கட்டுரை, கலாச்சாரம் 12 நிமிட வாசிப்பு

வன்புணர்வுக் காணொளிகள் மூலம் சம்பாதிக்க நிறுவனங்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன?

நிக்கோலஸ் கிறிஸ்டோஃப்
25 Sep 2021, 6:00 am
3

பல பாலியல் காணொளிகள் அவர்களது சம்மதத்துடன் எடுக்கப்படவில்லை என்பதுதான் பிரச்சினை. வெறும் 14 வயதே ஆன ஒரு சிறுமியை ஒருவன் ஸ்கைப்பில் சில்மிஷ விளையாட்டில் ஈடுபடுத்துகிறான். ரகசியமாக அதைப் பதிவுசெய்கிறான். அந்தக் காணொளி அவளுடைய முழுப் பெயருடன், உலகின் அனைவராலும் பார்க்கப்படும் பாலியல் தளத்தில் பதிவேற்றப்படுகிறது. இவ்விதமான சட்ட விரோத, குழந்தை வன்புணர்வுக் காட்சிகள்கூட கூகுள் தேடலில் எளிதாகக் கிடைக்கின்றன.

கனடாவைச் சேர்ந்த ஒரு சிறுமியின் கதை இது. அந்தச் சிறுமி குறிப்பிட்ட தளத்திலிருந்து தனது காணொளிகளை நீக்க மன்றாடுகிறாள். “நீக்கவில்லை என்றால் பரவாயில்லை; வக்கிர நோக்கத்துடன் பார்க்கிறவர்களுக்குத் தனது அவமானத்தைக் காட்ட இணையதள நிறுவனம் இதைப் பத்திரமாக வைத்து, இரண்டு மடங்காக வெளியிடட்டும்” என்று கடைசியில் அவள் கூறினாள். இது உலகம் முழுக்க நடக்கிறது. இளம் பெண்கள் - சிறுமிகள், இளைஞர்கள் - சிறுவர்கள் என அனைவரும் வன்புணரப்பட்டு ரகசியமாகப் படமெடுக்கப்படுகிறார்கள். பிறகு, அவை இணையதளங்களில் கள்ளத்தனமாகப் பதிவேற்றமாகின்றன. “அவமானத்தால் நான் நிலைகுலையவில்லை. நான் மிகப் பெரிய தன்னம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன். இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என்று அந்த மாணவி கூறுகிறாள்.

யூட்யூப்போல யார் வேண்டுமானாலும் நிர்வாண, ஆபாசக் காட்சிகளைப் பதிவேற்றக்கூடிய ஆபாசத் தளத்தின் முன்னோடியான ஒரு தளத்தைப் பற்றி 2020 டிசம்பரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் அதனுடனான தங்களது பரிவர்த்தனையை நிறுத்தியிருக்கின்றன. கனடா, அமெரிக்கா நாடுகள் அதன் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. ஆனால், நான் குறிப்பிட்டதுபோல, இம்மாதிரி கள்ள ஊடுருவல்கள் நடப்பது ஒரு நிறுவனத்தில் மட்டுமல்ல; ஒரு தொழில் துறையே சுதந்திரமாக இயங்குகிறது. இதில் ஒன்றை மட்டும் நிறுத்துவதால் சந்தையில் போட்டிதான் அதிகமாகும். அதுதான் இங்கு நடக்கிறது.

மனசாட்சியோடு நான் குறிப்பிட்ட அந்தத் தளம்  தங்களது காணொளிகளை நீக்கினாலும் லட்சக்கணக்கான அதன் வாடிக்கையாளர்கள் வேறொன்றைத் தேடி ஓடிவிடுவார்கள். ஆக, நாம் செய்ய வேண்டியதெல்லாம் மோசமான இந்த மொத்த கும்பலையும் கட்டுப்படுத்துவதே. ஆனால், அழிக்கவே முடியாத ஒரு பழமையான மிருகத்தைப் போல, கூகுள் போன்ற எல்லாத் தேடல் பொறிகளிலும் எளிதில் கிடைத்துவிடுகிற அளவு இன்று அவை வளர்ந்திருக்கின்றன.

