கட்டுரை, கல்வி, ஆசிரியரிடமிருந்து... 4 நிமிட வாசிப்பு

புன்மை புத்தி மனுஷ்யபுத்திரன்

சமஸ் | Samas
03 Sep 2023, 5:00 am
6

றிஞர் அண்ணா 1967இல் முதல்வர் பொறுப்பேற்றபோது, அகில இந்திய வானொலியில் நிகழ்த்திய உரை அவருடைய முக்கியமான பேச்சுகளில் ஒன்று. அதன் மைய சாராம்சம், “இந்த அரசு உங்கள் ஒவ்வொருவருடையதும் ஆகும்; நாம் யாவரும் சேர்ந்து நடந்துவதே அரசு!”

சம்பிரதாய நிமித்தப் பேச்சு அதுவல்ல என்பது அந்த உரையை வாசித்தவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு துறையினரின் பங்களிப்பையும், இடையீட்டையும் கோரும் அந்த உரையில் அண்ணா ஓரிடத்தில் குறிப்பிடுவார், “கற்றறிவாளர் எம்மை வழிநடத்திட வேண்டும்.” இன்னோர் இடத்தில் குறிப்பிடுவார், “நாமாகத் தேடிப் பெற்றுக்கொண்ட அரசு இது. நம்முடைய துணையை நம்பியே ஏற்கும் அரசு இது. இது செம்மையாக நடந்திட நாம் துணையிருக்க வேண்டும் என்று எண்ணி ஒத்துழையுங்கள்!”

மக்களுக்கான அரசு என்பதற்கான இலக்கும், மக்களோடு இணைந்து பணியாற்ற விழையும் நல்லாட்சியாளர்களுக்கான இலக்கணமும் அதுதான். அரசை ஒரு கட்சியினுடைய சொத்தாக அணுகும் பார்வை ஜனநாயக விரோதமானது. பொதுச் சமூகம் அரசின் மீது  முன்வைக்கும் விமர்சனங்களையோ, ஆட்சியில் நடத்தும் இடையீடுகளையோ வெறுப்போடு அணுக இந்தப் பார்வை வழிவகுக்கும்.  இந்தியாவில் இன்று பாஜகவிடமும் சங்க பரிவார ஆதரவாளர்களிடமும் இதையே நாம் பார்க்கிறோம்.

2019 தேர்தலில், “ஒரு முன்மாதிரி முயற்சியாக மக்கள் குழுக்களிடமிருந்து பெறும் யோசனைகள், முன்மொழிவுகள் அடிப்படையில் காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும்” என்று ராகுல் காந்தி அறிவித்தார். ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தலைமையில் இதற்கான குழு அறிவிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் பயணித்து மக்களிடமிருந்து யோசனைகளைப் பெற்று, தேர்தல் அறிக்கையைச் சமர்ப்பித்தனர். பாஜகவும் அதையே காபியடித்தது. அப்போது நான் எழுதினேன், “ராகுலின் முயற்சி ஆக்கபூர்வமானது. ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன்னரே தமிழ்நாட்டில் இதைச் செய்தவர் அண்ணா.”

கொஞ்சமேனும் வாசித்தால், வாசிப்பதில் கொஞ்சமேனும் குருதியில் கலந்தால் இதெல்லாம் மனிதர்களின் பண்பில் பிரதிபலிக்கும்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் பல்வேறு மக்கள் நலக் குழுக்கள், செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகளிடமிருந்தும் மக்கள் நலத் திட்டங்களுக்கான யோசனைகளை வெவ்வேறு வட்டங்களில் பெறுவது திமுக உள்பட பல்வேறு கட்சிகளிலும் நடைமுறையில் இருக்கிறது. மக்களுக்கான திட்டங்களை இப்படியான சந்தர்ப்பங்களில் அரசியல் தலைவர்களிடம் பத்திரிகையாளர்கள் தெரிவிப்பது மிக இயல்பானது. 

