கட்டுரை, தொடர், கலாச்சாரம் 4 நிமிட வாசிப்பு

எதனால் வர்ண - ஜாதி எதிர்ப்பே இன்றைய தர்மமாக உள்ளது?

ராஜன் குறை கிருஷ்ணன்
13 Jan 2024, 5:00 am
0

ந்தியாவின் சாதி அமைப்புக்கும் இங்கு உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட ‘தர்மம்’ தொடர்பான தத்துவங்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. ‘சனாதன தர்மம்’ எனும் சொல்லாடல் ஓர் உதாரணம். பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் சனிக்கிழமைதோறும் எழுதும் கட்டுரைகளில், தர்மம் தொடர்பான தத்துவங்களை இங்கே அறிமுகப்படுத்துவதுடன் சமகால நோக்கிலிருந்து அவை பேசும் நியாயங்களை விசாரணைக்கும் உள்ளாக்குகிறார். சிறிய கட்டுரைகள். ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. சாதி குறித்துப் பேசும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள். தனித்தும் வாசிக்கலாம். தொடராகவும் வாசிக்கலாம்.

னாதன தர்மம் என்பதே மாறக்கூடியது என்பதை மகாபாரத்தில் இடம்பெறும் உத்தாலகர் கூற்றிலிருந்து புரிந்துகொண்டோம். நம்முடைய முக்கிய பிரச்சினை இன்றைய நிலையில் இந்துக்கள் சனாதன தர்மம் என்று கூறும்போது அது வர்ண, ஜாதி அமைப்பை வலியுறுத்தும் தர்மமா, அல்லவா என்பதுதான். 

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டிகளில் காலனிய, அதாவது ஆங்கிலேயே நீதிமுறை இந்தியாவில் பரவியபோது அவர்கள் மனுதர்ம சாஸ்திரம் உள்ளிட்ட தர்ம சாஸ்திர நூல்களைத் தொகுத்து அவற்றை இந்துக்கள் என்று அவர்கள் பொதுவாக அடையாளப்படுத்திய இந்திய மக்களின் வாழ்வியலை வரையறுக்கும் சட்டங்களாக நீதிமன்றங்களில் புழங்கச் செய்தார்கள். 

இன்றைய ஜாதி அமைப்பின் வடிவத்திற்கு இந்தக் காலனிய காலச் செயல்பாடுகள் முக்கியமான காரணமாகும். கொலம்பியா பல்கலைகழகத்தில் என்னுடைய ஆசிரியர்களில் ஒருவரான நிகோலஸ் டர்க்ஸ் (Nicholas B. Dirks) அவருடைய ‘காஸ்ட்ஸ் ஆஃப் மைண்ட்: கொலோனியலிஸம் அண்ட் த மேக்கிங் ஆஃப் மாடர்ன் இந்தியா’ (Castes of Mind: Colonialism and the Making of Modern India - 2001) என்ற நூலில் இந்த வரலாற்று சகாப்தத்தின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்துள்ளார். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

காலனிய ஆட்சியை எதிர்த்து நிறைய கிளர்ச்சிகள் நடந்தன. மன்னர்களும், குறுநில மன்னர்களும் போராடினார்கள். விவசாயிகள், பழங்குடியினர் தல மட்டங்களில் கிளர்ச்சிகள் செய்தார்கள். இவையெல்லாம் ஒடுக்கப்பட்டன. ஆங்கில ஆட்சி முதலீட்டிய வர்த்தகம், தொழில்கள், புதிய கல்விமுறை, அரசு இயந்திரம், நீதிப் பரிபாலனம் ஆகியவற்றை உருவாக்கியது. 

தன்னியல்பான கிளர்ச்சிகள் என்பதைக் கடந்து முதலில் குடிமைச் சமூக அரசியலும், பின்னர் வெகுஜன அரசியலும் இந்தியாவில் உருவானபோது அது மக்களாட்சி என்ற புதிய மானுட விழுமியத்தைக் கைக்கொள்ள நேர்ந்தது. மானுடவாதம் என்ற தனிமனிதர்களின் தன்னுணர்வை, சுதந்திரத்தை வலியுறுத்தும் தத்துவ அடிப்படையே மக்களாட்சியின் அடித்தளமாகும். 

