கட்டுரை, கலாச்சாரம், வரலாறு, கல்வி, அறிவியல் 15 நிமிட வாசிப்பு

அறிவியல் எனும் ஜன்னல் திறந்தே இருக்கட்டும்

த.வி.வெங்கடேஸ்வரன்
28 Feb 2023, 5:00 am
3

ம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் சடங்கு ஒன்று தென்னிந்தியத் திருமணங்களில் உண்டு. “சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான வசிட்டர் (மிஸார்) - அருந்ததி (அல்கோர்) ஜோடியை விண்மீன் இரட்டையர்கள் என்று சொல்லலாம். பொதுவாக ஜோடி விண்மீன்களில் ஒன்று நிலையாக மையத்தில் நிற்க மற்றது அதைச் சுற்றிச் சுழலும்; ஆனால், வசிட்டர் - அருந்ததி விண்மீன்  ஜோடி இரண்டும் ஒன்றை ஒன்று சமமாகச் சுற்றிவருகிறது. வெறும் சிறு ஒளிப்புள்ளியாக இருக்கும் இந்த இரட்டை விண்மீன்களை இனம் கண்டதோடு மட்டுமல்ல, அவை தட்டாமாலை சுற்றுவதுபோல ஏன் ஒன்றை ஒன்று சுற்றுகிறது என்று வேத ரிஷி முனிகள் கண்டுபிடித்தார்கள். வியப்புதான் இல்லையா? மேலும் அந்த நிகழ்வைக் கொண்டு திருமணம் செய்யும் ஆணும் பெண்ணும் சமமாக ஒருவருக்கு ஒருவர் சமமாக இணைந்து வாழ வேண்டும் எனும் பெண்ணிய கருத்தைக் கூறுவதுதான் அருந்ததி பார்ப்பது; அது ஏதோ வெறும் பொருளற்ற சடங்கு இல்லை” எனக் கூறும் காணொளி ஒன்றை எனக்கு அனுப்பினர் ஊடக நண்பர் ஒருவர். 

இது உண்மையா? பார்ப்போம்!

முதல் செய்தி: பூமியிலிருந்து சுமார் 81.7 ஒளியாண்டு தொலைவில் அருந்ததி (அல்கோர்) உள்ளது. ஆனால், வசிட்டர் (மிஸார்) 82.9 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. எனவே, இரண்டும் அசல் ஜோடி அல்ல. பார்வைக்கு இரண்டும் ஒரே திசையில் இருப்பதால் ஜோடிபோல நாடகம் ஆடும் விண்மீன்கள்தான் இவை.  இதுபோன்ற போலி ஜோடி விண்மீன்களைத் ‘தோற்றமயக்கம் தரும் ஜோடி’ என வானவியலில் அழைப்பார்கள். 

உண்மையில், எப்சிலன் லைரே போன்ற அசல் ஜோடி விண்மீன்கள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு ஒன்றையொன்று சுற்றுகின்றன. இவை அசல் ஜோடி விண்மீன்கள். அல்ஜிடி போன்ற தோற்றமயக்க ஜோடிகள் இடையே ஒன்றுக்கும் மற்றொன்றுக்கு இடையே தொடர்பு ஏதும் இல்லை. ஆப்டிகல் பைனரி நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ளாது, இரண்டு விண்மீன்களும் வெவ்வேறு தொலைவுகளில் இருந்தாலும் பார்வைக் கோட்டில் ஒரே திசையில் அமைவதால் ஏற்படும் தோற்றமயக்கம் காரணமாக ஜோடி போன்ற தோற்றத்தை நமக்குத் தரும். 

எனவே, வசிட்டரும் (மிஸார்) அருந்ததியும் (அல்கோர்) இணைபிரியா ஜோடி அல்ல. தொலைவில் ஒரே திசையில் இருக்கும் உயரமான இரண்டு மலைகள் பார்வைக்கு இணைந்து மலைத்தொடர் போன்ற தோற்றமயக்கம் ஏற்படுத்துவதுபோல வசிட்டர் - அருந்ததி விண்மீன்கள் போலி ஜோடி. 

இரண்டாவது செய்தி: ஒரு ஒளி புள்ளியாக வேறும் கண்களுக்குப் புலப்படும் அருந்ததிக்கு (அல்கோர்) உள்ளபடியே அல்கோர்-பி எனும் அசல் ஜோடி உள்ளது. வேறு வார்த்தையில் கூறினால் அருந்ததியின் அசலான இணை ஜோடி வசிட்டர் விண்மீன் அல்ல; அல்கோர்-பி எனும் ரகசிய ஜோடி. 

மூன்றாவது செய்தி: பூமி சூரியனைச் சுற்றுகிறது என எளிமையாகக் கூறுகிறோம். ஆனால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிறைமையம் என்ற ஒரு புள்ளி உள்ளது. அந்தப் புள்ளியைத்தான் பூமி சுற்றிவருகிறது; சூரியனும் அதே புள்ளியைச் சுற்றிவருகிறது. வியாழன் கோளுக்கும் சூரியனுக்கும் இடையே இதுபோன்ற நிறை மையம் உள்ளது. அதனையும் சூரியன் சுற்றும். அதாவது, ஆட்டுக்கல்லில் குழவி முன்னும் பின்னும் ஆடுவதுபோல இடுப்பை அசைத்து சூரியனும் தள்ளாடும்.

அதேபோல பூமியும் நிலவும் அவற்றின் பொது நிறை மையத்தைத்தான் சுற்றிவருகிறது. எல்லா அசல் ஜோடி விண்மீன்கள் என்றாலும் இதே நிலைதான்; இரண்டும் ஒன்றை ஒன்று பொது நிறை மையப் புள்ளியைச் சுற்றித் தட்டாமாலைபோல்தான் சுழலும். வானவியலில் இந்தப் புள்ளியைப் பேரிசென்டர் (கனமையம்) என்று அழைப்பார்கள். எனவே, வசிட்டரும் அருந்ததியும் அசல் ஜோடி என்றாலும்கூட தட்டாமாலை போலச் சுற்றுவது அவற்றின் சிறப்பு குணம் இல்லை. எல்லா ஜோடி விண்மீன்களுக்கும் இருக்கும் குணம்தான். 

