கட்டுரை, அரசியல், கலாச்சாரம், சமஸ் கட்டுரை 4 நிமிட வாசிப்பு
கீழடிக்குப் பக்கத்தில்தான் இருக்கிறது வேங்கைவயல்
கீழடியில் உருவாக்கப்பட்டிருக்கிற தொல்லியல் அருங்காட்சியகம் இதுவரை இல்லாத அளவுக்குத் தமிழ் மக்களின் கவன ஈர்ப்பைக் குவித்திருக்கிறது. சுமார் இரண்டு ஏக்கரில், ரூ.18.43 கோடியில், 10 கட்டிடத் தொகுதியுடன் உருவாக்கப்பட்டிருக்கிற தமிழ்நாட்டின் எழிலார்ந்த அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய முகத்தில் பெருமிதத்தைக் காண முடிந்தது. அர்த்தபூர்வ வெளிப்பாடுதான் அது.
கீழடி தொல்லியல் ஆய்வு எப்போதெல்லாம் முடக்கத்தை எதிர்கொண்டதோ அப்போதெல்லாம் ஓர் எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் குரல் கொடுத்தார். 2016இல் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வுப் பணிகளை நிறுத்தப்போகிறது எனும் சமிக்ஞை வெளிப்பட்ட உடனேயே அன்றைய ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்குக் கடிதம் எழுதினார். கீழடி அகழ்வாய்வில் முக்கியப் பங்காற்றிய தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 2017இல் திடீரெனப் பணி மாற்றப்பட்டு, அகழ்வாய்வுப் பணி முடங்கும் சூழல் உருவானபோதும் ஸ்டாலின் கண்டன அறிக்கையை வெளியிட்டார். 2019இல் கீழடி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் பங்கேற்றார்.
கீழடிக்குப் பிறகு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உத்தர பிரதேசத்தின் சனோவ்லி பாதுகாக்கப்படும் இடமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. கீழடியுடன் ஆய்வு தொடங்கப்பட்ட குஜராத்தின் வாட்டில் சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்தது. கீழடியும் இப்படிப் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்படுவதோடு, இங்கேயும் ஒரு சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். தன்னுடைய தேர்தல் அறிக்கைகளிலும் இதுகுறித்துத் தொடர்ந்து பேசியது திமுக. ஆட்சிப் பொறுப்பேற்றதும் தன்னுடைய அக்கறையை ஸ்டாலின் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்திய தொல்லியல் துறை தவறியதைத் தமிழகத் தொல்லியல் துறை செய்திருப்பது இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
கீழடி அகழாய்வு பல வகைகளில் முக்கியமானது.
தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகளில் சுட்ட செங்கற்களால் ஆன கட்டிடங்களுடன் நகர நாகரிகம் இருந்தது இங்குதான் முதன்முதலில் கண்டறியப்பட்டிருக்கிறது. சங்க காலத்தின் வயதைக் கீழடி மேலும் தொன்மை ஆக்கியிருக்கிறது. அதாவது, கி.மு. 300 - கி.பி. 200 இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியைத் தமிழில் சங்க காலம் என்று இதுவரை கருதிவந்தோம். கீழடி பிராமி எழுத்துகள் சங்க காலத்தை மேலும் மூன்று நூற்றாண்டுகள் மூத்ததாக ஆக்குகின்றன. கங்கைச் சமவெளியின் இரண்டாம் நாகரிகத்துக்கு இணையான நாகரிகம் எனும் இடத்தைப் பெறும் கீழடியில் வாழ்ந்த மக்கள் அக்காலகட்டத்திலேயே ரோமுடன் வணிகத் தொடர்பில் இருந்ததற்கான சாத்தியங்களையும் இங்கு கிடைத்துள்ள பானை ஓடுகளின் கணிப்பு வயது வெளிப்படுத்துகிறது.
