கட்டுரை, அரசியல், சட்டம் 4 நிமிட வாசிப்பு
பில்கிஸ் பானு: நீதிதேவன் கண் திறந்தார்
மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டு, பெற்ற குழந்தையையும் உறவினர்களையும் ஒரே சமயத்தில் கலவரக்காரர்களின் கொடுஞ்செயல்களில் இழந்த இளம் கர்ப்பிணியான பில்கிஸ் பானுவைவிட வேறெந்த மனிதர்களாலும் அப்படியொரு வேதனையை வார்த்தைகளால் வெளிப்படுத்தியிருக்கவே முடியாது; கோடிக்கணக்கான ஏழைகள், ஒதுக்குதலுக்கு ஆளானவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையை மிக எளிமையாகவும் இதயத்தையே பிளக்கும் வகையிலும் உணர்த்தும்படியாக அவர் சொன்னது, “அச்சமின்றி வாழும் உரிமையை, எனக்கு மீண்டும் தாருங்கள்!”
அருவருக்கத்தக்க கொடுங்குற்றம்
பில்கிஸ் பானுவின் வாழ்க்கை முற்பகுதியில் நடந்த செயல்கள் கொடூரமானவை என்றாலும், அவருடைய வேதனைக்குக் காரணமானவற்றை மேலும் பலர் அறியக் கூறுவதும், அதைத் திரும்பத் திரும்பக் கூறுவதும் அவசியம்.
குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் 2002இல் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு மிகப் பெரிய வன்முறை வெடித்தது. 21 வயது நிரம்பிய கர்ப்பிணி பில்கிஸ் பானுவுக்கு அப்போது 3 வயதில் முதல் பெண் குழந்தை இருந்தது; கலவரக்காரர்கள் அவருடைய வீடு புகுந்து வீட்டில் இருந்த குழந்தை உள்பட பல உறவினர்களைக் கொன்றார்கள்; அவரையும் தாக்கிய பிறகு கூட்டாகப் பாலியல் வல்லுறவு கொண்டனர். அவர் இறந்துவிட்டார் என்று கருதி அவர்கள் வெளியேறினர்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
உயிர் தப்பிய பில்கிஸ் பானு, நடந்த சம்பவங்களைப் பிறகு தெரிவித்தார். அவரைத் தாக்கியவர்கள் மும்பை மாநகர சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டனர். மிருகத்தனமாக நடந்துகொண்ட 11 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2008 ஜனவரி 21இல் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேடையின் முன்னும் பின்னும்
பிரதமர் நரேந்திர மோடி 2022 ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையில், “இந்தியப் பெண்களின் ஆற்றல் குறித்துப் பெருமைப்பட வேண்டும்” என்று பேசிய சில மணி நேரங்களுக்கெல்லாம், அந்த 11 குற்றவாளிகளின் எஞ்சிய தண்டனைக் காலத்தைத் தள்ளுபடி செய்து விடுதலை செய்துவிட்டது குஜராத் மாநில அரசு.
விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்களுடைய ஈனச் செயல் குறித்து எந்த விதத்திலும் வெட்கமோ – வருத்தமோ படவில்லை, எவர் கண்ணிலும் படாமல் மறைந்துகொள்ளவும் இல்லை. அவர்களை உறவினர்களும் நண்பர்களும் கூடி மாலையணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றுக் கொண்டாடினர்.
அப்படி வரவேற்றவர்களில் சிலர் அவர்களுடைய கால்களில் விழுந்து வணங்கி ஆசியும் பெற்றனர். “இவர்கள் அனைவரும் நல்ல பண்புகள் வாய்ந்த பிராமணர்கள்” என்று அதற்கான காரணத்தையும் ஒருவர் கூறினார்!
