கட்டுரை, அறிவியல் 5 நிமிட வாசிப்பு

பச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்போம்

ஜோசப் பிரபாகர்
01 Feb 2023, 5:00 am
2

ரு வால் நட்சத்திரம். 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழைய கற்கால மனிதர்கள் வானில் கண்ட வால் நட்சத்திரம். மறுபடியும் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து நமது பூமிக்கு அருகில் வந்துகொண்டிருக்கிறது. இதைக் கண்டறிந்தவர்கள் அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவின் பலோமோர் வானவியல் ஆய்வகத்தின் வானியலர்கள் பிராங்க் மஸ்கியும் பிரைஸ் போலினும். இந்த வால் நட்சத்திரத்தின் பெயர் ‘சி / 2022 இ3 (இஸெட்டிஎஃப்)’ C / 2022 E3 (ZTF). இங்கே சி (C) என்பது ‘காமெட்’ (comet) என்ற சொல்லை குறிக்கிறது. 2022 என்பது இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்ட ஆண்டைக் குறிக்கிறது. இ (E) என்பது மார்ச் மாதத்தின் முதல் பாதியை குறிக்கிறது. (ஏ- ஜனவரி முதல் பாதி, பி- ஜனவரி இரண்டாம் பாதி, சி- பிப்ரவரி முதல் பாதி, டி- பிப்ரவரி இரண்டாம் பாதி, இ- மார்ச் முதல் பாதி).

அதாவது, 2022ஆம் ஆண்டு மார்ச் முதல் பாதியில் ‘ஸ்விக்கி ட்ரான்ஸியன்ட் ஃபெசிலிட்டி’ (Zwicky Transient Facility - ZTF) என்கிற ஆய்வு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது வால் நட்சத்திரம் இது என்பதை  சி / 2022 இ3 (இஸெட்டிஎஃப்) எனும் பெயர் குறிக்கிறது. இந்தப் பெயரை ஞாபகம் வைத்துக்கொள்ள கடினமாக இருந்தால் நமது வசதிக்காக இதை ‘பச்சை வால் நட்சத்திரம்’ என்றே அழைக்கலாம். ஏனென்றால், அது பச்சை நிறத்தில்தான் இருக்கிறது. இந்த வால் நட்சத்திரத்தின் மையப்பகுதி இரு கார்பன் அணுக்கள் சேர்ந்த டைகார்பன் (C2) என்ற மூலக்கூறுகளால் நிறைந்துள்ளது. சூரிய ஒளியோடு இந்த டைகார்பன் அணுக்கள்  வினைபுரிவதால் இந்தப் பச்சை நிற ஒளி வருகிறது. 

 படம்- 1: பச்சை வால் நட்சத்திரத்தின் படம்

வால் நட்சத்திரம் என்றால் என்ன?

பொதுவாக வால் நட்சத்திரம் என்பது உறைந்த நிலையில் உள்ள பனிப்பாறைகள், வாயுக்கள், தூசுக்களாலான ஒரு திடப்பொருள். இது வால் நட்சத்திரத்தின் கரு என்று அழைக்கப்படுகிறது. இந்த வால் நட்சத்திரங்கள் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியக் குடும்பம் உருவாகும்போது மீந்த எச்சச் சொச்சங்கள். கோள்களைத் தாண்டி வெகுதொலைவில் சூரியக் குடும்பத்தை வால் நட்சத்திரங்கள் சுற்றிவருகின்றன. எனவே, இவையும் நமது சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்தான். 

ஏன் இவற்றுக்கு வால் நட்சத்திரம் என்ற பெயர் வந்தது? வானியல் அறிவு அதிகம் வளராத காலகட்டத்தில் இருந்த மனிதர்கள் அவ்வப்போது வானத்தில் திடீரென்று ஒரு பொருள் நட்சத்திரம் போன்றே ஒளிர்ந்துகொண்டே வால் போன்ற தோற்றத்தில் இருந்ததால் இதற்கு வால் நட்சத்திரம் என்ற பெயரிட்டு அழைத்தார்கள். ஆனால், இது உண்மையில் நட்சத்திரம் அல்ல. கோளும் அல்ல. அதற்கு வால் எப்போதும் இருப்பதில்லை. 

