கட்டுரை, தொடர், கலாச்சாரம் 4 நிமிட வாசிப்பு
நடுவில் இரண்டு வர்ணங்களைக் காணோம்
இந்தியாவின் சாதி அமைப்புக்கும் இங்கு உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட 'தர்மம்' தொடர்பான தத்துவங்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 'சனாதன தர்மம்' எனும் சொல்லாடல் ஓர் உதாரணம். பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் சனிக்கிழமைதோறும் எழுதும் கட்டுரைகளில், தர்மம் தொடர்பான தத்துவங்களை இங்கே அறிமுகப்படுத்துவதுடன் சமகால நோக்கிலிருந்து அவை பேசும் நியாயங்களை விசாரணைக்கும் உள்ளாக்குகிறார். சிறிய கட்டுரைகள். ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. சாதி குறித்துப் பேசும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள். தனித்தும் வாசிக்கலாம். தொடராகவும் வாசிக்கலாம்.
பண்டைய காலத்திலிருந்து, நவீன காலத்திற்கு இந்திய வரலாறு நுழையும்போது ஒரு முக்கியமான நுழைவாயிலாக இருப்பது மராத்திய பேரரசுக் காலம் (1674-1818). பிராமணிய இந்து மதத்தின் மீட்டுருவாக்கத்திற்கான முக்கிய களமாக மராத்திய பேரரசு இருந்துள்ளது என்றால் மிகையாகாது.
மராத்திய பேரரசின் ராணுவ நடவடிக்கைகள், அவை வென்ற, ஆட்சிக்குட்படுத்திய பிரதேசங்களைக் கடந்து, பிராமணிய கருத்தியல் மேலாதிக்கத்தை உருவாக்கி நிலைநிறுத்துவதில் கணிசமான பங்களிப்பை அது செலுத்தியுள்ளது என்றே கூறத் தோன்றுகிறது. உதாரணமாக, பேரரசின் துவக்கத்திலேயே, 1674ஆம் ஆண்டு, சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழா மிக சுவாரசியமான நிகழ்வாகிறது.
சிவாஜி ஒரு சிறந்த படைத் தளபதியாக இருக்கிறார். பல கோட்டைகளைக் கைப்பற்றுகிறார். ஆனால், அவர் சத்திரியர் இல்லை. அவரது தாத்தா விவசாயம் செய்துவந்தது அனைவருக்கும் தெரியும். மேலும், ஒரு சத்திரியராக அவர் பூணூலும் அணியவில்லை.
சிவாஜி போரில் கைப்பற்றிய பகுதிகளை ஆள வேண்டும் என்றால், அவர் சத்ரபதியாக முடிசூட வேண்டும். சத்திரியராக இல்லாதவர் எப்படி முடிசூடலாம் என்ற கேள்வி மராத்திய நிர்வாகிகளான பிராமணர்களுக்கு எழுகிறது. அந்தப் பிரச்சினையைத் தீர்க்க காக பட்டர் என்ற பெயருடைய விஷ்வேஷ்வர பட்டரை காசியிலிருந்து வரவழைக்கிறார்கள். இவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்தான்; ஆனால் காசியில் வசித்துவந்தார்.
காக பட்டர் ஒரு வேத விற்பன்னர் என்பதால் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. அவர் சிவாஜியின் மூதாதையர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த சத்திரியர்கள் என்று ‘கண்டுபிடித்து’ / கற்பித்துச் சொன்னார். அத்துடன் சத்திரியராக வாழாததற்கு சிவாஜி பிராயச்சித்தங்கள் செய்ய வேண்டும் என்றார். பலவிதமான சடங்குகளைக் கண்டுபிடித்து, நிறைய பொருட்செலவு செய்து, பிராமணர்களுக்கு ஏராளமான தானங்களைக் கொடுத்து சிவாஜி முடிசூட்டிக்கொண்டார்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
இந்த நிகழ்வில் வெளிப்படும் பிராமணிய கருத்தியல் மேலாதிக்கத்தைப் புரிந்துகொண்ட அறிஞர் அண்ணா அதை ஒரு சுவாரஸ்யமான நாடகமாக்கியதும், திமுகவின் துவக்க காலத்தில் அதன் கொள்கையை விளக்க அந்த நாடகம் பெரிதும் பயன்பட்டதும் சுவாரஸ்யமான வரலாறு.
