கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

மோடி - ஷாவுக்கு அடுத்து பாஜகவில் யார்?

டி.கே.சிங்
04 Jan 2023, 5:00 am
2

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குப் பிறகு பாஜக அதிகாரப் படிநிலையில் மூன்றாவது இடம் யாருக்கு?

இதென்ன கேள்வி, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாதான் என்று எவருமே சொல்லிவிடுவார்கள். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தலைவர்கள் வருவதைப் புகைப்படங்களில் காணுங்கள். மோடி முதலிலும் அவருக்குச் சில அங்குலங்கள் பின்னால் அமித் ஷாவும் சில அடிகள் பின்னால் நட்டாவும் ஒற்றை வரிசையில் வருவார்கள்.

கட்சிக் கூட்டங்களுக்கு நட்டா தலைமை வகிப்பார், பொதுக்கூட்டங்களில் பேசுவார், பாஜக முதல்வர்களுடனும் கட்சியின் உயர்நிலை நிர்வாகிகளுடனும் ஒன்றிய, மாநில அமைச்சர்களுடனும் ஆலோசனை கலப்பார். கட்சியின் அனைத்து நிர்வாக முடிவுகளும் நட்டா பெயரிலேயே எடுக்கப்படும் - ஒன்றிய அரசின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் குடியரசுத் தலைவர் பெயரில் எடுக்கப்படுவதைப் போலவே! எனவே, கட்சியில் மூன்றாவது இடம் யாருக்கு என்பது தேவையற்ற விவாதம்போலவே தோன்றும்.

நாலாவதாக யார்?

கட்சி நிர்வாகிகளில் நாலாவது இடத்தில் இருக்கும் பி.எல்.சந்தோஷ் கட்சி வட்டாரங்களில் இப்போது மிகுந்த கவனம் பெறுகிறார். வாஜ்பாய் – அத்வானி காலத்தில் முதல் இரண்டு இடங்கள் அவர்களுடையது. குஷாபாவ் தாக்கரே, பங்காரு லட்சுமண், ஜனா கிருஷ்ணமூர்த்தி, வெங்கைய நாயுடு என்று யார் தலைவராக இருந்தாலும் கட்சிக்காரர்களுடைய கண்ணோட்டத்தில் மூன்றாவது இடம் வேறு ஒருவருக்காகத்தான் இருந்தது. அது பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் அல்லது மாநில முதல்வர்களில் ஒருவர் என்றாக இருந்தது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பாஜகவின் புலப்படாத கரம்

சமஸ் | Samas 20 Dec 2022

மோடி – ஷா காலத்திலும் இதில் பெரிய மாற்றமில்லை. முதல் இருவரில் யாராவது ஒருவர் கட்சித் தலைவர் பதவியையும் வகிக்கும்போது மூன்றாவது இடம் முக்கியமின்றிப் போகிறது. இப்போது நாலாவது இடத்தில் கட்சியின் தேசிய பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் இருக்கிறார். கட்சி விவகாரங்களில் அதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அடிக்கடி விமானங்களில் செல்கிறார். முதல்வர்கள், அமைச்சர்கள், கட்சியின் மாநிலத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அவருடைய அழைப்பைத் தவறவிடாமல் ஏற்று சந்திப்பதுடன் அவர் சொல்வதை கவனமுடன் கேட்டுச் செயல்படுத்துகின்றனர்.

சென்ற மாதம் டேராடூனில் அவரை வரவேற்க கட்சி எம்எல்ஏ வந்தார். ஆனால், அவர் சொல்லியிருந்த ஆள், குறித்த நேரத்தில் மலர்க்கொத்து கொண்டுவராததால் சங்கடத்தில் நெளிந்தார். “நீங்கள் சோம்பேறியா, அல்லது கட்சி நிர்வாகமே சோம்பித்திரிகிறதா?” என்று பட்டென்று கேட்டுவிட்டார் சந்தோஷ். அனைவருமே தருமசங்கடத்தில் புன்னகைத்தனர். டெல்லியிலிருந்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி திரும்பிய மறுநாள், அவரையும் மாநில அமைச்சர்களையும் மாநில கட்சி நிர்வாகிகளையும் உடன் வைத்துக்கொண்டு மாநில அரசின் - கட்சி அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தார்.