எனக்கு ஒரு வழக்கம் உண்டு. எந்தத் தலைவர் / அதிகாரியைச் சந்திக்கும்போதும் அவர்கள் அதிகாரத்துக்குட்பட்ட – மக்கள் நலக் குழுக்கள் பேசும் – ஏதேனும் ஒரு விஷயத்தின் பால் அவர்கள் கவனத்தைக் கோருவேன். சிலது நடக்கும்; சிலது நடக்காது. மக்களுடைய குரலை ஆட்சியாளர்களுக்குக் கடத்துவதுதான் ஒரு பத்திரிகையாளரின் அடிப்படைக் கடமை என்பதால், அன்றாடம் எழுதுவதையும் பேசுவதையும் வாய்ப்பு அமையும்போது நேரிலும் சொல்கிறோம், அவ்வளவுதான்.

இப்படி எவ்வளவோ பேரிடமிருந்து அன்றாடம் எவ்வளவோ கோரிக்கைகள், யோசனைகள் வந்தாலும், ஆட்சியாளர்கள்தான் அதற்கு உயிர் கொடுக்கிறார்கள்; செயலுரு கொடுக்கிறார்கள். அவர்களே திட்டத்தின் பெருமைக்கு உரியவர்கள்.

காலையுணவுத் திட்டத்தை 15 ஆண்டுகளாக நான் எழுதிவருகிறேன் (முக்கியமான சில பதிவுகளை மட்டும் இங்கே தருகிறேன்). அப்படியென்றால், அது ஏதோ என் சிந்தையில் உதித்த திட்டம் என்பது அல்ல; திருச்சியில் கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளியில் விசாலாட்சி எனும் ஆசிரியரின் முயற்சியில் தொடங்கிய திட்டம் அது. பின்னர், திருச்சி நகரத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகள் உள்பட 25க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சிவக்குமார் எனும் ஆசிரியரின் அயராத உழைப்பால் பரவியது. உள்ளூர் மக்களின் பங்களிப்போடு வெற்றிகரமாக இது நடந்தது. இதுகுறித்து ‘தினமணி’யில் பல சமயங்களில் எழுதிய நான் 2010இல் தலையங்கமே எழுதினேன் (படமும் இணைப்பும்: கீழே).

தினமணி தலையங்கம்: காலை உணவுத் திட்டம் | செப்டம்பர், 15, 2010

கலைஞர் அரசின் கவனத்துக்கு அப்போது இது சென்றது. அந்தச் சமயத்திலேயே அத்திட்டம் தொடர்பில் அவர் விசாரித்து அறிந்தார்; ஆயினும், திட்டத்தின் செலவீனம் பெரும் சவாலாக இருந்ததால், அது முன்னெடுக்கப்படவில்லை. இதனிடையே ஆசிரியர் சிவக்குமாரின் முயற்சியில் மேலும் பல பள்ளிகளுக்கு இத்திட்டம் தொடர்ந்தது; நானும் தொடர்ந்தும் எழுதிவந்தேன்; 2013இல் காந்தியத் தாக்கத்தில் சமூக மாற்றங்களுக்காக உழைப்போரைப் பட்டியலிட்டு நான் ‘தி இந்து’வில் எழுதிய ‘மாற்றத்தின் வித்தகர்கள்’ தொடரில் காலையுணவுத் திட்டம் சார்ந்து சிவக்குமார் இடம்பெற்றார் (படமும் இணைப்பும்: கீழே).

தி இந்து தமிழ் | மாற்றத்தின் வித்தகர்கள்: சிவக்குமார் | அக்டோபர் 30, 2013

அடுத்து, ஜெயலலிதா அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். அவர் பரிசீலித்தார். 2011-16 ஆட்சித் தருணத்தில் விரைவில் அறிவிப்பு வரும் என்றார்கள்; என்ன காரணத்தினாலோ ‘அம்மா கேன்டீன்’ திட்டம் அறிவிக்கப்பட்டு, இத்திட்டம் அமுங்கிப்போனது. ஆனால், 2016 அதிமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா காலையுணவுத் திட்டத்தை அறிவித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அவர் மறைந்தார். அடுத்து ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை ‘அட்சய பாத்ரா’விடம் கை மாற்றினார். அப்போது கடுமையாக எதிர்வினை ஆற்றினேன்.