ரம்மியமான சூழலில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் நம்மைப் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்துக்குக் கூட்டிச் செல்கின்றன. நம்முடைய முன்னோரின் நெடிய பாரம்பரியத்தையும் நீண்ட வரலாற்றுப் பயணத்தையும் நமக்கு அவை நினைவூட்டுகின்றன. இந்தப் பெருமித நினைவோட்டத்தின் ஊடாகத்தான் வெருட்டென மின்னல்போலப் பாய்கிறது வேங்கைவயல். அது சமகால நிதர்சனத்தை நோக்கி நம்மை இழுக்கிறது. கீழடிக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அப்படியே ஏன் வேங்கைவயலுக்கும் சென்றிருக்கக் கூடாது; அங்குள்ள மக்களைச் சந்தித்து வந்திருக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றியது.
கீழடி அமைந்திருக்கிற சிவகங்கை மாவட்டத்துக்கு அண்டையில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இறையூர் வேங்கைவயல்.
நான் வேங்கைவயல் விவகாரத்தை மிகுந்த கலக்கத்தோடு அமைதியாகப் பார்த்திருக்கிறேன். வேங்கைவயலில் தலித் மக்கள் குடியிருப்பின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட செய்தி வெளியானதிலிருந்து அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ஊன்றிக் கவனித்துவருகிறேன். முதலில் அந்த ஊர் குழந்தைகளும், பெரியவர்களும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்து ஆட்கள் ஒரே மாதிரியான பாதிப்புக்குள்ளாவதால், குடிநீரில் ஏதும் பிரச்சினையா என்று மருத்துவர்கள் பரிசோதிக்கச் சொல்கிறார்கள். குடிநீர்த் தொட்டியைத் திறந்து பார்த்தால், பார்ப்பவர்கள் அதிரும்படி அதில் மலம் மிதக்கிறது. அந்தத் தண்ணீரைத்தான் பல நாட்களாக மக்கள் குடித்துவந்திருக்கிறார்கள். விஷயம் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.
அதிகாரிகள் வருகிறார்கள். குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்தது யார்; என்ன பின்னணி என்று எதுவும் விசாரணையில் தெரியவில்லை என்றாலும், ஊரில் தீண்டாமை அப்பட்டமாக அமலில் இருப்பது அம்பலம் ஆகிறது. டீக்கடையில் புழக்கத்தில் இருக்கும் இரட்டைக் குவளை முறையும் கோயிலில் தலித்துகளுக்கான அனுமதி மறுப்பும் தெரியவந்ததும் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் இரண்டு விஷயங்களிலும் உடனடி நடவடிக்கை எடுக்கிறார்கள். தலித்துகளின் கோயில் நுழைவை எதிர்த்த ஒரு பெண்ணும், டீக்கடைக்காரரும் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தின் இரு அமைச்சர்கள் அங்கு சென்றனர். இதற்குப் பின் விசாரணை, விசாரணை, விசாரணை…
பல தரப்புகளிடமும் நான் விசாரித்த வகையில், குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்தது யார் என்று போலீஸாரால் கண்டறிய முடியவில்லை என்றே சொன்னார்கள். “அப்படி ஒருவரைக் கண்டுபிடிக்க முடிந்துவிட்டால் அரசுக்குமே நிம்மதி” என்றுகூட ஒருவர் சொன்னார். ஏனென்றால், தலித்துகள் மத்தியில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு கடும் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறது. ஆரம்பம் முதலாகவே தனிநபர்கள் சார்ந்த பிரச்சினைகள் போன்று இது பேசப்பட்டுவந்ததாலும், யாருமே குற்றவாளி என்று கண்டறியப்படாததாலும் இதை அணுவதில் பொதுச் சமூகத்தில் ஒரு நிசப்தம் நிலவியதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், ‘குற்றவாளி பிடிபடவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?’ என்பதை மட்டுமே ஒரு சமூகம் எவ்வளவு காலத்துக்கும் ஒரே எதிர்வினையாக வைத்திருக்க முடியுமா என்ன?
இந்த விவகாரம் சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சினை மட்டும் இல்லை; அடிப்படையில் நம் சமூகத்தில் ஆழப் புரையோடியிருக்கும் சாதிப் புற்றின் சீழ்வீச்சின் சமீபத்திய வடிசல். குற்றவாளி என்று ஒருவர் பிடிபட்டாலும்கூட அவர் தலையோடு இந்தக் குற்றத்தைச் சுமத்திவிட்டு நகர முடியாது.
