கட்டுரை, தொடர், கலாச்சாரம் 4 நிமிட வாசிப்பு

சூத்திரர்கள் எனப்பட்டவர்கள் யார்?

ராஜன் குறை கிருஷ்ணன்
30 Dec 2023, 5:00 am
0

ந்தியாவின் சாதி அமைப்புக்கும் இங்கு உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட 'தர்மம்' தொடர்பான   தத்துவங்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 'சனாதன தர்மம்' எனும் சொல்லாடல் ஓர் உதாரணம். பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் சனிக்கிழமைதோறும் எழுதும் கட்டுரைகளில், தர்மம் தொடர்பான தத்துவங்களை இங்கே அறிமுகப்படுத்துவதுடன் சமகால நோக்கிலிருந்து அவை பேசும் நியாயங்களை விசாரணைக்கும் உள்ளாக்குகிறார். சிறிய கட்டுரைகள். ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. சாதி குறித்துப் பேசும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள். தனித்தும் வாசிக்கலாம். தொடராகவும் வாசிக்கலாம்.

ண்ணல் அம்பேத்கர் 1946ஆம் ஆண்டு ஒரு முக்கியமான நூலைப் பிரசுரிக்கிறார். அதன் முழு தலைப்பு ‘சூத்திரர்கள் எனப்பட்டவர்கள் யார்?: இந்தோ ஆரிய சமூகத்தில் அவர்கள் நான்காவது வர்ணமானது எப்படி?’ என்பதாகும். சுருக்கமான தலைப்பையே இந்தக் கட்டுரையின் தலைப்பாகவும் கொடுத்துள்ளேன். நூலை அம்பேத்கர் மகாத்மா ஜோதிபா பூலே (1827-1890) அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறார். 

நவீன இந்தியாவின் மகத்தான சூத்திரர் (The Greatest Shudra) என்று பூலேவைக் குறிப்பிடும் அம்பேத்கர், இந்துக்களில் தாழ்ந்த பிரிவினர் தாங்கள் உயர்ந்த பிரிவினருக்கு அடிமைப்பட்டிருப்பதை உணரும்படி செய்தவர் என்றும், இந்தியாவில் சமூக ஜனநாயகம் மலர்வது அன்னியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதைவிட முக்கியமானது என்ற தத்துவத்தை போதித்தவர் என்றும் தமது சமர்ப்பணத்தில் குறிப்பிடுகிறார். 

அம்பேத்கர் மிகக் கடுமையாக உழைத்து ஆய்வுசெய்துதான் இந்த நூலை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தர்ம சாஸ்திர பிரதிகள் பலவற்றை விரிவாக ஆராய்ந்து ஏராளமான மேற்கோள்களுடன் இந்த நூலை எழுதியுள்ளார். அவருடைய பொறுமையையும், சிரத்தையையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. சில முக்கியமான சம்ஸ்கிருத சுலோகங்களுக்கான மொழியாக்கம் சரிதானா என்று சம்ஸ்கிருத பேராசிரியர்களிடம் சரிபார்க்கவும் செய்துள்ளார். 

அம்பேத்கரின் நூலை வாசிக்க விரும்புபவர்களுக்கு அதன் ஆங்கில வடிவம் இணையத்தில் சுலபமாகக் கிடைக்கிறது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும், மார்க்ஸிஸ்ட் இண்டெர்னெட் ஆர்க்கைவ் என்ற தளத்திலும், அம்பேத்கர் பெயரிலான தளத்திலும் இதன் முழுமையான வடிவங்கள் கிடைக்கின்றன. மொத்தம் 256 பக்கங்கள். பெரும்பாலான பக்கங்கள் அம்பேத்கர் ஆதாரமாகச் சுட்டும் சம்ஸ்கிருத பிரதிகளின் மேற்கோள்களால் நிரம்பியவை. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பல வகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூலைக் குறித்து இங்கே முழுமையாக ஆராய முடியாது. ஆனால், சென்ற அத்தியாயத்தில் எப்படி பிராமணர்களைத் தவிர மற்ற அனைவரும் சூத்திரர்கள் என்று இடைக்காலத்தில் கூறப்பட்டதை, குறிப்பாக மராட்டியத்தில் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகள் துவங்கி, இருபதாம் நூற்றாண்டுவரை பிராமணர்களால் வலியுறுத்தப்பட்டதைப் புரிந்துகொள்ள இந்த நூலின் கருதுகோள்களைச் சுருக்கமாகத் தர விரும்புகிறேன். 

