கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு

எண்களுக்கு ஏன் இத்தனை வண்ணங்கள்!

ப.சிதம்பரம்
13 Mar 2023, 5:00 am
0

பன்றியின் உதடுகளுக்கு நீங்கள் சிவப்புச் சாயம் பூசலாம், அதற்குப் பிறகும் அது பன்றியாகத்தான் இருக்கும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் 2008 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பராக் ஒபாமா எதிர்க்கட்சியினரைப் பார்த்துக் கூறினார்; மாற்றுக் கட்சியினரின் முயற்சிகளை அவர் கேலிசெய்த விதம் அமெரிக்காவில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் உடனடியாகப் பிரபலமாகிவிட்டது. இருபதாவது நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து அவரைப் பின்பற்றி, அதையே மேலும் பல நாடுகளிலும் மேற்கோள் காட்டிப் பேசத் தொடங்கிவிட்டனர்.

இந்தியாவின் தேசிய வருவாய் தொடர்பாக 2023 பிப்ரவரி 28இல் அரசு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையைப் படித்தவுடன் எனக்கு ஒபாமாவின் மேற்கோள்தான் நினைவுக்கு வந்தது. எண்கள் பொய் சொல்வதில்லை, எண்களுக்கு அளிக்கும் விளக்கங்கள்தான் பொய்களை அள்ளித் தெளிக்கின்றன - ஒன்றிய அரசு 2023-24 நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு அளித்த விளக்கங்களிலிருந்து இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மாண்புமிகு நிதியமைச்சர் 2022-23 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 7%ஆக இருக்கும் என்றார். அதிலிருந்து அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் உள்பட ஏராளமான உயர் அதிகாரிகள், அதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசிவருகின்றனர்.

ஒருவேளை அப்படியே நடந்தாலும் நடந்துவிடலாம், ஆனால் 2022-23 நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் அடுத்தடுத்து கிடைத்த உண்மையான தரவுகள் பொருளாதார வளர்ச்சி குறைந்துகொண்டே வருவதைத்தான் காட்டுகின்றன. தேசிய புள்ளி விவர அலுவலக (என்எஸ்ஓ) மதிப்பீட்டின்படி, முதல் மூன்று காலாண்டுகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பொருளாதார வளர்ச்சியானது 13.2%, 6.3%, 4.4% என்றுதான் இருக்கிறது.

மொத்த உற்பத்தி முக்கியம்

கடந்த ஆண்டுடனான காலாண்டு மதிப்பீட்டு ஒப்பீடோ, தொடர்ச்சியான காலாண்டு மதிப்பீடோ பொருளாதாரத்தின் உண்மைத்தன்மையைக் காட்டிவிடாது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஒவ்வொரு காலாண்டிலும் நம் அனைவருடைய பெருமுயற்சியாலும் ஏற்படும் மொத்த உற்பத்திதான் வளர்ச்சியை அறிய சரியான அளவுகோல். ஒட்டுமொத்தமான மதிப்புக்கூட்டலையும் ஒட்டுமொத்தமான உள்நாட்டு உற்பத்தி மதிப்பையும் அடிப்படையாகக் கொண்டு காலாண்டு உற்பத்தியை என்எஸ்ஓ கணக்கிட்டிருக்கிறது. பின்வரும் அட்டவணையைப் பாருங்கள்:

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

நிதி ஒதுக்கீட்டில் கைவிடப்பட்ட ஏழைகள்

ப.சிதம்பரம் 20 Feb 2023

அட்டவணை:

                                                                                                                                            2022-23 (ரூபாய் கோடியில்)

  கா.ஆ. 1 கா.ஆ. 2 கா.ஆ. 3
மொத்த மதிப்பு 35,03,189  35,66,493  37,17,073
கனிம அகழ்வு 82,664 65,594 78,732
பண்ட உற்பத்தி 6,39,243 6,29,798 6,14,982
மின்சாரம், நீர், எரிபொருள்  90,134 87,489 81,537
நிதி, சேவைகள், மனை வணிகம் 8,82,147 9,33,441 7,45,836
ஜிடிபி  37,47,908  38,80,988 40,18,584
அரசின் இறுதி நுகர்வுச் செலவு 4,11,243 3,32,450 3,47,661
மொத்த முதலீட்டு மூலதன சேமிப்பு  12,99,435  13,27,486 12,76,872
ஏற்றுமதி  9,15,472 9,28,593 9,19,661
இறக்குமதி 10,01,644 10,99,168 10,17,152

