கட்டுரை, ஆளுமைகள், சுற்றுச்சூழல் 10 நிமிட வாசிப்பு

மாதவ் காட்கில்: மக்களுக்கான சூழலியலாளர்

ராமச்சந்திர குஹா
24 May 2022, 5:00 am
0

றிவியலாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ஆனால், அறிவியலைப் படிக்காமல் ஒதுங்கிவிட்டேன். இருந்தாலும் சுற்றுச்சூழல் அறிஞர் மாதவ் காட்கிலுடன் மிக முக்கியமான ஆக்கங்களில் இணைந்து பணியாற்றும் மகிழ்ச்சிகரமான வாய்ப்பு வினோதமாக எனக்கு அமைந்தது. அவருடைய எண்பதாவது பிறந்த நாள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வருகிறது. 

ஆடம்பரம் துறந்த ஆய்வாளர்

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் பிறந்த காட்கில், மும்பையில் படித்தார். பிறகு ஹார்வர்டில் உயர் கல்வி கற்றார். அங்கு சுற்றுச்சூழலியலில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். 1970களின் தொடக்கத்தில் அவரும் அவருடைய மனைவி சுலோச்சனாவும் அமெரிக்காவில் கிடைத்த வசதியான வாழ்க்கையையும் அந்தஸ்தையும் விட்டுக்கொடுத்துவிட்டு இந்தியா திரும்பி தங்களுடைய அறிவையும் உழைப்பையும் நாட்டுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்தனர்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் சுலோச்சனா. நல்ல வேளையாக, அவர்களுடைய அறிவுக்கூர்மையையும், நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் அடையாளம் கண்ட இந்திய அறிவியல் கழகத்தின் தீர்க்க சிந்தனையாளரான சதீஷ் தவான், அந்த அறிவியல் கழகத்தின் பெங்களூர் வளாகத்தில் இருவருக்கும் பணி வாய்ப்புகளை வழங்கினார். அங்கு வளிமண்டல அறிவியலுக்கான மையத்தை நிறுவினார் சுலோச்சனா. பருவநிலை குறித்து மிகவும் குறிப்பிடத்தக்க பணிகளை அவர் மேற்கொண்டார். சுற்றுச்சூழல் அறிவியலுக்கான மையத்தை மாதவ் காட்கில் உருவாக்கினார். பல இளம் அறிவியல் அறிஞர்களுக்கு அவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

மாதவ் காட்கிலின் அறிவியல் பணி எப்படிப்பட்டது என்று என்னுடைய நூலொன்றில் மிக விரிவாக எழுதியிருக்கிறேன். ‘ஒருவர் எந்த அளவுக்கு நுகர வேண்டும்’ (How Much Should a Person Consume?) என்ற நூலின் ஓர் அத்தியாயத்தில் அவரைப் பற்றி விவரித்திருக்கிறேன். இந்தக் கட்டுரையில் காட்கிலுடன் தனிப்பட்ட முறையில் எனக்கிருந்த உறவையும், அவருடனான தொடர்பு என் எழுத்துகளுக்கு எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

1982 கோடை காலத்தில் நாங்கள் முதல் முறையாகச் சந்தித்தோம். அப்போது அவர் கணித அடிப்படையிலான சூழலியல் ஆய்விலிருந்து, கள அடிப்படையிலான ஆய்வுமுறைக்கு வேகமாக மாறிக்கொண்டிருந்தார்.

பண்டிப்பூர் தேசியப் பூங்காவில் யானைகளின் வாழ்க்கைமுறை குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தவர், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சிக் கழகத்தில் உரையாற்ற வந்திருந்தார். அப்போது என்னுடைய தந்தை வன ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். வரலாற்றில் ஆய்வு மேற்கொண்டிருந்த நான், கோடை விடுமுறைக்காக கல்கத்தாவிலிருந்து டேராடூன் வந்திருந்தேன். அங்கு வந்த காட்கிலின் உரையைக் கேட்டேன். பிறகு அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். ‘சிப்கோ’ இயக்கம் குறித்து (வன மரங்கள் பாதுகாப்பு இயக்கம்) ஆய்வு செய்கிறேன் என்றேன். வன ஆராய்ச்சிக் கழகத்தின் விருந்தினர் இல்லத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பின்னாளில் நடைபெறவிருந்த கணக்கிலடங்காத உரையாடலின் ஆரம்பம் ஆங்கே தொடங்கியது. பிறகு பெங்களூர், டெல்லி, கல்கத்தா, கொச்சி, தார்வாட், புணே மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் வெவ்வேறு களங்களில அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.

