கட்டுரை, தொடர், கலாச்சாரம் 4 நிமிட வாசிப்பு

வர்ண ஒழுங்கு என்பது தர்மமா?

ராஜன் குறை கிருஷ்ணன்
18 Nov 2023, 5:00 am
0

ந்தியாவின் சாதி அமைப்புக்கும் இங்கு உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட 'தர்மம்' தொடர்பான தத்துவங்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 'சனாதன தர்மம்' எனும் சொல்லாடல் ஓர் உதாரணம். பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் சனிக்கிழமைதோறும் எழுதும் கட்டுரைகளில், தர்மம் தொடர்பான தத்துவங்களை இங்கே அறிமுகப்படுத்துவதுடன் சமகால நோக்கிலிருந்து அவை பேசும் நியாயங்களை விசாரணைக்கும் உள்ளாக்குகிறார். சிறிய கட்டுரைகள். ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. சாதி குறித்துப் பேசும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள். 

னாதனம் என்பதன் நேரடிப்பொருள் - அழிவற்றது, நிரந்தரமானது.

தமிழில் புழக்கத்தில் உள்ள இச்சொல்லின் பொருள் பழமைவாதம்; முற்காலத்திய சமூக நடைமுறைகள் மாறாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது; ஆங்கிலத்தில் ‘ஆர்தடாக்ஸி’ (orthodoxy) எனப்படுகிறது. 

தர்மம் என்ற சொல்லுக்கு விரிவான அர்த்த தளம் உண்டு – அவற்றில் முக்கியமானது ஒழுங்கு அல்லது நெறி என்று சொல்லலாம். சம்ஸ்கிருத சொல்லான தர்மம் தமிழிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளில் பயன்படுத்தப்படுகிறது. தர்மம் என்பது தர்ம சாஸ்திரங்கள், ‘வர்ண தர்மம்’ ஆகியவற்றினையும் குறிப்பதாகிறது. 

இந்து மதம் என்பது இந்திய நிலப்பரப்பின் பல்வேறு கடவுளர்களுக்கான வழிபாட்டு முறைகள், பண்பாட்டு நடைமுறைகளைப் பொதுவாகச் சுட்டும் சட்டரீதியான ஒரு வகைபாட்டுச் சொல். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்து மதம் என்ற அடையாளம் வலுவடையும்போது அதனை சனாதன மதம் என்று சொல்வதும், பின்னர் மதம் என்றால் தர்மம் என்ற பொருளில் சனாதன தர்மம் என்று சொல்வதும் சிலரால் பழக்கத்திற்கு வந்தது. எனவே, இந்தக் கட்டுரை தொடர் சனாதனம், தர்மம், இந்து மதம் ஆகியவற்றை பிரித்து அறிவதை, குறிப்பாக வர்ண பிரிவினை தர்மமா என்ற கேள்வியை மையமாகக் கொள்கிறது. 

சென்ற வாரம் எப்படி மகாபாரதத்தில் சனாதன தர்மம் என்பதற்கு மாறுபட்ட பொருள் வழங்கப்படுகிறது என்று பார்த்தோம்.

உத்தாலகர் என்ற முனிவர் தன் மனைவி பிறருடன் உறவுகொள்வதை, அத்தகைய சமூக நடைமுறையை ‘சனாதன தர்மம்’ என்று கூறுகிறார். அவர் மகன் சுவேதகேது அதை மறுத்து அந்த நடைமுறையை மாற்றுகிறார். இதனால் சனாதன தர்மம் முற்காலத்திலிருந்து நிலவிவரும் சமூக நடைமுறை என்பதும், அது மாற்றப்படக்கூடியது என்பதும் பெறப்படுகிறது. இதன் மூலம் நாம் ஏன் சனாதனம், தர்மம், இந்து மதம் ஆகியவற்றை பிரித்தறிய வேண்டும் என்பதும் தெளிவாகிறது. 

இப்படிப் பிரித்தறிவதில் முக்கிய கேள்வி வர்ண பேதம் என்ற சமூக ஒழுங்கு எப்படி தர்மமாகிறது என்பதுதான். தர்மம், நியாயம், நீதி ஆகிய சொற்கள் இணைந்தும், பிரிந்தும் வெகுமக்கள் சிந்தனையில் பரவியுள்ள முக்கியமான வாழ்வியல் கோட்பாடுகளை குறிப்பதாகும். இந்தியாவில் தோன்றிய தர்மம் குறித்த சிந்தனைகளின் தீராக்களங்கமான வர்ண தர்மம் எப்படி பல்வேறு வடிவங்களில் இன்றும் மக்கள் வாழ்வில் தாக்கம் செலுத்துகிறது என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தர்மம் குறித்த சிந்தனையின் துவக்கங்கள்

ஒரு வசதிக்காக நாம் அடிப்படையில் தர்மம் என்பது மூவகை ஒழுங்குகளை (orders) குறிக்கக்கூடியதாக புரிந்துகொள்ளலாம். பிரபஞ்ச ஒழுங்கு, சமூக ஒழுங்கு, வாழ்வியல் ஒழுங்கு. தர்மம் என்பது ஒழுங்குகளின் கட்டமைப்பின் ஆதாரமாக விளங்குவது. அதனடிப்படையில் செயல்படுவதற்கான சட்ட திட்டங்களையும் வழங்குவது. பிரபஞ்சத்தின் ஒழுங்கு என்பது கடவுள் தத்துவம், படைப்புச் செயல்பாடு, மானுடப் பிறப்பு, இம்மை, மறுமை ஆகியவற்றையெல்லாம் குறித்ததாகக் கொள்ளலாம்.

