கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, சமஸ் 10 நிமிட வாசிப்பு
ஸ்டாலினின் காமராஜர் தருணம்
பள்ளிப் பிள்ளைகளின் பசிக்குப் பொறுப்பேற்கும் சிந்தனை தமிழ்நாட்டுக்கு அறிமுகமாகி ஒரு நூற்றாண்டு காலம் ஆகிறது. நீதிக் கட்சியின் ஆட்சியில், பள்ளிகளில் மதியவுணவுக்காக முதலில் குரல் கொடுத்தவர் எல்.சி.குருசாமி. இந்தியாவிலேயே முன்னோடியாக பிட்டி தியாகராயர் அதைச் செய்தார்.
தியாகராயர் தலைமையிலான சென்னை மாநகராட்சி மன்றம் 16.09.1920இல் தீர்மானம் நிறைவேற்ற சென்னை, ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் முதன்முதலாக மதியவுணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ஒரு மாணவருக்கான உணவுச் செலவு ஒரு அணாவுக்கு உட்பட்டு இருந்தது. அடுத்து, மேலும் நான்கு பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. கல்விக்கும் உணவுக்கும் இருந்த தொடர்பை எடுத்த எடுப்பிலேயே இத்திட்டம் ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியது. இந்தப் பள்ளிகளில் 1922-1923இல் 811ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 1925-26இல் 1671 ஆக உயர்ந்தது.
¶
எல்லாப் பள்ளிகளிலும் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும் தேவை தொடர்ந்து பேசப்பட்டாலும், அத்தனை எளிதாக அது காரியம் ஆகவில்லை. 1945இல் சென்னை மாகாணம் முழுவதும் மக்களுடைய கொடைப் பங்களிப்புடன் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மக்களிடம் போதிய ஆதரவு இல்லாததால் அது தோல்வியுற்றது. ஆனபோதிலும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் அன்றைய அரிஜன நலத் துறைப் பள்ளிகளிலும் மட்டும் மதியவுணவு வழங்கப்படுவது தொடர்ந்தது. காமராஜர் ஆட்சிக்கு வந்த பிறகுதான், இது பெரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டு அரசின் எல்லாப் பள்ளிகளிலும் உணவு அளிப்பதைக் கடமையாக அரசு ஏற்றது.
சென்னையில் 1955 மார்ச் 7 அன்று பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்குச் சிறப்புரை முதல்வர் காமராஜர். பக்கத்தில் பொதுக் கல்வி இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு அமர்ந்திருக்கிறார். “மாநகராட்சி பள்ளிகளில் மதிய உணவு போடுகிறார்களே… ஏதாவது பலன் உண்டா?” என்றார் காமராஜர். சுந்தரவடிவேலு சொன்னார். “உண்டு ஐயா! பள்ளிக்கு வரும் பிள்ளைகளோட எண்ணிக்கை அதிகமாகுது! நம்ம பள்ளிகள்ல திங்கள் தொடங்கி வெள்ளி வரைக்கும் மதிய உணவு கொடுக்குறாங்க. சனிக்கிழமை அரை நாள் பள்ளிங்குறதால உணவு கொடுக்கிறதில்லை. சனிக்கிழமைகள்ல வருகைப் பதிவு பாதியா கொறஞ்சுடுது!”
காமராஜருக்குப் பிரச்சினையின் வேர்கள் ஏற்கெனவே தெரியும். சுற்றுப்பயணங்களின்போது, வழியில் ஆடுமாடு மேய்த்தபடி சிறுவர்கள் தென்பட்டால் அவர்களை அழைத்துப் பேசும் பழக்கம் அவருக்கு உண்டு. “ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை?” என்ற கேள்விக்குச் சொல்லிவைத்தார்போல, பலரிடமிருந்தும் அவருக்குக் கிடைக்கும் பதில் “வயித்துப் பொழப்புக்கு வழி இல்லைங்கய்யா…”
சுந்தரவடிவேலுவிடம் “சாப்பாட்டுக்கான செலவு எவ்வளவு?” என்று கேட்டார் காமராஜர். ஒரு மாணவருக்கான செலவு அப்போது ஒன்றரையணாவாக இருந்தது. வருஷத்துக்கு 210 நாட்கள் உணவு வழங்க வேண்டும். “ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு 20 ரூபாய் ஆகும்” என்றார் சுந்தரவடிவேலு. ஆரம்பப் பள்ளிகளில் 16 லட்சம் பேர் அப்போது படித்துக்கொண்டிருந்தார்கள். மூன்றில் ஒரு பங்கினருக்கு உணவு என்று கணக்கிட்டாலும் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஆகும்.