பிராணிகளின் சூழலியல் குறித்து ஆய்வு செய்த மாதவ் காட்கில், தேசிய உயிரியல் பூங்காக்களை ஒட்டி வாழும் பழங்குடிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள் பலவற்றை நேருக்கு நேர் பார்த்தவர். ஆய்வு விரிவடைய விரிவடைய வன நிர்வாகத்தில் அவருக்குப் பரந்த ஆர்வம் ஏற்பட்டது. அரசின் கொள்கைகள் வணிக நோக்கங்களுக்கு மட்டும் அதிக முன்னுரிமை தருவதையும், விவசாயிகள், கால்நடைகளை மேய்ப்போர், கைவினைஞர்கள் ஆகியோர் நலனை அலட்சியம் செய்வதையும் பார்த்தார்.

பெயர் சொல்லியே அழைப்பேன்...

மாதவிடம் வலுவான சமுதாய நலன் சார்ந்த உணர்வு இருந்தது. இது அவருக்குப் பெருமளவு ரத்தத்திலேயே ஊறியிருந்தது, எஞ்சியது அவருடைய தந்தையிடமிருந்து பெற்றது.

மாதவ் காட்கிலின் தந்தை டி.ஆர்.காட்கில் பொருளாதார அறிஞர். மனித உரிமைகளில் ஆர்வம் மிகுந்த தாராள சிந்தனையாளர். பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கரின் சிந்தனைகளுக்கும் ஆக்கங்களுக்கும் தீவிர ரசிகர். சுற்றுச்சூழல் ஆய்வில் மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களிலிருந்து தரவுகளைத் திரட்டும் முறைக்கு மாதவ் காட்கில் மாறியிருந்தார். நானோ வரலாற்று ஆய்வில் கள ஆய்வுமுறையிலிருந்து மாறிக்கொண்டிருந்தேன்.

காலனியாதிக்கக் காலத்தில் வன வளம் தொடர்பாக, முந்தைய வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணித்த ஏராளமான தரவுகள், ஆவணக் காப்பகத்தின் பதிவேடுகளில் இடம்பெற்றிருப்பதைக் கண்டேன். ஆவணக் காப்பகங்களில் உள்ள பதிவேடுகளில் நான் படித்தவைக் குறித்து உணர்ச்சி பொங்க காட்கிலிடம் விளக்கினேன். அவரோ அவருடைய கள ஆய்வு குறித்து மிகவும் அடக்கமாகவே தெரிவித்தார். இருவரும் இணைந்து பணியாற்றினால், இருவராலும் தனித்தனியாக செய்ய முடியாததைச் செய்ய முடியும் என்பதை இருவருமே உணர்ந்தோம்.

மாதவ் காட்கிலும் நானும் இணைந்து 1992இல் ஒரு நூலை பதிப்பித்தோம். ‘திஸ் ஃபிஸ்ஸுர்ட் லேண்ட்: அன் எகோலஜிகல் ஹிஸ்டரி ஆப் இந்தியா’ (This Fissured Land: An Ecological History of India) என்பது அதன் பெயர். வனங்களை எப்படி ஆதாயத்துக்குப் பயன்படுத்தியும், எதிர்காலத்துக்குக் கிட்டாமல் சீரழித்தும் வருகின்றனர் என்பதன் தொடர் வரலாறுதான் அந்நூல். நூலுக்கு மதிப்புரை எழுதிய சிலர் தகவல்களில் ஆர்வம் காட்டினர். வேறு சிலரோ ‘வனங்களைப் பற்றி இப்படியா மனச்சோர்வு அளிக்கும் வகையில் எழுதுவது, எதிர்காலத்தில் எல்லாமே நாசமாகிவிடும் என்று தோன்றுகிறதே!’ என வருத்தப்பட்டனர்.

