நோக்கி பின்லாந்து சென்றது. 

வார்த்தைகள், எழுத்துகள், வரைபடங்களைக் காட்டிலும், செய்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, ஒவ்வொரு குழந்தைகளின் தனித்த திறன் பாதிக்காத வகையில் வகுப்பறைக் கற்றல் கூட்டுச் செயல்பாடாக மாற வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டனர். “குழந்தைகள் தங்களுக்கான கேள்விகளை அவர்களே திட்டமிட்டு, பதில்களை அவர்களே தேடும் விதமாக வகுப்பறைப் பயிற்சிகள் இடம் பெற வேண்டும், மாறாக, முன்பே தயாரிக்கப்பட்டக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கருவிகளைப் போல குழந்தைகள் இருக்கக் கூடாது” என்றார் பெசுடாலோசியன்.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்  

பின்லாந்தின் கல்வித் துறை வளர்ச்சியில் அடுத்து பெருந்தாக்கம் செலுத்தியவை, ஆசிரியர் பயிற்சி!

சிறந்த ஆசிரியர் பயிற்சி வகுப்புகளால் உருவாக்கப்படும் தரமான ஆசிரியர்களாலேயே தலைசிறந்த கல்வியை வழங்க முடியும் என்பது பின்லாந்தின் திடமானக் கோட்பாடுகளில் ஒன்று.

பின்லாந்து கல்வித் துறைச் சார்ந்த பல்வேறு ஆய்வுகள் இருப்பினும், அதனை அப்படியே ஏனைய நாடுகள் பின்பற்ற முடியாததற்கான முதன்மைக் காரணம், பின்லாந்தின் பயிற்சிக் கல்லூரிகள் வழியே உருவாக்கப்படும் பொறுப்புணர்வுகொண்ட, தொடர் கற்றலுக்கு உட்படும் ஆசிரியர்கள்தான் என்று பல்வேறு கல்வியியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

அருகமைப் பள்ளிகள் எப்படி எல்லா குழந்தைகளும் வந்தடைய வழிவகுத்தனவோ, அப்படிப் பரவலாக பல்வேறு ஊர்களிலிருந்தும் ஆசிரியர்கள் உருவாகும் வண்ணம் அருகமை ஆசிரியர் கல்லூரிகளும் அமைந்தன. இது பின்லாந்தின் பெரும்பாலோருக்கும் பயிற்சிக் கல்லூரியில் சேர்வதற்கு உரிய வாய்ப்பை அதிகப்படுத்தியது. குறிப்பாக, பல்வேறு மகளிர் கல்வியியல் கல்லூரிகளும் உருவாக்கப்பட்ட பின், பின்லாந்தின் ஆண்-பெண் சமத்துவ மேம்பாடும் இதனால் வளர்ந்தது.

மிக முக்கியமாக, “வகுப்பறை ஆசிரியர்களே நாட்டின் பொறுப்புள்ள குடிமகக்களுக்கான நடைமுறை எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்” என்றும் “நாட்டின் பண்பாட்டையும் வரலாற்றையும் அடுத்தத் தலைமுறைகள் அறிந்து நற்சிந்தனைக் குடிமகனாக உருவாகிவருவதற்கான அடிப்படையை விதைப்பதே ஆசிரியர்களின் கடமை” என்றும் பின்லாந்து தன் ஆசிரியர்களுக்கான அடிப்படையை வகுத்தது.

மத வகுப்புப் பாடத்திட்ட மாற்றங்கள்

அடுத்து, மதங்கள் தொடர்பான வகுப்புகளுக்கான நேரம் குறைக்கப்பட்டது. 1925இல் மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு இருந்த 170 மணி நேரத்தில் 20 மணி நேரம் மத வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது, 1994இல் இது 11 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. 1970இல் மத அடிப்படைப் பாடத்திட்டத்தை பள்ளிகளே வகுக்க வேண்டும், தேவாலயங்கள் வகுக்கக் கூடாது என்ற முக்கியமான பரிந்துரையும் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த சீர்திருத்தம் மேலும் முக்கியமானது. பல்வேறு நாட்டினரும், மொழியினரும், மதத்தினரும் பின்லாந்துக்குப் புலம்பெயர்ந்து வந்த பிறகு, எல்லோருக்கும் பொதுவாக ஒரு மத வகுப்பு என்பது ழிக்கப்பட்டது. அனைத்து நோர்டிக் நாடுகளிலும் பல மதங்களைப் பற்றின அடிப்படை புரிதலைத் தரும் பாடங்கள் வகுக்கப்பட்டன. எல்லோரையும் இணைத்தும், எவர் ஒருவர் மீதும் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளங்களையும் திணிக்காதபடியும், வகுப்பறைப் பாடங்கள் மாற்றப்பட்டுவிட்டன.

ஆசிரியர் பயிற்சிகளின் அடிப்படை

அன்றைய காலம் முதல் இன்றைய நவீன காலம் வரையில், பின்லாந்து ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் பல்வேறு படிநிலை மாற்றங்களையும் உள்ளடக்கிவருகின்றனர். ஓர் ஆசிரியர் உருவாவதற்கான அடிப்படையாகவும் பாடவேளைகளில் பின்பற்ற வேண்டிய அடிப்படை விதியாகவும் இருக்கும் சில கூறுகளை மட்டும் கீழே தருகிறேன்.

