என்னுடைய தம்பி சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்து, பார்க்கச் சென்றேன். அங்கு கிடைத்த அனுபவங்களை இங்கே எழுதுவது அவசியம் ஆகிறது. ஏனென்றால், தென்னிந்தியாவின் பெரிய மருத்துவமனை, நூற்றாண்டு பழமை மிக்கது என்ற பெருமைகள் எல்லாம் ‘ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை’க்கு உண்டு. அங்கேயே இதுதான் நிலைமை என்றால், உள்ளூர் மருத்துமனைகளின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை சிந்திப்பது அவசியம் ஆகிறது.
ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளைப் போலவே பத்திரிகையாளர்களுக்கும்கூட இப்போது அரசு மருத்துவமனைகள் அந்நியமாகிவிட்டன இல்லையா? கரோனா காலகட்டத்தில் எல்லோரும் அரசு மருத்துமனைகள் புகழ் பாடினாலும், கஷ்டம் தீர்ந்தால், தூரம் விலகு என்பதுதானே மனித இயல்பாக இருக்கிறது! அதனால்தான் எப்போதாவது செல்லும் என்னைப் போன்றோர் இதைப் பற்றி எழுதுவது மிகவும் அவசியமானது ஆகிறது.
ஆரம்பித்தது வரவேற்பு
சென்னைப் புறநகர் மின் ரயில் நிலையப் பொதுக் கழிப்பறைக்குச் சென்றபோது அனுபவங்கள் ஆரம்பித்துவிட்டன. மதியம் 3 மணி. காசு கொடுக்காமல் யாரும் போகக் கூடாது என்று நடுத்தர வயதுப் பெண்மணி கையை நீட்டித் தடுத்தார். அவருடன் இருந்த ஆண், அதேபோல பெண்களைத் தடுத்து காசு கேட்டுக்கொண்டிருந்தார். வந்து தருகிறோம் என்று சொன்னவர்களிடம், 'தந்துவிட்டுப் போ' என்று கண்டிப்புடன் கூறினார்.
அவர்களிடம் இரண்டு ரூபாயைக் கொடுத்துவிட்டு சென்றபோது வழக்கம்போலவே மூத்திர நாற்றம் மூக்கை நசுக்கியது. ஒரு பேசினிலும் குழாய் இணைப்பு சரியாக இல்லாமல் தண்ணீர் வெளியேறிக்கொண்டிருந்தது. நிற்குமிடம் வழுவழுப்பாக அச்சமூட்டும் விதத்தில் இருந்தது. வந்தவர்கள் அனைவருமே சீக்கிரம் வெளியேறிவிட வேண்டும் என்ற அவசரத்தில், மேலும் அதை மோசமாக்கும் வண்ணம் பக்கவாட்டுச் சுவர், நிற்குமிடம் என்று எல்லா இடங்களிலும் சிறுநீர் கழித்தபடி நின்றனர்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நரம்பியல் பிரிவில் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்த, தம்பியைப் பார்த்துவிட்டு கழிப்பறை எங்கே என்று கேட்டுச் சென்ற எனக்கு ரயில் நிலையத்தைக் காட்டிலும் அதிர்ச்சி. புறநகர் மின்சார ரயில் நிலையக் கழிப்பறையைவிட மோசமான நிலையில் இருந்தது மருத்துவமனைக் கழிப்பறை.
பராமரிப்புக்கு ஆள்கள் எவரும் இல்லை. கழிப்பறைக்குள் குப்பைகளும், குடித்துவிட்டு போடப்பட்ட பாட்டில்களும், சளிக்கோழையும், புகையிலையோடு குதப்பட்ட எச்சில் துப்பல்களுமாக இருந்தன. மூத்திர நாற்றம் குமட்டியது. லட்சக்கணக்கான புறநகர் பயணிகள் வந்து போகும் ரயில் நிலையத்தைவிட, அரசு பொது மருத்துவமனைக் கழிப்பிடம் நாறியது.
அருகிலேயே ‘டூ பாத்ரூம்’ போவதற்கான அறையின் மரக்கதவைப் பெயர்த்து, குறுக்காக வைத்திருந்தார்கள். அங்கே இரண்டு அறைகள்தான் இருந்தன. கை கழுவத் தண்ணீரோ, டப்பாவோ இல்லை. ஆனால், எங்கோ தண்ணீர் ஒழுகும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆண்டுக்கொருமுறை யாரையாவது பார்ப்பதற்காக இப்படி அரசுப் பொது மருத்துவமனைக்குச் செல்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட வார்டுகளில் நிலைமை நன்றாகவே மேம்பட்டுவருகிறது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். கழிப்பறைகளில் மட்டும் எந்த மேம்பாடும் தெரிவதில்லை. மருத்துவமனையைப் பயன்படுத்தும் மக்களுக்கும் இதில் முக்கியமான பங்குண்டு.