சமூக ஒழுங்கு என்பது அரசரால் நிர்வகிக்கப்படும் சமூக அமைப்பின் இயக்க விதிகள். அரசதிகாரம், அதன் செயல்பாட்டு விதிமுறைகள், சமூக உறவுகளுக்கான எந்த விதிமுறைகளை அரசன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது. மூன்றாவதான வாழ்வியல் ஒழுங்கு என்பது வாழ்வில் ஒவ்வொருவரும் பல்வேறு நிலைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் குறித்தது.

தர்மம் குறித்த சிந்தனையின் வரலாற்றை ஆராயும் பாட்ரிக் ஒலிவெல், ஆல்ஃப் ஹில்டபைடல் ஆகியோர் வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள் ஆகியவற்றில் தர்மம் குறிப்பிடப்பட்டாலும் அது மிகவும் குறைவாகவே விவாதிக்கப்படுகிறது என்றும், கடவுளிடம் அரசன் பெறும் அரசாட்சி உரிமையைக் குறிப்பதாகவே இருக்கிறது என்றும் கூறுகின்றனர். அதாவது, ஆட்சியின் அடிப்படையாக தர்மம் விளங்குகிறது. பிரபஞ்ச ஒழுங்கிலிருந்து, சமூக ஒழுங்கிற்கான அடிப்படையாக தகவமைகிறது எனலாம். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தர்மத்தில் எது சனாதனம்?

சுந்தர் சருக்கை 26 Sep 2023

தர்மம் என்பது சமூக விதிமுறைகளாக, சாத்திரங்களாக மாறுவது புத்த மதம் தோன்றிய பிறகுதான் என்றும், குறிப்பாக அசோகரின் கல்வெட்டுகளில் காணப்படும் நெறிமுறைகளின் பரவல்தான் தர்ம சாஸ்திரங்கள் உருவாகத் தூண்டுதல் என்றும் கூறுகின்றனர். புத்த மதத்தின் தம்மம் என்ற கருத்தாக்கத்தின் தாக்கமே தர்ம சாஸ்திரங்கள் உருவாக வகை செய்தது.  

அசோகர் காலத்திற்குப் பிறகு தோன்றிய தர்ம சாஸ்திரங்களில் முக்கியமானது மனு ஸ்மிருதி எனப்படும் மனவ தர்ம சாஸ்திரம் என்பதனை பெரும்பாலோர் ஏற்கின்றனர். மனு ஸ்மிருதியை ஒட்டியே பின்னால் வரும் தர்ம சாஸ்திரங்கள் எழுதப்படுகின்றன. அவற்றிற்கு விளக்கம் அளிக்கும் நூல்கள் எழுதப்படுகின்றன. எழுதப்பட்ட எல்லா நூல்களுமே இப்போது கிடைப்பதில்லை. கிடைக்கும் நூல்களில் பெயர் குறிப்பிடப்படும் நூல்கள் பல அழிந்துவிட்டன. ஆனால் கணிசமான அளவு தர்மம் குறித்த நூல்கள் சம்ஸ்கிருதத்தில் ஆக்கப்பட்டன என்பது தெளிவாகிறது. 

தர்ம சாஸ்திரங்கள் மக்களிடையே பரவியது எப்படி? 

இந்தத் தர்மசாத்திர நூல்கள் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டன என்னும்போது யாரால் எழுதப்பட்டன, பயிலப்பட்டன என்ற கேள்வி எழுகிறது. சம்ஸ்கிருதம் பெரும்பாலும் பிராமணர்கள் பயின்ற மொழி. அரசர்களுக்கும் சம்ஸ்கிருதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம். அதையும் பிராமணர்கள்தான் செய்திருப்பார்கள். நூல்கள் எழுதப்பட்டன என்னும்போது அந்தக் காலத்தில் அச்சு கிடையாது என்பதையும் நாம் அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். ஒலைச்சுவடி போன்றவற்றில் எழுதப்படும் தர்ம சாஸ்திரங்கள், பெரும்பாலும் மனனம் செய்து பயிற்றுவிப்பத்தன் மூலமே பரவலாகப் பயன்பட்டிருக்க வேண்டும். 

