கட்டுரை, அரசியல், கலாச்சாரம், சமஸ் கட்டுரை 4 நிமிட வாசிப்பு
முஸ்லிம்களுக்கான அநீதி: தோற்கடிக்கும் மௌனம்
பூங்காவைச் சுற்றி நடக்கும்போது, உடன் நடக்கும் நண்பர்கள் அன்றைய நாளில் கவனம் ஈர்க்கும் ஏதேனும் சிறு காணொலியையோ, செய்தித் துணுக்குகளையோ பகிர்ந்துகொள்வது உண்டு. அன்றாட விவாதங்களில் இதுவும் ஒரு பகுதி.
சென்ற ஒரு வாரத்தில் அப்படி நான் பார்த்த ஐந்து விஷயங்கள் முற்றிலுமாகத் தூக்கம் இழக்கச் செய்தன. நீங்களும்கூட அவற்றைப் பார்த்திருக்கலாம்.
முதலாவது, ரயில்வே காவலர் சேத்தன்குமார் பேசும் காணொலி. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில், பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சேத்தன்குமார் நான்கு பேரைச் சுட்டுக் கொன்றார். ஒருவர் அவருடைய மூத்த சகா. மற்ற மூவர் முஸ்லிம் பயணிகள். படுகொலைகளை முடித்துவிட்டு சேத்தன்குமார் பேசுவதான காணொலியில், அவருடைய பேச்சு தெளிவானதாக இல்லை என்றாலும், பேச்சின் சாராம்சத்தில் இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன. முஸ்லிம்கள் மீதான அவரது அளவற்ற வெறுப்பும் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவர் மீதான கண்மூடித்தனமான பிரேமையும்.
இரண்டாவது, ஓடும் ரயிலில், தனக்கு ஒதுக்கப்பட்ட பக்கவாட்டு மேல் படுக்கை இருக்கையில், யாருக்கும் சிறு தொந்தரவும் நேர்ந்திராத வகையில், ஒரு முஸ்லிம் பெரியவர் அமைதியாகத் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் சமயம், ஓர் இளைஞர் கூட்டம் சப்தமாக அனுமன் துதிப் பாடல்களைப் பாடியபடி பயணிக்கும் காணொலி. நேரடியாக அவர்கள் வெளிப்படுத்தவில்லை என்றாலும், இங்கும் செய்தி துல்லியமாகவே புலப்படுகிறது. பெரியவரைச் சீண்டுவதும் அதன் மூலம் தங்களிடம் உள்ள ஆழ்ந்த முஸ்லிம் வெறுப்பில் திளைப்பதுமே அவர்கள் நோக்கம்.
மூன்றாவது, கால்நடைகள் குடிப்பதற்கான சிறு தண்ணீர்த் தொட்டியில் ஒரு முஸ்லிம் இளைஞரைத் தள்ளி, அவரை ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று சொல்லச் சொல்லி ஒரு கும்பல் தடியால் அடித்து நொறுக்கும் காணொலி. உண்மையில் குஜராத்தில் ஒரு மாதத்துக்கு முன் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இப்போதுதான் பொதுவெளிக்கு வருகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள்தான் காணொலியைப் படம் எடுத்திருக்கிறார்கள். முஸ்லிம் வெறுப்பின் களிப்பு காணொலியில் தாண்டவமாடுகிறது.
நான்காவது, மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்த முஸ்லிம் மக்களுடைய காணொலி. முந்தைய நாள் வேலை முடித்துத் திரும்பிக்கொண்டிருந்த முஸ்லிம் இளம் பெண் மருத்துவரைத் துரத்தி, தாக்கி, பாலியல்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பொறுக்கிகள் மீது நடவடிக்கை கோரி அவர்கள் குவிந்திருந்தனர். ‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்திடுங்கள்; நாங்களும் மனிதர்கள்தான்; எங்களையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை இல்லையா?’ என்பதே போராட்டத்தின் மையச் செய்தி.
ஐந்தாவது, ஹரியாணா கலவரக் காணொலிகள். சர்வ சாதாரணமாக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களோடு கலவரக்காரர்கள் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். வெறுப்புக் கூப்பாடு போடுகிறார்கள். வாகனங்கள் கொளுத்தப்பட்டு எரிகின்றன. சாமானிய மக்கள் உயிருக்குத் தப்பி ஓடுகிறார்கள். ஹரியாணா முதல்வர் சில லட்சம் போலீஸாரை மட்டுமே வைத்துக்கொண்டு கோடி கணக்கான மக்களைக் கட்டுபடுத்துவது சவால் என்று வெளிப்படையாக அரசின் தோல்வியைச் சொல்கிறார். அப்படமான கைவிரிப்புதான் அது!
