கட்டுரை, சுற்றுச்சூழல், அறிவியல் 5 நிமிட வாசிப்பு

உலகை மீட்போம்

ராமச்சந்திர குஹா
12 Sep 2023, 5:00 am
0

டந்த நாற்பதாண்டுகளில் எண்ணற்ற கல்விக் கருத்தரங்குகளிலும் இலக்கியத் திருவிழாக்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன். தென்னிந்திய மலை நகரமான உதகமண்டலத்தில் (ஊட்டி) ‘நீலகிரிக்காக நீலகிரியில் மாநாடு’ என்ற நிகழ்ச்சியில் கடந்த மாதம் பங்கேற்றேன். தமிழ்நாட்டில் உள்ள மிகவும் அழகான இந்த மலை மாவட்டம் சூழலியல் மாசு காரணமாக ஆபத்துகளைச் சந்திக்கும் நிலையில் இருப்பதால், ‘உயிரிக்கலாச்சாரம் மூலம் அழிவற்ற எதிர்கால’த்தை அளிப்பது எப்படி என்று ஆராய இந்த மாநாடு நடத்தப்பட்டது.

இப்பகுதியில் மக்கள் தொண்டர்கள், தொழில்முனைவோர்கள், ஆசிரியர்கள், மூத்த பழங்குடிகள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிவரும் சமூக அறிவியலாளர்கள், இயற்கை அறிவியலாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் உரையாற்றினர். வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், தாங்கள் சார்ந்த துறையின் சார்பாக தரமான யோசனைகளை வழங்கியதால் புதிதாகப் பலவற்றைக் கற்றுத்தருவதாகவும், இதுவரை நான் கலந்துகொண்ட மாநாடுகளிலேயே மிகவும் மகிழ்ச்சியானதாகவும் இருந்தது.

நானும் நீலகிரியும் 

தனிப்பட்ட முறையிலும் நீலகிரியுடன் எனக்குத் தொடர்புண்டு. இந்த ஊரில்தான் என்னுடைய தந்தை பிறந்தார். வாலிபப் பருவத்தில் என்னுடைய பெற்றோர் இதே ஊரில்தான் காதலில் மூழ்கினர். ஆனால், நான் மட்டும் இந்த துணைக் கண்டத்தின் மறுகோடியில் உள்ள இமயமலையின் கர்வால் மலைத்தொடர் அடிவாரத்தில் உள்ள கர்வால் நகரில் பிறந்தேன். கர்வால் மலைத்தொடரின் உட்புறக் குன்றுகளில்தான் என்னுடைய முதல் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டேன். என்னுடைய நாற்பதாவது வயதில்தான் ஊட்டிக்கு முதல் முறையாக வந்தேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் சிறிய விடுமுறைகளில் பலவற்றை இங்கு கழித்திருக்கிறேன், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நீண்ட நாளைக்குத் தங்கினேன்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் நீட்சியில் ஒரு பகுதிதான் நீலகிரி. கர்வாலோ இமயமலையின் ஒரு பகுதி. ‘நீல்கிரிஸ்கேப்ஸ்’ என்றும் அழைக்கப்பட்ட இக்கருத்தரங்கில் நிகழ்த்திய உரைகளிலிருந்தும் உரையாடல்களிலிருந்தும் இரண்டு மலைத்தொடர்களுக்கும் இடையிலான இணை வரலாற்றுத் தகவல்களை என்னால் அறிய முடிந்தது. 1. பிரிட்டிஷார் நம் நாட்டைக் காலனியாகப் பிடிப்பதற்கு முன்னால், 2. காலனியாக்கிய பிறகு, 3. காலனிக்கு விடுதலை தந்து வெளியேறிய பிறகு என்று இவையும் காலத்தால் மூவகைப்படும்.

இரண்டு பகுதிகளுக்கும் இடையில் உயிரிக்கலாச்சாரரீதியாக மிகப் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறேன். நீலகிரியில் வசிப்பவர்களும் கர்வாலில் வசிப்பவர்களும் மொழி, வழிபாடு, கலாச்சாரம், உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் முற்றிலும் வேறுபட்டவர்கள். தாவரங்கள், வன உயிர்கள், மண் வகைகள், புவியியல் அமைப்புகள் ஆகியவற்றிலும் இயற்கையான நில வனப்பிலும் இரு பகுதிகளும் மாறுபட்டவை. இருந்தும் நவீன சுற்றுச்சூழல் வரலாற்றில் இரு பிரதேசங்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகளும் உள்ளன, அவற்றை விளக்குகிறேன்.