நான்காவது செய்தி: பூமியிலிருந்து பார்க்கும்போது அருந்ததி அருகிலும் வசிட்டர் தொலைவிலும் நிலைகொள்கிறது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்போம்

ஜோசப் பிரபாகர் 01 Feb 2023

உருட்டுகளின் உலகம் 

சமூக வலைத்தளம் முழுமையும் அழகியல் நிரம்பிய கோலம் போடுவதை ஏதோ எறும்புக்கு உணவு தர ஏற்படுத்திய பழக்கம் எனவும், தண்ணீர் கொட்டுவதைப் பார்ப்பதும் தண்ணீரின் இசையைக் கேட்பதும் மூளைக்கு அதிக ரத்தத்தைச் செலுத்தி மனதை அமைதிப்படுத்தி உடல் சோர்வை நீக்குகிறது என்பாதால்தான் கையில் நீரைவிட்டுச் சடங்குகள் செய்கிறோம் எனவும் கதையளபுக்கள் நிரம்பி வழிகின்றன. அருந்ததி பார்க்கும் சடங்குக்கான விளக்கங்களும் இப்படித்தான்!

வட மொழிதான் செயற்கை நுண்ணறிவு கணினி நிரலாக்கத்தை உருவாக்க உகந்த மொழி என்று நாசா கூறுகிறது என்று வேறொரு உருட்டு வலைதளங்களில் உலாவுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 24,821 பேர் சம்ஸ்கிருதம் தமது தாய்மொழி என இந்தியாவில் பதிவுசெய்துள்ளார்கள்; ஆனால், உலகில் எந்த ஒரு கணினியும் சம்ஸ்கிருத மொழியில் கணினி நிரல்களைக் கொண்டு இயங்கவில்லை. உள்ளபடியே இந்த மொழிதான் கணினியியலுக்கு பொருந்திய மொழி என்றால் இன்று லாபம் கருதி எல்லா கணினி நிறுவனங்களும் போட்டி போட்டுத் தயார்செய்து இருப்பார்கள் அல்லவா? 

ஆதிசங்கரர் தனது அத்வைதக் கொள்கையை நிலைநிறுத்த எங்கேயும் என் கருத்து அறிவியலோடு இணைந்துபோகிறது என அறிவியலையும் அவரது தத்துவத்தையும் குழப்பவில்லை. அத்வைதத்தை மறுத்து ராமானுஜர் தன் விசிட்டாதுவைத தத்துவத்தை முன்வைத்தபோது ஆதிசங்கரர் தத்துவத்தைவிட எனது தத்துவமே அறிவியல்பூர்வமானது எனத் தருக்கம் செய்யவில்லை. இந்த இரண்டு தத்துவங்களையும் புறந்தள்ளி பசு-பதி தத்துவத்தை நிலைநாட்டச் சைவம் அறிவியலைத் துணைக்கு அழைக்கவில்லை. ஆனால், சமீப காலத்தில் பற்பல ‘குரு’க்கள் தமது கருத்துகளும் அறிவியல்தான் என வலியுறுத்துகிறார்கள். "மகா சிவராத்திரி வெறும் ஒரு மத விழா அல்ல; அது கிரகத்தின் வானியல் நிலையுடன் தொடர்புடையது" என்கிறார் ஒரு பிரபல குரு. சந்திரமான நாட்காட்டியோடு தொடர்புடைய மகாசிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் அதே வானியல் நிலையில் நிகழ்வது இல்லை. 

மேலும் பூமியின் விட்டம் 12,000 ச.கி.மீ. ஆனால், நமது உயரம் வெறும் 0.002 கி.மீ. அகலம் 0.0005 கி.மீ. எனவே நிற்கும் நிலை, உட்கார்ந்து இருக்கும் நிலை, படுத்து உறங்கும் நிலை எதுவும் நடைமுறையில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.  இப்படிபட்ட ‘குரு’க்கள் எனது தத்துவம் நவீன அறிவியல் கூறுகிறது; ஒவ்வொரு சடங்கின் பின்னும் அறிவியல் இருக்கிறது என்று போலி அறிவியல் முலாம் பூசி சிங்காரம் ஒப்பனை செய்கிறார்கள். 

தமிழராக இருந்தால் தமிழ் மொழிதான் உலகத்தின் ஆதி மொழி; சிறப்பு வாய்ந்த மொழி எனவும்; சிலர் அவர்களது பண்பாட்டு அரசியலை ஒட்டி வட மொழிதான் உசத்தி எனவும் தம்மைத் தாமே உயர்த்திப் பேசுவது ஏன் நமக்கு போதை தருகிறது? புனிதம் என்று கருதுவதும், உணர்வுபூர்வமாக நாம் விரும்பும் பழக்க வழக்கங்களும் ‘அறிவியல்’ என்று வாதிடும் போலி அறிவியல் கருத்துகள் ஏன் நம்மைப் புளகாங்கிதம் அடையச் செய்கின்றன? அபத்தமாக பண்டைய புராண கருத்துக்களுக்கும் சடங்குகளுக்கும் வலிந்து போலி அறிவியல் பூச்சு செய்யும் மனநிலையின் பின்னுள்ள பண்பாட்டு உளவியலை அறிதல் அவசியம். 

