கட்டுரை, தொடர், கலாச்சாரம் 4 நிமிட வாசிப்பு

வர்ண அடையாளம் உடலுக்கா, ஆன்மாவிற்கா?

ராஜன் குறை கிருஷ்ணன்
02 Dec 2023, 5:00 am
1

ன்னுடைய உடலிலிருந்து அழிவற்ற பரம்பொருள் அனைத்து உலகங்களையும், ஜீவராசிகளையும், தர்மம், அதர்மம் ஆகியவற்றையும் படைத்ததாக மனுதர்ம சாஸ்திரம் வர்ணிக்கிறது. 

அவ்வாறு படைத்துக்கொண்டு வரும்போதுதான் தன் வாயிலிருந்து பிராமணனையும், கரங்களிலிருந்து சத்திரியனையும், தொடைகளிலிருந்து வைசியனையும், கால்களிலிருந்து சூத்திரனையும் படைத்ததாகக் கூறுகிறது. இந்தக் கற்பனை ரிக் வேதத்தின் புருஷ சுக்தத்திலும் இடம்பெற்றுள்ள ஒன்றுதான். 

இந்த இடத்தில் நாம் ஒரு முக்கிய கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது. பல்வேறு தர்ம சாத்திரங்களிலும், சிந்தனைகளிலும், உடல் வேறு, ஆன்மா வேறு என்று நிறுவப்பட்டுள்ளது. பிரம்மனோ, பரம்பொருளோ உலகையெல்லாம் தன்னிடமிருந்து உருவாக்கிய அந்த அழிவற்ற பிரபஞ்ச உடல், நான்கு வர்ணங்களாக உடல்களை உருவாக்கியதா, அல்லது ஆன்மாக்களை உருவாக்கியதா?

உடலும், ஆன்மாவும் குறிப்பிட்ட காலத்திற்குத்தான் சேர்ந்திருக்கின்றன; மனிதர்கள் மரணம் அடையும்போது ஆன்மா உடலிலிருந்து பிரிந்துவிடுகின்றது. நான்கு வர்ணங்களோ நிரந்தரப்  பிரிவுகளாகும். அப்படியானால், அந்த நிரந்தரப் பிரிவினை உடல்களுக்கிடையிலான பிரிவினையா, ஆன்மாக்களுக்கு இடையிலான பிரிவினையா? வர்ண சிந்தனையின் தோற்றவியல் தன்மைக்கு (ontological distinction) இந்தக் கேள்வி இன்றியமையாததாகும். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மறுபிறவி என்ற கருத்தாக்கம்

ஒருவர் இறந்த பின் அவரது ஆன்மா மீண்டும் பிறவியெடுக்கும் என்பது மிக முக்கியமான ஒரு கற்பிதமாகும். ‘கர்ணன்’ திரைப்படத்தில், கண்ணன் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசிக்கும் இடத்தில் ஒரு பாடல் வரும். 

மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா!
மரணத்தின் தன்மை சொல்வேன்!
மானிடர் ஆன்மா மரணமெய்யாது!
மறுபடி பிறந்திருக்கும்!
மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்!
வீரத்தில் அதுவுமொன்று!
நீ விட்டுவிட்டாலும் ஓர்நாள் வெந்துதான் தீரும்! 

திரைப்படப் பாடல் என்றாலும், கீதையின் கருத்திற்கு மாறானதல்ல இந்தப் பாடல். உடலுக்குத்தான் அழிவு. ஆன்மாவிற்கு அல்ல. ஆன்மாவிற்குப் பிறவிச் சுழற்சி உண்டு. அது ஏழு பிறப்பு, ஏழேழு பிறப்புகளுக்குப் பிறகுதான் அந்தச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பரம்பொருளிடம் அடைக்கலமாகும். அதுவே மோட்சம், முக்தி இன்னபிற. அதற்காகவே ஓர் ஆன்மா பாடுபட வேண்டும். 

ஆதிசங்கரர் எழுதியதாகக் கூறப்படும் பஜகோவிந்தம் பாடலில் வரும் வரிகளும் மிகவும் பிரபலமானவை. “புனரபி மரணம்! புனரபி ஜனனம்! புனரபி ஜனனி ஜடரே சயனம்! இஹ சம்ஸாரே பஹூ துஸ்தாரே! கிருபயா பரே பாஹி முராரே!” அதாவது, “மீண்டும் மரணம், மீண்டும் பிறப்பு, மீண்டும் தாயின் மடியில் (கருவில்) தூக்கம்! இந்த முடிவற்ற பிறவிக் கடலிலிருந்து என்னை நீதான் காக்க வேண்டும், முராரி!”

இந்தப் பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி நீங்கள் கேட்டிருப்பீர்கள்.   