இதற்குப் பிறகு மேலும் ஆக்கப்பூர்வமாக எழுதுவது என்று இருவரும் தீர்மானித்தோம். பொருளாதார வளர்ச்சியும் கெடாமல், சுற்றுச்சூழலின் தன்மையும் கெடாமல் நீடிக்க என்ன செய்யலாம் என இந்தியர்களுக்கு விளக்கும் வகையில் எழுத முடிவெடுத்தோம். அடுத்த நூலை 1995இல் ‘எகோலஜி அண்ட் ஈக்யூடி: தி யூஸ் அண்ட் அப்யூஸ் ஆப் நேச்சுர் இன் காண்டெம்ப்ரரி இந்தியா’ (Ecology and Equity: The Use and Abuse of Nature in Contemporary India) எனும் தலைப்பில் வெளியிட்டோம். 

இரண்டு நூல்களுமே தொடர்ந்து விரும்பி வாசிக்கப்பட்டு அடுத்தடுத்து பதிப்புகளைக் கண்டுவருகின்றன. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்ட மறுபதிப்பு கண்ட நூல்கள் வரிசையிலும் அவை இடம்பெற்றுள்ளன. எனவே அந்த நூல்களில் உள்ள சுருக்கத்தையோ, அவற்றுக்குக் கிடைத்த எதிர்வினைகளைப் பற்றியோ எழுதப்போவதில்லை. அதேசமயம், இந்த நூல்களை எழுதும்போது எங்கள் இருவரிடையேயும் ஏற்பட்ட ஒத்துழைப்பு குறித்து சொல்ல விரும்புகிறேன். ஆங்கில எழுத்து அகராதி வரிசைப்படி என்னுடைய பெயருக்கும் முன்னால் வருவதால் மட்டும் மாதவ் காட்கில் பெயர் நூலில் முதலில் இடம்பெறவில்லை. இந்தப் புத்தகத்தில் கையாண்ட ஆய்வுமுறை கண்ணோட்டத்துக்கு முழுச் சொந்தக்காரர் அவர்தான்.

முதல் புத்தகத்தில் மூலாதாரக் கையிருப்பு, சுற்றுச்சூழல் விவேகம், சுற்றுச்சூழல் ஊதாரித்தனம் ஆகியவை பற்றி எழுதியிருந்தார். இரண்டாவது நூலில் தாவரம் மற்றும் இறைச்சி ஆகிய இரண்டையும் உண்ணும் பிராணிகள் குறித்தும் சுற்றுச்சூழலை அண்டி வாழும் மக்கள், சுற்றுச்சூழல் நாசமாக்கப்படுவதால் அகதிகளாகும் மக்கள் ஆகியவை குறித்து முதல் முறையாக அவர்தான் விரிவாக எழுதியிருக்கிறார். வனங்களைப் பற்றி நான் நேரில் தெரிந்துகொண்ட அனுபவங்களை நூலில் எழுதியிருக்கிறேன். நூலை இறுதி செய்வதற்கு முன்னால் அதைத் திருத்தி எழுதும் பொறுப்பை ஏற்றேன். அவருடைய எழுத்து நடை சிக்கனமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். என்னுடையது உற்சாகம் கொப்பளிக்கும் விவரிப்புகளாக இருக்கும்.

காட்கிலுடன் பணியாற்றும்போது புதிது புதிதாக எப்போதும் கற்றுக்கொள்ளலாம். அவையெல்லாம் அறிவியலாகவும் அறிஞரின் கைவண்ணமாகவும் மட்டும் இருக்காமல், நிறுவனம் சார்ந்தும் தொழில்முறைக்கேற்றதாகவும் இருக்கும். கல்கத்தாவில் ஆய்வு செய்துவிட்டு வந்திருந்தேன். அங்கே அறிஞர்கள் அந்தக் காலத்திய துரைத்தனத்தோடு நடந்துகொள்வார்கள். சக ஆய்வாளர் அல்லது ஆசிரியர் நம்மைவிட ஒரு சில மாதங்களே மூத்தவர் என்றாலும் அவரை ‘தாதா’ (அண்ணா) என்றே மரியாதையாக அழைக்க வேண்டும். மூத்தவர்கள் சொல்வதை எதிர்த்துக் கேள்விகள் கேட்கக் கூடாது.

