கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவும்

பெருமாள்முருகன்
22 Apr 2023, 5:00 am
1

கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் பெரும்பாலும் கிராமப்புற அரசுக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளேன். ஒவ்வோர் ஆண்டும் மாணவர் சேர்க்கையில் ஏதோ ஒருவகையில் பங்கேற்பது என் வழக்கம். அரசு கல்லூரியில் சேர வரும் 99 விழுக்காட்டினர் முதல் தலைமுறையாக உயர்கல்விக்கு வருபவர்கள்தான். 100 விழுக்காட்டினர் என்று சொல்லவே எண்ணம். என் கண்ணுக்குத் தப்பி ஒருவேளை இருக்கலாம் என்னும் வாய்ப்பு கருதியே ஒரு விழுக்காட்டை விடுகிறேன். இந்தக் (2022-2023) கல்வியாண்டு வரைக்கும் இந்த நிலைதான்.

இவ்வாறு வரும் மாணவர்களைப் பாடப் புத்தகம் வாங்க வைக்கவே பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும். கையில் பணம் இருந்தாலும் அவர்களின் செலவுப் பட்டியலில் கடைசி இடத்தில்கூடப் ‘புத்தகம் வாங்குதல்’ இருக்காது. ஒரு புத்தகத்தை வாங்கிவிட்டால் பெரிய தியாகம் செய்த உணர்வுநிலைக்கு ஆளாவார்கள். பாடப் புத்தகம் வாங்குவதிலேயே இப்படித்தான் என்றால் புத்தகம் வாசித்தல், சேகரித்தல், பாதுகாத்தல் ஆகியவற்றை அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பது சாதாரணமல்ல. 

தீ பற்றிய சுவடிகள்

புத்தகம், வாசிப்பு பற்றிப் பெரும்பான்மையான மக்களிடம் ஒருவித அச்சம் நிலவிவருகிறது. புத்தகத்தைப் புனிதப் பொருளாகக் கருதுகிறார்கள். ஒரு துண்டுத்தாள் காலில் பட்டுவிட்டால் உடனே தொட்டுக் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் வழக்கம் உண்டு. எந்தப் பொருளை வேண்டுமானாலும் கீழே போடலாம். துண்டுக் காகிதத்தையும் கீழே போட அனுமதிக்க மாட்டார்கள். காகிதங்களைக் கூரையில் செருகிவைத்திருந்து தீ பற்ற வைக்கப் பயன்படுத்தும் நடைமுறை கிராமங்களில் இப்போதும் உண்டு. புனிதப் பொருள்களைத் தீயில் எரிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறை. ஆம்! புனிதப் பொருள்களைத் தீ மூலமாகக் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட வேண்டும். ஓலைச்சுவடிகளை அவ்வாறு தீயில் எரித்த சம்பவங்கள் உள்ளன. 

‘கரிவலம் வந்த நல்லூர்’ என்னும் ஊருக்கு ஏடு தேடப் போன உ.வே.சாமிநாதையர் அங்குள்ள பால்வண்ண நாதர் சந்நிதிக்குச் சென்று வழிபட்டார். அக்கோயிலில் சுவடிகளைப் பாதுகாத்து வைத்திருந்தனர் என்னும் செய்தியை ஏற்கெனவே அவர் கேள்விப்பட்டிருந்தார். அவற்றைப் பற்றி உரியவர்களிடம் விசாரித்தார். ஒருவர் சொன்னார், “பழைய ஏடுகளைக் கண்ட கண்ட இடங்களிலே போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம்; இங்கே அப்படித்தான் செய்தார்கள்.” (என் சரித்திரம், ப.707) குழி வெட்டித் தீ வளர்த்து நெய்யில் தோய்த்துச் சுவடிகளை எல்லாம் ஆகுதி செய்வதுதான் ஆகமங்கள் சொன்ன வழிமுறை என்றும் அப்படியே செய்தோம் என்றும் அச்சம்பவத்தை அவர் விவரித்தார். அதைக் கேட்ட உ.வே.சாமிநாதையருக்கு கோபம் கோபமாக வந்தது. “இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்” (என் சரித்திரம், ப.708) என்று சொல்கிறார்.    