சூத்திரர்கள் ஆரியர்களா, பிறரா? 

மனுதர்மத்தில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வர்ணத்தினரும் இரு பிறப்பாளர்கள், ஆனால் சூத்திரர்களுக்கு ஒரு பிறப்புதான் என்று வரையறுக்கப்பட்டுள்ளது முக்கியமான துவக்கப்புள்ளி. அது என்ன இரு பிறப்பு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். முதல் பிறப்பு உடலின் பிறப்பு. இரண்டாவது பிறப்பு உபநயனம் எனப்படும் பூணூல் போடுவது. அது தன்னுணர்வு பெறுவதன், ஒரு மானுட ஆன்மாவாக முதிர்ச்சியடைவதின் அடையாளம். 

சூத்திரர்களுக்குப் பூணூல் கிடையாது என்று சொல்லும்போது அவர்கள் வெறும் மனித உடல்கள்தான். பிறருக்குச் சேவை செய்வதைத் தவிர அவர்களுக்கென்று சுயமாக தன்னுணர்வு எதுவும் கிடையாது என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். உணர்வற்ற அடிமைகள் அல்லது சமகால மொழியில் சொன்னால் ரோபோக்கள். இதைத் தர்ம சாஸ்திரங்கள் தெளிவாகவே விளக்குகின்றன. அம்பேத்கர் பல விதிகளைத் தொகுத்துத் தருகிறார்.

சூத்திரர்கள் சமூகத்தின் கடைநிலையில் இருக்க வேண்டும்; அவர்கள் தூய்மையற்றவர்கள் என்பதால் அவர்கள் முன் எந்தப் புனித நிகழ்வும் இடம்பெறக் கூடாது; சூத்திரர் உயிருக்கு மதிப்பு கிடையாது என்பதால் அவர்களை எந்த அபராதமுமின்றி கொல்லலாம்; சூத்திரர்கள் கற்கக் கூடாது என்பதுடன் அவர்களுக்குக் கல்வியளிப்பது பாவகாரியம்; அவர்களுக்குச் சொத்துரிமை கிடையாது; அரசுப் பதவிகளை வகிக்க முடியாது; அவர்களது மீட்சி பிற வர்ணங்களுக்குச் சேவை செய்வதில்தான் அடங்கியுள்ளது; உயர் வர்ணத்து ஆண்கள் சூத்திர பெண்களை மணக்கக் கூடாது – ஆனால் வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்ளலாம் – உயர் வர்ண பெண்களுடன் சூத்திரர்கள் உறவுகொண்டால் கடும் தண்டனை விதிக்கப்படும்; சூத்திரன் அடிமையாகப் பிறந்து அடிமையாகவே வாழ வேண்டும்.  

இங்கேதான் அம்பேத்கர் முக்கியமான கேள்வியை எழுப்புகிறார். சூத்திரர்கள் இப்படிக் கடுமையாக வெறுக்கப்பட காரணம் என்ன என்று கேட்கிறார். அவர்கள் ஆரிய சமூகத்தின் பகுதியாக இருந்தால் ஏன் பிராமணர்கள் அவர்களை இப்படி இழிவுபடுத்த வேண்டும்? அல்லது அவர்கள் ஆரியர்கள் அல்லாத பிறர் என்றால் அவர்களை ஏன் நால்வர்ணத்தில் சேர்க்க வேண்டும்? 

இந்தப் புதிருக்கான விடைகளை ஆராய்கிறார். ஐரோப்பிய ஆய்வாளர்கள், பார்ப்பன சிந்தனையாளர்கள் ஆகிய இரு தரப்பினருமே சூத்திரர்கள் ஆரியர்கள் இந்தியாவில் எதிர்கொண்ட பிற இனத்தவர் என்று கூறுகிறார்கள். அவர்களை ஆரியர்கள் வென்றெடுத்து அடிமைப்படுத்தியபோது அவர்களைச் சமூகத்தின் கடைநிலையில் வைத்தார்கள் என்று கூறுகிறார்கள். 