ஆனால், இந்த நிகழ்வுக்குப் பின் சத்திரியர்களே சமகாலத்தில் இல்லை என்ற கருத்து வலுவடைந்ததாகத் தோன்றுகிறது. மாதவ் தேஷ்பாண்டே என்ற மிச்சிகன் பல்கலைகழக சம்ஸ்கிருத பேராசிரியர் எழுதியுள்ள கட்டுரை1 ஒன்று இதனை விவரிக்கிறது. சிவாஜி தொடங்கி மராத்தியத்தில் ஆட்சி செய்பவர்கள் தங்களைச் சத்திரியர்கள் என்று கூறிக்கொள்வதும், பிராமணர்கள் அதை மறுப்பதும் இன்றுவரை தொடர்வதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
உதாரணமாக, சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் தந்தை கேசவ் சீதாராம் தாக்கரேவிற்கும், ராஜ்வாடே என்ற பிராமண வரலாற்று ஆசிரியருக்கும் நிகழ்ந்த சம்வாதத்தைக் கூறலாம். தாக்கரேவின் சந்திரசேனிய காயஸ்த பிரபு என்ற ஜாதி சத்திரியர்களல்ல, சூத்திரர்களே என்று 1916ஆம் ஆண்டு ராஜ்வாடே எழுதியபோது, வெகுண்டெழுந்தார் தாக்கரே. ‘மராத்திய சாம்ராஜ்யத்தை நிறுவியது பார்ப்பனரல்லாதோர் என்றும், ஆனால் அதில் ஆதிக்கம் செலுத்தி, கொடுமைகள் செய்தது பிராமணர்கள்’ என்றும் தாக்கரே கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
மாதவ் தேஷ்பாண்டே தன் கட்டுரையில் எப்படிப் பிராமணர்களிடையே தாங்கள் மட்டுமே ஆரிய வர்ணம், சத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களுடன் கலந்துவிட்டார்கள் என்ற கருத்து பரவியிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக மஹாதேவ் மோரேஷ்வர் குந்தே (1835-1888) என்ற வரலாற்றாசிரியரை மேற்கோள் காட்டுகிறார்.
குந்தேவின் வார்த்தைகளிலேயே அதனைப் படிப்பது தெளிவைத் தரும்.
ஆரியர்கள் ஆரியரல்லாதோரைவிட சாராம்சத்தில் மேம்பட்டவர்கள். இந்தியாவின் சமூக வரலாறு என்பது இந்த இரு இனங்களும் எப்படி தங்களுக்குள் உறவுகொண்டன என்பதே… ஆரியர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர் என்று மூன்று வர்ணங்களாக பிரிக்கப்பட்டது வழக்கொழிந்து போய்விட்டது. இப்போது இரண்டே ஜாதிகள்தான் உள்ளன என்பது தெளிவாக உறுதிசெய்யப்பட்டுள்ளது – பிராமணர்கள், சூத்திரர்கள். - (The Vicissitudes of Aryan Civilization in India, 1880)
மனு தர்மம் துவங்கி பல தர்ம நூல்களிலும் தொடர்ந்து 'முதல் மூன்று வர்ணங்களும் இரு பிறப்பாளர்கள்; ஆனால், சூத்திரர்களுக்கு அந்தத் தகுதி கிடையாது' என்று கூறப்பட்டதைப் பார்த்தோம். சூத்திர அடையாளத்திற்குப் பல்வேறு இழிவுகள், அடிமை அந்தஸ்து போன்றவை கற்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் பிராமணர்கள் தவிர அனைவரும் சூத்திரர்கள்தான் என்ற கருத்து பல்வேறு ஜாதியினரையும் சத்திரிய, வைசிய அந்தஸ்தைக் கோருகின்ற நிலைக்குத் தள்ளியது. வர்ணம் ஜாதியாக உருமாறி நிலைபெற்ற வரலாற்றில் இது முக்கியமான பகுதியாகும்.
¶
தர்மம் என்பது முக்கியமான ஒரு வார்த்தை. அது வாழ்வியல் நெறிகளை, மனிதர்கள் கைக்கொள்ள வேண்டிய அறத்தைக் குறிப்பது. ஏன் பிரபஞ்ச நியதிகளையும், காலத்தையும்கூட குறிப்பது!
மானுடச் செயல்களைத் தீர்மானிக்க உதவ வேண்டிய தர்ம சிந்தனை, மனிதர்களைப் பிறப்பிலேயே வர்ண அடையாளமாக சாராம்சப்படுத்தி, அவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்றும், அது முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கான பலன் என்றும் தோற்றவியலாக சாராம்சப்படுத்திய விதமானது, தர்ம சாஸ்திரங்களை வெறும் விதிமுறைகள் தொகுப்பாக்கியது.
தோற்றவியல் (ontology) என்ற சொல்லை எந்தப் பொருளில் பயன்படுத்துகிறேன் என்பதையும் ஏற்கெனவே விளக்கியுள்ளேன். அது நமக்கு அனுபவமாகும் ஒன்று. எல்லா காலங்களிலும் அதே சாராம்சத்தைக் கொண்டிருந்ததாக அடையாளப்படுத்தும் போக்காகும். வர்ணத் தோற்றவியல் அதன் உடல் சார் தொடர்ச்சிக்காக அகமணமுறையை வலியுறுத்துவதை சென்ற வாரங்களில் நாம் விரிவாகப் பார்த்தோம்.
