கட்டுரை, ஆளுமைகள், விளையாட்டு 4 நிமிட வாசிப்பு

எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி?

ராஜன் குறை கிருஷ்ணன்
20 Apr 2024, 5:00 am
1

எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன். 

ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம். 

தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அதிநாயக பிம்பமான நாயகன்

இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது. 

அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம். 

சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ஆளுமைகள் ஏன் சொதப்புகிறார்கள்?

தினேஷ் அகிரா 20 Feb 2023

ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.   

சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன. 

இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.   

அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண்

இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார்.

ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர். 

கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும்.

மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும். 

விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன. 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

விராட் கோலி நீக்கப்பட்ட அரசியல் என்ன?

தினேஷ் அகிரா 13 Dec 2021

கணியன் பூங்குன்றனின் குரல்

சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது. 

நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.   

விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு. 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

ஆளுமைகள் ஏன் சொதப்புகிறார்கள்?
விராட் கோலி நீக்கப்பட்ட அரசியல் என்ன?
சோபர்ஸுக்குப் பிறகு ஆல்-ரவுண்டர் யார்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


3

3

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அரசியல் கள விதிகள்200 கேள்விகள்பசி மையம்prerna singhசோராஅசாதுதீன் ஒவைசிசிறுபான்மைக்கு வெற்றிபாமககுஜராத் கல்விபள்ளி நிர்வாகம்சமூக உரசல்கள்சோழர்கள் இன்றுபிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டிஇந்தி அரசியல்ஜெர்மனிசேரன்வ.ரங்காச்சாரிதேச விடுதலைபாம்புபிராமண அடையாளம்கேஜிஎஃப் 2உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகள்இமாச்சல் பிரதேசம்பிடிஆர் மதுரை பேட்டிகர்வாசரணம்கல்கியின் புத்தகங்கள்வாழ்வியல் முறைமார்க்ஸ் ஜிகாத்வே.வசந்தி தேவி கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!