இந்தத் தொடர் செய்திகள் அத்தனையையும் அடுத்தடுத்து பார்க்கும் ஓர் இந்திய முஸ்லிம் எத்தகைய உணர்வுக்கு ஆட்படுவார் என்பதை என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை. கொஞ்சம் மாற்றி இந்தக் கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளலாம். ‘இதே சம்பவங்கள் இந்நாட்டில் நீங்களோ நானோ சார்ந்திருக்கும் ஒரு சமூகத்துக்கு இந்த ஒரு வாரக் காலத்தில் நடந்திருந்தால், நாம் அதை எப்படி எதிர்கொண்டிருப்போம்?’
எல்லா இடங்களிலுமே பாஜகதான் ஆட்சி நிர்வாகத்தைத் தன் கையில் வைத்திருக்கிறது. எல்லாச் சம்பவங்களிலுமே குற்றவாளிகள் ஆளும் தரப்போடு தன்னை அடையாளம் கண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சம்பவமும் முற்றிலும் வெவ்வேறு நபர்களால் நடத்தப்பட்டிருந்தாலும், இவை எல்லாவற்றையுமே ஒரே சங்கிலியின் கண்ணிகளாகவே நான் பார்க்கிறேன்.
பொதுவாக, கலவரங்கள் வெடித்த தருணங்களைப் பேசும் கதைகளில் நான் அக்கறை காட்டுவது இல்லை. காரணம், இரு சமூகங்களுக்கு இடையே வெடிக்கும் எந்தக் கலவரமும் ஒரு நாளில், ஒரு கணத்தில் தோன்றுவது இல்லை.
ஹரியாணா கலவரம் வெடித்ததாகச் சொல்லப்படும் தருணக் கதைக்குள் செல்வோம். நுஹ் நகரில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட ‘பிர்ஜ் மண்டல் ஜலாபிஷேக் ஊர்வல’த்தில் கல் வீசப்பட்டதுதான் மோதல்களின் தொடக்கம் என்றும், இப்படிக் கற்களை வீசியோர் முஸ்லிம்கள் என்றும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகான இந்தப் பத்தாண்டுகளில், நுஹ் கலவரமானது சங்கப் பரிவாரங்கள் இன்னொரு பரிசோதனை முயற்சிக்கு ஒத்திகையை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
இந்துக்களுக்கு இந்துத்துவம் தருவது வெறுப்பையும் மனநோயையும்தான்!
14 Apr 2022
கடவுளர்கள் அல்லது மதம் சார்ந்த ஊர்வலங்கள் என்ற பெயரில் சங்கப் பரிவாரங்கள் நடத்தும் ஊர்வலங்களை நேரில் பார்த்தவர்களுக்கு நான் சொல்ல வரும் கதை புரியும்; பெரும்பான்மையான ஊர்வலங்களில் அவர்களுடைய முழக்கமே சிறுபான்மையினரை – குறிப்பாக முஸ்லிம்களைச் சீண்டுவதாகவே இருக்கும். எதிர்வினை ஆற்றிய காலங்கள் போய் ஒருகட்டத்தில் முற்றிலுமாக இத்தகு சீண்டல்களைப் புறந்தள்ளினர் முஸ்லிம் மக்கள்.
நாட்டிலேயே பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பிராந்தியமான ஹரியாணாவின் நுஹ் நகரம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஓர் ஊர்; மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கினர் முஸ்லிம்கள். இங்கே முஸ்லிம்களைச் சீண்டுவதற்கு சமீப ஆண்டுகளாகவே இந்தப் பேரணியை ஒரு சந்தர்ப்பமாக சங்கப் பரிவாரங்கள் முயன்றுவந்ததாகத் தெரிகிறது.
இந்த ஆண்டு பேரணிக்கு பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த 'பசு குண்டர்' மோனு மனோசர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். ராஜஸ்தானில் சில் மாதங்களுக்கு முன், 'பசுக் கடத்தலில் ஈடுபட்டார்கள்’ என்ற பெயரில் ஜுனைத், நஸீர் எனும் இரு முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி மோனு; ராஜஸ்தான் அரசு மோனுவைக் கைதுசெய்ய முயன்றுவருகிறது.
