கட்டுரை, தொடர், கலாச்சாரம் 4 நிமிட வாசிப்பு

காந்தியின் வர்ணாசிரம தர்மம்

ராஜன் குறை கிருஷ்ணன்
27 Jan 2024, 5:00 am
1

ந்தியாவின் சாதி அமைப்புக்கும் இங்கு உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட ‘தர்மம்’ தொடர்பான தத்துவங்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. ‘சனாதன தர்மம்’ எனும் சொல்லாடல் ஓர் உதாரணம். பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் சனிக்கிழமைதோறும் எழுதும் கட்டுரைகளில், தர்மம் தொடர்பான தத்துவங்களை இங்கே அறிமுகப்படுத்துவதுடன் சமகால நோக்கிலிருந்து அவை பேசும் நியாயங்களை விசாரணைக்கும் உள்ளாக்குகிறார். சிறிய கட்டுரைகள். ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. சாதி குறித்துப் பேசும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள். தனித்தும் வாசிக்கலாம். தொடராகவும் வாசிக்கலாம்.

காந்தி என்று வேறு எந்தப் பெயரையும் சேர்க்காமல் சொன்னால் அது எம்.கே.காந்தி என்ற மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியைத்தான் குறிக்கும். மகான் என்றும், மகாத்மா என்றும் சேர்த்தழைப்பது வழக்கம். இத்தகைய விளிப்பிற்குப் பொருத்தமானவர்தான் காந்தி என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு மகான், ஒரு மகாத்மா என்றுதான் நினைக்கிறேன். இருபதாம் நூற்றாண்டின் ஆக முக்கியமான உலகளாவிய ஆகிருதிகளில் ஒருவர் காந்தி. மிக ஆழமான தத்துவ தரிசனத்தைக் கொண்டவர்.

இந்தச் சிறிய கட்டுரையில் காந்தியின் தத்துவ சிந்தனையை முழுவதும் விவாதிப்பது சாத்தியமல்ல. எந்த ஒரு தத்துவ சிந்தனையிலும் ஒரு உள்முரண் இருக்கும். இந்தக் கட்டுரையில் காந்தியின் சிந்தனைக் கட்டுமானத்தின் மிகப் பெரிய பலவீனமாக அவர் வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக்கொண்டதையே கூற வேண்டும். நவீன இந்திய சமூகம் முற்றிலுமாக நிராகரித்து இருக்க வேண்டிய வர்ண தர்ம சிந்தனைக்குப் பதுங்கி வாழ ஒரு குகையினை அவர் தேசிய உளவியலில் ஏற்படுத்திவிட்டார் எனலாம்.   

காந்தி வர்ண தர்மம் குறித்துக் கூறியவை ‘மை வர்ணாசிரம தர்மா’ (My Varnashrama Dharma) என்ற சிறு நூலாக தொகுக்கப்பட்டு கிடைக்கிறது. இது அவர் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறு கட்டுரைகள். அவர் கருத்துகள் சற்றே மாற்றமடைந்துவந்துள்ளன என்று கருத இடமிருக்கிறது. ஆனால், அவர் வர்ண தர்மத்தை ஒரு லட்சிய சமூகமாக பார்க்க முயற்சித்தார் என்பது அடிப்படையானது. ஜாதிய சமூகத்தை அவர் எதிர்க்கிறார். தீண்டாமையை சமூக இழிவு எனக் கண்டிக்கிறார், நிராகரிக்கிறார். ஆனால், வர்ணாசிரம தர்மம் தவறல்ல என்று கூறுகிறார்.  

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

முக்கியமான விஷயம், மனுவோ பிற தர்ம சாஸ்திரக்காரர்களோ கூறிய எதையும் காந்தி வழிமொழியவில்லை. தர்ம சாஸ்திரங்களைப் பற்றி கவலையே படவில்லை. அவர் வர்ண தர்மம் பிறப்பிலேயே தீர்மானமாகும் ஒரு வேலைப் பிரிவினை என்று மட்டுமே கருதினார். அதனால் மனிதர்களின் சக வாழ்விற்கோ, ஆன்ம வளர்ச்சிக்கோ தீங்கு எதுவும் இல்லை என்றும் கருதினார். வர்ணங்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்று கூறினார். 