நினைவில் வையுங்கள் - இந்த மதிப்பீடுகள் துல்லியமானவை, கடந்த ஆண்டோ அல்லது அதற்கு முந்தையா ஆண்டோ ஏற்பட்ட உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. பொருளாதார வளர்ச்சி விறுவிறுப்பாக இருந்தால் உற்பத்தி மதிப்பானது அதற்கு முந்தைய காலாண்டின் அல்லது அதற்கும் முந்தைய சில காலாண்டுகளின் மதிப்பைவிடக் குறைவாக இருக்கக் கூடாது. உதாரணத்துக்கு, தொழிற்சாலைகளில் உற்பத்தி விறுவிறுப்பாக இருக்கிறது, வேலைவாய்ப்பு நன்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது, உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு சந்தையில் நல்ல ‘கேட்பு’ (டிமாண்ட்) இருக்கிறது என்றால் உற்பத்தி மதிப்பு ஏன் முதல் காலாண்டில் ரூ.6,39,243 கோடி மதிப்பிலிருந்து, இரண்டாவது காலாண்டில் ரூ.6,29,798 கோடியாகவும், மூன்றாவது காலாண்டில் ரூ.6,14,982 கோடியாகவும் சரிய வேண்டும்?

மின்சாரம், கேஸ், தண்ணீர் ஆகியவற்றின் உற்பத்தி மதிப்பும் அடுத்தடுத்த காலாண்டுகளில் குறைந்துகொண்டே வருவதையும் பாருங்கள். இவை அனைத்தும் உற்பத்தியுடன் தொடர்புள்ளவை, உற்பத்திக்கு அவசியமானவை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

அமுத காலக் கேள்விகள்

ப.சிதம்பரம் 27 Feb 2023

எண்கள் பொய் சொல்லாது

மொத்த உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) அடிப்படையில் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், அரசால் இறுதி நுகர்வுச் செலவை சீரான வேகத்தில் பராமரிக்க முடியவில்லை என்பது தெரிகிறது. ஒட்டுமொத்த நிரந்தர முதலீட்டு சேமிப்பு மதிப்பு உயர்வதும் தாழ்வதுமாக மூன்று காலாண்டுகளிலும் வேறுபடுகிறது. ஏற்றுமதி – இறக்குமதி ஆகிய இரண்டு மதிப்புமே தேக்க நிலையிலேயே இருக்கிறது. வலிமையான வளர்ச்சியைச் சுட்டிக்காட்டும் அறிகுறி எதுவுமே இல்லை.

கவலை தரக்கூடிய இன்னொரு எண், தனிநபர்களின் இறுதி நுகர்வுச் செலவு மொத்தமாகும். சாதாரணமாக நுகர்வுச் செலவு மொத்தமானது ஒவ்வொரு காலாண்டுக்கும் சராசரியாக ரூ.3 லட்சம் கோடி அதிகரித்துக்கொண்டே வரும். 2022-23இல் இரண்டாவது காலாண்டில் ரூ.1,21,959 கோடியும் மூன்றாவது காலாண்டில் ரூ.1,68,005 கோடியுமாக மட்டுமே உயர்ந்துள்ளன. சந்தையில் பொருள்களுக்கான ‘கேட்பு’ மந்தமாக இருப்பதையே இது காட்டுகிறது. விலைவாசி உயரும் எனவே எதிர்காலத் தேவைக்காக பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற அச்சம், நிரந்த வேலை நீக்கம் அல்லது ஆள் குறைப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்ற கவலை காரணமாக தனிநபர்கள் நுகர்வைக் குறைத்துக்கொள்கிறார்கள் அல்லது ஒத்திப்போடுகிறார்கள்.

நாலாவது காலாண்டு 2023 மார்ச் 31இல் முடிவதால் அந்தக் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி என்னவாக இருக்கும் என்று மதிப்பிடுவது இப்போது கடினமானதாக இருக்காது. காரணம், 2022-23இல் ஒட்டுமொத்தமாக ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 7%ஆக இருக்கும் என்று கூறிவிட்டார்கள். ஏனைய மூன்று காலாண்டுக்கான வளர்ச்சி வீதம் கையிலிருக்கிறது. எனவே, நாலாவது காலாண்டில் வளர்ச்சி 4.1%லிருந்து 4.4% வரை இருக்கக்கூடும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

பணக்கார நாடா இந்தியா?