சுற்றியடித்த வழக்கு
கதையின் அடுத்த பகுதி நீதிமன்றங்கள் தொடர்பானது. தொடர்ந்து நீதிக்காகப் போராடினார் பில்கீஸ் பானு. இந்த ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனை ரத்து ஆணைகளை நிராகரித்த உச்ச நீதிமன்றம், 11 பேரும் எஞ்சிய காலத்தை சிறையில் கழிக்க, உடனடியாக சிறைக்குத் திரும்ப வேண்டும் என்று ஆணையிட்டது.
குற்றவாளிகளுக்கு நியாயமற்ற வகையில் அளிக்கப்பட்ட விடுதலை பற்றியதல்ல இந்தக் கட்டுரை. சட்டப்படியான ஆட்சி என்பதற்கும் சட்டமும் மனித உரிமைகளும் தொடர்புள்ள வழக்குகளின் நிலைமை பற்றிய கவலைகளையும் பற்றியது.
வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇 75500 09565பொக்கிஷம் இந்த நூல்
- தினத்தந்தி
சோழர்கள் இன்று
நீதிமன்றம் கூறியது (கட்டுரைக்குப் பொருத்தமானவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்):
- ஒரு பெண்மணி சமூகத்தின் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் சாதாரணமானவராக இருந்தாலும் அவருடைய கண்ணியம் காக்கப்பட வேண்டும், மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
- குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்று விசாரணை முகமை அறிக்கை தருகிறது, விசாரணையை முடித்துவிடும் தன்மையுள்ள அந்த அறிக்கையை நீதித்துறை மாஜிஸ்திரேட் ஏற்றுக்கொண்டுவிடுகிறார்.
- இந்த நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டு மத்தியப் புலனாய்வுக் கழகத்திடம் (சிபிஐ) அதை ஒப்படைக்கிறது. மும்பை பெருநகர சிறப்பு நீதிபதி 11 எதிரிகளுக்கும் தண்டனை வழங்குகிறார்.
- குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் 04.05.2017இல் வழங்கிய தீர்ப்பில் சரியென்கிறது.
- எதிர்மனுதாரர் எண்:3: (ராதே ஷியாம் ஷா), தண்டனைக்காலத்துக்கு முன்னதாகவே தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று தான் அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை என்று வழக்கு தொடுக்கிறார். மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக மகாராஷ்டிர அரசிடம் முறையிடலாம் என்று குஜராத் உயர் நீதிமன்றம் 17.07.2019-ல் ஆணையிடுகிறது.
- குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக எவரும் வழக்கு தொடுக்காத நிலையிலும்கூட, கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக 09.07.1992இல் குஜராத் அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் மனுதாரர் ராதேஷியாமின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் 2022 மே 13இல் ஆணையிடுகிறது.
- குஜராத் மாநில அரசின் சிறை ஆலோசனைக் குழு 26.05.2022இல் கூடுகிறது, பில்கிஸ் பானு வழக்கில் தண்டிக்கப்பட்ட அனைவரையும் தண்டனைக் காலத்துக்கு முன்னதாகவே விடுதலை செய்துவிடலாம் என்று குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பரிந்துரைக்கின்றனர்.
- கோத்ரா குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, 09.07.1992 கொள்கை முடிவு அடிப்படையில், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய ஒப்புதல் தெரிவிக்கிறார்.
- ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம், 11 பேரையும் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னதாகவே விடுதலை செய்ய தனது ஒப்புதலை 11.07.2022இல் வழங்குகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 8இல் தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம், 2022 மே 13இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முதல் அதன் பிறகு வரையிலான அனைத்துமே களங்கம் உண்டாக்குகிற செயல்கள் என்று காட்டமாக சுட்டிக்காட்டியிருக்கிறது. அது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ள காரணங்கள் கடுமையானவை.
- குஜராத் உயர் நீதிமன்றம் 2019 ஜூலை 17இல் வழங்கிய தீர்ப்பு செல்லாது என்றோ ரத்து செய்யப்பட வேண்டும் என்றோ ஒருவரும் வழக்கு தொடராத நிலையிலும், உச்ச நீதிமன்றம் 2022 மே 13இல் வழங்கிய தீர்ப்பில் அந்தத் தீர்ப்பை தள்ளுபடி செய்துவிட்டது.