காந்தியின் கற்பனாவாத, லட்சியவாத நோக்கிற்கும், மனு எழுதிய தர்ம சாஸ்திரத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வர்ண தர்மத்தின் அடிப்படையே முதல் மூன்று வர்ணங்கள் இரு பிறப்பாளர்கள் என்பதும், சூத்திரர்கள் ஒரே பிறப்பை மட்டுமே கொண்ட நாலாம் தர மக்கள் என்பதும்தாம். பிராமணர்களே அனைவரிலும் மிக உயர்ந்தவர்கள் என்பதும் அதன் இன்றியமையாத அடிப்படையாகும். இந்த அமைப்பே காலப்போக்கில் அவர்ணர்கள் என்ற உடைந்த மனிதக் குழுக்கள் உருவாகவும் காரணம் என அம்பேத்கர் கூறுவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

காந்தி ஏன் இப்படி ஒரு கற்பனாவாத, லட்சியவாத நோக்கினை முன்வைத்தார்? அவருடைய தூண்டுதல்கள் என்ன? இங்கே ஒரு சில அம்சங்களையேனும் நாம் கவனம் கொள்ளத்தான் வேண்டும். 

தனிமனித சுதந்திரமும், வேட்கையும்

ஒவ்வொரு தனிநபரும் பூரண சுதந்திரமுள்ள தனிநபர் என்பதும், அவர் தன் வாழ்க்கையை விருப்பப்படி அமைத்துக்கொள்ள சமூகம் வழிவகை செய்ய வேண்டும் என்பதுமே நவீன அரசியல் தத்துவம். இதனை லிபரலிஸம் (Liberalism) என்பார்கள். தமிழில் நான் சுதந்திரவாதம் என்று எழுதிவருகிறேன். ஆங்கிலத்தில் ‘இஸம்’ என்ற பின்னொட்டை தமிழில் ‘இயம்’ என்றோ, ‘வாதம்’ என்றோ எழுதலாம். என்னுடைய தேர்வு வாதம் என்பதே. அதாவது சுதந்திரவியம் அல்ல; சுதந்திரவாதம். ஏனெனில், இது ஒரு கருத்தாக்கத்தை மையப்படுத்தி எழுப்பப்படும் நோக்கு என்றாலும், அனைத்து முரண்பாடுகளுக்கும் முகம் கொடுப்பது. ஒற்றைச் சாராம்சம் கொண்டதல்ல. 

இந்தச் சுதந்திர தனிநபர் என்ற லட்சியத்தின் ஒரு உபவிளைவு என்னவென்றால், அவரவர் நலனே அவரவருக்கு முக்கியம் என்பதாகும். ஒவ்வொருவரும் பொருள் ஈட்டுவதில், நுகர்வதில் பிறருடன் போட்டியிட வேண்டும். தன்னுடைய வெற்றியையே முதன்மையானதாக கருத வேண்டும். இந்தச் சுயநல அமைப்பு முதலீட்டிய சந்தை பொருளாதாரத்தின் அடிப்படைகளில் ஒன்று. தனிநபர் சுதந்திரம் என்பதைக் கட்டற்ற வேட்கை, நுகர்வு ஆகியவற்றை நியாயப்படுத்துவதாக மாற்றியது அது. 

இந்தப் போக்கினையே காந்தி அருவெறுத்தார். அவர் மனிதர்களைச் சமூக பந்தங்களில், நெறிமுறைகளில் கட்டுண்டவர்களாகவே கண்டார். காலம் காலமாக உருவான சமூக விழுமியங்களை மனிதர்கள் புறக்கணித்துவிடக் கூடாது என்று கருதினார். பொது நலனை முன்வைத்தே வாழ வேண்டும் என நினைத்தார். மேற்கத்திய சமூகத்தின் உற்பத்தி நுகர்வுப் பெருக்கம் மனிதர்களைப் பண்டங்களுக்கு அடிமையாக்குவதாகக் கண்டார். அதனால் அவர் கன்சர்வேடிவ் (Conservative) எனப்படும் மரபுவாத சிந்தனைக்கு நெருக்கமாக இருந்தார். 

