கட்டுரை, தொடர், கலாச்சாரம் 4 நிமிட வாசிப்பு

விவேகானந்தரின் சிந்தனைகளில் வர்ணமும், ஜாதியும்

ராஜன் குறை கிருஷ்ணன்
10 Feb 2024, 5:00 am
1

ந்தியாவின் சாதி அமைப்புக்கும் இங்கு உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட ‘தர்மம்’ தொடர்பான தத்துவங்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. ‘சனாதன தர்மம்’ எனும் சொல்லாடல் ஓர் உதாரணம். பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் சனிக்கிழமைதோறும் எழுதும் கட்டுரைகளில், தர்மம் தொடர்பான தத்துவங்களை இங்கே அறிமுகப்படுத்துவதுடன் சமகால நோக்கிலிருந்து அவை பேசும் நியாயங்களை விசாரணைக்கும் உள்ளாக்குகிறார். சிறிய கட்டுரைகள். ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. சாதி குறித்துப் பேசும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள். தனித்தும் வாசிக்கலாம். தொடராகவும் வாசிக்கலாம்.

த்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்து மதம் குறித்து மேற்குலகில் பேசச் சென்ற மிக முக்கியமான இந்திய குரல் விவேகானந்தருடையது. முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்த இளைஞரான விவேகானந்தர் இந்தியா, இந்து மதம் குறித்த நவீன சிந்தனைகள் உருவாவதற்கு ஆற்றிய பங்கு கணிசமானது. பட்டதாரி இளைஞராகவும், ஆங்கிலம் சரளமாக பேசுபவராகவும் இருந்தது அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் இவருக்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. விவேகானந்தரின் கலெக்டிவ் வொர்க்ஸ் (Collective Works) இணையத்தில் ஒன்பது வால்யூம்களில் படிக்கக் கிடைக்கிறது. 

விவேகானந்தர் முதன்முதலில் பேசச் சென்றது சிகாகோ நகரத்தில் கூடிய உலக மதங்களின் உரையாடல் மன்றம் (Parliament of World Religions) என்ற கருத்தரங்கில்தான். 1893ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வில் விவேகானந்தர் இந்து மதத்தின் தொன்மை சிறப்பம்சங்கள் குறித்து ஆற்றிய உரை அங்கு கூடியிருந்தவர்களை பெரிதும் கவர்ந்தது. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அவர் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கி பல்வேறு இடங்களிலும் உரை நிகழ்த்தினார். வேதாந்த சபைகளைத் தோற்றுவித்தார். இந்தியாவிற்கும் திரும்பி வந்து பல்வேறு இடங்களில் உரை நிகழ்த்தினார். ராமகிருஷ்ணா மிஷன் என்ற அமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை மேற்கொண்டார். இந்தியா முழுவதும் படித்தவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். தனது முப்பத்தொன்பதாம் வயதில் 1902ஆம் ஆண்டு காலமானார். 

விவேகானந்தர் கல்வி பயின்ற நவீன மனத்தினர். ராமகிருஷ்ணரால் ஈர்க்கப்பட்டு துறவறம் ஏற்றாலும், பாரம்பரியமான இந்து மடாதிபதிகள், சன்னியாசிகள் போன்றவரல்லர். பிரம்ம சமாஜம் போன்ற நவீன அமைப்புகளின் தாக்கமும் இவரிடம் இருந்தது. அதனால், மக்களுக்கு சேவை செய்வதன் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களையும் இவர் பேசியுள்ளார். இவருடைய எல்லா உரைகளையும் தொகுத்து மதிப்பீடு செய்வது இந்தத் தொடரின் எல்லைகளுக்குள் வராது. எனவே நாம் இங்கே மதிப்பீடு செய்யப்போவது வர்ண தோற்றவியல் என்று நாம் அடையாளப்படுத்தியதை விமர்சனம் செய்து நிராகரிக்க எந்த அளவில் விவேகானந்தர் சிந்தனைகள் உதவும் என்பதைத்தான். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காந்தியின் வர்ணாசிரம தர்மம்

