கட்டுரை, தொடர், வரலாறு, கல்வி, சர்வதேசம் 7 நிமிட வாசிப்பு

ஃபின்லாந்து எப்படித் தாய்மொழியைக் காத்தது?

விஜய் அசோகன்
23 Oct 2022, 5:00 am
5

னித உரிமைகளின் அடிப்படையில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது கல்வி. அதோடு, மானுடவியல், சமூகவியல், பொருளியல் மேம்பாடுகளுக்கான அச்சாணியாகவும் அது திகழ்கிறது. பாலின சமத்துவத்தின் கருவியாகவும், சமூக அமைதிக்கான அச்சாரமாகவும், தனி மனிதர்களின் வாழ்வியல் மேம்பாடுகளுக்கானதாகவும் கல்வியே மாபெரும் சக்தியாக விளங்குகிறது!

இப்படித்தான் விவரிக்கிறது ‘பன்னாட்டுக் கல்விக் கூட்டாண்மை’யின் வரையறை.

ஐக்கிய நாடுகள் சபையில் 1948இல் நிறைவேற்றப்பட்ட 26வது சட்டப் பிரிவின்படியும், உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின்படியும், “அனைவருக்கும் கல்வியை வழங்குவதும் அனைவரும் கல்விப் பெறுவதும் அடிப்படை உரிமை. கல்விக்கான முதலீடே எல்லாவற்றையும்விட சிறந்த முதலீடு!”

ஏன் இந்தச் சுட்டல்?

இது போன்ற விஷயங்களை ஏன் இங்கே சுட்ட வேண்டியிருக்கிறது என்றால், நாம் கல்வி சார்ந்து செய்யும் ஒவ்வொரு செலவின்போதும் இதை நினைவில் கொள்ள வேண்டி இருக்கிறது. இப்படியான மதிப்பீடுகளைக் கொண்டு செயல்பட்டதால்தான் ஃபின்லாந்து இன்று உலகம் பேசும் கல்வி கேந்திரமாக நிற்கிறது. 

தம் நாட்டின் கல்வித் துறைச் செயல்பாடுகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறு சிறு மாற்றங்களைப் படிப்படியாக நிறைவேற்றினார்கள் ஃபின்லாந்து நாட்டினர். இன்றும் இந்த மாற்றங்கள் ஏனைய நாடுகளைக் காட்டிலும் வேகமாகத் தொடர்கிறது.

ஃபின்லாந்து ஏற்கனவே சிறப்பான கல்வியை வழங்கி உலகின் முதன்மை இடத்தில் இருக்கும் நிலையில் ஏன் மாற்றங்களை உள்ளடக்கிக்கொண்டே ஓடுகிறார்கள்? இதற்கு அவர்கள் சொல்லும் பதில்: “உலகம் மாறிக்கொண்டே செல்கிறது. உலக ஓட்டத்தின் வேகத்தோடு நாமும் இணையாவிட்டால், எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சுணங்குவதோடு, நாட்டின் வளர்ச்சியும் சுருங்கிவிடும்!”

மதமும் கல்வியும்

ஏனைய கிறிஸ்துவ / ஐரோப்பிய நாடுகளைப் போல, ஸ்வீடனிலும் பின்லாந்திலும் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 1850 வரை, கல்விச் செயல்பாடுகளின் கட்டுப்பாடு தேவாலயங்களிடம்தான் இருந்தது. 15ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான், பைபிளை வாசிப்பதற்கான கல்வியறிவு எல்லா குடிநபர்களுக்கும் உரியதானது. ஃபின்லாந்தும் அனைவருக்குமான கல்வியை இந்தப் பின்னணியில் இருந்தே தொடங்கியது. 

தேவாலயங்களில் திருமணம் செய்வதற்கான அடிப்படைத் தகுதியாக கற்றல் அறிவுச் சான்றிதழ் இருந்தது. 

