கட்டுரை, கலாச்சாரம், அறிவியல் 10 நிமிட வாசிப்பு

பொங்கல் நாள் மாறிய மர்மம்

த.வி.வெங்கடேஸ்வரன்
21 Jan 2023, 5:00 am
2

ந்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகையை ஜனவரி 15 அன்று கொண்டாடினோம். முன்னர் பொதுவாக ஜனவரி 14  பொங்கல் நாளாக இருந்தது. ஆனால், சில ஆண்டுகளாக அது ஜனவரி 14, சில ஆண்டுகளில் ஜனவரி 15 என்றாகிவிட்டது.

ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன், 1901, 1905 ஆண்டுகளில் ஜனவரி 13 அன்றும் 1902, 1903, 1904 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி 14 அன்றும் பொங்கல் நாள் அமைந்தது. அது 2015, 2019, 2023, 2024, 2027 போன்ற ஆண்டுகளில் ஜனவரி 15 அன்றும், இடைப்பட்ட ஆண்டுகளில் ஜனவரி 14 என்றும் அமைந்துவிட்டது. அதாவது, ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 13 அல்லது 14 அன்றுதான் பொங்கல் என இருந்த நிலை மாறி, சில ஆண்டுகளில் ஜனவரி 14 அல்லது ஜனவரி 15 என்றும் மாறியுள்ளது. இது ஏன்? 

ஏன் இந்த மாற்றம்?

இதற்கு மிக மிகச் சுருக்கமான விடை: பஞ்சாங்கக் கணிப்பின் பிழை!

நெருப்புக் கோழி மணலில் தன் தலையைப் புதைத்துக்கொள்வதுபோல பழைமை எனும் சேற்றில் பஞ்சாங்கம் புதைந்துவிட்டது. 

சற்று நீளமான விளக்கம்: பூமி தன்னைத்தானே சுற்றிவருகிறது. மேலும் அது நீள்வட்ட பாதையில் சுற்றுகிறது. சூரியனைச் சுற்றிவரும் பாதையைக் கருத்தில் கொண்டால் பூமி தன்னைத்தானே சுழலும் அச்சு 23.5 டிகிரி சாய்வாக உள்ளது. இந்த இரண்டு இயக்கங்களைத் தவிர பூமிக்கு ‘அச்சுத்திசை மாறுமியக்கம்’ (precessional motion) எனும் இயக்கம் உள்ளது. இந்த இயக்கத்தைப் பஞ்சாங்கக் கணிதம் கருத்தில் கொள்வதில்லை. இதுதான் பஞ்சாங்கக் கணிதத்தில் பிசகு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். 

அச்சுத்திசை மாறுமியக்கம் என்றால் என்ன?

பூமியின் வடக்கு அச்சைக் கற்பனையாக நீட்டிக்கொண்டு போனால் வடக்குத் திசையில் வானத்தில் குறிப்பிட்ட ஒரு புள்ளியை நோக்கி அது இருக்கும். இரவு நேர வானில் அந்தப் புள்ளி அருகே தற்போது வட துருவ விண்மீன் உள்ளது. ஆனால், பூமியின் அச்சு ஆண்டுக்கு ஆண்டு இந்தப் புள்ளியிலிருந்து விலகிச் செல்கிறது. இந்த நகர்வு மிக மிகச் சிறிதாக இருப்பதால் நம்மால் எளிதில் உணர முடிவதில்லை. 

பம்பரம் சுற்றும்போது தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் அதன் தலையும் தள்ளாடும் அல்லவா? அதுபோல் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன், பூமியின் அச்சுத்திசையும் சுழல்கிறது. இன்று பூமியின் வடக்கு அச்சுமுனை துருவ விண்மீனை நோக்கி உள்ளது. அச்சு சுட்டும் திசை மாறுவதால் முற்காலத்தில் துருவ விண்மீன் நோக்கிப் பூமியின் அச்சு இருக்கவில்லை. எதிர்காலத்தில் இதேபோல இருக்காது. எடுத்துக்காட்டாக, கிபி 15,000 ஆண்டில் பூமியின் வடக்கு அச்சு ’வேகா’ (அபிஜித்) என்னும் விண்மீனை நோக்கி அமையும். 

