கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு

பணக்கார நாடா இந்தியா?

ப.சிதம்பரம்
06 Mar 2023, 5:00 am
1

யார் வேண்டுமானாலும் பங்கேற்கிற, போட்டி போடுகிற, தாராளமயப் பொருளாதாரக் கொள்கை இந்தியாவில் தேசிய அளவில் பல முன்னணி தொழில் நிறுவனங்களை உருவாக்கியது. அந்த நிறுவனங்கள் தொடக்கத்தில் சிறியதாகத்தான் இருந்தன, வளர்ச்சி பெற்று தேசிய அளவிலும் - சில சர்வதேச அளவிலும் - பிற நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவுக்கு வலிமை பெற்றன. உடனே நினைவுக்கு வரும் அத்தகைய நிறுவனங்கள் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, லார்சன் அண்ட் டூப்ரோ, டாடா, சீரம் இன்ஸ்டிடியூட், பயோகான், மாருதி, பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் – இவைபோல மேலும் பல.

இந்த தேசிய நிறுவனங்கள் செல்வத்தை உருவாக்கின, ஆயிரக்கணக்கான மத்திய தர குடும்பங்களை தங்களுடைய நிறுவன ஊழியர்களாகவும், பங்கு முதலீட்டாளர்களாகவும் உருவாக்கின. இந்தப் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியால் ஏராளமான நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் சிறிய நிறுவனங்களும் கூடவே வளர்ந்தன.

தொழில் உற்பத்தியில் துணிந்து முதலீடு செய்யும் கலாச்சாரம் உருவானது. நம்மால் ஏற்றுமதி செய்ய முடியுமோ முடியாதோ என்ற அவநம்பிக்கை மறைந்தது. தொழிலதிபர் ஆதித்ய பிர்லா வெளிநாட்டுக்கே போய் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியத் தொழிலதிபர்களை வெளிநாடுகளிலும் தொழில் தொடங்கச் செய்வதற்கு முன்னோடியாக இருந்து வழிகாட்டினார்.  

நிலையான விலைகளின் அடிப்படையில் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 1991-92இல் ரூ.25.4 லட்சம் கோடியாக இருந்தது. அது 2003-04இல் இரட்டிப்பாகி ரூ.50.8 லட்சம் கோடியானது. அது மீண்டும் 2014இல் இரட்டிப்பாகி ரூ.100 லட்சம் கோடியைத் தாண்டியது. நடப்பு விலையில் தனிநபர் வருமானம் 1991-92இல் ரூ.6,835 ஆக இருந்தது 2021-22இல் ரூ.1,71,498 ஆக உயர்ந்தது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

அமுத காலக் கேள்விகள்

ப.சிதம்பரம் 27 Feb 2023

ஏழைகளைக் கைவிட்டுவிட்டோம்

நடுத்தர வருவாயுள்ள நாடாக மாறிவிட்டோம் என்று இப்போது பேசத் தொடங்கியுள்ளனர்; என்னுடைய கணிப்பின்படி அதற்கு மேலும் காலம் பிடிக்கும். ‘உலகிலேயே ஐந்தாவது பெரிய பொருளாதார வளம் கொண்ட நாடு’ என்று இப்போது தற்பெருமை பேசுகின்றனர்; நினைவில் வையுங்கள் நாம் இன்னும் ‘நடுத்தர வருவாயுள்ள’ நாடாகக்கூட உயர்ந்துவிடவில்லை, ‘பணக்கார நாடு’ என்ற கற்பனையெல்லாம் அதற்குப் பிறகுதான்!

இந்தியாவின் பொருளாதாரம் ஆண்டுக்கு 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் என்ற அளவுக்கு உயரும் என்றும் பேசுகின்றனர்; என்னைப் பொருத்தவரையில் அது அர்த்தமில்லாத இலக்கு. வளராமல் இப்படியே ஊர்ந்தாலும்கூட இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் என்ற அளவை எட்டிவிடும். (தில்லியிலிருந்து ஆக்ராவுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் போக முடியும் என்றில்லை, சாதாரண சைக்கிளில்கூட போய்விடலாம்!) பொருளாதார கோணத்தில் பார்த்தால் இவையெல்லாம் முக்கியத்துவம் இல்லாத இலக்குகள்.