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

உவேசாவை ஒதுக்கலாமா?

பெருமாள்முருகன் 19 Feb 2022

ஏடுகளைத் தீயில் எரிக்கும் எண்ணம் எவ்வாறு வந்திருக்கும்? அதற்கும் உ.வே.சா.வே பதில் சொல்கிறார். “பழங்காலத்திற் பழைய சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தாற் புதிய பிரதி பண்ணிக்கொண்டு பழம் பிரதிகளை ஆகுதி செய்வது வழக்கம். புதுப்பிரதி இருத்தலினால் பழம் பிரதி போவதில் நஷ்டம் ஒன்றும் இராது. பிற்காலத்து மேதாவிகள் பிரதி செய்வதை மறந்துவிட்டுச் சுவடிகளை தீக்கு இரையாக்கும் பாதகச் செயலைச் செய்தார்கள், என்ன பேதைமை!” (என் சரித்திரம், ப.708). இந்தப் பேதைமையான வழக்கம் இன்றும் மக்களிடம் இருக்கிறது. 

ஓலைச்சுவடிகளின் காலம் முடிந்துபோய்க் காகிதங்களின் பயன்பாடு பெருகியிருக்கும் இந்நாளில் நெய் தோய்த்து ஆகுதி செய்யவில்லை என்றாலும் தீயில் எரிப்பது நல்லது என்னும் எண்ணம் மக்களிடம் நிலவிவருகிறது. பாலிதீன் பைகளின் வரவுக்குப் பிறகு காகிதத்தின் மீதான புனித மதிப்பு குறைந்துபோய்விட்டது. என்றாலும் இப்போதும் நகரங்களில்கூடக் காகிதங்களைக் குப்பையில் போடக் கூடாது என்று கருதுவோர் உள்ளனர். எடைக்குப் போட இயலாத காகிதங்களைச் சேர்த்து வைத்துத் தீயில் எரிக்கின்றனர்.

அச்சமூட்டுகிறதா எழுத்து வடிவம்?

தீயில் எரித்தது போலவே ஆடி மாத ஆற்று வெள்ளத்தில் விடுவதும் நடந்திருக்கிறது. திருநெல்வேலியில் ஏடு தேடிப் போனபோது ஒருவர் வீட்டில் இருந்த சுவடிகளை எல்லாம் ஆற்றில் விட்ட செய்தியை அவர் சொல்கிறார். இத்தனைக்கும் அந்தக் காலத்தில் நன்கு கற்று வழக்கறிஞராக இருந்தவர் அவர். “இடத்தை அடைத்துக்கொண்டு யாருக்கும் பிரயோசனமில்லாமல் இருந்த அவற்றை என்ன செய்வதென்று யோசித்தேன். அவற்றில் என்ன இருக்கிறதென்று பார்ப்பதற்கோ எனக்குத் திறமை இல்லை. அழகான அச்சுப் புத்தகங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் இந்தக் குப்பையைச் சுமந்துகொண்டிருப்பதில் என்ன பயனென்று எண்ணினேன். ஆற்றிலே போட்டுவிடலாமென்றும் ஆடி பதினெட்டில் சுவடிகளைத் தேர் போலக் கட்டி விடுவது சம்பிரதாயமென்றும் சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடிமாதம் பதினெட்டாந்தேதி வாய்க்காலில் விட்டுவிட்டேன்” (என் சரித்திரம், ப.712) என்று அவர் சொல்கிறார். குப்பையானாலும் புனிதப் பொருளைச் சும்மா தூக்கியெறிய முடியாதல்லவா? 

பொதுவாக ‘எழுத்து’ வடிவமே மக்களுக்கு அச்சம் தருகிறது. பல வீடுகளில் சோதிடச் சுவடிகளோ வாகடச் சுவடிகளோ இருப்பதுண்டு. அவை ஏதோ அமானுஷ்யம் கொண்டவை எனக் கருதிப் பிரித்துப் பார்க்கவே பயப்படுவர். சோதிடம் பார்ப்போர் பலர் இன்றும் ஓலைச்சுவடி ஒன்றை வைத்துள்ளனர். அவற்றைப் பிரித்துப் பார்த்து எதையோ தேடிப் படிப்பதாகப் பாவனை செய்கின்றனர். எழுத்து கீறிய சுவடித்தாள், செப்புத் தகடு ஆகியவற்றுக்குச் செய்வினை மதிப்புண்டு. அவற்றைத் தொடவே பயப்படுவதும் அவற்றால் தீவினை வந்து சேரும் என அஞ்சுவதும் நம்பிக்கையாக இருக்கின்றன. 

