கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு

நிதி ஒதுக்கீட்டில் கைவிடப்பட்ட ஏழைகள்

ப.சிதம்பரம்
20 Feb 2023, 5:00 am
0

ண்டு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யும் ஒவ்வொரு நிதியமைச்சரும், ஒன்றியத்தை ஆளும் தங்களுடைய அரசின் திட்டங்களும் கொள்கைகளும் ஏழைகளின் முன்னேற்றத்துக்காகவே சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்று பெருமை பாராட்டுவது வழக்கம். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை, இந்திய மக்களில் பெரும்பகுதியினர் ஏழைகள்தான்.

தனிநபர் வருவாய், வேலையில்லாத் திண்டாட்டம், உணவு நுகர்வு அளவு, வீட்டு வசதி, சுகாதாரம் ஆகியவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழைகளின் எண்ணிக்கை 25% முதல் 40% வரையில் இருக்கும் – இதில் வெவ்வேறு தரப்பினரின் மதிப்பீடுகளிலும் சிறிதளவு மாறுதல்கள் இருக்கக்கூடும்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவிய காலம் (2020 - 22), தொடர்ந்து உயர்வாகவே காணப்படும் பணவீக்கம் – விலைவாசி உயர்வு விகிதம் (நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையில் 6.52%), வேலையில்லாத் திண்டாட்டம் (நகர்ப்புறங்களில் 8.1%, கிராமங்களில் 7.6%) போன்றவை நிலைமையை மேலும் மோசமாக்கிவருகின்றன. 2023-ம் ஆண்டின் தொடக்கமே அச்சுறுத்தலாகவே இருக்கிறது.

மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிவருகின்றன. படித்த நடுத்தர வர்க்கத்து குடும்பங்களிலும் வேலைதேடுவோர் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது.

யார் ஏழைகள்?

மக்களிடையே வருமானத்திலும் செல்வ வளத்திலும் நிலவும் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே வருவது பல உண்மைகளை அம்பலப்படுத்திவருகிறது. ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின்படி, இந்தியாவில் மக்கள்தொகையில் பெரும் பணக்காரர்களாக இருக்கும் 5% பேர் நாட்டின் மொத்த செல்வ வளத்தில் 60%க்கும் அதிகமாகவே வைத்திருக்கின்றனர். மக்கள்தொகையில் வருமான அடிப்படையில் கீழ்நிலையில் இருப்போரில் 50% பேர் வெறும் 3% மதிப்புள்ள செல்வங்களைத்தான் கூட்டாக வைத்துள்ளனர்.

சான்சல், பிக்கெட்டி போன்றோர் 2022க்கு தயாரித்த ஏற்றத்தாழ்வு அறிக்கையில், இந்தியாவின் கீழ்நிலையில் வாழும் 50% பேர் தேசிய வருமானத்தில் 13% மட்டுமே பெறுகின்றனர் என்று கூறியுள்ளனர். உயர் வருமானம் பெறுவோரில் 5% முதல் 10% வரை உள்ளவர்கள் (மக்கள்தொகையில் 7 கோடி முதல் 14 கோடிப் பேர்) தங்களுடைய செல்வ வளத்தை பிறர் பார்க்கும் வகையில் பகட்டித் திரிகின்றனர், ஏராளமாக செலவழிக்கின்றனர். விரும்பியவற்றையெல்லாம் வாங்கி நுகர்கின்றனர்; இதன் மூலம் சந்தையை ஒளிரச் செய்கின்றனர். (இந்தியாவில் தயாராகும் சொகுசு ரக கார் லம்போகினி 2023ஆம் ஆண்டுக்கு முழுதாக விற்றுத் தீர்ந்துவிட்டன, இனி யார் போய் கார் வேண்டும் என்று கேட்டாலும் 2024இல்தான் தர முடியும், சம்மதமா என்று கேட்டு முன்பணம் பெறுகின்றனர்! இந்தக் காரில் மிகக்குறைவான ரகத்தின் விலையே ரூ.3.15 கோடியில்தான் தொடங்குகிறது!). இவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள். கடைசி 50% மக்களில், ஏழைகள்தான் அதிகம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உலகச் சூழலைப் பொருட்படுத்தாத பட்ஜெட்

