கட்டுரை, அரசியல் 10 நிமிட வாசிப்பு

யோகியை எதிர்கொள்வது பெரும் யுத்தம்தான்

வ.ரங்காசாரி
26 Jan 2022, 5:00 am
1

த்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது அந்த மாநிலத்தைத் தாண்டியும், நாட்டிலுள்ள ஆகப் பெரும்பாலான கட்சிகளின் எதிர்பார்ப்பாக இருப்பது வெளிப்படை. காரணம் எளிமையானது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வென்றால், இன்றைய அரசமைப்பு நீடிக்குமா என்கிற அளவுக்கு அச்சம் இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லாமலே ஆக்கிவிடும் அளவுக்குத் தீவிரமாகச் செயலாற்றுகிறது பாஜக. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்று அது முன்வைக்கும் செயல்திட்டத்தைக்கூட இந்தியாவை அதிபர் தேர்தல் முறைக்கு நகர்த்தும் முயற்சியாகப் பார்க்கின்றன எதிர்க்கட்சிகள். ஆகையால், 2022 உத்தர பிரதேச தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அவை விரும்புகின்றன. ஏனென்றால், 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரதான வாயில்களில் ஒன்று உத்தர பிரதேசம்.

சரி, இது அவ்வளவு எளிதான காரியமா? என்று கேட்டால், கள நிலவரங்களைப் பார்க்கும்போது அது மிகச் சவாலான காரியம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால், முன்னதாக 2017 சட்டப்பேரவைத் தேர்தலில், நரேந்திர மோடி எனும் ஒற்றை அஸ்திரத்துடன் பாஜக மோதியது என்றால், இந்த 2022 தேர்தலில் அது கூடவே யோகி ஆதித்யநாத் எனும் இன்னோர் அஸ்திரத்தையும் சேர்த்துக்கொண்டு இறங்குகிறது.

இந்த ஐந்தாண்டுகளில் மோடி - ஷா ஜோடிக்கு வெளியே பாஜகவுக்குள் சக்திமிக்க ஒரு தலைவர் உருவாகியிருக்கிறார் என்றால், அது யோகிதான். மோடி - ஷா ஜோடிக்கு உவப்பில்லாத அளவுக்குப் பல காரியங்களைத் தன் போக்கில் இந்த ஐந்தாண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் செய்திருக்கிறார் யோகி. வேறு யாரேனும் ஒருவராக இருந்திருந்தால் முதல்வர் பதவியில் இருந்து தூக்கப்பட்டு, வேறு ஒருவர் அங்கே அமர்த்தப்பட்டிருப்பார். ஆனால், யோகி மீது கை வைப்பது எனும் யோசனையை நோக்கி பாஜக தலைமை நகர முடியவே இல்லை.

டெல்லிக்கு அழைத்து, யோகியிடம் நேரடியாகப் பேசினார் மோடி. பல மாற்றங்களையும் யோகி வழியாகவே நிறைவேற்றினார்கள். இப்படித்தான் கட்சித் தலைமையே யோகியை அனுசரிக்க வேண்டியிருக்கிறது. காரணம், ஐந்தாண்டுகளில் கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் தன்னை அவ்வளவு வலுப்படுத்திக்கொண்டிருக்கிறார் யோகி.

இந்த ஐந்தாண்டுகளில் நாட்டின் எந்தப் பகுதியில் தேர்தல் நடந்தாலும், மோடி - ஷாவுக்கு அடுத்து, அங்கே சிறப்புப் பேச்சாளராக அதிகம் விரும்பி அழைக்கப்பட்டவர் யோகி. குறிப்பாக இந்தி பிராந்தியத்தில் அவர் செல்வாக்கு அதிகம். இதற்கெல்லாம் அடிப்படை உத்தர பிரதேசத்தில் அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும் செல்வாக்கு.

மதவெறிக்கு மரியாதையா?  

ஐந்தாண்டுகளில் உத்தர பிரதேசத்தில் எவ்வளவு ஜனநாயக விரோத காரியங்கள், மதவெறியைத் தூண்டும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்பதை நாடு அறியும். துரதிருஷ்டவசமான உண்மை என்னவென்றால், உத்தர பிரதேச அரசியல் சூழலைப் பொறுத்த அளவில் இவையெல்லாம் ஓட்டு வங்கியைப் பலப்படுத்தும் விஷயங்களாகவே உருமாறுகின்றன. 