“உலக அளவில் பருவ வயதினர்களுக்கான மிகப் பெரிய இணையதளம் இது. சராசரியாக ஒரு நாளைக்கு இரு நூறு கோடி வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்” என்று ‘எக்ஸ் வீடியோஸ்’ பெருமைகொள்கிறது. இதனுடைய சக இணையதளமான ‘எக்ஸ்என்’னும், இதே அளவுக்கு யாஹூ, அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்றவற்றைவிட அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டது. இவை இரண்டும் புதிரான பிரான்ஸ் இரட்டையர்கள் போன்ற தோற்றத்துடன் வென்செஸ்லஸ் சதுக்கத்துக்கு அருகில் ஒரு சாதாரணமான கட்டிடத்தில் இயங்குகின்றன. இந்தக் கட்டிடம்தான் ஆபாச சாம்ராஜ்யத்தின் மையம். ஒரு நாளைக்கு 600 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட, உலகம் முழுக்க சபலத்தைத் திணிக்கும் இடம்.

ஏன் நிறுவனங்கள் இதிலிருந்து வெளியேறுவதில்லை?

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹெதர் லகார்தே என்கிற அல்பெர்திய இளம் பெண்ணின் அந்தரங்கக் காணொளியை அவரது முன்னாள் கணவர் பதிவிட, உலகம் பூராவும் அது பார்க்கப்பட்டது. உலகமே நொறுங்கிப்போய்விட்டதாக அந்தப் பெண் கண்ணீரைப் பகிர்ந்தார். முன்னாள் கணவரால் ஒரு பெண் பிரக்ஞையற்ற நிலையில் படுக்கையில் வன்புணரப்படுவது எவ்வளவு மோசமானது.

மயக்க நிலையில் அவர் வன்புணரப்படுவதை இரண்டு லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அவமானமும் உச்சபட்சத் துரோகமும் ஏற்பட்ட அன்றே அவர் தற்கொலை எண்ணத்துக்கு வந்துவிட்டார். “கேரேஜில் தொங்கிய கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஒரு தூணுக்குக் கீழ் நின்றுகொண்டிருந்தேன். பிறகு, எனக்கு நானே தைரியம் சொல்லிக்கொண்டேன். இதுதான் முடிவு என்றால் அவன் நாளைக்கு வேறு சிலரிடம் இதைச் செய்வான்.”  தனது கதையின் மூலம் “இது மற்ற பெண்களுக்கு ஏற்படக் கூடாது” என்று தீர்மானித்ததாலேயே தனது பெயரைக் கட்டுரையில் குறிப்பிடவும் அனுமதித்தார். ஆனால், அவரது வாழ்க்கை தினந்தோறும் அவமானங்களால் நகர்கிறது. இணையதளத்தில் தேடி அலசி தனது நிர்வாணப் படங்களை நீக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி சிலவற்றை வெற்றிகரமாக நீக்கியுமிருக்கிறார். பல நீடிக்கின்றன. 

இத்தகு தளங்களில் இருக்கும் அனைத்துக் காணொளிகளிலும் இருப்பது குழந்தைகளோ அல்லது சுயநினைவற்ற நிலையில் இருக்கும் பெண்களோ அல்ல. ஆனால், பெரும்பாலான உடல்கள் ஏதோவொரு வகையில் வேதனையுடன் உள்ளவைதான்.

