கட்டுரை, அரசியல் 5 நிமிட வாசிப்பு

உருவாகிறார்களா எழுத்தாளப் பார்ப்பனர்கள்?

சீனிவாச ராமாநுஜம்
14 Mar 2023, 5:00 am
2

எழுத்தாளர் கோணங்கி மீதும் அவரோடு சம்பந்தப்பட்ட சில நாடகக் கலைஞர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு பக்கம், “கோணங்கி ஏன் இன்னும் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை?” என்று கேட்கும் அளவிற்குப் போகிறார்கள். மறுபக்கம், “எழுத்தாளர்கள் எப்போதும் தன்னை இழந்த நிலையில், பித்து நிலையில் இருப்பவர்கள்; ‘சாதாரண  மனிதர்’களை எடை போடுவதுபோல் எழுத்தாளர்களை, கலைஞர்களை எடை போடக் கூடாது” என்று சில எழுத்தாளர்கள் பேசுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் அனுபவத்தை முடிந்த மட்டும் தன்வயப்படுத்திக்கொள்ள முயற்சிக்காமல், அவர்களது அனுபவத்தைப் பொதுவில் வைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து சிந்திக்காமல், ‘பாதிக்கப்பட்டவர்கள் சட்டரீதியாக எதிர்கொள்ளட்டும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை; ஆனால் படைப்பாளியை நாம் கொன்றுவிடக் கூடாது’ என்ற வாதம் பலவிதமாக முன்வைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோணங்கியின் படைப்பு குறித்து ஏதும் கேள்வி எழுப்பவில்லை. கோணங்கி என்ற தனிமனிதர் குறித்துதான் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். கோணங்கி என்ற எழுத்தாளரும்  கோணங்கி என்ற தனிமனிதரும் ஒன்றா அல்லது வெவ்வேறானவர்களா?

எழுத்தாளர் யார்?

எழுத்தாளர் என்பவர் யார்? எழுத்தாளருக்கும் எழுத்தாளர் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்கும் ஒரு தனிமனிதருக்கும் இடையேயான உறவு என்ன? ஒரு தனிமனிதன் எப்போது எழுத்தாளனாகிறார்? ஓர் எழுத்தாளர் எல்லா நேரங்களிலும் எழுத்தாளராக இருக்க முடியுமா?

இந்தக் கேள்விகளை நாம் ஒரு புரிதலுக்காக எழுத்தாளர் என்ற அடையாளத்தை இங்கே அறிவியலாளர் என்ற அடையாளத்தைக் கொண்டு மாற்றி அணுகுவோம்.

ஒரு தனிமனிதர் அறிவியல் செய்யும்போது அறிவியலாளராக இருக்கிறார். அறிவியலாளர் ஒருவர் அறிவியல் கோட்பாடுகளோடும் கருத்தாக்கங்களோடும் கணிதவியல் மொழியில் உரையாடுகிறார். அதாவது கணிதமொழியின் இலக்கணத்திற்கு உட்பட்டு அதனுள் பயணிக்கிறார். ஆனால், கணித மொழியைக் கொண்டு அவரால் வாழ முடியாது. பிற மனிதர்களோடு உறவுக்கொள்ள முடியாது. அவர் இயற்கை மொழிகளுக்குள் (தமிழ், ஆங்கிலம் போன்றவை) வர வேண்டியுள்ளது.

ஆக, ஓர் அறிவியலாளர் அறிவியல் செய்யும்போது மட்டும்தான் அறிவியலாளராக இருக்க முடியும். பிற நேரங்களில் அவர் ‘சாதாரண மனிதர்’ போல்தான் வாழ்கிறார் என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது. சொல்லப்போனால், அறிவியல் அல்லாத விஷயங்களில் அறிவியலாளர் முட்டாளாகக்கூட இருக்கலாம்.

இப்போது ஒரு விண்வெளி ராக்கெட்டை வடிவமைத்து, அதனைக் கட்டும் அறிவியலாளர் அதை ஏவுவதற்கு முன் திருப்பதி கோயிலில் அந்த ராக்கெட் மாதிரியை வைத்துப் பிரார்த்திப்பதை எடுத்துக்காட்டாகக் கொள்வோம். ராக்கெட்டை வடிவமைக்கும்போதும், அதைக் கட்டும்போதும் அவர் அறிவியலாளராக இருக்கிறார். அதேசமயம், ராக்கெட்டை உருவாக்கி முடித்த பின் ‘சாதாரண  மனிதர்’கள் கொண்டிருக்கும் பதற்றங்களை எல்லாம் அவரும்  பெறுகிறார். பரீட்சை எழுதி முடித்த மாணவர் மாதிரி அவர் ஆகிவிடுகிறார்.