பூமியைச் சுற்றி பந்து போன்ற உருவில் வானம் உள்ளது எனக் கற்பனை செய்யலாம். இந்தக் கற்பனைப் பந்தைத்தான் ககோளம் அல்லது வான் மண்டலம் (celestial sphere) எனக் கூறுவார்கள். விண்மீன்கள் எல்லாம் இந்தப் பந்தில் பதிந்துள்ளதுபோலக் கற்பனை செய்யலாம். பூமத்திய ரேகைக்கு இணையாக ஒரு வட்டத்தைக் கற்பனையாக இந்தக் ககோளத்தில் வரைந்தால் அதுதான் வான் நடுக்கோடு (Celestial equator). அது ‘விஷுவத் வட்டம்’ அல்லது ‘நாடி வலயம்’ என அழைக்கப்படுகிறது. 

ககோளத்தில் சூரியன் ஊர்ந்து செல்லும் தோற்றப்பாதையை சூரிய வீதி என்பார்கள். இந்த இரண்டு வட்டங்களும் ககோளப் பந்தில் இரண்டு புள்ளிகளில்  ஒன்றையொன்று வெட்டும். இந்த இரண்டு புள்ளிகள்தான் ‘விஷு’ என்று அழைக்கப்படுகின்றன. 

இந்தப் புள்ளிகளில் தோற்றப் பார்வைக்கு சூரியன் நிலைகொள்ளும்போது பூமியில் சம இரவு - பகல் நாள் - அல்லது ‘விஷு’ தினம் நிகழும். சூரியனை பூமி  சுற்றிவரும்போது சரியாக ஓராண்டு கடந்த பின்னர் வானில் அதே நிலையை அடைய வேண்டும். ஆனால், அச்சுத்திசை மாறும் இயக்கத்தின் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் அந்தப் புள்ளியைப் பூமி ஏறத்தாழ இருபது நிமிடத்திற்கு முன்பே அடைந்துவிடும். இதன் பொருள் ஏறத்தாழ 72 ஆண்டுகளில் ஏறத்தாழ ஒரு நாள் முன்னதாக அதே புள்ளியை வந்தடைந்துவிடும் என்பதுதான். 

இப்படித்தான் 72 ஆண்டுகளுக்கு ஒரு நாள் வீதம் என்ற முறையில் கடந்த 1900 ஆண்டுகளுக்கு முன்னர் ஏப்ரல் 14இல் நிகழ்ந்த ‘சித்திரை விஷு’ 26 நாட்கள் முன் சென்று தற்காலத்தில் மார்ச் 21இல் நிகழ்கிறது. ஏறத்தாழ கி.பி. 78இல்தான் ‘சாலிவாகன சகாப்தம்’ அல்லது ’சகா சகாப்தம்’ எனப்படும் நாள்காட்டி முறை வழக்கிற்கு வந்தது. அந்தக் காலகட்டத்தில் இருந்த வானியல் நிலைகளைக் கொண்டமைந்த பஞ்சாங்கக் கணிப்பை, வானவியல் மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் இன்றும் பின்பற்றுவதால்தான் வானியலின்படி மெய்யான சித்திரை விஷு’ (சம இரவு - பகல் நாள்) மார்ச் 21 அன்று நிகழ்ந்தாலும் பஞ்சாங்கம் இன்றும் ஏப்ரல் 14 என்றே பிழையாகக் கூறிவருகிறது.

மேலும்,  பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும்  கால அளவு 365 நாட்கள் 5 மணி 48 நிமிடம் 46 விநாடி. ஆனால், ஆரியபட்டர் கணிப்பின்படி இது 365 நாட்கள்  6 மணி 12 நிமிடம் 30 விநாடி. சூரிய சித்தாந்தத்தின் அடிப்படையில் இது 365 நாள் 6 மணி 12  நிமிடம் 36.56 விநாடி. இந்தப் பிழைகளிலும் பொங்கல் நாள் நகர்ந்து நகர்ந்து மாறிச் செல்வதிலும், பஞ்சாங்கக் கணக்கில் உள்ள பிழை பங்கு செலுத்துகிறது. 

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

தமிழ் ஓணம் ஆகுமா பொங்கல்?