நீலகிரியில் பிரிட்டிஷார்

பத்தொன்பதாவது நூற்றாண்டின் முற்பகுதியில்தான் பிரிட்டிஷ்காரர்கள் கர்வாலிலும் நீலகிரியிலும் தங்களுடைய வருகையை உள்ளூர்வாசிகள் உணரும்படியான செயல்களில் இறங்கினார்கள். அவர்கள் வருவதற்கு முன்னால், ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூர் மக்கள் தங்களுடைய பிழைப்புக்காக நான்கு விதமான பெரிய தொழில்களில் ஈடுபட்டுள்ளதைப் பார்த்தார்கள். பறவைகள் பிராணிகள் விலங்குகளை வேட்டையாடுவது, ஆடு-மாடுகளைப் புல்வெளிகளில் மேய்ப்பது, வேளாண்மை மூலம் காய்கறி, உணவு தானியங்களை விளைவிப்பது, சிறுவகையிலான கைத்தொழில்களில் ஈடுபடுவது என்று இருந்தனர்.

இரண்டு பகுதிகளுமே மக்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பெரும்பாலும் பூர்த்திசெய்துவிடும் அளவுக்கு தன்னிறைவு கொண்டிருந்தன. நீலகிரி மக்கள், சமவெளியாக இருக்கும் கொங்குநாட்டில் தங்களுடைய விளைபொருள்களையும் மற்றவற்றையும் கொண்டுபோய் கொடுத்து, தேவையானவற்றைப் பெற்றுக்கொண்டனர். கர்வால் மக்கள், கங்கைச் சமவெளியிலும் இமயமலையிலேயே இன்னொரு பகுதியான திபெத்திலும் உள்ளவர்களுடன் இத்தகைய வணிக உறவில் ஈடுபட்டு தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டனர்.

நீலகிரியிலும் கர்வாலிலும் வசித்த மக்களுக்கு உலக இயற்கையுடன் ஆழமாகவும் இயல்பாகவும் நீண்ட தொடர்பு தொடர்ந்தது. தங்கள் பகுதிக்குள்ள இயற்கை வளங்களுக்கேற்ப அவர்கள் குடும்பங்களாக இருந்து பிள்ளை-குட்டிகளைப் பெற்றார்கள். தங்கள் பகுதியில் உள்ள மண்ணின் வளம், அங்கு விளையக்கூடிய தாவரங்கள், அவற்றின் பயன்பாடுகள், ஆண்டுதோறும் அங்கு நிலவும் பருவநிலைகள் ஆகியவற்றுக்கேற்ப தங்களுடைய வாழ்க்கை முறையை தகவமைத்துக்கொண்டார்கள். குறிப்பிட்ட சில தாவரங்களையும் பாறைகளையும் நீர்நிலைகளையும் வழிபட்டனர், தங்களுக்கு அதிகம் பிடிபடாத பசுஞ்சோலைகளையும், தோப்புகளையும் ஏதும் சேதப்படுத்தாமல் அப்படியே பாதுகாத்து தங்களுடைய அடக்க சுபாவத்தை வெளிப்படுத்தினர்.

இவர்கள் நாகரிகம் அடைந்தவர்கள்தான், ஆனால் நவீன சமூகத்துக்கு முன்னால் வாழ்ந்தவர்கள். பிரிட்டிஷ் ஆட்சி இவ்விரு பகுதி மக்களுடைய வாழ்க்கையிலும் தீவிரமான மாற்றங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. சூழலியல் கோணத்தில் பார்த்தால், நீலகிரியில் ஓங்கி உயர்ந்த மலைக்காடுகள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் தேயிலைப் பயிர் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்டது. இமயமலையில் வியாபார நோக்கில் கப்பல் கட்ட, வீடுகள் கட்ட, எரிபொருளாகப் பயன்படுத்த என்று வழக்கமான மரங்கள் வெட்டப்பட்டு வேறு வகை மர வளர்ப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

காட்டை அழித்து தேயிலைப் பயிரை நீலகிரியில் வளர்த்ததும் கர்வாலில் தேவதாரு மரங்களைப் பெரும் எண்ணிக்கையில் வளர்க்க முற்பட்டதும் சூழல் ஸ்திரத்தன்மைக்கும் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் பெருத்த கேடுகளை விளைவித்துவிட்டது. சமூகரீதியாகப் பார்த்தால், மலைப் பிரதேசங்களுக்குச் சிறிதும் தொடர்பில்லாதவர்கள் வெளியூர்களிலிருந்து வேலை நிமித்தமாக பெரும் எண்ணிக்கையில் வந்து குடியேறினார்கள். தோட்டத் தொழிலாளர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள், ராணுவப் பயிற்சிக்கூடங்கள், பாசறைகளில் ராணுவ வீரர்கள், மலைப் பிரதேசத்தில் பொழுதைக் கழிக்க விரும்பிய உல்லாச விரும்பிகள் என்று ஏராளமானோர் வரத் தொடங்கினர்.