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

ஜி.யு.போப்பின் நண்பர் உ.வே.சா.

பெருமாள்முருகன் 18 Feb 2023

இத்தகைய பின்னணியில் இருந்து வருவோருக்கு புத்தகம் மீதான அச்சமும் அசட்டையும் ஒருசேர ஏற்படுகின்றன. ஒன்றைப் புனிதம் என்று கருதினால் அதை உரிய வகையில் பேண வேண்டும். பேணுவதற்குரிய வசதி வாய்ப்புகள் தேவை. இல்லாதவர் அவற்றைத் தவிர்ப்பதே சரி. தவிர்ப்பு நாளடைவில் விலக்கலாகிவிடுகிறது. விலக்கலின் அடுத்த கட்டம் அப்பொருள் மீதான அசட்டை. பெருவாரியான மக்களின் வீடுகளுக்குப் புத்தகங்கள் சென்று சேராமல் இருப்பதற்கு இத்தகைய நடைமுறை வழக்கங்களும் மனோபாவங்களும் காரணமாக இருக்கின்றன. 

ஏட்டுக் கல்வியும் நடைமுறையும்

அறிவு பெறுதலுக்கும் புத்தகங்களுக்கும் உள்ள தொடர்பையும் நம் சமூகம் கருதிப் பார்த்ததில்லை. ஒவ்வொரு தொழிலும் சாதியோடு இணைந்த வாழ்முறையாக இருக்கிறது. தொழில் சார்ந்த அறிவை அன்றாட வாழ்முறை மூலமே அடுத்த தலைமுறை கற்றுக்கொள்கிறது. உடல் உழைப்பு சார்ந்த அனைத்துத் தொழில்களிலும் இதுதான் வழக்கம். 

ஒருவரின் சிறுவயதிலிருந்து பெற்றோருடன் சிறுசிறு வேலைகளில் ஈடுபடுவதன் வழியாகவே கற்றல் நிகழ்கிறது. பள்ளிகள் பெருகிப் பிள்ளைகள் கற்க வந்த பின்னரும் காலையும் மாலையும் விடுமுறை நாட்களிலும் குலத்தொழில் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே கல்வி பெற்றவர்களின் கதைகள் பல. 

புத்தகம் மூலமாக ஒரு துறை அறிவைப் பெற முடியும் என்பதை நம் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்னும் பழமொழியே சான்று. ஏட்டுக் கல்வி பயின்றால் அதைக் கொண்டு வாழ முடியாது என்பது அதன் உட்பொருள். “படிச்சு கலெக்டரா ஆகப் போற?” என்னும் கேள்வியை இருபதாம் நூற்றாண்டில் எதிர்கொள்ளாத மாணவர்கள் இருக்க மாட்டார்கள். 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

தனிப்பாடல் எனும் தூண்டில் புழு

பெருமாள்முருகன் 04 Mar 2023

படித்துக் கலெக்டராகலாம் என்னும் நம்பிக்கை வர எத்தனையோ தடைகளைக் கடந்துவர நேர்ந்திருக்கிறது. நமது கல்விமுறையில் ஏட்டுக் கல்விக்கும் நடைமுறைக்கும் பெரிய இடைவெளி இருப்பதன் காரணத்தையும் இந்தப் பின்னணியைக் கொண்டு பார்க்கலாம். 

புத்தகம் எனும் கருவி!

