கட்டுரை, மருத்துவம், ஆளுமைகள், அறிவியல் 5 நிமிட வாசிப்பு

ஸ்வாந்தே பேபுவுக்கான நோபல் ஏன் முக்கியமானதாகிறது?

ஆசை
08 Oct 2022, 5:00 am
5

ன்மாவைப் பற்றி போர்த்துகீசிய கவிஞர் பெர்ணாண்டோ பெஸோவா இப்படி எழுதினார்: “என்னுடைய ஆன்மா ஒரு மறைவான இசைக்குழு; என்னென்ன இசைக்கருவிகளையும் நரம்பிசைக் கருவிகளையும் யாழ்களையும் தாளக் கருவிகளையும் தம்பூராக்களையும் நான் எனக்குள்ளே இசைக்கிறேன், ஒன்றுக்கொன்று மோதவிடுகிறேன் என்பது எனக்கே தெரியாது. நான் கேட்பதெல்லாம் அதன் சிம்பனியை மட்டுமே” (The Book of Disquiet). 

மேற்கண்ட மேற்கோளில் ஆன்மாவுக்குப் பதிலாக டிஎன்ஏ, மரபணு (gene), மரபணுக் கீற்று (chromosome) போன்றவற்றைப் போட்டுப் பார்த்தால் அதுதான் உயிர் வாழ்க்கை எனும் மாபெரும் சிம்பனி. டிஎன்ஏவின் இரட்டைச் சுருள் கட்டமைப்பை ஜேம்ஸ் வாட்சன், ஃப்ரான்ஸிஸ் க்ரிக், ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின் ஆகியோர் கண்டறிந்தபோது மறைவான அந்த இசைக்குழுவின் திரை விலக்கப்பட்டது. 

உயிரின் ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டதாக உலகமே கொண்டாடியது. உயிரின் ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டாயிற்று. அதன் வரலாறு, கடந்து வந்த பாதை போன்றவற்றைக் கண்டுபிடிக்கும் பொறுப்பையெல்லாம் அதற்குப் பின்வந்த தலைமுறை அறிவியலர்கள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள். அதன் தொடர்ச்சிதான் தொல்மனிதர்களின் டிஎன்ஏக்கள் குறித்து மரபணுவியலர் ஸ்வாந்தே பேபு நிகழ்த்திய கண்டுபிடிப்புகள். டிஎன்ஏக்களை ஆய்வுசெய்து மனித இன வரலாற்றின் பல புதிர்களை அவிழ்த்ததற்காக உடற்செயலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வாந்தே பேபுவுக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருப்பதை இந்தப் பின்னணியில்தான் வைத்துப் பார்க்க வேண்டும்.

யார் இந்த ஸ்வாந்தே பேபு?

ஸ்வீடனில் 1955இல், திருமணத்துக்கு வெளியிலான ஓர் உறவின் விளைவாக, பிறந்தவர் ஸ்வாந்தே பேபு. இவருடைய தந்தையும் உயிரி-வேதியியலருமான சூனெ பேர்ஸ்ட்ரோம் 1982இல் உடல்செயலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் விருதை வேறு இரண்டு அறிவியலர்களுடன் பகிர்ந்துகொண்டவர் என்பது ஆச்சரிய ஒற்றுமை. ஒற்றுமை அங்கேயே நின்றுவிடுகிறது. தந்தையுடன் எந்தத் தொடர்புமில்லாத தான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து முற்றிலும் தன்னிச்சையான ஒரு முடிவே என்று பேபு கூறுகிறார்.

ஆரம்பத்தில் பேபு எகிப்தியலில் (எகிப்தின் வரலாறு, மொழி, கலாச்சாரம் குறித்த துறை) நாட்டம் கொண்டிருந்தார். பிறகு மரபணுவியல் (Genetics), பரிணாம மானுடவியல் (Evolutionary Anthropology) ஆகியவற்றை நோக்கி நகர்ந்தார். 1986இல் உப்பசாலா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நோய்த்தடுப்பாற்றல் மண்டலத்தின் மீது அடினோவைரஸின் ‘ஈ-19’ புரதம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து அவரது முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது. பிறகு ஜூரிக் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலில் ஆய்வு மேற்கொண்டார்.  1987-1990 வரை அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.

ஸ்வாந்தே பேபுவின் பங்களிப்புகள் என்னென்ன?