ப.சிதம்பரம் 07 Feb 2023

சிஎம்ஐஇ தரவுகளின்படி, இந்தியாவில் மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 43 கோடி. அவர்களில் இப்போது வேலையில் இருப்போர் அல்லது வேலையை எதிர்பார்த்துக் காத்திருப்போர் 42.23%, உலகத்திலேயே மிகவும் குறைவான, வேலைவாய்ப்பு எண்ணிக்கை இது. மொத்தக் குடும்பங்களில் 7.8% பேருடைய வீடுகளில் ஒருவருக்குக்கூட வேலை கிடைக்கவில்லை. இந்த எண்ணிக்கை குத்துமதிப்பாக 2.1 கோடி. 30% பேர் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்கின்றனர், இவர்கள் சுமார் 13 கோடி. இந்தக் குடும்பங்களின் மாதாந்திர மொத்த நுகர்வுத் தொகையே ரூ.11,000. இந்தக் குடும்பங்களையே ‘ஏழைகள்’ என்கிறோம்.

அரசின் ‘தேசிய குடும்பநல சர்வே-5’ என்ற கணக்கெடுப்பு தரும் தகவல்கள்: 15 வயது முதல் 49 வயது வரையுள்ள இந்தியப் பெண்களில் 57% பேர் ரத்த சோகையால் அவதிப்படுகின்றனர். பிறந்து 6 மாதங்கள் முதல் 23 மாதங்கள் வரையிலான குழந்தைகளில் 11.3% குழந்தைகளுக்கு மட்டுமே சாப்பிடப் போதுமான உணவு கிடைக்கிறது. வயதுக்கேற்ற எடை இல்லாத குழந்தைகள் 32.1%, வயதுக்கேற்ற உயரம் வளராத குழந்தைகள் 35.5%, உயரமும் எடையும் இல்லாத நலிவுற்ற குழந்தைகள் 19.3%, அவர்களிலும் மிகவும் மோசமான உடல் நிலையில் இருப்போர் 7.7% என்பது மிக மிக கவலைப்படும்படியான எண்ணிக்கையாகும். இந்தக் குழந்தைகளுக்குத்தான் போதிய, சத்துள்ள உணவு கிடைப்பதில்லை, இவர்கள் ஏழைகள்.

ஏழைகளுக்குத் தண்டனை

ஒன்றிய அரசு சார்பில் 2023-24 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தவர்களைக் கேளுங்கள், ஏழைகளை வாழவைக்க எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறீர்கள், மக்கள்தொகையில் கடைசி 50% நிலையில் இருப்பவர்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள், வேலையில்லாமல் திண்டாடும் மக்களுக்கு வேலைதர என்ன திட்டங்களைத் தீட்டியிருக்கிறீர்கள், உண்பதற்கு போதிய உணவு கிடைக்காதவர்களின் பசியைப் போக்க என்ன செய்திருக்கிறீர்கள் என்று. அவர்கள் பதில் சொல்லாவிட்டாலும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நிதிநிலை அறிக்கையில் அவர்கள் ஒதுக்கியுள்ள தொகையிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம். மாதிரிக்குச் சில:

ஏழைகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய இனங்களுக்கு 2022-23இல் ஒதுக்கிய தொகை முழுதாகச் செலவிடப்படவில்லை:

அட்டவணை 1:    2022 - 2023

(பட்ஜெட் மதிப்பு, திருத்திய மதிப்பு) -   (ரூபாய் கோடிகளில்)

  ப.ம.   தி.ம.
வேளாண்மை, சார்பு நடவடிக்கைகள்   83,521 76,279
பிரதமர் கிசான் திட்டம்     68,000   60,000
சமூகநலன்       51,780 46,502
கல்வி     1,04,278   99,881
சுகாதாரம்  86,606  76,351
பட்டியல் இனத்தவர் திட்டம்  8,710  7,722
பழங்குடிகள் திட்டம்  4,111 3,874
சிறுபான்மையினர் 1,810   530
பாதிக்கப்படக்கூடியவர்கள்        1,931 1,921

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நடுத்தர வகுப்புக்கு தவறான வழிகாட்டல்

ப.சிதம்பரம் 13 Feb 2023

அட்டவணை 2:

  2022 - 23  2023 - 24
  தி.ம. ப.ம.  
வேலைவாய்ப்பு உறுதி திட்டம்  89,400  60,000
உர மானியம்    2,35,220  1,75,100
உணவு மானியம் 2,87,194 1,97,350
எரிபொருள் மானியம்   9,171   2,257
பிரதமர் சுகாதார காப்பீடு    8,270  3,365

தேசிய சமூக உதவி நிதி

(முதியோர், மாற்றுத்திறனாளி)