யோகியின் தேர்தல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், ஒரு சங்கடமான உண்மை புரியவரும். யோகி எதிர்கொண்ட முதல் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரை அவர் வென்றார் என்றாலும், வாக்கு வித்தியாசம் குறைவு. ‘ஹிந்து யுவ வாஹினி’ அமைப்பை அவர் உருவாக்கி பின் கிழக்கு உத்தர பிரதேசத்தில் மதரீதியிலான பிளவுகளும், கலவரங்களும் அதிகரித்தன; இப்படிப் பிளவு அதிகரிக்க அதிகரிக்க  யோகியின் தேர்தல் வாக்கு வித்தியாசமும் அதிகமானது என்பதே வரலாறு. இந்தத் தேர்தலில் முழுமையாக ‘இந்து உணர்வு’ ஓர் ஆயுதமாக பாஜகவால் கையாளப்படுகிறது. 

இந்தப் பிளவை எதிர்கொள்ளும் முழு வல்லமை உத்தர பிரதேசத்தில் எந்தக் கட்சிக்கும் முழுமையாக இல்லை என்பதே உண்மை. ஏனென்றால், சமூகத்தில் எல்லோரையும் ஒருங்கிணைத்து அணுகும் ஒரு கட்சியோ, செல்வாக்கு மிக்க தலைவரோ அங்கே இல்லை.

எப்படி பாஜக இந்துத்துவ ஆதரவுக் கட்சியாகவும், பிராமண - தாக்கூர் ஆதிக்கக் கட்சியாகவும் செயல்படுகிறதோ அப்படியே சமாஜ்வாதி கட்சியானது, முஸ்லிம்கள் ஆதரவுக் கட்சியாகவும், யாதவ்கள் ஆதிக்கக் கட்சியாகவும் செயல்பட்டுவந்தது. பகுஜன் சமாஜ் கட்சி தலித்துகள் ஆதரவுக் கட்சியாகவும், தலித்துகளில் கிட்டத்தட்ட சரிபாதி மக்கள்தொகையைக் கொண்ட ஜாதவ்கள் ஆதிக்கக் கட்சியாகவும் செயல்பட்டுவருகிறது. காங்கிரஸைப் பற்றிப் பேசுவதற்கே ஏதும் இல்லை. 2017 தேர்தலின்போது டெல்லியிலிருந்து ஷீலா தீக்‌ஷித்தைக் கொண்டுவந்து உத்தர பிரதேச முதல்வர் வேட்பாளராக நிறுத்த முயற்சித்தவர்கள் 2022 தேர்தலில் டெல்லியிலிருந்து பிரியங்காவைக் கொண்டுவந்து இறக்கியிருக்கிறார்கள்; அப்போதும்கூட முதல்வர் வேட்பாளராக அவரை அறிவிக்கும் துணிச்சல் வரவில்லை.

எதிர்க்கட்சிகள் இணைந்து போட்டியிட்டால் நிச்சயம் பாஜகவை வீழ்த்த முடியும். ஆனால் அப்படியான ஒற்றுமை கைகூடவில்லை. இந்தப் பின்னணியிலேயே நாம் இத்தேர்தலை அணுக வேண்டியிருக்கிறது.

வாக்குக் கணக்கு வரலாறு

நான்கு முனைப் போட்டி நிலவும் உத்தர பிரதேசத்தில் கிட்டத்தட்ட பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மூன்றும் அமைப்புரீதியாக சமபல எதிரிகள் என்று சொல்லலாம். இருபதாண்டுகள் தேர்தல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், சராசரியாக 20%-25% வாக்கு வங்கியை இவை ஒவ்வொன்றும் வைத்திருப்பது தெரியவருகிறது. தேர்தலில் 30% வாக்குகளைத் தொடும் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இதுவே வரலாறு.