காமராஜர் அந்த மாநாட்டிலேயே திட்டத்தை அறிவித்தார். “நமது உடனடி வேலை ஒவ்வோர் ஊருக்கும் ஓர் ஆரம்பப் பள்ளியை உருவாக்குவது. ஏழைப் பிள்ளைகள் வயிறுக்குப் பெரும் பாடுபடுகிறார்கள். இதனாலேயே ஆடுமாடு மேய்க்கச் செல்கிறார்கள். பிள்ளைகள் எல்லோரையும் நாம் பள்ளிக்கூடங்களுக்கு வரச் செய்ய வேண்டும். அதற்கு வழி பள்ளிகளிலேயே மதிய உணவைக் கொடுப்பதுதான். இப்போது ஒரு கோடி ஆகும் என்கிறார்கள்; அடுத்த சில ஆண்டுகளில் இது மூன்று, நான்கு கோடி ரூபாய்கூட ஆகலாம். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு முன் இது பெரிய விஷயம் இல்லை. இதற்கென்று தனி வரிகூட போடலாம். நாம் இதைச் செய்வோம்!”
காமராஜர் பெரிய விஷயம் இல்லை என்று கூறினாலும், அரசுக்குத் திட்டச் செலவு பெரிய சுமையாகத்தான் இருந்தது. திட்ட ஆய்வுக்கூட்டம் நடந்தபோது வருவாய் துறைச் செயலர் ஆர்.எம்.சுந்தரம் சொன்னார், “இது பெரிய சவால். தவிர, அரிஜன பள்ளிகள் அனுபவத்திலேயே உணவு கொடுப்பதால் பிள்ளைகள் குறைவான பலனைத்தான் பெறுகிறார்கள்; ஒப்பந்ததாரர்களும் ஆசிரியர்களும்தான் இதைக் கொண்டு பிழைக்கிறார்கள். மாணவர்களுக்கு என்று சமைக்கும் சாப்பாட்டை ஆசிரியர்கள் சாப்பிடுவது மட்டுமல்லாமல் தங்கள் வீட்டுக்கும் கொடுத்து அனுப்புவார்கள். இத்திட்டத்தால் விரயமே ஏற்படும். திட்டத்தைக் கைவிடுவதே நல்லது.” காமராஜர் சொன்னார், “ஆசிரியர்களும் சாப்பிடட்டும், ஒன்றும் பிரச்சினை இல்லை. ஓட்டைகள் இல்லாமல் திட்டத்தை எப்படிச் செயல்படுத்தலாம் என்று மட்டும் யோசியுங்கள். நிதிச் செலவைப் பகிர்ந்துகொள்ள மக்களிடம் கையேந்தவும் நான் தயார்!”
இது அவர் பயின்ற விருதுநகர் 'சத்ரிய வித்யாசாலா' பள்ளிக்கூடத்தின் மரபிலிருந்து காமராஜர் பெற்ற பாடம். வீட்டில் அன்றாடம் சமைக்கும் அரிசியில் ஒரு பிடியைத் தன் பங்காகச் சமூக மகமைக்கு வழங்கும் பிடியரிசித் திட்டம் முதலான மக்களின் பங்களிப்பிலிருந்து 1885இல் உருவாக்கப்பட்ட பள்ளி அது. காமராஜர் சமூகப் பங்களிப்போடுதான் மதியவுணவுத் திட்டத்தை ஆரம்பித்தார். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் தங்களால் இயன்ற தானியங்களை, காய்கறிகளைக் கொண்டுவந்து தந்திருக்கிறார்கள். ஊர் வீதியில் பேரணியாகச் சென்று கடை கடையாக ஏறி உண்டியல் குலுக்கிக் காசு வசூலித்து பள்ளியில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள். இப்படியெல்லாமும் கூடித்தான் தம் குழந்தைகளின் பசி தீர்க்க முற்பட்டது தமிழ்நாடு.