ராஜன் குறை கிருஷ்ணன் 27 Jan 2024

வர்ண தோற்றவியல் என்று நாம் அடையாளப்படுத்தியது கடவுளே மனிதர்களை நான்கு வர்ணங்களாக படைத்தார் என்ற மனுதர்மத்தின் கூற்றை. ஆன்மாவிற்கு வர்ணம் கிடையாது; அது கர்ம வினைகளுக்குத் தக்கபடி ஒவ்வொரு பிறவியிலும் வேறு வேறு வர்ணத்தில் பிறக்கும். அதனால் உடல்களுக்குத்தான் வர்ணம். உடல்கள் வர்ணமாக இருக்க வேண்டும் என்றால் அனைவரும் வர்ணங்களுக்கு உள்ளேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தோற்றவியல் கற்பிதமே அகமணமுறையை ஜாதியத்தின் அடிப்படையாக வைத்துள்ளது என்பதே நாம் பரிசீலிக்கும் கருதுகோள். 

விவேகானந்தர் இந்து மற்றும் இந்திய தேசிய அடையாளம் சந்தித்த பெரும் சிக்கலின் முக்கிய வெளிப்பாடாக விளங்குகிறார். அது என்னவென்றால் தர்ம சாஸ்திரங்கள் உருவாக்கிய வர்ண தோற்றவியலை முழுவதும் தவறென்று நிராகரிக்க முடியாத நிலை. அதனால், ஒரு முக்கியமான கருத்தியல் வடிவத்தை, ஆங்கிலத்தில் டெம்பிளேட் என்று சொல்லக்கூடிய வாதத்தின் வகை மாதிரியை உருவாக்குகிறார். அது என்னவென்றால் மகோன்னதமான ஒரு ஆரிய பண்பாடு ஒரு காலத்தில் இருந்தது; அது பின்னால் சீரழிந்துவிட்டது என்பதுதான். 

இந்த மகோன்னத பழமை, சமகால சீரழிவு இன்ற இணையில் எது மகோன்னதமாக இருந்தது, எது சீரழிவு என்பதை பலவிதமாக வர்ணித்துக்கொள்ளலாம். உதாரணமாக தீண்டாமை சீரழிவு; ஜாதி பாகுபாடு என்பது வேலைப் பிரிவினையே என்று கூறலாம். வர்ணாசிரமம் என்பது சமூகத்தை ஒருங்கிணைக்க உருவான உன்னத தத்துவம்; காலப்போக்கில் அது வெறும் ஜாதி வேறுபாடாக சீரழிந்துவிட்டது எனலாம். 

பெரும்பாலான நவீன இந்து, இந்திய சிந்தனையாளர்கள் பின்பற்றிய இந்த வகைமாதிரிக்கு சிறந்த முன்னோடியாக விவேகானந்தர் விளங்குகிறார் என்றால் மிகையாகாது.  அவர் முக்கியமாக மேற்குலகின் சுயநலம், பொருளாசை, வர்த்தக போட்டி, வன்முறை ஆகியவற்றிற்கு எதிராக இந்தியாவின் சமூக ஒருங்கிணைப்பு, தனிமனிதர்கள் முற்றிலும் சமூகத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பது போன்ற இலட்சியங்களை முன்னிறுத்தினார். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்துத்துவ சுவாமிஜியா விவேகானந்தர்?

யோகேந்திர யாதவ் 28 Oct 2023

ஆரிய பிராமணிய பண்பாட்டு உன்னதம், ஜாதியத்தின் சிறப்பு

விவேகானந்தர் ஆரியர்கள், சம்ஸ்கிருத மொழி, பிராமணிய பண்பாடு ஆகியவற்றை உன்னதமான பண்பாட்டு மூலங்களாக மதிப்பிடுகிறார். ஆரியர்கள் என்பது தனித்த இனமல்ல என்று பல இடங்களில் கூறுபவர், சில இடங்களில் வட இந்தியர்கள் ஆரியர்கள், தென்னிந்தியர்கள் வேற்று இனத்தவர் என்றும் கூறி விடுகிறார். குறிப்பாக 1900ஆம் ஆண்டு ஓக்லஹாமாவில் பேசும்போது அவர் வட இந்தியர்களும் ஐரோப்பியர்களும் ஆரியர்கள், தென்னிந்தியர்கள் எகிப்தியர்கள் மற்றும் செமிடிக் இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறியதாக பதிவாகியுள்ளது. அது மேற்சொன்ன வலைத்தளத்திலும் காணக்கிடைக்கிறது. 