மோனு இந்தப் பேரணியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதோடு, சமூக வலைதளங்களில் பழைய வெறுப்புப் பேச்சுகளும் பரப்பப்பட்டிருக்கின்றன. அண்டை மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசத்திலிருந்து ஊர்வலத்தில் பங்கேற்க ஆட்கள் திரட்டப்பட்டதோடு, ‘நாங்கள் வருகிறோம், தயாராக இருங்கள்!’ என்று சிலர் எச்சரிக்கும் காணொளிகளும் மக்கள் மத்தியில் உலா வந்திருக்கின்றன. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வெறுப்புக் கோஷங்களை எழுப்பியதோடு ஆயுதங்களோடு ஆர்ப்பரித்ததாகவும் கூறப்படுகிறது.
எல்லாமே உள்ளூர் முஸ்லிம்களைச் சீண்டி மோதலுக்கு விடுக்கும் அழைப்புதான். கடுமையான கசப்பில் அவர்கள் தள்ளப்பட்ட நிலையில், யாரோ சிலர் இந்தச் சீண்டலில் விழுந்தவுடன் மோதல் வெடித்திருக்கிறது. தொடர்ந்து, பதிலடி என்கிற பெயரில் வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள். ஒரு கலவரத்தைத் திட்டமிட்டு அரங்கேற்றுதல் என்பது இதுதான்; இப்போது உள்ளூரில் இந்துக்கள் – முஸ்லிம்கள் இடையிலான மூர்க்கமான பிளவுக்கு இந்தக் கலவரம் வழிவகுத்திருக்கிறது. மாநிலம் முழுவதும் கசப்பு கசிகிறது.
என்னைப் பொறுத்த அளவில், கலவரங்களின்போது பொதுச் சமூகம் கேட்க வேண்டியது ஒரே கேள்விதான், ‘ஆட்சியாளர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?’
மணிப்பூர் கலவரங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்; பிரதமர் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தலுக்கு மோடி செவி சாய்க்காததால், 10 நாட்களுக்கும் மேலாக இரு அவைகளிலும் அமளி நீடித்துவந்த காலகட்டத்திலேயே, ஹரியாணாவில் இப்படி ஒரு கலவரம் நடந்திருக்கிறது என்றால், என்ன காரணம்?
ரயில் பயணிகளைப் பாதுகாக்க வேண்டிய பணியில் ஈடுபட்டிருக்கிற ஒரு காவலர் கொலையாளியாகி, பயணிகளைச் சுட்டுக் கொல்வதோடு, அவர் தன்னுடைய பெயரையும் உச்சரிக்கிறார் எனில், ஒரு பிரதமரும் முதல்வரும் பதற வேண்டுமே; கூனிக்குறுக வேண்டுமே; இதற்காகவேனும் பொதுவெளியில் அந்தக் கடும் பாதகச் செயலில் ஈடுபட்டவரைச் சம்பிரதாய நிமித்தமாகவேனும் கண்டிக்க வேண்டுமே, ஏன் நடக்கவில்லை என்ற கேள்வியை நாம் எழுப்பிக்கொண்டால், கலவரங்களுக்குப் பொறுப்பேற்கும் தார்மிகம் ஏன் அவர்களிடம் இல்லை எனும் கேள்விக்கான பதில் நமக்குக் கிடைத்துவிடும்.
இந்தியாவில் இதுவரை நடந்திருக்கும் எத்தகைய பெரிய கலவரங்களுக்காகவும் நீதிமன்றத்தால் ஒரு பிரதமர் அல்லது முதல்வர் தண்டிக்கப்பட்டார் என்ற வரலாறே கிடையாது. ஒருபோதும் கலவரங்களுக்காகத் தாம் விலை கொடுக்கப்போவதில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; இன்னும் சொல்லப்போனால், இந்தக் கலவரங்களால் தேர்தல் அரசியலில் லாபம் அடைபவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்குத் தொடர்ந்து சொல்கிறது.
என்னுடைய கவலை அரசியலர்கள் தொடர்பானது இல்லை. தீர்க்கமான கருத்தியல் திட்டங்களுடனும், ஓட்டுக் கணக்குகளுடனும்தான் வெறுப்பு அரசியலை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். ஆனால், சமூகத்தின் இயல்பு என்னைப் பெரும் பதற்றத்துக்குள் தள்ளுகிறது. இவ்வளவையும் இவ்வளவு இயல்பாகக் கடக்கிறதே நம்முடைய சமூகம்; நாம் என்னவாக நம்மைச் சுற்றிய நாளைய நாட்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி என்னை ஆழமாகக் குடைகிறது.