மோடி பிரதமரான 2014-க்குப் பின் இந்தச் சூழல் தாறுமாறாக மாறியது. 2017 சட்டமன்றத் தேர்தலில் 39.7% ஓட்டுகளையும், 2019 மக்களவைத் தேர்தலில் 51.67% ஓட்டுகளையும் வாங்கியது பாஜக. சட்டமன்றத்தில் 312/403 தொகுதிகளையும், மக்களவையில் இந்த மாநிலத்திலிருந்து 62/80 தொகுதிகளையும் அது பெற்றிருக்கிறது. இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், இந்தப் பிராந்தியம் பலம்; அந்தப் பிராந்தியம் பலவீனம் என்று சொல்ல முடியாத வகையில் சீரான வாக்கு வங்கியை அது மாநிலம் முழுக்கக் கொண்டிருக்கிறது. 2017-ல் வாங்கிய 39.7% ஓட்டுகளுடன் ஒப்பிட்டால் 10% ஓட்டுகள் இம்முறை குறைந்தாலும்கூட பாஜக எளிதாக ஆட்சிக்கு வந்துவிட முடியும். இப்போதைய தொகுதிகளில் மூன்றில் ஒரு பகுதி - 100 தொகுதிகளை இழந்தாலும்கூட அது ஆட்சிக்கு வந்துவிட முடியும் என்பதே நிலை.

அகிலேஷ் எழுச்சியை நம்பலாமா?

இன்றைக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷுக்குப் பெரும் கூட்டம் கூடுகிறது. அக்கட்சியின் பலம் பெருகியிருக்கிறது என்றாலும்கூட, இது அப்படியே பாஜகவை வீழ்த்தும் எண்ணிக்கையாக மாறுமா என்பதில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அதற்கான காரணம் அகிலேஷை நோக்கி வரும் கூட்டம் ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களின் திரட்சியாகிவருகிறதே என்பதே ஆகும்.

ஓர் உதாரணத்துக்கு, 2012 சட்டமன்றத் தேர்தலில்கூட 7% வாக்கு வங்கியை வைத்திருந்த காங்கிரஸ் கட்சி 2017 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குவீதம் வெறும் 1.7%. இதேபோலவே பகுஜன் சமாஜ் கட்சியும் இந்தத் தேர்தலில்  பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்கிறார்கள்.

பாஜகவுக்கு எதிரான மனநிலையைக் கொண்ட வாக்காளர்கள் இப்படி வேறு கட்சிகளிலிருந்து சமாஜ்வாதி நோக்கித் திரும்புவது அக்கட்சிக்குப் பலம் தரும். ஆனால், அது பாஜகவின் பலத்தை எந்த அளவுக்குக் குறைக்கும் என்பது கேள்வி. உதாரணமாக, உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் கட்சி எதுவானாலும் தலித்துகள் ஆதரவை அது பெற்றிருப்பது மிக முக்கியமான விஷயம் என்பது தேர்தல் வரலாறு. மொத்தம் 86 தொகுதிகள் தனித் தொகுதிகள் பட்டியலில் உள்ளன. பாஜக சென்ற முறை 300-க்கும் அதிகமான தொகுதிகளை வென்றபோது, அவற்றில் 70 தனித் தொகுதிகளும் உள்ளடக்கம். இதேபோலத்தான் முந்தைய தேர்தல்களில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வென்றபோதும் நிகழ்ந்தது. இந்த முறை சமாஜ்வாதி கட்சி தலித்துகளை உள்ளணைக்க சரியான கூட்டணியை அமைக்கவில்லை என்பது கவனத்துக்குரியதாக இருக்கிறது. பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்துடனான உறவு முறிந்தது அகிலேஷ் யாதவுக்கு ஒரு சறுக்கல்தான்.

இதையெல்லாம் கணக்கிடுபவர்கள் அகிலேஷ் குறைந்தது 100-150 தொகுதிகள் வெல்வார்; ஆனால், 200-250 ஆக அது மாறுமா என்று சொல்ல முடியாது என்கிறார்கள். ஆட்சி அமைக்க 203 தொகுதிகளில் வெல்ல வேண்டுமே!

வளர்ச்சி முகம்

கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உத்தர பிரதேசம் பின்தங்கிய மாநிலம் என்பது வெளிப்படை. கல்வி, சுகாதார, தொழில் கட்டமைப்புகளில் தொடங்கி மத நல்லிணக்கம், சமூக அமைதி வரையிலான பல விஷயங்களில் அதன் நிலை மோசம். ஆனால், 2017-2022 இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் அதற்கு முந்தைய ஆட்சிக் காலகட்டத்தை ஒப்பிட பல விஷயங்களிலும் வளர்ச்சி கண்டிருக்கிறது உத்தர பிரதேசம்.