அடுத்த நாள், மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், மாநில அமைச்சர்கள், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றிய அரசு அமைச்சர்கள், மாநிலத்தின் மூத்த கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் ஆட்சி, கட்சி நிலைமை குறித்து ஆய்வுசெய்தார். இத்தகைய கூட்டங்களில் பங்குகொள்ள வரும் எவரும், கையில் செல்போன் வைத்திருக்கக் கூடாது என்பது கட்டாயம். சாலை வசதிகளும் தகவல்தொடர்பும் இல்லாத இடங்களுக்கு கட்சி நிகழ்ச்சிகளுக்காக நிர்வாகிகளை குழுவாக அனுப்பும்போது, மோடி இதைக் கட்டாயமாக்குவார்.  

கடந்த மாதம் இமாசலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில் மாநில அரசின் செயல்கள் குறித்து அமைச்சர்களைத் தனித்தனியாக அழைத்துப் பேசினார் சந்தோஷ். முதல்வர்களிடமும் அமைச்சர்களிடமும் என்ன கூறுவார் என்பதை ஊகித்துக்கொள்ளலாம். ஷாரூக் கான் நடித்த ‘சக் தே இந்தியா’ திரைப்படம் சந்தோஷுக்கு மிகவும் பிடிக்கும். பன்னிரண்டு முறைக்கும் மேல் பார்த்துவிட்டார். அதில் ஷாரூக் கான் பேசும் ஒரு வசனத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.

மிகவும் கசப்பான முடிவுகளை யாரிடமாவது தெரிவிக்க வேண்டுமென்றால் கட்சிக்குள் இவரைத்தான் மோடி பயன்படுத்திக்கொள்கிறார். அப்படித்தான் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியையும் திரிபுரா முதல்வர் விப்லவ தேவையும் பதவியிலிருந்து விலகச் சொல்லி கேட்டுக்கொண்டார். கடந்த முறை ஒன்றிய அமைச்சரவையை மோடி மாற்றியமைத்தபோது, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு, ‘நீங்களும் அமைச்சர்கள் ஆக வேண்டுமென்றால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் டெல்லி வந்து சேருங்கள்’ என்று கட்டளையிட்டார் சந்தோஷ்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

தேவனூரா மகாதேவா: ‘உண்மையான மனிதர்’

யோகேந்திர யாதவ் 29 Jul 2022

கட்சியின் அமைப்புகளுக்கான பொதுச் செயலாளர்களாக பாரதிய ஜனசங்க காலத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய, சுந்தர் சிங் பண்டாரி ஆகியோரும் அதுவே பாரதிய ஜனதா என்று புதிய அவதாரம் எடுத்த பிறகு கே.என். கோவிந்தாச்சாரி, சஞ்சய் ஜோஷி, ராம் லால், நரேந்திர மோடி ஆகியோரும் இப்பதவியை வகித்துள்ளனர். இந்தப் பதவியே அவர்களுக்கு கட்சிக்குள் செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் அளித்தது. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தைச் சேர்ந்த முழு நேரத் தொண்டர்தான் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார். கட்சிக்கு தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தன்னுடைய தொண்டரை இப்படி, அயல்பணிக்காக ஒப்படைத்துவிடும். இப்படி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறவர் கட்சித் தலைவரிடம்தான் தனது அறிக்கையை நேரடியாக அளிப்பார்.

ஆனால், அதே அறிக்கையை ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலருக்கும் (சம்பார்க் அதிகாரி) தருவார். இப்போது அப்பொறுப்பில் இருப்பவர் அருண் குமார். அவர்தான் பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று சந்தோஷ் கவனித்துக்கொண்டே வருகிறார். தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும் இடத்தில் மட்டும் அவர் தலையிடுகிறார். கொள்கைகள், தொலைநோக்கு இலக்கு ஆகியவற்றிலிருந்து கட்சியோ ஆட்சியோ விலகிச் செல்வதைப்போலத் தெரிந்தால் அப்போது நிச்சயம் குறுக்கிட்டு சுட்டிக்காட்டுகிறார். கட்சி அமைப்புக்குள் ஏதேனும் முரண்பாடு, சுணக்கம், விலகல் இருந்தாலும் அவற்றைத் தீர்க்க உதவுகிறார். கட்சி அமைப்பிலும் ஆட்சியிலும் சரியான இடத்துக்கு சரியானவரை நியமிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.