¶
அடுத்து, இந்த இயக்கத்தை மேலும் விரிவாக்கியவர் எம்ஜிஆர். ஆரம்பப் பள்ளி மாணவர்களை மட்டும் இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட திட்டத்தை இரண்டு வயது குழந்தைகள் முதல் உயர்நிலை வகுப்புகள் படிக்கும் பதினைந்து வயது வரையிலான பிள்ளைகள் வரை அரசின் முழுப் பொறுப்பிலேயே விரிவுபடுத்தும் கனவு அவருக்கு இருந்தது. சத்துணவுத் திட்டம் என்று அதற்குப் பெயரிடப்பட்டு திருச்சி, பாப்பாக்குறிச்சியில் 01.07.1982இல் இது ஆரம்பிக்கப்பட்டது.
இளமையில் வறுமையையும் பசிக்கொடுமையையும் எதிர்கொண்டு வளர்ந்தவர் எம்ஜிஆர். தன் வீட்டுக்கு வருவோர்க்கெல்லாம் சாப்பாடு போட்டது முதல் சத்துணவுத் திட்டம் வரை உணவு வழங்கலில் அவர் காட்டிய கவனம் ஆத்மார்த்தமான அக்கறையின் வெளிப்பாடு. ரேஷன் கடைகளுக்கு மத்தியத் தொகுப்பில் இருந்து வரும் அரிசி புழுத்துப்போய் இருந்ததை ஒரு சுற்றுப்பயணத்தின்போது மக்கள் சொல்லக் கேட்ட எம்ஜிஆர், பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்கச் சென்றபோது அவரிடம் அரிசியை எடுத்துச்சென்று காட்டி முறையிடும் அளவுக்கு இந்த விஷயத்தில் கவனம் கொண்டிருந்தார். அங்கன்வாடிகளிலும் உணவு வழங்கப்படலானபோது, மாணவர்களின் பசியைத் தீர்த்ததோடு, கூலி வேலைக்குச் செல்லும் ஏழைப் பெற்றோர் தங்கள் குழந்தைகளை நம்பிப் பாதுகாப்பாக விட்டுச் செல்லும் காப்பகங்ளாகவும் அரசின் கல்விக்கூடங்கள் உருவெடுத்தன. குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தியதோடு, கணிசமான தாய்மார்கள் வேலைக்குச் செல்லவும், குடும்பங்களில் வறுமை குறையவும் இது வழிவகுத்தது.
¶
எம்ஜிஆர் காலத்தில் திட்டம் விரிவானது; மேலும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், பெற்றோர்கள் பலன் பெற்றார்கள் என்றாலும், பெயரில் இருந்த 'சத்து' உணவில் போதிய அளவுக்கு இல்லாமலே தொடர்ந்தது. அரசாங்கம் காய்கறிகளையோ ஏனைய பொருட்களையோ கூடுதலாக வாங்க நிதியை ஒதுக்கினாலும் திட்ட அமலாக்க ஓட்டைகளில் அது கசிந்துபோனது. உண்மையான சத்துணவாக அதை உருமாற்ற சரியான தீர்வைக் கண்டவர் கலைஞர்.
தொடர் கவனத்தோடு இதைக் கலைஞர் செய்தார். தன்னுடைய கட்சி ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் படிப்படியாக உணவில் சத்தைக் கூட்டினார். 1989இல் இரண்டு வாரங்களுக்கு சத்துணவில் ஒரு முட்டை வழங்கப்படும் என்று அறிவித்தவர், அதை 1998இல் வாரம் ஒரு முட்டை என்றாக்கினார்; 2006இல் வாரம் இரண்டு முட்டைகளாக்கப்பட்டு, 2007இல் அது மூன்று முட்டைகளாக்கப்பட்டு, 2008இல் வாரம் ஐந்து முட்டைகள் என்றாக்கப்பட்டது. கூடவே முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் என்றும் அறிவிக்கப்பட்டது.