வியப்பும் மதிப்பும்

பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இந்தியா, சீனா போன்ற கீழை நாடுகளுக்குப் பயணித்த ஐரோப்பிய வர்த்தகர்களும் சிந்தனையாளர்களும் இந்தியத் துணைக் கண்ட பண்பாடுகள் உட்பட கீழை அறிவுப் பாரம்பரியத்தை வெகுவாக வியந்து பாராட்டினர்.  பிரெஞ்சு அறிஞர் லெ ஜென்டிலை எடுத்துக்கொள்வோம். சுமார் நூறாண்டுகள் இடைவெளியில் வெள்ளிக்கோள் சூரியனின் முகத்தின் நேரே செல்லும். அந்தச் சமயத்தில் சூரியனின் முகத்தில் கரும் போட்டு நகர்வதுபோலத் தென்படும்.

பூமியின் எல்லாப் பகுதியிலும் இந்த மறைப்பைக் காண இயலாது. 1769ஆம் ஆண்டு நிகழவிருந்த இந்த அறிய நிகழ்வைக் காணவும் அதன் மூலம் சூரியனின் தொலைவை அளக்கும் நோக்கத்துடனும் லெ ஜென்டில் புதுவைக்குப் பயணித்தார். அந்தோ பரிதாபம்; அதுவரை பளிச் என்று இருந்த வானத்தில் மறைப்பு நிகழ்வு துவங்கும்போது இருண்ட மேகம் வந்து வானத்தை மூடிவிட்டது. பல ஆண்டு காலம் கடலில் அபாயகரமான பயணம் செய்து இந்தியா வந்த அவரின் கனவு தவிடுபொடியாகியது. தாயகம் திரும்புகையில் வழியில் புயலில் சிக்கி கப்பல் அழிந்துவிட அவர் மடிந்துவிட்டார் என பிரான்ஸில் கருதிவிட்டனர்.

லே ஜென்டிலுடைய மனைவி வேறொருவரை மறுமணம் புரிந்துகொண்டுவிட்டார். அவரது சொத்து எல்லாம் உறவினர்கள் பாகப் பிரிவினை செய்துகொண்டுவிட்டனர். எங்கோ கண்காணாத தீவில் தப்பிப் பிழைத்த லெ ஜென்டில் பிரான்ஸ் சென்று சேர்ந்தபோது அவரது ஆவிதான் வருகிறது என உற்றார் உறவினர்கள் ஓடி ஒளிந்துகொண்டார்கள். 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

பொங்கல் நாள் மாறிய மர்மம்

த.வி.வெங்கடேஸ்வரன் 21 Jan 2023

புதுவையில் தங்கி தனது ஆய்வுக்கான தொலைநோக்கியை நிறுவ முயற்சி செய்துவந்த காலத்தில், இந்தப் பகுதியில் நிலவிய வானவியல் அறிவை அறிந்துகொள்ள முயற்சி செய்தார் லெ ஜென்டில். நானா முத்து எனும் பாரம்பரிய சோதிடரைத் தொடர்புகொண்டு உரையாடல் செய்தார். தமிழ்நாட்டில் நிலவிய கணிப்பு முறையைப் பரிசோதனை செய்யும் நோக்கில் 1765 ஆகஸ்ட் 30 அன்று நிகழ்ந்த சந்திர கிரகணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என இருவரும் முயற்சி செய்தனர். வெறும் நாற்பத்தி ஐந்து நிமிடத்தில் நானா முத்து தமிழ் கணிப்புமுறைப்படி கணித்துவிட வியப்பில் ஆழ்ந்தார்.

ஐரோப்பிய முறையில் அவர் கணிக்க பல மணிநேரம் செலவிட வேண்டிவந்தது. மேலும் அசலாக எவ்வளவு காலம் கிரகணம் நிகழ்ந்தது என்பதை உற்றுநோக்கி கணிதம் செய்தார். அதனை அன்றைக்கு ஐரோப்பிய கணிப்பு முறையாக இருந்த டோபியாஸ் மேயர் அட்டவணையோடும் தமிழ் கணிப்பு முறையோடும் ஒப்பிட்டுப் பார்த்தார். ஐரோப்பிய அட்டவணையில் உள்ள தரவு 1 நிமிடம் 8 வினாடிகள் பிசகு கொண்டிருத்தபோது தமிழ் வானியல் கணிப்பு வெறும் 40 வினாடிகள் பிழை கொண்டதாக இருந்தது என ஜென்டில் பதிவுசெய்கிறார். சிறப்பாகக் கணிக்கும் முறையைக் கற்க முனைந்து அதில் தேர்ச்சியும் பெற்றார். 

மேட்டிமை மனப்பான்மை

பதினாறு, பதினேழு நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் கலீலியோவுக்கு பிந்தைய நவீன அறிவியல் எழுச்சி நிலையில் இருந்தது. அந்தக் காலத்தில் உலகம் முழுவதும் கடல் பயணம் செய்த ஐரோப்பிய அறிஞர்கள் ஆங்காங்கே நடப்பில் இருந்த பண்பாடுகளை முற்றிலும் ஒதுக்கித் தள்ளவில்லை.

பற்பல பண்பாடுகளில் உள்ள அறிவைச் சேகரித்து கற்க முனைந்தனர். ஆனால், காலனியாதிக்கம் வேரூன்றி உலகம் முழுவதும் பரவிய பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனிய இறுக்கம் கூடியபோது ஐரோப்பிய ஆதிக்கப் பிரிவினரின் மனநிலை மாறியது. பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளைத் தாம் ஆட்சிசெய்வதை எப்படி நியாயம் கற்பிப்பது என்ற கேள்வி அவர்கள் முன்னே எழுந்தது. மன வளர்ச்சியிலும் பண்பாடு வளர்ச்சியிலும் பக்குவம் பெறாத நிலையில் உள்ள காலனி பகுதி மக்களை அறிவுபெறச் செய்து உயர்த்திவிடும் உன்னத பணியே காலனியம் என்ற வாதத்தை முன்வைத்தனர்.