எந்த ஒரு சமூகமும் எப்போதும் வெறுப்பரசியலர்களுடனேயே பயணப்படுகிறது. ஆனால், தன்னுடன் வாழும் சக மனிதர்கள் வெறுப்பரசியலால் தொடர் அநீதிக்கும் ஒடுக்குதலுக்கும் ஆளாகும்போது அதை மௌனமாக மக்கள் கடக்கப் பழகும்போதுதான் ஒரு சமூகம் நாசமாகிறது. ஒரு சமூகமாக நாம் மோசமாகத் தோற்றுக்கொண்டிருப்பதையே இந்தியாவில் இன்று முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் சுட்டுகின்றன!
தொடர்புடைய கட்டுரைகள்
கர்நாடகம்: இந்துத்துவத்தின் தென்னக ஆய்வுக் கூடம்
செழிக்கும் வெறுப்பு
குஜராத் 2002 தழும்புகள் மறையவே மறையாது
இந்துக்களுக்கு இந்துத்துவம் தருவது வெறுப்பையும் மனநோயையும்தான்!
முத்தலாக் முதல் ஹிஜாப் வரை: தலைகீழாக்கிய இந்துத்துவம்
மென் இந்துத்துவம் என்னும் மூடத்தனம்
2
1
1
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Vidhya sankari 1 year ago
முஸ்லிம்களுக்கெதிரான இந்த வன்முறைகளை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டிய கடமை பெரும்பான்மை இந்துக்களுக்குத் தான் இருக்கிறது.சமூக வளைதளப் பின்னூட்டங்களில் கண்டிக்கிற இடங்களில் சிறுபான்மையினர் பெயரைப் பார்த்தால் கூட வருத்தமாக இருக்கும்...திரளாகக் கண்டிக்க வேண்டியது நாமல்லவா என்று.மனிதத்தன்மை இல்லை என்பதற்காக கூட வேண்டாம்,தன் மதத்துக்கு இழுக்கு என்பதற்காகவேனும் மற்ற மதத்தினர் மீதான வன்முறையை இந்துக்கள் கண்டிக்க வேண்டும்.நேற்றைய தி இந்து கட்டுரை ஒன்றில் இந்த ரீதியில் இருந்தது.. இந்துத்துவ அமைப்புகளுக்கு மதம்,கடவுள், கோயில், வழிபாடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை இந்துக்கள் தந்து விட்டு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் என்று.எந்தக் கடவுள்/கோயில்/உரிமை நமக்கு முக்கியமானது என்பதை ஒரு மனநோயாளிக் கும்பல் நமக்கு சொல்லித் தருவதா என்ற சுரணை இந்துக்களுக்கு வரவில்லை என்றால் வெறுப்புணர்வு நம் அகக்கண்ணை மூடியிருக்கிறது என்று இந்துக்கள் உணர வேண்டும்.கடவுளுக்கும் வெறுப்புணர்வுக்கும் வெகுதூரம்,கடவுளை அடையும் மார்க்கத்தில் தாம் இல்லை என்று சகஇந்துக்கள் உணரவில்லை என்பது வருத்தமாக உள்ளது.இத்தகைய ஆட்சியாளர்கள், அரசு,வன்முறைகள் எல்லாம் பழகிப் போவதுதான் இருப்பதிலேயே பெரிய ஆபத்து! கலவரத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்காமல் கைவிரிக்கும் ஆட்சியாளர்கள் தான் நீட் தேர்வு வைக்கிறார்கள்!கடைநிலைக் காவலர் இருவர் கலவரத்தில் உயிரை விட்டிருக்கின்றனர்; காவல்துறை, உளவுத்துறை உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டும்.
Reply 3 0
Raja 1 year ago
"இந்துத்துவ அமைப்புகளுக்கு மதம்,கடவுள், கோயில், வழிபாடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை இந்துக்கள் தந்து விட்டு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்" - இந்து மதத்தின் அழகே அதன் கட்டற்ற சுதந்திரம் தான். அதை அமைப்புகளின் கைகளில் கொடுப்பதை போன்ற கேவலம் வேறு கிடையாது. ஆனால் இதை புரிந்து கொள்ளும் மனநிலையில் இந்துக்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல் அந்த அளவு வெறுப்புணர்வு கண்களை மூடி இருக்கிறது. பிஜேபி இந்த விஷயத்தில், தனது நோக்கத்தில் பரிபூரண வெற்றி அடைந்து விட்டது. இது எல்லாம் மாறுமா, மாறாமலேயே போய் விடுமா என்று தெரியவில்லை.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.