ஓட்டுமொத்த சமூகப் பரப்பையும் கணக்கில் கொண்டால் இந்த நூல்களில் பரவல் சிறு வட்டத்திற்குள்தான் இருந்திருக்க முடியும். அசோகரின் கல்வெட்டுகள் பல தர்ம விதிகளை மக்கள் பார்வைக்குச் செதுக்கி வைத்தன. ஆனால், அதுபோல எல்லா நூல்களையும், விதிகளையும் செதுக்குவது கடினம். ஆகவே, இந்த நூல்களைக் கற்று, ஓலைச்சுவடிகளிலிருந்து வாசித்து சொல்லக்கூடிய பிராமணர்களுக்கு முக்கியத்துவம் இருந்திருக்கும் என்பதை யூகிக்கலாம். 

சிந்தித்துப் பார்த்தால் இது ஒரு வியப்பூட்டும் உண்மையைச் சுட்டுகின்றது. புனித நூல்கள் எனப்படும் வேதங்கள், உபநிடதங்கள் போன்றவையாகட்டும், தர்ம சாஸ்திரங்கள் அல்லது அர்த்தசாஸ்திரம் ஆகட்டும், எல்லாமே பெரும்பாலான மக்கள் வாசிக்க இயலாத, புரிந்துகொள்ள இயலாத மொழியில்தான் இருந்திருக்கின்றன. இன்றும் இருக்கின்றன. 

எல்லோரும் நான்கு வேதங்கள், நான்கு மறைகள் என்றெல்லாம் சொல்கிறோமே தவிர அவற்றின் உள்ளீடு என்ன, அவற்றில் கூறப்படுவது என்ன என்றெல்லாம் தெரியாமலேதான் அவற்றை குறித்து பேசுகிறோம். ஒரு பிராமண ஆசிரியரிடமோ, அரசு அதிகாரியிடமோகூட வேதங்களிலிருந்து சில வரிகளைச் சொல்லுங்கள் என்றால் அவர்கள் கூறுவது கடினம். வேதங்களே அப்படி என்னும்போது நாரத ஸ்மிருதி தெரியுமா என்று கேட்க முடியாது. 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பல்வேறு அரசுகள் தோன்றியுள்ளன, மறைந்துள்ளன. அவை எல்லாவற்றிலும் தர்ம சாஸ்திரங்கள் பின்பற்றப்பட்டனவா, பிராமணர்கள் எல்லா அரசர்களையும் அவற்றில் பயிற்றுவித்தார்களா, எப்படி சமூகத்தில் தர்ம சாஸ்திரங்களில் அடங்கிய சிந்தனைகள் பரவின என்பதெல்லாம் பரிசீலனைக்குரிய அம்சங்கள்.    

இன்றைய நிலையில் நான்கு வடிவங்களில் தர்ம சாஸ்திரங்கள் நமக்கு கிடைக்கின்றன.

ஒன்று சம்ஸ்கிருதப் பிரதிகளாகத் தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்டவை. இரண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நீதிமன்றங்களின் பயன்பாட்டிற்காக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள். மூன்றாவது, பாட்ரிக் ஒலிவெல் சமீபத்தில் தொகுத்து வெளியிட்டுள்ள மனுதர்ம சாஸ்திரம் போன்ற கல்விப்புலத் தொகுப்புகள். நாலாவது, பொது மன்றத்தில் பல்வேறு சிந்தனையாளர்கள், (உதாரணம்: அரவிந்தர்), அரசியல் தலைவர்கள் (உதாரணம்: ராஜாஜி, ராதாகிருஷ்ணன்), மத போதகர்கள் (உதாரணம்: விவேகானந்தர்) எழுதியுள்ளவற்றுடன் புனைவுகள், கலைவடிவங்கள், திரைப்படம் உள்ளிட்டவற்றில் இடம்பெறக்கூடிய சித்தரிப்புகள்.

இவற்றுக்கு இடையிலான உறவுகளை அடுத்து ஆராய்வோம்.      

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

எல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?
தர்மத்தில் எது சனாதனம்?
சனாதனம்: இந்துக்கள் கடமை என்ன?
சனாதனத்தை எப்படிப் பார்ப்பது? சமஸ் பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


3


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஜாதி கடந்த ரசிக அபிமானம்கசப்பான அனுபவங்கள்கால மாற்றத்தை ஏற்க வேண்டும்: நூலகர் தியாகராஜன் பேடஉறக்கம்நவீன் குமார் ஜிண்டால்கல்வியாளர்ஃபாலி சாம் நாரிமன்கர்த்தநாதபுரம்கற்பித்தல்ஜெய்லர்தான்சானியா: அரசியலும்மோடியை வீழ்த்த வரலாற்றிலிருந்து ஒரு பாடம்பி.ஆர்.அம்பேத்கர்தவறான முன்னுதாரணங்கள்ராணுவத் தலைமைத் தளபதிடெல்லி முதல்வர்யானைகள்ஆப்கானிஸ்தான்குவிங்பிரேசில்சுய சந்தேகம்வலியத் தொடங்கப்படுகிறது வாய்ச் சண்டை!பண்பாடுவீரசாவர்க்கர்தேஜஸ்வி யாதவ்சமச்சீர் வளர்ச்சிநான்தான் ஔரங்கஸேப்அமெரிக்க ஆப்பிள் உற்பத்திடபுள் என்ஜின் ரயில்நைரோபி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!