சாதாரண பேச்சுவழக்கிலும் “போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோனோ!” என்றோ “போன ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ!” என்று மக்கள் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். 

உலகின் பல்வேறு கலாசாரங்களிலும், பழங்குடி பண்பாடுகளிலும் இந்த மறுபிறவி என்ற சிந்தனை இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்தியப் பண்பாடு அல்லது குறிப்பாக வேதாந்த, தர்ம சாஸ்திர சிந்தனை அளவிற்கு அது முக்கியமான வாழ்வியல் சிந்தனையாக வேறெங்கும் மாறியதாகத் தெரியவில்லை. 

மறுபிறவி என்பது இந்திய மக்களிடையே ஆழமாக பதிந்துபோன சிந்தனை. அதிலும் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்களுக்கு, சென்ற பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகளே அதாவது செயல்களே காரணம் என்பது எளிய மக்களிடையேயும் பரவியுள்ள சிந்தனையாகும். ஜாதீயத்தின் உயிர் மூச்சே அதுதான். 

ஆன்மாவிற்கு வர்ணம் உண்டா? 

பரம்பொருள் நாலாக பிரித்த வர்ண ஒழுங்கு ஆன்மா தொடர்பானது என்றால் ஒவ்வொரு பிறவியிலும் ஆன்மா தொடர்ந்து அதே வர்ணமாக இருக்க வேண்டும். அதாவது, பிராமண ஆன்மா எல்லாப் பிறவிகளிலும் பிராமண ஆன்மாவாக இருக்க வேண்டும். இதில் பெரிய சிக்கல் என்னவென்றால், ஒரு குழுந்தை பிறக்கும்போது அது எந்த ஆன்மா என்பதை எப்படி தெரிந்துகொள்ள முடியும்? 

பொதுவாக யாருக்கும் முற்பிறவி நினைவுகள் இருப்பதில்லை. அதுவும் ஆன்மா விலங்குகளாகவும் பிறப்பெடுக்கும் என்பதால், முற்பிறவியில் என்னவாக இருந்த ஆன்மா நமக்கு பிறக்கும் குழந்தைக்குள் இருக்கிறது என்பதைக் கண்டறிய வழியே கிடையாது. 

பாட்ரிக் ஒலிவெல் சமீபத்தில் தொகுத்துள்ள மனுதர்ம சாஸ்திரத்தில், எந்தெந்தக் குற்றங்களை, பாவங்களைச் செய்தால் அடுத்த பிறவி என்னவாக இருக்கும் என்ற நீண்ட பட்டியல் இருக்கிறது. அதாவது, பிறப்பு என்பது ஒரு தண்டனையாகும். இந்த மறுபிறவி தண்டனைகளின் பட்டியல் மிகவும் சுவாரசியமானது மட்டுமல்ல, இன்றைய நிலையில் நகைப்பிற்குரியதுமாகும். 

உதாரணமாக, ஒரு பிராமணனைக் கொல்பவன் கீழ்கண்ட உயிர்களின் கருவறையில் நுழைந்துவிடுவான்: நாய், பன்றி, கழுதை, ஒட்டகம், பசு, ஆடு, செம்மறி ஆடு, மான், பறவை, சண்டாளன், புல்காசன். 

மது அருந்தும் பிராமணனோ கீழ்கண்ட கருவறைகளில் புகுவான்: புழு, பூச்சிகள், கழிவை உண்ணும் பறவைகள், தீய மிருகங்கள். 

தானியங்களைத் திருடுபவன் எலியாகப் பிறப்பான்; பாலைத் திருடுபவன் காக்கையாக பிறப்பான்; தயிரைத் திருடுபவன் நாரையாகப் பிறப்பான்; காய்கறிகளைத் திருடுபவன் மயிலாகப் பிறப்பான். 

இப்படித்தான் குற்றங்கள் / பாவச்செயல்களுக்கு உரிய மறுபிறவி தண்டனைகள் மானாவாரியாக பட்டியிலிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் முற்பிறவியில் என்னவாக இருந்த ஆன்மா பிறக்கும் குழந்தையின் உடலில் இருக்கிறது என்பதை தீர்மானிப்பது கடினம். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

வர்ண ஒழுங்கு என்பது தர்மமா?

ராஜன் குறை கிருஷ்ணன் 18 Nov 2023

வாழ்வியல் முறையே வர்ணமா? 

சரி, ஆன்மாவும் வர்ணமல்ல, உடலும் வர்ணமல்ல, வாழ்வியல் முறையே வர்ணத்தைத் தீர்மானிக்கும் என்று கூறலாம். உண்மையில் வர்ண தர்மத்திற்குச் சப்பைக் கட்டு கட்ட முற்பட்ட பலரும், இது ஒரு வேலைப் பிரிவினைதான், இது பிறப்பு சார்ந்ததல்ல என்று நீட்டி முழக்குவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். 

