கட்டுரை, ஆளுமைகள், புத்தகங்கள், விளையாட்டு 5 நிமிட வாசிப்பு

அஸ்வின் சொல்ல விரும்புவது என்ன?

ராமச்சந்திர குஹா
14 Jul 2024, 5:00 am
0

விச்சந்திரன் அஸ்வின் எழுதிய கிரிக்கெட் நினைவுக் குறிப்புகள் புத்தக அட்டையின் புகைப்படம் என் கவனத்தை ஈர்த்தது; வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து உட்கார்ந்துகொண்டிருக்கும் அஸ்வின், இரண்டு கைகளாலும் கிரிக்கெட் பேட் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறார். ஆடிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மன் ஆட்டமிழந்தவுடன் ஆடுகளத்துக்குச் செல்வதற்குத் தயார் நிலையில் இருக்கிறார். 

அஸ்வின் நன்றாக பேட் செய்வார் என்று எனக்கும் தெரியும். பள்ளிக்கூட நாள்களில் அவரை பேட்ஸ்மனாகத்தான் அனைவருக்கும் தெரியும், நல்ல பந்து வீச்சாளர் என்று அப்போது அதிகம் தெரியாது. அஸ்வின் விளையாடி நேரடியாக எந்தப் போட்டியையும் நான் பார்த்ததில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைத்தான் அதிகம் பார்ப்பேன், என்ன காரணத்தாலோ சமீப காலமாக பெங்களூரில் டெஸ்ட் போட்டிகளுக்கு வாய்ப்புகள் தரப்படுவதில்லை.

இருப்பினும் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன் - கையில் பேட்டுடன். நல்ல உயரமுள்ள அஸ்வின், வேகப் பந்து வீச்சாளரின் பந்தை பாயிண்ட் திசைக்கும் அப்பால் அடிப்பதாகவும், சுழல் பந்து வீச்சாளர் பந்தை மிக நளினமாக வீச்சாளரின் தலைக்கும் மேலே தூக்கி அடிப்பதாகவும் மனக்கண்ணில் ஒருமுறை கற்பனை செய்துகொள்கிறேன்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சிட்னி - சேப்பாக்கம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் பேட்ஸ்மனாக பரிணமித்த இரண்டு போட்டிகளில், இவ்விரு வகை ஷாட்டுகளும் ஆடப்படவில்லை. அவ்விரு ஆட்டங்கள் 2021ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில் அடுத்தடுத்து நடந்தன. இரண்டும் வெவ்வேறு ஆட்ட களங்கள், வெவ்வேறு எதிர் அணிகள். இதில் முதலாவது ஆட்டத்தில் சிட்னி கிரிக்கெட் திடலில் ஹனும விஹாரியுடன் இணைந்து, மிகவும் ஆக்ரோஷமான ஆஸ்திரேலியப் பந்து வீச்சை நாற்பது ஓவர்களுக்கும் மேல் எதிர்கொண்டு அவர்களுக்கு வெற்றி கிட்டிவிடாமல் தடுத்து பெரிய சாதனை படைத்தார்.

அந்த ஆட்டம் முழுவதும் பந்து வீச்சை கிரீஸில் முன்னால் வந்து தடுத்தார் அல்லது பின்காலில் ஊன்றி நின்று வெகு விரைவாக ரன் கிடைக்குமாறு அடித்து விரட்டினார். இந்தியாவின் மானம் போகாமல் காத்த இவ்விரு விளையாட்டு வீரர்களும் களத்தில் நீண்ட நேரம் நின்றதல்லாமல், தமிழிலேயே பேசிக்கொண்டனர். ஆம், தெலுங்கரான ஹனும விஹாரிக்குத் தமிழும் தெரியும். இந்தத் தகவல் சேப்பாக்கத்துக்கு அடிக்கடிச் செல்லும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும், ஆனால் தனி ஆந்திர மாநிலம் கேட்டு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி பொட்டி ஸ்ரீராமுலுவின் இனத்தாருக்கு கோபத்தைக்கூட வரவழைக்கும்!

அஸ்வினின் இரண்டாவது ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரானது. முதல் இன்னிங்ஸில் நன்கு விளையாடி இங்கிலாந்தைவிட அதிக ரன்கள் எடுத்த இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 106 ரன்கள் எடுப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்போது பேட் செய்யவந்த அஸ்வின் பிறகு கோலி, குல்தீப், இஷாந்த், சிராஜ் ஆகியோருடன் நின்று பொறுமையாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை 286 ஆக உயர்த்தினார்.

அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றது, அஸ்வின் செஞ்சுரி (நூறு ரன்கள்) போட்டார். அந்தப் போட்டியிலும் அஸ்வின் பின்காலில் சென்று ஷாட் அடித்ததாக நினைவில்லை, ஆனால் தற்காத்து ஆடினார், சில பந்துகளை நன்கு தூக்கி அடித்தார். ஸ்கொயர் திசையில் பந்துகளை நன்கு ஸ்வீப் செய்து நிறைய ரன்கள் சேர்த்தார். இப்போது ஆட்டம் நடந்த இடம் சேப்பாக்கமாக இருந்தாலும், வீரர்களுக்கிடையில் தமிழ் அதிகம் பேசப்படவில்லை!

அஸ்வின் நன்றாக பேட் செய்வார் என்று எனக்குத் தெரியும். இந்தப் புத்தகத்தை வாங்குவோர்களுக்கும் தெரியும். ஆனால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அஸ்வின் மிகச் சிறந்த சுழல் பந்து வீச்சாளராகத்தான் இடம்பெறுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஏன் அட்டைப் படத்தில் கையில் பேட்டுடன் இருப்பதைப் போன்ற புகைப்படத்தில் இருக்க வேண்டும்? அனில் கும்ப்ளேவைப் போல இந்தியாவுக்கு அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளைத் தேடித் தந்தவர், அதிக டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசியவர் ஏன் இப்படியொரு புகைப்படத்தில்? 

அஸ்வினை நேரில் சந்தித்ததில்லை. ஆனால், அவரைப் பற்றி படித்தது, கேள்விப்பட்டது எல்லாம், மன உறுதி மிக்கவர், தனக்கென்று தனிக் கருத்துகளைக் கொண்டவர் என்பது. அந்தப் புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்தது புத்தக பதிப்பாளர் அல்ல, நூல் எழுத உதவிய சித்தார்த்த மோங்கியாவும் அல்ல, அஸ்வினேதான் என்பது மட்டும் நிச்சயம். அப்படியென்றால் கையில் பந்தை வைத்திருப்பதைப் போன்ற புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்காமல், ஏன் பேட் வைத்திருக்கும் புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்தார்?

மறைமுகமான செய்தி

இந்தக் கேள்விக்கு என்னால் திட்டவட்டமான பதிலைத் தர முடியாது – ஒருவேளை, எதிர்காலத்தில் அஸ்வினே அதை விளக்கவும் கூடும். ஆனால், நான் சிலவற்றை ஊகிக்கிறேன். அந்தப் புகைப்படத்தில் மறைமுகமான செய்தி ஒன்று – அல்லது பல – இருக்கிறதா? உலக அளவில் கிரிக்கெட் என்றாலே பேட்ஸ்மனுக்குத்தான் அதிக மதிப்பு. ஊதியம், வசதிகள், சலுகை, ரசிகர்கள், தொலைக்காட்சி விளம்பர வாய்ப்பு, அதிக ஆட்ட நாயகன் – தொடர் நாயகன் விருதுகள், அதிக ஆட்டோகிராஃப்கள், அதிக செல்ஃபிக்கள் கோரிக்கை என்பதைச் சுட்டிக்காட்டத்தான் அப்படிச் செய்தாரா?  

பேட்ஸ்மன்கள்தான் அதிகம் புகழப்படும், செல்லம் கொஞ்சப்படும் நாயகர்கள், வீச்சாளர்கள் கடுமையாக வேலை செய்ய வேண்டிய இரண்டாம்தர குடிமக்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. ஆட்டத்தின் வெற்றிக்கு வீச்சாளர்களும் கடுமையாக உழைக்கும்போது பேட்ஸ்மன்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரும் இந்தப் போக்கு குறித்து நான் ஏற்கெனவே சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறேன், ஆனால் பலன்தான் ஏதுமில்லை. கிரிக்கெட்டில் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்திருக்கும் அஸ்வின் இந்தப் புகைப்படம் மூலம் அதே கருத்தை மிக நுணுக்கமாகவும் நாசூக்காகவும் தெரிவிக்கிறாரா?