சமஸ் | Samas 15 Jan 2023

பஞ்சாங்கப் பிழை 

அச்சுத்திசை மாறுமியக்கம் (precessional motion) எனும் இயக்கத்தைப் பஞ்சாங்கங்கள் தங்களது கணிப்பில் கருத்தில் கொள்வதில்லை. இதன் காரணமாக ஏற்படும் சில பிழைகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோலத் தெளிவாகத் தெரிகின்றன. 

பொங்கல் திருநாள் ‘உத்தராயணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. உத்தராயணத்தில்தான் கிழக்கு அடிவானில் சூரிய உதயப்புள்ளி அதிகபட்ச தென்கிழக்கில் அமைய வேண்டும். அதன் பின்னர் அடுத்தடுத்த நாட்களில் சூரிய உதயப்புள்ளி கிழக்கு அடிவானில் முந்தைய நாளைவிடச் சற்றே வடக்கு நோக்கி அமையும். உண்மையில் டிசம்பர் 20/21இல்தான் உத்தராயணம் நிகழ்கிறது. எனினும், ‘வாக்கியம்’, ‘திருக்கணிதம்’ போன்ற எல்லாப் பஞ்சாங்கங்களும் ஜனவரி 14/15ஆம் நாளையே ‘உத்தராயணம்’ எனப் தவறாகக் கூறுகின்றன. 

மேலும், பொங்கல் நாள் மகர சங்கராந்தி’ என்றும் அழைக்கப்படுகிறது. வானில் சூரியனின் நிலை மகர ராசியில் இந்த நாளில்தான் புகும் என்பதுதான் இதன் பொருள். ஆனால், உண்மையில் ஜனவரி 14/15இல் சூரியன் தனூர் ராசியில்தான் இருக்கிறது. டிசம்பர் 19 முதல் கிட்டத்தட்ட ஜனவரி 19 வரை தனூர் ராசியில் இருக்கும் சூரியன் மெய்யாக ஜனவரி 20 அன்றுதான் மகர ராசியில் புகும். எனவே, பொங்கல் தினத்தை ஒட்டியுள்ள இரண்டு பஞ்சாங்கக் கணிப்புகளும் பிழையானவை.

முன்னோர்கள் முட்டாள்களா?

ஆரியபட்டர் போன்ற புகழ் மிக்க வானவியலாளர்கள் அச்சுத்திசை மாறுமியக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் வானவியல் கணிதங்களைச் செய்தார்களா?  விண்மீன்களின் நிலையை உற்றுநோக்கி அதன் தொடர்ச்சியாக விஷ்ணுசந்திரா போன்ற வானவியலாளர்கள் அச்சுத்திசை மாறுமியக்கத்தைக் கண்டறிந்தனர். பண்டைய இந்திய வானவியலாளர்கள்  பலர், ஊஞ்சல் முன்னும் பின்னும் செல்வது போல அச்சுத்திசை மாறுமியக்கம் முன்னும் பின்னும் ஊசலாடும் என்று கருதினர். ஆனால், உண்மையில் பூமியின் அச்சு சுட்டும் புள்ளி வானில் வட்ட இயக்கத்தைக் கொண்டிருக்கிறது என்னும் கருத்தைச் சரியாகக் கண்டறிந்தவர் மஞ்சுளா (கிபி 932) என்னும் வானவியலாளர்தான். இந்த இயக்கத்தினைக் கருத்தில் கொண்டு பஞ்சாங்கக் கணிதம் திருத்தம் செய்யப்பட்டு செழுமை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. 

அச்சுத்திசை மாறுமியக்கத்தைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய திருத்தம் 'அயனாம்சம்' எனப்படுகிறது. ஆயினும் பஞ்சாங்கங்கள் அயனாம்சத் திருத்தத்தை ஏற்றுக்கொள்வதில்லை. பஞ்சாங்கக் கணிப்புகளில் அச்சுத்திசை மாறுமியக்கத்தைக் கருத்தில் கொள்ளாத ‘நிராயனா’ முறைதான் பின்பற்றப்பட்டுவருகிறது. 

