கட்டுரை, சர்வதேசம், விளையாட்டு 5 நிமிட வாசிப்பு
இந்தியா – பாகிஸ்தான்: வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளி
பத்தாண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, தனது இரண்டாவது டி20 உலகக் கோப்பையை, ரோஹித் சர்மா தலைமையில் வென்றிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.
2023ஆம் ஆண்டு, தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் தனது வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா. என்றாலும், பார்படாஸில் நடந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
திருப்புமுனையின் தொடக்கம்!
இதில் 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில், இந்திய அணி அரையிறுதிச் சுற்றிலேயே, தோல்வி கண்டு வெளியேறியது. இங்கிலாந்து எதிர் இந்திய அணிகள் மோதிய அந்த ஆட்டம் இங்கிலாந்துக்குச் சாதகமாகவே அமைந்தது. இங்கிலாந்து அணி விக்கெட்டுகள் ஏதும் இழக்காமலேயே வென்றது. அந்தப் போட்டிதான் இந்திய அணிக்கு ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம்.
அந்தத் தோல்வி கொடுத்த கசப்புணர்வுதான் ரோஹித் சர்மாவுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்தச் சமயத்தில், தான் ஆடும் விதத்தை மாற்ற வேண்டும் எனத் தீர்மானித்தார் ரோஹித். தனது அணிக்கும் இங்கிலாந்து போன்ற வலிமையான அணிக்கும் உள்ள இடைவெளிகளையும் வேறுபாடுகளையும் இனங்கண்டார். பிறகு, அச்சம் களைத்து ஆக்ரோஷமான ஆட்ட அணுகுமுறையைத் தழுவிக்கொண்ட ரோஹித், தனது சொந்த ஆட்ட பாணியில் புரட்சியை ஏற்படுத்தினார்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
ரோஹித், 2023 உலகக் கோப்பைப் போட்டியில் தனது சொந்த சாதனைகளைப் பொருட்படுத்தாமல், அணியின் வெற்றிக்கு முன்னுரிமை கொடுத்தார். தடுப்பாட்டத்தைத் தவிர்த்து, தனக்கு வீசப்பட்ட முதல் பந்திலிருந்தே அடித்து ஆடத் தொடங்கினார். எதிரணியின் மீது அழுத்தத்தைப் பேணும் பொருட்டு, தனது ஆற்றல் மிக்க சதங்களையும் சொந்த சாதனைகளையும் தியாகம் செய்தார். இந்தியா அந்தத் தொடரில் தோல்வி அடைந்திருந்தாலும்கூட, ரோஹித் உத்தியில் மேற்கொண்ட மாற்றமும் அவரது தலைமைத்துவமும் பரவலான பாராட்டுகளைப் பெற்றன.
ரோஹித் சர்மாவின் இந்த மாற்றம்தான் வெற்றிக்கான மனநிலையை இந்திய அணிக்குள் வளர்த்தது. அதன் விளைவுதான் 2024, டி20 உலகக் கோப்பைப் போட்டியின் வெற்றி. இந்திய அணி, தங்கள் பொறுப்பில் தெளிவாகவும், இலக்கில் ஒருமித்தும் இருந்தனர். அது போலவே, வெற்றிபெற வேண்டும் என்பதில் தங்கள் உறுதியையும் வெளிப்படுத்தினர். இறுதியாக, சர்வதேச கிரிக்கெட்டில் உச்சபட்ச வெற்றியைப் பதிவுசெய்யும் வகையில், ரோஹித் சர்மாவும் அவரது அணியும் டி20 உலகக் கோப்பையை வென்றனர்.
பாகிஸ்தானின் நிலை
அப்படியே எதிரான நிலையில் உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. 2022இல் மெல்போனில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த அணி, 2024 உலகக் கோப்பையில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்தத் தோல்வியானது, அதிர்ச்சி என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது என்றே சொல்லலாம். காரணம், முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் கலந்துகொண்ட கற்றுக்குட்டியான அமெரிக்க அணியிடமே தோல்வி அடைந்ததுதான். இந்தியாவுடனான ஆட்டத்தில் தோல்வியுற்றது மிகவும் வேதனை அளிக்கக்கூடியது, ஏன்னென்றால் 47 பந்துகளுக்கு 47 ரன்கள் என்ற இலக்கோடு வெற்றிக்கு மிக அருகில் இருந்த நிலையில், அலட்சியம் காரணமாகத் தோல்வியைத் தழுவியது. நவீன ஆட்ட முறைகளுக்குப் பின்னால் வெகு தொலைவில் இருப்பதோடு, வழக்கொழிந்துபோன ஆட்ட பாணியையும் மனநிலையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது பாகிஸ்தானின் இந்தத் தோல்வி.