காணொளி எங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது, சம்மதத்துடன் எடுக்கப்பட்டதா என்பதைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. இத்தகு தளங்களில் இருக்கும் எட்டு காணொளிகளில் ஒன்று சம்மதமின்றியே எடுக்கப்படுவதாக பிரிட்டிஷ் குற்றவியலின் பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. சிலவற்றில் போதையேற்றப்பட்ட அல்லது சுயநினைவற்ற பெண்களும் குழந்தைகளும் வன்புணரப்படுகின்றனர். சிலர், உடை மாற்றும் அறை அல்லது குளியலறை எனப் பெண்களுக்குத் தெரியாத வகையில் எடுக்கப்படுகின்றன. இனவெறிக்காகவும் பெண் வெறுப்பைக் காட்டுவதற்கும் அவர்களைக் கீழாகச் சித்தரிக்கவும் இவை செய்யப்படுகின்றன. ஒரு காணொளியின் தலைப்பு, ‘அப்பா இது தவறு. தயவுசெய்து வேண்டாம்’ என்றிருக்கிறது.

தனது வாடிக்கையாளர்கள் தளத்தில் ‘இளம்’ என்று தேடும்போது கிடைக்க வசதியாக ‘சிறுமி, பையன், இளம்பெண், விடலை’ என்றே இத்தளங்கள் குறிப்பிடுகின்றன. இதில் வரும் பலரும் விடலைப் பருவத்தினர்தான்; சிலர் வாழ்க்கை சீரழிந்த சிறுவயதினராகவும் இருக்கிறார்கள்.

இரண்டு பெண்களின் கதை

ஒரு தாய்லாந்து இளம்பெண் துயரத்துடன் என்னிடம் அவள் கதையைப் பகிர்ந்தாள். அவள் எட்டாவது படிக்கையில் நடந்ததை விவரித்தாள். முகநூலில் அறிமுகமான ஒருவன், மாடலாகும் ஆலோசனையைக் கூறியிருக்கிறான். அவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவள் தனது நிர்வாண காணொளிகள் உட்பட அனைத்தையும் அனுப்பியிருக்கிறாள். பாலியல் தளஙகளில் வெளியாகும் வரை தான் அனுப்பியவை என்ன ஆனாதென்று அவளுக்குத் தெரியவில்லை.

“தாய்லாந்து நாட்டில் இசையில் பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற நம்பிக்கை இருந்தது. இனி அது நடக்குமெனத் தோன்றவில்லை. என்னுடைய நிர்வாணப் படம் இணையதளத்தில் இருக்கிறது. என்னுடைய லட்சியம்  முடிந்துவிட்டது.”

தாய்லாந்தில் இருக்கும் ‘தி ஹக்’ என்கிற நல்லெண்ண அமைப்பானது இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செயல்பட்டுவருகிறது. அவர்கள்தான்  காணொளிகளையும் நீக்கியிருக்கிறார்கள். இருந்தும், தொடரும் அவமானத்தைத் தாங்கவியலாமல் பள்ளியிலிருந்து அவள் நின்றுவிட்டாள். 

“நிச்சயம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற வேகம் இருக்கிறது. ஆனால், இப்போது முடியாது” என அவள் கடும் கோபத்துடன் பதிவிட்டிருந்தாள். அவமானப்பட்டிருந்தாலும் இணையதள உலகில் இதுபோன்று நடப்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வதற்குத் தன்னுடைய அனுபவம் உதாரணமாக இருக்கட்டும் எனக் குறிப்பிட்டாள்.

இந்த மோசடிகளெல்லாம் போர்னோகிராபி மாதிரியான தளங்களில் மட்டும் நடப்பவை அல்ல. ட்விட்டர், பேஸ்புக், ரெட்டிட் போன்றவையும் குழந்தை வன்புணர்வு மோசடிகளை விதைப்பவைதான். இம்மாதிரி மோசடியால் பாதிக்கப்பட்ட இல்லினாய்சைச் சேர்ந்த பெண்ணை நேர்கண்டேன். தரகர் ஒருவன் பதிவேற்றிய அவளது காணொளி ஒன்று, ஆறு வருடங்களாக எத்தனையோ முறை நீக்க கோரிக்கை விடுத்தும் ட்விட்டர் நிறுவனத்தால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. நான் அதை நீக்கும்படி கேட்டு, பிறகு அவை அழிக்கப்பட்டன. ஆனால், இம்மாதிரி அனுமதியில்லாமல் எடுக்கப்பட்ட நிர்வாணப் படத்தை நீக்குவது என்னால் மட்டுமே சாத்தியமற்றது.