தொடர்ந்து, தலைவர்கள் கவனத்துக்கு இதைக் கொண்டுசெல்வது எனும் வழிமுறையின் ஒரு பகுதியாகத்தான் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்  ஸ்டாலின் கவனத்துக்கு இதைக் கொண்டுசென்றேன். அவர் மிகுந்த அக்கறையோடு இந்த விஷயத்தைக் கேட்டறிந்தார். தேர்தல் சமயத்தில், தேர்தல் அறிக்கை உருவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த – இன்றைய திட்டக் குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சனிடம் இதைப் பேச சொன்னார். அவரிடம் இத்திட்டத்தைக் கூறினேன். பின்னர் ஒருநாள் இத்திட்டம் குறித்து மூவரும் பங்கேற்ற ஒரு சந்திப்பில் விரிவாக விவரித்தேன். (இந்தத் திட்டம் கடந்துவந்த பாதையை ஜெயரஞ்சன் சென்ற ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்தார். அதில் அவரும் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். காண்க காணொளி: நிமிடம் 15:50 முதல் 18:02 நிமிடம் வரை)

ஜெயரஞ்சன் பேச்சு காணொளி | 2022 | காண்க: நிமிடம் 15:50 முதலாக 18:02 வரை      

தொடர்ந்து, திமுக தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் வெளியானது. தொடர்ந்து, அதிமுகவும் தன் தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தைக் கொக்ண்டுவந்தது. ஆனால், சொன்னதோடு அல்லாமல் முதல்வரான பின்னர் செய்தும் காட்டினார் ஸ்டாலின்.

இதனூடாகவே உலகெங்கும் எப்படி இத்திட்டத்தைச் செயலாக்குகிறார்கள்; இங்கே தமிழ்நாட்டில் நம்முடைய ஆட்சியாளர்கள் இதைச் செயல்படுத்தலாம் என்று சர்வதேச முன்னுதாரணங்களோடு முழுப் பக்கக் கட்டுரை ஒன்றை 2021இல் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் எழுதினேன். அந்தச் சமயத்தில் கல்வித் துறையினர் மத்தியில் பெரும் கவனிப்பைப் பெற்றது அக்கட்டுரை (படமும் இணைப்பும்: கீழே).

தி இந்து | காலை உணவுக்குத் தேவை கண்ணியமான கற்பனை  | மார்ச் 21. 2021 |  

இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், திமுக தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் இடம் பெறவும், பின்னர் அது அரசுத் திட்டமாக வடிவம் பெறவும் பல தரப்புகளின் எதிர்ப்பை இத்திட்டம் உள்ளுக்குள்ளேயே எதிர்கொண்டது. முதல்வர் ஸ்டாலினுடய உறுதிப்பாடே அது செயலாக்கப்பட  முக்கியக் காரணியாக இருந்தது. அதேபோல, இத்திட்டம் அரசாணையாக மாறுவதில் அதிகாரத் தரப்பில் ஜெயரஞ்சன், உதயசந்திரன் இருவரும் காட்டிய அக்கறையும் செயலுரு பெறுவதில் இளம்பகவத் கொடுத்திருக்கும் அக்கறையும் மிக முக்கியமானது.