செல்வாக்குள்ள சந்தோஷ்

பொதுவாக கட்சியின் அமைப்புகளுக்கான பொதுச் செயலாளர் அதிகாரம் மிக்கவர்தான். ஆனால், சந்தோஷுக்கு, மோடிக்குகூட இருந்திராத செல்வாக்கு நிலவுகிறது. சந்தோஷுக்கு முன்னால் பொதுச் செயலாளர்களாக இருந்தவர்கள் வெளியுலகுக்கு அதிகம் தெரியாதவர்கள். இதற்கு உதாரணமாக ஆர்எஸ்எஸ் மூத்த தொண்டர் ஒரு வேடிக்கையான நிகழ்வை நினைவுகூர்ந்தார். சஞ்சய் ஜோஷி இப்படி பொதுச் செயலாளராக இருந்தபோது டெல்லியிலிருந்து ராஞ்சிக்கு ‘ஏ.சி. 3 அடுக்கு’ ரயில் பெட்டியில் சென்றுகொண்டிருந்தார். அவருடைய உதவியாளர் அடிக்கடி, “ஐயா அத்வானி அழைக்கிறார்”, “பிரமோத் மகாஜன் அழைக்கிறார்” என்று சொல்லிக்கொண்டே கைப்பேசியை அவரிடம் கொடுத்துக்கொண்டிருந்தார். அதே பெட்டியில் படுத்துக்கொண்டிருந்த சக பயணி ஒருவர், “இதென்னெய்யா பெரிய இம்சையா போச்சு – நீ அவ்ளோ பெரிய ஆள்னா எதுக்குய்யா ஏசி 3 டயர் கோச்சுக்கு வந்தே?” என்று கோபத்துடன் சலித்துக்கொண்டார். அதைக் கேட்டு சஞ்சய் ஜோஷி புன்னகைத்ததோடு சரி.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

இந்துத்துவத்தின் இத்தாலிய தொடர்பு

ராமச்சந்திர குஹா 07 Jun 2022

கடந்த காலங்களில், தேசிய பொதுச் செயலாளர் தலையிட வேண்டிய நிலை வந்தால் அவர் அந்தந்த மாநில பாஜக பொதுச் செயலாளரைத் தொடர்புகொண்டு, தேவைப்பட்டதை பிறர் அறியாமல் செய்துவிடுவார். கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களைச் சந்திப்பதைக்கூட பிறர் அறியாமல் செய்வார். பொதுவெளியில் எதைப்பற்றியும் விமர்சிக்க மாட்டார். சந்தோஷ் வித்தியாசமானவர். எந்த விஷயம் பற்றியும் – ஏன் எல்லாவற்றைப் பற்றியும் - ட்விட்டரில் (சுட்டுரை) உடனே கருத்தைப் பதிவுசெய்துவிடுகிறார். கட்சியை விமர்சிப்பவர்களையும் கட்சிக்கு மாற்றுக் கருத்து பதிவிடுபவர்களையும் சும்மா விடுவதில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸைக்கூட ஒரு கருத்துக்காக, காட்டமான பதில் கருத்தை வெளியிட்டார். “நாங்கள் நடுநிலையாக இருக்க வேண்டுமென்று முயன்றாலும், நீங்கள்தான் சீண்டி ஏதாவது ஒரு நிலையை எடுத்துவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்கள்” என்று பதிவிட்டார்.

ஆர்எஸ்எஸ்காரர் பொதுச் செயலாளராக இருப்பது வழக்கம்தானே இப்போது என்ன அதில் மாற்றம்? முதலாவது அவருடைய தனிப்பட்ட ஆளுமை. பொம்மாரபேட்டு லட்சுமிஜனார்த்தன சந்தோஷ் (பி.எல். சந்தோஷ்) கர்நாடக மாநிலத்தவர், வேதியல் பொறியியல் படித்தவர். வயது 55. முதல்வராக இருந்த எடியூரப்பாவைக் கட்டாயப்படுத்தி ஓய்வுபெறச் செய்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. மோடியைப் போலவே சமூக ஊடகங்களில் ஆர்வமுள்ளவர். உயர் பதவிக்கு வரும் ஆசையும் இருக்கிறது என்று கட்சிக்குள் பலர் பொருமுகின்றனர்.

