கோடை விவசாயத்துக்கான காலம் இது. சில பகுதிகளில் அறுவடையை எதிர்நோக்கியிருக்கின்றன பயிர்கள். திடீர் மழைச் சூழல் விவசாயிகளைப் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது. முக்கியமான காரணம், குறுவை, சம்பா சாகுபடி பருவங்களைப் போல அதிகமான அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் கோடைப் பருவத்தில் இயக்கப்படுவது இல்லை. கோடை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் எண்ணிக்கை குறைவு என்பதால், அதற்கேற்ப கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கும். அதுவே சரியானதும்கூட.
இப்படிக் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படும் கொள்முதல் நிலையங்கள் முறையாக இயக்கப்படுவது முக்கியம். அப்படி அல்லாமல், குளறுபடிகள் ஏதேனும் நடக்கும்போது விவசாயிகள் அலைக்கழிப்புக்கும் நிலைகுலைவுக்கும் ஆளாவார்கள். ஏனென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த உழைப்பும் அப்போது பணயத்தில் இருக்கும். விளைந்த பயிர்களை மழை சாய்த்துவிட்டால் எல்லாமே நாசமாகிவிடும்.
இத்தகு சூழல் இப்போது சில இடங்களில் ஏற்பட்டுள்ளது ‘அருஞ்சொல்’ ஆசிரியர் குழுவுக்குத் தெரியவருகிறது. விவசாயி ஒருவரின் முறையீட்டை இங்கே பிரசுரிக்கிறோம். இதை ஓர் உதாரணமாகக் கருதி, கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் முறையாகச் செயல்படுவதை அரசு உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
விற்க முடியாத நிலை!
என்னுடைய பெயர் ஏ.அருண்குமார்; தந்தை பெயர் ஏழுமலை; நான் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தடாகம் ஊராட்சியில் வசிக்கிறேன். நான் ஒரு விவசாயி. மூன்று மாதங்களுக்கு நெல் பயிரிட்டேன். இன்னும் மூன்று நான்கு நாட்களில் அறுவடைக்குத் தயாரான நிலையில் அது உள்ளது.
இந்தச் சூழலில், 12.05.2022 காலை ஓர் இணைய சேவை மையத்திற்குச் சென்று எங்கள் தடாகம் கிராமத்திற்கு அருகேயுள்ள நல்லான்பிள்ளைபெற்றாள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லை விற்பதற்கான பதிவைப் பெற (e - DPC SYSTEM) முயன்றேன். ஆனால், இணையதளம் கேட்ட விவரங்கள் அனைத்தையும் பதிந்தும் இறுதியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியவில்லை; தேதி கிடைக்கவில்லை (Date Not Available) என்று தளம் சொல்கிறது.
அடுத்தடுத்த நாட்களுக்காவது முயற்சிப்போம் என்று ஒவ்வொரு தேதியாக முயன்றபோதும், ஏறத்தாழ ஒரு மாதக் காலத்துக்கு நல்லான்பிள்ளைபெற்றாள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனைக்குப் பதிவுசெய்திட இயலாத நிலையே வெளிப்பட்டது.
உடனே கட்டணமில்லா சேவை எண்ணுக்கு (18005993540) தொடர்புகொண்டேன்; அங்கு பேசியும் பலன் இல்லை. அவர்களாலும் உதவ முடியவில்லை. “எங்களால் எதுவும் செய்ய முடியாது. எல்லாமே சிஸ்டம் ஆகிவிட்டது!” என்று குறிப்பிட்டு கைவிரித்துவிட்டார்.
கோடை மழை பெய்கிறது வயலில் நெல் முளைக்க ஆரம்பித்துவிட்டது. மூன்று மாதமாக எங்கள் உழைப்பை விதைத்து, கடுமையாக உழைத்து விவசாயம் செய்தும் இறுதியில் குறிப்பிட்ட தேதியில் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து கவனம் செலுத்தி விவசாயிகள் பயிர் செய்த நெல்லைக் கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையானது, நல்லான்பிள்ளைபெற்றாள் நெல் கொள்முதல் நிலையத்தோடு முடிந்திடாமல், கோடை நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்துமே முறையாகச் செயல்படுவதை உறுதி செய்திடும் வகையில் அமைய வேண்டும்.
-ஏ.அருண்குமார், தடாகம்.
3
1
பின்னூட்டம் (6)
Login / Create an account to add a comment / reply.
Periasamy 2 years ago
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
KMathavan 2 years ago
காலங்காலமாக விவசாயி நித்தியகண்டம் பூர்ண ஆயுள் என்பது தான் உண்மையாக படுகிறது. மக்களின் பிரதிநி அருகில் தான் உள்ளார். அவர்களுக்கு ஏன் இதை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல முன் வர மாட்டேன் என தெரியவில்லை.கீழ் நிலையில் இருந்து ஒவ்வொரு நாளும் அமைச்சர் பெருமக்களை சந்தித்து கொண்டுதான் உள்ளார்கள் என்னதான் அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள், எத்தனை அருண்குமார் கவனத்தை முன்னெடுக்க முடியும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
ARUNKUMAR 2 years ago
இன்று 14.05.2022 காலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விழுப்புரம் மண்டல மேலாளர் பாலமுருகன் (RM TCSC VPM) ஐயா அவர்கள் எங்கள் தடாகம் ஊராட்சிக்கு நேரில் வருகை புரிந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள இடர்பாடுகளை குறித்து விசாரித்தார். பின்னர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டையை விற்பதற்கு ஏற்பாடு செய்தார். அனைவருக்கும் நன்றி......
Reply 1 0
VIJAYAKUMAR 2 years ago
வாழ்த்துக்கள். மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
ARUNKUMAR 2 years ago
நன்றி.... அருஞ்சொல். அரசு கவனம் செலுத்தும் என்று நம்புகிறேன்.....
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 2 years ago
நல்ல முன்னெடுப்பு.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.