கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு

அமுத காலக் கேள்விகள்

ப.சிதம்பரம்
27 Feb 2023, 5:00 am
0

நாம் இப்போது ‘அமுத கால’ ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கடவுள் சொர்க்கத்தில் இருக்கிறார், உலகில் எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது என்று நாம் நம்பக் கடமைப்பட்டிருக்கிறோம். இருப்பினும் தேசப்பற்று இல்லாமல் இருப்பதற்காக, என்னை மன்னிக்க வேண்டுகிறேன். அரசிடம் கேட்க எனக்குக் கேள்விகள் பல இருக்கின்றன. சாமானிய மக்கள் இந்தக் கேள்விகளை என்னிடம் கேட்கிறார்கள் - இவற்றுக்குப் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்!

1. சந்தேகத்துக்கே இடம் இல்லாத வகையில் நிலைமை மோசமாக இருந்தாலும், இந்தியாவில் வறுமை அதிகரித்துக்கொண்டேவருகிறது என்று அரசு நம்புகிறதா? மொத்த மக்களில் எத்தனை சதவீதம் பேர் வறியவர்கள்? இந்திய மக்கள்தொகையில் அடிநிலையில் இருக்கும் 50% பேரிடம் மொத்தமாகச் சேர்த்து 3%தான் செல்வம் இருக்கிறது (ஆக்ஸ்ஃபாம்) என்றால் அவர்களை ஏழைகளாக அரசு கருதாதா? இந்திய மக்கள்தொகையில் 16% (22.4 கோடிப் பேர்) ‘வறியவர்கள்’ என்று ‘உலகளாவிய பன்மைத்துவ பரிமாண வறுமைக் குறியீட்டெண்’ கூறுவது சரியென்று அரசு ஒப்புக்கொள்கிறதா? இந்தச் சதவீதம் எவ்வளவாக இருந்தாலும், அரசாங்கம் ஏன் ஏழைகளைப் பற்றிப் பேசுவதில்லை? 2023 பிப்ரவரி 1இல் நாடாளுமன்றத்தில் 90 நிமிஷங்கள் படிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ‘வறுமை’ என்ற வார்த்தை ஏன் இரண்டு முறை மட்டுமே இடம்பெற்றது?

வேலைவாய்ப்பும் உணவும்

2. இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய அளவில் இருக்கிறது என்று அரசு நம்புகிறதா? இந்தியாவில் வேலைசெய்யத் தயார் நிலையில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 47.5 கோடி என்றும் அவர்களில் 48% பேர் மட்டுமே வேலைக்குச் செல்கிறார்கள் என்பதும் சரிதானா? அப்படியானால் எஞ்சிய 25 கோடிப் பேர் ஏன் வேலைக்குச் செல்வதில்லை அல்லது வேலை தேடவில்லை? 2020 ஜனவரி தொடங்கி 2022 அக்டோபர் வரையில் வேலைக்குச் செல்வோரில் ஆண்களில் 45 லட்சமும் பெண்களில் 96 லட்சமும் குறைந்துவிட்டனர் என்ற எண்ணிக்கை சரிதானா? வேலையில்லாத் திண்டாட்ட அளவு 7.5% என்று ‘சிஎம்ஐஇ’ அமைப்பு மதிப்பிட்டிருப்பதை அரசு ஒப்புக்கொள்கிறதா? இறுதியாக, ‘வேலையில்லாத் திண்டாட்டம்’ என்ற வார்த்தை முழு நிதிநிலை அறிக்கையிலும் ஓரிடத்திலும் இடம்பெறவே இல்லையே ஏன்?

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

நிதி ஒதுக்கீட்டில் கைவிடப்பட்ட ஏழைகள்

ப.சிதம்பரம் 20 Feb 2023

3. இந்தியாவில் உணவு கிடைக்காமல் பட்டினி கிடப்போர் பற்றிய அரசின் மதிப்பீடு என்ன? உலகளாவிய பட்டினி அட்டவணையில் 2022ஆம் ஆண்டு மொத்தமுள்ள 123 நாடுகளில் இந்தியா, 101வது இடத்திலிருந்து 107வது இடத்துக்குச் சரிந்துவிட்டது என்பது அரசுக்குத் தெரியுமா? இந்தியப் பெண்களில் ரத்தசோகை உள்ளவர்கள் 57%, ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளில் வயதுக்கேற்ற உயரம் இல்லாத குழந்தைகள் எண்ணிக்கை 36%, வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 19% என்பதாவது அரசுக்குத் தெரியுமா? சத்துள்ள சரிவிகித உணவு கிடைக்காததால்  ஊட்டச்சத்து ல்லாமல்தான் ரத்தசோகை, வயதுக்கேற்ற உயரம், உடல் எடை இல்லாத குறைகள் போன்றவை ஏற்படுகின்றன என்பதை அரசு ஒப்புக்கொள்கிறதா? மதிய உணவு திட்டத்துக்காக (போஷன்) 2023 - 24 நிதியாண்டில், நடப்பு ஆண்டைக் காட்டிலும் ரூ.1,200 கோடி ஏன் குறைக்கப்பட்டது என்பதை அரசு விளக்குமா? உணவு வினியோக மானியத்தை 2023 - 24ஆம் ஆண்டுக்கு ரூ.80,000 கோடி என்று பெருமளவுக்குக் குறைத்திருப்பதை அரசால் நியாயப்படுத்த முடியுமா?