¶
இவ்வளவுக்குப் பிறகும் பல முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிட நம்மூரில் வழங்கப்படும் உணவின் தரம் கீழேதான் இருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைவு பல லட்சம் குழந்தைகளிடம் பெரும் குறைபாடாக இருக்கிறது. காமராஜர் காலத்து வறுமையும், பசியும் இன்றைக்கு இல்லை என்றாலும், பல்லாயிரம் குடும்பங்களுக்கு இன்னமும் சரிவிகித சமச்சீர் உணவு சாத்தியமற்றதாகவே இருக்கிறது. அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் அவசரத்தில் தாய் தகப்பன் வாங்கிக் கொடுக்கும் டீயையோ பன்னையோ சாப்பிட்டுவிட்டு அரைப் பசி மயக்கத்தில் வகுப்பில் அமர்ந்திருக்கும் எத்தனையோ குழந்தைகளின் கதைகளை ஆசிரியர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
உலகெங்கும் உள்ள பல நாடுகளில், காலை உணவுத் திட்டம் அவசியமானதாகக் கருதப்பட்டு, மக்கள் நல அரசாங்கங்களினால் அது செயல்படுத்தப்பட கல்விக்கும் உணவுக்கும் உள்ள தொடர்பே காரணம். நம்மூரிலும் இப்படி ஒரு திட்டத்தின் தேவையை உணர்ந்தவர்கள் உள்ளூர் அளவில் மக்கள் பங்களிப்புடன் குழந்தைகளுக்கான காலை உணவுக்கான பொறுப்பேற்பை முயன்றனர்.
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளியில் அங்குள்ள ஆசிரியர்களால் அவர்களுடைய பங்களிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன் சுயாதீனமாக அப்படி சின்ன அளவில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் சீக்கிரமே திருச்சியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளால் வரித்துக்கொள்ளப்பட்டு, மக்கள் பங்களிப்போடு செயல்படுத்தப்படலானது. அப்போது வெளிப்பட்ட குழந்தைகளின் பசிதான் 'தமிழக அரசு ஏன் இப்படி ஒரு திட்டத்தை மாநிலம் தழுவிய வகையில் செயல்படுத்தக் கூடாது?' என்ற கேள்விக்கு அடிப்படையாக அமைந்தது. இந்த விஷயம் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவந்தது.
இந்த 15 ஆண்டுகளில் 'காலை உணவுத் திட்டம்' தொடர்பில், 'தினமணி', 'விகடன்', 'தி இந்து தமிழ்' என்று நான் பணியாற்றிய பத்திரிகைகளில் எல்லாம் தலையங்கம், கட்டுரைகள் என்று தொடர்ந்து எழுதிவந்திருப்பவன் என்பதோடு, இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தவிர மூன்று முதல்வர்களின் பரிசீலனைக்கு இந்தத் திட்டத்தைக் கொண்டுசென்றிருக்கிற அடிப்படையில் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மூன்று முதல்வர்களால் செய்ய முடியாததை, அவர்களில் இருவர் செய்ய விரும்பியும் அவர்களால் இயலாததைத் துணிந்து காரியமாக்க முற்பட்டிருக்கிறார் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அன்றைய முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா இருவரும் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள்; செயல்படுத்த விரும்பினார்கள். ஆனால், அதிகாரிகள் சுட்டிக்காட்டிய நிதிச் சுமையையும் வளர்ந்துகொண்டே செல்லும் செலவு சாத்தியத்தையும் எதிர்கொண்டு அவர்களால் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியவில்லை. இத்தகு பின்னணியில்தான் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரிய பிரகடனங்கள் ஏதும் இன்றி அமைதியாக இந்தப் புரட்சித் திட்டத்துக்கு அடிகோலியிருக்கிறார். பெரும் சவால்கள் நிறைந்த பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டுமே இன்று தமிழகத்தில் அரை கோடி சொச்சம் குழந்தைகள் படிக்கிறார்கள். ஒரு மாநகராட்சியில், சில பள்ளிகளில் மட்டும் என்று அல்லாமல், படிப்படியாக விஸ்திரிக்கும் வகையிலேயே இந்தத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விஸ்தரிக்க விரும்புகிறார் என்று தெரிகிறது. அந்த வகையில் தன் முன்னே இருக்கும் தடைகளையும், நிதிச் சவாலையும் முழுமையாக உணர்ந்து, கல்வியின் மீதான அக்கறையின் விளைவாகவே இந்தப் பொறுப்புக்கு முகம் கொடுத்திருக்கிறார். இன்னொரு நல்ல விஷயம், முதல்வருடைய சிந்தனையை ஒத்த அலுவலர் படை இன்று அமைந்திருப்பதும், அவர் எண்ணத்துக்கு ஏற்ப அவர்கள் திட்டத்துக்குச் செயல்வடிவம் கொடுக்க முனைவதும். மாநில வளர்ச்சிக் குழுத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், முதல்வரின் செயலர் த.உதயச்சந்திரன் இருவரும் இத்திட்டத்துக்கு உரு கொடுப்பதில் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார்கள்; திட்டத்தின் சிறப்பு அலுவலராக அறிவிக்கப்பட்டிருக்கும் இளம் பகவத் பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார். தொலைநோக்கோடு திட்டம் வகுக்கப்பட்டிருப்பதை வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றன.