  • ‘தொல்மரபணுவியல்’ (Paleogenetics) என்ற புதிய அறிவியல் துறையை உருவாக்கியவர்களுள் ஸ்வாந்தே பேபுவும் ஒருவர். ஒரு இடத்தில் அகழாய்வு செய்து அந்த இடத்தில் இருந்த பழைய நாகரிகங்களின் வரலாற்றைக் கண்டறிவதுபோல் உயிரினங்களின் டிஎன்ஏக்களை அகழாய்வு செய்து அவற்றின் தொல்வரலாற்றைக் கண்டறிவதுதான் இந்தத் துறை.
  • நியாண்டர்தால் மனிதரிடமிருந்து எடுக்கப்பட்ட மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏவை ஸ்வாந்தே பேபு 1997இல் மரபணு வரிசைப்படுத்தலை முதன்முறையாக (முழுமையாக அல்ல) வெற்றிகரமாக மேற்கொண்டார்.
  • மொழியறிவு தொடர்பான குறைபாடுகளை ஏற்படுத்தும் ’மொழி மரபணு’ (எஃப்.ஓ.எக்ஸ்.பி2) தொடர்பான கண்டுபிடிப்புகளை 2002இல் பேபுவின் தலைமையிலான துறை வெளியிட்டது.
  • நியாண்டர்தால் மனிதரின் மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏவின் முழுமையான மரபணு வரிசைப்படுத்தலை பேபு 2008இல் வெற்றிகரமாக செய்துமுடித்தார். 
  • தொல்மனிதர்களின் டிஎன்ஏவை ஆராய்ச்சி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்துவந்தது. டிஎன்ஏ என்பது உயிரிப் பொருள் என்பதால் எளிதில் அழிந்துபடக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. தொல்மனிதர்களின் டிஎன்ஏவுடன் பாக்டீரியாவின் டிஎன்ஏவும் நவீன மனிதர்களின் டிஎன்ஏவும் கலந்துவிடுவதால் துல்லியமான ஆய்வுகளை மேற்கொள்ள முடியாத நிலை நீடித்தது. இதனால் தொல்மனிதர்களின் டிஎன்ஏவைக் கொண்டு முழுமையான மரபணு வரிசையை உருவாக்கவே முடியாது என்று அறிவியல் உலகம் நம்பிவந்தது. இந்த நிலையை மாற்றியதில் ஸ்வாந்தே பேபுவுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அவர் கண்டறிந்த மேம்பட்ட தொழில்நுட்ப முறைகளால் தொல்மனிதர்களின் டிஎன்ஏக்களின் முழுமையான மரபணு வரிசையை உருவாக்க முடிந்தது.  இந்த ஆய்வின் மூலம், மனித குலத்தின் உறவினரான நியாண்டர்தால் மனிதர்களும், புதிதாகக் கண்டறியப்பட்ட டெனிசோவான் மனிதர்களும் ஹோமோ சேப்பியன்ஸுடன் (நவீன மனித இனம்) ஒரே சமயத்தில் வாழ்ந்தார்கள் என்பது தெரியவந்தது. ஹோமோ சேப்பியன்ஸ் இனத்துக்கும் நியாண்டர்தால், டெனிசோவான் இனங்களுக்கும் இடையே கலப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. நியாண்டர்தால், டெனிசோவான் இனங்கள் அழிந்துபோனாலும் அவற்றின் மரபணு எச்சங்கள் சிறிய அளவிலாவது இன்றைய ஹோமோ சேப்பியன்ஸ் இனத்திடம் காணப்படுகிறது.  

ஸ்வாந்தே பேபுவின் கண்டுபிடிப்பு ஏன் முக்கியமானது?

நியாண்டர்தால், டெனிசோவான் இனங்களின் மரபணு எச்சம் இன்றைய மனிதர்களிடமும் காணப்படுவதால் மனித குலத்தின் வரலாறு குறித்த இன்னும் மேம்பட்ட தெளிவைப் பெற முடிகிறது. மனித இனங்களில் எந்த ஒன்றுமே கலப்பற்ற இனம் கிடையாது என்பது ஸ்வாந்தே பேபுவின் கண்டுபிடிப்புகளால் திட்டவட்டமாக நிறுவப்பட்டிருக்கிறது. 

