கட்டுரை, சர்வதேசம், விளையாட்டு 5 நிமிட வாசிப்பு

ஆளுமைகள் ஏன் சொதப்புகிறார்கள்?

தினேஷ் அகிரா
20 Feb 2023, 5:00 am
1

கே.எல்.ராகுல் ஓர் அபூர்வமான திறமையாளர். எல்லா களங்களுக்கும் செல்லும்படியாகும் பேட்டிங் நுட்பத்தைக் கொண்டவர்.  சன்னமான டெக்னிக்! இன்ன மாதிரியான ஆட்டக்காரர் என்று ராகுலை ஒரு வட்டத்துக்குள் அடைக்க முடியாது. குறைவான கால் நகர்த்தல் கொண்டவர்; இரண்டு கால்களிலும் சரளமாக ஆடுபவர்; கிட்டத்தட்ட சச்சினைப் போல. அவருடைய ‘ஃபார்வர்ட் டிபன்ஸ்’ அந்தக் கால பீட்டர் மேவை நினைப்படுத்தக் கூடியது. எல்லா பேட்டிங் மேதைகளைப் போலவே ‘பேக் பிளே’ (Back Play) ஆடுவதில் வல்லவர். “ராகுலின் ஆட்டத்துக்கு நான் ரசிகன்” என்கிறார் பிரைன் லாரா. இவ்வளவும் இருந்தும் ஏன் ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறுகிறார்?

“ஒருவர் எவ்வளவு பெரிய திறமையாளராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; ஆனால், மனத்திண்மை (Temperament) இல்லாவிட்டால் அவரை நான் ஒரு நல்ல ஆட்டக்காரராக ஏற்கமாட்டேன்” என்கிறார் டான் பிராட்மன். இந்த மனத்திண்மை சிக்கல் பிறவி மேதைகளுக்கே உரித்தானது. “திறமையுடைய பலர், அந்தத் திறமையை அலட்சியப்படுத்தவே செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சிந்தித்தோ, சிந்திக்காமலோ அதை அழிக்கவும் முற்படுகிறார்கள்” என்கிறார் மன்ட்டோ.

பிறவி மேதையா ராகுல்? 

இங்கிலாந்து கிரிக்கெட்டின் கட்டுப்பெட்டித்தனத்தைச் சுக்குநூறாக உடைத்தவர்களில் முக்கியமானவர் டேவிட் கோர். ஆனால், அவர் தன்னுடைய திறமைக்கு முழுமையாக நியாயம் சேர்க்கவில்லை. ஏன் பேட்டிங் மேதைகள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதில்லை? அவர்கள் தன்னிறைவு பெற்றவர்கள். உள்ளூர் கிரிக்கெட்டில் சவால்களை பெரிய அளவில் சந்தித்திருக்க மாட்டார்கள். சோதனைக் காலங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் குறைவு. தங்களுடைய மேதமையின் ஊற்றுக்கண் என்னவென்று அவர்களுக்கே தெரியாது. கொஞ்சம் அழுத்திக் கேட்டால் தேமேவென்று முழிப்பார்கள்.

சர்வதேச கிரிக்கெட் வந்த பிறகுதான் நெருக்கடிகளை மேதைகள் அதிகம் உணரலானார்கள். ‘தோல்வி’ அவர்களின் ‘ஈகோ’வைக் கடுமையாகச் சீண்டுகிறது. ஆனால், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற நினைவுகள் அவர்களிடம் இருக்காது. எதிர்கொள்ளும் எல்லா பந்துகளுக்கும் அவர்களிடம் பதில் உண்டு; ஒரு பந்துக்கு ஒன்றல்ல இரண்டல்ல, எண்ணிலடங்கா பதில்கள். மார்க் வாவை எடுத்துக்கொள்வோம். சர்வதேச கிரிக்கெட்டில் தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் கண்டவர். அவருக்கு சில நொடிகள் மூத்தவரான ஸ்டீவ் வா, தனது முதல் சதத்துக்காக ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால், அண்ணனின் விடாப்பிடித்தனம் தம்பியிடம் இல்லை. மார்க் வாவின் மனதை உடைக்க ஓர் இலங்கைச் சுற்றுப்பயணம் போதுமானதாக இருந்தது.

