கட்டுரை, தொடர், கல்வி, சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

ஃபின்லாந்தில் கல்வி: நோர்டிக் கல்வியும் சமூகமும்

விஜய் அசோகன்
16 Oct 2022, 5:00 am
9

லகில் மக்கள்நல அரசுகளுக்கான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுபவை நோர்டிக் நாடுகள். நார்டிக் என்றால் வடக்கு. ஐரோப்பாவின், அட்லாண்டிக்கின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளை ‘நார்டிக் நாடுகள்’ என்று குறிப்பிடுகிறார்கள். டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளையும் மேலும் சில தன்னாட்சி பிரதேசங்களையும் உள்ளடக்கிய பிராந்தியம் இது.

இந்த நாடுகள் சமூகச் சூழலில் ஒரு பொதுவான பண்பாட்டை உருவாக்கியிருக்கின்றன. பொது கல்வி, பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமை; உயரிய தனிநபர் சுதந்திரம், மதிப்புக்குரிய சமூக நல்லிணக்கம் என்று மேம்பட்ட ஜனநாயகத்துக்கான முன்னுதாரணமாக உலக நாடுகளால் பார்க்கப்படும் நாடுகள் இவை.

இங்குள்ள கல்விச் சூழல் மிகப் பிரமாதமானது. பல நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்களுடைய சமூகத்தில் உண்டாக்க வேண்டிய மாற்றங்களுக்காக இங்குள்ள கல்வி நிலையங்களைப் பார்வையிட்டுச் செல்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க கல்விச் சூழலை ‘அருஞ்சொல்’ வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாகவே இந்தத் தொடரை வெளியிடுகிறோம். கட்டுரையாளர் விஜய் அசோகன் இந்தப் பிராந்தியத்தில் வசிப்பவர் என்பதோடு, இந்த நாடுகளில் பணியாற்றுபவரும்கூட. தமிழ்நாட்டின் கல்விச் சீர்திருத்தத்துக்கு இத்தொடரும் உதவட்டும்!

பின்லாந்து நாடு, உலகின் தலைசிறந்த பள்ளிக்கல்வியை வழங்குகிறது என்பது தமிழ்நாட்டிலேயே நாம் அடிக்கடிக் கேட்டுப் பழகிய செய்திதான். ஆனால், எப்படி பின்லாந்து நாட்டினரால் உலகின் தலைசிறந்த கல்வியை வழங்க முடிகிறது? பின்லாந்து போலவே ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து நாடுகளின் பள்ளிக்கல்வித் துறைச் செயற்பாடுகள் பல நாடுகளுக்கும் முன்மாதிரியாக திகழக் காரணங்கள் என்ன? இதுபற்றி நாம் ஆழமாக விவாதித்தது இல்லை அல்லவா? இனி விவாதிப்போம்!

இந்த நாடுகள் அருகருகே இருப்பதால் மட்டுமல்ல, இவர்களுக்குள் ஒரு வரலாற்றுப் பிணைப்பும் உள்ளது. மொழிகளாலும், சமூக அமைப்புகளின் உருவாக்கத்தினாலும் மேலும் பல வரலாற்றுக் காரணங்களாலும் ஒன்றானவர்கள் இவர்கள்.

இன்றைய நார்வேயின் நிலப்பரப்பானது, டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் 400 வருடங்களுக்கு மேலாகவும், ஸ்வீடனின் கட்டுப்பாட்டில் 100 ஆண்டுகளாகவும் இருந்தது. அதேபோல, பின்லாந்து 600 ஆண்டுகளுக்கும் மேலாக  சுவீடனின் கட்டுப்பாட்டிலும், 100 ஆண்டுகள் ரஷ்ய நாட்டின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. ஆயினும்கூட நார்வே, பின்லாந்து இரண்டும் தனித்த ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கு முன்பிருந்தே கல்வி, தாய்மொழி, சமூகக் கட்டமைப்பு, அரசியல் அதிகாரக் கட்டமைப்பு என முக்கியமான சில விஷயங்களில் தத்தமது தனித்தன்மையினை நிலைநாட்டுவதில் ‘விடாப்பிடியான’ உறுதியுடன் இருந்தனர். 