கழிப்பறை உள்பட அனைத்து இடங்களையும் அன்றாடம் மேஸ்திரி அல்லது கண்காணிப்பாளர் பார்க்கிறாரா, அப்படியென்றால் விடுமுறை நாளான அன்று மட்டும் படுமோசமான நிலைக்கு கழிப்பறை சென்றுவிட்டதா என்று ஏதும் புரியவில்லை. வாயில் துணி கட்டுங்கள், கைகளில் சோப்பு போட்டு கழுவுங்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்று ஓயாமல் அறிவுறுத்தும் ஓர் அரசு மருத்துவமனையை இப்படி வைத்திருப்பதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. மருத்துவர்கள், செவிலியர்களுக்கான கழிப்பறைகளாவது ஒழுங்காகப் பராமரிக்கப்படுமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை. அப்படி அவை முறையாகப் பராமரிக்கப்பட்டால், நோயாளிகள் எக்கேடும் கெட்டு ஒழியட்டும் என்று விட்டுவிடுகிறார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
கொசுக்களும் நாய்களும்
நேரம் ஆக ஆக, மருத்துவமனையின் மொத்த சூழலுமே மேலும் மாறலானது. மாலை 5 மணிக்குப் பிறகு, ஒவ்வொருவர் தலை மீதும் வேகமாக சுழலும் ஜடாமுடியைப் போல ஒன்றரை அடி உயரத்துக்கு கொசுக்கள் சுற்ற ஆரம்பித்தன. உட்கார்ந்திருக்கவே அச்சமாக இருந்தது. நோயாளிகளின் உதவிக்காக இரவில் அங்கேயே தங்கும் உறவினர்கள், நண்பர்கள் முகங்களில் கவலையே படர்ந்திருந்தது. இரவு இந்த கொசுக்கடியில் - மழைச் சாரலில் எங்கே படுப்பது, எப்படி நேரத்தைக் கடத்துவது என்பதே அவர்களுடைய சிந்தனையாக இருந்தது. விடிய விடிய தூங்க முடியாமல் இருப்பவர்கள் அநேகம்.
நடுத்தர வர்க்கத்திலேயே கீழ் நிலையில் இருப்பவர்கள்கூட, இப்போது மின்விசிறி இல்லாமல் வீடுகளில் தூங்குவதில்லை. நோயாளிகளுடன் வருகிறவர்கள் இரவு சிறிது நேரமாவது தொடர்ந்து தூங்கவும், குளியல் உள்ளிட்டவற்றை சுகாதாரமாக மேற்கொள்ளவும் கட்டணக் குளியலறை, கழிப்பறைகளை அரசு ஏற்படுத்தினால்கூட நல்லது. கட்டணம் இல்லை என்ற பெயரில் இது பெரிய சித்திரவதை இல்லையா?
இதற்கே அசந்துவிட்டால் எப்படி என்று கேட்பதுபோல, இரவு 7 மணிக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசம் ஆனது. நாய்கள் குரைக்கும் ஓசையும் ஒன்றையொன்று வேகமாகத் துரத்தும் காட்சியும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. ஒரு வார்டு நாய், இன்னொரு வார்டுக்குள் நுழைந்ததால் அந்த வார்டின் நாய் விரட்டுகிறது. இடமே ரணகளமாகிவிடுகிறது.
சென்னை அரசுப் பொது மருத்துவமனை மட்டுமல்ல – பிற ஊர்களிலும் அரசு பொது மருத்துவமனைகளில் இக்குறைபாடுகள் நிச்சயம் இருக்கும் என்றே தோன்றுகிறது.
அமைச்சர் ஆய்வுசெய்யலாம்
தமிழ்நாட்டுக்கு இப்போது துடிப்பான ஒரு சுகாதாரத் துறை அமைச்சர் கிடைத்திருக்கிறார். மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வுகளை மருத்துவமனைளில் நடத்தலாம். அதேபோல மருத்துவக் கல்லூரி முதன்மையர்கள், தலைமை நிர்வாகிகளை வாரத்தில் ஒரு நாள் இரவில் அரசுப் பொது மருத்துவமனைகளில் ஆய்வு நடத்த உத்தரவிடலாம். அங்கு வருவோர் படும் இன்னல்களை அவர்களையே உலுக்கிவிடும்.