பேட்டிங் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ கார்ல் ஹூப்பர், நளினமான பேட்டிங்குக்கு பெயர் போனவர். ஆனால், நம்பகத்தன்மையோ தொடர்ச்சியோ அவருடைய ஆட்டத்தில் கிடையாது. இன்று ராகுலும் இந்த வரிசையில் தனக்கொரு இடம் கோருகிறார். டேவிட் கோர், மார்க் வா, கார்ல் ஹூப்பர் ஆகியோர் பிறவி மேதைகள். எதிர்பார்த்த அளவுக்கு இவர்கள் சாதிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு சாதனை புரிந்திருக்கிறார்கள்.

டேவிட் கோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 40க்கு மேல் சராசரி வைத்திருக்கிறார். மார்க் வாவும் அப்படியே. மட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த ஸ்லிப் காட்ச்சர் அவர். மித வேகமும் ஆஃப் ஸ்பின்னும் வீசியவர். ஹூப்பரும் இவர்களுக்கு சளைத்தவர் அல்ல. ஆனால், ராகுலின் இடம் என்ன? 47 போட்டிகள்; 33.4 சராசரி; உண்மையில் ராகுலின் இடம் என்ன? உண்மையில் அவர் பிறவி மேதையா?

ராகுல் ஆட்டத்தின் வகை? 

கே.எல்.ராகுல் ஆட்டத்தை ஒரு வகைமைக்குள் அடைப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. அவரைப் பிறவி மேதை என்று விளிப்பது பொருத்தமாக இருக்காது. டேவிட் கோர், ரோகித் ஷர்மா ஆகியோரைப் போல அவருடைய ஆட்டத்தில் சோம்பலின் மிடுக்கைப் பார்க்கலாம். ஆனால், அவர்களில் ஒருவர் அல்ல இவர். ஆரம்பக் காலத்தில் ஹசாரே, திராவிட் ஆகியோர் போல கோடுபோட்ட பாதையில் பயணித்தவர் ராகுல். 2013 ஐபிஎல் தொடர் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ‘ஹை லெஃப்ட் ஆர்ம் எல்போ’ (High left arm elbow), சிக்ஸ் பேக் சகிதமாக வேறொரு ஆட்டக்காரராக உருமாறினார் கே.எல்.ராகுல். இந்த ‘உருமாற்றம்’ எல்லாருக்கு சாத்தியப்பட்டுவிடாது. ஆபத்தானதும்கூட.

ராகுலின் உருமாற்றம் சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு கைகொடுக்கவில்லை. உருமாற்றம் என்பது உண்மையில் எவர் ஒருவருக்கும் சாத்தியம் இல்லை. உடலளவிலும் கொஞ்சம் போனால் சிந்தனையில் மேற்பூச்சாகவும் மட்டுமே அது சாத்தியப்படும். “ஒருவருடைய மனத்தின்மை (Temperament) என்பது அவர் தனது வாழ்க்கையை எப்படி அணுகுகிறார் என்பதைப் பொறுத்தது” என்கிறார் மார்டின் க்ரோ. இங்கு மனத்தின்மை என்பதைச் சுபாவம் என்றும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். சுபாவத்தை ஒருவர் எப்படி மாற்றிக்கொள்ள முடியும்? அதுதான் ராகுலுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பிரச்சினையாக உருவெடுத்தது.

மனதளவில் இன்னமும் ஒரு ஹசாரா - திராவிட் பாணி ஆட்டக்காரராகவே ராகுல் உள்ளார். என்னதான் அவர் முயன்றாலும் அவருடைய இயல்பை அவரால் மீற முடியவில்லை. இங்கிலாந்தில் 2019இல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் ஓர் உதாரணம். பேட்டிங் சொர்க்கபுரி என்று சொல்லும்படியான ஆடுகளங்களிலேயே அவர் தடுமாறினார். ஒருபக்கம் ரோகித் சதங்களாக குவிப்பார். மறுபுறம், ராகுல் எந்த வேகத்தில் ஆடுவது என்கிற குழப்பத்தில் தொடர் முழுக்கவே சொதப்புவார்.