இந்நாட்டில் வாழும் எவரும் பசியோடு இருக்கக் கூடாது என்று பசியாற்றுதலை அரசின் அடிப்படைக் கடமையாகக் கருதிய அண்ணாவின் பிறந்த நாளைத் திட்டத் தொடக்க நாளாகத் தேர்ந்தெடுத்தது சாலப் பொருத்தமானது. கல்வியோடு சேர்த்து, வறுமை ஒழிப்பிலும் ஊட்டச்சத்துக்குறைவுப் பிரச்சினையை எதிர்கொள்ளலிலும் இத்திட்டம் ஒரு பெரும் தாவலைத் தமிழ்நாட்டுக்குத் தரும். இனிவரும் காலங்களில் இது மேலும் மேலும் பலரால் விரிவுபடுத்தப்படலாம், செழுமையூட்டப்படலாம். அரசுப் பொறுப்பேற்பின் தொடக்கம் என்ற வகையில் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அறிவித்ததற்கு இணையான விஷயம் இது.
வரலாற்றாய்வாளர்கள் குறித்துவைத்துக்கொள்ளட்டும்; திமுக ஆட்சியின் மிக முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்றாகக் காலை உணவுத் திட்டம் அமையும். இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழகத்தில் தொடங்கும் இந்தத் திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் நாடு முழுக்கப் பரவும். பல மாநிலங்களின் முதல்வர்கள் இதை நகலெடுப்பார்கள். தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, இந்த மாநிலத்துக்கு வெளியே இருக்கும் குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்கும் கற்பனையைத் துவக்கிவைத்தவராக ஸ்டாலின் உணரப்படுவார். இந்த ஒரு திட்டத்துக்காகவே ஸ்டாலின் வரலாற்றில் நிலைத்திருப்பார்.
காலை உணவுத் திட்ட அறிவிப்புக்கான அரசாணையில் தமிழக அரசின் ஒரு குறிப்பு கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இன்றிலிருந்து ஆரம்பித்து கலைஞர், எம்ஜிஆர், காமராஜர் என்று இந்தத் திட்டத்துக்கான தடத்தை அது நீதிக் கட்சியோடு முடித்துக்கொள்ளவில்லை; மாறாக, சங்க காலத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டது. ஏழை எளியோரின் பசிப்பிணியைப் போக்குவதால் மன்னரை மருத்துவராக குறிக்கும் புறநானூற்றுப் பாடலான 'பசிப்பிணி மருத்துவன் இல்லம் / அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே' எனும் வரிகளைக் குறிப்பிட்டு, சங்கத் தமிழ் மரபின் தொடர்ச்சி இந்த முன்னெடுப்பு என்கிறது அந்தக் குறிப்பு. சங்க காலத்தில் பசிப்பிணி போக்கிய மன்னரின் பெயர் நமக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவரை இன்று நாம் நினைவுகூர்கிறோம்; அதுபோலவே ஏழை எளிய குழந்தைகளின் பசிப்பிணி போக்கும் ஆட்சியாளர்கள் வரிசையில் ஸ்டாலினும் அவருடைய சகாக்களும் என்றும் நினைவுகூரப்படுவார்கள்!