நோர்டிக் நாடுகள்

ஸ்வீடன், நார்வே, டென்மார்க் மூன்றும் இணைந்த பகுதிகளை ‘ஸ்காண்டினேவியன் நிலம்’ என்றும் வகைப்படுத்துகின்றனர். இந்தோ-ஐரோப்பியக் கூட்டில் இருந்துவந்த ஜெர்மானிய மொழிப் பிரிவின் கிளை மொழிகள் ‘ஸ்காண்டினேவியன் மொழிகள்’ (ஸ்வீடிஷ், டேனீஷ், நோர்வேஜியன்) ஆகும். 1950களுக்குப் பின்னர், ஸ்காண்டினேவியன் கூட்டில், ஐஸ்லாந்தும் பின்லாந்தும் இணைந்த பின், நோர்டிக் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

நோர்டிக் நாடுகள் மொழிகளிலும் வரலாற்றிலும் பிணைந்திருப்பதுபோல, கல்வித் துறை வளர்ச்சியிலும் பல காரணங்களால் ஒருங்கிணைந்தவர்களே!  கல்வியுரிமை, தாய்மொழிக் கல்வி, சமத்துவக் கல்வி ஆகியவற்றையும் மனித உரிமையின் அடிப்படையாயாக வகுத்துவைத்திருக்கின்றன இந்த நாடுகள்.

உலகின் முன்னணிப் பட்டியலில் நோர்டிக் நாடுகள்

உலகின் தலைசிறந்த கல்வியைக் கொடுக்கும் நாடுகளின் முதன்மைப் பட்டியலில் மட்டுமல்ல, ஆண்-பெண் பாலினச் சமத்துவம் உள்ளிட்ட பல சமூக மேம்பாட்டு அளவுகோல்களிலும் முதன்மையான இடத்தில் இருப்பதால், உலகின் மகிழ்வான நாடுகளில் இந்த நாடுகள் முன்வரிசையில் இருக்கும். 2022இல் உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில், பின்லாந்து முதல் இடம். டென்மார்க் இரண்டாம் இடம். ஐஸ்லாந்து மூன்றாம் இடம். ஸ்வீடன் ஏழாம் இடம். நோர்வே எட்டாம் இடம்.  

உலகின் பாதுகாப்பான நாடுகளின் வரிசையிலும் இந்த நாடுகள் முதன்மையில் இருக்கும். உலகின் சமூக நலத் திட்டங்களுக்கான மேற்கோள்கள் இந்த நோர்டிக் நாடுகளிடம் இருந்தே பெறப்படுகின்றன.

நோர்டிக் சமூக உருவாக்கமும் கல்வித் துறையும் 

ல்வித் துறையை மனித உரிமை அடிப்படையில் வரிசைப்படுத்திய நாடு என்பதால், தாய்மொழிக் கற்றலைத் தங்கள் நாட்டில் வாழும் எல்லா நாட்டினருக்கும் எல்லா இனத்தினருக்கும் மனித உரிமை அடிப்படையிலான ‘மொழியியல் மனித உரிமை’ (Linguistic Human Rights) என இந்நாடுகள் வகைப்படுத்தியுள்ளன.

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சமத்துவக் கல்வி, அனைவருக்கும் சம வாய்ப்புள்ள கல்வி எனும் கொள்கையை இவை கொண்டுள்ளன.

அனைவரையும் உள்ளடக்குதல், சமூக நீதி இந்த இரு விஷயங்களையும் ஒரு ஆசிரியரானவர் ஆசிரியர் பயிற்சியில் பங்கேற்கும்போதே இந்நாடுகளில் அளிக்கப்பட்டுவிடுகின்றன. நோர்டிக் நாடுகளின் கல்வித் துறை வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றும் இரண்டு காரணிகள் 1) தொடக்கக் கல்வியும் 2) ஆசிரியர் பயிற்சிக் கல்வியும்.