ஒரு போட்டியில் அல்லது தொடரில் அணி வெற்றிபெற்றுவிட்டால் பேட்ஸ்மனுக்குத்தான் அதிக பரிசுப் பணம், பாராட்டுப் பத்திரம், விருது எல்லாம் கிடைக்கின்றன, பந்து வீச்சாளர்கள் அந்த அளவுக்குக் கவனிக்கப்படுவதில்லை. இது வெறும் பண விவகாரத்துடன் முடிவதல்ல. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஸ்டீவ் வாவ் 57 முறையும் ரிக்கி பான்டிங் 72 முறையும் கேப்டன்களாக இருந்திருக்கின்றனர், ஆனால் உலகப் புகழ்வாய்ந்த சுழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் ஒருமுறைகூட அந்தப் பதவியை வகித்ததில்லை.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ஆளுமைகள் ஏன் சொதப்புகிறார்கள்?

தினேஷ் அகிரா 20 Feb 2023

ஆஸ்திரேலியாவிலயே சாதாரண அணிகளுக்குக் கேப்டனாக இருந்தபோது தனது அனுபவம் திறமை உத்தி ஆகியவற்றால் மிகப் பிரமாதமான வெற்றிகளைக் குவித்தவர் ஷேன் வார்ன். டெஸ்ட் அணிக்கும் அவரைக் கேப்டனாக்கியிருந்தால் வாவ், பான்டிங்கைவிட அதிக வெற்றிகளை அணிக்கு வாங்கித் தந்திருப்பார்.

இந்தப் பாரபட்சம் இப்போது இந்திய அணியிலும் காணப்படுகிறது. விராட் கோலி 68 போட்டிகளிலும் ரோஹித் சர்மா 16 போட்டிகளிலும் கேப்டனாக இருந்துள்ளனர், அஸ்வினுக்கு ஒரு வாய்ப்புகூட தரப்படவில்லை, காரணம் கோலி, சர்மா இருவரும் பேட்ஸ்மன்கள், அஸ்வின் பந்து வீச்சாளர் மட்டுமே! 

இந்திய அணிக்காக விளையாடிய அறிவுக் கூர்மையான ஆட்டக்காரர்களில் அஸ்வினும் ஒருவர். அவரை அணித் தலைவராக்கியிருந்தால் இந்திய அணி மேலும் பல போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கும். இங்கிலாந்தின் ரே இல்லிங்வொர்த், ஆஸ்திரேலியாவின் ரிச்சி பீனாட் இருவரும் சுழல் வீச்சாளர்கள் மட்டுமல்ல அற்புதமான கேப்டன்களாக அறியப்பட்டவர்கள்.

பந்து வீச்சாளர் என்பவர் யார்? 

அணிக்குத் தலைவனாக வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை அஸ்வின் இப்படி வெளிப்படுத்தியிருப்பாரா என்ற சந்தேகம் இருந்தாலும், அப்படியெல்லாம் செய்கிறவர் அவர் அல்ல என்ற எண்ணமும் ஏற்படுகிறது. அணித் தலைவர் பதவியல்ல, பேட்ஸ்மன்களைவிட பந்து வீச்சாளர்களை மரியாதைக் குறைவாக நடத்துவதை உணர்த்த இப்படிச் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆட்ட களத்தில் ஆடும்போதும் ஆட்ட களத்துக்கு வெளியேயும் பேட்ஸ்மன்களைவிட வீச்சாளர்கள் சற்றே மரியாதைக் குறைவாகத்தான் நடத்தப்படுகின்றனர்.

மூன்றாவது காரணமும் தோன்றியது, அஸ்வினுக்குப் பந்து வீசுவதைவிட மட்டை பிடிப்பதில்தான் ஆசை அதிகம். எனவே, அதற்காகவும் அப்படியொரு படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஷேன் வார்ன், அனில் கும்ப்ளேவுக்கும் பேட் செய்வதில் ஆசை அதிகம். டெஸ்ட் போட்டிகளில் 12 முறை ஐம்பதுக்கும் மேல் ரன்களைக் குவித்திருந்தாலும் ஒரேயொரு ஆட்டத்தில் 99க்கும் மேல் எடுக்காமல் போய்விட்டதே என்று ஷேன் வார்ன் வருந்தியிருக்கிறார், கும்ப்ளேவுக்கு அப்படியொரு வருத்தம் இல்லை, காரணம் அவர் ஒரு டெஸ்டில் செஞ்சுரி அடித்துவிட்டார்.