அவருடைய நான்கு காணொளிகள் அங்கு இருப்பதைக் கவனித்துப் பெரு முயற்சிக்குப் பின் அவை அழிக்கப்பட்டன. கிட்டத்தட்ட அவை ஒரு லட்சம் முறை பார்க்கப்பட்டவை. “மோசடி என்பதைவிட நான் மேலும் மேலும் ஏமாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுவதாகத்தான் உணர்கிறேன்” என்று அவள் சொன்னாள்.

கூகுளில் தேடத் தொடங்கியதுமே ஆபாசத் தொடர் அமைப்புகளுக்குள் சட்டென நுழைந்திட முடியும். “போர்ன் தளங்களுக்கு கூகுளின் தரவரிசை தேவை. அவர்களுக்கு அது உயிர்நாடி மாதரி. அதற்காகவே கூகுளுடன் இணைந்துள்ளன” என்று பாலியல் மோசடிகளுக்கு எதிராகப் போராடும் ‘ஜஸ்டின் டிபன்ஸ் நிதியமைப்’பின் தலைவர் லைலா மிக்கெல்வெய்ட் குறிப்பிடுகிறார். “இந்தத் தளங்களுக்குள் நுழைய கூகுள்தான் முதல் நிலை.”

‘சுயநினைவற்ற பெண் வண்புணர்வுக் காணொளி’ என கூகுளில் தேடுவது பற்றிய சமீபத்திய ஆய்வில், பல காணொளிகள் அதில் காட்டப்படுகின்றன என்றும், குறிப்பாகக் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் காணொளியும் அதைத் தொடர்ந்து அவளது உடல் நாசப்படுவதும் இருக்கின்றன என்றும் தெரியவருகிறது. பள்ளி மாணவிகளை கூகுளில் தேடும்போது, விடலைப் பருவத்தினரின் காணொளிகளை வைத்திருக்கும் தளங்கள் வருகின்றன. அவற்றில் இருப்பதில் பெரும்பாலானவர்களுக்கு 18 வயதுகூட இருக்காது. எப்படி இது நடக்கிறது?

குழந்தை வன்புணர்வு மோசடிகளைப் பணமாக்கும் நிறுவனங்களுக்கு எதற்காக கூகுள் உடந்தையாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தை அறிய முற்பட்டபோது நியாயமான பதில் கிடைக்கவில்லை. கூகுள் சில வரையறைகள் வைத்திருக்கிறது. ‘எப்படி என்னுடைய கணவருக்கு விஷம் கொடுப்பது?’ என்று தேடிப் பார்க்கையில் தவறுசெய்வதை நிறுத்துவதைப் பற்றிய வழிமுறை கிடைக்கிறது. ‘எவ்வாறு தற்கொலை செய்வது?’ என்பதற்கான பதில்கள் தற்கொலைத் தடுப்பு உதவி மையத்தின் தொடர்புடன் வருகின்றன. வன்புணர்வுக் காணொளிகளைத் தேடும்போதும் கூகுள் ஏன் இதே மாதிரி செய்யக் கூடாது?

தொடக்கத்தில் எந்தப் பதிலையும் தராத ‘எக்ஸ் வீடியோஸ்’, இந்தக் கட்டுரை வெளியான பிறகு பெயருக்கு ஒரு அறிக்கை வெளியிட்டது. ‘இதுமாதிரி முறையற்றதை ‘எக்ஸ் வீடியோஸ்’ அனுமதிப்பதில்லை. இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அதற்கான பாதுகாப்பும் தனியுரிமை நெறிமுறைகளையும் கொடுக்கிறோம்’ என்றது.