இந்திய பண்பாட்டை உயர்த்திப் பிடித்தல்

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாகரீகம் இந்திய பண்பாட்டை ஒரு முன்னேற்றமற்று தேங்கிய பழமைவாத குட்டையாக கணித்தது. மற்றொருபுறம் அதன் கல்வியாளர்கள் இந்திய பண்பாட்டின் தொன்மையை வியந்தோதினார்கள். இந்த இரட்டை நிலைப்பாடு இந்திய பண்பாட்டை ஒரு வீழ்ச்சியடைந்த, தேங்கிய குட்டை என்றும், ஆங்கிலேயர்கள் அதன் மீட்பர்கள் என்றும் ஐரோப்பிய, இந்திய சிந்தனையாளர்கள் பலரை எண்ண வைத்தது. 

காந்தியோ ஐரோப்பிய நாகரீகம் தொழிற்புரட்சி, உற்பத்தி பெருக்கத்தின் மூலம் சமூக சமநிலையைக் குலைப்பதாகக் கண்டார். இயற்கையுடன் இணைந்த எளிய வாழ்க்கையே மனிதர்களின் ஆன்ம மேன்மைக்கு வகை செய்யும் என்று கருதினார். அதனால், இந்திய பண்பாட்டினை தேங்கி பாழ்பட்ட ஒன்றாக கணிப்பதை அவர் ஏற்கவில்லை. அதனாலேயே அவர் வர்ணாசிரம தர்மத்திற்கு ஒரு லட்சிய நோக்கினை வழங்கி அதனை முற்றிலும் அவமானத்திற்குரிய ஒன்றல்ல என்று கூற விழைந்தார் எனலாம். 

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

காந்தியிடம் பலியான விமர்சன சிந்தனை  

காந்தியின் நோக்கு நிலைகள் தேசியவாதச் சிந்தனைக்கு உகந்ததாக இருந்தன. ஐரோப்பிய பண்பாட்டினைவிட அறிவார்ந்த பண்பாட்டிற்கு நாம் சொந்தக்காரர்கள் என்ற எண்ணம் தேசிய பெருமிதத்திற்கு துணையாக இருந்தது. காந்தி பார்ப்பனிய சிந்தனைக் கட்டமைப்பினைப் புதியதொரு லட்சியவாத அடிப்படையில் புத்தாக்கம் செய்துவிட முடியும் என்று நம்பினார். அது அவரை வெகுஜன அரசியலின் புனிதக் குறியீடாக மாற்றுவதற்கு வசதியாக இருந்தது.

காந்தியின் மிகப் பெரிய பலவீனம் வர்ண தோற்றவியலின் ஆதார விசையான மறுபிறவிக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதுதான். இந்தப் பிறவியில் பிராமணர்கள் தவறிழைத்தால் அடுத்த பிறவியில் தண்டிக்கப்படுவார்கள் என்றும், இந்தப் பிறவியில் நன்மை செய்தவர்கள் அடுத்த பிறவியில் பிராமணர்களாகப் பிறப்பார்கள் என்றும் அவரால் கூற முடிந்தது.  

இறை நம்பிக்கை வேறு, பக்தி வேறு, மறுபிறவி போன்ற மூடநம்பிக்கைகள் வேறு. காந்தியே இந்த முரண்பாட்டினை நேரிடையாக சந்திக்கிறார். வைக்கம் சத்தியாகிரகத்தில் ஆலயத்தை சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர்கள், பிற தீண்டப்படாத சமூகத்தினரை அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னெடுத்த போராட்டத்தில் சனாதனிகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்கிறார் காந்தி. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் முற்பிறவியில் செய்த பாவத்தால்தான் அவர்கள் தாழ்ந்த ஜாதியில் பிறந்தார்கள். அவர்களுக்கு அனுமதி மறுப்பது என்பது கடவுளின் ஏற்பாட்டை நிலைநிறுத்துவதுதான் என்று சொல்கிறார்கள். 