வெளியாள்கள் அதிகம் வரத் தொடங்கிய அதே காலத்தில், மலையிலேயே வசித்தவர்கள் பாரம்பரியமான வேலைவாய்ப்புகள் குறைந்ததால் வயிற்றுப் பிழைப்புக்காக சமவெளிகளில் இருந்த ஆலைகள், வீடுகள், அலுவலகங்களில் வேலை கேட்டுச் சென்றனர். பிரிட்டிஷ் ஆட்சி காரணமாக, இவ்விரு மலைப் பகுதிகளிலும் ஏற்கெனவே குடியிருப்புகள் அதிகமிருந்த ஊர் - சிறு நகரமாக வளர்ந்து, மலைவாசஸ்தலம் என்ற பெயரையும் பெற்றது, ஊட்டி, முசௌரி அப்படி பிரபலமாயின.

இயற்கையுடன் யுத்தம்

1947இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சமூகரீதியாகவும் சூழல்ரீதியாகவும் இந்தப் பகுதிகளை மாற்றியமைப்பது மேலும் தீவிரம் அடைந்தது. மலைப் பிரதேச ஆறுகளின் குறுக்காக அணைகள் கட்டப்பட்டு ஆங்காங்கே தண்ணீர் தேக்கப்பட்டது. இதனால் ஏராளமான பரப்பில் வன நிலங்களும் புல்வெளிகளும் நீரில் மூழ்கின. இந்த மலை நகரங்களுக்கு சாலை வசதிகளைச் செய்ததால் சிறு நகர மக்களுக்குத் தேவைப்படும் சாதனங்களும் கட்டிடக் கட்டுமான சாதனங்களும் பெரும் அளவில் கொண்டுவரப்பட்டன. காடுகளில் விளையும் பொருள்களும் மரங்களும் சமவெளிகளுக்கு வியாபாரத்துக்காக அதிக அளவில் கொண்டுசெல்லப்பட்டன.

புதிய அரசின் வளர்ச்சி திட்டங்களால் ஏராளமான அரசுத் துறைகளும் அதிகாரிகளும் ஊழியர்களும் குடும்பங்களுடன் ஆயிரக்கணக்கில் மலைகளில் குடியேறினர். நடுத்தர வகுப்பு மக்களுடைய எண்ணிக்கை உயர உயர, அவர்கள் சுற்றுலாவுக்காக மலைவாசஸ்தலங்களுக்கு வருவதும் அதிவேகமாகப் பெருகின. இப்படிச் சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்களால் மலைப் பகுதிக்கு வருமானமும் மலைவாசிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தன என்றாலும், வேறு பல தொல்லைகளும் விளைந்தன.

வருகிறவர்கள் குடிப்பழக்கத்தைக் கற்றுத்தந்தார்கள், குடிகாரர்களின் சண்டைகள் அதிகரித்தன, சொந்த வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் மலைப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் தாங்க முடியாமல் உயர்ந்துகொண்டேவருகிறது, எளிதில் மக்காத, மண்ணை நாசமாக்கும் குப்பைகளும் டன் கணக்கில் சேர்ந்துகொண்டேவருகின்றன. மலைக்கு வரும் பயணிகள் சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்ற கவலையே இல்லாமல், தாங்கள் கொண்டுவரும் பொட்டலங்கள், போத்தல்கள் போன்றவற்றை மலைக்கு வரும் வழியிலும் மரங்கள் அடர்ந்த சோலைகளிலும் - ஏன் ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலும்கூட அக்கறையின்றி வீசிச் செல்கின்றனர்.  

இதில் 1970களில் காடுகளை அழித்ததால் ஏற்பட்ட சூழலியல் மாற்றங்களும் சமூக நெருக்கடிகளும் ‘சிப்கோ’ என்ற மரங்களைக் காக்கும் இயக்கம் தோன்ற வழிசெய்தன. 1980களில் நீலகிரியிலும் குடிமக்கள் தங்களுடைய அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கினர். கர்வாலிலும் நீலகிரியிலும் சூழலை நாசமாக்கும் அம்சங்கள் பல்வேறு திசைகளிலிருந்தும் படையெடுத்துவிட்டன.

