கோணங்கள் 5 நிமிட வாசிப்பு

இரு நாடுகள் கொள்கைக்குப் புத்துயிர்?

ராமச்சந்திர குஹா
28 Dec 2021, 5:00 am
0

கிழக்கு பாகிஸ்தான் என்ற நாடு மறைந்த ஐம்பதாவது ஆண்டு நாளை இந்த மாதம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். வங்கதேச விடுதலைக்காகப் போராடியவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தபடியே இடைக்கால வங்கதேச அரசை 1971 ஏப்ரல் மாதமே அறிவித்திருந்தாலும், அந்த ஆண்டின் டிசம்பர் 6இல்தான் இந்திய அரசு அதை முறைப்படி அங்கீகரித்தது.

டிசம்பர் 16ஆம் நாள் கிழக்கு பாகிஸ்தான் தரைப்படை, லெப்டினென்ட் ஜெனரல் ஏ.ஏ.கே. நியாசி தலைமையில் இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்தது. சில வாரங்களுக்குப் பிறகு ஷேக் முஜிபுர் ரெஹ்மான் சிறையிலிருந்து விடுதலையாகி, டாக்கா திரும்பி புதிய நாட்டின் தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார்.

மூன்று பார்வைகள்

மூன்று வெவ்வேறு கண்ணோட்டங்களுடன், வங்கதேச உதயத்தை இந்தியாவில் பரவலாகக் கொண்டாடினார்கள்.

முதல் வகையினர், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியைத் தீவிரமாக ஆதரித்தவர்கள். இந்திராவினுடைய தொலைநோக்குப் பார்வை, துணிச்சல், அறிவு, ராஜதந்திரம் ஆகியவற்றை அற்புதமாக வெளிப்படுத்திய செயல்தான் வங்கதேச விடுதலை என்பது அவர்களுடைய பார்வை.

இரண்டாவது வகையினர், தேசியர்கள். 1962இல் சீனத்திடம் அடைந்த தோல்வியைத் துடைத்தெறியும் வகையில் இப்போரில் இந்தியா வென்றது என்பது அவர்களுடைய பார்வை.

மூன்றாவது வகையினர், இந்த வெற்றி ராணுவம் சார்ந்த வெற்றி என்பதைவிட - சித்தாந்தரீதியிலான வெற்றி, தார்மிக வெற்றி என்று அவர்கள் கருதினர். பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படும் முகம்மது அலி ஜின்னா முஸ்லிம்களுக்கென்று தனி நாடு தேவை, அவர்களால் இந்துக்களுடன் இணைந்து சம உரிமைகளுடன் ஒற்றுமையாக வாழ முடியாது என்று வாதிட்டு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளைப் பிரித்து பாகிஸ்தான் என்ற நாட்டைப் பெற்றார். அது மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று இரு வேறாகவும் பகிரப்பட்டது. ஆனால் அப்படி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளால்கூட ஒன்றாகச் சேர்ந்து இருக்க முடியவில்லை என்பதே வங்கதேச உதயம் கூறும் உண்மை. ஆகஸ்ட் 1947இல் பிரிவினையை இனி தடுக்க முடியாது என்பது உறுதியான பிறகு, நம்முடைய புதிய எல்லைக்கு அப்பால் நிலைமை எப்படியாக இருந்தாலும், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு முழு குடியுரிமைகளும் மத உரிமைகளும் வழங்கப்படுவதற்குத் தங்களுடைய அரசியல் அனுபவங்களை முழுதாகப் பயன்படுத்தினர் மகாத்மா காந்தியும் பிரதமர் நேருவும். பிரிவினையை இந்தியத் தலைவர்களால் தடுக்க முடியாமல் போனாலும் ஒரே நாட்டு எல்லைக்குள் இந்துக்களும் முஸ்லிம்களும் சமமான அந்தஸ்தும் உரிமைகளும் உள்ளவர்களாக வாழ முடியாது என்று ஜின்னா கூறியதை நிராகரித்தது இந்தியக் குடியரசு. இதை வங்கதேசத்தின் பிறப்பு உறுதிபடுத்துகிறது என்பது இந்தப் பார்வை.

கவனிக்க வேண்டிய பார்வை

1971இல் வங்கதேசம் பிறந்ததைக் கொண்டாடிய இந்த மூன்றாவது குழுவினரை, நாம் அரசமைப்பு தேச பக்தர்கள் என்றே அழைப்போம். காந்தி – நேரு பாணியில் செயல்படும் இந்த இந்தியர்கள் பாகிஸ்தான் தோற்றதாகக் கருதவில்லை – மாறாக பன்மைத்துவமும் மதச்சார்பின்மையும் வென்றதாகவே கருதினார்கள். ஜின்னாவும் அவருடைய முஸ்லிம் லீகும் நம்பியதற்கு மாறாக, இஸ்லாம் என்கிற மதம் கிழக்கு – மேற்கு பாகிஸ்தான்களை ஒன்றாக வைத்திருக்கத் தவறிவிட்டது.