அறிவியலாளராக இருக்கும்போது அவர் எதிர்கொண்ட சவால்கள் கணிதரீதியானவை; அறிவியல்ரீதியானவை. பிந்தைய செயல்பாடு அப்படி இல்லை. இப்படித்தான் பல அறிவியலாளர்கள் அறிவியல் செய்யாதபோது பலவிதமான ‘மூட நம்பிக்கைகள்’ மத்தியில் வாழ்வதை நாம் புரிந்துகொள்கிறோம்.

எல்லோருக்கும் இது பொருந்துமா? 

இது எல்லா நிபுணத்துவத்திற்கும் பொருந்தும், இல்லையா? இப்படித்தான் ஒரு ஆசிரியர் பள்ளியில் அல்லது கல்லூரியில் இருக்கும்போதுதான் ஆசிரியராக இருக்கிறார்; பிற சமயங்களில் ‘சாதாரண மனிதர்’ ஆகிவிடுகிறார். அவர் ஒரு தந்தையாகவோ, கணவனாகவோ, சகோதரனாகவோ, சகோதரியாகவோ, அல்லது சினிமா பார்க்க வரிசையில் நிற்கும் மனிதராகவோ ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு சிக்கலை எதிர்கொள்கிறார். நிச்சயம் ஒருவர் 24 மணி நேரமும் அறிவியலாளராகவோ, ஆசிரியராகவோ இருக்க முடியாது என்பது தெளிவாகிவிடுகிறது.

இப்படித்தானே ஓர் எழுத்தாளரும் இருக்க முடியும்? 

எழுதும்போது ஒருவர் எழுத்தாளராக இருக்கிறார். எழுதும்போது அவரது மொழியை அவர் பின்தொடர்ந்து செல்கிறார். ஒரு எழுத்தாளரின் மொழி அவரை மொழியியலார்ந்த உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. பல சமயங்களில் தன்னை இழந்து, பிரக்ஞையற்று மொழி எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறதோ அங்கெல்லாம் பயணிக்கிறார். அதேசமயம், மொழியியலார்ந்த இந்த உலகம் மொழியின் சாத்தியப்பாட்டிற்குள்ளேயே இயங்குகிறது.

ஆக, எழுதும்போது எழுத்தாளராக இருக்கும் ஒருவர், எழுதாத தருணங்களில் ‘சாதாரண மனிதர்’ ஆகிவிடுகிறார். மொழி உலகிலிருந்து மெய்யான உலகில் சஞ்சரிப்பவராக இருக்கிறார். அப்படித்தானே?

இங்கே நாம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள முடியும்: ஒரு எழுத்தாளர் எழுதும்போதும் மொழி உலகத்திற்குப் பிரக்ஞையற்று மொழியைப் பின்தொடர்ந்து செல்வதுபோல், வேறு ஒரு மனிதர் யதார்த்த வாழ்க்கையில் பிரக்ஞையற்று வேறு ஏதோ ஒன்றைப்  பின்தொடர்ந்து செல்ல முடியும்தானே? மொழிக்குத் தன்னை ஓர் எழுத்தாளர் ஒப்புக்கொடுப்பதுபோல் வாழ்க்கையில் ஏதோ ஒன்றுக்கு – அது முறையற்றதாக இருந்தாலும்கூட – அவரும் தன்னை ஒப்புக்கொடுக்க முடியும்தானே?

இப்படியான செயல்பாடு வேறு மனிதர்களோடு தொடர்புடையதாக இருக்கும் என்றால், அதற்கான எதிர்வினையை நாம் எதிர்கொள்ளத்தானே வேண்டும்? உதாரணமாக, ‘பார்ப்பனர்கள், சூத்திரர்கள், தீண்டப்படாதவர்கள்’ என்றெல்லாம் மனிதர்களை வகைப்படுத்தும்போது அது அதற்கான எதிர்வினையை உள்ளார்ந்து கொண்டிருக்கிறது.