நம் சமூகம் புத்தகத்தை அறிவுக்கான கருவியாகப் பார்ப்பதில்லை. உடல் உழைப்புக்கு உறுப்புகள் கருவியாகின்றன. அவை மட்டும் போதாது. கூடுதல் கருவிகள் வேண்டும். உழவுத் தொழில் செய்வோருக்கு மண்வெட்டி, களைக்கொத்து, கலப்பை உள்ளிட்ட எத்தனையோ கருவிகள் தேவை. அதைப் போல மூளை உழைப்பு சார்ந்த வேலைகளுக்குப் புத்தகம் என்னும் கருவி அவசியம். மூளை உழைப்பு நமக்கானதல்ல என்று கருதியோர் புத்தகத்தைக் கருவி எப்படிக் காண்பர்? உடல் உழைப்பு சார்ந்தவற்றையும் புத்தகங்கள் மூலமாகக் கற்றுக்கொள்ள முடியும் என்னும் பார்வை இன்னும் மிகவில்லை. தொழிற்கல்வி வாய்ப்புகள் கூடிவிட்ட போதிலும் அவற்றைக் கற்ற பிறகு உடல் உழைப்பில் ஈடுபடுவதை யாரும் விரும்புவதில்லை. ஏட்டுக் கல்விக்கும் நடைமுறைக்கும் இருக்கும் இடைவெளி வெகுதூரம்.

அதிகம் படித்தால் மூளை குழம்பிவிடும், எந்நேரமும் படித்துக்கொண்டிருப்பவர் பைத்தியமாகிவிடுவார் என்னும் நம்பிக்கைகளும் உள்ளன. அதனால்தான் கல்வியின் மூலமாக நலன்களைப் பெற்ற நடுத்தர வர்க்கத்தினரிடமே புத்தகம் வாங்குதலை வெட்டிச் செலவாகக் காணும் பார்வை இருக்கிறது. இன்றைய கல்வி வாய்ப்புகளின் வாயிலாகப் பாடப் புத்தகங்களை மட்டும் படிக்கலாம் என்னும் அளவுக்குப் பார்வை வளர்ந்திருக்கிறது. வேறு புத்தகங்களை வாங்கும் வழக்கம் இல்லை. பெரும்பாலான வீடுகளில் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்களே இருப்பதில்லை. அவற்றிலும் ஓராண்டு படிப்பு முடிந்ததும் அப்பாட நூல்களை உடனே எடைக்குப் போட்டுவிடுவார்கள். 

சில ஆண்டுகள் பயன்படும் பாத்திரம், பல ஆண்டுகள் பயன்படும் பாத்திரம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கும் நாம் புத்தகங்களின் பயன்பாடு பற்றிக் கருதுவதேயில்லை. அவற்றை வகை பிரித்துப் பார்ப்பதும் இல்லை. குறிப்பாக இலக்கிய நூல்களுக்கு வீடுகளில் எந்த மதிப்புமில்லை. ‘கதைப் புத்தகம்’ என்னும் பெயரில்தான் குறிப்பிட்டுச் சொல்வர். கதைப் புத்தகம் படிப்பதை ஊக்குவிப்பதில்லை. கதைப் புத்தகம் படித்தால் கெட்டுப்போய்விடுவர் என்றே கருதினர். சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, கற்றுத் தேர்ந்த பண்டிதர்களுக்கே அந்த மனநிலை இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் நாவல்கள் பெருகிவந்தபோது அவற்றை வாசிப்பதைக் கண்டித்துப் பலரும் எழுதியுள்ளனர்.  ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘நாவலும் வாசிப்பும்’ என்னும் நூல் இதைப் பற்றி விரிவான தகவல்களைத் தருகிறது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ராமாயணம் இலக்கியமா; புனித நூலா?

பெருமாள்முருகன் 18 Mar 2023

21ஆம் நூற்றாண்டின் கல்வி

இத்தகைய மனநிலைகளை இருபத்தொன்றாம் நூற்றாண்டு மாற்றும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. புத்தகம் பற்றிய விழிப்புணர்வு இளைய தலைமுறையிடம் கூடியிருக்கிறது. அறிவைப் பெறுவதற்குரிய கருவியாகப் புத்தகத்தைக் காணுதலும் வாசித்தலும் வாங்கிச் சேகரித்தலும் அவற்றைப் பற்றிப் பேசுதலும் இப்போது ஒரு பண்பாடாக உருவாகிவருகிறது. வாசிக்கும் ஆர்வம் உடையவர்கள் புத்தகத்தைப் பெறுவது இன்று எளிது. மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. இணையம் வழியாகப் புத்தகத்தை இருக்கும் இடத்திற்கே வரவழைத்துக்கொள்ளும் வசதி கிடைத்திருக்கிறது. 