அனைத்து மனிதர்களும் சுதந்திரமானவர்கள் என்றால் அவர்கள் அனைவரும் சமமானவர்கள் என்று பெறப்படுகிறது. அப்படிச் சுதந்திரமானவர்களாகவும், சமமானவர்களாகவும் அவர்கள் வாழ வேண்டும் என்றால் சகோதரத்துவம் என்ற அவர்கள் நலன்களை ஒன்றுபடுத்திக் காணும் மனோவியல்பு தேவையென்றாகிறது. இவைதான் பிரெஞ்சுப் புரட்சியில் முன்வைக்கப்பட்ட ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற முழக்கமாக அறியப்பட்டது.

நடைமுறை என்னவாக இருந்தது?

ஐரோப்பிய நாடுகளில் கல்வியும், அறிவியலும், தொழில்களும் பரவியபோது உருவான குடிமைச் சமூகங்கள் இந்த விழுமியங்களை உள்ளடக்கிய தேசிய உணர்வை வளர்த்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்டவை புதிய தேசங்களாக உருப்பெற்றன. பல்வேறு குறுநில மன்னர்கள் எல்லாம் ஒருங்கிணைய, அதிகாரத்தைக் குடிமைச் சமூகம் பகிர்ந்துகொள்ள ஒருவகையான மக்களாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியின் தேசங்களாக இவை உருவாயின. 

இதனைத் தொடர்ந்தே இந்தியாவிலும் தேசிய அரசியல் உருவானது. அந்தத் தேசிய அரசியலின் முன்னால் இரண்டு முக்கிய சவால்கள் இருந்தன. ஒன்று இந்தப் புதிய மானுட விழுமியங்களை ஏற்றுக்கொள்ளும் சமூக மாற்றத்தை, சீர்திருத்தத்தை நிகழ்த்துவது, ஜாதியம், பெண்ணடிமை போன்றவற்றை தகர்ப்பது; மற்றொன்று ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியர்களுக்கான சுயாட்சி உரிமைகளைப் பெறுவது, இந்திய தேசிய இறையாண்மையைப் பெறுவது. 

இந்த இரண்டு நோக்கங்களுமே நல்ல நோக்கங்கள்தான் என்றாலும், இவற்றில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பது முக்கிய கேள்வியாக மாறியது. அது அரசியலில் மிதவாதம், தீவிரவாதம் என்ற இரண்டு பிரிவுகளாக வடிவெடுத்தது. மிதவாதிகள் மானுடவாத விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். தீவிரவாதிகள் அரசியல் இறையாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.  

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

இதற்கிடையில் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரெல்லாம் இணைந்து புரட்சி செய்ய வேண்டும், அனைத்து சொத்துக்களையும் பொது உடமையாக்க வேண்டும் என்ற பொதுவுடமை அரசியல் சிந்தனையும் தோன்றியது. கார்ல் மார்க்ஸின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சித்தாந்தத்திற்குக் கல்வியாளர்கள், சிந்தனையாளர்களிடையே கணிசமான வரவேற்பு இருந்தது. தொழிற்சங்க அமைப்புகள், மாணவர் அமைப்புகள், விவசாயிகளின் அமைப்புகளும் தோன்றின. 

சுருக்கமாகச் சொன்னால் மானுடவாத விழுமியங்களால் அரசியல் களம் நிரம்பியது. நவீன கல்வியும் அதையே வலியுறுத்தியது. தேசிய சிந்தனையும் முன்மொழிந்தது. ஆனால், சமூக நடைமுறையோ வர்ண -ஜாதி நடைமுறைகளில் மூழ்கிக் கிடந்தது.

சுதந்திர இந்தியாவில் மக்களாட்சியும் தேர்தல்களும்    

இந்தியா சுதந்திரமடைந்துபோது அதற்கான அரசமைப்புச் சட்டம் புதிதாக எழுதப்பட்டதும், அதன் வரைவுக் குழுவிற்கு அண்ணல் அம்பேத்கர் தலைமையேற்றதும் நாம் அறிந்ததே. அரசமைப்புச் சட்டம் எழுதிய காலத்திலேயே அம்பேத்கர் வெளியிட்ட ‘சூத்திரர்கள் யார்?’, ’தீண்டப்படாதோர் யார்?’ என்ற ஆய்வு நூல்களைக் கடந்த இரண்டு வாரங்களில் பரிசீலித்தோம். 