மார்டின் லூதுரிடம் கற்றவர் பேராயர் மைக்கேல் அகிரிகோல. பிற்காலத்தில் பைபிளை பின்லாந்தின் தாய்மொழியான ஃபின்னிஷ் மொழியில் கி.பி.1548இல் இவர்தான் கொண்டுவந்தார். அதுவரை சமூக மொழியாக ஃபின்னிஷ் தொடர்ந்திருந்தாலும், ஃபின்னிஷ் மொழியைப் பேசுவது இரண்டாம் தரமாகவே பார்க்கப்பட்டது. நிர்வாக மொழியாக ஸ்வீடிஷ், பேராலய மொழியாக லத்தீன் இருந்துவந்தன.

வீட்டு வழக்கிலும், கதை கூறலிலுமே இருந்த ஃபின்னிஷ் மொழிக்கு, மைக்கேல் அகிரிகோலவின் படைப்பின் வழி ஒரு திறப்பு ஏற்பட்டது. 

ஆனாலும், கிட்டத்தட்ட 600 ஆண்டுகளாக ஸ்வீடன் நாட்டின் ஆதிக்கத்தில் பின்லாந்தின் பெரும் பகுதிகள் இருந்ததால், தொடக்கக் கல்வி மொழியாக ஸ்வீடிஷ்; உயர்கல்வி மொழியாக கிரேக்கம், லத்தீன் ஆகியவையே தொடர்ந்தன.

கற்பித்தலுக்கான உத்வேகம் 

குழந்தைகளுக்கான கற்றல் திறன், குறிப்பாக, வாசிப்புத்திறனை உருவாக்குவதில் பெற்றோர்களுக்குத்தான் பொறுப்பு உண்டு என்கிற விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. குழந்தைகளின் திறனை சோதனை செய்யும் பணியை பாதிரியார்கள் மேற்கொண்டனர்.

17ஆம் நூற்றாண்டில் இருந்து, கிறிஸ்தவப் பேராலயங்களை நிர்வகிக்கும் அதிகாரிகளு ஆசிரியர்களும் கிராமங்கள் தோறும் குழந்தைகளின் கற்றல்திறன் வளர்ப்புக்காக நியமிக்கப்பட்டனர். எழுத்து, வாசிப்பு, கணக்குகள் கற்றலோடு, கிறிஸ்துவம் தொடர்பான அடிப்படை புரிதல்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் வகையில் அந்தக் காலகட்டத்தின் பாடத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. கற்பித்தலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 

இத்தகைய மாற்றங்களால், 18ஆம் நூற்றாண்டில் 50% பேர்; 19ஆம் நூற்றாண்டில் 80%-90% பேர் எனும் அளவுக்கு கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை ஃபின்லாந்து சமூகத்தில் அதிகரித்தது.

கல்வி மொழியும் விடுதலை உணர்வும்

1809 வரை ஸ்வீடிஷ் கட்டுப்பாட்டில் இருந்த பின்லாந்தை, ரஷ்யப் படை கைப்பற்றியது. ரஷ்ய அரசில் ஃபின்னிஷ் அமைச்சகம் என்று ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு, அங்கிருந்து ஆட்சி நிர்வாகம் கவனிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால், ஃபின்லாந்து கல்வி முறையானது ரஷ்யாவின் கல்வித் துறைக் கோட்பாட்டின்படி இயங்கலானது. இப்போது ஸ்வீடிஷ் மொழியில் இருந்து ரஷ்ய மொழியாகக் கல்வி மொழி மாற்றமடைந்தது. 

இப்படி ஸ்வீடிஷ், ரஷ்ய மொழிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த பின்லாந்தின் ஃபின்னிஷ் மொழியைக் காப்பாற்றியதில் பின்லாந்தின் ஆசிரியர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. ஃபின்லாந்து சமூகத்தில், கதைசொல்லிகளுக்கு முக்கியமான இடம் இருந்தது. அவர்கள் ‘கலெவாலா’ என்றொரு காவியத்தை ஃபின்னிஷ் மொழியில் சொல்வார்கள். மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்கள் சொல்லும் கதைகள் வழி இந்த ஆக்கிரமிப்புக் காலகட்டத்தில் ஃபின்னிஷ் மொழி உயிர்த்திருந்தது. ஆசிரியர்களும் இப்படி கதைசொல்லிகளாகச் செயல்பட்டுவந்தனர்.