‘தொடக்கத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அதிகம் மெனக்கெடாமலேயே ஆடினர், ஆக்ரோஷமாக ஆடவில்லை. ஒரு உத்தி இல்லாமலேயே இருந்தனர்’ என அமெரிக்க அணியின் வேகப் பந்து வீச்சாளர் அலி கான் சொன்னதை நேர்காணலில் சுட்டிக்காட்டினார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லதீஃப்.
இதேபோல், 2023 உலக கோப்பைப் போட்டியில், பாகிஸ்தான் வெற்றிபெற சாதகமான சூழல் இருந்தபோதும், அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாதது ஆச்சரியம் அளிக்கிறது என தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னார் ஹர்திக் பாண்டியா. எதிரணியிலிருந்து வந்திருக்கும் இந்தக் கருத்துகள், சமகால கிரிக்கெட்டுக்குத் தேவையான உத்தியிலும் மனநிலையிலும் பாகிஸ்தான் அணிக்கு உள்ள போதாமைகளை அடிக்கோடிடுகிறது.
இந்தச் சிக்கலைக் கண்டறிந்து, ஆக்ரோஷமான பேட்டிங் வரிசையை அமைக்கும் விதமாக, தொடக்க நிலை வீரர் முகமது ரிஸ்வானுடன் சைம் அயூபைக் களமிறக்கினார் அணியின் இயக்குநர் முகமது ஹஃபீஸ். நிர்வாகத்தில் மாற்றம், சைம்மின் மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து, 2022 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என முந்தைய தோல்விகள் இருந்தபோதிலும், பாகிஸ்தான் தனது பழைய ஜோடியான முகமது ரிஸ்வான் – பாபர் ஆஸமை மீண்டும் இறக்கியது.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி?
20 Apr 2024
புதியவர்களுக்கு வாய்ப்பு எப்போது?
பாகிஸ்தானின் இந்தப் போராட்டங்களுக்குப் பின்னுள்ள முக்கிய காரணங்களில் ஒன்று, வீரர்கள் தேர்வில் இருக்கும் நிலையற்றத்தன்மைதான். 2022 டி20 உலக கோப்பையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் முகமது ஹாரிஸ். பாகிஸ்தான் விளையாடிய மூன்று முக்கியமான போட்டிகளில் – நியூஸிலாந்துக்கு எதிராக சிட்னியில் நடந்த அரையிறுதிச் சுற்று உள்பட – வெற்றிபெற உதவினார்.
அதிபயங்கர வேகப் பந்து வீச்சாளரான லாக்கி ஃபெர்குசன் பந்து வீச்சில் அடுத்தடுத்து அடித்த பவுண்டரிகள், நவீன கிரிக்கெட்டுக்குத் தோதாக அமைந்தது அவரது ஆக்ரோஷாமான ஆட்ட பாணி. அணிக்கு தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தபோதும், கடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து மொத்தம் 4 போட்டிகள் மட்டுமே விளையாடியிருக்கிறார். பாகிஸ்தான் அவரைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
2022 உலக கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மா தனது ஆட்டத்தை வளப்படுத்திக்கொண்ட அதேவேளையில், பாகிஸ்தான் சுணங்கியது. மோசமான ஆட்டத்தின் காரணமாக 2022 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான், அடுத்தடுத்த உலகக் கோப்பை போட்டிகளில் தங்கள் உத்திகளை மேம்படுத்திக்கொண்டதாக இன்னும் தெரியவில்லை.
வீணாக்கப்படும் திறமைகள்!
மட்டையாளர்களுக்கு அப்பாற்பட்டது இந்த ஆள் தேர்வுச் சிக்கல். பாகிஸ்தான் முக்கியத்துவம் வாய்ந்த நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக, சுழற்பந்து வீச்சில். ஆனாலும், இரண்டு ஆண்டுகளாக பந்து வீச்சில் போதாமையோடு இருக்கும் ஷதாப் கான் போன்ற வீரர்களையும் இன்னும் விடாப்பிடியாக அணியில் வைத்திருக்கின்றனர்.
தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஷதாப் தொடர்ந்து தேர்வுசெய்யப்படுகிறார். அப்ரார் அஹமத் போன்ற நம்பிக்கையான வீரர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. அயர்லாந்து, இங்கிலாந்தில் நடந்த போட்டிகளிலும் ஒரு வாய்ப்புகூட கொடுக்கப்படவில்லை. உலகக் கோப்பைக்கு தயாராக இருந்தபோதும், அதிலும் விளையாடவில்லை.
இப்படிப் போதுமான திறனை வெளிப்படுத்தாத வீரர்களுக்கு மத்தியில், கைவசம் இருக்கும் திறன் மிக்க வீரர்களைப் பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்ளாதது ஏன் என்றுதான் புரியவில்லை. பிஎஸ்எல்-9இல் (பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர்) முன்னணி பந்து வீச்சாளராக விளங்கியவர் உஸாமா மிர். ஒரு தொடருக்குப் பிறகு அவரும் நிறுத்தப்பட்டார். உலகக் கோப்பைத் தேர்விலும் அவர் பரிசீலிக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணிக்குள்ளேயே இருக்கும் ஆற்றல் மிக்க வீரர்களைப் பயன்படுத்ததும், மாற்றத்துக்கு முனையாத தயக்கமும்தான் பாகிஸ்தானின் தேக்க நிலைக்குப் பின் உள்ள காரணங்கள்.