ஐரோப்பிய அறிவுசார், சமூக மற்றும் கலாச்சார தாக்கங்கள் கொண்டு மட்டுமே நவீன அறிவியல் ஐரோப்பாவில் உருவானது என இந்தச் சிந்தனை போக்கு வலியுறுத்தியது. மேலும் ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள கலாச்சாரங்களின் பங்களிப்புகளையும் முக்கியத்துவத்தையும் முழுமையாக ஓரங்கட்டி நவீன அறிவியல் உள்ளபடியே ‘மேலை அறிவியல்’ என உரிமை கொண்டாடியது. 

“இந்திய - அரேபிய இலக்கியத்தின் ஒட்டுமொத்த சாரத்தைவிட ஐரோப்பிய நூலக அலமாரியின் ஒரே ஒரு அடுக்கு மேன்மையானது. கவிதைகள் போன்ற கற்பனைப் படைப்புகளில் ஓரளவு சிறப்பு இருக்கலாம், ஆனால் கற்பனை படைப்புக்களை விடுத்தது உலக மெய்மைகள் குறித்த அவரது படைப்புக்களை ஒப்புநோக்கும்போது அளவிடமுடியா உயரத்தில் ஐரோப்பிய உன்னதம் உள்ளது” எனச் செருக்குடன் இந்திய பண்பாட்டைச் சிறுமை செய்து, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், கல்விக் கொள்கை போன்றவற்றை வடிவமைத்த தாமஸ் பாபிங்டன் மெக்காலே 1835இல் கூறியது இந்தப் பார்வையின் தொடர்ச்சியே ஆகும். 

இந்தியத் துணைக் கண்டம் போன்ற பண்பாடுகளைச் சீர் செய்து அந்தப் பகுதியில் உள்ள மக்களை உயர்த்தித் தூக்கிவிடும் பணியைத் தமது காலனிய அரசுகள் செய்வதாகப் புனைவு செய்து காலனிய சுரண்டலை திரைபோட்டு மறைப்புசெய்தனர். எனவே, காலனிய மக்களின் உயர்வுக்குப் பாடுபடுகிறோம் என்பதை நிலைநாட்டப் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகளைத் திறக்க வேண்டிவந்தது. இதன் தொடர்ச்சியாக நவீன கல்வி பெற்ற பிரிவு இந்தியாவின் பல பாகங்களில் உருவாகியது.

தேர்தல் மூலம் நாடாளுமன்றத்தை உருவாக்கி ஆட்சிசெய்யும் ஆங்கிலேயர்கள் அதே உரிமையை தமக்கு ஏன் வழங்கக் கூடாது, எனக் கேள்வியை வளர்ந்துவரும் படித்த நடுத்தர வர்க்கம் எழுப்பியது. அதேபோல இதுவரை இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவாக இருந்த பகுதி மக்கள் தாமும் மற்றவர்களுக்கு சமமானவர்கள்தான் என சம உரிமை கோரும் போக்கும் எழுந்தது. போதிய அறிவு வளர்ச்சி, மனப் பக்குவம் மற்றும் ஜனநாயக முறையில் ஆட்சிசெய்யும் திறன் அற்றவர்கள் எனச் சிறுமை செய்த காலனிய கருத்தாடலை எதிர்கொள்ள வேண்டிவந்தது. 

பிற்போக்குவாதம்

சிறுமை செய்யும் காலனிய கருத்தாடலை எதிர்கொள்ளும் விதமாக அன்று வளர்ந்துவந்த படித்த பிரிவினரிடையே மூன்று முக்கிய கருத்துப் போக்கு ஏற்பட்டது. முதல் கருத்து நிலை சரணாகதி. இந்தியத் துணைக் கண்ட பண்பாடுகளில் போற்றுதலுக்குரிய எந்த அம்சமும் இல்லை எனக் காலனிய கருத்துநிலைக்கு சரணாகதி அடைந்து மேலை பண்பாட்டை விமர்சனம் இன்றி போற்றுவது.  

எல்லாம் வேதத்தில் இருக்கிறது; நவீன அறிவியல் கருத்துக்களை பண்டைய ரிஷி முனிகள் அறிந்திருந்தனர் எனப் போலி பெருமிதம் பேசும் பிற்போக்குவாதம்தான் இரண்டாவது பார்வை. வானியற்பியலின் தந்தை எனப் போற்றப்படும் மேகநாத் சாஹா தனது கண்டுபிடிப்பை ஆசையாய் விளக்கிக் கூறும்போது எரிச்சலூட்டும்படி கூட்டத்தில் ஒருவர் ‘இதுதான் வேதத்தில் இருக்கிறதே’ எனக் கூறிக்கொண்டிருந்தார். எல்லா அறிவியல் முன்னேற்றங்களையும் பண்டைய ரிஷி முனிகள் கண்டுபிடித்துவிட்டனர் எந்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் புதுமை இல்லை என்ற பண்பாடு உளவியல் போக்கு காலனிய சிறுமை போக்குக்கு எதிர்வினையாக உருவானது. 

காலனி சூழலில் தமது பண்பாட்டை உயர்த்திப் பேச வேண்டிய உளவியல் கட்டாயம் உருவானது என்றால் விடுதலை பெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் ஏன் தொடர்கிறது? இந்தியா போன்ற காலனி நாடுகள் அரசியல் விடுதலை அடைந்துவிட்டாலும், காலனிய பண்பாட்டுத் தாக்குதல் முடிந்துவிடவில்லை. நவகாலனிய சூழலில் இன்றும் உலக அரங்கில் ஐரோப்பிய மேட்டிமைவாதப் போக்கு உயிர்ப்போடு வலுவாக உள்ளது.

காலனிய ஆதிக்கம் தொட்டு மனித அறிவு வளர்ச்சி வரலாற்றில் சமீபக்காலம் வரை சர்வதேச அரங்குகளில் இந்த ஐரோப்பிய மையவாதம் செல்வாக்குடன் உள்ளது. இந்தச் சூழலில் கீழை பண்பாடுகள் தமது சிறப்பைச் சுட்டிக்காட்டி பேச வேண்டிய நிலை இன்றும் உள்ளது. இன்றும் பிற்போக்குவாதம் உயிர்ப்போடு இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். 

