ஒருநாள் போட்டிகளில் 70.43 வெற்றி சதவீதம் வைத்துள்ள ஒருவரை, எப்படி கேப்டன் பதவியில் இருந்து தூக்கலாம்? - விராட் கோலி ரசிகர்களின் இந்தக் கேள்விதான் இன்று சமூக ஊடகங்களில் பேசுபொருள்.
இந்தியாவில் கிரிக்கெட்டும் அரசியலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பதால் இந்த விவகாரத்தை இரண்டு தரப்பிலும் நின்று அணுக வேண்டியுள்ளது. முதலில் விளையாட்டை விளையாட்டாகவே பார்ப்போம். ஒருநாள் போட்டிகளில் 70.43 வெற்றி சதவீதம் என்பது உள்ளபடியே பெரிய சாதனைதான். ஆனால், இதுவரை எத்தனை உலகக் கோப்பைகளை கோலி தூக்கி சுமந்துள்ளார் என்ற கேள்வி எழுவதும் நியாயம்தானே?
இன்று கிரிக்கெட் உலகை சர்வ வல்லமையுடன் ஆட்டிப் படைக்கும் ஓர் அணியாக இந்தியா இருக்கிறது. தரமான தொடக்க ஆட்டக்கார்கள், பழைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சவால் விடுமளவுக்கு வேகப்பந்துவீச்சுப் படை, விராட் கோலி என்ற பேட்டிங் மேதை என இத்தனையும் இருந்தும் நம்மால் உலகக் கோப்பையை வெல்ல முடிவதில்லை. அப்படியானால், பிரச்சினை எங்கே?
உலகக் கோப்பை மாதிரியான தொடர்களின் போது இக்கட்டான சமயங்களில் ஒரு கேப்டன் எவ்வளவு விரைவாக முடிவெடுக்கிறார் என்பதைப் பொறுத்துதான் அணியின் வெற்றி முடிவு செய்யப்படும். விராட் கோலி நீண்ட கால நோக்கில் திட்டங்களை மனதில் வைத்துச் செயல்படுபவர். வெற்றியைப் பற்றி மட்டுமில்லாமல் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் சதாகாலமும் நினைத்து தன்னைத் தானே அழுத்தத்துக்கு உள்ளாக்கிக்கொள்கிறார். இந்த அழுத்தம் அவருடைய தனிப்பட்ட ஆட்டத்தைப் பாதிப்பதோடு சக வீரர்களின் ஆட்டத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
சாதாரண இருதரப்பு, முத்தரப்பு தொடர்களின்போது அவருக்கு இந்தப் பிரச்சினைகள் பெரிதாக எழுவதில்லை; டெஸ்ட் போட்டிகளில் கோலியின் கேப்டன்ஷிப் நன்றாக இருப்பதாக ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால், அதுவும்கூட ஒரு மாயத் தோற்றம்தான். கோலி உட்பட முக்கிய வீரர்கள் யாருமில்லாமல்தான் ரஹானே, 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பையை வென்று காட்டினார். வெற்றி தோல்வியை விட்டுத் தள்ளுங்கள். அந்தத் தொடரில் ரஹானேவின் அணி ஏற்படுத்திய மன எழுச்சியை ஏன் அதன் பின்னர் கோலியால் ஒருமுறைகூட ஈடுசெய்ய முடியவில்லை?
2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக்கோப்பை, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2021 டி20 உலகக்கோப்பை என கோலியின் தோல்விப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
சரி, உலகக்கோப்பை வென்றால்தான் நல்ல கேப்டனா? ஆம். இடைத்தேர்தர்களில் மட்டும் ஜெயித்துவிட்டு பிரதமர் கனவு காண முடியுமா? '2019 உலகக் கோப்பையில் ஒரு நல்ல மிடில் ஆர்டர் வாய்த்திருந்தால்', '2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருந்தால்', '2021 டி20 உலகக் கோப்பையில் டாஸ் கைகொடுத்திருந்தால்' எனத் தோல்விக்கு ஆயிரத்தெட்டு சாக்குப் போக்குகள் சொல்லலாம். ஆனால், கோலியின் செயல்பாடுகளில் ஒரு தெளிவான முறைமை வெளிப்படுவதை ஏன் நாம் கண்கொண்டு பார்க்க மறுக்கிறோம்?
கோலிக்கு கைகொடுக்கும் நோக்கில் இந்திய அணியின் வலிமையைக் குறைத்து மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். இப்போதுள்ள இந்திய அணி கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிகரானது. அணிக்கு உள்ளே மட்டுமில்லாமல் வெளியேயும் ஏகப்பட்ட மனிதவளம் கொட்டிக் கிடக்கிறது. இந்திய அணியின் வேகப்படையை கோலிதான் பட்டைத் தீட்டினார் என்றொரு தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. உண்மையில் அது தேசிய கிரிக்கெட் அகாடமியில் திராவிட் வழிகாட்டுதல் உடன் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரேவின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டது.
விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதை இந்தவொரு பின்னணியில் இருந்துதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். புதிதாகப் பொறுப்புக்கு வந்துள்ள ரோஹித் ஷர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் தன்னுடைய கேப்டன்ஷிப்பை நிரூபித்தவர். முன்னாள் கேப்டன் தோனியைப் போலவே விஷய ஞானத்துடன் சேர்ந்து விவேகமும் கைவரப் பெற்றவர். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு இருக்கும் திறமைக்கு கொஞ்சம் முன்னதாகவே அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கோலியின் பதவி பறிக்கப்பட்ட விதம்தான் இந்த விவகாரத்தில் இன்னொரு தரப்பும் இருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.
பதவியை ராஜினாமா செய்வதற்கு கோலிக்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டு அவர் மறுக்கவே ரோஹித் ஷர்மாவை புதிய கேப்டனாக பிசிசிஐ நியமித்துள்ளது. இதன் மூலம் இரண்டு தரப்புக்கும் இடையே முறையான பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பிசிசிஐ அதிகாரம் தற்போது இருவர் கைகளில்தான் உள்ளது. ஒருவர் பாஜகவின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்ட சவுரவ் கங்குலி; மற்றொருவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா. நரேந்திர மோடியை மானசீகமாக வழிபடும் விராட் கோலியை பாஜக விசுவாசிகள் ஏன் குறிவைக்க வேண்டும்?
கிரிக்கெட்டுக்குள் அரசியல் உண்டா? கிரிக்கெட், களத்துக்குள் மட்டும் ஆடப்படும் ஆட்டம் மட்டுமல்ல. காலனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த பரப்பப்பட்ட கிரிக்கெட்தான் பின்னாட்களில் காலனியத்துக்கு எதிரான வலுவான ஆயுதமாகவும் மாறியது. சுதந்திர இந்தியாவில் நேரு கிரிக்கெட் பேட்டைத் தூக்கியது, ஓர் அரசியல் சமிக்ஞை என்றால் இன்றைக்கு மோடி தன் பெயரில் ஒரு பிரமாண்ட கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணித்திருப்பதும்கூட ஒரு சமிக்ஞைதான்.
இந்திய சமூகத்தில் கிரிக்கெட் என்பது அரசியல், தேசபக்தி, பொதுக் கருத்துருவாக்கம், வணிகம் எனப் பல தளங்களில் பங்களிக்கக் கூடியது. கிரிக்கெட் வீரர்களும் கடந்த காலங்களில் தேசபக்தியை வெளிக்காட்டும் பொருட்டு ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், மோடியின் காலத்தில் அந்த லட்சுமண ரேகை கொஞ்சம் அழிபட்டுவிட்டது. புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கையுறைகளில் ராணுவச் சின்னத்தை தோனி அணிந்துகொண்டு விளையாடியது, இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்த பாடகி ரிகானாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சச்சின் போட்ட 'ட்வீட்' என நிறைய உதாரணங்களை சொல்ல முடியும்.
இவர்களை எல்லாம் மிஞ்சும்விதமாக, விராட் கோலி பாஜக அரசின் திட்டங்களை உளப்பூர்வமாகவே வந்தனம் செய்தார். பண மதிப்பிழப்பு திட்டத்தை சுதந்திர இந்தியாவின் முக்கியமான நடவடிக்கை எனப் புகழாரம் சூட்டுவது, மோடிக்கு ஃபிட்னஸ் சாலஞ்ச் கொடுப்பது என மோடிக்கு நெருக்கமான ஒருவராகவே தன்னைக் காட்டிக்கொண்டார். இவற்றை எல்லாம்விட முக்கியமாக புதிய இந்தியாவின் பிரதிநிதி எனத் தன்னை அவர் அறிவித்துக்கொண்டது கருத்துருவாக்கத் தளத்தில் பாஜகவிற்குக் கைகொடுக்கும் விதமாக அமைந்தது. மோடி என்ற பிம்பத்தை கோலி பயன்படுத்திக்கொண்டதுபோலவே மோடியும் கோலியின் பிரபல்யத்தைத் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் பார்க்க முடிகிறது.
மோடிக்கு இத்தனை நெருக்கமான கோலியை பாஜகவினர் எப்போது எதிரியாக பார்க்கத் தொடங்கினர்? 2017-ல் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற அவருடைய திருமணம் முதலில் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. 'விராட் கோலி உண்மையான தேச பக்தரா?' என பாஜக தலைவர் ஒருவர் விமர்சித்தார். 2020-ல் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் வெளியான 'பாதாள் லோக்' வெப் சீரிஸ் அடுத்ததாக சர்ச்சையில் சிக்கியது. பாஜகவிற்கு எதிரான கருத்தியல் நிலைப்பாடு கொண்ட அந்தப் படைப்பைத் தடைசெய்ய வேண்டுமென பாஜக தலைவர்கள் குரல் எழுப்பினர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர் அனுஷ்கா ஷர்மா மீது வழக்கும் தொடர்ந்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஊடகங்களில் கேட்கப்பட்ட கேள்விக்கு "இரண்டு தரப்பிலும் நியாயம் இருப்பதுபோலத் தெரிகிறது" எனப் பட்டும்படாமல் பதிலளித்தார் விராட் கோலி.