மனிதர்களுடைய எந்த முன்னெடுப்பிலும் நம்முடைய முன்னோரின் நெடிய மரபு பங்களிக்கிறது. எவ்வளவோ முகம் தெரியாத மனிதர்களின் அர்ப்பணிப்பு இருக்கிறது. ஒரு பத்திரிகையாளன் அல்லது அறிவுச்செயல்பாட்டாளன் இந்தக் கண்ணிகள் அத்தனையையும் இணைத்து எழுதுவதும் பேசுவதும் கடமை. இத்திட்டம் தொடர்பிலான என்னுடைய கட்டுரைகளை வாசித்தால் இது புரியும். நீதிக் கட்சியின் பங்களிப்பும் அதில் இருக்கும்; காமராஜர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா பெயர்களும் அதில் இருக்கும்; விசாலாட்சி, சிவக்குமார் பெயர்களும் அதில் இருக்கும். ஆதாய அடிமைகள் சாமானியர்களின் பங்களிப்பை மறைக்க முற்படலாம்; அறிவு நாணயமுள்ள எழுத்தாளர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.

முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை அறிவித்த சமயத்தில் இந்த விஷயங்களைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதினேன். அது பின்னர் ‘முரசொலி’யிலும் வெளியானது. காலையுணவுத் திட்ட அறிவிப்பு வெளியானபோது நான் தெரிவித்த வாழ்த்தையும் முதல்வர் ட்விட் செய்திருந்தார்.

ஸ்டாலினின் காமராஜர் தருணம் | அருஞ்சொல் | ஆகஸ்ட் 1, 2022  | முரசொலி, 14, செப்டம்பர் 2022 |      

இப்படிப்பட்ட பின்னணியில்தான் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன் வக்கிரத்தைக் கொட்டியிருக்கிறார்: “அரசு கொண்டுவரும் மாபெரும் ஒரு திட்டத்தை ஒரு துக்கடா பத்திரிகையாளர் தான் முன்மொழிந்தது என்று கூறிக்கொள்வது மார்கோனி கண்டுபிடித்த ரேடியோவை ஒருவர் கொட்டாங்குச்சியில் பாட வைத்து, தான் கண்டுபிடித்ததாகக் கூறுவதற்குச் சமம்!”

எவ்வளவு மேம்பட்ட நூல்களைப் படித்தாலும், எவ்வளவு மேம்பட்டவர்களோடு பழகினாலும் சிலர் தங்களுடைய அற்பத்தனத்தால், புழுக்கைப் புத்திக்குள்ளேயே அகப்பட்டு அல்லலுறுவது இயல்பு. பரிதாபம்தான் இது!

இரு ஆண்டுகளாகவே என் மீதான தன்னுடைய தனிப்பட்ட காழ்ப்பை சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் மனுஷ்யபுத்திரன் கக்கிவருகிறார் என்பது அவரைப் பின்தொடர்பவர்களுக்குத் தெரியும். இதிலும் ஒரு தந்திரம் உண்டு. நான் சொல்லாத சொற்களைச் சொல்லியதான தொனியைத் தன்னுடைய வார்த்தைகளின் வழி உருவாக்கித் திரிப்பார். அந்தஅந்தத் திரிபின் மீது தன்னுடைய கட்சியின் அரசியல் சாயத்தைப் பூசுவார்.  அதாவது, ஏதோ அரசியல் சார்ந்து தன்னுடைய கட்சிக்கு வக்காலத்து வாங்குவதான தொனியில் தன்னுடைய தனிப்பட்ட காழ்ப்பை வெளிப்படுத்தும் சில்லரைத்தனம்.

நான் எல்லாவற்றுக்கும் எதிர்வினை ஆற்றுவதில்லை. இது பணி நேர்மையோடு சம்பந்தப்பட்டது என்பதால் எழுதுவது முக்கியம் என்று முடிவெடுத்தேன். ஏனென்றால், மனுஷ்யபுத்திரனைத் தொடர்ந்து ட்விட்டரிலும்  சில அல்லக்கைகள் இதே ட்ராலில் ஈடுபட்டன.

தங்களுடைய சுய வெறுப்பின் பெயரால், கருத்தியல் தளத்தில் பொதுவானவர்களுக்கான இடத்தை அழித்தொழிப்பதும், நேச சக்திகளையே பகையிடம் நோக்கித் தள்ளுவதுமே இவர்களால் செய்ய முடிந்த ஒரே காரியம். இந்த இரண்டாண்டுகளில் பலருக்கு இதை அவர்கள் செய்திருக்கிறார்கள். தங்களுடைய சொந்தக் கட்சிக்கே இவர்கள் அழிவு சக்திகள்.