இந்தியப் பஞ்சாங்க முறை நாள்காட்டியில் மட்டும்தான் பிழை ஏற்பட்டதா? இல்லை. ஐரோப்பாவில் பயன்படுத்திய நாள்காட்டியிலும் இத்தகைய போக்கின்  காரணமாகப் பிழை ஏற்பட்டது. ஐரோப்பியர்கள் முதலில் ஆண்டின் அளவு மிகத் துல்லியமாக 365.25 நாட்கள் எனக் கருதி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘லீப்’ நாளை சேர்த்துக்கொண்டார்கள். ஆனால், ஆண்டின் கால அளவு 365 நாட்கள் 5 மணி 48 நிமிடம் 46 விநாடி மட்டுமே. எனவே, நாளடைவில் ஐரோப்பிய நாள்காட்டியில் பிழை ஏற்பட்டது. மார்ச் 21 அன்று நிகழ வேண்டிய சம இரவு-பகல் நாள் தவறவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஈஸ்டர் பண்டிகையின் தேதியும் மாறிப்போய்விட்டது.  

இந்தச் சூழலில் கிரெகொரி என்பவர் 1582ஆம் ஆண்டு ஐரோப்பிய நாள்காட்டியில் சீர்திருத்தம் செய்து இன்று சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் வகையில் நாள்காட்டியைச் செழுமைப்படுத்தினார். இந்தச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் 1582 அக்டோபர் 4 முதல் அடுத்த பதினொன்று நாட்களை நீக்கி புது நாள்காட்டி உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த நாள்காட்டியில் 1582 அக்டோபர் 4க்கு அடுத்த நாள் 1582 அக்டோபர் 15 என அமைந்தது. இந்த சீர்திருத்தத்தை ஐரோப்பாவில் பல பழமைவாதிகள் ஏற்கவில்லை.

சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் உலகம் முழுவதும் இந்த முறை பின்பற்றப்பட்டது. எடுத்துக்காட்டாக ரஷ்யாவில் இந்தச் சீர்திருத்தம் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வந்தது. எனவேதான் ‘அக்டோபர் புரட்சி’ எனப்படும் ரஷ்யப் புரட்சி நவம்பர் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஏதோ இந்தியப் பஞ்சாங்கத்தில் மட்டும் காலப்போக்கில் பிழை ஏற்பட்டது எனக் கருத இயலாது என்றாலும், ஐரோப்பிய நாள்காட்டி சீர்திருத்தம் செய்யப்பட்டு தற்போது செம்மை அடைந்துள்ளது. 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

பொங்கலுக்கு ஒப்பான நாள் உலகில் ஏது?

சி.என்.அண்ணாதுரை 14 Jan 2022

பழமைவாதமும் சீர்திருத்தமும்

பண்டைய இந்திய வானவியல் அறிஞர்களுக்கு அச்சுத்திசை மாறுமியக்கம் ஏற்படுத்தும் பிசகு குறித்த அறிவு இருந்தும் ஏன் இந்தியாவில் பஞ்சாங்க சீர்திருத்தம் நடைபெறவில்லை? 

அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வானவியல் தத்துவங்களைப் படைத்த ஆர்யபட்டா, பாஸ்கர போன்றவர்கள் கடவுள் அருளால் இந்த ஞானத்தைப் பெற்றார்கள் எனக் கூறி ஆரியபட்டச்சாரியர், பாஸ்கராச்சாரியர் எனப் புனிதப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எழுதியது கடவுளின் அருள்வாக்கு என்றாகியது. கடவுளின் வாக்கைத் திருத்துவதற்கு நாம் யார்? கடவுள் அருளிச் செய்ததைச் செழுமைப்படுத்துவதா? இப்படியெல்லாம் கருதி இந்தியாவில் பஞ்சாங்கக் கணிப்பு செய்பவர்கள் திருத்தம் ஏதும் செய்யவில்லை. ஒருகட்டத்தில், குறிப்பாக சாதிய மனுநீதியின் செல்வாக்கு ஓங்கிய வரலாற்றுக் கட்டத்தில், வானவியல் வளர்ச்சியை பஞ்சாங்கக் கணிதம் கருத்தில் கொள்வதை நிறுத்தி, அவ்வளர்ச்சியைத் தேக்கம் அடையச் செய்துவிட்டது.  