நோயாளிகளுக்குச் சிகிச்சை தருவதுடன் நோய் பரவாமல் தடுப்பதும் சுகாதாரத்துறையின் பணி. நோயாளிகளுக்கு உதவுவதற்காக வருவோர், நோய்த் தொற்றுக்கு ஆளாகாமல் காக்க வேண்டியது மருத்துவமனை நிர்வாகத்தின் கடமை. நோயாளிகள் எளிதில் கிருமிகளின் தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தை எதிர்கொள்பவர்கள். நோயாளிகளின் அருகில் இருப்பவர்கள் நோயாளிகளுக்கு எதையும் தொற்றிவிடும் அபாயத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், மருத்துவமனைகளில் சுத்தம் மிக மிக முக்கியமானது. கூடவே நோயாளிகளுடன் தங்குவோரின் பாதுகாப்பும் அவசியமானது.
இது பெரிய காரியம் ஒன்றும் இல்லை. எவ்வளவு சிறிய - மோசமான தனியார் மருத்துவமனைளிலும் இந்த நிலைமையை வெற்றிகரமாகக் கடக்கத்தானே செய்கிறார்கள்? அரசு பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்!
என் துயரத்தையும் பகிர வேண்டுமே, இந்தச் சித்திரவதைகளையெல்லாம் அனுபவித்தபடி என் தம்பி, மீளாத்தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்!







பின்னூட்டம் (6)
Login / Create an account to add a comment / reply.
S SANKARANARAYANAN 3 years ago
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகை நேரம் என்பது உறுதியற்றதாகவே உள்ளது குறிப்பாக கிராமப்புற மருத்துவமனைகளில் இது மிகவும் மோசமாக உள்ளது. அரசு மருத்துவர்கள் சொந்தமாக மருத்துவமனைகள் நடத்துவது குறித்து உள்ள சட்டங்கள் எவ்வாறு பயனற்றுப் போயுள்ளது என்பதை நாம் அறிவோம்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
rmo 1,2 3 years ago
திரு வ ரங்காச்சாரி அவர்களுக்கு வணக்கம். ‘ மழை நாளில் மருத்துவமனை சித்திரவதைகள் ‘ என்ற தலைப்பில் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் கிடைக்கப்பெற்றேன். முதலில், உங்கள் சகோதரரின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சஞ்சலமடைந்த மனநிலையில் தாங்கள் தெரிவித்துள்ள புகார்களுக்கு , மருத்துவமனையின் முதல்வர் என்ற முறையில், அவசியமான சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன் . ‘தூய்மையே இறைமை’ என்ற மனோபாவத்துடன் நானும் என் குழுவினரும் , இம்மருத்துவமனையின் தூய்மையைப் பேண பற்பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பரந்து விரிந்துள்ள இம்மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதியையும் தினந்தோறும் நானே நேரில் சென்று ஆய்வு செய்வது என் அன்றாடப்பணிகளில் மிக முக்கியமான ஒன்று. தாங்கள் குறிப்பிட்டுள்ள கழிப்பறையும் என் நேரடி ஆய்வில் தினந்தோறும் இடம்பெறும் ஒன்று தான் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். அக்கழிப்பறையை அடிக்கடி சுத்தம் செய்ய பிரத்தியேகமாக தூய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கழிப்பறையின் வெளிப்புறச் சுவரில், முகம் பார்க்கும் கண்ணாடியைப் பொருத்தியதும் , பல் துலக்க ஏதுவாக இரண்டு wash basins பொருத்தியதும் சமீபத்தில் நிகழ்ந்த ஏற்பாடுகள். பின் ஏன் இந்தக் குறைபாடுகள் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இம்மருத்துவமனக்கு நாள்தோறும் 10,000 - 15,000 நபர்கள் வருகிறார்கள். இந்த எண்ணிக்கை, நகரின் ஆகப்பெரிய தனியார் மருத்துவமனைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பற்பல மடங்கு அதிகம். மருத்துவமனைக்கு அன்றாடம் வரும் நபர்கள் பற்பல வகையினர். அவர்களில் பெரும்பாலோர் பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை விதிகளைக்கூட அறவே பின்பற்றாதவர்கள் என்பது வேதனையும் விரக்தியும் தரும் அப்பட்டமான உண்மை. அறியாமையால் அசுத்தம் செய்பவர் சிலர்; அலட்சியத்தால் தவறிழைப்பவர் சிலர்; ஆணவத்தால் விதி மீறுபவர் சிலர் (?