ஊரில் ஒரு சாலையில் பள்ளம். படம் பிடித்துப் பிரசுரிக்கிறார் ஒரு பத்திரிகையாளர். அரசு நடவடிக்கை எடுக்கிறது. மறுநாள் “இது எங்கள் செய்திக்கான எதிரொலி” என்று குறிப்பிடுகிறது பத்திரிகை. இதற்குப் பின் இரு செய்திகள் உண்டு. 1. நாங்கள் குறையை உங்களிடமும் மக்களிடமும் தெரிவித்தோம்; செய்தீர்கள்; அதையும் தெரிவிக்கிறோம். 2. நன்றி, நல்லது, தொடருங்கள்!

இது இதழியலில் உலகெங்கும் உள்ள ஓர் ஆக்கபூர்வமான மரபு. ‘தினத்தந்தி செய்தி எதிரொலி’, ‘தினமணி செய்தி எதிரொலி’ அறிவிப்புகளை எல்லாம் யாரும் பார்த்தது இல்லையா, என்ன? யோசித்துப் பாருங்கள், நான் எழுதும் எல்லாவற்றுக்கும் இங்கே ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறேன். இவ்வளவு உண்மைகள் மத்தியிலேயே இவ்வளவு வெறுப்பும் புரட்டும் வெளிப்படும் என்றால், இவர்களை எல்லாம் எப்படி அறிவு நாணயம் கொண்டவர்களாகக் கருத முடியும்?

உண்மைதான். நான் மிகச் சிறியவன், எளியவன். ‘தினமணி’யில் தலையங்கம் எழுத வேண்டும் என்றால், அறிவிருந்தால் மட்டும் போதாது; தலை முழுவதும் நரைத்திருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், 2010இல் காலை உணவுத் திட்டக் கட்டுரையை ‘தினமணி’ தலையங்கமாகத் தாங்கி வந்தபோது என் வயது 30. திருச்சியில் சாதாரண உதவி ஆசிரியர் பணியில் இருந்தேன். ஆனால், அப்போதே என்னுடைய கட்டுரைகள்  அதிர்வுகளை உண்டாக்க ஆரம்பித்திருந்தன; அதற்கு ஒரே காரணம் எழுத்தில் உள்ள சத்தியம். ஜனநாயகத்தில் அசாதாரண பலம் மிக்கது சாமானியர்களின், உண்மையின் குரல்.

இரண்டாண்டுகளுக்கு முன் ‘அருஞ்சொல்’ தொடங்கிய பிறகு, அதில் எழுதப்பட்டு, தன்னுடைய கவனத்துக்கு வந்த பல விஷயங்களில் உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறது தமிழக அரசு.

இரண்டு துருவ உதாரணங்களைச் சொல்ல வேண்டும் என்றால், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தடாகம் ஊராட்சியைச் சேர்ந்த ஏ.அருண்குமார் எனும் விவசாயி அங்கு விளைவிக்கப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்வதில் நிலவும் சிக்கலை ‘அருஞ்சொல்’ இதழில் எழுதினார். கையோடு வேளாண் துறை அதிகாரியை அனுப்பி மறுநாளே நெல் கொள்முதலை முடித்தது அரசு.