வால் நட்சத்திரத்தின் பகுதிகள்

வால் நட்சத்திரத்துக்கு நான்கு பகுதிகள் உள்ளன. அவை கரு, கோமா, தூசு வால், அயனி வால் என்பதாகும். சூரியனை விட்டு வெகு தொலைவில் இருக்கும்போது இந்த வால் நட்சத்திரத்தில் உள்ள நீர், வாயுக்கள் உறைந்த நிலையில் இருக்கின்றன. இது வால் நட்சத்திரத்தின் கரு என்று அழைக்கப்படுகிறது. கோள்கள் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசையால் வெகு தொலைவில் உள்ள இந்த உறைந்த நிலையில் உள்ள இந்தக் கரு சூரியக் குடும்பத்தின் உள்நோக்கி இழுக்கப்படுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக சூரியனுக்கு அருகில் வரும்போது சூரிய ஒளிக்கதிர்களை உள்வாங்கி சூடாகி உறைந்த நிலையில் உள்ள வாயுக்கள் விரிவடைகின்றன. இதுதான் கோமா என்று அழைக்கப்படுகிறது. இது பூமியைச் சுற்றி வளிமண்டலம் இருப்பதுபோல் வால் நட்சத்திரத்தின் கருவைச் சுற்றி விரிவடைந்து ஒளிர்கிறது. அதோடு சேர்த்து அவ்வப்போது ஏற்படும் சூரியக்கதிர் வெடிப்பு (solar flares) நிகழ்வால் வெளிவரும் அதிகப்படியான சக்தி வாய்ந்த சூரிய ஒளியாலும் துகள்களாலும் வால் நட்சத்திரத்தின் இந்த விரிவடைந்த வாயுக்கள் அயனியாக்கம் செய்யப்பட்டு சூரியனுக்கு எதிர்திசையில் விலக்கம் அடைந்து பல மில்லியன் கி.மீ அளவுக்கு நீள்கின்றன.

இதுதான் வால் போன்ற தோற்றத்துக்கு காரணம். பின்னாளில் வானவியல் அறிஞர்கள் தொலைநோக்கியால் கூர்ந்து பார்த்தபோது வால் நட்சத்திரத்துக்கு இரண்டு வால்கள் இருக்கின்றன என்று கண்டறிந்தனர். ஒன்று அயனியாக்கம் செய்யப்பட்டு பல மில்லியன் கி.மீ அளவுக்கு நீண்ட அயனி வால் (ion tail). மற்றொன்று கொஞ்சம் வளைந்த நிலையில் அகலமாக காணப்படும் தூசு வால் (dust wall). இவைகளின் மாதிரிப் படம்  கீழே காட்டப்பட்டுள்ளது (படம் 2).

அயனி வால் கொஞ்சம் நீல வண்ணத்தில் இருக்கும். தூசு வால் வெளிர் மஞ்சள் நிறத்தில் அயனி வாலைவிட கொஞ்சம் பிரகாசமாக இருக்கும். தூசுக்கள் சூரிய ஒளியை மிக அதிகமாக சிதறடிப்பதால்தான் இது வெளிர் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது. இப்போது நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்தப் பச்சை வால் நட்சத்திரத்தை உற்றுநோக்கினால் வால் நட்சத்திரத்துக்கு அருகில் தூசு வால் வெளிர் மஞ்சள் நிறத்திலும், அயனி வால் நன்றாக நீண்டு மங்கிய நீல நிறத்திலும் இருப்பதைக் காணலாம் (படம் 1).

 

படம்- 2: வால் நட்சத்திரத்தின் பகுதிகளும் பாதையும்

எங்கிருந்து வருகின்றன வால் நட்சத்திரங்கள்?

சூரியக் குடும்பத்தைச் சுற்றி இரண்டு இடங்களில் இருந்து வால் நட்சத்திரங்கள் வருகின்றன. ஒன்று நெப்டியூன் கோளுக்கு அப்பால் உள்ள கியூப்பர் பட்டை எனும் பகுதி. இன்னொன்று ஊர்ட் மேகங்கள் எனப்படும், சூரியனுக்கு பல ஆயிரக்கணக்கான வானியல் தொலைவில் உள்ள கோளக்கூடு வடிவ மேகக் கூட்டங்கள். (படம் 3இல் காட்டப்பட்டுள்ளது)

கியூப்பர் பட்டையில் இருக்கும் வால் நட்சத்திரங்கள் பெரும்பாலும் 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனுக்கு அருகில் வரும். ஆனால், ஊர்ட் மேகக் கூட்டங்களில் இருக்கும் வால் நட்சத்திரங்கள் ஐம்பதாயிரம் ஆண்டுகளிலிருந்து இரண்டு அல்லது மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சூரியனுக்கு அருகில் வரும். தற்போது பூமிக்கு அருகில் வரும் இந்தப் பச்சை வால் நட்சத்திரம் இந்த ஊர்ட் மேகக்கூட்டத்தில் இருந்துதான் வருகிறது.