ப.சிதம்பரம் 06 Mar 2023

உண்மை நிலை என்ன?

இந்தியப் பொருளாதாரம் கடுமையான ‘எதிர்காற்’றைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது: பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு (பணவீக்க விகிதம் அதிகரிப்பு), கறாரான பணசப்ளை கொள்கை, உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாக்கக் காப்பு வரிகளை உயர்த்தும் மனநிலை, கடுமையான எரிபொருள் விலை உயர்வு ஆகியவை வளர்ந்த (பணக்கார) நாடுகளில் நிலவுகின்றன; உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் உலகப் பொருளாதாரம் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

வங்கிகள் தரும் கடன் மீதான வட்டியும் மாதாந்திர தவணைத் தொகையும் பரவலாக அதிகரித்துவிட்டன; ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் வேலையை இழக்கின்றனர், புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகாததால் சந்தைக்கு ஆண்டுதோறும் வேலை தேடி வருவோரிடையேயும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது; பல நாடுகளில் அரசியல் நிச்சயமற்ற நிலை அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் வீராப்பான பேச்சுகளில் உண்மை நிலையை மூடிமறைத்துவிட முடியாது. 2023-24 நிதியாண்டு நம்பிக்கை தரும் வகையில் பிரகாசமாக இல்லை.

இருந்தாலும், அரசை ஆதரிப்போரின் உற்சாக கோஷ்டி கானம் தொடர்கிறது; இந்தச் சேர்ந்திசையில் இந்திய ரிசர்வ் வங்கியும் சேர்ந்துவிட்டதுதான் ஏமாற்றம் தருகிறது. ‘இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிலையிலிருந்தும் உலகின் பிற நாடுகளுடைய பேரியியல் பொருளாதாரத் தளையிலிருந்தும் விடுபட்டுவிடும்’ என்கிறது ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி மாத அறிக்கை; தேன் தடவிய இந்த வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்றே புரியவில்லை!

அத்துடன் நில்லாமல் 2023-24 நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், ‘இது இப்போதைய நிலையிலிருந்து விடுபடுவதற்கும், உயர் பொருளாதார வளர்ச்சி காண்பதற்குமான கருவி’ என்கிறது ரிசர்வ் வங்கி. அமெரிக்க ஃபெடரல் வங்கி நிதி நிர்வாக அமைப்பிடமிருந்தும், அதன் பணக் கொள்கை விளைவுகளிலிருந்தும் விடுபடவே முடியாத இந்திய ரிசர்வ் வங்கி இதைக் கூறுகிறது!

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக இதற்கு முன்னால் நான் எழுதியிருந்த மூன்று கட்டுரைகளையும் படித்திருந்தால், அரசின் இந்த மதிப்பீடு என்பது எண்களுக்கு வண்ணம் தீட்டும் வேலைதான் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் – அந்த எண்கள் இப்போதும் மனச் சோர்வை அளிப்பவையாகவே இருக்கின்றன.

தொடர்புடைய கட்டுரைகள்

நிதி ஒதுக்கீட்டில் கைவிடப்பட்ட ஏழைகள்
அமுத காலக் கேள்விகள்
பணக்கார நாடா இந்தியா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3






ஒற்றெழுத்துகமல்நாத்அடிப்படை உரிமைசேமிப்புகாவளம் மாதவன் பணிக்கர்அரசியல்வாதிகோடி மீடியாபற்கள் ஆட்டம்மகாகாசம்பாமணியாறுஇந்திய தொல்லியல் ஒரே தேர்தல்சிக்கிம் விழித்துக்கொண்டது… தமிழ்நாடு ஏன் தூங்குகிசுரங்க நிபுணர்சிறுநீர்எஸ்.சந்திரசேகர் கட்டுரை103வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் – 2019ஜயலலிதாசோஷலிஸ்ட் தலைவர்கள்பாஜக கூட்டணிவருமானச் சரிவுஅரசியல் அடைக்கலம்1984 நாவல்மனிதர்களை எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிப்பதற்கானஒரு நூறு ஆண்டுக்காலத் தனிமைபாரதிய ஜனதாவுக்கு சோதனைமிகைல் கோர்பசெவ்பெரும்பான்மையினம்அருஞ்சொல் ஹிஜாப்மயிர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!