இது தவிர உள்சூழல் ஒன்றும் பிற்போக்குவாததுக்கு வலு சேர்க்கிறது. எல்லா குடிமக்களுக்கும் சமூக அரசியல் பொருளாதார நீதியை வழங்க இந்திய அரசமைப்புச் சட்டம் அளிக்கும் உறுதியை அசலில் நிறைவேற்றக் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பிரிவினர், பெண்கள், ஆதிவாசிகள் முதலியோர் உரத்த குரலில் கோருகின்றனர். மேலும் தமக்கு பண்பாட்டில் மரியாதை, அரசியலில் பிரதிநிதித்துவம் மற்றும் பொருளாதராத்தில் மறுபங்கீடு வேண்டும் என்று அழுத்தம் தருகின்றனர். இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஆதிக்கப் பிரிவினருக்கு பிற்போக்குவாதம் கருவியாகப் பயன் தருகிறது.

சமூகக் கட்டமைப்பில் தீண்டாமை உட்பட கொடுமைகள் நிறைந்திருந்தது என்பதை நாசூக்காக மூடி மறைத்துப் பண்டைய காலத்தில் மரபு ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்ந்தபோது நாம் மேன்மை நிலையில் இருந்தோம்; மேலை பண்பாட்டு தாக்கத்தால் சீரழிந்தோம் எனக் கூறி இதன் மூலம் திசைதிருப்ப முடிகிறது.  

‘ஆண்ட பரம்பரை’ கருத்தியலை நிலைநிறுத்த அந்தக் காலத்தில் உன்னத நிலையில் இருந்தோம் என்று வரலாற்றைத் திரிபு செய்வது அவசியமாகிறது. நமது இனம் / பிரிவு உசத்தி; அந்தக் காலத்திலேயே நவீன அறிவியலின் சூட்சுமத்தை அறிந்து இருந்தனர். அந்த பொற்காலத்தை இடையில் வந்தவர்கள் குலைத்துவிட்டார்கள் என்ற சொல்லாடல் வேறொரு பிரிவை ‘எதிரியாக’ உருவாக்கி இன்றைய சிக்கல்களுக்கு அந்த எதிரி பிரிவினர்தான் பொறுப்பு எனும் வெறுப்பு அரசியலுக்கும் வழிகோலுகிறது. 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ஐன்ஸ்டைனை வென்றதற்காக நோபல் பெறுபவர்கள்

ஆசை 10 Oct 2022

சுயவிமர்சனம் 

தாங்கள் மட்டுமே அறிவிலும் பண்பாட்டிலும் உயர்ந்தவர்கள் என ஐரோப்பிய மேட்டிமை காலனிய கருத்து வலியுறுத்தியது. எல்லா அறிவுகளுக்கும் தாங்களே சொந்தக்காரர்கள், எல்லா அறிவும் எதோ வகையில் ஐரோப்பியக் கொடை என நிறுவ முற்பட்டனர். ஆரியபட்டர் பாஸ்கரசாரியார் போன்றவர்களின் வானவியல் கணித கருத்துக்கள் அந்தக் காலத்தில்தான் இனம் காணப்பட்டன. இந்தக் கருத்துகளின் உன்னதத்தை உணர்ந்த சிலர் பண்டைய ஐரோப்பிய கருத்துக்களைக் கடன் வாங்கிதான் இவர்களது படைப்புகள் எனச் சாதிக்க முற்பட்டனர்.  

காலனிய மேட்டிமைப் பார்வைக்கும் எல்லாம் வேதத்தில் இருந்தது எனும் பிற்போக்கு பார்வைக்கும் எதிராக புத்தாக்க பார்வையோடு பிரபல வேதியியல் அறிஞர் பிரபுல்ல சந்திர ரே ‘இந்து வேதியியலின் வரலாறு’ என்ற நூலை எழுதினர். பெங்கால் கெமிக்கல் மற்றும் மருந்துத் தொழிற்சாலையை நிறுவியவர் அவர். மேலும் வெள்ளம் மற்றும் பஞ்சம் போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களிடையே நிவாரணப் பணிகளை அவர் வழிநடத்தினார், வங்காள இலக்கிய சங்கத்தின் தலைவராக இருந்தார். காந்தி, சித்தரஞ்சன் தாஸ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு விடுதலை அரசியலில் ஈடுபட்டார். 

இந்து சமூகத்தின் சாபம் சாதிய அமைப்பு எனக் கருதி சாதி ஒழிப்பு முனைப்புக்களில் தன்னை இணைத்துக்கொண்டார். மடிந்த உடலைத் தொடுவதுகூட தீட்டு எனக் கருதப்பட்டுவந்த அந்தக் காலத்தில் தமது வகுப்பில் இறந்துபோனவர்களின் மனித எலும்பைத் தீயில் எரித்து சாம்பலை தன் வாயில் போட்டுக்கொள்வாராம். பெரும்பாலும் அதிக்க சாதி மாணவர்களே நிரம்பியிருந்த வகுப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எந்த எலும்பாக இருந்தாலும் தீயில் எறிந்த பின்னர் அது கால்சியம் பாஸ்பேட் எனும் வேதிப்பொருளாக மாறும் என்று வெறும் வேதியலை மட்டும் கற்பிக்காமல் இந்திய சூழலில் சாதிய மூடநம்பிக்கைகளைத் தகர்த்து அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவதும் ஆசிரியரின் பணி எனக் கருதினர்.