எப்போது சீராகும் தலைமைச் சிக்கல்?
பாகிஸ்தான் அணியில் சரியான தலைமைக்கானச் சிக்கல் நிலையாக இருந்துவந்துள்ளது. அது அணிக்குள்ளேயே நிலையற்றத்தன்மையை அடிக்கடி உருவாக்கும். 2023 உலகக் கோப்பை தோல்வியைத் தொடர்ந்து பாபர் ஆஸம் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். பிறகு, அணிக்குப் புதிய தலைமையைக் கொண்டுவர வேண்டி, டி20 அணிக்குப் புதிய அணித் தலைவராக ஷாஹீன் அப்ரிதியை நியமித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
அப்ரிதி தலைமையில் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியதால், அப்ரிதியின் பதவிக் காலமும் குறுகியதாகவே அமைந்தது. அணித் தலைவராக அப்ரிதியின் செயல்திறன் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் ஒரே ஒரு தொடரோடு மாற்றப்பட்டார். பாபர் ஆஸம் மீண்டும் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அணித் தலைவர் மாற்றங்கள் இப்படி நிகழ்வது அணியினரின் ஒற்றுமையும் ஆட்டத்தையும் குலைக்க வல்லது. அடிக்கடி நிகழும் இத்தகைய மாற்றங்கள், நிச்சயமற்றத்தன்மையை உருவாக்குவதுடன் அணியின் நிலையான உத்தியை உருவாக்குவதையும் தடுக்கிறது. புதிய தலைமையின் பாணிகளுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் அணி வீரர்களால், தங்கள் ஆட்டத்தில் போதிய கவனம் செலுத்த முடியாமல் போகிறது.
பாகிஸ்தான் அணியில் நிலையான அணித் தலைமை இல்லாமல் சீரான விளையாட்டை வெளிப்படுத்த முடியாமல் இருப்பது, அவர்கள் உலகக் கோப்பை போட்டிகளின்போது வெளிப்பட்டது. இப்படித் தொடர்ச்சியாக அணித் தலைமைக்கு ஏற்படும் சிக்கல்தான் பாகிஸ்தானின் தடுமாற்றங்களுக்குக் காரணியாக இருந்துவருகிறது. இது உலகக் கோப்பை அரங்கில் ஓர் ஒருங்கிணைந்த, வலுவான அணியைக் கட்டமைப்பதற்குச் சவாலாக இருந்துவருகிறது.
தலைமைக்கான எடுத்துக்காட்டு
இறுதியாக, அணித் தலைமைக்கும் அதன் வீரர்களுக்கும், சரியான மாற்றத்துக்கான பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ரோஹித் சர்மாவின் தலைமைத்துவம் ஓர் எடுத்துக்காட்டு. தன் ஆட்டத்தைத் மறுவரையறை செய்வதுடன், வெற்றிக்கான மனநிலையை அணிக்குள் ஏற்படுத்தி, வெற்றி வாகை சூடுவதே ரோஹித்தின் திறன். ஒரு காலத்தில் இந்திய அணியில் சிறந்த மட்டையாளர்கள் இருந்தனர். அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக பாகிஸ்தான் அணி வேகப் பந்து வீச்சாளர்களை உருவாக்கியது. ஆனால், அதற்கு முற்றிலும் வேறுபட்டிருக்கிறது இன்றைய பாகிஸ்தான் அணி.
தற்போது, இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் உலகக் கோப்பையை வென்றுவந்துள்ளனர். ஒரு அணி தன்னைப் புதிய சூழல்களுக்குத் தகவமைத்துக்கொள்வதும், உத்திகளின் மாற்றமும் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்த நிகழ்வு காட்டுகிறது. பாகிஸ்தான், இந்தத் தலைமைத்துவத்துக்கான பண்பை நிச்சயம் வரித்துக்கொள்ள வேண்டும். கிரிக்கெட்டைப் பொருத்தவரையில் மாற்றத்துக்கான பண்பாட்டை வளர்த்துக்கொள்வதுடன், வெற்றிக்கான வளத்தைப் புதுப்பிக்க அயராது உழைக்க வேண்டும்.
© த டான்
தொடர்புடைய கட்டுரைகள்
எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி?
சோபர்ஸுக்குப் பிறகு ஆல்-ரவுண்டர் யார்?
ஆளுமைகள் ஏன் சொதப்புகிறார்கள்?
மோடி, கிரிக்கெட், அரசியல், ரகசியம்
விராட் கோலி நீக்கப்பட்ட அரசியல் என்ன?
தமிழில்: ச.ச.சிவசங்கர்
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.