அரசியலும் பாலின சமத்துவக் கல்வியும்

நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அடுத்த செய்தி, அரசியல். ஆம், கல்வியும் சமூக அரசியல் பாடங்களும் பிரிக்க முடியாதவை. பின்லாந்து பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பாக, மாணவர்களுக்காக அரசியல் வகுப்புகள், விலைவாசி முதல் சுகாதாரக் கட்டமைப்பு வரையிலான விவாதங்கள், அதனைத் தொடர்ந்து மாணவத் தேர்தல், வாக்குப் பிரச்சாரங்கள் எனச் செயல்படுத்தப்படுகிறது. 

1944இல் இரண்டாம் உலகப் போர் காலகூட்டத்தில் அமைந்த பின்லாந்து கூட்டணிக் கட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் அரசியல் கல்வி தொடர்பில் விவாதித்தது. கல்வித் துறை வடிவமைப்பில் அரசியல் குழுவினரின் வழிகாட்டலை இது உறுதி செய்தது. ‘கல்வி – சமூகம் - அரசியல்’ என்ற இணைப்பை இது கல்வித் திட்டத்தில் கொண்டுவந்தது. இதன் தாக்கம் இன்றைய சமூக மேம்பாட்டில் பிரதிபலிக்கிறது

அடுத்தடுத்தக் கட்டுரைகளில் எல்லாவற்றையும் ஆழமாகப் பார்ப்போம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
விஜய் அசோகன்

விஜய் அசோகன், ஆய்வாளர். நோர்வே, சுவீடன், அயர்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சுவீடனில் உள்ள நார்டிக் ஃபோரம் ஃபார் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி (Nordic Forum for science and technology) அமைப்பின் தலைவராகச் செயலாற்றிவருகிறார். தாய்மொழிவழிக் கல்வி மற்றும் ஐரோப்பிய உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் தொடர்ந்து எழுதிவருகிறார். தொடர்புக்கு: thamilinchelvan@gmail.com


11

3

1




பின்னூட்டம் (9)

Login / Create an account to add a comment / reply.

Gopi Selvam   2 years ago

கல்வி தொடர்பான விவாதங்களெழும்போது, வழக்கமாக மேற்கோள் காட்டப்படும் பின்லாந்து, நார்வே தொடர்பான புள்ளிவிவரங்கள் மட்டும் அடங்கிய மற்றுமொரு கட்டுரையாக இருக்கும் என நினைத்து படிக்காமல் தவிர்த்தேன். நான் நினைத்தது தவறு என்பது இப்போது புரிகிறது. நார்டிக் நாடுகளின் கல்வி, அரசியல் குறித்து விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் இருக்கும். இத்தொடர் அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். அந்நாடுகளோடு நேரடித் தொடர்பில் உள்ளவர் எழுதுவது மிகச்சிறப்பு. இத்தொடரின் அடுத்தடுத்த கட்டுரைகளுக்காக காத்திருக்கிறேன். நன்றி!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Gowri Shankar M   2 years ago

இது மிகவும் முக்கியமான தலைப்பு, இது போன்ற கல்வி தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். மழலையர் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளியின் கற்பித்தல்-கற்றல் செயல்முறை தொடர்பானது மிகவும் முக்கியமானது. இது பல ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்களைத் திறக்கும்... இது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை முறையை மேம்படுத்தும். ஒரு ஆசிரியரின் சிறிய மாற்றம் கூட ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயனளிக்கும். மிக்க நன்றி.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Thillai Govindan R   2 years ago

என்னதான் நடக்கிறது பின்லாந்தின் என்று அறிய ஆசை. திரு.அசோகன் கட்டுரைகள் அதை நிறைவேற்றும் என் நம்புகிறேன். ஒரு சில மாடல் பள்ளிகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நாமும் சில மாற்றங்களை கொண்டு வரலாம். அரசு ஆவண செய்யுமா?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Santhosh kumar   2 years ago

தாய்மொழி வழி கல்வி - தாய்மொழி வழி கல்வியின் அவசியம் - தொடக்கப்பள்ளி - ஆசிரியர் பயிற்சி - இந்திய துணை கண்டம் முழுக்க கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலையோடு பார்க்கும் இந்த நேரத்தில் உங்களது கட்டுரை வழியே மாற்றம் நிகழ்ந்தால் மகிழ்வே..!?

