கட்டுரை, தொடர், கல்வி, சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு
ஃபின்லாந்து பள்ளி உணவு: எதிர்காலத்துக்கான முதலீடு
ஃபின்லாந்துக் கல்வித் துறையினை நாம் முழுமையாகப் புரிந்துக்கொள்ள, மூன்று அடிப்படைகளை அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அவை தாய்மொழிவழிக் கல்வி, சமூக நீதி - சமூக நலத் திட்டங்கள், அதிகாரப்பரவலாக்கம் ஆகும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிலும் இந்திய ஒன்றியம் முழுமைக்குமான கல்வி, சமூக மேம்பாடுகளில், எதையெல்லாம் பேசிக்கொண்டும், போராடிக்கொண்டும் இருக்கிறோமோ, அவற்றைப் பரிசோதித்து முழுமையாக வெற்றியடைந்த துறையாக ஃபின்லாந்துக் கல்வித் துறையினை நாம் முன்மொழியலாம்.
நாம் முழுமையான சுதந்திரத்தை அடைந்த 1947களின் அதே காலக்கட்டத்தில்தான் ஃபின்லாந்தும் தன்னுடைய பள்ளிக்கல்விக்கான நவீன படிநிலையை எடுத்துவைத்தது எனலாம். பொதுவுடமைக் கட்சி, 1944இல் ஆட்சிக்கு வந்த பிறகு, “ஃபின்லாந்துக் கல்வித் துறையின் வழியாக மட்டுமே ஃபின்லாந்தின் சமத்துவச் சமூகத்தைப் படைக்க முடியும்” என அறிவிக்கிறார்கள். 1948இல், பொதுவுடமைக் கட்சி (49 இடங்களும்), சமத்துவ ஜனநாயகக் கட்சி (50 இடங்களும்) வேளாண் மையக் கட்சி (49 இடங்களும்) பெற்றுக் கூட்டணி ஆட்சி அமைக்கின்றனர்.
இதுவே, ஃபின்லாந்து நாட்டின் மறுக்கட்டமைப்புக்கான காலமாக மறுமலர்ச்சி பெற்றது. அதன் முக்கிய அங்கமாக, ஃபின்லாந்து நாட்டின் எவ்விதமான சீர்த்திருத்தங்களுக்கும் பொதுவான அரசியல் இணக்கப்பாடு / கருத்திசைவு (political consensus) தேவை என வரையறுத்தார்கள். 1950க்கு பிறகு மரபியக் கட்சியும் ஃபின்லாந்தின் நான்காவது பெரிய கட்சியாக களத்தில் இணைந்தாலும், கல்வி - அரசியல் இணக்கம் – சமூக மேம்பாடு ஆகியவற்றில் மாற்றங்கள் நிகழவில்லை. ஃபின்லாந்துக் கல்வித் துறையின் சீர்த்திருத்தங்களில் ஒன்றாக, இந்தக் காலக்கட்டங்களில் அமைக்கப்பட்ட அரசியல் கல்விக் குழுவும் (political education committee) சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தக் குழுவின் மிக முக்கியமான வழிகாட்டல்கள்:
- 7-16 வயதினருக்கான இலவச பரவலாக்கக் / விரிவாக்கக் கல்வி (Free Comprehensive school) என்பதாகும். ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவந்த இலக்கணக் கல்வி மற்றும் சமூகவியல் பள்ளிகள் வகையான கல்வித் திட்டங்கள் கைவிடப்பட்டன.
- கல்வித் துறையில் மைய அரசின் கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு முற்றிலுமாக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தின் நேரடியான அதிகாரத்திற்கும் ஆசிரியர்களின் சுதந்திரச் செயற்பாடுகளுக்கும் என மாற்றங்கள் நடந்தேறின.
உணவுத் திட்டம்
ஃபின்லாந்துக் கல்வித் துறையின் வெற்றிக் கதைகளை எழுதுவோர் சுட்டும் முக்கியமான விஷயங்களில் ஒன்று, ஃபின்லாந்து 1948இல் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டம். 70 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தப்படும் உணவுத் திட்டம் இது.