எழுதப் படிக்கத் தெரிந்த எவரும் சில வாக்கியங்களையாவது அன்றாடம் வாசிக்கும் தேவை இருக்கிறது. புலனத்தில் எத்தனையோ விஷயங்கள் வந்து விழுகின்றன. நான்கு வரியாவது வாசிக்காமல் ஒருவர் தம் அன்றாடத்தைக் கடக்க முடியாது என்னும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மின்னூல், ஒலிப் புத்தகம் என்றெல்லாம் வாசிப்போர் வசதிக்கேற்ற வடிவங்களில் நூல்கள் கிடைக்கின்றன. வாசிப்புக்கேற்ற கருவி வகைகளும் கிடைக்கின்றன. இணையம் வழியாகக் கற்கும் ‘சுயகல்வி’ முறை பெருகிவருகிறது.

இருபதாம் நூற்றாண்டில் படிப்படியாக வளர்ந்துவந்த கல்வி வாய்ப்புகளும் இன்று வந்து சேர்ந்திருக்கும் தொழில்நுட்பமும் இணைந்து புத்தக வாசிப்பை முன்னெடுத்துச் செல்கின்றன. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தடைகள் எல்லாவற்றையும் வரலாறாகக் கண்டு கடப்போம். உலகப் புத்தக தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.

பயன்பட்ட நூல்கள்: 

  1. உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், 2019, சென்னை, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், பதினொன்றாம் பதிப்பு. 
  2. ஆ.இரா.வேங்கடாசலபதி, நாவலும் வாசிப்பும், 2002, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

உவேசாவை ஒதுக்கலாமா?
ஜி.யு.போப்பின் நண்பர் உ.வே.சா.
சாதி நோய்க்கு அருமருந்து
தமிழ்ச் சொல் நன்று
ராமாயணம் இலக்கியமா; புனித நூலா?
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


3

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

RAJA RAJAMANI   7 months ago

உ வே சு வை பற்றி விளக்கமாக பல கட்டுரைகளில் எழுதியுள்ளீர். மிக்க நன்றி. எனக்கு 73 வயது. பெரியாரியத்தில் வளர்ந்தவன். பலரைப்போல் உவெசு வை ஒரு பார்ப்பன ஜாதியவாதி என்று தான் இதுவரை நினைத்திருந்தேன். சில வருடங்களுக்கு முன், எனக்கு தெரிந்த ஒரு சக கொள்கையுடைய சிந்தனையாளர், அறிஞர் அண்ணாவை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, 1967இல் மெட்ராஸில் நடந்த உலக தமிழ் மகாநாட்டில் உவெசு விற்கு ஒரு சிலை கட்டி அவரை மதிக்காதது, பெரும் தவறு என்று சொன்னார். உங்களின் பதிவுகளை வாசித்தபிறகு, என் நண்பர் சொன்னது புரிகிறது. நன்றி.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

திப்பு சுல்தான்பழங்குடிக் குழுக்கள்ஜெ.சிவசண்முகம் பிள்ளைசி.என்.அண்ணாதுரைவிழுமியங்களும் நடைமுறைகளும்தொழிலாளர் பாதுகாப்புபெட்டியோநெறியாளர்கள்லூஸாகாவிவிடிவிஷ்வேஷ் சுந்தர் கட்டுரைஎஸ்பிஐவரி நிர்வாகம்சிபிஎஸ்இநான் ஆற்றியிருக்கக்கூடிய உரை!எடுபடுமா இந்தியா கூட்டணி?சங்க இலக்கியம்ப்ரிமேசனரிகருத்துரிமைராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கருத்துப்படம்ஜெய் ஷாwriter samasடெல்லி வாழ்க்கைஇந்தியப் பொதுத் தேர்தல்தணிக்கைச் சட்டம்இயற்பியலர்கள்பிடிஆர் சமஸ் பேட்டிஅரசியல் கள விதிகள்ஹியரிங் எய்டு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!