4. உரங்களுக்கான மானியத்தை 2023-24 நிதியாண்டுக்கு ரூ.60,000 கோடி வெட்டியது ஏன் என்று அரசால் விளக்க முடியுமா? இதன் விளைவாக உரங்களின் விலையும் உர விலை உயர்வால் விவசாயிகளுக்குச் சாகுபடிச் செலவும் அதிகரித்துவிடாதா? இவற்றின் கூட்டுவிளைவாக உணவு தானியங்களின் விலையும், உணவுப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிடாதா? இதனால் ஏழைக் குடும்பங்களின் உணவு நுகர்வு மேலும் பல மடங்கு குறைந்து ஊட்டச்சத்துக் குறைவு பெருகிவிடாதா?

5. இந்தியாவில் மொத்தம் 1,17,000 ஓராசிரியர் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன, அவற்றில் 16% (16,630) மத்திய பிரதேசத்தில் மட்டும் இருக்கின்றன என்பது உண்மையா? தொடக்கப் பள்ளிக்கூடத்தில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரே ஆசிரியர் எப்படி அனைத்துப் பாடங்களையும் நடத்த முடியும் என்று அரசால் தெரிவிக்க முடியுமா? ஏன் இந்தப் பள்ளிக்கூடங்களுக்கு மேலும் பல ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை? பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லையா அல்லது அவர்களுக்கு ஊதியம் தர அரசிடம் பணம் இல்லையா? இந்தப் பள்ளிக்கூடங்களில் எந்தவிதமான கல்வியை மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்?

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நடுத்தர வகுப்புக்கு தவறான வழிகாட்டல்

ப.சிதம்பரம் 13 Feb 2023

6. ஆயிரக்கணக்கான யுவர்களும் – இப்போது யுவதிகளும் - ராணுவத்திலும் மத்திய அரசின் ஆயுதப்படைப் பிரிவிலும் சேர்ந்து பணியாற்ற ஆர்வமாக முன்வருகிறார்கள் என்பது சரியா? மத்திய ஆயுதக் காவல் படையில் 84,405 காலியிடங்கள் இருக்கின்றன என்பதை அரசு அறியுமா? இந்தப் படைப் பிரிவுகளுக்கு ஏன் தொடர்ச்சியாக ஆளெடுப்பதில்லை, அப்போதுதானே காலியிடங்களை உடனுக்குடன் இட்டு நிரப்ப முடியும்? இந்த வேலையில் சேர விரும்புவோர் அதிகம் படிக்காதவர்கள், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை அரசு உணர்ந்திருக்கிறதா?  அவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள், நலிவுற்ற பிரிவினர் என்பது அரசுக்குத் தெரியுமா?

7. நாட்டில் மொத்தமுள்ள 23 இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) என்ற உயர்கல்வி நிலையங்களில் அரசு அனுமதித்துள்ள 8,153 இடங்களில் 3,253 இடங்கள் காலியாக இருக்கின்றன என்பது சரியான தகவல்தானா? ஐஐடிக்களும் மத்திய பல்கலைக்கழகங்களும் ஒன்றிய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுவதால் ஏன் மேலும் பல ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை? இப்படிக் காலியாக இருக்கும் இடங்களில் பெரும்பாலானவை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர், பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்டவைதான் என்ற தகவல் சரியா? தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடைக்காமல் அந்த இடங்கள் காலியாக இருக்கின்றனவா அல்லது அவர்களுக்கு ஊதியம் தர அரசிடம் பணம் இல்லையா?

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உலகச் சூழலைப் பொருட்படுத்தாத பட்ஜெட்

ப.சிதம்பரம் 07 Feb 2023

8. கடந்த ஒன்பது ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுவிட்டு நாட்டை விட்டே வெளியேறுகிறார்கள் என்பது சரிதானா? 2022இல் 2,25,000 பேர் இந்தியக் குடியுரிமை வேண்டாம் என்று கூறிவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினர் என்பதும் சரிதானா? உயர்கல்வி கற்ற அவர்கள் ஏன் இந்தியக் குடியுரிமையை இப்படி ஆண்டுதோறும் கைவிட்டு வெளியேறுகின்றனர் என்று அரசு விசாரணை ஏதேனும் நடத்தியதா?

பதில்கள் கிடைக்குமா?

அமுத காலத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மக்கள் ஆனந்தக் கடலில் மிதப்பார்கள் என்று நம்பப்படுகிறது. மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு பதில் அளித்தால், வாசல் கதவுகள் அல்ல – குறைந்தபட்சம் ஜன்னல் கதவாவது திறக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு பெரிய அளவுக்கு ஆனந்தம் கிடைக்காவிட்டாலும் உணவும், வேலைவாய்ப்புமாவது கிடைக்கும். இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமா?

 

தொடர்புடைய கட்டுரைகள்

நிதி ஒதுக்கீட்டில் கைவிடப்பட்ட ஏழைகள்
நடுத்தர வகுப்புக்கு தவறான வழிகாட்டல்
உலகச் சூழலைப் பொருட்படுத்தாத பட்ஜெட்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1





அயோத்திதாச பண்டிதர்அழிந்துவரும் ஒட்டகங்கள்சோ எழுதிய குறிப்புசேவா - சுஷாசன்வங்க தேசப் பொன் விழாபுலம்பெயர்வுநடுக்கம்மாய பிம்பங்கள்என்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்நிதிநிலை அறிக்கை 2023வள்ளலார் திருவிளக்குநயன்தாரா சேகல் அருஞ்சொல்தனிச் சொத்துஜெயமோகன் கருணாநிதிமாசேதுங்தேசத் துரோகிஆளுமைதமிழாசிரியர்கள்திருப்புமுனைவாசிப்புப் பழக்கம்வாசிகல்விக் கொள்கைலட்டு கலப்படம்ராமச்சந்திர குஹா அருஞ்சொல்டெல்லி போராட்டம்உள்ளாட்சி நிர்வாகம்பசுமைத் தோட்டம்கண்புரை நோய்தமிழ் தெய்வங்கள்இமையம் நாவல் அருஞ்சொல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!