அம்பேத்கர் உடற்கூறு அடிப்படையிலான இனவாதத்தை முற்றிலும் மறுக்கிறார். ஆரியர்கள் என்பவர்கள் சம்ஸ்கிருத மொழி சார்ந்த பண்பாட்டைப் பின்பற்றிய சமூகம் என்று வரையறுக்கிறார். இந்தியாவில் அவர்கள் எதிர்கொண்ட பிற சமூகத்தினர் வலிமையற்றோ, பண்படாமலோ இருக்கவில்லை என்கிறார். 

அவர் முன்வைக்கும் கருதுகோள் ஆரிய சமூகத்தில் துவக்கத்தில் மூன்று வர்ணங்களே இருந்தன. சூத்திரர்கள் என்பவர்களும் சத்திரியர்களாக இருந்தவர்களே. பிராமணர்களும், சத்திரிய அரசர்கள் சிலருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டில் பிராமணர்கள் அவர்களுக்குப் பூணூல் அணிவிக்க மறுத்து அவர்களைச் சூத்திரர்கள் என்ற கடைநிலை சமூகமாக மாற்றிவிட்டார்கள் என்று கூறுகிறார் அம்பேத்கர். 

அரசு ஊழியர்களைத் தண்ணீர் பஞ்சமுள்ள ஊருக்குப் போஸ்டிங் போடுவதைப் ‘பனிஷ்மென்ட் போஸ்டிங்’ என்பார்கள். அதாவது, தண்டனை நியமனம். அதுபோல ஆரிய சமூகத்தில் பிராமணர்களால் தண்டித்து உருவாக்கப்பட்ட வர்ணமே சூத்திர வர்ணம் என்று கூறுகிறார் அம்பேத்கர். அதனால்தான் இவ்வளவு இழிவாகவும், கடுமையாகவும் அவர்கள் வர்ணிக்கப்படுகின்றனர் என்று யூகிக்கிறார். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பிராமணர் என்பது ஜாதியா, வர்ணமா?

ராஜன் குறை கிருஷ்ணன் 16 Dec 2023

வேத கால சூத்திரரும், சமகால சூத்திரர்களும்

இந்தோ ஆரிய, வேத கால சமூகத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த இந்தச் சூத்திரர்கள், ஆரிய கருத்தியல் இந்திய பேரரசுகளில் அனைவருக்குமானதாக விரிவுபெற்றபோது பெரும்பான்மையான ஜாதியினர் சூத்திரர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர் என்பதே அம்பேத்கர் புரிதலிலிருந்து நாம் பெறக்கூடியது. அம்பேத்கர் இந்தோ ஆரிய சமூக சூத்திரர்கள் வேறு, இன்றைய இந்து சமூக சூத்திரர்கள் வேறு என்று கூறுவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

இரண்டிற்கும் உள்ள தொடர்ச்சி என்னவென்றால் யார் சூத்திரர் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் பிராமணர்களிடம் இருந்ததுதான். அம்பேத்கரும் சத்ரபதி சிவாஜி மகுடாபிஷேகம் குறித்து விரிவாக எழுதுகிறார். யார் சத்திரியர், சூத்திரர் என்பதை பிராமணர்களே தீர்மானிப்பார்கள் என்பதற்கான தலைசிறந்த உதாரணம் அது.  

மராத்திய பிராமணர்கள் சிவாஜி சத்திரியரல்ல, சூத்திரர் என்று எதிர்த்தார்கள். சிவாஜியின் ஆதரவாளர்கள் காகபட்டரை கூட்டிவந்து, ஏராளமான பொன்னும், பொருளும் கொடுத்து சிவாஜியை சத்திரியர் என்று கூறி பூணூல் அணிவிக்க வைத்தார்கள். இதையெல்லாம் விவரிக்கும் அம்பேத்கர் சுயநல அடிப்படையிலோ, அரசியல் நோக்கங்களுக்காகவோ யார் எந்த வர்ணத்தவர் என்று தீர்மானிக்கும் உரிமையை பிராமணர்களே வைத்திருந்ததை ஆதாரபூர்வமாக விளக்குகிறார்.  

ஒரு புறம் பிராமணர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் பரசுராமர் அனைத்து சத்திரியர்களையும் கொன்றுவிட்டதால் கலியுகத்தில் சத்திரியர்களே கிடையாது என்று சொல்கிறார்கள். பின்னர் அவர்களே தேவைப்பட்டால் எந்த ஒரு குறிப்பிட்ட குலத்தையும் சத்திரியர்கள் என்று கூறுகிறார்கள். இது எல்லாச் சமூகத்தினரும் மேல்நிலையாக்கத்திற்காக பிராமணர்களைச் சார்ந்திருக்கும் சூழலை உருவாக்கியதைப் புரிந்துகொள்ளலாம்.    