இது ஒரு சின்ன விஷயத்துக்கான எதிர்வினை என்றால், பெரிய கொள்கை முடிவெடுப்புகளிலும் இப்படி ஆக்கபூர்வ எதிர்வினையாற்றியது அரசு. ‘தமிழகத்தின் உபி, பிகார் மாவட்டங்களை என்ன செய்யப்போகிறோம்?’ என்று ஒரு கட்டுரை. தமிழகத்தின் இதுவரையிலான தொழில் கொள்கை சென்னை பிராந்தியத்தையும் மேற்கு பிராந்தியத்தையும் மட்டுமே பிரதானப்படுத்தி செயல்படுத்தப்பட்டுள்ளது; ஏனைய பிராந்தியங்கள் இதில் எப்படிப் பாதிக்கப்பட்டுள்ளன என்று துல்லியமான புள்ளிவிவரங்களோடு விவரிக்கும் மூர்க்குமா செவின் கட்டுரை. வெளியான சில நாட்களில் அன்றைய தலைமைச் செயலர் இறையன்பு அழைத்தார். “முதல்வர் கவனத்துக்கு இது வந்தது.  நம்முடைய தொழில் கொள்கையை மேலும்  பரவலானதாக மாற்ற அரசு முடிவெடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் இன்று நடந்த துறைச் செயலர்கள் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. இந்தச் செய்தியை நீங்கள் வெளியிடலாம்!” என்றார்.

செய்தி வெளியானது. அரசுக்கு நல்ல பெயர் தரும் இந்தச் செய்தி ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு நியாயமாக மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், மனுஷ்யபுத்திரனுக்குப் பொத்துக்கொண்டு வந்தது ஆற்றாமை! உடனே கேவலமாகத் திரித்து ஒரு குறிப்பை எழுதினார்.  முதல்வர் அலுவலகம் வரை ஓர் இணைய பத்திரிகையின் குரல் எட்டுகிறதே என்கிற ஆத்திரமா அல்லது நானும் நடத்துகிறேன் ஒரு பத்திரிகை; இப்படி ஏதும் நடந்ததே இல்லையே என்கிற தாளாமையா என்று புரிபடவில்லை. ஏன் இதை எழுதுகிறேன் என்றால், எல்லாக் கல்யாணங்களிலும் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் எனும் மனநிலை கொண்டவர் மனுஷ்யபுத்திரன்; அதனால் அவராகவே எதிரிகளை உருவாக்கிக்கொள்வார்.

பொதுவாக, புகைவோர் அத்தனை பேருக்கும் ஒன்றைச் சொல்கிறேன்.

இன்று ‘அருஞ்சொல்’ இரண்டாண்டு நிறைவு நோக்கி நகர்கிறது. இங்கே யாருடைய அங்கீகாரத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது முன்னெடுத்திருப்பது முற்றிலும் ஒரு புதிய பாதை; பல முன்னணி பத்திரிகை அதிபர்கள் கதை கேட்கும் வெற்றிகரமான பாதை.  

ஒட்டுமொத்த பத்திரிகைகளும் இணையத்தில் ஒரு நாளைக்குப் பல நூறு செய்திகளை மக்கள் மீது கொட்டிக்கொண்டிருக்கும் நிலையில், ‘நாங்கள் அன்றாடம் ஒரேயொரு கட்டுரையை வெளியிடுவோம்; அதுவும் அன்றாட பரபரப்பு எல்லைக்கு முற்றிலும் வெளியே உள்ள அறிவார்ந்த கட்டுரைகள். விளம்பரம் கிடையாது. சந்தா செலுத்தி வாசிக்க வேண்டியது இல்லை. வாசிப்பது வாசகர்களுக்கு நிறைவு தந்தால் இதை அன்றாடம் கட்டணம் இன்றி வாசிக்கும் பல ஆயிரம் வாசகர்களுக்கும் சேர்த்து அவர்களாலான சந்தாவைச் சமூக சந்தாவாகச் செலுத்தலாம். 

இப்படியான ஏற்பாட்டோடு வரும் ஒரு பத்திரிகை இது. தமிழ் வாசகர்கள் கொண்டாடி அரவணைதத்தார்கள். சமீபத்தில்கூட ஒரு வாசகர் ரூ.25,000 சந்தா அனுப்பியிருந்தார். பணம் பெரிதல்ல; தமிழ்நாட்டில் 10 பத்திரிகைகளின் பல்லாண்டு கால உள்ளடக்கத்தை அளிக்கும் விகடன் குழும ஆயுள் சந்தாவே ரூ.6,000தான். எனில், ரூ.25,000 அனுப்பும் ஒரு வாசகர் இந்தப் பத்திரிகையை எவ்வளவு நேசிக்க வேண்டும்?