தனது இந்து வேதியியல் எனும் நூலில் ஐரோப்பிய பண்பாட்டில் பண்டைய காலத்திலும் மத்திய காலத்திலும் வேதியியல் குறித்த அறிவு எந்த நிலையில் இருந்ததோ அதேபோலவே அமிலங்கள், காரம், உலோகங்கள், உலோகக் கலவைகள் குறித்த அறிவு இந்தியாவிலும் ஒப்பிடத்தக அளவில் சமமாக இங்கும் அங்கும் சில அம்சங்களில் கூடுதல் ஆழமாக இருந்தது எனச் சான்றுகளின் அடிபடையில் நிறுவினர். ஒப்பீட்டளவில் ஏனைய பண்பாடுகளை ஒத்த அறிவு வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பண்பாடுகள் ஏன் பிற்காலத்தில் பின்னடைவை சந்தித்தது? இதுகுறித்து அவர் கூறும் கருத்துக்கள் இன்றும் கவனம் கொள்ளத்தக்கது. 

கல்வி ஆய்வு முதலிய உயர் சாதிக்கு மட்டும் என்றும் கைகளைக் கொண்டு வேலை செய்யும் கைவினைஞர்களைத் தீண்டத்தகாத அல்லது குறைந்தபட்சம் சாதியப் படிநிலையில் கீழ் தட்டில் வைக்கும் மனுநீதியயை இறுக்கமான முறையில் அமல்படுத்தியதன் விளைவாக கைகளுக்கும் மூளைக்கும் பிரிவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அசலுக்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பில்லாத முறையில் வெறும் கற்பனை கற்பித்த விஷயங்களில் மூளை உழைப்பு கவனம் செலுத்தியது. அறிவியல் ஆய்வுகளின் வழியே புத்தாக்கம் பெற முடியாமல் கைவினை தேக்கம் அடைந்தது. அல்லது தட்டுத் தடுமாறிதான் வளர்ச்சி பெற முடிந்தது எனக் கூறினார். 

“கை வேலைகளிலிருந்து அறிவுஜீவி சமூகம் விலகிவிட்டது. ஏன் எப்படி என்ற காரணகாரிய விளைவுகளை உற்றுநோக்கி வளரும் வாய்ப்பைக் கைவினை தொழில்கள் இழந்தன. வெறும் யூகம் மற்றும் கற்பித்த சிந்தனைகளுக்கு அறிவுலகம் சிறைபட்ட பின்னர் தர்க்கம் சார்ந்தும் ஆய்வு சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு இந்தியா மண்ணில் இடம் இல்லாமல் போய்விட்டது. பாயில், டெஸ்கார்ட்ஸ் அல்லது நியூட்டன் போன்ற விஞ்ஞானிகள் உருவாகும் வாய்ப்பை இந்தியா முற்றிலும் இழந்துவிட்டது" என்கிறார் ரே. சாதிய அமைப்புதான் இந்திய பண்பாடு உன்னதம் அடைவதைத் தடுக்கும் தடை கல் என உரத்த குரலில் சாடுகிறார் ரே.  

புத்தாக்கம்

சரணாகதி அல்லது போலி பெருமை எனும் இரண்டு பண்பாட்டு அரசியல் போக்குகளை உதறித் தள்ளி உருவான மூன்றாவது பார்வைதான் ‘புத்தாக்கம்.’ எல்லா பண்பாடுகளிலும் அறிவும் இருந்தது; அறிவற்ற பிற்போக்கான போக்கும் இருந்தது என்கிறது புத்தாக்க பார்வை. அரிசியையும் உமியையும் பிரிப்பது போலப் பண்டைய பாரம்பரியத்திலிருந்து அறிவார்ந்தவற்றை மட்டுமே கொள்ள வேண்டும்; அறிவுக்கு பொருந்தாத கருத்துக்களை நிராகரித்துச் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது. எனவேதான், பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் பல பகுதிகளில் உருவான சீர்திருத்த இயக்கங்கள் பெரும்பாலும் புத்தாக்கப் பார்வை கொண்டவையாக இருந்தது. 

எல்லாத் தொன்மை பண்பாடுகள்போல இந்திய துணைக் கண்ட பண்பாடுகளிலும் பல அறிவுசார் பாரம்பரியமும் உண்டு; கற்பனைப் புராணங்களும் உண்டு. ஆதிசேஷன் அசைவதால் நிலநடுக்கம் வருகிறது எனும் இந்துப் புராணமும், எரிமலை உருவாகும் ரோமர்களின் அக்கினி தேவதை வல்கன் கதைகளும் ஒன்றுதான். எனவே, ஐரோப்பிய நாகரிகம் மட்டும் தோற்றம் முதலே அறிவு சார்ந்து இருந்தது எனும் காலனிய மேட்டிமைவாதம் போலி புனைவு என புத்தாக்கப் பார்வை கொண்ட சிந்தனையாளர்கள் விளக்கினர். தொன்மை x நவீனம் என்ற சொல்லாடலை வகுத்து, பண்டைய புராணம் மற்றும் கிரேக்க ரோமானிய கதைகள் தொன்மை கால கருத்து என ஒதுக்கித் தள்ளி ஆய்வுகளின் அடிப்படையில் சமகாலத்தில் வளர்ந்துவரும் அறிவியல் கருத்துக்களை நவீனம் எனவும் வரையறை செய்தனர்.

மேலும், பண்டைய கால ஐரோப்பிய வளர்ச்சிக்கு ஒப்பு செய்யும் அளவில் பண்டைய இந்திய அறிவியல் இருந்தது எனத் தரவுகளைத் திரட்டி ஆய்வுசெய்து நிறுவினர். நவீன அறிவியலின் தோற்றுவாய் வெறும் ஐரோப்பா மட்டுமல்ல என்றனர். பல்வேறு பண்டைய பண்பாடுகளின் கண்டுபிடிப்புகளின் தொகுப்பு ஐரோப்பாவில் வளர்ந்துவரும் நவீன அறிவியலின் அடித்தளம் என நிறுவினர். எனவே, நவீன அறிவியலை ‘அந்நிய’ கருத்து என்றோ தமது பண்பாட்டுக்கு உகந்தது அல்ல என்றோ புறந்தள்ளவில்லை. 