தொடர்புடைய கட்டுரை
காலை உணவுக்குத் தேவை கண்ணியமான கற்பனை
6
3
2
பின்னூட்டம் (6)
Login / Create an account to add a comment / reply.
Melkizedek 3 years ago
அண்ணா... இத்திட்டம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் பலன் தரலாம்... அவர்கள் குழந்தைகளுக்கு தரமானதை செய்யகூடும்... ஆனால் இருப்பதில் சிறிய கழிவு முட்டை, தரம் குறைந்த காய்கறிகள், தரம் குறைந்த மளிகை பொருட்கள் என்று மிக தெளிவாக பார்த்து பார்த்து செய்யும் நமது அரசுகளுக்கு இது தேவை இல்லாத ஆணி.... தங்களது சொந்த தனியார் பள்ளிகள் முன்னேற்றதிற்காக அரசு பள்ளிகளை கேவலமாக பராமரிக்கும் நமது அரசியல்வாதிகளை (கூட்டணியாக ஆட்சியில் இருந்த மற்றும் ஆட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை ) காமராஜர் கூட compare செய்வதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள் உங்களுக்கு புண்ணியமாய் போகும்... வேண்டுமானால் நமது அரசு கல்வி கூடங்களின் தரம் மற்றும் கல்வியின் தரத்தை உயர்த்த சொல்லி கட்டுரை எழுதுங்கள் அவை சரி செய்த பின் காலை உணவு பற்றி யோசிக்கலாம்... உங்கள் யோசனை 10% பயன் தரலாம் அவ்வளவே....
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
கனிமாசங்கர் 3 years ago
மாணவர்களுக்கு உணவு என்பது அடிப்படை உரிமை அதை வழங்குவது அரசின் கடமை.. நல்ல முன்னெடுப்பு அனைவருக்கும் வாழ்த்துகள் அங்கன் வாடிகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தையும் அரசு மாற்ற வேண்டும்..குழந்தைகள் உண்ண முடியாத சூழல் உள்ளது.. சுருக்கமாச் சொன்னா அரிசியை மாத்துங்க.. அடுத்து உயர்நிலை மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த கலவை சாதத்தை மாத்துங்க பசங்க சாப்பிட முடியாம கொட்டுராங்க..
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Periasamy 3 years ago
இந்த கட்டுரையினை பற்றி சுருக்கமாக சொல்வதானால் " ஓவர் பில்டப் ஒடம்புக்கு ஆகாது என்பது தான்..
Reply 2 2
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 3 years ago
திரு சமஸ் அவர்களின் இந்த கட்டுரையைப் படித்தபோது, நான் எனது வீட்டின் அருகில் இருந்த ‘காமராஜர் பள்ளியில்’ மதிய சாப்பிட்ட நினைவுகள் மனதில் வந்தன. மனம் கனத்து கண்ணில் நீர் அரும்பியது. அன்று அப்பள்ளி இல்லையென்றால் ஊரில் ஒரு குறு விவசாயியாகவோ அல்லது விவசாயக் கூலியாகவோ இருந்திப்பேன். மதிய உணவுத்திட்டத்தோடு இன்றைய திரு ஸ்டாலின் அரசின் காலை உணவுத்திட்டம் தமிழக கல்வி வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குழந்தைகளின் உடல், மன வளர்ச்சிக்கு பெருந்துணையாக அமையும். அர்த்தமுள்ள கட்டுரை வழங்கியமைக்கு நன்றி. நவகை ப.சரவணன்
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
udhaya kumar 3 years ago
பள்ளிகளில் மதிய உணவு சத்துணவாகவும் சுகாதாரமுமாக வழங்கப்படுகிறதா என்பதை எந்த அதிகாரி சோதனையிடுகிறார்? எத்தனை பள்ளிக்கூட சமையலறைகள் கவனிக்கப்படுகின்றன?
Reply 4 0
Periasamy 3 years ago
உண்மை..சுகாதாரமான, சத்தான மதிய உணவு இல்லை..இதில் காலை உணவு வேறு..
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.