இனத் தூய்மை பற்றிப் பேசுவதற்கு உண்மையில் எந்த முகாந்திரமும் இல்லை. அது மட்டுமல்லாமல், நியாண்டர்தால், டெனிசோவான் இனங்கள் சில வகையான நுண்ணுயிரிகளுக்கு எதிர்ப்புத் திறனைப் பெற்றிருந்தன. சில வகையான நுண்ணுயிரிகளுக்கு போதிய அளவு எதிர்ப்புத் திறனும் இல்லாமல் இருந்தன. எடுத்துக்காட்டாக, தொல்மனிதர்களிடமிருந்து மரபணு எச்சங்களைப் பெற்றிருப்பவர்களுக்கு சார்ஸ்-கோவ்-2-இன் தொற்று ஏற்பட்டால் சுவாச மண்டலம் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஸ்வாந்தேவும் அவரது குழுவினரும் 2020இல் கண்டறிந்தனர். அதேபோல், கடுமையான கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பைத் தரும் கூறுகள் நியாண்டர்தால் மனிதர்களின் கொடையாக சிலருக்குக் கிடைத்திருக்கின்றன என்பதை ஸ்வாந்தே பேபுவும் அவரது குழுவினரும் 2021இல் கண்டறிந்தனர். 

ஆகவே, ஸ்வாந்தே பேபுவின் பங்களிப்புகளை மனித இன வரலாறு குறித்த கண்டறிதல்களுடன் சுருக்கிவிடாமல் மனித இனம் இனியும் நீடித்திருப்பதற்கான பங்களிப்புகள் என்றும் பார்க்க வேண்டியிருக்கிறது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


5

7





பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Jahir    2 years ago

எளிய வகையில், புரியும் படி எழுதப்பட்டுள்ளது. நன்றி. மேலும், குறிப்பாக மனிதன் என்பவன் கலப்பில்லாமல் உருவாகவில்லை என்பதே எல்லோரும் உணர வேண்டிய செய்தி. ஆசை அவர்களுக்கு நன்றி.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Abi   2 years ago

அருமை ஆசை sir. Extra Marital birth (திருமண பந்தம் வெளியே) என்ற வாக்கியத்தை தற்போது தவிர்த்து இருக்கலாம்.....

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Umamaheswari   2 years ago

அறிவியல் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது //நியாண்டர்தால் மனிதரின் மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏவின் முழுமையான மரபணு வரிசைப்படுத்தலை பேபு 2008இல் வெற்றிகரமாக செய்துமுடித்தார். // ஸ்வாந்தே பேபுவின் பங்களிப்பை இன்றைய தலைமுறை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்...சிறப்பான கட்டுரை ஆசை சார்... வாழ்த்துகள் 🎉

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Satheeshkumar   2 years ago

முன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குகையின் வாசலில் நின்று ஒருவன் எழுப்பிய சத்தம் பலப்பல எதிரொளிப்புகளுக்கு பின் அது ஒன்றுமில்லாமல் சப்தத்தின் அடிச்சுவடி கூட இல்லாத ஒரு நிலைமையை அடையும் ஆனால் ஜீன் அதற்கு இணையான அடையாளங்களை கொண்டிருக்கும் என்பது அறிவியல் அறிஞர்களின் கருத்து. சுவந்தோ பாப்லோ வின் ஜீன் தட ஆய்வு மனித குலம் ஒன்றாய் கலந்து வேற்றுமை இல்லா அனைத்து இனங்களையும் உள்ளடக்கி ஒற்றை தொகைமையாய் உருவாகி பல காலமாகிவிட்டதை அறிவியல் பூர்வமாய் நிருப்பித்ததில் இவரின் பங்கு எத்தகையதோ அதற்கு இணையான இவரின் முன்னோடியான லுகி லுகா கெவலி ஸ்ப்ரோசா என்ற இத்தாலியரின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது குறிப்பாக 90 களில் மனித ஜீன் தொகைமை( genome) வகைப்படுத்த முயன்று கொண்டு இருந்த காலங்களில் மனித இரத்த வகைகளை ஆய்வு செய்து உலக மக்கள் தொகை பரவலுக்காக்கான வகை முறையை உலகுக்கு எடுத்துரைத்த பேராசான்.அவரின் gene peoples and language நம்மை பிரமிப்பில் திகைக்க வைக்கும் அற்புத படைப்பாகும். இன வேற்றுமை என்பதே இல்லை எனும் கூற்றை பொய்பிக்க நடந்த முயற்சிகளில் மூலம் நிறுபிக்க முயன்ற கருத்தான கருப்பினத்தவர்கள் வெள்ளை இனத்தவரை விட அறிவில் ஆற்றலில் குறைந்தவர் என்பதை தவிடு பொடியாக்கி ஆதாரபூர்வமாக உலகுக்கு உரைத்ததை உலகம் ஏற்றுக் கொண்டதாகவே கருத வேண்டியுள்ளது.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Banu   2 years ago