நவீன அறிவியலைக் கற்று சொந்தக்காலில் நின்று நம்மைப் புத்தாக்கம் செய்துகொள்ள வேண்டும் என இந்தப் போக்கு விரும்பியது. இந்தியாவில் நவீன அறிவியலின் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த மேகநாத் சாஹா போன்ற விஞ்ஞானிகள் நவீன அறிவியலை மேலை பண்பாட்டின் கொடை என்று பார்க்காமல் நவீன காலத்தின் வளர்ச்சி என சித்தரித்தனர். அதாவது, மேலை அறிவியல் என அடையாளப்படுத்தாமல் நவீன அறிவியல் என்று அழைத்தார்கள்.

“தமிழில் பத்திரிகைகள், புத்தகங்கள், பிரசங்கங்கள் முதலியவற்றின் மூலமாய் இங்கிலிஸ் தெரியாத தமிழ் நாட்டாருக்குத் தற்காலத்து நவீன அறிவைப் பரவச் செய்வது என்ற நோக்கத்துடன்" ஆ மாதவய்யா பெ.நா.அப்புசாமி நீதிபதி சதாசிவம் எஸ்.பாவனந்தம் பிள்ளை, அ.அரங்கசாமி, சி.ஆர்.ஸ்ரீநிவாசன் முதலானோர் முன் முயற்சியில் 1917இல் துவங்கப்பட்டது தமிழர் கல்விக் கழகம். இந்தச் சங்கம் ‘தமிழர் நேசன்’ என்ற இதழை வெளியிட்டது மட்டுமின்றி நவீன அறிவியல் கல்வி கற்கும் வாய்ப்பை இளம் தமிழ் மாணவர்களுக்கு வழங்கும் வண்ணம் உதவித் தொகை திட்டத்தை ஏற்படுத்தியது. இதுபோல இந்தியாவெங்கும் பல அமைப்புக்கள் தோன்றின; கூடுதல் இந்தியர்களுக்கு அறிவியல் ஆய்வில் இடம்பெற்று தர இந்த முயற்சிகள் உதவின. 

சி.வி.ராமன் பணிபுரிந்துகொண்டிருந்த காலனிய கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் உயர் அறிவியல் ஆய்வுசெய்வதற்கு வசதி ஏதும் இருக்கவில்லை. மகேந்திரலால் சர்கார் என்பவர் இந்திய மக்களிடமிருந்து திரட்டிய நிதியைக் கொண்டு ‘இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ்’ - இந்திய அறிவியல் வளர்சிக்கான சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி இந்திய ஆய்வாளர்கள் அதில் ஆய்வுசெய்யும் வசதியை ஏற்படுத்தித் தந்தார். இந்த நிறுவனம்தான் சி.வி.ராமனின் ஆய்வுகளுக்கு இடம் அளித்தது. 1928 பிப்ரவரி 28 அன்று தனக்கு நோபல் பரிசு பெற்றுத்தந்த ஆய்வை அவர் இந்த நிறுவனத்தில்தான் மேற்கொண்டார். 

ஜெர்மனியில் இட்லரின் அராஜகம் மேலோங்கிய நிலையில் பல யூத விஞ்ஞானிகள் வெளியேற தீர்மானம் செய்தனர். குவாண்டம் இயற்பியல் சார்பியல் தத்துவம் போன்ற துறைகளில் பெரும் சாதனை படைத்த மாக்ஸ் போர்ன் போன்றவர்கள் சி.வி.ராமன் அழைப்பில் பெங்களூரு இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் சேர விருப்பம் காட்டினர். ஆனால், ஆங்கிலேயே அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டு தடுத்துவிட்டனர்.  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மாக்ஸ் போர்ன் முதலியோர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து அந்த நாட்டை வல்லரசாக மாற்றினர் என்பது வரலாறு. 

ஜன்னல்கள் திறந்து இருக்கட்டும் 

செல்வம் மற்றும் ராணுவ பலம் கொண்டு மற்ற நாடுகளை அடிமைப்படுத்தி காலனி நாடுகளாக வைத்திருந்த நிலையில் தமது அடக்குமுறைகளைக் கருத்தளவில் நியாயப்படுத்தக் கட்டியெழுப்பிய போலி பார்வைதான் ஐரோப்பிய மையவாதம் என்பது இன்று வெள்ளிடை மலை. சீனாவின் அச்சு இயந்திரம், வெடிமருந்து, திசைகாட்டும் காந்த கருவி, இந்தியாவின் இடமதிப்பு எண்முறை, இபின் அல் - ஹைதம் போன்ற பெர்ஷிய அராபிய பண்பாட்டுச் சிந்தனையாளர்கள் உருவாக்கிய அறிவியல் பரிசோதனை போன்ற அறிவு மரபு அனைத்தும் இணைந்து உருவானதுதான் நவீன அறிவியல். தொடக்கத்தில் சிறு சிறு நதிகள் ஓடைகள் இணைந்து பெரு நதி உருவாவதுபோல உலகின் பல்வேறு பண்பாடுகள் கண்டுபிடித்த அறிவுச் செல்வங்களின் தொகுதியின் மேல் கட்டமைக்கப்பட்ட மாளிகைதான் நவீன அறிவியல். இதன் அஸ்திவாரத்தில் எல்லா பண்பாடுகளின் தாக்கமும் உள்ளது. 

1844இல் பாரிஸுக்கு பயணம் செய்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் தாத்தா துவாரகநாத் தாகூரை ரிக் வேதத்தை மொழிபெயர்த்த ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர் சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவம் அன்றைய காலகட்ட ஐரோப்பிய மேட்டிமை மனப்பான்மையை சுட்டுகிறது. இந்திய பாடல் ஒன்றை இசைக்குமாறு முல்லர் வேண்ட துவாரகநாத் இந்திய பாரம்பரிய இசை ஒன்றை இசைத்தார்.

