கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

கேரள இடதுசாரிகளுக்கு இழப்பு ஏன்?

எம்.ஜி.ராதாகிருஷ்ணன்
30 Jun 2024, 5:00 am
0

ரசியல் கட்சிகள் தரம் தாழ்ந்துவருவதைச் சுட்டிக்காட்டும் வகையில், ‘சந்தேசம்’ (தூது, 1991) என்ற திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி அமோக ஆதரவைப் பெற்றது. அரசியலை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி எடுத்திருப்பதாக பலர் ஆத்திரப்பட்டாலும், அதன் காட்சிகளும் வசனங்களும் அடிக்கடி நினைவுகூரும் வகையில் மனங்களில் பதிந்துவிட்டன. 

அதில் ஒரு காட்சியில், கட்சி ஏன் தோற்றது என்று கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் கட்சியின் பாணியில் விளக்கிக்கொண்டிருப்பார். அப்போது ஒரு தொண்டர் எழுந்து, “தோழர், நாம் ஏன் தோற்றோம் என்று எளிமையாக சொல்ல முடியுமா?” என்று கேட்பார். 

2024 மக்களவை பொதுத் தேர்தலில் ஏன் தோற்றோம் என்பதற்கான பதிலை, கேரள இடதுசாரித் தொண்டர்களும் ஆதரவாளர்களும் இப்படித்தான் இப்போது தலைவர்களிடம் கேட்டுவருகின்றனர். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மாபெரும் தோல்வி

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன், சாதாரணமான கேள்விகளுக்குக்கூட, ‘இயங்கியல் பொருள்முதல்வாத’ அடிப்படையில் விளக்கத் தொடங்குவார். இப்போதைய தோல்வி அவரைக்கூட, ‘இது மாபெரும் தோல்விதான்’ என்று ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது. மாநிலத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் இடதுசாரி முன்னணி ஒரேயொரு இடத்தில் மட்டும்தான் வென்றது. 

பெரும்பாலான மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு அடுத்த இடத்தில் வந்தாலும் 2019 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தத் தேர்தலிலும் இப்படியொரு தோல்வி ஏற்பட்டிருப்பது இதுவரை நடந்திராதது. காங்கிரஸ் தலைமையிலான முன்னணி 18 இடங்களில் வென்றது - கடந்த முறையைவிட ஓரிடம் குறைவு,

இந்த முறை பாஜக முதல் முறையாக திரிச்சூரில் 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுவிட்டது. அந்தக் கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக முன்பைவிட 5% வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

“விரும்பத்தகாத, முதலாளித்துவ பூர்ஷுவா குணாதிசயங்கள் சில, கட்சியிலும் ஆட்சியிலும் புகுந்துவிட்டதால் நம்முடைய முன்னுரிமைகளிலும் தவறான சில முடிவுகள் ஏற்பட்டுவிட்டன” என்று பொதுக்கூட்டத்தில் விளக்கினார் கோவிந்தன். அவருடைய விளக்கத்துக்கும் முதல்வர் பினராயி விஜயனின் பேச்சுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ‘தோல்வி ஏன் என்று ஆராய்ந்து தவறுகளைத் திருத்திக்கொள்வோம்’ என்று முதலில் பேசிய முதல்வர், மாநிலத்தில் மூன்று ஆண்டுகளாக நடக்கும் தன்னுடைய ஆட்சிக்கு எதிரானதல்ல இந்த முடிவு என்று பிறகு வலியுறுத்தினார். 

“பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற இடதுசாரிகளைவிட காங்கிரஸ் உகந்த கட்சி என்று வாக்காளர்கள் கருதியதாலேயே அந்த முன்னணிக்கு இப்படியொரு ஆதரவு கிடைத்திருக்கிறது” என்றார். 