ஆனால், இங்கோ காட்கில் என்னைவிட 16 ஆண்டுகள் வயதில் மூத்தவர் என்றாலும் அவரைப் பெயர் சொல்லியே அழைப்பேன். அதைவிட முக்கியம், நாங்கள் சமமான அறிஞர்களைப் போலவே இணைந்து பணியாற்றுவோம், விவாதிப்போம். அவருடைய பல கருத்துகளை நான் ஏற்காமல் எதிர்த்துப் பேசுவேன். பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் செல்வாக்கிலிருந்து அவர் மீளவில்லை என்பேன். வெறும் வறட்டுத்தனமான மார்க்ஸிய அணுகுமுறை என்று என் சிந்தனைகளில் சிலவற்றை அவர் தாட்சண்யம் பாராமல் விமர்சிப்பார். சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று ஆழ்ந்து கவலைப்படுவார்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் நல்லதைச் செய்ய மாட்டார்கள் என்கிற அவநம்பிக்கை அவரிடம் இருந்தது. விவசாயிகளிடமிருந்தும் கால்நடை வளர்ப்போரிடமிருந்தும் பெற்ற தகவல்கள் அவருக்கு அறிவியல் கருத்துகளை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவியது. அதற்குப் பிரதியுபகாரமாக அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி, இருக்கும் இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி சமுதாயங்களுக்கு அதிகப் பலன் தருவது எப்படி என்பதைச் சொல்லித்தர வேண்டும் என்பதில் தீவிரமாக உழைத்தார். பத்திரிகைகளிலும் விரிவாக எழுதினார்.

வனங்களிலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் வசிக்கும் மக்களுடைய நலனில் அக்கறை கொண்டிருந்தாலும் சில அறிவுஜீவிகளைப் போல அந்த மக்களுக்காக ‘தர்ணா’ போராட்டத்தில் போய் உட்கார மாட்டார், அரசுக்கு அனுப்பும் கூட்டுக் கடிதங்களில் கையெழுத்தும் போட மாட்டார். வனங்களில் வசிக்கும் தனிநபர்களுடைய உரிமைகளையும் சமூகங்களின் உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர்.

அதிகாரிகளின் குறுகிய மனப்பான்மையையும், ஆட்சியாளர்களுக்கு வால் பிடிக்கும் குணங்களையும் அறிந்தவர். ஆனாலும் கூட்டுப் போராட்டங்களில் பங்கேற்க மாட்டார். வன உரிமைகள், வனச் சமூக மக்களுடைய நலன்களுக்காகப் பேசும் தன்னார்வ நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைவிட அதிகம் தெரிந்தவர், அதுபற்றி வெளிப்படையாகப் பேசக்கூடியவர்.

அமல்படுத்தாத பரிந்துரைகள்

மாதவ் காட்கில் இப்போது அவருடைய அறிவியல் தன்வரலாற்று நூலை எழுதி முடிக்கும் தறுவாயில் இருக்கிறார். அடுத்த ஆண்டு இது பதிப்பிக்கப்படும். மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் தொடர்பாக அவர் எழுதிய அறிவார்த்தமான அறிக்கை நிச்சயம் அதில் விரிவாக இடம்பெறும். மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலைக் காக்க வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக அங்கு வாழும் மக்கள், பஞ்சாயத்து அமைப்புகள், உள்ளூர் சமுதாயத்தினரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிறார். காட்கிலின் நிபுணத்துவ அறிக்கை இப்போது இணையதளங்களில் கிடைக்கிறது.