ஏன் இந்த எதிர்வினை?

ஏனென்றால், மனிதர்களை வகைப்படுத்துவது என்பது நாம் மனிதர்களோடு எப்படியான உறவைப் பேணப்போகிறோம் என்பதைச் சார்ந்திருக்கும் ஒன்றாகிறது.

மானுடச் செயல்கள் ஒவ்வொன்றும் அதற்கான எதிர்வினையைக் கொண்டிருக்கின்றன. அது இருக்கும் ஏதோ ஒன்றில் குறுக்கீடு செய்கிறது. இந்தச் செயல் ஊடாக நாம் நம்மை படைத்துக்கொள்கிறோம். மொழியிலான உலகத்தைப் படைப்பதும் ஒருவிதமான மானுடச் செயல்தான். இந்தச் செயலும் அதற்கான எதிர்வினையை அதற்குள்ளாகக் கொண்டிருக்கிறது. இது ஒரு மனிதனை எழுத்தாளனாகப் படைக்கிறது.

எழுத்தாளராகத்தான் மலம் கழிக்கிறாரா?

ஒரு ‘சாதாரண மனிதர்’ ஆக இருந்தாலும், எழுத்தாளராக இருந்தாலும் அவர்களுடைய செயல் என்பது இந்தச் சமூகத்தோடு, மனிதர்களோடு எப்படியான உறவைப் பேண விருபுகிறார் என்பதையே  சார்ந்திருக்கிறது. நம்முடைய எண்ணங்களை, தேவைகளை நாம் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தின் பகுதியாக்குவது என்பது நாம் நம்மை வரையறுத்துக்கொள்வதன் பகுதியாகிறது (எடுத்துக்காட்டு: பார்ப்பனர்); அல்லது நம்மேல் திணிக்கப்பட்ட ஒன்றிலிருந்து அதற்கு எதிர்வினையாற்றுவதாக இருக்கிறது (எடுத்துக்காட்டு: தலித்). 

சரி, ஒரு எழுத்தாளர் தன்னை முழுநேர எழுத்தாளராக வரையறுத்துக்கொள்வதால் அவர் ‘சாதாரண மனிதர்’களிடமிருந்து விலகியவரா? விழுமியங்களுக்கு அப்பாற்பட்டவரா? எழுதும்போது மொழிக்குக் கட்டுப்பட்டு இருப்பதுபோல், ஒரு எழுத்தாளர் எழுதாதபோது எதற்கு கட்டுப்பட்டவராக இருக்கிறார்? அதன் இலக்கணங்கள் என்ன? முழு நேர எழுத்தாளர் என்று சொல்வது பொருளாதார அடிப்படையிலானதே தவிர எழுதும் செயலோடு தொடர்புடையது அல்ல. ஒரு எழுத்தாளர் 24 மணி நேரமும் எழுத்தாளராக இருக்க முடியாது. மலம் கழிக்கும்போது எழுத்தாளராக மலம் கழிக்க முடியுமா?

இதற்கு நாம் பார்ப்பனர் என்ற கருத்தமை எடுத்துக்கொள்வோம். வேள்வி செய்யும்போது மட்டும்தான் ஒரு பார்ப்பனரானவர்   பார்ப்பனராக இருக்கிறார். மற்ற நேரங்களில் அவர் ‘சாதாரண மனிதர்’தான். ஆனால், வரலாற்றில் தங்களைத் தனித்துக் காட்டிக்கொள்ள கூடுதலாக சில வரையறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது.

ஆக, 24 மணி நேரமும் பார்ப்பனராக இருப்பதற்கான இலக்கணங்களைப் பார்ப்பனர்கள் உருவாக்க வேண்டியிருந்தது. உடலுறவு கொண்ட பின் ஆண் குறியை எவ்வாறு கழுவுவது, சிறுநீர் கழித்த பின் ஆண் குறியை எவ்வாறு கழுவுவது, மலம் கழிக்கச் செல்லும்போது பூணூலை எவ்வாறு மாட்டிக்கொள்வது என்றெல்லாம் விவரணைகள் உருவாக்கப்பட்டன. அதாவது, சாதாரணமாக நம் உடலைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைக்கூட சடங்காக விவரிக்கப்பட்டது. குண்டி கழுவுவது எப்படி என்பதற்கு மட்டும்தான் வரையறை இல்லாத குறை!