‘எக்ஸ் வீடியோஸ்’ மற்றும் ‘எக்ஸ்என்’ நிறுவன உரிமையாளர்கள் ஸ்டீஃபன், மலோரே டெபோர் பகாட் இருவரும் இரட்ரையர்கள் மாதிரி. இதில் 42 வயதான பகாட், சமூக ஊடகங்களில் வருவதில்லை. ஆனால், இவர் 2001 தொடக்கத்தில் ‘போர்னோகிராபிக்’ இதழிலிருந்து படங்களைப் பிரதியெடுத்து வெளியிட்டுதான் சாதாரணமாக இணையதளத்தைத் தொடங்கியிருக்கிறார் என்று மற்ற தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

‘பார்ன்ஹப்’ தளத்தை விற்பதற்கு முன் அதைக் கட்டமைத்த ஃபேபியன் தைல்மன், இந்த பகாட் பற்றிக் கூறும்போது, “ஒரு தனியராக இணையதளத்தில் தன்னை முழுக்க ஈடுபடுத்திக்கொண்டு தனிமை நாட்டத்தைப் போக்கிக்கொண்டிருந்தார்” என்கிறார். “வேகஸ் கூட்டாய்வுச் சந்திப்பின்போது அவர் தனது அறையில் வேலை செய்துகொண்டிருந்தார். அவரது தளத்துக்கு 2012-ல் 120 கோடி விலை கொடுக்கத் தயார் என்றதும் பகாட் பேச்சைத் துண்டித்துவிட்டு வீடியோ கேம் விளையாடச் சென்றுவிட்டார்” என்றார் தைல்மன்.

என்ன செய்வது?

இந்தப் பிரச்சினை பாலியல் தளத்தைப் பற்றியது அல்ல; குழந்தை வன்புணர்வு மற்றும் பாலியல் மோசடிகள் தொடர்பானது. பாலியலுக்கு ஆதரவாகவும் மோசடிகளுக்கு எதிராகவும் நம்மால் இருக்க முடியும். முறையற்ற பாலியல் மீதான நடவடிக்கைகள் என்கிற நியாயமான கோரிக்கை சில சமயம் தற்காலிகத் தீர்வாக அமைந்துவிடக்கூடும். மாறாக, அதைக் கவனமுடன் மேற்கொண்டால் ஓரளவு அவற்றைச் சரிசெய்யலாம்.

உதாரணமாக, அமெரிக்க அரசாங்கம் எப்போதும் பதிப்புரிமைப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும். மோசடியில் ஈடுபட்டால் நஷ்டமும் இழப்பும் ஏற்படும் என்பது பிரதானப் பாலியல் நிறுவனங்களுக்கும் நன்றாகவே தெரியும். அமெரிக்காவும் மற்ற நாடுகளும் கவனத்துடன் குழந்தைப் பாலியல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவை எளிதல்ல. ஆனால், இந்த மூன்று வழிகள் உதவக்கூடும்:

1) முறையற்ற பாலியல் காணொளிகளுடன் தொடர்பில் இருக்கும் நிறுவனங்களுடனான தங்கள் உறவை கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் நிறுத்த வேண்டும். உதாரணமாக, இது பற்றிய கட்டுரை வெளியானபோது இதுவரை ‘எக்ஸ் வீடியோஸ்’ விளம்பரதாரராக இருந்த ‘பேபால்’ கிரெடிட் கார்ட் நிறுவனம் உடனடியாகத் தன் தொடர்பை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது. தளத்தில் சம்பந்தப்பட்ட காணொளியில் இருப்பவரது வயது, ஒப்புதல் தகவல்கள் இருந்தால் மட்டுமே பணம் செலுத்த முடியும் என ‘மாஸ்டர் கார்ட்’ நிறுவனம் அடுத்து அறிவித்திருக்கிறது. இதை மற்ற நிறுவனங்களும் செய்ய வேண்டும்.