காந்தி தானும் மறுபிறவி கோட்பாட்டை ஏற்பதாகக் கூறுகிறார். ஆனால், தாழ்த்தப்பட்டவர்களை இப்படியெல்லாம் மனிதாபமில்லாமல் நடத்த வேண்டும் என்று எந்த சாஸ்திரத்தில் கூறியிருக்கிறது என்று கேட்கிறார். காந்தியைப் பொருத்தவரை தர்ம சாஸ்திரங்களை மனிதாபிமானத்துடன் மாற்றி எழுதிவிட்டால், அனைவரையும் மதிக்கும், சமமாக நடத்தும் விழுமியங்களை உருவாக்கிவிட்டால் போதுமென தோன்றுகிறது. 

ஆனால், வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு அதிக நாள் தீவிர சிறை தண்டனை அனுபவித்த பெரியார் விமர்சன சிந்தனையின் துணையில்லாமல் வர்ண தர்மத்தின் கொடுமைகளைக் களைய முடியாது என்று உணர்கிறார். அது அவரை வர்ணாசிரம சிந்தனை, மறுபிறவி கோட்பாடு, கடவுள் கோட்பாடு ஆகிய அனைத்தையும் நிராகரித்து அனுமானங்களற்ற பிரகிருதிவாத சிந்தனையை நோக்கி செலுத்துகிறது. 

காந்தியின் ஆன்மீக நோக்கிலான லட்சியவாத சுயமரியாதையானது, பார்ப்பனியத்தால் சுலபமாக கபளீகரம் செய்யப்பட்டது. பெரியாரின் பகுத்தறிவு நோக்கிலான புரட்சிகர சுயமரியாதை இன்றளவும் வர்ண தர்ம சமூகத்துடன் போராடிக்கொண்டுள்ளது. உயிர்ப்புடன் காந்தியத்தைத் தொடர்ந்து சிந்திப்பவர்கள், பெரியாரியத்தை அதன் நல்லதொரு தொடர்ச்சியாகக் காண்பார்கள் என்று கூறலாம்.  

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

எல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?
வர்ண ஒழுங்கு என்பது தர்மமா?
ஏன் வர்ணத்தைப் பேசுகிறோம்?
வர்ண அடையாளம் உடலுக்கா, ஆன்மாவிற்கா?
வர்ண பகுப்பு ஜாதியமானது எப்படி?
பிராமணர் என்பது ஜாதியா, வர்ணமா?
நடுவில் இரண்டு வர்ணங்களைக் காணோம்
சூத்திரர்கள் எனப்பட்டவர்கள் யார்?
தீண்டாமை எப்படி நிலைநிறுத்தப்பட்டது?
எதனால் வர்ண - ஜாதி எதிர்ப்பே இன்றைய தர்மமாக உள்ளது?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


3






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Sundar Gopalakrishnan   4 months ago

வர்ணாசிரம தர்மம் பற்றி காந்தி என்ன விதமான கருத்துகள், நிலைப்பாடுகளை காந்தி கொண்டிருந்தார் என்று ராஜன் குறை தெளிவாக முன்வைக்கிறார். இந்த விஷயத்தில் பெரியாரின் நிலைப்பாடே மேலானது, உயர்வானது என்பதையும் முன்வைக்கிறார்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆண் பெண் உறவுச்சிக்கல்கௌசிக் தேகா கட்டுரைமாநிலங்களவையின் சிறப்புஐபிஎல்மற்றும்பா.வெங்கடேசன் சிறுகதைமாஸ்கோ‘முதல்வரைப் போல’ அதிகாரம் செய்ய ஆசை!கட்டற்ற நுகர்வுஎருமை வளர்ப்புமாபெரும் தமிழ்க் கனவு ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டிசுய தொழில்நேரு-காந்தி குடும்பம்பயனாளர்கள்மா.சுப்பிரமணியம்சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவெற்றொளிஜனாதிபதிதென்யா சுப்தொழில்இந்திய வணிகம்வாக்குச் சீட்டுபி.எல்.சந்தோஷ்சிவசங்கர் பேட்டிஎம்எஸ்எஸ்: பெரிய தலைக்கட்டுமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமமுகப்புக் கடிதம் எழுதுவது எப்படிகூட்டுறவுதனிப் பெரும்பான்மைஅரவிந்த் கேஜ்ரிவால்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!