மூன்று நூல்களைப் பதிப்பித்தோம். எல்லாமே விற்பனையில் கோலோச்சுகின்றன. ‘சோழர்கள் இன்று’ மூன்று மாதங்களில் மூன்று பதிப்புகள் கண்டிருக்கிறது. 

காரணம் என்ன? அருஞ்சொல் எனும் பெயருக்கும் சமஸ் எனும் பெயருக்கும் பின்னுள்ள நம்பகத்தன்மை. உள்ளடக்கத்தில் உள்ள உத்தரவாதமான தரம். அதன் பின்னுள்ள இதழியல் அறம். மளிகைக் கடை ரோக்கா மாதிரி கிறுக்கித் தள்ளும் எல்லாவற்றையும் புத்தகமாக்கி வாசகர் தலையில் கட்டி பணம் பண்ணுவோர் மலிந்த ஒரு சமூகத்தில் இப்படியான பதிப்பறத்துக்கு மதிப்புக்குரிய ஓர் இடம் வாசகர்களிடம் இருக்கவே செய்யும்.

சந்தையில் இந்த மதிப்புக்குரிய இடம் வெளிப்படையாக இருப்பதால்தான் பெரும் ஊடக நிறுவனங்கள் இன்று ‘அருஞ்சொல்’லோடு  கை கோக்கின்றன. அரசியலர்கள், அதிகாரிகள் அலுவலகக் கதவுகள் - காதுகள்  'அருஞ்சொல்'லுக்குத் திறந்திருப்பதிலும் செய்தி உண்டு. ‘இதுவரை ஒரு நாள்கூட தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அணுகாத, மக்களுடைய  எண்ணவோட்டத்தைத் தாங்கி வரும் நேர்மையான குரல் அது’ என்பது இங்கே சகலருக்கும் தெரியும்.

சமீபத்தில் ‘சோழர்கள் இன்று’ நூலை வாசித்துவிட்டு, தேர்ந்த வாசகரான மணி கூறினார், ‘இந்திய இதழியலில் இதுவரை நடந்திராத பெரும் பணி இது. தமிழ்நாட்டின் 2500 ஆண்டு வரலாற்றைப் பேசும் இந்நூல் ஒருவகையில் திராவிட இயக்கக் கதையாடலுக்குப் பெரும் ஆவணம்.’ தலைமையாசிரியர் மாதவன் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலை வாசித்துவிட்டு  எழுதினார், “தமிழ்நாட்டில் ஒரு ஆசிரியரைப் பற்றி வெளிவந்திருக்கும் முதல் முழுமையான நூல். ஒவ்வொரு ஆசிரியரும் படிக்க வேண்டியது. பெரும் உந்துசக்தி தரும் நூல்.”

இதையெல்லாம் பேச இங்கே அறிவுத் துறையில் நாதியே கிடையாது; இவர்களுடைய  அற்பத்தனத்தையோ அளவிடவே முடியாது.

நாம் ஒருகாலத்தில் உயரப் பார்த்த மனிதர்கள் காலப்போக்கில் தரமிழந்து இப்படி உதிர்ந்துபோவதும், அவர்களை இப்படி எழுத நேர்வதும் தனிப்பட்ட வகையில் மிகுந்த துயரம். ஆனால், அடுத்தவர் மீது இழிச்சொற்களையும் அவதூறுகளையும் வீசுவோர் உரிய பதிலைப் பெற்றுத்தான் தீர வேண்டும். 

புகைவோர் புகைந்துகொண்டே இருங்கள்! அகங்காரமும் அற்பத்தனமும் உள்ளே பற்றியெரியும்போது வெளியே வார்த்தைகளில் புகை வெளிப்படுவதுதான் இயல்பு.