எனக்கு இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் இலக்கியத்தை ஒரு வேள்வியாக்கி, தங்களை எழுத்தாள பார்ப்பனர் ஆக்கிக்கொள்கிறார்களா என்ற கேள்வி இப்போது நடக்கும் கூத்துகளை எல்லாம் பார்க்கும்போது எழுகிறது. அதாவது, தங்களுடைய ஒவ்வொரு செயலையும் அவர்கள் செய்யும் இலக்கிய வேள்விகான சடங்காக தமிழ் எழுத்தாளர்கள் மாற்றுகிறார்களா? சக மனிதர்கள் இந்த வேள்விக்கான பொருளாகிறார்களா? 

பார்ப்பனர்களைப் போலவே எழுத்தாளர்கள் தங்களை கறைபடியாதவர்களாக வெளிப்படுத்திக்கொள்ள யத்தனிக்கிறார்கள். எல்லா மனிதர்களையும்போல் அவர்களும் கொண்டிருக்கும் அற்பத்தனங்களை, சயநலங்களை, ஊர்ப் பெருமையை, சாதிப் பெருமையை, குலப் பெருமையை, குடும்பப் பெருமையை, தன் பெருமையை எழுத்தாளர் என்ற முகமூடி கொண்டு மறைத்துக்கொள்ள முயலுகிறார்கள். வாசகர்களையும் மற்றவர்களையும் தேவைக்கு ஏற்றாற்போல் சூத்திரர்களாகவோ, தலித்துகளாகவோ நடத்துகிறார்கள். 

ஒரு தனிமனிதர் அவரையும் மீறி அத்துமீறுவார் என்றால், தவறிழைக்கிறார் என்றால் நாம் அவரது செயலை மானுட பலவீனத்தின் பகுதியாக ஏற்றுக்கொள்ளலாம். மனிதர்களின் தேவைகளை, பலவீனங்களை நாம் இயல்பானதாக எடுத்துக்கொள்ள முடியும். அப்படியென்றால், தன் செயலுக்கான எதிர்வினைகளை ஓர் எழுத்தாளர் ‘சாதாரண மனிதர்’ ஆக இருந்து எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் ‘எழுத்தாளர் - பார்ப்பனர்’களாகத் தங்களுடைய செயல்கள் எல்லாம் இலக்கிய வேள்விக்கான சடங்கு என்பதுபோல் உரிமை கோருவார்கள் என்றால், அது மிக ஆபத்தான பாதையாகிறது. 

எல்லாவற்றுக்கும் மேலாக, கோணங்கியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை இந்நாள் வரை தங்களுடையதாகப் பார்க்கத் தயங்கியிருக்கிறார்கள். தங்களுக்கு ஏற்பட்டதை, தங்கள் மீது திணிக்கப்பட்டதை, தங்களுடைய அனுபவமாகப் பார்க்க தீர்மானித்த இந்தத் தருணத்தில் அவர்கள் ‘ஆசிரியர்’களாக வெளிப்படுகிறார்கள். இதைதான் ‘எழுத்தாளர் – பார்ப்பனர்’களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

ஆக, பார்ப்பனரல்லாதவர்கள் எழுப்பும் கேள்விகளைப் பார்ப்பனர்கள் எப்படி எதிர்கொள்கிறார்களோ, தலித்துகள் எழுப்பும் கேள்விகளைத் தலித்தல்லாதவர்கள் எப்படி எதிர்க்கொள்கிறார்களோ அதுபோல்தான் சில எழுத்தாளர் பார்ப்பனர்கள் கோணங்கியால் பாதிக்கப்பட்டவர்கள் எழுப்பும் கேள்விகளை எதிர்கொள்கிறார்கள்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சீனிவாச ராமாநுஜம்

சீனிவாச ராமாநுஜம், சமூக அறிவியலாளர். மொழிபெயர்ப்பாளர். பிரச்சினைகளின் அடிவேர்களை நோக்கிச் செல்லும் எழுத்துகள் இவருடையவை. ‘சந்நியாசமும் தீண்டாமையும்’, ‘இந்து மதம்: ஒரு விசாரணை’, ‘தற்கொலைகளைக் கொண்டாடுவோம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். சாதத் ஹசன் மண்டோவினுடைய ‘மண்டோ படைப்புகள்’, டி.ஆர்.நாகராஜ் எழுதிய ‘தீப்பற்றிய பாதங்கள்’, சுந்தர் சருக்கை - கோபால் குரு இணைந்து எழுதிய ‘விரிசல் கண்ணாடி’ உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்தவர். தொடர்புக்கு: manuvibu.ram@gmail.com