இதன் பின்பு படித்தவர்கள் மத்தியில், ஃபின்னிஷ் மொழிப் பேச்சுவழக்கத்தை உருவாக்க ஸ்னேல்மென் உள்ளிட்டோர்  போராடினர். சமூக மொழியாக மட்டுமில்லாமல், கல்வி மொழியாகவும் ஃபின்னிஷ் இருக்க வேண்டும் என்ற குரல்களும் எழலாயின. 

ஃபின்னிஷ் தேசிய உணர்வெழுச்சிப் போராட்டக் காலங்களில் ஒலிக்கப்பட்ட பாடல்களில் ஒன்று, “நாங்கள் ஸ்வீடிஷ் இல்லை, ரஷ்யர்களாக மாற முடியாது, ஆகவே நாங்கள் ஃபின்னிஷாக மட்டுமே இருக்க முடியும்!”

மொழிக்கு முக்கியத்துவம்

ஆகையால், ஃபின்லாந்து தாங்களே தங்களை ஆண்டுகொள்ள ஆரம்பித்த பின் உருவாக்கிய முக்கியமான மாற்றங்களில் ஒன்று, ஃபின்லாந்து மொழியை ஃபின்லாந்து நாட்டின் ஆட்சிமொழியாக்கி சட்டம் இயற்றியது ஆகும். தாய்மொழிவழிக் கல்வியின் முக்கியத்துவத்தை அவர்கள் நிலைநாட்டினர். இதன் பின்னரே, தாய்மொழிக் கல்வி அடிப்படையில் ஸ்வீடிஷ் மொழிக்கும் ரஷ்ய மொழிக்கும் மாற்றாக ஃபின்னிஷ் மொழி பள்ளிக்கூடங்களில் இடம்பெறலாயிற்று. 

ஒரு சமுகத்தில் தாய்மொழிக் கல்விக்கும் தேசிய இறையாண்மை உணர்விற்கும் உலக வரலாற்றில் எப்பொழுதும் பெருந்தொடர்பு இருக்கும். ஃபின்லாந்து வரலாற்றிலும், ஸ்வீடிஷ் ஆக்கிரமிப்பும் ரஷ்ய ஆக்கிரமிப்பும் கற்றுத் தந்தப் படிப்பினையின் பின்னர், மொழியையும் தனித்த பண்பாட்டையும் காக்க வேண்டிய சூழலுக்கு நகர்ந்திருகிறார்கள்.

தேசிய உணர்வெழுச்சி மலர்ச்சிப் பெற்ற, ஃபின்னிஷ் மொழி ஆட்சிமொழியாக்கப்பட்ட, அதே காலக்கட்டத்தில்தான், ஃபின்லாந்து கல்வித் துறையின் ஏனைய சீர்த்திருந்தங்கள் நடக்கலாயின.

(வரும் ஞாயிறு அதைக் காண்போம்…)

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
விஜய் அசோகன்

விஜய் அசோகன், ஆய்வாளர். நோர்வே, சுவீடன், அயர்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சுவீடனில் உள்ள நார்டிக் ஃபோரம் ஃபார் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி (Nordic Forum for science and technology) அமைப்பின் தலைவராகச் செயலாற்றிவருகிறார். தாய்மொழிவழிக் கல்வி மற்றும் ஐரோப்பிய உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் தொடர்ந்து எழுதிவருகிறார். தொடர்புக்கு: thamilinchelvan@gmail.com