வர்ண சமூகத்தின் தொடர்ச்சியாக சுதந்திரம் அடைந்த இந்தியாவில் தீண்டப்படாதோரும், நான்காம் வர்ணமான சூத்திர வர்ணத்தைச் சேர்ந்த ஜாதியினரும் கல்வியிலும், சமூகத்திலும் பின்தங்கியவர்களாக இருந்தார்கள். எனவே, அவர்கள் சமூக வாழ்வில் பிறருக்கு இணையாக பங்கேற்க வேண்டுமென்றால் அவர்களுக்கான இடஒதுக்கீட்டினைக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் செய்ய வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

தீண்டப்படாதோருக்கான இடஒதுக்கீடு ஒன்றிய அரசில் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. பிற்படுத்தவர்களுக்கான இடஒதுக்கீடு மாநில அரசின் பொறுப்பில் விடப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு ஒன்றிய அரசால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் மூலம் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் இன்றுவரை முன்னேறிய ஜாதிகளுக்கு இணையாக அவர்கள் உயர் பதவிகளில், சமூக முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் இடம்பிடிக்க முடியவில்லை. 

இந்தச் சமத்துவமின்மையின் காரணமாக தேர்தல்களில் ஜாதி சார்ந்த அணிசேர்க்கைகள் முக்கியத்துவம் பெருகின்றன. அது அனைத்து ஜாதியினரின் குடியுரிமை தன்னுணர்வுக்கு வகை செய்தாலும், அதிகாரப் பரவலுக்கு இடமளித்தாலும், சமூக நடைமுறைகளில் ஏற்றத்தாழ்வுகளை முற்றிலும் நீக்க முடியவில்லை. 

சுதந்திரமும் சமத்துவமும் 

இந்த நிலையில் ஜாதி எதிர்ப்பின் தர்மம், சமத்துவம் சார்ந்தது மட்டுமல்ல; சுதந்திரம் என்ற விழுமியம் சார்ந்ததும்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஜாதிகளுக்கு இடையேயுள்ள ஏற்றத்தாழ்வு, அரசியல் அணிசேர்க்கைகள், யார் யாரால் ஒடுக்கப்படுகிறார்கள், ஜாதி மோதல்கள், வன்முறை, தீண்டாமைக் கொடுமைகள் ஆகிய அனைத்தையும் நாம் தனித்தனியாக மட்டுமே பார்ப்பது போதாது. 

ஜாதி என்பது ஒவ்வொரு மானுட சுயத்தையும் குறுக்குவது. ஒரு மனித உயிரி, ஒரு குடிநபர் தனது தேர்வுகளைச் சுதந்திரமாக மேற்கொள்ள ஜாதி அடையாளமானது தடையாக இருக்கிறது. இதன் காரணம் ஜாதி வெறும் பண்பாடு சார்ந்த அடையாளமாக இல்லாமல், அகமணமுறை மூலம் உயிரியில் அடையாளமாக்கப்படுவதுதான். அகமணமுறை குறித்து நாம் நிறைய சிந்திக்க வேண்டும். 

ஒரு கூர்மையான புள்ளியில் சொன்னால் தனது இணையைத் தேடுவதில் ஜாதி பெரும் எல்லைக் கோடாக ஒவ்வொருவருக்கும் விளங்குகிறது. ஜாதியைக் கடந்து காதலித்து மணம் புரிபவர்கள் கொல்லப்படுவதை அன்றாட செய்தியாக பார்த்துக் கடக்கிறோம். கொலை செய்யுமளவு ஏன் ஜாதி உயிரியல் கற்பிதமாக இருக்க வேண்டும் என்பது நம் முன்னால் உள்ள தலையாய கேள்வி. 

இரண்டு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டுவிட்டால் அவர்கள் விருப்பப்படி இரண்டில் ஏதோவொரு ஜாதியின் பண்பாட்டைப் பின்பற்ற வேண்டியதுதானே? ஜாதி வெறும் பண்பாட்டு அடையாளமென்றால் அது இருவேறு ஜாதியினர் மணம் புரிவதால் எப்படிக் கெட்டுப்போகும்? 