ஒரு இடத்தில் பிராமணர், வைசியர், சத்திரியர் ஆகிய மூன்று வர்ணங்களும் ஆரியர்கள், சூத்திரர்கள் ஆரியரல்லாதவர்கள் என்று கூறிவிடுகிறார். வேறு இடங்களில் இனக்கலப்பு ஏற்பட்ட தாகவும் பிராமணர்கள் அனைத்து பிரிவினைரையும் தங்கள் பண்பாட்டால் ஒருங்கிணைத்தவர்கள் என்றும் கூறுகிறார். சம்ஸ்கிருத மொழியிலிருந்து தென்னிந்திய மொழிகள் முதலில் வேறுபட்டிருந்தாலும் சம்ஸ்கிருதம் அனைத்தை மொழிகளையும் ஒருங்கிணைத்த து என்று கூறுகிறார். 

ஒரு ஜாதியில் பிறந்த மனிதன் அந்த ஜாதிக்குரிய வேலையைத்தான் செய்ய வேண்டுமென்பது உண்மையில் சமூக ஒருங்கிணைப்பினை மேம்படுத்துவது என்று கூறுகிறார். மேற்குலகம் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் யாரும் எந்த வேலையையும் செய்யலாம் என்று சொல்லும்போது போட்டியும், பொறாமையும், சமூக முரண்களும் அதிகரிக்கின்றன என்று கூறுகிறார். இந்திய சமூக ஒழுங்கைக் காப்பாற்றியது ஜாதியம்தான் என்றும் கூறுகிறார். 

மறுபிறவி குறித்து அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரை மிகவும் குழப்பமான வாதங்களை முன்வைக்கிறது. ஆனால், இறுதியில் ஆன்மாவில் நம்பிக்கையிருந்தால் மறுபிறவியை நம்பத்தான் வேண்டும் என்று கூறிவிடுகிறார். ஒன்று மெட்டீரியலிசம் என்னும் பிரகிருதிவாதம், இல்லாவிட்டால் மறுபிறவி சித்தாந்தத்தில் நம்பிக்கை என்று கட்டுரையை நிறைவுசெய்கிறார். 

இதெற்கெல்லாம் உச்சகட்டமாக அவர் இளம் விதவைகள் மறுமணம் செய்யாமல் இருப்பதை ஆதரித்து பேசுவது பெறும் வியப்பை அளிக்கவல்லது. இந்தியாவில் விதவைகள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு சொத்தில் பங்கு அளிக்கப்படுகிறது. நாம் விதவையாக இருக்கமாட்டாமோ என்று பிறர் ஏங்கும் அளவு அவர்கள் வசதியாக இருக்கிறார்கள் என்றும்கூட ஓரிடத்தில் கூறிவிடுகிறார். 

இந்திய பண்பாட்டின் குறைபாடுகளாக மேற்குலகம் கூறியவற்றையெல்லாம் மறுதலிக்க வேண்டும் என்ற வேகம் அவர் பதிவுகளில் தெரிகிறது. எதையெல்லாம் இந்திய பண்பாட்டின் குறைபாடுகளாக சொன்னார்களோ அதையெல்லாம் பெருமைகளாக கூறிவிட வேண்டும் என்ற முனைப்பு தெரிகிறது. இந்து மத அடையாளத்தை, இந்திய தேசிய அடையாளத்தை உலகில் பெருமைக்குரியதாக நிறுவும் முயற்சியாகவே அவர் கூற்றுக்களை பார்க்க முடியும். 

அதேசமயம் அவர் இந்தியாவில் பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களையும் பேசியுள்ளார், மனிதாபிமான நோக்கினை பரவலாக்க முனைந்துள்ளார், மக்கள் சேவையினை மத நெறியாகக் கூற முனைந்துள்ளார் என்பதெல்லாமும் காணக்கிடைக்கிறது. 