சனாதனம் என்றால், அழிவற்றது என்று ஒரு பொருள். பழைய கால சிந்தனை என்று மற்றொரு பொருள். மகாபாரதத்தில் உத்தாலகர் என்ற முனிவர் சனாதன தர்மம் என்று கூறுவதை அவர் மகன் மாற்றிவிடுகிறான் என்பதை முதல் அத்தியாயத்தில் பார்த்தோம். இதனால் ஒவ்வொரு முறை மாறும்போதும் தர்மம் தன்னை அழிவற்றதாகவே கூறிக்கொள்ளும் எனலாம். வர்ண தோற்றவியலுக்கு இது முழுமையாக பொருந்தி வருகிறது.
இதையெல்லாம் மனதில் கொள்ளும்போதுதான் நாம் தர்ம சாஸ்திரங்களின் வரலாற்றைத் தொகுத்துப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், மனு எழுதியது மட்டுமே தர்ம சாஸ்திரம் அல்ல. அது ஒரு மூலநூல். தொடர்ந்து பலரும் தர்ம சாஸ்திரங்களை எழுதிக்கொண்டே இருந்துள்ளார்கள். பல விதமான மாற்றங்கள் அவற்றில் இருந்தாலும் இரண்டு அம்சங்கள் முக்கியமாகத் தொடர்கின்றன.
ஒன்று, இந்த தர்ம சாஸ்திரங்களை எல்லா காலங்களிலும் எழுதியவர்கள், பயின்றவர்கள், பரப்பியவர்கள் பிராமணர்கள்.
இரண்டு, பிறப்பு சார்ந்த தோற்றவியல் சாராம்சமும், அதை வலியுறுத்தும் மறுபிறவிக் கோட்பாடும், பிராமண பிறப்பின் மேன்மையும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவந்துள்ளன.
பிற்காலனிய சிந்தனைப் போக்கில் ஒரு சிலர் தர்ம சாஸ்திரங்களைப் பற்றி இரண்டு கருத்துகளை இணைத்துக் கூறுவதுண்டு. ஒன்று, தர்ம சாஸ்திரங்களின் பன்மை. மற்றொன்று நடைமுறைக்கும், இவற்றிற்கும் இருந்த இடைவெளி.
அத்தகைய பிற்காலனியக் கோணம் முக்கியமானதுதான் என்றாலும், நாம் அதேசமயம் எப்படிப் பிராமணர்கள் தொடர்ந்து வரையறைகளை, விளக்கங்களை உருவாக்கினார்கள் என்பதையும், சமூக உளவியலில் அது பிறப்பு சார் தோற்றவியலைத் தொடர்ந்து வலியுறுத்திவந்ததையும் புறந்தள்ள முடியாது.
அப்படிப் புறக்கணித்தால் இன்றைய ஜாதிய சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. ஏனெனில், வர்ண தோற்றவியலே, ஜாதியத்தின் தோற்றவியல் என்பதையும் கண்டோம். இதனைப் புரிந்துகொள்ள வர்ண ஒழுங்கில் இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாறுதலைக் காண்போம். அது சத்திரிய, வைசிய வர்ணங்கள் காணாமல் போனதுதான். அதாவது சத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களுடன் கலந்துவிட்டார்கள், அதனால் பிராமணர்கள், சூத்திரர்கள் என்ற இரண்டு வர்ணங்களே சமகாலத்தில் உள்ளன என்ற கருத்தாக்கம் வலுப்பெற்றது. குறிப்பாக மராத்திய பேரரசில் இந்தக் கருத்து உருவாகி வலுப்பெற்று பரவியதாக யூகிக்க முடிவதையே நாம் மேலே பேசிய விஷயத்தின் வழி பார்க்க முடிகிறது!
1MADHAV M. DESHPANDE, Aryan origins: arguments from the nineteenth-century Maharashtra in THE INDO-ARYAN CONTROVERSY: Evidence and inference in Indian history, ed. Edwin F. Bryant and Laurie L. Patton, Routledge, New York,2005.
தொடர்புடைய கட்டுரைகள்
எல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?
வர்ண ஒழுங்கு என்பது தர்மமா?
ஏன் வர்ணத்தைப் பேசுகிறோம்?
வர்ண அடையாளம் உடலுக்கா, ஆன்மாவிற்கா?
வர்ண பகுப்பு ஜாதியமானது எப்படி?
பிராமணர் என்பது ஜாதியா, வர்ணமா?
2
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.