யோகி முதல்வராகப் பதவியேற்பதற்கு முந்தைய 2015-16 காலம் தொடங்கி தேர்தலுக்கு முந்தைய 2020-21 நிதியாண்டு வரையில் கிடைத்த தரவுகளை சமீபத்தில் அகில இந்திய தரவுகளோடு ஒப்பிட்டு வெளியிட்டது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ்.

மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் தனிநபர் சராசரி வருமானம் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.47,118 (இந்தியா ரூ.94,797). இப்போது ரூ.65,431 (ரூ.1,28,829). பத்தாண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் மாணவியர் சதவீதம் ஐந்தாண்டுகளுக்கு முன் 32.9 (இந்தியா 35.7) ஆக இருந்தது. இப்போது 39.3% (இந்தியா 41%) ஆக அது உயர்ந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேல் படிப்பைத் தொடரும் பையன்கள் சதவீதம் ஐந்தாண்டுகளுக்கும் முன்னால் 42.2% (இந்தியா 47.1). இப்போது 48.6% (இந்தியா 50.2%). கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடனான வீடுகள் ஐந்தாண்டுகளுக்கும் முன்னால் 36.4% (இந்தியா 48.5%), இப்போது 68.8% (இந்தியா 70.2%).

மாநில அரசும் ஒன்றிய அரசும் இணைந்து பெரும் தொகையை உத்தர பிரதேசத்தில் இந்த ஐந்தாண்டுகளில் கொட்டியிருக்கின்றன. ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு, குடும்பங்களுக்கு விலையில்லா ரேஷன் பொருள்கள், விவசாயிகளுக்கு காலாண்டுக்கொருமுறை உதவித்தொகை, முதியோர் - ஆதரவற்றோருக்கு ஓய்வூதியம், கிராமங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கிடைத்திருக்கும் சாலை வசதிகள், விரிவாக்கப்பட்டிருக்கும் மின் கட்டமைப்பு, புதிய பள்ளிகள் - கல்லூரிகள் இந்த விஷயங்கள் எல்லாம் யோகிக்குப் பெரிய பலங்கள்.

பிம்ப அரசியல்

மோடி போலவே கறாரான நிர்வாகி என்று தன்னுடைய பிம்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் யோகி. பல சாலைகளில் வழிமறித்து, சுங்கம் வசூலிக்கும் அளவுக்கு ரௌடிகள் ராஜ்ஜிய கலாச்சாரம் உத்தர பிரதேசத்தில் உண்டு. யோகி அரசு அவர்களை என்கவுன்டர்கள் வழி கணிசமான அளவுக்குக் கட்டுப்பட்டுத்தியிருக்கிறது. அதேபோல, யோகி மீது தனிப்பட்ட அளவில் பெரிய ஊழல் புகார்கள் எதுவும் அரசியல் அரங்கில் இல்லை. 

இவை எல்லாவற்றையும்விட கல்யாண் சிங், மோடிக்கு அடுத்து, ‘இந்துக்களின் காவலன்’ என்ற பிம்பம் யோகிக்கு உருவாகியிருக்கிறது. இந்தப் பக்கத்தில் அயோத்தியில் ராமர் கோயில், காசி விசுவநாதர் கோயில் புனரமைப்பு; அந்தப் பக்கத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் இவற்றையெல்லாம் பாஜக பெரிய அளவில் இந்துக்கள் வாக்குகளைத் திரட்ட கருவிகள் ஆக்கிவருகிறது. 1989 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 13% வாக்கு வங்கியைக் கொண்டிருந்த பாஜக 1990-களில் அதை 53% அளவுக்கு உயர்த்த இப்படியான மதரீதியான அணி திரட்டலே காரணமாக இருந்தது என்பதையும், அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்குகள் குறைந்தபோதும்கூட வெறும் 10% அளவுக்கே அந்த இழப்பு இருந்தது. இன்றுவரை எந்த எதிர்க்கட்சியும் இந்துத்துவத்தை எதிர்க்கும் பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுக்கவில்லை. சொல்லப்போனால், ‘நாங்கள் பாஜகவைவிட இந்துக்களின் நண்பர்கள்’ என்று உரிமை கொண்டாடும் வகையிலும் அவை செயலாற்றிவருகின்றன. இவையெல்லாமும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்.