இதனை “உணவு, பசியாறுதல் என்ற அளவுகோலில் மட்டுமே மதிப்பிட முடியாது. குழுவாக இணைந்து ஒரே அளவுகோலில் பகிர்ந்து உண்பது, சமூக நல்லிணக்கம், பொதுச் சமூக கலந்துரையாடல், பள்ளியில் கடைப்பிடிக்கப்படும் நேரம் தவறாமை, முறையாக உண்ணுதல் எனப் பல விஷயங்கள் இதன் பின்னணியில் உள்ளன. அதேபோல, “மதிய உணவு நேரத்தில் குழந்தைகளிடையே நடத்தப்படும் உரையாடல்களினால் தகவல் பரிமாற்றும் திறனை மேம்பாடு அடைந்து, பொது அறிவு விரிவடைகிறது” என்றும் சொல்கின்றனர்.
ஃபின்லாந்துக் கல்வித் துறையின் பிரபலமான வாசகங்களில் ஒன்று, “பள்ளியில் வழங்கப்படும் உணவு சமூகச் சமவத்துவத்துக்கும் எதிர்காலத்துக்குமான முதலீடு. இதன் வழியாகவே பல்வேறு சமூகப் பின்னணியில் இருந்து வரும் குழந்தைகள் சமத்துவமான வாய்ப்பினை பெற்று சமூக நல்லிணக்கத்தை அடைகின்றனர்!”
ஃபின்லாந்தும் தமிழ்நாடும்
ஃபின்லாந்து பள்ளிகளில் உணவு இடைவேளை 1 மணி நேரத்திற்குக் குறையாமல் இருக்கும். மாணவ, மாணவியர்கள் தங்கள் வகுப்பறைச் செயற்பாடுகளாக, சமைப்பது, உணவு வீணாக்காமல் இருப்பது, வீட்டு உணவுப் பொருளாதரம் தொடர்பான அறிவினைப் பெறுவது, சூழலியல் சார்ந்தப் பார்வைகளைக் கற்பது, உடல்நலன், பல்வேறு சமூக மக்களின் உணவுப் பண்பாட்டினைப் பற்றி அறிவது என உணவு சார்ந்த கல்வி ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மிகப் பிரபலமானவை.
ஒவ்வொரு நகராட்சியும், மாநகராட்சியும் பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரம், சமமான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதைக் கண்காணித்து காலத்திற்கும் பிராந்தியச் சூழலுக்கும் ஏற்ற மாறுதல்களை உள்ளடக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
உலகளவில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் இத்தகைய உணவுத் திட்டத்தின் வேறு சில அம்சங்களை நாம் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.
உலக அளவில், பள்ளிகளில் உணவு வழங்குவதற்கான ஐக்கிய நாடுகள் சபையும், ‘யுனிசெப்’ (UNICEF) நிறுவனமும் சுட்டிக்காட்டிய பல ஆய்வறிக்கைகளில், “1) மாணவ, மாணவிகள் இடைநிற்றல் தடுக்கப்படும், 2) நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு, மாணவ, மாணவியரின் ஆரோக்கியத்தைப் பேணுவதோடு, கல்விக் கற்றலில் திறன் மேம்பாடு அடையும், 3) சமூக ஏற்றத்தாழ்வுகள் அற்ற வகுப்பறைகள் உருவாகும், அதனால் சமத்துவ வகுப்பறைக்கு வித்திடும்” என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றனர்.
முக்கியமாக இந்த உணவுத் திட்டமானது, சமூக நலத் திட்டங்களின் முக்கியத்துவத்தை இளம்பருவத்திலேயே உணர்த்திவிடுகிறது. இது ஒவ்வொரு தளத்திலும் சமூக நலத் திட்டங்களின் தேவையைச் சமூகத்திடம் உணர்த்துகிறது. உலகில் சமூக நலத் திட்டங்களின் முன்னோடியாகவும் எப்படி ஃபின்லாந்து திகழ்கிறது என்பதற்கான சூட்சமம் இங்கே ஆரம்பிக்கிறது!
(அடுத்த ஞாயிறு மேலும் பேசுவோம்...)
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.