கட்டுரை, கலாச்சாரம், கல்வி 5 நிமிட வாசிப்பு
உங்கள் ஊர் பள்ளியில் சமத்துவம் இருக்கிறதா?
பள்ளிப்படிப்பில் இடைநிறுத்துவோர் (Dropouts) தொடர்பாக ஒன்றிய அரசின் கல்வித் துறை வெளியிட்டுள்ள 2020 -21ஆம் ஆண்டுக்கான ‘யூடிஐஎஸ்இ+’ அறிக்கை விவரங்களைத் தந்திருக்கிறது. 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள்தான் படிப்பை அதிக அளவில் இடைநிறுத்தம் செய்கிறார்கள் என்பது அதில் தெரியவந்துள்ளது.
குஜராத்தில் 23.3%, மத்திய பிரதேசத்தில் 26.1%, உத்தர பிரதேசத்தில் 12.3%, தமிழ்நாட்டில் 6.4% மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்வதாக அந்த அறிக்கை கூறுகிறது. இப்படி படிப்பை இடைநிறுத்தம் செய்பவர்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள்தான் அதிகமாக உள்ளனர். அவர்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்வதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பள்ளிகளில் நிலவும் பாகுபாடு முதன்மையான ஒன்றாக இருக்கிறது.
வங்கிக் கணக்குகளா பிள்ளைகள்?
குழந்தைகளுக்கு வயிறு இருப்பதை ஒருவழியாகக் கண்டுபிடித்த ஒன்றிய, மாநில அரசுகள் அவர்களுக்கு இப்போது சத்துணவு வழங்குகின்றன. ஆனால், அந்தக் குழந்தைகளுக்கு மனம் என ஒன்று இருக்கிறது என்பதை இன்னும்கூட அவை தெரிந்துகொள்ளவில்லை. நிறைய ஆசிரியர்களுக்கும் அது புரியவில்லை.
பிஞ்சுக் குழந்தைகளின் மனம் கனவுகளால் நிரம்பியிருப்பதையோ, மான உணர்ச்சி அதில் தளும்பிக்கொண்டிருப்பதையோ ஆசிரியர்கள் அறிந்திருந்தால் நம் சமூகத்தில் ஒரு பள்ளி இப்போதிருப்பதுபோல் இருக்காது. பிரேசில் நாட்டுச் சிந்தனையாளர் பாவ்லோ ஃப்ரேர் சொன்னதுபோல ஆசிரியர்களில் பெரும்பாலோர் பிள்ளைகளைத் தங்களது வங்கிக் கணக்குகளைப் போலத்தான் நினைக்கிறார்கள்: தனக்குத் தெரிந்ததை அவர்களின் தலைக்குள் ’டெபாசிட்’ செய்வது. தேர்வு நேரத்தில் அதை ’வித்ட்ராவல்’ பண்ணிக்கொள்வது!
குழந்தைகள் எப்போதும் குழந்தைகளோடு சேர்ந்து இருப்பதைத்தான் விரும்புவார்கள். அப்படி சேர்ந்திருக்க வாய்ப்பளிக்கும் பள்ளிக்குப் போவது அவர்களுக்குப் பிடித்தமானதாகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும், இடைநிற்றல் நடக்கிறது.
ஒரு குழந்தை பள்ளிக்குப் போகாமல் இருப்பதற்குப் பலவித காரணங்கள் இருக்கின்றன. வறுமை கப்பிய குடும்பச் சூழல், வேலை தேடி இடம்பெயரும் பெற்றோர், குழந்தைத் தொழிலாளராக மாற்றப்படும் அவலம் என அந்தக் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை எல்லோருக்கும் பொதுவானவை.
ஆனால், எஸ்சி சமூகப் பிள்ளைகள் இடைநிற்றலுக்கு இவை எல்லாவற்றையும்விட முக்கியமானதொரு காரணம் இருக்கிறது. வகுப்பறையில் காட்டப்படும் பாகுபாடு என்பதுதான் அந்தக் காரணம். கழிப்பறைகள் இல்லாத பள்ளிகள் உண்டு ஆனால் பாகுபாடு இல்லாத பள்ளிகள் இல்லை; 'காற்று நுழையாத வகுப்பறைகளில்கூட சாதி நுழைந்துவிடும்' என்று சொல்லுமளவுக்கு அந்தப் பாகுபாடு எங்கும் நிறைந்ததாயிருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பாலும் எஸ்சி, எம்பிசி சமூகங்களைச் சார்ந்தவர்கள்தான். கிராமப்புறங்களில் 75% எஸ்சி மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளும் இருக்கின்றன. எனவே, இந்தப் பாகுபாடுகள் அரசுப் பள்ளிகளைவிடத் தனியார் பள்ளிகளில்தான் அதிகம் உள்ளன.