சரி, பண்பாட்டு அடையாளம் இல்லை என்றால் பொருளாதார அடையாளமா என்ற கேள்வி எழும். நிச்சயமாக பல்வேறு ஜாதிகளிலும் ஏழைகளும், வசதியானவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பொதுவாக இணைந்து ஒரு பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில்லை என்பது வெளிப்படையானது. அகமணமுறை என்பதற்காக ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் திருமண பந்தம் ஏற்பட்டுவிடாது.  

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பிராமணர் என்பது ஜாதியா, வர்ணமா?

ராஜன் குறை கிருஷ்ணன் 16 Dec 2023

ஜாதியாகவும், வர்ணமாகவும் இருக்கும் பிராமணர்களிடையே இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகக் கடுமையானது. ஏழை பிராமணர்களுக்குப் பணக்கார பிராமணர்கள் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள் என்பதை யார் வேண்டுமானாலும் உடனடியாக உள்ளூரில் விசாரித்து அறிந்துகொள்ளலாம். அவ்வளவு ஏன், அவர்கள் புனிதமாகப் போற்றும் வேதம் படிக்கக்கூட ஒரு ஏழை மாணவனுக்கு நல்ல உதவித்தொகை தரமாட்டார்கள். 

அப்படியானால் இந்த ஜாதி என்பதுதான் உண்மையில் என்ன? ஏன் ஜாதிக்குள்தான் அனைவரும் திருமணம் செய்ய வேண்டும் என்ற மூடத்தனமான சிந்தனை மற்றும் நடைமுறை இன்றும் இவ்வளவு தீவிரமாக நிலவுகிறது? இதைத் தர்ப்பதற்கான ஆற்றல் நமது கல்விக்கோ, சிந்தனைக்கோ, பண்பாட்டிற்கோ இல்லையா? 

என்னுடைய விடை எளிமையானது. வர்ண தர்ம சிந்தனையின் தோற்றவியல் மூலத்தை முழுமையாகக் கண்டித்து எரித்துப் பொசுக்காமல் நாம் ஜாதியத்திலிருந்து விடுபட முடியாது. இன்றைய சுதந்திர, சமத்துவ விழுமியங்களைக் கொண்ட மானுட தர்மத்தை நிலைநிறுத்த முடியாது. 

நம்மால் அதை ஏன் செய்ய முடியவில்லை? நமது அரசியல் தலைவர்கள் என்ன சிந்தித்தார்கள்? அறிஞர்கள், கலைஞர்கள், மகான்கள் என்ன சொல்கிறார்கள்? அல்லது எதுவுமே சொல்வதில்லையா? தொடர்ந்து பரிசீலிப்போம்.    

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

எல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?
வர்ண ஒழுங்கு என்பது தர்மமா?
ஏன் வர்ணத்தைப் பேசுகிறோம்?
வர்ண அடையாளம் உடலுக்கா, ஆன்மாவிற்கா?
வர்ண பகுப்பு ஜாதியமானது எப்படி?
பிராமணர் என்பது ஜாதியா, வர்ணமா?
நடுவில் இரண்டு வர்ணங்களைக் காணோம்
சூத்திரர்கள் எனப்பட்டவர்கள் யார்?
தீண்டாமை எப்படி நிலைநிறுத்தப்பட்டது?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


4






உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகள்வேதியியலர்கள்இத்தாலிஉலக நாடுகளின் பாதுகாப்புசாதியப் பாகுபாடுபாடநூல் மரபுபிரதமர் மோடிஜமீன்தார் வி.பி.சிங்பேராசிரியர்கள்பழ. நெடுமாறன்சிப்கோ இயக்கம்ஆட்சிகி.ரா. பேட்டிதேர்ந்த வாசகர்ப்ரிமேசனரிமத்திய இந்தியாஜனதாசாரு அருஞ்சொல் பேட்டிஞாநிசமயம்வங்கி ஊழியர்கள்பஞ்சாப் புதிய முதல்வர்களக்குறுணிசமூக தேசியவாத பேரவைநிஃப்டிபாஜகவின் கவலைகளைப் பெருக்கும் ஆறாவது கட்டம்பயங்கரவாதம்!தலைச்சுமை வேலைகள்சீமாறுராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!