2019 மக்களவை பொதுத் தேர்தலிலும் இடதுசாரி முன்னணிக்கு இதேபோன்ற தோல்விதான் ஏற்பட்டது என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் இடதுசாரி முன்னணியே இரண்டாவது முறையாகவும் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததைச் சுட்டிக்காட்டினார். திரிச்சூரில், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வாக்குகள் சுரேஷ் கோபிக்கு ஆதரவாக விழுந்ததால்தான் பாஜக வென்றது என்றும் குற்றஞ்சாட்டினார்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

மார்க்சிஸ்ட்டுகள் செய்த பெருந்தவறு

கே.சந்துரு 08 Jul 2022

சுயபரிசோதனைக்கு பதிலாக காரணங்கள்

அதற்குப் பிறகு மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழுவும், செயலகமும் திருவனந்தபுரத்தில் ஐந்து நாள்கள் கூடி, தோல்வி ஏன் என்று விரிவாக ஆராய்ந்தன. இடதுசாரி அரசுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக முதல்வருக்கு எதிராக கட்சியின் தலைமை வெளிப்படையாக கருத்து தெரிவிக்கும் என்று ஊடகங்கள் எதிர்பார்த்தன. மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தவறியதால் இந்தத் தோல்வி என்று ஒப்புக்கொள்ளப்பட்டாலும், இது வழக்கமான தோல்வியல்ல என்பதை உணர்ந்ததுபோலத் தெரியவில்லை. நேர்மையாக சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக, தோல்விக்கு வேறு காரணங்கள் கண்டுபிடித்துக் கூறப்பட்டன.

ஒன்றிய அரசுக்கு பாஜக மீண்டும் வராமல் தடுக்க இடதுசாரிகளைவிட காங்கிரஸ் கட்சியால் முடியும் என்று மதச்சார்பற்ற வாக்காளர்கள் கருதினர்; தீவிரவாத முஸ்லிம் அமைப்புகளுடன் கை கோர்த்ததால் காங்கிரஸ் கூட்டணியால் வெற்றிபெற முடிந்தது; ஒன்றிய அரசு நிதி வழங்க மறுத்துவிட்டதால், ஓய்வூதியர்களுக்கு உரிய காலத்தில் அதை வழங்க முடியாமல் போனதும் தோல்விக்கு ஒரு காரணம்; ஈழவர்களும் (பிற்படுத்தப்பட்ட வகுப்பு), கிறிஸ்தவர்களும் பாஜகவை இந்த முறை ஆதரித்ததாலும் இடதுசாரிகளுக்கு வாக்குகள் குறைந்தன. இப்படிச் சொன்ன தலைமை, கட்சியின் சரிந்த செல்வாக்கை மீட்க சொன்ன யோசனை குறிப்பிடத்தக்கது. மக்கள் ஏன் தவறான முடிவை எடுத்தார்கள் என்று கட்சித் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த யோசனை! 

இதை ஊடகங்களுக்குத் தெரிவித்த கோவிந்தன், ஒவ்வொரு தனிப்பட்ட தவறுகளையும் அரசியல் தவறுகளையும் கட்சி திருத்தும் என்றார். முதல்வருக்கு எதிராக கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அற்பமானவை என்று கூறி முடித்துவிட்டார்.

மாநில மோடிக்கள்

மகளுடைய ஊழல் குறித்து கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்த முதல்வரின் ஆணவத்தால்தான் கட்சியின் செல்வாக்குக் குறைந்தது, அடங்க மறுக்கும் சுபாவத்தை முதல்வர் இனியாவது மாற்றிக்கொள்வாரா என்று நிருபர்கள் கேட்டனர். “ஒருவருடைய சுபாவம் எப்படி திடீரென்று மாறிவிடும், இதே சுபாவத்துடன்தானே அவர் முன்னணியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்திருக்கிறார்?” என்றும் கேட்டார் கோவிந்தன். 

2019 மக்களவை பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகும், தனது சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியாது என்றுதான் கூறியிருந்தார் முதல்வர் விஜயன். ஆனால், ஜூன் 21இல் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, முதல்வர் விஜயன் மீதான குற்றச்சாட்டுகளையும் கட்சியின் மத்தியக் குழு ஜூன் 28 கூட்டத்தில் விவாதிக்கும் என்றார்.