பலர்). மருத்துவமனை வளாகத்தில் புகை பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளதால், கழிப்பறையை ,புகைப்பிடிக்கும் இடமாகப் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. அதை விடக்கொடுமை மதுபாட்டல்களை கழிப்பறையில் வீசிச்செல்லும் அநீதி. தவறிழைக்கும் நபர்களிடம் அவர்களது தவறைச் சுட்டும் போது எங்கள் பணியாளர்கள் எதிர்கொள்ளும் எதிர்வினைகள் , பெரும்பாலும் மிக்க வருத்தத்தையும் மனச்சோர்வையும் ஒருங்கே தருவதாகவே இருக்கின்றன. பொதுநலன் கருதி அளிக்கப்படும் அறிவுறுத்தல்களை , தம் மீது ஏவப்பட்ட தனிநபர் விமர்சனங்களாகக்கருதும் அவலமான மனப்பாங்கு பரவலாக உள்ளது. அநாகரிகமான பேச்சுக்களையும் நியாயமற்ற ஏச்சுக்களையும் கேட்டுக்கேட்டு எங்கள் ஊழியர்கள் பரிதவித்துப்போவது நிஜம். ( இன்று மதியம் நான் ஆய்வு மேற்கொண்டபோது கூட, ஒரு நபர், பீடித்துண்டை உள்ளே வீசிவிட்டு, தள்ளாடியபடியே வெளியில் வந்ததை எதிர்கொண்டேன்) நீங்கள் குறிப்பிட்டுள்ள உடைந்த கதவு , ஒரு தன்னிலை மறந்த பயனாளியின் அராஜகச்செயலின் விளைவு தான். கொசுக்கள் பெருக்கத்தைக் குறைக்க , கொசு மருந்துப் புகைத்தெளிப்பை அன்றாடம் மேற்கொள்கிறோம். அதில் மேலும் அதிக கவனம் செலுத்துவோம். நாய்களை அப்புறப்படுத்த ஏற்கெனவே முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். ஆனால், தற்போதைய வழிகாட்டுதல்களின்படி , நாய்களைப் பிடித்துக்கொண்டு போய், கருத்தடை செய்து திரும்பவும் கொண்டு வந்து விட்டுச்செல்கிறார்கள். திரும்பவும் நாய்களை அகற்ற முயற்சி மேற்கொள்வோம். நோயாளிகளின் உடன்வருவோரின் நலன் காத்தல் மருத்துவமனை நிர்வாகத்தின் கடமை என்ற தங்களின் கருத்து ஏற்புடையதே. இம்மருத்துவமனையில் 2,000 — 3,000 உள்நோயாளிகள் உள்ளனர். அனைத்து நோயாளிகளுக்கும் (உடன் இருக்கத்தேவையே இல்லாத மிதமான பாதிப்புடன் உள்ள நோயாளிகள் உட்பட) குறைந்தது ஒரு நபராவது உடன் உள்ளார். ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உடன் இருப்பவர்களுக்கு வசதிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவால் என்பதை உணர்த்த விரும்புகிறேன் . மருத்துவமனையின் அனைத்து வராண்டாக்களிலும், அடுக்குக்கட்டட வளாகங்களில் உள்ள காத்திருப்போர் அரங்கங்களிலும் மற்றும் வெளிப்புறப் பாதை ஓரங்களிலும் , உடன் வருவோர்க்காக வரிசை நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. முப்பத்தைந்து இடங்களில், உடன் வருவோருக்காகவென்றே அனைத்து வசதிகளுடன் ( மேசை, நாற்காலி, மின்விசிறி, தூய்மையான குடிநீர், கை கழுவ வாஷ் பேசின்) கூடிய மிகத்தூய்மையான உண்ணும் அறைகள் சமீபத்தில் அமைக்கப்பட்டு அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்த பாராட்டுதல்கள் கிடைக்கப்பெற்றோம். பயனாளிகளின் கருத்துகளையும் குறைகளையும் தெரிந்து கொள்ள 25 இடங்களில் புகார்/ ஆலோசனைப் பெட்டிகள் வைத்துள்ளோம். பெறப்படும் குறைகளை உடனடியாகத்தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை அனைத்தும் நோயாளிகள் மற்றும் உடன் வருவோரின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட செயல்கள். இம்மருத்துவமனை யாருக்கும் அந்நியப்பட்டு விடவில்லை. சமூகத்தின் அனைத்துத்தரப்பினரும் நம்பிக்கையுடன் நாடிவரும் மருத்துவமனையாகவே திகழ்கிறது. தாங்கள் சுட்டிக்காட்டிய குறைகளில் நியாயம் இருந்தாலும் , அக்குறைகளை, ஆகப்பெரிய இம்மருத்துவமனையின் மொத்தச்செயல்பாடுகளின் பிரதிபலிப்பாகச் சித்தரிப்பது ஆழ்ந்த வருத்தத்தையும் மனச்சோர்வையும் அளிக்கிறது. கழிப்பறை நிலவரம் குறித்தான எனது கருத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் . தனி நபர் ஒழுக்கம், தனி மனித உரிமை குறித்தசரியான புரிதல், பொது இடங்களில் விதிகளை மீறாத தன்மை போன்ற விழுமியங்களை ஊட்டுவதும் வளப்படுத்துவதும் தான் இதற்கான நிலையான தீர்வு. அந்த இலக்கை அடைய ஒட்டு மொத்த சமுதாயமும் முனைப்புடன் முயல வேண்டும். நன்றி. வணக்கம். Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
Reply 11 1
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 3 years ago
கட்டுரையாளரின் துயரத்தோடு கரம் கோர்க்கிறேன். வாசிக்கையிலேயே பரிதாபமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது, கழிவறைப் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தால் வீச்சு வேறுமாதிரி இருந்திருக்கும். சில நேரங்களில் புகைப்படங்கள் தரும் செய்தியின் வீச்சை நீங்கள் அறியாதவர்களல்ல. அதே நேரத்தில் களச்செய்தியாளர்கள் இல்லாத அருஞ்சொல்லின் நிலையையும், கட்டுரையாசிரியரின் நிலையையும் புரிந்துகொள்ள முடிகிறது.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
Purusothaman.R 3 years ago
நான்கு வாருடகள் முன்பு நான் kmc மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். நானும் அந்த கடினமான அனுபவம் petrean
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Sujatha Ramakrishnan 3 years ago
பல்லாயிரக்கணக்கான மக்கள் நடமாடும் அரசு மருத்துவ மனைகளில் உள்ள பொது கழிப்பிடங்களை சுகதார முறையில் பராமரிக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. அத்துடன் அவ்விடங்களை சுத்தமாக உபயோகிப்பது எப்படி என்பதையும் மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும். கட்டணம் வசூலிப்பது மட்டும் தீர்வல்ல, சில விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். உங்கள் குரல் இந்த சமூகத்தின் குரல். நிச்சயம் அரசிற்கு கேட்கும்.
Reply 9 0
Login / Create an account to add a comment / reply.
Melkizedek 3 years ago
முதன் முதலில் சொந்த காரணத்திற்காக மருத்துவமனை சென்று ஆய்வு செய்து கட்டுரை எழுதிய எழுத்தாளருக்கு நன்றி... இது மாதிரி ராணுவ பாதுகாப்பு கொண்ட ஊடகவியலாளர்கள் நுழைய முடியாத இடங்கள் நிறைய இருக்கின்றன கொஞ்சம் எழுதுங்கள் நிச்சயம் மாறும்... துப்புரவு பணியாளர்களின் துயரம், நீதி மன்றங்களில் இருக்கும் அடிமைத்தனம், ஏழை விசாரணை கைதிகளால் நிரம்பிய சிறைசாலை,அரசு பொது பேருந்து பயணம்,மூன்றாம் வகுப்பு ரயில் பயணிகள் பெரும் இன்னல்கள், etc... இவை எல்லாம் மாற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஊடகவியலாளர்கள் அந்த இடங்களுக்கு பயணித்து எழுத வேண்டும்... அமைச்சர்கள் அல்லது மேட்டு குடியினர் செல்லும் இடங்களில் மட்டும் பயணித்து ஆகா ஓகோ என்று எழுதி பயன் ஒன்றுமில்லை... கட்டுரையாளருக்கு நன்றி 🙏🏻...
Reply 10 0
Login / Create an account to add a comment / reply.