காட்கில் குழு அறிக்கையை ஒப்பந்ததாரர்கள் – அரசியலர்கள் – அதிகார வர்க்க கூட்டணி மிகவும் கசப்போடு எதிர்க்கிறது. ஆனால், சாமானிய மக்களில் பலதரப்பட்டவர்கள் மனமார வரவேற்கின்றனர். அவருடைய பரிந்துரைகள் மட்டும் முழுமையாக அமல்படுத்தப்பட்டிருந்தால் கேரளம், கர்நாடகம், கோவா மாநிலங்களில் சமீபத்திய வெள்ளங்களின்போது ஏற்பட்ட சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் அல்லது பெருமளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

எனதருமை நண்பர்

காட்கிலை எனக்கு நாற்பது ஆண்டுகளாகத் தெரியும். அதாவது அவருடைய வாழ்நாளின் சரிபாதி. எனக்கு நண்பராகவும் தோழராகவும் திகழும் அவர் தொடர்பாக எனக்கு நினைவுகூர எத்தனையோ சம்பவங்கள் அவருடைய வீட்டிலும் என்னுடைய வீட்டிலும், இந்திய அறிவியல் கழகத்தின் உணவரங்கத்திலும், வெவ்வேறு நகரங்களில் நடந்த கருத்தரங்குகளிலும், பேருந்துகளிலும் ரயில்களிலும் சேர்ந்து பயணம் செய்தபோதும் எவ்வளவோ பேசியிருக்கிறோம், விவாதித்திருக்கிறோம். அவரைப் பற்றிய நினைவுகளிலிருந்து எதையாவது ஒன்றை மட்டுமே கூற வேண்டும் என்றால் அவருடைய மனதை முழுமையாக ஆக்கிரமித்தது மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசம்தான் என்று கூறிவிடலாம்.

மாதவ் மிகவும் மதித்துப் போற்றிய ஒருவர் இயேசு சபையைச் சேர்ந்தவரும், கர்நாடகத்தைச் சொந்த மாநிலமாகக் கொண்டவருமான மறைந்த பாதிரியார் சிசில் ஜே. சல்தானா. கர்நாடகத்தின் இயற்கைச் சூழல் குறித்து அறிவியல் மரபின்படியே அவர் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்; தான் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சியை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் தாழ்வாரத்தில் வரிசையாக வைத்திருந்தார் சல்தானா. அந்தப் புகைப்படங்களின் சட்டத்துக்குள், புகைப்படம் பற்றிய குறிப்பு ஏதும் எழுதப்படாமல் இருந்தது.

ஒவ்வொரு புகைப்படமும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் எங்கு எடுக்கப்பட்டது என்று உங்களால் கூற முடியுமா என்று காட்கிலிடம் கேட்டேன். சிறிதும் தயக்கமோ, இடரோ இல்லாமல் எளிதாக அவர் செய்துவிட்டார். ஒவ்வொரு வனப்பகுதியிலும் எந்தெந்த பறவைகள் வாழ்கின்றன, அங்குள்ள நீர்நிலையின் பெயர் என்ன, புகைப்படத்தில் தெரியும் உயர் அழுத்த மின்சார கோபுரங்களுக்கு அருகில் உள்ள கிராமம் எது என்பதுவரை அவர் விவரித்தார். அவர் அளவுக்குக் கள ஆய்வில் ஆர்வம் இல்லாத எனக்கு அவருடைய செயல் வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரியதாக இருந்தது, என்னை வாயடைக்கவும் செய்துவிட்டது!

ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

யோகியை வீழ்த்துவது எளிதல்ல!டாக்டர் அமலோற்பவ நாதன் கட்டுரைஇந்திராஜன் குறை கிருஷ்ணன்கல்விச் சீர்த்திருத்தங்கள்அருஞ்சொல் சமஸ் பேட்டிபிலிப் எச். டிப்விக்சுய தம்பட்டம்வேலைஅருஞ்சொல் பொங்கல் கட்டுரைதமிழ்நாடு முன்னுதாரணம்ஊரகப் பொருளாதாரம்குடல் இறக்கம்: என்ன செய்வது?கங்கணா ரனாவத்உடல் எடையைக் குறைப்பது எப்படி அருஞ்சொல்அதிகார விரிவாக்கம்மோசமான மேலாளர்சமஸ் கட்டுரைமாநிலப் பாடல்அருஞ்சொல்‘தணிக்கைக் குழுஆட்சி மாற்றம்கமல் ஹாசன்மென்பொருள்ஆர்என்ஜி அல்காரிதம்புதிய தொழில்கள்தகுதித் தேர்வுஎன்னதான்மா உங்க பிரச்சினை?பூர்வ பௌத்தமும் புரட்சி பௌத்தமும்முற்பட்ட சாதிகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!