மூன்று சவால்கள்

உள்ளபடி யோகியை வீழ்த்தவல்ல பெரிய சவால்கள் மூன்றுதான்.

ஒன்று, கரோனா இரண்டாம் அலையில் அவருடைய அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் வெட்டவெளிச்சத்தில் சந்தி சிரித்தன. மயானங்களில் பிணங்கள் நாளெல்லாம் எரிக்கப்பட்டதும், ஆறுகளில் பிணங்கள் மிதந்ததும் உலகம் முழுக்க அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த விஷயத்தை உத்தர பிரதேச வாக்காளர்கள் நினைவில் கொண்டு வாக்களிப்பார்களா? இது முதல் சவால்.

இரண்டாவது, யோகியின் ஆட்சியில் தாக்கூர்கள் ஆதிக்கம் மிகுந்தது கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் ஊர் பேசும் விஷயமாக இருந்தது. பாஜகவின் முக்கியமான ஓட்டு வங்கியான பிராமண சமூகம் வெளிப்படையாக இந்த அதிருப்தியைப் பேசியது. இன்றைக்குப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பல தலைவர்கள் பாஜகவிலிருந்து விலகி சமாஜ்வாதி நோக்கிச் செல்வதற்கும்கூட அதுவே காரணம். தொடர்ந்தும் யோகி நீடித்தால், ஏனைய சமூகங்களை தாக்கூர் சமூகத்தினர் முழுமையாக விழுங்கிவிடுவர் என்ற அளவுக்கு உத்தர பிரதேசத்தில் பேச்சுகள் எழுகின்றன. மாநிலத்தின் பத்தில் ஒரு பங்கு மக்கள்தொகையைக்கூடப் பிரதிநிதித்துவப்படுத்தாத தாக்கூர்களிடம்தான் மாநிலத்தின் சரிபாதிக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. இதேபோல, ஜாட்டு சமூகத்தினரும் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட விதத்திலும், விவசாயிகள் போராட்டங்கள் அணுகப்பட்ட விதத்திலும் பெரும் அதிருப்தியில் உள்ளனர். லக்கிம்பூர் கேரி படுகொலை சம்பவத்தையும் அவர்கள் மறக்கவில்லை. இது இரண்டாவது சவால்.

மூன்றாவது, பாஜகவுக்குள் தன்னைத் தவிர வேறு யாரும் தலையெடுக்காமலும், எல்லோரையும் சந்தேகத்துடனும் அணுகிய யோகிக்குக் கட்சிக்குள் வலுத்திருக்கும் எதிர்ப்பு. இது நீறுபூத்த நெருப்பாக இருந்தாலும், இதன் வீச்சு அதிகம். யோகி யாரையுமே நம்புவதில்லை; தன்னைச் சுற்றி ஒரு சின்ன கூட்டத்தை வைத்துக்கொண்டு எல்லோரையும் ஆள முற்படுகிறார். இன்னொரு முறை அவர் முதல்வரானால், அடுத்தகட்ட தலைவர்களே இல்லாமல் ஆக்கிவிடுவார் என்கிற அளவுக்குப் பூசல்கள் இருக்கின்றன. இதை உணர்ந்தே, பாஜக தலைமையும் ‘பாஜக வென்றாலும் அடுத்த முதல்வராக யோகி தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உத்தரவாதம் இல்லை; கட்சி 2024-ல் ஆட்சியைத் தக்கவைக்க இந்த வெற்றி முக்கியம். ஆகையால், உழையுங்கள். தேர்தல் முடிவுக்குப் பின் இந்த விவகாரத்தை விவாதிப்போம்’ என்ற ஒரு பேச்சை உள்வட்டத்துக்குள் கிளப்பிவிட்டிருக்கிறது. ஆகையால், உள்ளுக்குள் புகையும் நெருப்பு மூன்றாவது சவால்.