இப்போதைக்கு இன்னொரு செய்தியை மட்டும் சொல்லிவைக்கிறேன். தமிழகம் அவசியம் செய்ய வேண்டும் ‘அருஞ்சொல்’ குரல் கொடுத்த – ஆம் அருஞ்சொல் மட்டுமே தொடர்ந்து குரல் கொடுத்த – ஒரு தொலைநோக்குக் கனவு சில நாட்களுக்கு முன் நனவாகியிருக்கிறது. அது தொடர்பான அறிவிப்பு மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில், விரிவான தரவுகளோடு ஒரு கட்டுரையை விரைவில் எதிர்பாருங்கள்!

 

தொடர்புடைய கட்டுரைகள்

காலை உணவுத் திட்டம்!
மாற்றத்தின் வித்தகர்கள் 5 - சிவக்குமார்
காலை உணவுக்குத் தேவை கண்ணியமான கற்பனை
ஸ்டாலினின் காமராஜர் தருணம்
நெல் கொள்முதலில் கவனம் தேவை
தமிழகத்தின் பிஹார், உபி மாவட்டங்களை என்ன செய்யப்போகிறோம்?
தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் அழைப்பு

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


10

1

2
பின்னூட்டம் (6)

Login / Create an account to add a comment / reply.

K.SUSILKUMAR   8 months ago

செய்தித்தாள் வாசிப்பது எவ்வளவு அவசியமோ அதே வகையில் அதன் நம்பகத் தன்மை மிக அவசியம் அந்த வகையில் அருஞ்சொல் பெரும் பங்காற்றுகிறது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

sadathulla   9 months ago

உங்களை போன்று ஒரு கட்டுரை யாவது அவரால் எழுத முடியுமா. அருஞ்சொல் கண்ணியம் கருதி வார்த்தைகள் கள் மரியாதை உள்ளது. வேறு தளம் எனில் அவனை தாளித்து விடுவேன்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   10 months ago

:)

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

amarnath   10 months ago

அருஞ்சொல் பத்திரிகையின் தரம் அனைவரும் அறிந்ததே !! உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    10 months ago

பொதுமக்களாக நாங்கள் உங்களுக்கு எவ்வளவு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதை உங்கள் வாசகர்கள் அறிவோம்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   11 months ago

ஒரு மாற்றுத் திறனாளி எழுத்தாளர் இப்படி இருப்பது வருத்தம் அளிக்கிறது... ஆனால் திரு samas அவர்கள் பதில் உரையில் சில வார்த்தைகள் நல்லதல்ல. சற்று வருத்தம் அளிக்கிறது eg.. //புழுக்கைப் புத்தி,

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

வளவன் அமுதன் கட்டுரைபதேர் பாஞ்சாலிபினரயி விஜயன்நெட்வொர்க்கிங்மாயக் குடமுருட்டி: கர்த்தநாதபுரம்தென்னகம் வஞ்சிக்கப்படுகின்றனவா?துக்ளக் இதழ்ராகுலை யாரும் சந்திக்க முடியவில்லை: ஆசாத் பேட்டிநவீன விழுமியங்கள்இரண்டில் ஒன்று... காந்தியமாமத்திய பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டவர்மோடி பயணத்தின் பேசப்படாத கதைகள்ஆக்ஸ்ஃபாம்சட்டப்பூர்வ அங்கீகாரம்Inter State Councilஓபிஎஸ்மூலக்கூறுகளின் இணைந்த கைகள் வாங்கித்தந்த நோபல்!அகவிலைப்படிஎஸ்.ராஜா சேதுதுரை கட்டுரைநாராயண் ரானேலலாய் சிங்முதல் கட்டம்பஜாஜ் ஸ்கூட்டர்கள்புனிதப் போர்இளையோருக்கு வாய்ப்புஇந்தியா மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அரசியலுக்கு இருக்கவீரப்பன்பாடத் திட்டம்தேசிய ஊடகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!