அதேசமயம் கட்சியில் மைசூரு எம்.பி.யான பிரதாப் சிம்ஹா, பெங்களூரு தெற்கு எம்.பி.யான தேஜஸ்வி சூர்யா போன்றவர்களைப் பெரிய பொறுப்புகளுக்குத் தயார் செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு அரசியல் பதவியாசை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொண்டதில்லை. ஆர்எஸ்எஸ்ஸில் பிரச்சாரக்காக இருந்த ஒருவர் பிரதமராகவும், இன்னொருவர் ஹரியாணாவில் முதல்வராகவும் இருக்கும்போது அடுத்த பிரச்சாரக்குக்கும் அப்படியொரு ஆசை வருவதில் தவறென்ன? ‘சித்தாந்த காப்பாளருக்கும்’, ‘அரசியல் வாரிசுக்கும்’ இடையிலான எல்லைக்கோடு மங்கிவிட்டது.

மோடியே பிரதமராகவும் தாய் அமைப்பின் பிரதிநிதியாகவும் ஒரே சமயத்தில் விளங்குகிறார். இந்த நிலையில் தாய் அமைப்பின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் யதார்த்தத்தை உணர்ந்து, ஆர்எஸ்எஸ் தலைமைக்கு அறிக்கை தருவதற்குப் பதிலாக நேரடியாக பிரதமருக்கே கட்சி பற்றிய தகவல்களை அளித்துவிடுகிறார். இதுவும் அவரைப் பார்த்து மற்றவர்கள் அச்சப்படக் காரணம். இதனாலும் அவர் அதிகாரம் மிக்கவராகிவிட்டார். தனக்கு அதிகாரமும் செல்வாக்கும் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தவும் அவர் தயங்குவதில்லை. இதற்காக அமைப்பில் யாராவது மனம் புழுங்கினால் புழுங்கிக்கொள்ளட்டும் என்று கவலைப்படாமல் விட்டுவிடுகிறார். 

© theprint.in

 

தொடர்புடைய கட்டுரைகள்

பாஜகவின் புலப்படாத கரம்
தேவனூரா மகாதேவா: ‘உண்மையான மனிதர்’
இந்துத்துவத்தின் இத்தாலிய தொடர்பு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

2






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   2 years ago

என் பார்வையில் உப்பு சப்பில்லாத கட்டுரை. அருஞ்சொல்லின் தரத்துக்கு இது போன்றவை தேவையில்லை.

Reply 0 0

Ganeshram Palanisamy   2 years ago

இரண்டாவது பாதி கட்டுரை படிக்கும்போது முதல் பாதியை மறந்தேவிட்டேன்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

பக்கவாட்டு பணி நுழைவுஏளனம்என்.ஐ.ஏ. அருஞ்சொல் தலையங்கம்பெருநிறுவனம்கரோனா வைரஸ்எதிர்காலம்மழை குறைவுதேசிய கட்சிகள்வக்ஃப் (திருத்த) மசோதா 2024இஸ்லாமியர்கள்கரிகாலச் சோழன் பொங்கல்ஆண்கள் ஏன் 'அலைஞ்சான்'களாகவே இருக்கிறார்கள்?!இன்னமும் மீட்சி பெறவில்லைஆர்.என்.சர்மாகடலூர்ராம்நாத் கோவிந்த்புதிய மூன்று சட்டங்கள்பசுமைப் புரட்சிகெட்டதுஇளையோருக்கு வாய்ப்புபொருளாதார தாராளமயம்பருவகால மாறுதல்கள்தமிழ்நாட்டின் மொழிக் கொள்கைநோயாளிஅதானி: காற்றடைத்த பலூன்வீரப்பன்சாதிப் பாகுபாடுபழைய கேள்விவடக்கு: மோடியை முந்தும் யோகிகடைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!