வார்ன் பெயரில் எழுதப்பட்டு வெளிவந்த ஐந்து புத்தகங்களில் இரண்டில் அவருடைய முகம் மட்டுமே பெரிதாக இருக்கிறது, மூன்றில் அவர் பந்து வீசுவதைப் போலவோ விக்கெட்டை வீழ்த்துவதைப் போலவோ வந்திருக்கிறது. அடுத்து கும்ப்ளேவின் புத்தகத்துக்காகக் காத்திருப்போம். 619 விக்கெட்டுகளை வீழ்த்திய கும்ப்ளே, கையில் பேட் வைத்திருப்பதைப் போன்ற புகைப்படத்தை வெளியிட மாட்டார் என்றே கருதலாம்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

விராட் கோலி நீக்கப்பட்ட அரசியல் என்ன?

தினேஷ் அகிரா 13 Dec 2021

இப்போதும் நம்முடன் வாழும் கிரிக்கெட் எழுத்தாளர் ஒருவர், ஒரு புத்தகம் முழுவதையும் ஒரேயொரு கிரிக்கெட் புகைப்படத்தை விளக்கவே பயன்படுத்தியிருப்பார். நானும் அந்தப் புத்தகத்தைப் படித்து வியந்து கட்டுரை எழுதியிருக்கிறேன். அப்படி எழுதிய கிடியோன் ஹைக் போல அல்ல நான் என்பதால், திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைத்திருக்கிறேன். அஸ்வினின் புத்தகத்தை வாசிக்கும் முன் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன். ஆனால், அந்தப் புத்தகத்தில் வரும் ஓர் உரையாடல் அஸ்வினுக்கும் டபிள்யு வி.ராமனுக்கும் இடையிலானது. (என்னுடைய ஊகங்களுக்கு வலுசேர்க்கிறது).

பந்து வீச்சாளர், பேட்ஸ்மனாக விளங்கிய ராமன் பிறகு அணிகளுக்குப் பயிற்சியாளராகவும் திகழ்ந்தார். “என் மனதில் ஏற்பட்ட உணர்ச்சிகளை நேர்மையாக அவரிடம் தெரிவித்தேன். பந்து வீச்சாளர்களைத் தங்களுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டிய வேலைக்காரர்களைப் போலத்தான் பேட்ஸ்மன்கள் நினைக்கின்றனர். பயிற்சியின்போது நெட்ஸில் ஒரு பந்தைத் தவறாக வீசிவிட்டால்கூட, பேட்ஸ்மனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழக்கப்படுத்திவிட்டார்கள். பேட்ஸ்மன் தவறாக ஷாட் அடித்தால் அப்படிக் கேட்பதில்லையே ஏன்?”.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி?
சோபர்ஸுக்குப் பிறகு ஆல்-ரவுண்டர் யார்?
ஆளுமைகள் ஏன் சொதப்புகிறார்கள்?
மோடி, கிரிக்கெட், அரசியல், ரகசியம்
விராட் கோலி நீக்கப்பட்ட அரசியல் என்ன?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

3






குஜராத்திகள் இன்றும் காந்தியைக் கைவிட்டுவிட்டார்களஅமுத காலம்அயோத்திதாசர்ஆனால் கவனித்தாரா?சமஸ் பாலு மகேந்திராமீராமுட்டம்அஸ்வினி வைஷணவ்ராஜாஜி இந்தி ஆதிக்கராமூத்த சகோதரிபாஜகவின் அரசியல் வெற்றிகளும் வாக்காளர்களின் மதவாதமமதுபானக் கொள்கைஆர்.ராமகுமார் கட்டுரைமனுராஜ் சண்முகசுந்தரம் கட்டுரைஉள்ளூர்க் காய்கறிகள்நான்தான் ஔரங்கஸேப்எடை குறைப்புஇரட்டை என்ஜின்திருவையாறுதி.ஜ.ரங்கநாதன்இயக்கச் செயல்பாடுகள்நிதான வாசிப்புசீனியர் வக்கீல்சிறார்கள்சத்ரபதி சிவாஜிஜம்மு காஷ்மீர்தொழிற்சாலைகள்காஷ்மீரப் பண்டிட்டுகள்புதிய கருத்தியல்கரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!