கட்டுரை, அரசியல், விவசாயம், சர்வதேசம் 3 நிமிட வாசிப்பு

பிரெஞ்சு விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்?

டி.வி.பரத்வாஜ்
13 Mar 2024, 5:00 am
0

விவசாயிகள் போராட்டம் இன்று உலகத்தின் பல பகுதிகளிலும் நடக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பல நாடுகளின் விவசாயிகளும் இப்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்; அதிலும் குறிப்பாக பிரெஞ்சு விவசாயிகளின் போராட்டம் இந்தியத் தலைநகர் தில்லியை முற்றுகையிட்ட பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச விவசாயிகளின் போராட்டத்தைப் பல விதங்களிலும் ஒத்திருக்கிறது. ஏன் இந்தப் போராட்டம் நடக்கிறது? எதற்காகப் போராடுகிறார்கள்?

உலகின் கவனத்தை இது ஈர்க்கலானது, பிரெஞ்சு விவசாயிகள் போராட்ட முறையினால்தான்!  டிராக்டர்களில் குடும்பங்களுடன் வந்து தலைநகரம் பாரீஸுக்குச் செல்லும் 8 பிரதான வழிகளில் சாலையோரம் வாகனங்களை விவசாயிகள் நிறுத்திவிட்டனர். கோரிக்கைகளை அரசு ஏற்கும் தன்மையைப் பொருத்துத்தான் அடுத்த நகர்வு இருக்கும் என்றும் கூறிவிட்டனர். அரசு இறங்கிவராமல் போனால் அரசு அலுவலகங்களையும் நகரின் முக்கிய மையங்களையும் முற்றுகையிடப்போவதாகவும் எச்சரித்துள்ளனர். 

‘எங்களுடைய போராட்டத்தின் நோக்கம் பாரீஸ் நகர மக்களுக்கு இடையூறு செய்வதோ வன்முறையில் இறங்குவதோ அல்ல, ஆனால் அரசு எதிர்வினையாக அடக்கு முறையைக் கையாண்டால் அடுத்த கட்டம் என்ன என்று எங்களால் சொல்ல முடியாது’ என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

விவசாயிகளின் கோரிக்கைகள்

பொதுவான விலைவாசி உயர்வு, அனைத்து வித வரிகளிலும் உயர்வு, சூழலைக் காக்க வேண்டும் என்று கூறி பசுமைக் கட்டுப்பாடுகளை வலுக்கட்டாயமாக திணிப்பது ஆகியவற்றுக்கு எதிராகத்தான் விவசாயிகள் போராடுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக - உக்ரைனைலிருந்து - கோதுமை உள்ளிட்ட விளைபொருள்களைக் குறைந்த விலையில் அதிக அளவில் இறக்குமதி செய்து, ஐரோப்பிய நாடுகளின் உணவு தானியங்களுக்குச் சந்தையில் விலையை சரியச் செய்யும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது.

அடுத்ததாக, பசுமையைக் காக்க எல்லோரும் அவரவர் விளைநிலங்களில் குறைந்தது 4% பரப்பளவில் எந்தச் சாகுபடியையும் மேற்கொள்ளாமல் தரிசாகப் போட வேண்டும் என்ற உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற்றாக வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

அரசின் செலவுகளைக் குறைப்பதற்காக உரம், விதை, பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றின் மீதான விவசாய மானியங்களைக் குறைப்பது, கொள்முதல் விலையை அதிகப்படுத்தாமல் கட்டுப்படுத்துவது, உணவு தானிய விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றுக்கு தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பது அடுத்த முக்கிய கோரிக்கையாகும்.

விவசாய வேலையில் ஈடுபடுத்தப்படும் டிராக்டர்கள், அறுவடைக் கருவிகள் போன்றவற்றுக்கான டீசலுக்குத் தரும் மானியத்தைக் குறைக்கும் அரசு முடிவையும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் விவசாயத்தில் ஈடுபடுவோரில் பெரும்பாலானவர்கள் இப்போது முதியவர்கள். வாழ்நாளின் கடைசி கட்டத்தை எட்டிய நாங்கள் உடலில் ஆற்றல் குறைந்துள்ள வேளையில் எங்களை மேலும் கடுமையான மன உளைச்சலுக்கும் உடல் அசதிக்கும் ஆளாக்கும் வகையில் எடுக்கும் நடவடிக்கைகளை பிரெஞ்சு அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சரியும் சமூகப் பாதுகாப்பு

ஜீன் டிரேஸ் 26 Jan 2023

நிலவும் தொடர் பதற்றம்

சுற்றுச்சூழலை நாசமாக்கும் வகையில் விவசாயம் செய்யக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, உக்ரைனில் எந்தச் சூழல் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கும் உள்படாமல் சாகுபடி செய்து அனுப்பும் உணவு தானியங்களைக் குறைந்த விலையில் இறக்குமதி செய்வது எந்த வகையில் நியாயம் என்றும் ஐரோப்பிய நாடுகளின் விவசாயிகள் கேட்கின்றனர்.