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Nelson Naveenraj   2 years ago

இன்றைய காலகட்டத்தில் கல்வி வியாபாரம் ஆகிக்கொண்டிருக்கையில் நோர்டிக் நாடுகளை போன்ற கல்வி முறைகளை உங்கள் கட்டுரைகள் மூலம் அறிந்து கொள்ள மனம் ஆவலாய் இருக்கிறது..... இதுபோன்ற கல்வி என்னைப்போன்ற சாமானியர்களின் தலைமுறையினருக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது..... தோடர்து பதியப்படும் உங்கள் எழுத்துருக்கள்...... காத்திருக்கிறேன் ஆவலாய்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Malathipackyaraj   2 years ago

பின்லாந்து பள்ளிக் கல்வி முறையை பற்றித் தெளிவாக அறிந்து, புரிந்து கொள்ளும் ஆசை நெடு நாளாக இருந்தது.அட்டகாசமான தொடக்கம். அடுத்த கட்டுரைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். அருஞ்சொல்லுக்கு ஆயிரம் நன்றிகள்!.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

ARUNKUMAR   2 years ago

அடுத்தடுத்தக் கட்டுரைகளை கற்று, உள்வாங்கி, தெளிந்து கற்பிக்க ஆவலுடன் அருஞ்சொல் வாசிப்பு காதலன்......

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Umamaheswari   2 years ago

மிக முக்கியமான கட்டுரை.. வரவேற்கத்தக்கது.. மிகவும் மகிழ்ச்சி... பகிரவும் செய்கிறேன். நன்றி தங்கள் எழுத்துக்கு.. இப்படிப்பட்ட செய்திகளை அறிந்து கொள்ள வெகு நாட்களாகக் காத்திருந்தேன்.கூகுள் சொல்வதைவிட களத்தில் நேரடி அனுபவம் பெற்ற ஒருவர் கூறுவது மகிழ்ச்சியான பதிவு.. தமிழ்நாடு இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.மிக முக்கியமான புள்ளி.தொடக்கப்பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி...

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Anbarasu   2 years ago

தொடக்க நிலை கல்வி தமிழகத்தில் இன்னும் ஒருவித குழப்பமும் பலவிதமான கற்பித்தல் முறைகளுடன் ஏற்றத்தாழ்வு நிறைந்ததாகவே உள்ளது. சமச்சீர் கல்வி என்ற முன்னெடுப்பு வார்த்தை அளவில் நின்றுபோனது. அரசிடம் மாநில -மத்திய என இரண்டு பாடத்திட்டம், தனியார் பள்ளிகளில் பணம் செலுத்தும் தன்மைக்கேற்ப இடம் சார்ந்து, வசதி சார்ந்து, பதிப்பகம் சார்ந்து, பள்ளியில் வசதிகள் சார்ந்து ஆயிரக்கணக்கான வேறுபாடுகள்.... இவை வெறும் ஏற்றத்தாழ்வுகள் மட்டுமல்ல புதிய சமூகப்பிரிவுகளை உண்டாக்கும் கூடங்களாக உள்ளன என்பது வேதனையான நிகழ்வு.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

பட்டமளிப்பு நாள்Economyநடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: உதவித்தொகைநீதிபதிbalasubramaniam muthusamy article மற்றமைCongressஇந்துத்துவ சக்திகள்இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைமூட்டுவலிபஜ்ரங் பலிகொர்பசெவ்: “நாங்கள் முயற்சி செய்தோம்!”மல்லிகார்ஜுன கார்கேமகேஸ் பொய்யாமொழிசாதி – மத அடையாளம்சமஸ் - பிடிஆர்எம்.எஸ்.சுவாமிநாதன் குழுபிரார்த்தனைதசைநாண்கள்துறவிடி.எம்.கிருஷ்ணாஆதிக்கச் சாதிஒரு கடல்நடுவர் மன்றம்கருத்துகள்ஒழுக்கம்கர்நாடக சங்கீதம்ராமச்சந்திர குஹாஹேமந்த் சோரன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!