- உண்மைகளை மறைத்தும் மோசடி செய்தும்தான் 2022 மே 13இல் தீர்ப்பு பெறப்பட்டிருக்கிறது.
- உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வுகள் இதற்கும் முன்னால் ஏற்படுத்திய, கடைப்பிடிக்கப்பட வேண்டிய முன்னுதாரணங்களைப் புறக்கணித்து 2022 மே 13இல் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
- ராதே ஷியாம் என்ற குற்றவாளி மட்டுமே தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினார்; ஆனால் தண்டனை பெற்ற 11 பேருக்குமே தண்டனைக் காலம் குறைக்கப் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.
- இந்த வழக்கில் குஜராத் மாநில அரசுக்கு அதிகார வரம்பே கிடையாது; வழக்கை நடத்திய மகாராஷ்டிர அரசுக்குத்தான் உண்டு.
- தண்டனைக் குறைப்பு தொடர்பான 1992 ஜூலை 9 கொள்கையை ரத்துசெய்துவிட்டு மாற்றுக் கொள்கையை 2014 ஜனவரி 23இல் குஜராத் அரசு உருவாக்கிவிட்டது.
- உச்ச நீதிமன்றத்திடம் தண்டனைக் குறைப்புக்கு மனு செய்த ராதே ஷியாமுடன், இந்த வழக்கில் குஜராத் அரசு உடந்தையாகச் செயல்பட்டிருக்கிறது.
கசப்பும் இனிப்புமான பாடங்கள்
இந்தக் கட்டுரையின் மூன்றாவது பகுதி இந்தியக் குடிகள் தொடர்பானது. குடிமக்களுடைய கண்ணியம், சுதந்திரம், அந்தரங்கம், மனித உரிமைகள் ஆகியவற்றை மதிக்காமல் (நம்மை தண்டிப்பார்கள் என்ற அச்சேம இல்லாமல்) மீறத் தயாராகிவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது.
ஆனால், துணிச்சலான காவல் துறை அதிகாரிகளும் எவருக்கும் அடிபணியாத நீதிபதிகளும் அவர்களைக் கூண்டில் நிறுத்தி தண்டிக்க இருக்கிறார்கள்.
குற்றவாளிகளுடன் கைகோத்துச் செயல்படவும் அவர்களுக்குத் தகுதியில்லாத விடுதலையை வழங்கவும் அரசு துணைபோகும் என்பதும் இதிலிருந்து தெரிகிறது. உண்மைக்கு மாறான தகவல்களை நீதிமன்றத்தில் கூசாமல் தெரிவித்து மோசடி செய்யத் தயாராக இருக்கிறார்கள் வழக்காடிகள்! நீதிபதிகளும் தவறு செய்யக்கூடியவர்களே.
மக்கள் வெகுண்டெழுந்து நியாயம் கேட்டால் பிற நீதிபதிகளும் தங்களுடைய தவறுகளைத் திருத்திக்கொள்வார்கள். நீதி வழங்க – நன்கு கற்ற நீதி தேவனே வருவார். ‘சட்டப்படியான ஆட்சி’ என்பதே இறுதியில் எஞ்சும். “என்னால் மீண்டும் சுதந்திரமாக சுவாசிக்க முடியும்” என்ற பில்கிஸ் பானுவின் வார்த்தைகள் இனி என்றென்றும் மக்களுடைய காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும்.
விரக்தியும் இருளும் மண்டிக்கிடக்கிற சூழலில் - நம்பிக்கையும் ஒளியும் தெரிகிறது!
தொடர்புடைய கட்டுரைகள்
இந்திய அறத்தின் இரு முகங்கள்
அச்சமின்றி வாழ்வதற்கான உரிமை எங்கே?
தமிழில்: வ.ரங்காசாரி
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.