இப்படி வரும் வால் நட்சத்திரங்கள் நீண்ட நீள்வட்டப் பாதையில் சூரியனை ஒருமுறை சுற்றிவிட்டு மீண்டும் வந்த இடத்துக்கே திரும்பிவிடும். ஆனால், சில வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு உள்ளேயும் சென்றுவிடும். வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு அருகில் வரும்போதுதான் வானில் தெரியும். அது கியூப்பர் பட்டையில் இருக்கும்போதோ அல்லது ஊர்ட் மேகத்தில் இருக்கும்போதோ வானில் தெரியாது. தொலைநோக்கியால் காணவும் முடியாது. 

படம்- 3: கியூப்பர் பட்டை மற்றும் ஊர்ட் மேகங்கள்

பச்சை வால் நட்சத்திரத்தை வானில் எப்போது பார்க்கலாம்?

ஜனவரி 12ஆம் தேதி சூரியனுக்கு அருகில் (16.6 கோடி கி.மீ) வந்த இந்த வால் நட்சத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நோக்கி நகர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி பூமிக்கு அருகில் (அதாவது 4.2 கோடி கி.மீ தொலைவில்) வரப்போகிறது. பூமிக்கு அருகில் வர வர அதன் பொலிவுத்தன்மை கூடிக்கொண்டே போகும். தற்போது விடியற்காலை நேரத்தில் வடக்கு திசையில் தெரியும் இந்த வால் நட்சத்திரம் ஜனவரி 26, 27 தேதிகளில் இரவு வானத்தில் சிறிய கரடி விண்மீன் கூட்டத்துக்குக் கிழக்குப் பக்கமாக அருகில் தெரியும். இந்த தேதிகளில் வெறும் கண்களால் பார்ப்பது சிரமம்.  கொஞ்சம் திறன் வாய்ந்த தொலைநோக்கியால் படம் பிடிக்க முடியும். 

ஆனால், பிப்ரவரி முதல் வாரத்தில் இரவு ஏழு மணிக்கு மேல் வடமேற்கு வானத்தில் கபெல்லா நட்சத்திரம் அருகில் மேற்கு பக்கத்தில் சிறிய பச்சை நிறப் புகைப்படலம் போல் இது தெரிய ஆரம்பிக்கும். பிப்ரவரி 10ஆம் தேதி வாக்கில் செவ்வாய் கோளுக்கு அருகில் தெரியும். நகரங்களில் ஒளி மாசு அதிகமாக இருப்பதால் வெறும் கண்களால் காண்பது கொஞ்சம் கடினம். ஆனால், இருட்டான வானம் உள்ள பகுதிகளில் கொஞ்சம் பொறுமையாக வானத்தைக் கூர்ந்து பார்த்தால் இந்த பச்சை வால் நட்சத்திரம் வெறும் கண்களுக்கே புலப்படும்.

இருநோக்கி (பைனாகுலர்) அல்லது தொலைநோக்கி (டெலஸ்கோப்) இருந்தால் நன்றாகப் பார்க்கலாம். இப்போது நாம் இந்த வால் நட்சத்திரத்தைப் பார்க்கவில்லை என்றால் பிறகு எப்போதும் நாம் பார்க்க முடியாது. தற்போது பூமியைக் கடக்கும் இந்த வால் நட்சத்திரம் பிறகு பூமியை நோக்கி மீண்டும் வராது. ஏனென்றால், சூரியன் கோள்களின் ஈர்ப்பு விசையால் இந்த வால் நட்சத்திரத்தின் பாதை நீள்வட்டப் பாதையில் இருந்து பரவளையப் பாதையாக மாறிவிட்டது. எனவே, இப்போது போனால் திரும்பவும் எப்போதும் திரும்ப வராது.