தேக்கம் அடையும் எதுவும் முடைநாற்றம் வீசத் துவங்கும். அவ்வாறுதான் ஆர்யபட்டா, பாஸ்கர போன்றவர்களின் ஆய்வின் வழியே உருவான பஞ்சாங்கக் கணிதம் கடவுள் அருளியதாகச் சொல்லப்பட்டு ஜோதிடம் போன்ற அறிவியலற்ற போக்குடன் கைகோர்த்த பின்னர் தேக்கம் அடைந்து பிழைகள் மலிந்ததாகிவிட்டது. அதன் விளைவாக உத்தராயணம், தக்ஷிணாயனம், ராசிகளில் சூரியன் புகும் தினம், கோள்களின் நிலை போன்ற பஞ்சாங்கக் கணிப்புக்கும் நடைமுறை வானவியலுக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இதன் தொடர்ச்சியாக 2022 அக்டோபர் 25 அன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது சென்னையில் அதிகபட்ச கிரகணம் 17:42 மணிக்கு நிகழ்த்து; ஆனால், 16:18 மணிக்கு நிகழும் என வாக்கிய பஞ்சாங்கமும், 16:19 நிகழும் எனத் திருக்கணித பஞ்சாங்கமும் பிழையாகக் கூறின. 

மாற்றம் ஒன்றை தவிர எல்லாமே மாறும் 

ஆங்கில நாள்காட்டி என்றெல்லாம் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் அதுதான் தற்காலத்தில் உலகப் பொது கால அளவாகப் பின்பற்றப்படுகிறது. இணைய இணைப்பு, கணினி செயல்பாடுகள், செல்பேசி, இணைய வங்கி வர்த்தகம், மின்னஞ்சல் முதலியவற்றில் நேர முத்திரை வேண்டும். இந்த நாள், இந்த மணிக்குப் பரிவர்த்தனை நடந்தது எனக் குறிக்க வேண்டும் அல்லவா? இதற்கு ஒருங்கிணைந்த உலகப் பொது நேரம் (UTC) என்ற சர்வதேச பொதுக் கால முறைமை பின்பற்றப்படுகிறது. 

ரவை டப்பாவின் தலையைத் தட்டினால் ரவை துகள்கள் அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியில் புகுந்து திரண்டுவிடும். அதே டப்பவாவை பக்கவாட்டில் மெல்ல ஆட்டினால் ரவைத் துகள்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகி கட்டவிழ்ந்துவிடும். அதுபோல நிலநடுக்கம் ஏற்படும்போது பூமி திரட்சி பெற்று அளவில் சுருங்கும்; அல்லது இடையே விரிசல் அதிகரித்து பூமி சற்றே பெருத்துவிடும். 

பாலே நடனம் ஆடுபவர்கள் தங்களைத் தாங்களே சுழலவைக்கும்போது கைகளை விரித்தால் மெதுவாகவும், கைகளை மார்பில் கட்டிக்கொண்டால் வேகமாகவும் சுழல்வார்கள். அதுபோல பூமியின் அளவு சுருங்கினால் சற்றே வேகமாகவும், பூமியின் அளவு அதிகரித்தால் சற்றே மெதுவாகவும் சுழலும். அதாவது பூமி தன்னைத்தானே சுழல எடுக்கும் காலம் சற்றே மாறுபடும். இதுபோல பல்வேறு தாக்கங்களின் விளைவாக பூமியின் சுழற்சி அல்லது சூரியனை சுற்றிவர எடுக்கும் காலம் சீராக இருக்காது. அவ்வப்போது சிறு மாற்றங்கள் நிகழும்.

இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு அவ்வப்போது ஒருங்கிணைந்த உலகப் பொது நேர (UTC) நாள்காட்டியில் சீர்திருத்தம் செய்யப்படுகிறது. வானவியல் நேர அளவோடு ஒப்பிடும்போது ±0.9 பிழை மட்டுமே இருக்கும் வகையில் உலகப் பொது நேரத்தின்படி (UTC) கால அளவில் லீப் விநாடி சேர்க்கப்படும்; அல்லது நீக்கப்படும். 1972 முதல் இந்தக் கால சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. 2016 டிசம்பர் 31ஆம் தேதி இதுவரை கடைசியாக லீப் விநாடி (UTC) கால அளவையில் சேர்க்கப்பட்டது. அதாவது இன்றும் நவீன நாள்காட்டியில் தொடர்ந்து சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 

தேவை சீர்திருத்தம் 

உத்தராயண நிகழ்வு - அதாவது பரிதியின் வட செலவு (அதாவது பரிதியின் வட செலவு ’உத்தராயணம்’ என்பது சங்க இலக்கித்தில் இவ்வாறுதான் அழைக்கப்படுகிறது) - துவங்கும் நாள்தான் தை முதல் தேதி - பொங்கல் என அமைந்தது. பஞ்சாங்கக் கணிப்பும் மெய்யான வானவியல் இயக்கமும் வேறுபட்டு இருப்பதால் பொங்கல் தினம் மெய்யான உத்தராயண தினத்திலிருந்து விலகிச் சென்றுகொண்டே இருக்கும். சுமார் 72 ஆண்டுகளுக்கு ஒரு நாள் என்ற வீதத்தில் உத்தராயண தினமான டிசம்பர் 21/22லிருந்து பொங்கல் தினம் விலகிச் சென்றுகொண்டிருக்கும். எனவேதான் 1960களில் ஜனவரி 14 பொங்கல் தினம் என்று இருந்த நிலை மாறி ஜனவரி 15 என மாறிவருகிறது. சீர்திருத்தம் ஏதும் செய்யவில்லை என்றால் அடுத்த நூற்றாண்டில் இது ஜனவரி 16 என்று மாறிவிடும். 

அந்தக் காலத்தில் வாய்ப்புள்ள அளவிற்கு சீரிய முறையில் இந்திய விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டார்கள்; அன்று எது சாத்தியமோ அந்தக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள். ஆனால், அறிவியல் ஆய்வுசெய்து கண்டுபிடித்தார்கள் என்பதை ஒதுக்கிவிட்டு கடவுள் அருளியது - ஞான திருஷ்டியில் கண்டுபிடித்தது என்ற போக்கில் அணுகி ஒருகாலத்தில் கண்டுபிடித்ததை மேன்மேலும் செழுமைப்படுத்த பழமைவாதம் அனுமதிப்பது இல்லை. இந்தப் பழமைவாதிகள்தான் கணிப்புப் பிழைக்குக் காரணம். 

இந்தியாவில் உள்ள பஞ்சாங்கக் கணிதம் பிழைபட உள்ளது என்பதை உணர்ந்த அறிவியலாளர் மேகநாத் சாஹா, நாள்காட்டி சீர்திருத்தத்தை முன்மொழிந்தார். இதன் அடிப்படையில் ஒன்றிய அரசு ‘ராஷ்ட்ரிய பஞ்சாங்கம்’ என்னும் நாள்காட்டியை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இதன் அடிப்படையில் மார்ச் 21 நடைபெறும் சம இரவு - பகல் நாள்தான் ‘விஷு’ அதாவது சித்திரை முதல் நாள் எனக் கொள்ளப்படுகிறது. ஆனால், பஞ்சாங்கத்தில் ஏப்ரல் 14/15தான் ‘விஷு’. இது பிழை. இதுபோன்ற பிழைகளை நீக்கி ‘ராஷ்ட்ரிய பஞ்சாங்கம்’ வானவியல் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள்காட்டியை ஏற்றுக்கொள்பவர்கள் பஞ்சாங்கக் கணிப்பு செய்பவர்களில் எவரும் இல்லை. 

ஜனவரி முதல் நாளுக்கும் வானவியல் நிலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதுபோல வானவியலுக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல் ஆண்டில் ஏதோ ஒரு நாள் என பொங்கல் நாளை - தை முதல்  நாளைக் -  கருதினால் இன்றைய தமிழ் நாள்காட்டியில் எந்த மாற்றமும் தேவையில்லை. ஆனால், உத்தராயண நிகழ்வு நடைபெறும் அந்த நாள்தான் (அதாவது சூரியன் மகர ராசியில் புகும் நாள்) தைத் திங்கள் முதல் நாள் என வானவியல் அடிப்படையில் நாள்காட்டி அமைய வேண்டும் என்றால் அறிவியலின்படி தை முதல் நாள் டிசம்பர் 21/22 அன்று அமையும் வகையில் நாள்காட்டி சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதாவது வானவியல் நிகழ்வுகளோடு இணைந்த நாள்காட்டி இருக்க வேண்டும் என்றால் கிரெகொரி நாள்காட்டி சீர்திருத்தம் போலத் தமிழ் நாள்காட்டியிலும் சீர்திருத்தம் உடனடித் தேவை. 