4

4





பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

RAJINIKANTH GANDHI   3 years ago

பின்லாந்து மொழியின் வெற்றியை அதன் வரலாற்று பின்னணியில் இருந்து மிக அருமையாக உணர்த்தியிருக்கிறது இந்த கட்டுரை. கல்வியில் உலக அளவில் முதலாகவும்! முன்னோடியாகவும் திகழ்வதற்கு தாய்மொழிவழி கல்வியை அது உயர்த்திப் பிடித்தது முதன்மையான காரணமாக உணரமுடிகிறது. நமது தமிழ்நாடும் பின்லாந்து போல நூற்றாண்டு அளவு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் ஆட்சியிலேயே மக்களுக்கான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி, தமிழ் வழிக் கல்வியையும், தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவருக்கு முன்னுரிமை என்றால் அடுத்த 10 ஆண்டுகளில் மிகச் சிறந்த வரலாற்று பின்னணியோடு தமிழ்நாடு உலகில் முதலாக நிற்கும் என்பதில் ஐயம் இல்லை. கட்டுரையாளர் தோழர் விஜய் அசோகன் அவர்களுக்கு வாழ்த்துகள். தொடருங்கள்...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Mahalingam N R   3 years ago

பின்லாந்து கல்வி முறையைப் பற்றி ஆங்கிலத்தில் எவ்வளவு படித்தாலும் அது புரிவதில்லை. அருஞ்சொல்லில் வெளிவரும் கட்டுரை புரிந்து கொள்வதும் உள்வாங்கிக் கொள்வதும் எளிதாக உள்ளது. விஜய் அசோகனின் கட்டுரையாக்கம் அடுத்த வாரம் கட்டுரையை வாசிப்பதற்கான ஆவலைத் தூண்டிவிடுகிறது. அருஞ்சொல்லின் இதர கட்டுரைகளையும் வாசித்து வருகிறேன். என்னால் இயன்ற அளவு சந்தாத் தொகையினையும் செலுத்தி வருகிறேன்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

R.Sisubalan   3 years ago

கட்டுரை சிறப்பு. தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். - இரா.சிசுபாலன், தருமபுரி

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Umamaheswari   3 years ago

தாய்மொழி வழிக் கல்வியை பாதுகாக்க வேண்டிய தேவை இன்று தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.அந்தப் புள்ளியிலிருந்து இந்தக் கட்டுரையை நாம் புரிந்து கொள்ளத் தவறக்கூடாது.சிறப்பான தொடர் தோழர் விஜய் அசோகன்.... தொடருங்கள்.வாழ்த்துகள்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

ARUNKUMAR   3 years ago

கல்விக்கான முதலீடே எல்லாவற்றையும்விட சிறந்த முதலீடு..... குழந்தைகளுக்கான கற்றல் திறன், குறிப்பாக, வாசிப்புத்திறனை உருவாக்குவதில் பெற்றோர்களுக்குத்தான் பொறுப்பு உண்டு என்கிற விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது மிகவும் நேர்த்தியான, சமூகம் சார்ந்த ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சிந்தனைகளை மேலும் மேலும் ஃபின்லாந்திலிருங்து கற்க வேண்டிய பாடங்கள் அதிகம் என்பது ஆழமான சிந்தனையின் தெளிவு.......

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

பழ. நெடுமாறன்நிர்வாகச் சீர்திருத்தம்அசோக் தன்வர்வியாபாரம்லதாநடப்புக்கணக்குபிராமணர் என்பது ஜாதியாஆன்லைன் ரம்மிhow to write covering letter for job applicationக.சுவாமிநாதன்எல்லோருக்குமான வளர்ச்சிவிவிடிமுக்கடல்மதச்சார்பின்மைக்கான வாக்களிப்பா?பெரும்பான்மையினம்பிரசாந்த் கிஷோர்எஸ்.எஸ்.ஆர். பேட்டிடிடி கிருஷ்ணமாச்சாரிநல்ல பெண்தாளித்தல்பெகாசஸ்டொனால்ட் டிரம்ப்சீனாவெறுப்புணர்வுஒருங்கிணைப்பாளர்கள்ashok selvan marriageவட மாநிலங்கள்ரத்தன் டாடா: தொழிலதிபர்களுக்கு ஒரு முன்னுதாரணர்!ப.சிதம்பரம்வாசகர் பக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!