  1. மாணவ, மாணவிகள் தன் இயல்பில் கற்க அனுமதிக்க வேண்டும், அவரவருக்கான இலக்குகளை அவர்களையே தேர்ந்தெடுக்கப் பழக்க வேண்டும்.
  2. மாணவ, மாணவியரின் பள்ளிக்கு வெளியேயான வாழ்வியலோடு ஒப்பிட்டு வகுப்புத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.
  3. மாணவ, மாணவியரின் தனித்திறனை அவரவர் வாழ்க்கைச் சூழல், இயற்கைச் சூழல், சமூகச் சூழல் ஆகியவற்றோடு கலந்து சிந்தித்து, அவரவர் தனித்துவத்தை வளர்க்க வேண்டும்.
  4. வகுப்பறையினுள் ஆசிரியரானவர் மாணவ, மாணவிகளுக்கான ஊக்கசக்தியாக திகழ வேண்டும். வகுப்பறைச் சமத்துவம், அமைதியைப் பேணுதலைச் சாத்தியப்படுத்தும் முகமாக அவர் நிலைக்க வேண்டும்.
  5. ஆசிரியர்-பெற்றோர் உறவு மேம்பட, கூட்டுச் செயல்பாடுகளையும் தேவை ஏற்படின் வடிவமைக்கலாம், ஆசிரியர்-பெற்றோர் உறவில் சம மதிப்பு, சம நம்பிக்கை, சம புரிதலைப் பேண வேண்டும். பள்ளிக்கும் பெற்றோர்களுக்குமான உறவின் நம்பிக்கை மிகு அடையாளமாக ஆசிரியர்களே நிற்க வேண்டும்.
  6. மாணவ, மாணவிகளுக்கு தண்டனை என்பதைவிட, அங்கீகாரமும், ஊக்கமும், மதிப்புகளையும் வழங்கும் விதமாக ஆசிரியர்கள் தங்களை உளவியல்ரீதியில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். 

    இப்படியாக, ஆசிரியர் பயிற்சி வகுப்புகளின் அடிப்படை விதிகளையும் தொடக்கக் கல்விப் பாடத்திட்டத்தையும் வகுத்த பின்லாந்து கல்வித் துறை, 21ஆம் நூற்றாண்டில் நவீன வடிவப் பாய்ச்சலுக்கும் தயாரானது. அடிப்படையில், சமூகநீதி, சமூகநலத் திட்டங்கள் மற்றும் அதிகாரப்பரவலாக்கம் என்னும் மைய முடிச்சுக்களால் கட்டப்பட்ட அந்த நவீன வடிவ சீர்த்திருத்தங்களே இன்றைய பின்லாந்தின் அனைத்துச் சாதனைகளுக்கும் அடித்தளமிட்டுள்ளன.

தொடர்ந்து ஒவ்வொரு விஷயமாகப் பார்ப்போம்!

(அடுத்த ஞாயிறு...)

விஜய் அசோகன்

விஜய் அசோகன், ஆய்வாளர். நோர்வே, சுவீடன், அயர்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சுவீடனில் உள்ள நார்டிக் ஃபோரம் ஃபார் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி (Nordic Forum for science and technology) அமைப்பின் தலைவராகச் செயலாற்றிவருகிறார். தாய்மொழிவழிக் கல்வி மற்றும் ஐரோப்பிய உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் தொடர்ந்து எழுதிவருகிறார். தொடர்புக்கு: thamilinchelvan@gmail.com


5

3

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    3 months ago

சிறந்த ஆசிரியர் பயிற்சி வகுப்புகளால் உருவாக்கப்படும் தரமான ஆசிரியர்கள்! பொறுப்புணர்வு கொண்ட தொடர் கற்றலுக்கு உட்படும் ஆசிரியர்கள்!! இதெல்லாம் நமக்குத் தெரிந்ததுதான், ஆனால் எந்தப் பொறியில் சிக்கிக் கொண்டு செயல்படுத்த முடியாமல் தவிக்கிறோம்? ஆசிரியர் பயிற்சிகளின் அடிப்படை கவனிக்கப்பட வேண்டியது. நல்ல வழிகாட்டி தான் இந்த கட்டுரை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

யோகேந்திர யாதவ்இளைஞர்கள்அக்கறையுள்ள கேள்விகள்குக்கீ திருடன்தஞ்சை கோட்டைகே.சந்துரு கட்டுரைஆம்சிறப்புக் கூடுதல் உற்பத்தி வரிமருத்துவர் ஜீவாகதைசொல்லல்தேவனூரா மகாதேவா ‘உண்மையான மனிதர்’உன் எழுத்து கொண்டாடப்படலைன்னா நீ எழுத்தானே இல்லை: இரு தலைவர்கள் மரபுஎழுபத்தைந்து ஆண்டுகள்தமிழக பட்ஜெட்சாரு நிவேதிதா சமஸ் ஜெயமோகன்நகைச்சுவை நடிகர் - முதல்வர்இந்து தேசியம்இளம் வயதினர்ப.சிதம்பரம் உரைபொருளாதார இறையாண்மைதலித் மக்கள்வெளிவராத உண்மைகள்பாலியல் வல்லுறவுஅதிமுகவின் அதிகார மாற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும்ஜெயமோகன் அருஞ்சொல் சமஸ்கோவை ஞானி சமஸ்அதீதத் தலையீடுகள்2ஜிஆசிரியரிடமிருந்து...

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!