முக்கிய தொடர்களில் ராகுல் தொடர்ச்சியாக பதற்றத்துடன் ஆடுவதைப் பார்க்கலாம். ஆனால், முக்கியத்துவம் இல்லாத தொடர்களில் பிரமாதப்படுத்துவார். விவியன் ரிச்சர்ட்ஸை எடுத்துக்கொள்வோம். ரிச்சர்ட்ஸ் கவுண்டி கிரிக்கெட்டில் ஈடுபாட்டுடன் ஆடமாட்டார். 70 ரன்களைக் கடந்தவுடன் சுவாரஸ்யத்தை இழந்துவிடுவார். அதுவே ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் என்றால் உயிரைக் கொடுத்து ஆடுவார். ‘பிக் மேட்ச் டெம்பர்மென்ட்’ (Big match Temperament) ராகுல் இதற்கு அப்படியே நேர்மாறானவர்.

ஐபிஎல் போட்டிகளில் தன்னிலை மறந்து ஆடுவார். ஆயிரக்கணக்கில் ரன்கள் குவிப்பார். அதுவே சர்வதேச கிரிக்கெட் என்று வரும்போது குழப்பவாதியாக காட்சிதருவார். ஏனென்றால், ராகுல் ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு சவாலையும் உணரவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதன் மீது அவருக்கு துளியும் மதிப்பில்லை. ஆனால், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அளவுக்கு அதிகமான மதிப்பளிக்கிறார். அதில் வென்றாக வேண்டும் என்று தனக்குத்தானே அழுத்தம் கொடுத்துக்கொள்கிறார். அந்த அழுத்தத்தில் ஆட்டத்தின் அடிப்படையான ஆனந்தத்தை மறந்துவிடுகிறார். ரிச்சர்ட்ஸ், ராகுல் இருவரின் நோக்கமும் ஒன்றுதான், ஆனால் இருவரின் இயல்பும் வெவ்வேறானது.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

விராட் கோலி நீக்கப்பட்ட அரசியல் என்ன?

தினேஷ் அகிரா 13 Dec 2021

உருமாற்றம் 

உருமாற்றம் என்பது உண்மையில் சாத்தியமே இல்லையா? சாத்தியம். ஆனால், ஆளுமை கொண்டவர்களுக்கு எதுவும் சாத்தியம். ஆனால், அதன் பின்விளைவுகளை எதிர்கொண்டுத்தான் ஆக வேண்டும். நியூசிலாந்தின் பேட்டிங் மேதை மார்டின் க்ரோ ஒரு நல்ல உதாரணம். சிறு வயதில் க்ரோ ஓர் அதிரடியான ஆட்டக்காரர். 19 வயதில் நியூசிலாந்து அணிக்குத் தேர்வாகிறார். ஆரம்பக் கட்டத்தில் பெரிதாக வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை. அணியின் மூத்த வீரர்கள் க்ரோவைப் பாடாய்ப்படுத்துகின்றனர்.

அணியில் தனது இடத்தைத் தக்கவைக்கும் பொருட்டு தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்டக்காரராக உருமாறுகிறார். அதன் பிறகு ஆட்டத்தில் உச்சம் தொட்டார். ஆனால், இந்த உருமாற்றத்துக்கு க்ரோ கொடுத்த விலை அதிகம். தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்துக்கும் இந்த உருமாற்றம்தான் காரணம் என்கிறார் அவர்.

சர்ச்சை நாயகன் கெவின் பீட்டர்சன் இன்னொரு உதாரணம். தென்னாப்பிரிக்காவின் இடஒதுக்கீடு முறை பிடிக்காமல் இங்கிலாந்தில் தனது ஆட்ட வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். இங்கிலாந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் பீட்டர்சனும் ஒருவர். ஆனால், அவருடையது ஒரு முழுமையான ஆட்ட வாழ்வு என்று சொல்ல முடியாது.

அவருடைய திறமைக்கு இன்னும் ஒரு பத்து சதங்கள் கூடுதலாக அவர் குவித்திருக்க வேண்டும். ஏன் முடியவில்லை? பீட்டர்சன் அடிப்படையில் ஒரு தனிமை விரும்பி; நொடியில் உடைந்துவிடக்கூடியவர் புதிய நாட்டில் தன்னுடைய பலவீனத்தை மறைக்கும் பொருட்டு அவர் மாட்டிக்கொண்டதுதான் ’கலகக்காரர்’ என்கிற முகமூடி. ஒருவேளை தனது இயல்பை ஏற்றுக்கொண்டு அவர் ஆடியிருந்தால் இன்னும்கூட அவர் சாதித்திருக்கலாம்.