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

வர்ண பகுப்பு ஜாதியமானது எப்படி?

ராஜன் குறை கிருஷ்ணன் 09 Dec 2023

காலனி ஆதிக்கம் உருவானபோது வர்ண தர்மத்தின் இந்த முரண்களெல்லாம் சட்ட சிக்கல்களாக மாறுகின்றன. இங்கிலாந்திலுள்ள பிரிவி கவுன்சிலில் 1837ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கை குறிப்பிடுகிரார் அம்பேத்கர். இந்த வழக்கு இந்தியாவில் வழக்கு நடந்த காலத்தில் சத்திரியர்கள் என்று யாராவது உண்டா என்பதுதான். 

ஒரு தரப்பு சத்திரியர்கள் உள்ளார்கள் என்கிறது. மற்றொரு தரப்பு சத்திரியர்கள் இல்லை என்கிறது. இல்லை என்னும் தரப்பு பரசுராமர் சத்திரியர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார் என்றும், மீதமுள்ளவர்களை மகாபத்ம நந்தன் என்ற சூத்திர அரசன் கொன்றுவிட்டான் என்றும், எனவே, பிராமணர்களும், சூத்திரர்களும் மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறுகிறது.  

ஆனால் பிரிவி கவுன்சில் சத்திரியர்களே இல்லை என்று கூறுவது பிராமணர்களின் உண்மைக்குப் புறம்பான கட்டமைப்பு, சத்திரியர்கள் இருக்கிறார்கள் என்று தீர்ப்பு வழங்குகிறது. ஆனால், சத்திரியர்களைச் சூத்திரர்களிடமிருந்து எப்படி வேறுபடுத்துவது என்பது குறித்து தீர்ப்பு எதுவும் சொல்லவில்லை என்கிறார் அம்பேத்கர். யார் சத்திரியர் அடையாளத்தைக் கோருகிறார்கள் என்பதை பொறுத்தே விசாரித்து அறிய முடியும் என்பதே பொருள்.

மேலும் சொன்னால் தான் சூத்திரனில்லை, சத்திரியன் என்று நிரூபிக்கும் பொறுப்பு சத்திரிய அந்தஸ்த்து கோருபவருக்கே உள்ளது. இது அனைத்து ஜாதிகளும் சூத்திர பட்டத்திலிருந்து தப்பிக்க விரும்பும் சமூக உளவியலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கியது.    

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

எல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?
வர்ண ஒழுங்கு என்பது தர்மமா?
ஏன் வர்ணத்தைப் பேசுகிறோம்?
வர்ண அடையாளம் உடலுக்கா, ஆன்மாவிற்கா?
வர்ண பகுப்பு ஜாதியமானது எப்படி?
பிராமணர் என்பது ஜாதியா, வர்ணமா?
நடுவில் இரண்டு வர்ணங்களைக் காணோம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


4

1





நெசவுத் தொழில்சேவகம்ஆன்மீகம்இரு மொழிக் கொள்கைகல்விச் சீர்திருத்தம்அரசுப் பணிமீன் வளம்இந்துஸ்தானி இசைவாக்கு வங்கிசந்துரு சமஸ் பேட்டிஎரிகிறது மணிப்பூர்; வேடிக்கை பார்க்கிறது அரசுதேர்தல் கணிப்புகடன் வட்டிதாமஸ் பாபிங்டன் மெக்காலேசூப்பர் ஸ்டார் கல்கிஆர்ச்சி பிரௌன் கட்டுரைதீண்டத்தகாதவர்திருநம்பிகள்மெர்சோ: மறுவிசாரணைஷாம்பு எனும் வில்லன்ஜிஎஸ்எல்விகாங்கிரஸ் தலைவர்; கட்சியின் தலைவர்மாலை டிபன்புதிய நாடாளுமன்றக் கட்டிடம்சமூகவியல் துறைகூட்டுத்தொகைஇதய வெளியுறைஊர் தெய்வம்தமிழர் பண்பாடு தமிழ்ப் பண்பாடுதமிழ் அன்னை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!