நாட்டில் இப்போது இருக்கும் ஒரே மார்க்சிஸ்ட் முதல்வர் அவர்தான் என்பதாலும், இயல்பாகவே சற்று கோபக்காரர் என்பதாலும் கட்சியின் தேசிய தலைமைக் குழுவே (பொலிட்பீரோ) அவருக்கு அடங்கிப்போகிறது என்று கட்சியிலேயே பலரும் கருதுகின்றனர். சமீபத்தில் கேரளம் வந்திருந்த வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா இந்தத் தோல்வி குறித்து கருத்து தெரிவிக்கையில், “விஜயன் - முண்டு கட்டிய (கேரள வேட்டி) மோடி, மம்தா பானர்ஜி - புடவை கட்டிய மோடி, அர்விந்த் கேஜ்ரிவால் - புஷ் ஷர்ட் அணிந்த மோடி, நவீன் பட்நாயக் - வேட்டி கட்டிய மோடி” என்று பதில் அளித்தார்.

இந்தத் தோல்விக்குப் பிறகும் விஜயனின் குணம் மாறவில்லை. ஜாக்கோபைட் ஆர்தடாக்ஸ் சிரியன் சர்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த ஜீவர்கீஸ் கூரிலோஸ் என்ற கிறிஸ்தவப் பாதிரியார், “தேர்தலில் வெற்றிபெற திடீர் வெள்ளத்தையும் – பெருந்தொற்றையும் மட்டுமே இடதுசாரிகள் நம்பிக்கொண்டிருக்கக் கூடாது, தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும்” என்று அனுதாபத்துடன்தான் கருத்து தெரிவித்தார். அவரை ‘முட்டாள்’ என்றார் முதல்வர் விஜயன். 

இத்தனைக்கும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு சில பாதிரியார்களில் அவரும் ஒருவர். கேரள தேவாலயங்கள் எப்போதுமே கம்யூனிஸ்டுகளுக்கு எதிர்ப்பானவை. விஜயன் இப்படிப் பேசியிருந்தாலும் என்னுடைய ஆதரவு இடதுசாரிகளுக்குத்தான் என்று அந்தப் பாதிரியார் அந்த வசைக்குப் பிறகும் குறிப்பிட்டார்.

பாஜக வளர்ச்சி

காங்கிரஸ் கூட்டணி, மார்க்சிஸ்ட் கூட்டணி இரண்டும் தங்களுடைய ஆதரவு வாக்குகளை இழந்துள்ள நிலையில் பாஜகவுக்கு ஆதரவான வாக்குகள் 15.64%லிருந்து (2019) 19.2% (2024) ஆக உயர்ந்திருப்பதை சிஎஸ்டிஎஸ்-லோக்நீதி தரவுகள் தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணிக்கு நாயர்கள் (45%), ஈழவர்கள் (32%), கிறிஸ்தவர்கள் (5%) வாக்குகள் கிடைத்துள்ளன. இதில் நாயர்களின் 2% வாக்குகள், கிறிஸ்தவர்களின் 3% வாக்குகள் காங்கிரஸ் கூட்டணிக்குப் போயிருக்க வேண்டியவை. ஆனால், ஈழவர்களின் வாக்குகள் தங்களுக்கு விழாமல் 11% அளவுக்கு பாஜகவுக்குப் போய்விட்டதுதான் இடதுசாரிகளுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. ஈழவர்களும் மார்க்சிஸ்டுகளுக்குப் பெரிய பக்கபலமாகத் திகழ்பவர்கள்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பிரபலத் தலைவர்கள் பலர், இடதுசாரிகளின் கோட்டை என்று பேசப்பட்ட தொகுதிகளிலேயே இந்த முறை தோற்றுவிட்டனர். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் விஜயராகவன், முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக், முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா அதில் குறிப்பிடத்தக்கவர்கள். கொரானாவை வீழ்த்திய வீராங்கனை என்று புகழப்பட்டவர் சைலஜா. 