பிரெஞ்சு விவசாயிகள் சாகுபடி செய்து அரசு முகமைகளுக்கு விற்கும் உற்பத்திக்கு உரிய விலையைத் தருவதற்கும், இதர மானியங்களை வழங்குவதற்கும் அரசு நிர்வாகத்தின் சிவப்பு நாடா முறை காரணமாக பணம் கிடைப்பது தாமதம் ஆவதையும் சுட்டிக்காட்டி கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

சூழல் காரணங்களைக் காட்டி பாசனத் திட்டங்களைத் தடுப்பது அல்லது தாமதப்படுத்துவது, மலை முகடுகளையும் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களையும் மீட்பதற்காக அங்கு விவசாயிகள் எந்தச் சாகுபடியையும் கால்நடை மேய்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று தடுப்பது, கால்நடை வளர்ப்பு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதிப்பது உள்ளிட்டவற்றையும் விவசாயிகள் எதிர்க்கின்றனர்.

விவசாய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அரசு கட்டுப்படுத்திவிட்டு விவசாயிகளின் வருமானத்திலும் கைவைக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று அனைத்து விவசாயிகளும் கோருகின்றனர். சூழலைக் காக்க வேண்டும் என்பதற்காக விதிக்கும் பல்வேறு நிபந்தனைகளால் விவசாய உற்பத்தியில் ஐரோப்பிய நாடுகள் தன்னிறைவு நிலையிலிருந்து வீழ்ச்சி அடையும் என்றும் எச்சரிக்கின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் பரிவுடன் பரிசீலிக்கப்படும் என்று கூறும் அரசு, அதேசமயம் வன்முறையில் விவசாயிகள் இறங்கினால் கடுமையாக ஒடுக்கப்படும், பாரீஸ் நகரவாசிகளுக்கும் அரசு சொத்துகளுக்கும், பொதுச் சொத்துகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தது. அரசும் விவசாயிகளும் பேச்சுவார்த்தை நோக்கி நகர்ந்தனர்.

அரசின் முடிவு?

ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு, வரும் ஜூன் மாதம் தேர்தல் நடைபெறுவதால் நிலைமை முற்றிவிடாமலிருக்க அரசு முயற்சி செய்கிறது. பிப்ரவரி மாதம் முதல் வருடாந்திர வேளாண் கண்காட்சி பாரீஸ் நகரில் நடைபெற வேண்டும். 

எனவே, விவசாயிகள் கோரியபடி மானியங்களை விரைந்து வழங்கவும், சூழல் தணிக்கைகளை மேற்கொள்ளும் அரசு நிர்வாக விதிகளைத் தளர்த்தவும், தேவைப்பட்டால் மாற்றவும் அரசு முடிவுசெய்திருக்கிறது. விவசாய நிலங்களில் 4% தரிசாகப் போட வேண்டும் என்பது ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முடிவு என்பதால் அதைக் கைவிட ஐரோப்பிய நாடாளுமன்றத்திடம் அனுமதி கேட்க வேண்டும் என்று பிரெஞ்சு அரசு கூறுகிறது.

விவசாயிகளின் கோபத்தைத் தணிக்க அவர்களுக்கு சிறப்பு நிதியுதவி அளிக்கப்படலாம், திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் ஒயினுக்குச் சந்தையில் கிராக்கி (கேட்பு) குறைந்துவிட்டதால் அதற்குத் தனியாக மானியம் வழங்கப்படலாம், வடக்கு பிரான்ஸில் வெள்ளத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அவற்றின் உரிமையாளர்களுக்கு வெள்ள நிவாரணமும், தெற்கு பிரான்ஸில் கால்நடைகள் ஒருவித கொள்ளை நோயால் இறந்துவருவதால் அவர்களுக்கும் ரொக்க இழப்பீடும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

விவசாயிகள் தற்காலிக நிவாரணங்களைத் தாண்டி விவசாயத்தை லாபகரத் தொழிலாக மாற்றுவதற்கான நீடித்த தீர்வுகளை எதிர்நோக்குகின்றனர். அதுகுறித்து உலகம் பேசத் தொடங்கினால் மட்டுமே நிரந்தரத் தீர்வு நோக்கி நகர முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பார்ப்போம், ஐரோப்பா நல்ல முடிவுகள் எடுத்தால் இந்திய விவசாயிகளுக்கும் ஒளி பிறக்கலாம்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

சமையல் எண்ணெயில் கலப்படமா?
சரியும் சமூகப் பாதுகாப்பு
உயிர்மை நேயமே நம் சிந்தனை மரபு: பாமயன் பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


3






வத்திராயிருப்புமக்கள் திரள்சிறுநீரகம் செயலிழப்பது ஏன்?கோம்பை அன்வர் அருஞ்சொல்உடல் எடைக் குறைப்புக்கான வழிகள்அக்னிபாத்புதிய இந்தியாவேலையில்லாத் திண்டாட்டம்வேலையும் வாழ்வும்தினமணிவிஷ்ணுப்ரியாகாங்கிரஸ் - இடதுசாரிகள் ஒற்றுமைகுஞ்சுஞ்சுமாவட்ட ஆட்சியர்தகுதி நீக்கம்எஸ்பிஐதாக்குதல்குதிநாண் தட்டைச்சதைமனத்திண்மைகுடிமக்கள் ‘எதிர்’ அரசு ‘எதிர்’ தனியுரிமைwriter samas interviewயு.ஆர்.அனந்தமூர்த்திஆட்சியாளர்கள்அரிசி ஆலைமனித உரிமைசாவர்க்கர் அருஞ்சொல்குர்வாசர்வபள்ளி ராதாகிருஷ்ணன்அரவிந்தன் கட்டுரைசிரமப்படுத்தும் சிறுநீர்க் கசிவு!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!