மரங்களை விற்பதற்காக காடுகளை அழித்துவிட்டனர், இதனால் மண் அரிப்பு அதிகரித்துவிட்டது, ரசாயன நச்சு உள்பட பல்வேறு நஞ்சுகள் மலைப்பிரதேசத்தில் குப்பையாக போடப்படுகின்றன, வேற்று நாடுகளைச் சேர்ந்த களைச் செடிகள் எங்கிருந்தோ வந்து மலைகளில் வேகமாக வளர்ந்துவிட்டன. சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அன்றாடமே ஆயிரக்கணக்கில் என்ற அளவுக்கு உயர்ந்துவருகிறது. இதனால் மலை வளத்தைக் காக்க முற்படும் இயற்கை ஆர்வலர்களுக்கும் சொந்த ஆதாயங்களுக்காக மலையை வீணாக்கும் அக்கறையற்ற பலருக்கும் இடையே அசமத்துவமான யுத்தம் நடக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

சூழலியல் முன்னோடி ராதாகமல் முகர்ஜி

ராமச்சந்திர குஹா 11 Dec 2022

பருவநிலை மாற்றம்

காடுகள் அழிப்பால் ஏற்பட்டுவிட்ட பருவநிலை மாற்றங்கள் இப்போது அனைவரையும் எட்டிவிட்டதால், மலைப் பகுதிகளின் இயற்கை வளத்தைக் காக்க வேண்டியது மிகவும் அவசரக் கடமையாகிவிட்டது. என்னுடைய இளம் வயதில் கர்வால் மலைப்பகுதிக்கு நேர்ந்த சேதம், முதிய வயதில் நான் பார்க்கும் நீலகிரி மலைப் பகுதியை எட்டாமலிருப்பதற்கு மூன்று அம்சங்கள் காரணம் என்று கருதுகிறேன்.

முதலாவது, கர்வால் பகுதியில் பாயும் நதிகள் இமயமலையின் பனிப்பாறைகள் உருகுவதால் தண்ணீராகத் திரண்டு மிகுந்த உயரத்திலிருந்து நிலத்தில் வந்து விழுகின்றன. அந்த நீர்த்திரட்சி அதிகம் என்பதால் நீர்மின்சாரம் தயாரிக்க அதிக செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை வரம்பின்றி அமைத்து வருகின்றனர். நீலகிரி மலைப்பகுதியில் மிகச் சில நீர்மின் நிலையங்கள்தான் இருக்கின்றன. இமயமலைக்கு மின்னுற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்திய அளவுக்கு இங்கு சேதம் ஏற்படாததற்கு இது முக்கியக் காரணம்.

இரண்டாவது, நீலகிரியின் புவியியல் அமைப்பு அதிருஷ்டவசமாக இயற்கையிலேயே நன்மை செய்துவருகிறது. இப்பகுதிக்கு கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலப் பகுதிகளிலிருந்து வர முடியும் என்றாலும் மூன்றுமே இந்திய மாநிலங்களாகிவிட்டதால் சூழல் காப்பு நடவடிக்கைகளை எடுப்பது எளிது. கர்வால் திபெத்தை ஒட்டி இருக்கிறது.

இந்திய – சீன உறவு பெரும்பாலும் சுமுகமற்று இருப்பதால், ராணுவத்தினர் எளிதில் செல்வதற்காக அங்கு அகலமான, உறுதியான சாலைகள் அதிகம் போடப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக ஏராளமான மரங்களை வெட்டுவது அவசியமாகிறது. இது சுற்றுச்சூழலை மேலும் பாதிக்கிறது. அது மட்டுமல்லாமல் பெரும் எண்ணிக்கையில் துருப்புகளை அங்கே தங்க வைப்பதும் சூழலுக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

மூன்றாவது அம்சம், மதம் சார்ந்தது. நீலகிரியில் சிறு தெய்வங்களுக்கான கோயில்கள், பெரிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என்று இருந்தாலும் இவையெல்லாம் யாத்திரைத் தலங்களோ பாடல் பெற்ற தலங்களோ அல்ல என்பதால் உள்ளூர் மக்கள் மட்டுமே சென்றுவருகின்றனர். கர்வாலில் ‘சார்தாம்’ என்று அழைக்கப்படும் நான்கு பெரிய யாத்திரைத் தலங்கள் இருக்கின்றன.