 9,652  9,636
பிரதமர் மதிய உணவு   12,800   11,600
ஆத்மநிர்பார் வேலைவாய்ப்பு   5,758  2,273

வயிற்றில் அடிக்கிறார்கள்

நிதிநிலை அறிக்கையில் அரசு ஒதுக்கிய தொகையை முழுதாகச் செலவிட்டால்தான் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், மக்களுக்கு சமூகநலப் பலன்கள் கிடைக்கும். இது ஒருபுறமிருக்க, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகத் தொகை ஒதுக்கப்பட்டிருந்தால், இடையில் உயர்ந்த விலைவாசியைக் கருத்தில் கொண்டு தொகையை ஒப்பிட்டால் - கடந்த ஆண்டைவிட குறைவான மதிப்புதான் அது என்பது தெரியும்; மதிப்பு மட்டுமல்ல, தொகை அளவையேகூட குறைத்தே ஒதுக்கியிருக்கின்றனர். ஏழைகளுக்கு நேரடியாகப் பலன் தரக்கூடிய ஒவ்வொரு திட்டத்துக்கும் இப்படி குறைத்து நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். விலைவாசி உயர்வைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் உண்மையில் இது அதிகரித்த ஒதுக்கீடே அல்ல – குறைந்துவிட்ட ஒதுக்கீடு என்பது புரியும்.

இது போதாதென்று பொது சரக்கு, சேவை வரியும் (ஜிஎஸ்டி) குறைக்கப்படவில்லை; ஜிஎஸ்டி வருவாயில் 64%, மக்கள்தொகையில் கடைநிலையில் இருக்கும் 50% ஏழைகளிடமிருந்துதான் வசூலாகிறது. பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதான உற்பத்தி வரி போன்றவற்றை ஒன்றிய அரசு குறைக்கவே ல்லை.

பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு வறியவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது, வருவாயிலும் – செல்வ வளத்திலும் ஏற்றத்தாழ்வுகள் தீவிரமாக அதிகரித்தது, வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது, ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்டது, பெண்களும் – சிறார்களும் ஊட்டச்சத்துக்குறைவால் அவதிப்படுவது, பெண்களும் குழந்தைகளும் ரத்த சோகையால் பீடிக்கப்பட்டிருப்பது, குழந்தைகள் வயதுக்கேற்ற எடையும் உயரமும் நலனும் இல்லாமல் நோஞ்சான்களாக வளர்வது என்று எதையுமே அறியாதவர் போல, அறிக்கையைத் தயாரித்திருக்கிறார் நிதியமைச்சர்.

ஒன்றரை மணி நேரம் வாசித்த நிதிநிலை அறிக்கையில் ‘ஏழைகள்’ என்ற வார்த்தையை இரண்டு முறைதான் அவர் உச்சரித்தார் என்பதில் வியப்பு ஏதேனும் இருக்கிறதா என்ன? இந்த நிதிநிலையின் தன்மை குறித்து ஒரு வரியில் தமிழில் சொல்ல வேண்டும் என்றால், ‘இது ஏழைகள் வயிற்றில் அடிக்கும் பட்ஜெட்!’ 

 

தொடர்புடைய கட்டுரைகள்

உலகச் சூழலைப் பொருட்படுத்தாத பட்ஜெட்
நடுத்தர வகுப்புக்கு தவறான வழிகாட்டல்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1

1





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சென்னைக்குப் புதிய விமான நிலையம் தேவையா?உங்கள் பயோடேட்டாதனிமங்கள்தனிக் கட்சிஈர்ப்புக்குழாய்கிசுமுஜி.முராரிஒரே நாடு - ஒரே தேர்தல்சும்மா இருப்பதே பெரிய வேலைபசுமைமக்களாட்சிஅதிகார மிடுக்குகடவுளின் விரல்சுய பரிசோதனைமடங்களை அரசுடைமையாக்கினால் என்ன?சிற்றரசர்கள்டெல்லி பச்சையை நம்மூருக்குக் கொண்டுவர முடியாதா?அரசுகளுக்கிடையிலான அணையம்இம்ரான் கான்பெருமாள்முருகன்நெதன்யாஹுரேவந்த் ரெட்டிஇலக்கியம்போக்குவரத்து கழகங்கள்சீனியர் வக்கீல்வேளாண் புரட்சிவிக்னேஷ் கார்த்திக் கட்டுரைகவுட் மூட்டுவலிபா வகைகாவிரிப் படுகை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!