அவரின் இசையில் தாளம், இசைநயம் ஏதும் இல்லை என முல்லர் முகம் சுருக்கிக் கூறியபோது "நீங்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள்; ஐரோப்பியர்கள் உங்களுக்கு ஏதாவது விசித்திரமாகத் தோன்றினால், உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் விலகிவிடுவீர்கள். இதன் தொடர்ச்சியாக நீங்கள் இந்திய மதம், கவிதை தத்துவம் முதலியவற்றை கவனம் செலுத்தாமலேயே புறம் தள்ளுகிறீர்கள். ஐரோப்பா பண்பாட்டு படைப்பாக்கத்தை நாங்கள் புரிந்துகொண்டு பாராட்ட முயற்சிக்கிறோம், ஆனால் இந்திய படைப்புக்களை நாங்கள் வெறுக்கிறோம் என்று கற்பனை செய்ய வேண்டாம்" என்றார் துவாரகநாத். 

"என் வீட்டில் எல்லாப் பக்கங்களிலும் சுவர் எழுப்பி எல்லா ஜன்னல்களை மூடி அடைக்க விரும்பவில்லை. எல்லா பகுதியின் கலாச்சார காற்றும் முடிந்தவரை சுதந்திரமாக என் வீட்டில் வீச வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார் காந்தி. ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும், கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்றான் பாரதி. இந்தப் பார்வையோடு இயங்கியதன் விளைவாகத்தான் இன்று நாம் காணும் வளர்ச்சியை அடைந்துளோம். 

அறிவியலோடு நட்பு

விடுதலை பெற்ற இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்த வர்ணம் அடிப்படை பாகுபாடு சட்டரீதியாக ஒழிந்தது. விடுதலை பெற்ற இந்தியா வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டது. 1947இல் இந்தியாவில் ஒவ்வொரு ஒரு லட்சம் கர்ப்பிணி பெண்களில் சுமார் இரண்டாயிரம் பெண்கள் குழந்தை பிறப்பின்போது மடிந்தனர். பிறந்த குழந்தைகளில் ஆயிரத்துக்கு 150 என்ற வீதத்தில் ஒரு வருடம் முடியும் முன்பே குழந்தை இறப்பு விகிதம் இருந்தது. எழுத்தறிவு வெறும் 18 %தான்.

பெண்களின் கல்வியறிவு வெறும் 8.8% மட்டுமே. சராசரி வாழ்நாள் வெறும் 32 ஆண்டுகள் மட்டுமே. இன்று கர்ப்பிணி பெண்கள் இறப்பு விகிதம் வெறும் 97 மட்டுமே. குழந்தை இறப்பு விகிதம் 28 மட்டுமே. கல்வியறிவு பெற்றவர்கள் 77.7 சதவிகிதம். சராசரி வாழ்நாள் 70.19 ஆண்டுகள். நேருவின் வார்த்தைகளில் கூறினால் அறிவியலோடு நட்புகொண்டதால்தான் இது சாத்தியமாகியது அல்லவா? 

மறுபுறத்தில் எல்லாம் வேதத்தில், பிள்ளையாரின் யானை தலை அன்றே நமக்கு உறுப்புமாற்று சிகிச்சை தெரியும் என்பதைச் சுட்டுகிறது போன்ற அபத்தக் கருத்தாடல் வழியே பிற்போக்குவாதிகள் தமது மேட்டிமை நிலையைத் தக்கவைக்க எடுத்த முயற்சிகளால் ‘பழமை பழமை யென்று பாவனை பேசலன்றி’ ஏதேனும் பயன் விளைந்ததா?  

- ‘பிப்ரவரி 28’ தேசிய அறிவியல் தினம்! 

 

தொடர்புடைய கட்டுரைகள்

பச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்போம்
பொங்கல் நாள் மாறிய மர்மம்
ஐன்ஸ்டைனை வென்றதற்காக நோபல் பெறுபவர்கள்
மூலக்கூறுகளுக்குப் பூட்டுப்போட்டவர்களுக்கு வேதியியல் நோபல்!
ஸ்வாந்தே பேபுவுக்கான நோபல் ஏன் முக்கியமானதாகிறது?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
த.வி.வெங்கடேஸ்வரன்

த.வி.வெங்கடேஸ்வரன், அறிவியல் எழுத்தாளர். ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com


5

1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

K Chitra   1 year ago

மிகத் தரமான கட்டுரை. மிக ஆழமான அதே சமயத்தில் எளிமையான எழுத்துக்ஷ நன்றி

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   1 year ago

what a fantastic piece!! thank you sir and arunchol.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

தர்மராஜன் முத்துசாமி    1 year ago

சிறப்பான கட்டுரை

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தொல்லை தரும் தோள் வலி!சேவா - சுஷாசன்நாஞ்சில் சம்பத்பிரார்த்தனைபொதுத் தேர்தலுக்கு காங்கிரஸ் எப்படித் தயாராகிறது?பாலு மகேந்திரா சமஸ் பேட்டிவசுந்தரா ராஜ சிந்தியா - அருஞ்சொல்பொதுவுடைமைக் கட்சிவெ.ஸ்ரீராம் கட்டுரைவெறுப்பு அரசியல்நா.மணிபுதிய தலைமுறைபன்மைத்துவ நாயகர்ஜார்கண்ட் சட்டமன்றம்அதிகாரப்பரவலாக்கம்ashok selvan marriageஜி20 மாநாடுஅம்பேத்கரிய கட்சிகள்பக்கிரி பிள்ளைபறிப்பு அல்லஇந்தியத் தொகுதிகள் சீரமைப்புக்கு சரியான தீர்வாகுமாசில முன்னெடுப்புகள்ஷனா ஸ்வானின் ‘கவுன்டவுன்’இரண்டாவது இதயம்தெளிவாகச் சிந்திப்பதற்கு சில யுக்திகள்ஆமதாபாத்அலைக்கற்றை விவகாரம்கல்லூரிச் சேர்க்கைசரமாகோஅணு அச்சுறுத்தலுக்குத் தீர்வு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!