 

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ் ஓணம் ஆகுமா பொங்கல்?
பொங்கலுக்கு ஒப்பான நாள் உலகில் ஏது?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
த.வி.வெங்கடேஸ்வரன்

த.வி.வெங்கடேஸ்வரன், அறிவியல் எழுத்தாளர். ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com


2

2

1




பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   1 year ago

இந்த மிகச்சிறந்த கட்டுரையை எழுதிய திரு த வீ வெங்கடேஸ்வரன் அவர்கள் அறிவியல் சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் புகழ்பெற்றவர் என்பதை பலர் அறிவார்கள் என்றாலும் அவரை அறியாதவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அவரை அறிமுகப்படுத்தி இருக்கலாம். நன்றி திரு வெங்கடேஸ்வரன் அவர்களே!

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   1 year ago

சிறப்பான கட்டுரை. இத்தகைய பஞ்சாங்கத்தின் அடிப்படையில்தான் பெரும்பாலான திருமணப் பொருத்தங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இது சீர்திருத்தப்படும் நாளில் திடீரென்று இலட்சக்கணக்கான மூல நட்சத்திர மணப்பெண்கள் அதிலிருந்து விடுபட்டு அவர்களின் 'சந்தை மதிப்பு' உயரும். அதேபோல ஆயிரக்கணக்கான ஆண்மூலங்கள் அரசாளும் தகுதியை இழப்பர். பிறை பார்த்து சொல்லும் மதகுரு நிலைக்கு ஏதாவது ஒரு வானியல் குறி பார்த்து பண்டிகையின் வரவை அறிவிக்கும் பணி வானியல் ஆய்வு மையத்துக்கு வந்துசேரும். பிரீமியம் தத்கல் அல்காரிதங்களை அதற்கேற்ப மாற்றவேண்டும். பொங்கல் வைக்க உகந்த நேரம் அமைவிடம் பொருத்து மதுரைக்கு ஒன்றாகவும் ஓசூருக்கு ஒன்றாகவும் சில நிமிடங்கள் மாறியமையலாம். பாரம்பரிய பஞ்சாங்க நிபுணர்களை மாற்றச் சொல்வதைவிட சீர்திருத்தப்பட்ட புதிய பஞ்சாங்கத்தை ஒரு மாற்றுமுயற்சியாக அறிவியல் அமைப்புகள் வெளியிடுவது நல்ல தொடக்கமாக அமையும்.

Reply 5 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அமைப்புசாரா தொழிலாளர்கள்நியாய் மன்சில்டாலா டாலாபடிப்படியான மாற்றங்கள்கே.சந்துரு கட்டுரைஅக்னிபாத்சமஸ் பேட்டிகள்திரைப்படங்கள்அதிகாரப்பரவல்நீட் எனும் தடைக்கல்முத்துலிங்கம் சிறுகதைகள்தெ.சுந்தரமகாலிங்கம் சாசனம்2024 மக்களவைத் தேர்தல்‘கல்கி’ இதழ்அம்பேத்கர் மேளாகுமரியம்மன்ஜெயகாந்தனின் மறுப்புஷுபாங்கி கப்ரே கட்டுரைவீட்டுக்கடன் சலுகைபிராமணர் என்றால் வர்ணமா? ஜாதியா?ஞானவேல் சமஸ் பேட்டிஆந்திர தலைநகரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டதின் பினவேண்டும் வேலைவாய்ப்பு கோலோச்சி நிற்கும் ஜாதியமும்மன்மோகன் சிங்இரண்டாவது முறை வெற்றிகலால் வரிகுதிகால் வலியைக் குறைக்க என்ன செய்யலாம்?ராஜாகுஜராத்தி வணிகர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!