2) கூகுள், யாஹூ, பிங் போன்ற தேடுதளப் பொறிகள் இதுபோன்ற தளங்களுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.

3) குற்றம் மற்றும் குடிமையில் சட்ட விழிப்புணர்வுடன் இத்தகைய நிறுவனங்களின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். 14 வயதான ஒரு பெண் பாலியல் மோசடிக்கு உட்படுத்தப்பட்டதை எதிர்த்து கடந்த மார்ச் மாதம் ‘எக்ஸ் வீடியோஸ்’ மீது வழக்கு தொடர்ந்திருக்கிறாள். ஆனால். பிரிவு 230-ன் கீழ் (மூன்றாம் நபரிடமிருந்து இணையதள நிறுவனத்தைப் பாதுகாத்தல்) தகவல் தொடர்பு ஒழுக்க முறை விதியின்படி வழக்கு நிறுத்தப்பட்டுவிட்டது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் வழக்கு மீன்டும் நடத்தப்பட்டது. முதலாளித்துவத்தைக் கட்டுப்படுத்தியதில் நிச்சயமாக இது ஒரு திருப்புமுனைதான்.

இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தனிப்பட்டவர்களின் போராட்டங்கள் விளைவாகவே ‘எக்ஸ் வீடியோஸ்’ போன்ற நிறுவனங்களின் அத்துமீறல்களை நீக்க முடிகிறது. மிகப் பெரிய நிறுவனத்துக்கு எதிராகப் போராடிய 14 வயது பெண்ணுக்காக நமது ஆதரவை வெளிபடுத்தியிருக்க வேண்டும்.

நிறைய மோசடி நிறுவனங்கள் லாபம் கொழித்திருக்கின்றன. ஒன்றுமறியாத குழந்தைகளும் இளம் வயதினரும்தான் அதன் விலை.

பள்ளியில் நன்றாகப் படிக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 16 வயது பெண் தனது நிர்வாணப் படத்தை 17 வயது தோழனுக்கு, “உன்னை நேசிக்கிறேன் உன் மீது நம்பிக்கை இருக்கிறது” என்று அனுப்பியிருக்கிறாள். அதை அவளது தோழன் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சில நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறான். பிறகு, அது அவர்களது நண்பர்களிடம் சென்று, கொஞ்ச நாளுக்குள் பள்ளி முழுக்கப் பரவிவிட்டது. யாரோ சிலர் அவளது பெயரையும் பள்ளியையும் வைத்து இணையத்தில் பதிவேற்றவும் 7,000 தடவை அந்தப் படம் பதிவிறக்கமாகியது. அவளது குடும்பம் வேறொரு நகரத்துக்குப் புலம்பெயர்ந்துவிட்டது. ஆனாலும், மாணவர்கள் அவளை அடையாளம் கண்டுவிட்டார்கள். ஒரு கட்டத்தில் குடும்பம் ஆஸ்திரேலியாவின் வேறொரு மாநிலத்துக்குச் சென்றது. படம் இணையத்தில் பதிவேற்றப்பட்டு உலகம் முழுக்கப் பரவி இனி இதிலிருந்து மீள முடியாது என்று முடிவெடுத்த அந்தப் பெண் பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டுப் போதைக்கு அடிமையானதுடன் 21 வயதில் தன் வாழ்வையும் முடித்துக்கொண்டாள்.

இந்த வழக்கில் வாதாடிய ஆஸ்திரேலியக் காவல் அதிகாரி பவுல் லிதர்லன்ட் என்னிடம் சொன்னார்: நாம் எதை முன்னிறுத்தப்போகிறோம்? பாலியல் தளங்களின் தரப்பிலா, இப்படிப் பாதிக்கப்படும் பெண்களின் தரப்பிலா?

© தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: துாயன்
பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Abdul majeeth   1 year ago

கட்டுரை அபாரம். மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பு.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

kALIDAS   1 year ago

உலக அளவில் பொதுநடைமுறை மிக அவசியம் கூகுள் போன்ற பெருநிறுவனங்கள் நினைத்தால் ஓரளவு கட்டுபடுத்தலாம். பெருவாரியான சமூகம் காட்சியாக மட்டுமே பார்த்து செல்வதால் சம்மந்தபட்டவரின் பாதிப்பு உணரவில்லை. பணபட்டுவாடா விசயத்தில் நிறுவனங்கள் கட்டுபடுத்த வாய்ப்பு அதிகம். இதன் பிடியில சிக்கிதவிக்கும் ஏராளமானவர்களின் இயலாமையும் காரணமாக்கிவிடுகிறார்கள். உலகபரவல் வியாதியாக உள்ளதால் சமுக அக்கறைதான் உண்மையான வழி. நீலனூர் கே கே தாஸ்

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

சரவணமணிகண்டன்   1 year ago

ஸ்டிங் ஆப்ரேஷன் செய்கிறேன் என்ற பெயரில் ஒருவரின் அறியாமையைப் பயன்படுத்தி, அவருடைய அந்தரங்கத்தில் நுழைந்து, புகழுக்குக் கலங்கம் கற்பிக்கும் முயற்சிகளும் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிற குற்றங்களுக்குக் கொஞ்சமும் குறைவானதல்ல. உண்மையில் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டுவதில் பாலியல் காணொளிகள் எந்த அளவு பங்காற்றுகிறதோ, அதனினும் மேலான காரணியாக அமைந்துவிடுகிறது சமூகத்தின் வசைச்சொல். பாலியல் காணொளிகளை கண்கொட்டாமல் பார்க்கும் இதே சமூகம்தான் வசைமாறியையும் வாரி வழங்குகிறது என்றால், முதலில் சமூகத்தின் மனநிலை மாற வேண்டும். அந்த மனநிலை வரும்வரை, பெண்கள் சிறுமிகள் இதுவும் அறியாமையில் செய்துவிட்ட பிழையே எனக் கடந்து அடுத்த கட்டத்துக்கு தன் வாழ்க்கையை நகர்த்திச் செல்ல அவர்களுக்கு ஆலோசனைகள் எல்லாத் தளங்களின் வழியாகவும் வழங்கப்பட வேண்டும். நமது அருஞ்சொல்லில் கூட தகுந்த நிபுணரைக்கொண்டு தொடர் ஒன்றை வெளியிடலாம்.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

புதிய பயணம்நாடகசாலைத் தெருஉள்ளடக்கங்கள் மாற வேண்டும்யோகியை வீழ்த்துவது எளிதல்ல!ஆம்ஆத்மி கட்சிகோட்சேமெக்காலேநாடாளுமன்றக் கட்டிடம்சாதியம்ராஜன் குறை கிருஷ்ணன் கட்டுரைமொழிபெயர்ப்புச் சிறுகதைமாலுமி காட்டிய மகத்தான வழிப.சிதம்பரம் கட்டுரைஎழுத்தாளர் பேட்டிமேடைக் கலைவாணர்மையவியம்இளமையில் வழுக்கை ஏன்?வடக்கு வாழ்கிறதுகான்ஷிராம்ராணுவத் தலைமைத் தளபதிகுறைந்தபட்ச ஆதரவு விலைஷிழ் சிங் பாடல்வீதி வேடிக்கையல்ல ராகுலின் பாத யாத்திரைதஞ்சைதொல்மனிதர்கள்தத்துவம்கோவிட்ட்ரான்ஸ்டான்பரந்தூர் மக்கள்சந்தியாசி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!