சிறுபான்மைச் சமூகத்துக்கு ஆதரவாக மார்க்சிஸ்டுகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தபோதிலும் முஸ்லிம்கள் பெரும்பாலும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் வாக்களித்துள்ளனர். இந்த முறை கணிசமான இந்துக்களும் கிறிஸ்தவர்களும்கூட இடதுசாரிகளைவிட்டு விலகியுள்ளனர். 

காங்கிரஸ் கூட்டணி, மார்க்சிஸ்ட் கூட்டணி இரண்டுமே தொடர்ந்து முஸ்லிம்களை தாஜா செய்யும் போக்கைக் கடைப்பிடிப்பதாலேயே இந்த முறை பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக ஈழவர் சமூகத் தலைவர் வேலப்பள்ளி நடேசன் அறிவித்துள்ளார். மார்க்சிஸ்டுகள் பெற்ற ஒரே வெற்றி ஆலத்தூர் என்ற தனித் தொகுதியிலிருந்துதான். முன்னாள் அறங்காவல் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அங்கு வெற்றிபெற்றார்.

10 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. வயநாடில் ராகுல் காந்தி 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். பாஜக கூட்டணிக்கும் வாக்குகள் அதிகரித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், வி. முரளீதரன் ஆகியோர் 11 சட்டமன்ற தொகுதிகளில் தங்களுடைய போட்டி வேட்பாளர்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தனர்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

கேரளாவுக்குள் ஒரு ஜார்கண்ட்

மு.இராமநாதன் 16 Jun 2022

முடிவுகள் உணர்த்தும் பாடம்

கேரளம் என்றாலே ஒன்று காங்கிரஸ் கூட்டணி அல்லது மார்க்சிஸ்ட் கூட்டணிதான் ஆட்சிக்கு வரும் என்ற காலம் இனியும் தொடருமா என்று கேட்கும் அளவுக்கு பாஜக ஊடுருவியிருக்கிறது. அடுத்தடுத்து பல தேர்தல்கள் நடைபெறவுள்ளன. முதலாவதாக, வயநாடில் ராகுல் காந்தி ராஜிநாமா செய்திருப்பதால் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. 

காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. (அவருடைய கணவர் ராபர்ட் வாத்ரா மலையாளி). மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர், சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள். அவர்கள் ராஜிநாமா செய்வதால் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அடுத்து கேரளத்தின் உள்ளாட்சி மன்றங்களுக்கும் தேர்தல் வரவிருக்கிறது. இடதுசாரி முன்னணிக்கு அடுத்தடுத்து சோதனைக் காலம்தான்.

© த டெலிகிராப் 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு உண்டா?
மார்க்சிஸ்ட்டுகள் செய்த பெருந்தவறு
கேரளாவுக்குள் ஒரு ஜார்கண்ட்
இடதுசாரிகளுக்குத் தேவை புதிய சிந்தனை
இடதுசாரி இயக்கங்கள் ஒண்ணா சேரணும்! - நல்லகண்ணு சிறப்பு பேட்டி

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

2


வகிதா நிஜாம்தொழில் துறை 4.0வருவாய் பற்றாக்குறைதிராவிட கட்சிகள்மொபைல்இந்திய ஜனநாயகம் எப்படி வீழ்கிறது?பழங்குடி தெய்வங்கள்சிகேடிகுகி2024: ஆட்டம் முடிந்துவிடவில்லைபுளியந்தோப்பு குற்றங்களும்கலோரிஆளுநரைப் பதவி நீக்க முடியுமா?வெறுப்பைத் தூண்டும் பேச்சு செழிக்கிறதுஐசக் சேடினர் பேட்டிசியாமா பிரசாத் முகர்ஜிமலர்கள் குழுபொருளாதாரம் இன்னும் இடர்களிலிருந்து மீளவில்லைதேசிய ஊடகங்கள்பொருட்சேதம்‘கல்கி’ இதழ்மத்திய உள்துறைச் செயலர்எக்ஸலென்ட் புக் சென்டர்ஆண் பெண் உறவுச்சிக்கல்வட கிழக்கு பிராந்தியம்நீதிநாயகம் கே.சந்துருநல்ல பெண்குவாலியர்செமி கன்டக்டர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!