கோயில் நுழைவு அனுமதி மறுப்பு அப்பட்டமாக அமலில் இருக்கும் ஓர் ஊரில் தீண்டாமை என்னென்ன வடிவங்களில் எல்லாம் இருக்கும்? புதுக்கோட்டை மாவட்டத்தின் பல ஊர்களில் சாதிய இறுக்கம் நீடிப்பதைப் பலருடைய கூற்றுகளின் வழியாகவும் அறிய முடிகிறது. மனிதவுரிமைச் செயல்பாட்டாளர்கள் மேலும் பல மாவட்டங்களின் கிராமங்களைச் சுட்டுகிறார்கள். வேங்கைவயல் வெளிப்படுத்துவது வேங்கைவயலின் பிரச்சினையை மட்டும் இல்லை என்பதற்குத் தமிழ்நாடு முதலில் முகம் கொடுக்க வேண்டும்.
தலித்துகளைக் கடுமையான மனக்குலைவுக்கு வேங்கைவயல் விவகாரம் தள்ளியதற்கு முக்கியமான காரணம் இதுதான், இவ்வளவு பெரிய கொடூரம் அரங்கேற்றம் நிகழும்போது அவர்கள் கைகளைப் பற்றிக்கொள்ள, இந்தத் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளக்கூட இங்கே ஆட்கள் இல்லை. சாதிய வன்முறை தனிநபர் பிரச்சினை இல்லை; சாதியானது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பிலேயே வளர்த்தெடுக்கப்படுகிறது. அரசுபோலவே நாம் எல்லோருமே யாரோ ஒரு குற்றவாளிக்காகக் காத்திருக்கிறோம்; இதை வெறும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட விவகாரமாகக் கடந்துவிட தலைப்படுகிறோம்.
தமிழ்ச் சமூகத்தின் பல தோல்விகளை ஒருசேர அம்பலப்படுத்துகிறது வேங்கைவயல். இவ்வளவு சமூகநீதியும் சமத்துவமும் பேசும் நம்மிடம் இன்று உண்மையில் சமூக நீதி இயக்கம் இருக்கிறதா; எனில் அது வேங்கைவயல் விவகாரத்தில் என்ன செய்தது என்ற கேள்வி அவற்றில் தலையாயது. கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்றவர்கள் ஏன் வேங்கைவயல் கிராமத்துக்குச் சென்றிருக்கக் கூடாது? குறைந்தபட்சம் ஏன் அங்குள்ள எல்லாத் தரப்பு மக்களையும் இணைத்து ஒரு கூட்டம் நடத்திப் பேசியிருக்கக் கூடாது? ‘நாங்கள் உங்களோடு இருக்கிறோம்’ எனும் செய்தியை தலித்துகளின் கைகளைப் பற்றிக்கொண்டு சொல்ல நம்மிடம் ஒரு மொழியே இல்லையா?
குடிநீர்த் தொட்டிகூட நம் சமூகத்தில் இரண்டாக இருப்பதை முகத்தில் அடித்துச் சொல்கிறது வேங்கைவயல். பள்ளிக்கூடம் ஆரம்பித்து மயானம் வரை தமிழ்நாடு முழுக்க இரண்டாக இருக்கின்றன. எப்போது இதை முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று கேட்கிறது வேங்கைவயல். இதற்கும் யாரோ ஓர் ஆளைக் குற்றவாளியாக்கிவிட்டு கடக்க முடியுமா?
கீழடியில் நம்முடைய அடையாளம் பெருமிதமாக வெளிப்படும்போது நாம் அதோடு நம்மைப் பிணைத்துக்கொள்கிறோம்; வேங்கைவயலில் நம்முடைய அடையாளம் இழிவாக வெளிப்படும்போது நாம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறோம். ஒரு சமூகத்தின் சுயமரியாதையானது, அது தன்னுடைய பெருமிதங்களுக்கு எப்படி முகம் கொடுக்கிறது என்பதைப் போலவே இழிவுகளுக்கு எப்படி முகம் கொடுக்கிறது என்பதையும் சேர்த்தே அமைகிறது.