இங்கே கவனிக்கத்தக்கது என்னவென்றால், வங்கதேசத்தை உருவாக்கியவர்கள் வலியுறுத்திய வங்காளி என்ற அடையாளம் மத அடிப்படையில் வங்காளிகளைப் பிரித்துப் பார்க்கவில்லை. 1947க்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானில் வாழ்ந்த இந்துக்கள் அலைக்கழிப்புக்கு ஆளானார்கள், இந்தியாவுக்குத் தொடர்ந்து குடிபெயர்ந்ததால் அவர்களுடைய எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது. 1971இல் கிழக்கு பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எண்ணிக்கை 10% ஆக இருந்தது. மேற்கு பாகிஸ்தானில் இருந்ததைவிட கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்கள் பொது வாழ்வில் செல்வாக்குள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். வங்கதேச விடுதலைப் போராட்டத்திலும் இந்துக்கள் பலர் முன்னிலை வகித்தனர். ராணுவத் தளபதிகள் ஜீபன் கனாய் தாஸ், சித்தரஞ்சன் தத்தா, முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் மோனி சிங் அவர்களில் அடங்குவர்.

மதச்சார்பின்மையிலிருந்து மதச்சார்புக்கு

வங்கதேசத்தின் முதலாவது அரசமைப்புச் சட்டம், தொலைநோக்குப் பார்வை உள்ள வழக்குரைஞர் கமால் உசைனால் தயாரிக்கப்பட்டது. அனைத்து மதங்களுக்கும் சம உரிமை அளிக்கும் மதச்சார்பின்மைக் கொள்கைதான் நாட்டை வழிநடத்தும் என்று 1972இல் அறிவிக்கப்பட்டது. இஸ்லாமிய மதத்துக்குச் சிறப்புரிமை எதுவும் கிடையாது என்று கூறப்பட்டது.

சட்ட அறிஞர் எஸ்.சி.சென் அப்போது எழுதியபடி, எந்த ஒரு மதத்தையும் அரசின் மதமாக அறிவிப்பதற்கும், மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவதற்கும் புதிய அரசமைப்புச் சட்டம் இடம் தரவில்லை. மத அடிப்படையில் எந்தக் குடிமக்களையும் பாரபட்சமாக நடத்துவதை இந்தச்  சட்டம் தடுத்தது.

1975இல் முஜிபுர் ரெஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பிறகு, நாட்டில் இஸ்லாமிய மத உணர்வு புதிதாக எழுந்தது. ஜெனரல் எர்ஷாத் தலைமையிலான வங்கதேச ராணுவ அரசு இதை மேலும் கிளறிவிட்டது. 1986-ல் வங்கதேச அரசமைப்புச் சட்டத்துக்குச் செய்த திருத்தத்தின் மூலம், வங்கதேசத்தின் அதிகாரப்பூர்வ மதமாக இஸ்லாம் அறிவிக்கப்பட்டது. அவாமி லீக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதன் தலைவர்கள், தொடக்கத்தில் இருந்த அரசமைப்புச் சட்ட வடிவத்துக்கே திரும்புவது பற்றி எப்போதாவது பேசுவது உண்டு. ஆனால் அவர்களும் அதை விரும்பவில்லை அல்லது அவர்களால் இயலவில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது.

சிறப்பான செயல்பாடு

வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது முதல் கடந்த ஐம்பதாண்டுகளில் பொருளாதார, சமூக தளங்களில் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. சுகாதாரம், வேலைசெய்வோரில் மகளிர் எண்ணிக்கை, நாட்டின் மொத்த உற்பத்தியில் மகளிரின் பங்கு ஆகிய அம்சங்களில் இந்தியாவைவிடச் சிறப்பாகச் செயல்படுகிறது. கடந்த ஆண்டு அதன் நபர்வாரி வருவாய் இந்தியாவைவிட அதிகம். அரசியல், மத தளங்களில் அந்த நாட்டை உருவாக்கியவர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப நாடு செயல்படவில்லை. சிறுபான்மைச் சமூகத்தவர் தொடர்ந்து பாதுகாப்பற்ற நிலையிலேயே வாழ்கின்றனர். எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன.

இது இப்படியிருந்தாலும் சகிப்புத்தன்மை, பன்மைத்துவம் குறித்து வங்கதேசிகளுக்கு உபதேசிக்கும் நிலையில், 1971-ல் இருந்தார்போல - இப்போது இந்தியர்கள் இல்லை என்பதும் முக்கியமானது. நரேந்திர மோடி 2014 மே மாதம் பிரதமராகப் பதவியேற்றது முதலாக, ஆளும் கட்சியானது இந்துப் பெரும்பான்மையினவாத செயல்திட்டங்களையே மூர்க்கத்தனமாக ஆதரித்துவருகிறது.

2015 செப்டம்பர் மாதம் உத்தர பிரதேசத்தில் அக்லக் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடங்கி - கர்நாடகத்தில் 2021 டிசம்பர் மாதம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்செயல்கள் வரையில், மோடி ஆட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மைச் சமூகத்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்துவருகின்றன. வங்கதேசப் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா, இந்துக்கள் மீதான தாக்குதலை வெளிப்படையாகக் கண்டித்தார், நம்முடைய பிரதமரோ, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்களின்போதெல்லாம் கண்டிப்பான மவுனத்தையே கடைப்பிடிக்கிறார்.