அதாவது, ஒரு குழந்தை யாருக்கும் பிறந்தாலும் அது வளர்ந்ததும் நான் குடியானவன் ஆகப்போகிறேன், நான் போர்வீரனாகப் போகிறேன், நான் வேதங்களைப் படிக்கப் போகிறேன், நான் மற்றவர்கள் அனைவருக்கும் சேவகம் செய்யப் போகிறேன் என்றெல்லாம் முடிவுசெய்துகொள்ளலாம் என்று பொருள் வருகிறது. 

அப்படியானால் அதை எப்படி தீர்மானிப்பது என்ற கேள்வி வரும். பிராமணன் என்பவனே அனைவரிலும் உயர்ந்தவன் என்று மனு கூறுகிறார். அப்போது சமூகத்தில் எல்லோருமே, சரி நாங்களும் வேதம் படித்துக்கொள்கிறோம், யாகம் செய்கிறோம் என்று கூற முடியுமா? வர்ண ஒழுங்கே குலைந்துபோகுமே? 

அது மட்டுமன்றி குறிப்பிட்ட வர்ணத்தில் பிறப்பது, குறிப்பாக சண்டாளனாக, சூத்திரனாக பிறப்பது என்பதே தண்டனைதான். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஏன் வர்ணத்தைப் பேசுகிறோம்?

ராஜன் குறை கிருஷ்ணன் 25 Nov 2023

வர்ணம் என்பது உடல்கள் சார்ந்ததே!  

மேற்கூறியவற்றை நாம் கவனமாகப் பரிசீலித்தால் வர்ணம் என்பதன் நிலையான தன்மை உடல்கள் சார்ந்த பிரிவினையே என்பதை புரிந்துகொள்ளலாம். ஆதாவது, உடல்சார் தோற்றவியல் (embodied ontology). இதன் காரணமாகவே பிறக்கும் ஒவ்வொரு உயிரும் குறிப்பிட்ட வர்ணத்தில்தான் பிறக்கின்றன என்பதை உடல்ரீதியாக உறுதிசெய்ய வேண்டும். 

அதை எப்படி உறுதிசெய்ய முடியும்? திருமண பந்தம் என்பது அந்தந்த வர்ணங்களுக்குள் நடந்தால் மட்டுமே அதை உறுதிசெய்ய முடியும். பிராமண தாய்க்கும், பிராமண தந்தைக்கும் பிறந்த குழந்தை மட்டுமே பிராமண வர்ணமாக இருக்க முடியும். எனவே, அகமணமுறை இன்றியமையாதது.

பரம்பொருள் அல்லது பிரம்மா தன் உடலிலிருந்து நான்கு வர்ணங்களை உருவாக்கினார் என்ற தோற்றவியல் கற்பிதமானது, அகமணமுறை என்ற சமூக பழக்கத்தைத் தவிர்க்க முடியாததாக மாற்றுகிறது. “சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்” என்று கீதையில் கண்ணனும் கூறுவதைக் கருத வேண்டும். 

இப்படிக் கடவுள் உடல்ரீதியாக பிரித்த சமூகத்தை இணைப்பது பாவமில்லையா? வர்ண தோற்றவியலின் விபரீத பரிமாணம் இதுவே. அது அகமணமுறையை சமூகத்தின் ஆதார அமைப்பாக்குகிறது. 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

எல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?
வர்ண ஒழுங்கு என்பது தர்மமா?
ஏன் வர்ணத்தைப் பேசுகிறோம்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


3

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   10 months ago

நான்தான் உன்னுடைய தாத்தா, என் சொத்தை திருப்பிகொடு என்று யாராவது கேட்டால் எத்தனை மறுபிறவி ஆதரவாளர்கள் யோசிக்காமல் திருப்பித் தருவார்கள்?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

செம்புதிறமைசாலிஅதிகாலைவயிற்று வலிக்கு என்ன காரணம்?கேள்வி நீங்கள் - பதில் சமஸ்இந்தியா டுடே சரியா?பஞ்சாப் முதல்வர்திராவிட இயக்கக் கொள்கைகள்ஏழைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்உயிர்கள்நோய்கள்விமான போக்குவரத்துமாவுச்சத்துநாகம்இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஏன்?வழக்கு நிலுவைஜம்மு காஷ்மீர்பிற்போக்காளர்ஐரோப்பிய சினிமாநிதிச் சீர்திருத்தம்தி பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட்பெண் சிசுக் கொலைவீர சிவாஜிபினராயி விஜயன்விராட் கோலிமேலாளர் ஊழியர் பிரச்சினைநோயாளிசுவாசத் தொல்லைகள்சிறுகதைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!