முழுப் பொறுப்பையும் நான் அரசு மீது மட்டும் சுமத்த விரும்பவில்லை. இது போன்ற விவகாரங்களில் அரசு நிர்வாகத்தின் எல்லைகளைக் காட்டிலும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கும், பொதுக் கருத்துருவாக்கர்களுக்குமான எல்லைகள் அதிகம். கீழடி அமைந்திருக்கும் இதே சிவகங்கை மாவட்டத்தின் சிராவயல் கிராமத்தில் நின்றுதான் 1926இல் பெரியார் கேட்டார், “ஆதிதிராவிடர்களுக்கு என்று மட்டும் தனிக் கிணறு அமைப்பது அக்கிரமம் இல்லையா?” அந்தக் குரலில் ஒலித்த தார்மிகம் இன்று இந்தச் சமூகத்தில் எங்கே இருக்கிறது? அது ஏன் அடுத்தகட்டத்தை நோக்கி நகரவில்லை? எப்போது ‘இரட்டையை’ நாம் ஒழிக்கப்போகிறோம்?
- ‘குமுதம்’, மார்ச், 2023
7
2
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Thangamani 2 years ago
வேங்கைவயலில் சாதிக்கொடுமைக்கும், இழைக்கப்பட்ட அநீதிக்கும் கொடுஞ்செயலுக்கும் நீதி மிக விரைவில் வழங்கப்படுதல் அவசியம். அதே நேரத்தில் சாதிக்கொடுமைகள், வருணாசிரம கதையாடல்கள் வலுப்பெற்று வருவதைப் போலத்தோன்றும் போதெல்லாம் அப்போது நமது சமூகநீதிக்கதையாடல்கள், பெரியாரியம் போன்றவை தோல்வியுற்றதா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. அதே வாதத்தில் காந்தியமும், பொதுஉடமைக் கருத்தியல்களும் கூட தோல்வியுற்றுப் போயினவா என்றும் கேட்க வேண்டுமல்லவா? அப்படிப் பொதுவாகக் கேட்பதில்லை. அது மட்டுமல்ல எல்லோரையும் கடவுளின் குழந்தைகள், படைப்புகள் என்கிற சைவ/வைணவ/ இந்துக் கதையாடல்கள், வசுதைவகுடும்பகம் என்கிற உபநிடதக் கதையாடல்கள், அத்வைதம் போன்ற கதையாடல்களும் தோல்வியுற்றனவா என்றும் யாரும் கேட்பதில்லை. சமூகம் விழிப்புணர்வடையும்தோறும் அதன் அழுக்குகள், கொடுமைகள், அநியாயங்கள் வெளிப்படுதல் இயல்பு. பெண்களுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் எதிரான குற்றச்செயல்கள் இங்கு அதிகமாக பதிவு செய்யப்படுவது குற்றம் நடைபெறுவதை மட்டும் காட்டுவதில்லை; அவை பொது சமூகத்தால் குற்றம் என உணரப்படுவதையும், அவை வழக்கமான பஞ்சாயத்துக்களின் வழி அணுகப்படாமல் (அரசியல்) சட்டப்பூர்வமாக அணுகப்படுகிறது என்பதையும் கூடக் காட்டுகிறது. அது மிகமுக்கியமான மாற்றம் இல்லையா? இந்த இடத்தை நோக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்குமுறைக் கதையாடல்களில் ஊறிப்போன சமூகம் நகர்ந்திருப்பது காந்தியம், பெரியாரியம், பொதுஉடமைக் கதையாடல்களால் அல்லவா? எந்த ஒன்றையும் வெற்றி/தோல்வி என்று அணுகுவதன் எல்லைகள் பற்றிய புரிதல்கள் வேண்டும். இல்லாவிட்டால் சமூகஊடகங்களில் வந்து அறிவை வளர்த்துக்கொண்டோர் போலத்தான் கட்டுரைகளும் எழுதப்படும். அதுதான் உண்மையில் சமூகத்தின் வீழ்ச்சி! எனெனில் சமூகத்தின் அறிவுத்தலைமை கறுப்பு வெள்ளையில் சிந்திக்கக்கூடாதல்லவா?
Reply 7 1
Login / Create an account to add a comment / reply.