ஆண்டுதோறும் இந்த யாத்திரைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வருகின்றனர். பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி (கங்கை உற்பத்தியாகும் இடம்), யமுனோத்ரி (யமுனை உற்பத்தியாகும் இடம்) ஆகியவையே சார்தாம். புராணங்களுடன் தொடர்புள்ள இந்த இடங்களுக்கு யாத்ரிகர்கள் பாதயாத்திரையாக நடந்தும், மட்டக்குதிரை மூலமும் சென்று வந்த காலங்களில் பிரச்சினைகள் இல்லை. இப்போது மோட்டார் வாகனங்களில் பெரும் எண்ணிக்கையில் வருவதால் நான்கு வழிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சூழலுக்கும் சமூகவியலுக்கும் ஆபத்துகள் அதிகரித்துள்ளன.

கர்வாலும் நீலகிரியும்

கர்வால், நீலகிரி பகுதிகளுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் உணர்வுமயமான பாசம் நிலவுகிறது. எனவே, இரு பகுதிகளும் உயிரிக்கலாச்சார உதவியுடன் எதிர்காலத்தில் மீண்டு, நன்கு நிலைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். கர்வாலைப் பொருத்தவரை அதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே இப்போது கிடைக்கும் சான்றுகள் தெரிவிக்கின்றன. நீலகிரி மலையிலும் சமூக-சூழலியல் மேம்பாட்டுக்கு ஒருங்கிணைந்து பாடுபடுவது எளிதல்ல என்றாலும் - வாய்ப்புகள் அதிகம்.

நீலகிரிவாழ் மக்கள், அறிவியலாளர்கள், சமூக நலனில் அக்கறையுள்ள தன்னார்வத் தொண்டர்கள், தொழில்முனைவோர், மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசு அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால் நீலகிரியைப் பழைய நிலைக்கு அருகில் கொண்டுசென்றுவிட முடியும். முன்னர் இருந்த சோலைகளையும் வனங்களையும் மீட்கலாம், வேளாண்மையில் ரசாயன உரப் பயன்பாட்டை நிறுத்தலாம், சுற்றுலாவில் உள்ளூர் சமூகத்தவரின் நலனைப் பாதிக்காத வழிமுறையைத் தேர்ந்தெடுத்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்களை விலக்கலாம், மலையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்துவதுடன் வறண்டுவரும் ஆறுகளுக்கும் ஓடைகளுக்கும் புத்துயிர் ஊட்டலாம்.

ஜி-20 உச்சி மாநாடு முடிந்த பிறகு இக்கட்டுரை பிரசுரமாகிறது. சூழலைக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்த பிரகடனங்களும் வெளியாகிவிட்டன. இந்த மாநாட்டுக்குப் பிறகு சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முழு நம்பிக்கையுடன் எடுக்கப்பட்டுவிடும் என்று சொல்லிவிட முடியாது. உலக அளவில் சிந்திப்பது நல்லது – ஆனால், உள்ளூர் அளவில் நீலகிரியைக் காப்பாற்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவதே – மனிதகுல எதிர்காலத்துக்கும் இயற்கை நலனுக்கும் மிக மிக அவசியம்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

உலகம் எதிர்கொள்ளும் இரு பேராபத்துகள்
ஷரம் எல் ஷேக் மாநாட்டின் முக்கியத்துவம்
மாதவ் காட்கில்: மக்களுக்கான சூழலியலாளர்
சூழலியல் முன்னோடி ராதாகமல் முகர்ஜி
சிப்கோ இயக்கம்: தூற்றப்பட்ட ஒரு பாரம்பரியம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

2

1





மதுப்பழக்கம்மனத்திண்மைபால் வளம்நெஞ்செரிச்சல்நாடாளுமன்றத் தாக்குதல்கடவுச்சொல்எருமைத் தோல்ஷியாம்லால் யாதவ் கட்டுரைஉற்பத்தித் துறைஇந்திய ராணுவம்சூழலியல்ஐஎஸ்ஐ உளவாளிமிதவாதியுமல்லஜாதிகள்சுட்டுச் சொற்கள்இந்திய பொருளாதாரம்அளிப்புதிருக்கோவிலூர்கிசுமுஉணவு முறைபள்ளிக்கூடம்மூட்டு எலும்பு வளைவுவார்ஷாஆபாச இணையதளம்அபர்ணா கார்த்திகேயன் கட்டுரைஜார்ஜ் ஆர்வெல்கேரிங்ருசிமகாதேவர் கோயில்கடிதங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!