ஒருபுறம் தொன்மை பண்பாட்டு பெருமிதம், இன்னொருபுறம் சமகால சீரழிவு, சீர்திருத்தம் என்ற பார்வையின் பிரச்சினை என்னவென்றால் அதனால் தர்ம சாஸ்திரங்கள் உருவாக்கிய வர்ண தோற்றவியலை விமர்சித்து நிராகரிக்க முடியாமல் போவதுதான். மக்களை பிறப்பின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாகவும், அவர்ணர்களாகவும் பிரிப்பது தவறான சமூக ஏற்பாடு என்ற பார்வை உருவாகாமலேயே போய்விடுகிறார். 

ஆரியர்கள் என தங்களைக் கருதிக்கொண்டு பிராமணர்கள் பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதுவது, சமூகத்தில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வினை உற்பத்திசெய்யும் என்ற எண்ணம் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் உருவாகாமல் போனது இந்தியாவின் நவீன சமூகவியல், அரசியல் சிந்தனையின் ஆகப் பெரிய சிக்கல் எனலாம். 

நடைமுறையில் அனைவரும் சமம் என்று கூறினாலும் தர்ம சாஸ்திரங்களை, வர்ண தோற்றவியலை விமர்சித்து நிராகரிக்காமல் விட்டதால் அந்த மேம்போக்கான சமத்துவ நோக்கு சமூகத்தில் வலுவடைய வாய்ப்பில்லாமல் போனது என்பதை நாம் இனியாவது ஆழ்ந்து பரிசீலிக்கத்தான் வேண்டும்.  

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

எல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?
வர்ண ஒழுங்கு என்பது தர்மமா?
ஏன் வர்ணத்தைப் பேசுகிறோம்?
வர்ண அடையாளம் உடலுக்கா, ஆன்மாவிற்கா?
வர்ண பகுப்பு ஜாதியமானது எப்படி?
பிராமணர் என்பது ஜாதியா, வர்ணமா?
நடுவில் இரண்டு வர்ணங்களைக் காணோம்
சூத்திரர்கள் எனப்பட்டவர்கள் யார்?
தீண்டாமை எப்படி நிலைநிறுத்தப்பட்டது?
எதனால் வர்ண - ஜாதி எதிர்ப்பே இன்றைய தர்மமாக உள்ளது?
காந்தியின் வர்ணாசிரம தர்மம்
இந்துத்துவ சுவாமிஜியா விவேகானந்தர்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


3


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Sundar Gopalakrishnan   4 months ago

ஜாதி, வர்ணம், ஆரியர்கள், விதவைகள் ஆகியவை குறித்து விவேகானந்தர் என்ன விதமான பார்வைகளைக் கொண்டிருந்தார் என்று நன்றாகவே அலசி, ஆராய்ந்துள்ளார் பேராசிரியர் ராஜன் குறை. அவருக்கு என் நன்றி. அப்படியே அவர் விவேகானந்தரின் சிந்தனைகள் ஒன்பது தொகுதிகளில் எந்த இணையதளத்தில் கிடைக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தாரானால், அவற்றை வாசகர்கள் தரவிறக்கி, வாசிக்க உதவியாக இருந்திருக்கும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

நீட்குடல் இறக்கம்மெய்நிகர் நாணயம்சிரைக்குழாய்கள்நாகாலாந்துமஹர்கண்ணந்தானம்தேசிய மாநாட்டுக் கட்சிபுதிய கருத்தியல்உத்தாலகர்ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்மோடியின் காலம்முன்னோடிபால் வளம்இந்தித் திணிப்புதேபஷிஷ் முகர்ஜி கட்டுரைமாஸ்கோஒரேவா நிறுவனம்மோகன் பாகவத்சாதி முறைபாபர் மசூதி பூட்டைத் திறந்தது யார்?சுய சுகாதாரம்சந்தேகத்துக்குரியது400 இடங்கள்கீழத் தஞ்சையும் கொஞ்சம் வாழட்டுமே!வரி வசூல்குடும்ப வருமானம்சர்வாதிகார அரசியல்வலிமையான தலைவர்மோடி அரசாங்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!