சமீபத்திய ஆராய்ச்சிகள்

வால் நட்சத்திரத்தைப் பற்றி கடந்த 30 வருடங்களாக நிறைய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. வால் நட்சத்திரங்களை ஆய்வுசெய்வதன் மூலம் சூரியக் குடும்பத்தின் தோற்றம் பற்றி நாம் பல்வேறு தகவலை அறிந்துகொள்ளலாம். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் மூலம் 67பி என்ற வால் நட்சத்திரத்தின் படம் ரொசட்டா என்ற விண் ஆய்வுக் கருவி மூலம் மிக அருகிலிருந்து எடுக்கப்பட்டது. (படம் 4இல் இதைக் காணலாம்)  

 படம்- 4: வால் நட்சத்திரம் 67பி புகைப்படம் 

அதேபோல் சில வருடங்களுக்கு முன் நாசாவின் விண்கலம் ஒன்று வைல்ட் 2 என்ற வால் நட்சத்திரத்தில் இருந்து கொஞ்சம் பகுதிகளைப் பூமிக்கு எடுத்துவந்து ஆராய்ந்து பார்த்ததில் பூமியில் உயிர் உருவாகத் தேவையான ஹைட்ரோகார்பன் போன்ற வேதிப்பொருட்கள் அதில் நிறைய இருந்தன. வால் நட்சத்திரம் பற்றிய ஆராய்ச்சிகள், பூமியில் உயிர் எப்படி உருவாகி இருக்க முடியும் என்கிற பல்வேறு கேள்விகளுக்கான விடையை நமக்கு தரக்கூடும். அப்படி பார்த்தால் பூமியை நோக்கிவரும் ஒவ்வொரு வால் நட்சத்திரமும் ஏதோவொரு அறிவியல் செய்தியை நமக்கு சொல்லத்தான் வருகிறது என்று அர்த்தம். எனவே, சூரியக் குடும்பத்தின் இந்தத் தூரத்துச் சொந்தக்காரரை, வாருங்கள் அனைவரும் வரவேற்போம்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஜோசப் பிரபாகர்

ஜோசப் பிரபாகர், இயற்பியல் விரிவுரையாளர். அறிவியல் எழுத்தாளர். 'நியூட்டன் முதல் ஈர்ப்பு அலைகள் வரை' நூலின் ஆசிரியர். தொடர்புக்கு: josephprabagar@gmail.com


4

2

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

தேவராஜன் சண்முகம்   1 year ago

நன்று நன்று நன்று. இருப்பினும் எளிய நடையில், சுருக்கமாக கொடுத்திருக்கலாம்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மணி மாது   1 year ago

மிகவும் ஆச்சரியமான மற்றும் அழகான தகவல். உங்களின் அறிவியல் எழுத்துக்கள் எங்களுக்கு மென்மேலும் ஊக்கமளிக்கிறது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

எதனால் வர்ண - ஜாதி எதிர்ப்பே இன்றைய தர்மமாக உள்ளதுஇயற்கை விவசாயம் முனைப்பு பெறுமா?தமிழக காங்கிரஸ்ஒரே தலைநகரம்ஓவியங்கள்அமெரிக்க ஆப்பிள் உற்பத்திஇளம் வயது மாரடைப்புஇதயம்ஒரே நாடு ஒரே தேர்தல்அழிந்துவரும் ஒட்டகங்கள்பிரஷாந்த் கிஷோருக்கு பிஹார் வசப்படுமா?பத்திரிகையாளர்கள்சியாட்டிகாசிவில் சமூக நிறுவனங்கள்திராவிடர் கழகம்கட்சிப் பிளவுவர்ண கோட்பாடுபிரீமென்ஸுரல் சின்ட்ரோம்உரத்து குரல்கொடுஉமர் அப்துல்லா உரைஆறு காரணங்கள்உயிர்ப்பின் அடையாளம்இந்திய வரலாற்றை இனி தென்னிந்தியாவில் தொடங்கி எழுத பல் சந்துதோற்றவியல்தினக்கூலிரவிக்குமார் கட்டுரைசம்பாரண்சாரு சமஸ் அருஞ்சொல் பேட்டிஇந்திய ஆட்சிப் பணியாளர்களின் மேட்டிமை மனநிலை!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!