தனிமை விரும்பிகள் 

ராகுல் போன்ற ஆட்டக்காரர்களுக்கு ‘அண்டர் அச்சீவர்ஸ்’ (Under-achievers) என்று ஒரு பொதுவான குணாதிசயம் உண்டு. பத்துக்கு ஒன்பது பேர் தனிமை விரும்பிகளாக (Introverts) இருப்பார்கள். மார்க் வா, கார்ல் ஹூப்பர், கிராம் ஹிக், இன்சமாம் உல் ஹக் என்று ஒரு பட்டியலே இருக்கிறது. முன்பே பார்த்ததுபோல தனிமை விரும்பியாக இருப்பது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால், அவர்களுடைய ஆளுமை எப்படிப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். மகேந்திர சிங் தோனியும் ஒரு தனிமை விரும்பி. ஆனால், அவருடைய ஆளுமை மிகப் பெரியது; அது ஆட்டத்தைவிடப் பெரியது. விராட் கோலிக்கும் இது பொருந்தும்.

“பிராட்மன் கையில் பேட்டுடன் இருக்கும் சமயம் தவிர, மற்ற நேரங்களில் தாழ்வுமனப்பான்மையுடன் இருந்தார்” என்கிறார் அவருடைய சக வீரர் லியோ ஓ’பிரைன். அவர்களுக்கு ஆட்டம்தான் எல்லாமே. வெளியே என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால், ராகுல் பல நேரங்களில் ஆட்டத்தை மறந்துவிடுகிறார். ஆரம்பத்தில் விராட் கோலியைக் களத்தில் போலச் செய்தார். பிறகு கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

ஆட்டமும் வாழ்வும் ஒன்றுதான். அது ஆடுபவரின் இயல்பின் நீட்சியாக இருக்கையில் அழுத்தம் இருக்காது. தோல்வியின் மீதான பயமோ அல்லது வெற்றியின் மீதான பேராவலோ ஆட்டத்தில் தேக்கத்தை உண்டாக்கிவிடும். ஓர் ஆட்டக்காரருக்கு முன் தயார்நிலை (Trigger Movements) ரொம்பவும் முக்கியம். குழப்பத்துடன் ஆடும்போது அது சரியாக சம்பவிக்காது. ஒன்றுமில்லாத பந்துவீச்சுக்கு எல்லாம் அதீத கவனம் செலுத்தும் நிலை ஏற்படும்; கால்கள் நகராது; தலை ஆஃப் ஸ்ட்ம்ப் பக்கம் சாயும்; பேட் குறுக்காகப் பாயும். எதுவும் நினைத்தபடி நடக்காது. ராகுலுக்கு இப்போது உடனடி தேவை ஒரு நல்ல ஓய்வு!

 

தொடர்புடைய கட்டுரை

விராட் கோலி நீக்கப்பட்ட அரசியல் என்ன?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தினேஷ் அகிரா

தினேஷ் அகிரா, சுயாதீன ஊடகர். விளையாட்டு, அரசியல் தொடர்பான கட்டுரைகளை எழுதிவருகிறார்.


1

2

வரலாற்றாய்வாளர்எஸ்.வி.ராஜதுரை கட்டுரைதுறை நிபுணர்கள்பியூரின்வேளாண் சீர்திருத்தங்கள்உடல் நலம்சமூக உரசல்கள்பெருநகர நகரங்கள் ஒரு பயணம்புஷ்பக விமானம்அதிநாயக பிம்பமான நாயகன்கழிவுஅருஞ்சொல் சுகுமாரன்கம்யூனிஸ்ட்திமுக அரசுவாக்கு வித்தியாசத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்பல்லடம்ஜாட்டுகள்நீட் தேர்வு சர்ச்சைகள்தேசிய எழுத்தறிவு அறக்கட்டளைபணக்கார நாடுசென்டரிஸம்மகா.இராஜராஜசோழன் கட்டுரைசண்முகம் செட்டியார்உடலியங்கியல்அ.குமரேசன்கொள்குறிக் கேள்விகள்இந்துத்துவர்கள்அப்துல் மஜீத்இந்துத்துவமா?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!