நாட்டுக்குக் கிடைக்கும் வருவாய் அதன் மக்களிடையே எப்படிப் பகிர்ந்தளிக்கப்படுகிறது, சேருகிற செல்வம் யாருடைய கைகளுக்குப் போகிறது, வளர்ச்சியை இப்படியே தக்கவைத்துக்கொள்ள முடியுமா, இந்த வளர்ச்சியும் வருமானமும் சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தாமலிருக்குமா என்பதெல்லாம்தான் கவனிக்கப்பட வேண்டும்.

இந்த அடிப்படைகளை வைத்துப் பார்த்தால், இந்திய வளர்ச்சி வரலாறு என்பது நாட்டு மக்களில் கீழ் நிலையில் இருக்கும் 50% மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல் தோற்றுவிட்டது. மக்கள்தொகையில் கடைசி 50%ஆக இருப்பவர்கள் தேசிய வருமானத்தில் வெறும் 13% மட்டுமே பெறுகிறார்கள் (சான்சல், பிக்கெட்டி வகையறாக்கள் கணிப்புப்படி), தேசிய செல்வத்தில் 3% மட்டுமே அவர்களிடம் மொத்தமாக இருக்கிறது (ஆக்ஸ்ஃபாம்).

இந்தியாவில் இப்போது ‘செல்வ வரி’ என்பது நடைமுறையிலேயே இல்லை. வாரிசுரிமையால் கிடைக்கும் சொத்து மீதும் வரி விதிப்பு இல்லை. விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானமும், வரி விதிப்புக்கு அப்பால்தான் இருக்கிறது. பெரும் பணக்காரர்கள், நெருங்கிய சொந்தக்காரர்களுக்குத் தரும் பரிசுகளுக்கும் வரி கிடையாது. எனவே, பெரிய பணக்காரர்கள் தங்களிடம் குவியும் சொத்துகளை சொந்தக்காரர்களுக்கு செல்வமாகவும் பரிசாகவும் கொடுத்து தக்கவைத்துக்கொள்ள முடிகிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

நிதி ஒதுக்கீட்டில் கைவிடப்பட்ட ஏழைகள்

ப.சிதம்பரம் 20 Feb 2023

மக்களில் கடைசி வரிசையில் இருக்கும் 50% ஏன் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கென்று மிகச் சில சொத்துகள்தான் இருக்கின்றன, வருமானமும் மிகவும் சொற்பமாகவும் நிலையில்லாமலும் இருக்கிறது, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வேறு வாய்ப்புகளும் கிடையாது. நாட்டில் ஏழைகள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள், நாம்தான் அப்படி யாரும் இல்லவே இல்லை என்பதைப் போல, பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு பாவனை செய்கிறோம்; எல்லா நகரங்களிலும் வண்ணமயமான புதிய மேம்பாலங்கள் கண்ணைக் கவருகின்றன, ஆனால் அவற்றுக்குக் கீழே ஒண்டி வாழும் ஏழைகளைக் கண்கள் பார்க்காமல் தவிர்த்துவிடுகின்றன.

வீதிகளிலும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் குடும்ப வருமானத்துக்காக சிறார்கள் பென்சில்கள், டவல்கள், பொம்மைகள், புத்தகங்கள் என்று எதையெதையோ விற்று வருமானம் பெற முயல்கின்றனர் – அவர்கள் அனைவரும் ஏழைகள். அன்றாடம் வேலைக்குச் சென்று கிடைக்கும் பணத்தில் சாப்பிடுகிறவர்கள் 30 கோடிக்கும் மேல் – அவர்கள் அனைவரும் ஏழைகள்.