அமித் ஷா அணுகுமுறை

அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக 2019 மே மாதம் பதவியேற்ற பிறகு, இஸ்லாமியர்களைக் களங்கப்படுத்துவதும் சிறுமைப்படுத்துவதும் ஒன்றிய அரசின் கொள்கைகளின் ஒரு கூறாகவே ஆகிவிட்டது. இந்தியாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்த ஒரே மாநிலமான ஜம்மு-காஷ்மீரத்துக்கு இருந்த தனி அந்தஸ்தை ரத்துசெய்ததிலிருந்து, குடிமக்கள் தேசியப் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்க முயற்சி, இந்தியக் குடியுரிமைச் சட்டத்துக்கு திருத்த யோசனை (சிஏஏ) என்று பலவற்றிலும் அந்தக் கொள்கையே விரவிக் காட்சி தருகிறது.

சிஏஏ, என்ஆர்சி சட்டங்களைத் தீவிரமாக ஆதரித்துப் பேசியபோது ‘கரையான்களின் நாடு’ என்று வங்கதேசத்தைப் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாகச் சாடினார் ஷா. இந்த குரூரமான வர்ணனையை அந்த நாட்டின் அறிவுஜீவிகள் அனைவரும் வன்மையாகவே கண்டித்தனர். “இந்தியாவில் முஸ்லிம்களை உள்ளடக்கமாகவும் - தொடர்ந்தும் குறி வைத்து அமித் ஷா பேசிவருவது வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மையர்கள் மீது (இந்துக்கள்) எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்” என்று டாக்கா பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் மெஸ்பா கமால் 2019 அக்டோபரில் எச்சரித்தார்.

வரும் ஆண்டின் முற்பகுதியில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் பேசிய உள்துறை அமைச்சர், இந்துக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்த முயன்றிருக்கிறார். உத்தர பிரதேச முதலமைச்சரும்தான் மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட மக்களை மத அடிப்படையில் அணி திரள வைக்கும் முயற்சியிலேயே இறங்கியிருக்கிறார். சமீபத்தில் பிரதமரே வாராணசியில் இந்து மதத்தின் வெற்றிப் பெருமிதத்தைப் பறைசாற்றும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்.

ஒரு மறுபார்வை

இந்திய முஸ்லிம்கள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் வாழ தனி நாடு தேவை என்று 1940-களில் ஜின்னாவும் முஸ்லிம் லீகினரும் வலியுறுத்தினர். இப்போது 2020-களில் பாஜகவும் மோடி – ஷா ஆகியோரும் இந்துக்கள் பொருளாதார, அரசியல், சித்தாந்த தளங்களில் முஸ்லிம்கள் மீது தங்களுக்குள்ள ஆதிக்கத்தை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்கின்றனர். இந்தப் போக்கு காந்தி – நேரு உருவாக்கிய பாரம்பரியத்துக்கு நேர் எதிரானதாக இருக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் நண்பர்களாகவும் ஒற்றுமையாகவும் வாழும் தேசத்தைக் கட்டமைக்க அவர்கள் விரும்பினர்.

வங்கதேசம் 1971 டிசம்பரில் உருவான நிகழ்வு, ‘இரட்டை நாடுகள்’ கொள்கைக்கு முடிவு கட்டிவிட்டதாகவே இதுவரை கருதப்பட்டு வருகிறது. ஆனால் வரலாற்றின் நகை முரணாக, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கருத்து உயிரோடு இருப்பதுடன் வளர்ச்சியும் அடைந்துவருகிறது. அதுவும், அந்தக் கருத்து சரியல்ல என்று நிராகரித்த இந்தியாவிலேயே அது உரம் பெறுவது கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

4

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அயோத்திதாசர்: அடுத்தகட்ட பயணம்நாராயண குருஒழுக்கவாதியாக ஒளிர்ந்த ஐன்ஸ்டீன்தமிழகப் பள்ளிக்கல்வித் துறைதி கேரளா ஸ்டோரிசமஸ் உதயநிதி சனாதனம்கணினிமயமாக்கல்நவீன ஓவியம் அறிமுகம்லெனின் இன்று தேவையா?தொடர் தோல்விசர்வாதிகார அரசியல்மாபெரும் தமிழ்க் கனவு சமஸ் தோசை!அதானி: காற்றடைத்த பலூன்சுகந்த மஜும்தார்ஏற்றத்தாழ்வுதிமுக தலைவர்ஸ்வீடன்திருக்குமரன் கணேசன் புத்தகம்ஜெய்லர்கிளிமஞ்சாரோமனோஜ் ஜோஷிதேசிய நிறுவனங்கள்நைரேரேவின் விழுமியங்களும்கும்பிடுதென்னாப்பிரிக்க நாவல் சுயாட்சி – திரு. ஆசாத்எல்.ஐ.சி.ஹிட்லர்மோடி குஜராத்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!