4

2





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   2 years ago

ஒரு கற்பனைச் சமூகத்தை எடுத்துக்கொள்வோம். தாங்களே உண்மையான அறிவியலாளர்கள் என்று நம்புகிற சோதிடர்களும் அவர்களை வழிபடுகிற பெருந்திரளையும் கொண்ட சமூகம். உண்மையான அறிவியலாளர்கள் இளக்காரத்துக்குள்ளான குறுங்குழுவாக இருந்துவருகிறார்கள். அப்போது நாடறிந்த அறிவியலாளர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபடுகிறார். 'பார்த்தீர்களா, அதனால்தான் சொல்கிறோம், அந்த அறிவியலாளர்கள் பக்கமே தலைவைத்துப் படுக்காதீர்கள்' என்ற குரல் ஓங்கியெழுகிறது. இத்தகைய குரலுக்கு எதிரான கரிசனமே சில எழுத்தாளர்களின் எதிர்வினையில் வெளிப்பட்டதேயன்றி யாரும் கோணங்கியின் செயலை நியாயப்படுத்தியதாகத் தெரியவில்லை. நகைமுரணாக குருபீடங்களையும், குட்டிக்கடவுளர்களான எழுத்தாளர் வழிபாடுகளையும் மறுத்து அவற்றுக்கப்பால் செயல்பட்டவராக அறியப்பட்டவர் கோணங்கி. அவர் அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சி என்றால் அதெல்லாம் அபாண்டமான பழி என்று மறுத்தது பேரதிர்ச்சி. இந்நிகழ்வின் வெளிச்சத்தில் பொதுச்சமூகம் புரிந்துகொள்ள வேண்டியது 'இதுவெல்லாந்தான் அத்துமீறல், இதுவுந்தான் அதிகார துஷ்பிரயோகம்' என்பதைத்தான். வீட்டுக்கு வீடு வெளியே தெரியவராத பாலியல் குற்றவாளிகளைக் கொண்ட சமூகம் முன்னகரும் வழி அதுவே.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Anand   2 years ago

Brahmanargalai edhaavadhu oru vagayil vivaadhathil inaithaal dhaan tamilnaatil viyaabaram seyya mudiyum endra nilai endru dhaan maarumo ? Brahmanargalai parpaan endru vilikkum dairiyam , matra jadhigal peyarai solli koopida vakkillaamal maatru samoogam endru sollum bayandhaangolligal eppadi thangalai ezhuthaalar endru koori kollalaam ?

Reply 4 2

Login / Create an account to add a comment / reply.

கணினி அறிவியல் என் பள்ளி எனக்குக் கொடுத்த கொடைபழங்குடி இனங்கள்அஜீரணம்ஆளுநர்யேசு கிறிஸ்துஉயிர் காக்கும் ரத்த தானம்பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கு முன்னுரிமைமூன்றிலக்க சிவிவி எண்எம்.எஸ்.கோல்வால்கர்எம்பிபிஎஸ்ஆர்.எஸ்.எஸ்தசைநார் வலிக்குத் தீர்வு என்ன?காமெல் தாவுத்ராணுவம்ஆன்ட்ரோஜன் ஹார்மோன்மாநிலக் கட்சிகளின் செல்வாக்குப் பிரதேசங்கள்முன்விடுதலைபொருளாதாரப் பங்களிப்புஐன்ஸ்டைனை வென்றதற்காக நோபல் பெறுபவர்கள்அரசாங்கம்தனிப் பெரும் கட்சிwritersamasகல்லில் அடங்கா அழகுநீதிபதி எம்.எம்.பூஞ்சிகல்சுரல் காபிடல்மொழிபெயர்ப்புக் கலைஉடல் உறுப்பு தானத் திட்டம் சீரமைக்கப்படுமா?பாஜகவை வீழ்த்த கடுமையாக உழைக்க வேண்டும்: சமஸ் பேட்அருந்ததி ராய் ஆசாதிஆண் பெண் உறவுச்சிக்கல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!