சராசரியாக இரண்டரை ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கின்றனரே உழவர்கள் – அவர்கள் அனைவரும் ஏழைகள். வயிறாரச் சாப்பிடுவதற்கு உணவு கிடைக்காமல் திண்டாடுகிறார்களே அவர்கள் அனைவருமே பசியாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் வாடுகின்றனர் – அவர்கள் அனைவரும் ஏழைகள். ஏழைகளும் நடுத்தர மக்களிலேயே கீழ்த்தட்டில் இருப்பவர்களும் சேர்ந்துதான் மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கின்றனர்.

கவனம் பெற வேண்டியவர்கள்

இப்போதுள்ள அரசின் கொள்கைகளின்படி, நாட்டுக்குச் சேரும் வளத்தின் பெரும்பகுதி மேல்நிலையில் உள்ள 50% மக்களிடமே சென்று சேர்கிறது. கீழ்நிலையில் உள்ள 50% மக்களுக்கும் பலன் கிடைக்கும் வகையில் எந்த பெரிய அரசியல் கட்சியும் தன்னுடைய கொள்கைகளைத் திருத்திவிடவில்லை. சமீபத்தில் ராய்ப்பூரில் நடந்த அனைத்திந்திய காங்கிரஸ் பேரவை (ஏஐசிசி) கூட்டத்தில், கடைசி 50%ஆக இருக்கும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட கொள்கையைத்தான் காங்கிரஸ் கட்சி இனி கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

வெளிப்படையான, அனைவரும் போட்டியிடக்கூடிய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கலாம், ஆனால் அதில் மக்கள்தொகையில் கீழ் நிலையில் உள்ள 50% மக்களுடைய முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றேன். சாதி, மத அடிப்படையிலான வாக்காளர் குழுக்களைவிட, ஏழைகள் மீது அக்கறை செலுத்துவது வெற்றியைத் தரக்கூடிய மிகப் பெரிய கொள்கை மாற்றமாக இருந்துவிடும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நடுத்தர வகுப்புக்கு தவறான வழிகாட்டல்

ப.சிதம்பரம் 13 Feb 2023

இதற்கு நிச்சயம் எதிர்ப்புகள் வரக்கூடும். மேல்நிலையில் உள்ள 50% பேர் எதிர்ப்பார்கள், ஏனென்றால் பொருளாதார முன்னேற்றத்தால் கிடைக்கும் பலன்கள் அவர்களுக்கு முன்புபோல கிடைக்காது என்பதால்; கட்சிக்கு தேர்தல் நன்கொடை அளிக்கும் பணக்காரர்களும் தொழிலதிபர்களும்கூட காங்கிரஸுக்கு இனி தருவதற்கு முன்வர மாட்டார்கள், காரணம் அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் வருமானம் குறைந்துவிடும். சாதி, மதம் மற்றும் இதுபோன்ற குறுகிய எண்ணத்துடன் வாக்கு வங்கிகளை நம்பிச் செயல்படும் கட்சிகளுக்கிடையேயும், காங்கிரஸ் இப்படியொரு முடிவெடுத்தால் அரசியலில் நிலைப்பதற்காக அவர்களுக்குள் முட்டல்களும் மோதல்களும் அதிகரிக்கும்.

துணிச்சலான தழுவல்

இப்படியெல்லாம் நடக்கும் என்பது நிச்சயமாகத் தெரிந்தாலும் காங்கிரஸ் கட்சி துணிந்து, கடைநிலையில் இருக்கும் ஏழைகள் – கீழ்நிலை நடுத்தர மக்களை அரவணைக்கும் முடிவை எடுக்க வேண்டும். ‘இந்த 50%தான் இனி எங்களுடைய மூலபலம்’ என்று காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். இதைச் செய்தாக வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது, தார்மிக அடிப்படையில் இதுதான் சரியான முடிவாக இருக்க முடியும்.

இரண்டாவதாக, இப்போது முழுதாகச் செயல்பட முடியாமல் அடக்கிவைக்கப்பட்டிருக்கும் மக்களில் 50% பேரின் ஆற்றலை முழுதாக வெளிக்கொணர்ந்து அதை நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வெகுவாகப் பயன்படுத்த முடியும்.