பாஜகவின் நம்பிக்கை 

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்காரரான திவாரி மட்டுமே முதல்வராகத் தேர்தலைச் சந்தித்து, வெற்றி வாகை சூடி மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்தவர். 1976-77, 1984-85, 1988-89 ஆகிய மூன்று தருணங்களில் அவர் உத்தர பிரதேச முதல்வராக இருந்திருக்கிறார். உத்தராகண்ட் பிரிக்கப்பட்ட பிறகு 2002 - 2007 காலகட்டத்தில் உத்தராகண்ட் முதல்வராகவும் பதவி வகித்தார்.  அவர் நீங்கலாக எவரும் முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதே இல்லை. அதனால், ஆட்சியில் இருக்கும் முதல்வர்கள் பின்பற்றக்கூடிய மூடநம்பிக்கைகள் நிறைய உண்டு. நொய்டாவில் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர்கள் விரைவிலேயே பதவியிழப்பார்கள் என்பதும் அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை. யோகி நொய்டாக்களில் நடைபெறும் விழாக்களில் இதைப் பொருட்படுத்தாமல் பங்கேற்பதையே பாஜக வைத்திருக்கும் நம்பிக்கைக்கான சாட்சியமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் யோகி ஆதரவாளர்கள். அந்த அளவுக்கு நம்பிக்கையோடு இருக்கிறார்களாம்!

பாஜக பிரச்சாரத்தை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்று எவராவது நினைத்தால் அது பிழை. கடந்த ஆறு மாதங்களாகவே மோடியும் கட்சித் தலைவர்களும் உத்தர பிரதேசத்துக்கு அடுத்தடுத்து வருகின்றனர். இப்போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், தர்மேந்திர பிரதான், ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூர், தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டோரின் முற்றுகை தீவிரமாகி இருக்கிறது. தேசிய அளவில் உள்ள பாஜக இரண்டாம் நிலைத் தலைவர்களும் உத்தரப் பிரதேசத்தின் இரண்டாம் நிலைத் தலைவர்களும், ஆர்எஸ்எஸ் மற்றும் சங்கப் பரிவாரங்களின் தொண்டர்களும் மக்களிடம் தொடர்ந்து செல்கின்றனர். இவர்கள் எல்லோரையும்விட ஒன்றிய - மாநில அரசுகளின் அதிகாரப் பலமும் யோகிக்கு இருக்கிறது. இவ்வளவையும் தாண்டிதான் யோகியை அகிலேஷ் வீழ்த்த வேண்டும்.

ஆனால், யோகியின் மதரீதியான திரட்டலைக் களத்தில் சமூகரீதி அணித்திரட்டல்கள் வழி சமாஜ்வாதி கட்சி நன்றாகவே எதிர்கொள்ள வியூகம் அமைத்திருக்கிறது. இந்த விஷயம் எப்படிச் செயலாற்றுகிறது என்பதைத்தான் நாம் கவனித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது.

எப்படியும் யோகியை வீழ்த்துவது அவ்வளவு எளிதாக இல்லை; ஆனால், அகிலேஷ் அப்படி வீழ்த்தினால் அது பெரும் சாதனைதான்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வ.ரங்காசாரி

வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். விமர்சகர். ‘அருஞ்சொல்’ இதழின் துணை ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’யில் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க நிர்வாகியாகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்கவர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com


3

4

திருவாவடுதுறை ஆதீனம்பள்ளிக்கூடம்சேரன் செங்குட்டுவன்சி.வி.ராமன்தேர்தல் நிதி நன்கொடைப் பத்திரம்சமஸ் - குமுதம்வனவிலங்குவிக்டோரியா ஏரிsundar sarukkaiஇலவச மின்சார இணைப்புகள்காலந்தவறாமைவி.டி.சாவர்க்கர்முற்பட்ட சாதிகள்தமிழகக் காவல் துறைபுதிய ஆட்டம்பொது மருத்துவம்யோகேந்திர யாதவ் கட்டுரைசியுசிஇடி – CUCETவர்ண ஒழுங்குஏஞ்சலா மெர்க்கல்மூக்கு ஒழுகுதல்நியாய பத்திரம்மகாத்மா காந்திநிர்வாகக் கலாச்சாரம் நீதிபதி!பேரரசுகள்அயோத்திதாச பண்டிதர்ராஜாஜியின் கட்டுரைமுதல் பதிப்புகள்மிரியா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!