களத்திற்கு வெளியே இப்படி என்றால் களத்திற்கு உள்ளே இன்னொரு விதமான சிக்கலை எதிர்கொண்டார் விராட் கோலி. 2016-ல் பயிற்சியாளர் தேர்வை சிஏசி சார்பாக நடத்திய கங்குலி, விராட் கோலிக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட ரவி சாஸ்திரியைப் புறக்கணிக்கத்தார். எதற்கும் அசைந்து கொடுக்காதவரும் கிரிக்கெட் உலகின் நன்மதிப்பை பெற்றவருமான அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.
இந்திய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக தன்னைக் கருதி வலம்வந்த கோலிக்கு கும்ப்ளேவின் கடும் போக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிருப்தி ஒரு கட்டத்தில் முற்றி சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது சண்டையாக வெடித்தது. சமாதானத்துக்கு முயன்ற கங்குலியின் முயற்சிகள் தோல்வியடையவே கும்ப்ளே பதவி விலகினார். கோலிக்கு இணக்கமான சாஸ்திரி இந்த முறை எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் பயிற்சியாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.
2019-ல் பிசிசிஐ தலைமைப் பொறுப்பை கங்குலி ஏற்றதும் கோலியின் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்படுத்தப்பட்டது. தேர்வுக் குழுவின் லகான், கோலி கைகளில் இருந்து கங்குலி கைகளுக்குச் சென்றது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் உலகக் கோப்பை தொடர்களில் இந்தியாவின் செயல்பாட்டில் முன்னேற்றம் தேவை என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லத் கங்குலி தொடங்கினார். கோலி உடனான கங்குலியின் மோதல் போக்கிற்கு கும்ப்ளே விவகாரம் மட்டுமில்லாமல், யாருக்கு முதலிடம் என்ற அதிகாரப் போட்டியும் ஒரு காரணம்.
2020-ல் இருந்து கோலியின் தனிப்பட்ட ஆட்டத்திறன் மங்கத் தொடங்கியது. 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. இதுவரையிலான பாஜக - கோலி தொடர்பான நிகழ்வுகளையும் கங்குலி - கோலி தொடர்பான நிகழ்வுகளையும் வரிசைக்கிரமமாக பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகப் புலப்படுகிறது. 'சரியான தருணத்திற்காக காத்திருந்திருக்கிறார்கள்.'
ஒரு வெப் சீரிஸ் எடுத்ததற்காக கோலியை பாஜக கைகழுவிவிடுமா? இங்குதான் வணிகமும் தேசபக்தியும் ஆட்டத்தைத் தீர்மானிக்கிறது. மோடி - அமித் ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி, 'மும்பை இண்டியன்ஸ்' அணியின் உரிமையாளர். மும்பையை சேர்ந்தவரான ரோஹித் ஷர்மா, தேசிய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றால் அது 'மும்பை இண்டியன்ஸ்' அணிக்குக் கூடுதல் வியாபாரத்தை பெற்றுக்கொடுக்கும்.
2024 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. உலகக் கோப்பையை வென்ற கேப்டனுடன் சேர்ந்து தான் புகைப்படத்தில் நிற்பது தன்னுடைய வலிமையான இந்தியா கருத்துருவாக்கத்திற்குப் பலனளிக்கும் என மோடி நம்புகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில்தான் டி 20 உலகக் கோப்பைக்கான ஆலோசகராக தோனி அறிவிக்கப்படுகிறார்.
இதை ஜெய் ஷா - கங்குலி இணை, கோலிக்கு வெளிப்படையாக விட்ட சவாலாகவே புரிந்துகொள்ள வேண்டும். தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே உலகக் கோப்பை தொடருடன் டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்ததை ஒரு தற்காப்பு உத்தியாகவே புரிந்துகொள்ள முடிகிறது. விஷயம் இத்துடன் நிற்கவில்லை. இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா தோல்வியடைகிறது.
தோல்விக்கு காரணம் முகமது ஷமிதான் எனக் கட்டம்கட்டி அவரை பாஜக அனுதாபிகள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர். முகமது ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததோடு நில்லாமல் ஷமியை மதரீதியில் தாக்கியவர்களைக் கடுமையான வார்த்தைகளை கொண்டும் தாக்கிப் பேசினார் விராட் கோலி. இதைத் தொடர்ந்து கோலிக்கு ஆதரவாக ராகுல்காந்தி தனது சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டார். இது பாஜக மட்டுமல்ல விராட் கோலியே எதிர்பார்க்காத ஒன்று.
இது தொடருமானால் கருத்துருவாக்கத் தளத்தில் தனக்கு கடுமையான வீழ்ச்சி ஏற்படுமென பாஜகவிற்கு நன்றாகத் தெரியும். இப்போது ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பு மட்டும்தான் பறிக்கப்பட்டுள்ளது. அடுத்து வருகின்ற தொடர்களில் கோலி கொஞ்சம் பிசகினாலும் அவருடைய டெஸ்ட் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. சி.எல்.ஆர். ஜேம்ஸ் எழுதிய வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
“What do they know of cricket who only cricket know?”

5

2




1

பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.