அருமை. ஸ்வாந்தே பேபுவுக்கு பெருமை சேர்க்கிறது இக்கட்டுரை. மூலக்கூறு மரபியல் என்பது விளக்க எளிமையாக இருந்தாலும் ஆய்வு ரீதியாக ஆயிரம் இடர்பாடுகளைக் கொண்டது என்பது துறை சார்ந்த வல்லுனர்கள் நன்கறிவர். நியூக்ளியஸ் எனப்படும் உட்கருவில் குரோமோசோம் வலைப்பின்னல்களாக அமைந்திருக்க - அவ்வலைப்பின்னல்களே, DNA திருகு சுருள்கள் எனவும், DNA திருகு சுருளில் அமைந்திருக்கும் மூன்று இணை நைட்ரஜன் காரங்களே மரபணுக் குறியீடுகள் எனப்படும் முக்குறியங்கள் என்பதையும் அறிவோம். இந்த முக்குறியங்களே (codons) ஜீன் எனப்படும் மரபணுவின் ஒரு பகுதி ஆகும். இந்த முக்குறியங்கள் 20 அமினோ அமிலங்களுக்கான குறியீடுகளாக உள்ளன. இவை பல்வேறு செய்பாடுகளுக்கான நொதிகளையும், புரதங்களையும் உருவாக்குகின்றன. உட்கருவில் உள்ள குரோமோசோம் தவிர DNA ஆனது செல் நுண்ணுருப்புகளான மைட்டோடாகாண்ட்ரியா மற்றும் பசுங்கணிகங்களிலும் காணப்படுகின்றது. ஸ்வாந்தே பேபு மைட்டோகாண்ட்ரிய DNA வை ஆராய்ந்து அதில் அமைந்துள்ள நைட்ரஜன் காரங்களின் அமைவை வரிசைப்படுத்தியுள்ளது சாதாரணமான பணியல்ல. ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததெனில் இம்முக்குறியங்கள் வரிசை மாறும் போது அமினோஅமிலங்கள் உருவாக்கமும் மாறுகிறது. அமினோஅமிலங்கள் மாறும் போது நொதிகளின் உற்பத்தி மாறுகிறது. இவை புதிய பரிணாமத்திற்கு வழிவகுக்கிறது. இப்படி இறைவனால் படைக்கப்பட்ட நம் உடலில் பல்லாயிரக்கணக்கான systematic செயல்பாடுகள் நிறைந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

ஆட்சி மன்றங்கள் அச்சுறுத்துகின்றனவா?டிராகன்காலனித்துவத்தை எப்படி எதிர்கொள்வது?மருத்துவ மாணவர்கள்இலங்கைக்கு இவ்வளவு பொருளாதார நெருக்கடி ஏன்?காலங்கள் மாறிவிட்டனபாலசுப்ரமணியன்மூர்க்குமாசெ கட்டுரைகோவை கார் வெடிப்புச் சம்பவம்குறுந்தொகைவங்கி டெபாசிட்கர்நாடகக் கொடிஉதயநிதிசெயற்கை நுண்ணறிவுபதற்றம்உலகின் முதல் பெண் துப்பறியும் இதழியலாளர்வகிதா நிஜாம்பஞ்சாபி உணவகம்லிண்டன் ஜான்சன்ஏற்றத்தாழ்வுகள்எஸ்.ராஜா சேதுதுரை கட்டுரைஜனசக்திதிறமையின்மைசூப்பர் ஸ்டார் கல்கிசிப்கோ இயக்கம்அம்பேத்கரை அறிய புதிய நூல்தெய்வீகத்தன்மைகொமேனிபெருநிறுவனம்வெற்றி எளிதா?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!