பள்ளிகளில் பாகுபாடு
இதை மிகைப்படுத்தப்பட்ட கூற்று என யாரேனும் கருதினால் உங்கள் ஊரில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றுக்குச் செல்லுங்கள். ஏதேனும் ஒரு வகுப்பறையில் நுழையுங்கள். முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் யாரென்று பாருங்கள். அதில் எஸ்சி மாணவர் இருக்கிறாரா என்று விசாரியுங்கள். எந்தவொரு தனியார் பள்ளிக்கும் செல்லுங்கள். அங்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள். அதில் எஸ்சி மாணவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுங்கள்.
மதிய உணவு இடைவேளையில் ஏதேனும் ஒரு பள்ளிக்குச் செல்லுங்கள் அங்கு எஸ்சி மாணவர்கள் மற்ற மாணவர்களோடு சமமாக அமர்ந்து உணவருந்துகிறார்களா என்று கவனியுங்கள். எந்தவொரு தனியார் பள்ளிக்கும் செல்லுங்கள் அங்கே காலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை வழிநடத்தும் மாணவர்களில் எத்தனை பேர் எஸ்சி மாணவர்கள் இருக்கிறார்கள் என்று விசாரியுங்கள். பள்ளி ஆண்டுவிழாக்களின்போது, மற்ற கொண்டாட்டங்களின்போது கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்களில் எஸ்சி மாணவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேளுங்கள்.
ஒன்றிய அரசாங்கத்தின் 'சர்வசிக்ஷ அபியான்' அமைப்பின் சார்பிலேயே இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்டு அறிக்கையொன்றையும் தயாரித்திருக்கிறார்கள். ’நேஷன் சிந்தசிஸ் ரிப்போர்ட் 2012’ என்ற அந்த அறிக்கையில் பள்ளிகளில் பாகுபாடு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டதோடு மட்டுமின்றி அவற்றைக் களைவதற்கான வழிமுறைகளையும் முன்வைத்திருக்கிறார்கள். சர்வசிக்ஷா அபியான் அறிக்கை மட்டுமல்ல, ப்ரோப் அறிக்கைகள் (1999, 2009) மானபி மஜும்தார், ஜோஸ் மூய்ஜ் (2012), பூனம் பத்ரா (2005, 2009), கீதா காந்தி கிங்டன் (2009), கார்த்திக் முரளிதரன், மைக்கேல் க்ரேமர் (2006) கீதா நம்பீஸன் (2006, 2009) ஆகியோரின் ஆய்வுகள், ப்ராதம் அமைப்பின் ஏசர் அறிக்கைகள், ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை (ஏப்ரல் 2014) ஆகியவையும் இந்தப் பிரச்சினை குறித்து ஆழமாக ஆராய்ந்துள்ளன.
இந்திய அளவில் இவ்வளவு ஆய்வுகள் நடந்தாலும்கூட தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சினை இன்னும் கவனிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது.
அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளிலும்கூட சமத்துவமற்றத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் புலப்படுத்துகின்றன. சில சுயநலமிகள் விதைக்கும் வெறுப்பு, பள்ளி வளாகங்களில் பார்த்தீனியத்தைப்போல அடர்ந்து வளர்வதன் அடையாளங்கள் தென்படுகின்றன. இதை இப்போதே வேரோடு பிடுங்கியெறிந்தால்தான் தமிழகக் கல்விச் சூழலைக் காப்பாற்ற முடியும். அப்போதுதான் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் உறுதிப்படுத்த முடியும்!
7
2
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Umamaheswari 2 years ago
மிகவும் முக்கியமான பார்வை. ஆனால் இடைநிற்றலுக்கு இது தவிர சில காரணங்கள் உண்டு. கல்வித்துறை புள்ளி விவரங்கள் மட்டுமே அதற்கு தீர்வாகாது. கல்வி என்பது மிகப்பெரிய விவாதம் பொருளாகக் காட்டப்படுகிறது ஆனால் அது முழுவதும் உண்மை இல்லை...இன்னும் இங்கு விவாதம் மேற்கொள்ள வேண்டிய களங்கள் திறக்கப்படவே இல்லை.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
K.Prem Kumar 2 years ago
சிறப்பு. நீங்கள் ஏன் ஒரு சார்பு உள்ளவர்களை கவனிக்க சொல்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை?
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 2 years ago
100வருடங்களுக்கு முன் ஒருசில சாதிகள் மட்டுமே மேலே இருந்தன.
Reply 0 1
Login / Create an account to add a comment / reply.