மூன்றாவதாக, அப்படிச் செய்வதால் கோடிக்கணக்கானவர்கள் புதிதாக வேலைவாய்ப்பு பெறுவர், உற்பத்தி, வருமானம் என்று அனைத்துமே அதிகரிக்கும். நான்காவதாக, அது பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆரோக்கியமான போட்டியைத் தொடங்கிவைத்து, திறமையையும் உற்பத்தித் திறனையும் அதிகப்படுத்தும். வருமானம் – செல்வ வளம் ஆகியவற்றில் கீழ்நிலையில் இருக்கும் 50% பேர் என்ற அளவுகோலால் - மதம், சாதி, மொழி, பாலினம், பிரதேசம், மாநிலம் என்ற பேதங்கள் அனைத்தும் தகர்ந்துவிடும். இறுதியாக, மக்களை மத அடிப்படையில் பிரிக்கும் ‘இந்துத்துவ நஞ்சுக்கு’ இது நல்ல ‘விஷ முறிவாகவும்’ வேலை செய்யும் (இந்துத்துவா வேறு – இந்து மதம் வேறு, குழப்பிக்கொள்ளக் கூடாது).

நாட்டு மக்களில் கீழ்நிலையில் இருக்கும் 50% பேர், பிரிட்டிஷார் நம்மை ஆண்டபோது இருந்த அதே இழிநிலையில்தான் இப்போதும் இருக்கின்றனர். அரசியல் கட்சிகளிலோ, நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றங்களிலோ இவர்களுக்குப் பிரதிநிதித்துவம் வலுவாக இல்லை. தங்களை யாராவது அங்கீகரிக்க வேண்டும், அரவணைக்க வேண்டும் என்று இவர்கள் காத்திருக்கின்றனர், ஆதரிப்பவர்களை வெற்றி வீரர்களாக மாற்றும் ஆற்றல் இந்த 50% மக்களிடம் இருக்கிறது.

 

தொடர்புடைய கட்டுரைகள் 

அமுத காலக் கேள்விகள்
நிதி ஒதுக்கீட்டில் கைவிடப்பட்ட ஏழைகள்
நடுத்தர வகுப்புக்கு தவறான வழிகாட்டல் 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி


1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   1 year ago

நாடு விடுதலை அடைந்த பின் அறுபது ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும் நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினருக்கு மேல் ஏழைகளாக இருப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும். எட்டு ஆண்டுகளில் மோடி அரசு பெரும் கார்ப்பரேட்டுகளில் அவருக்கு அணுக்கமானவர்கள் பணம் குவிப்பதற்கு அரசு துணை நின்றது என்பது உண்மையாக இருந்தாலும் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆக மோடி அரசு திட்டமிட்டு செயல்படுவது தான் வேதனை.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

writer samas interviewஒற்றைச் சாளரமுறைஅரசமைப்புச் சட்டஅரசியல் எழுச்சிபுக்கர் விருதுஉருவக்கேலிதேசிய அரசியல் கட்சிபகத்சிங்ஏழு கடமைகள்மு.இராமநாதன் அருஞ்சொல்பொருளாதார வளர்ச்சியின் பொற்காலம்காலமானார்வெறுப்பரசியல்மத்திய பல்கலைக்கழகம்சமூகங்களை அறிவோம்அகிலேஷ் யாதவ்உரைவின்னி: இணையற்ற இணையர்!வரலாற்றிற்குள் எல்.இளையபெருமாள்மகாலிங்க ஸ்வாமிகேசவானந்த பாரதிஇனக் கலவரம்ரஷ்யாஇந்துத்துவமாகும் இந்திய அறிவியல்!கூகுள் ப்ளேஸ்டார்சந்துரு கட்டுரைதொன்மமும் வரலாறும்யோகிபாஜக: 20 ஆண்டுகள் ஜிடிபி வரலாறுசென்னை பதிப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!